என் ஆயுள் நீயே 6

என் ஆயுள் நீயே 6

அஷ்மிதா தன்னுடைய தம்பி குரு ஆர்யனிடம் பேசிக் கொண்டிருந்தாலும், தன் அண்ணனின் நடவடிக்கையை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

குரு ஆர்யன், பிரணவ்வின் உடன் பிறந்தவன். ஐந்து வருடங்கள் இளையவன். கன்னியாகுமரியில் விடுதியில் தங்கி படிக்கிறான். பிரணவ், அஷ்மி, நனி, ரீமா பயின்ற அதே கல்லூரி.

“நிஜமாவா சொல்றீங்க?” அஷ்மி, பிரணவ் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிடுவானென்று உறுதியாக சொல்ல, ஆர்யன் நம்ப முடியாது கேட்டிருந்தான்.

“கண்டிப்பா” என்ற அஷ்மி, பிரணவ் வேகமாக கீழே செல்லவும், தானும் அவன் பின்னால் சென்று, படிகளில் இறங்காது மேலிருந்தே அவன் என்ன செய்கிறானென்று பார்த்தாள்.

பிரணவ் விமலாவிடம் பெண்ணின் புகைப்படத்தை வாங்கி பார்ப்பது தெரிந்தது.

ஓசையின்றி என்றாலும் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அஷ்மிக்கு, அவனது இதழ் பிரிந்து மொழிந்த நனியிதழ் எனும் உச்சரிப்பு புரிந்தது.

“இன்னும் மறக்கல.” வாய்விட்டுக் கூறினாள்.

“யாரை மறக்கல? அக்கா என்ன சொல்றீங்க?” அழைப்பில் எதிர்பக்கமிருந்த ஆர்யன் வினவிய பின்னரே அவன் இணைப்பிலிருப்பது நினைவு கூர்ந்து, “நத்திங்” என்றாள்.

“நீயெப்போ சொல்லப்போற?”, அஷ்மி.

“ம்ம்” என்ற ஆர்யன், “சரியான அண்ணா கோண்டுக்கா அவள். எப்போ பாரு அண்ணா புராணம் தான்” என்றான்.

“அண்ணா மேலயே அவ்ளோ பாசமா இருக்க பொண்ணு உன்னை விரும்ப ஆரம்பிச்சிட்டா, உன்மேல எவ்ளோ பாசமா இருப்பாள். இதுக்கெல்லாமா ஜெலஸ் ஆவாங்க” என்றாள்.

“ம்க்கும்… நீங்க வேற, கிட்ட போனாலே எங்க அண்ணான்னு ஸ்டார்ட் பண்ணிடுறா. இதுல எங்கேர்ந்து நான் என் லவ்வை சொல்றது” என்று ஆயாசமாகப் புலம்பினான்.

“லவ் கொஞ்சம் கஷ்டமான சப்ஜெக்ட் தான். செய்ய நினைக்கிறதை செய்ய முடியாது. சொல்ல நினைக்கிறது தொண்டையை தாண்டி வெளிய வரவே வராது” என்று தன்னைப்போல் கூறியிருந்தாள்.

“அனுபவம் போல பேசுறீங்க. உண்மையை சொல்லுங்க. யாரது?”

ஆர்யன் அவ்வாறு கேட்ட பின்பே தான் உளறியது புரிந்து நாக்கை கடித்துக் கொண்டாள்.

“அதான் நீ படுறபாட்டை பாக்குறேனே… இதைவிட ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தனியா வேற வேணுமா” எனக் கேட்டு எப்படியோ தம்பியை சமாளித்து, “நீ வை டா! நான் அண்ணா என்ன பண்ணப் போறான் பார்க்கிறேன்” என்றாள்.

இதற்கு மேல் பேசினால் தன் மனதை அவனிடம் இயல்பாய் வெளிக்காட்டிடுவோம் என்று பயந்தே அழைப்பை வைத்திருந்தாள்.

இல்லையென்றால் இருவரின் பேச்சும் மணிகணிக்கில் நீளும்.

“என்ன ஃப்ரீஸ் ஆகிட்டான்!”

நனியிதழ் படத்தை பார்த்தது பார்த்தபடி பிரணவ் நின்றிருக்க, அஷ்மி மேலிருந்து கீழ் வந்து, அவன் தோளில் கை வைத்தாள்.

“நான் சொன்னேன்ல. இந்தப் பொண்ணை உனக்கு பிடிக்கும்னு” என்று கண்ணடித்தாள்.

“எனக்கு முன்ன அஷ்மிக்கு பண்ண முடியாதா?” அன்னையிடம் கேள்வி கேட்டாலும், பிரணவ்வின் பார்வை அலைபேசி திரையிலிருந்து நகரவில்லை.

“பண்ணலாமே! அதுக்கு அவ ஒத்துக்கணுமே” என்று மகளை முறைத்தார் விமலா.

பிரணவ் தங்கையை ஏறிட்டான்.

“ஹலோ ப்ரோ… என்ன லுக்கு. நான் முன்ன சொன்னதுதான். உனக்கு பர்ஸ்ட் மேரேஜ். தென், எனக்கு. அப்பா அம்மா இடத்தில் நீயும் அண்ணியும் தான் எனக்கு எல்லாம் செய்யணும்” என்று சொல்லிக் கொண்டே விமலாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.

“அதான் மாம் அண்ட் டாட் இருக்காங்களே” என்றான் பிரணவ்.

“அஃப்கோர்ஸ் இருக்காங்க” என்று விமலாவினை கட்டிக்கொண்டு அவரின் கன்னத்தில் முத்தம் வைத்த அஷ்மி, “எனக்கு நீ செய்யணும். இது என்னோட விஷ். அவ்ளோதான்!” என்றாள்.

தங்கையின் மனம் புரிகிறது அவனுக்கு.

அவள் தாய், தந்தையை இழந்த போது நான்கு வயது குழந்தை. அப்போது ஆர்யன் ஆறு மாத கைக்குழந்தை. விஜயனும் வேலை வேலையென்று ஓடிக்கொண்டிருந்த தருணம். ராகவனும் பிள்ளை இறந்த துக்கத்தில் மூழ்கியிருந்தார்.

சிறு குழந்தைகள் இருவரையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாது விமலா திணறிய சமயம் அது. அப்போது ஆறு வயதான பிரணவ் தானாக அஷ்மியை தூக்கிக்கொள்வான். தன்னுடனே வைத்துக் கொள்வான். அவளுக்கு உணவு ஊட்டுவதில் ஆரம்பித்து, தன்னுடனே உறங்கவும் வைத்துக்கொள்வான். அந்த சிறு வயதிலேயே அஷ்மிக்கு தயுமானவனாக மாறியிருந்தான் பிரணவ்.

ஆதலால் அன்னை தந்தையாக பெரியப்பா, பெரியம்மா இருந்த போதிலும், அஷ்மிக்கு அனைத்தும் பிரணவ் தான். அதனை வாய் வார்த்தையாக சொல்லாவிட்டாலும் தன் செயலால் உணர்த்திடுவாள்.

மகளின் மனம் புரிந்து விமலாவும், விஜயனும் சிறு வருத்தமும் கொண்டதில்லை.

“என்ன செண்ட்டிமெண்ட்டா?”, பிரணவ்.

“அப்படியே வச்சுக்கோ.” தோள்களை உயர்த்தி இறக்கிய அஷ்மி, “அப்படியே பேச்சை டைவர்ட் பண்ணாத. இப்போ உனக்குத்தான் கல்யாணம். உனக்குத்தான் பொண்ணு பார்த்திருக்கு” என்றாள்.

“ம்ம்” என்று படத்தை பார்த்துக்கொண்டே, தலையை மேலும் கீழும் ஆட்டிய பிரணவ், “எனக்கு ஓகே” என்றான்.

“ஹேய்” என்று அஷ்மி, விமலாவின் கன்னம் இரண்டையும் பிடித்து ஆட்டிட, “ஹேய் விடுடி” என்ற விமலா, மகனின் முகத்தை ஆராய்ந்தவாறு “என்ன ஓகே?” எனக் கேட்டார்.

“பொண்ணு பார்க்க வரேன்” என்றான்.

“உண்மையாவா பிரணவ்?” என்று விழிவிரித்துக் கேட்டவராக, அமர்ந்திருந்த இடத்திலிருந்து வேகமாக எழுந்து குதித்தபடி விமலா கேட்டிட, அவரின் செயலில் பிரணவ் முகம் மின்ன சிரித்தான்.

“ஐ ஸ்வேர் மாம்” என்று சிரித்த பிரணவ்வின் உள் வேறு திட்டமிருந்ததை யாரும் அறியவில்லை.

அஷ்மியும் அவன் சம்மதம் சொல்லியதில், வேறொரு மகிழ்விற்குள் மூழ்கிட, அவனின் மனதை அவதானிக்க மறந்தாள்.

மகிழ்வான செய்தியை உடனடியாக கணவரிடம் தெரிவிக்க, விமலா சிறுமியாய் ஓடிட,

“டைம் ஆச்சு. நீ போ தூங்கு” என்று தங்கையை விரட்டினான்.

“நான் சொன்னேன்ல, நீ இவங்களுக்கு ஓகே சொல்லுவன்னு” என்ற அஷ்மி, “உனக்கு அவங்க மேல க்ரஷ் இருந்துச்சுல?” எனக் கேட்டாள்.

“நீயா எதுவும் இமாஜின் பண்ணி உளறாத” என்று அவளின் கன்னத்தில் குத்திய பிரணவ், “ரீமாவோட ஃப்ரெண்ட். தென் உனக்கு ரொம்ப க்ளோஸ். சோ, பேசியிருக்கேன். பழகியிருக்கேன். அவ்ளோதான்” என்று இரண்டிரண்டு படிகளாகத் தாவியேறி மேலே ஓடிவிட்டான்.

அறைக்குள் வந்த பிரணவ், சற்று முன்னர் விமலாவின் அலைபேசியிலிருந்து எதற்காக தன்னுடைய எண்ணுக்கு பகிர்ந்துகொண்டோம் என்று அறியாது, தனக்கு அனுப்பிக்கொண்ட நனியிதழின் புகைப்பத்தை திறந்து பார்த்தான்.

விவரிக்க முடியா உணர்வு நெஞ்சத்தில் மோதுவது போலிருக்க, ஆராய முற்படவில்லை.

அவனுக்கு தன் அன்னையை சிறிது காலம் திருமணப்பேச்சை எடுக்கவிடாது செய்ய, அவனுக்கு தற்போது எடுத்திருக்கும் முடிவு அவசியமாகப்பட்டது. அதற்கு தெரிந்த பெண் என்றால், தான் சொல்வதை புரிய வைப்பது எளிதென்று எண்ணியே சரியென்றிருந்தான்.

இதனை அறியாத அவனது குடும்ப உறுப்பினர்கள், மகிழ்வில் ஆர்ப்பரித்தனர்.

“அண்ணா ஓகே சொல்லிட்டாங்க.” அஷ்மி யாருக்கோ தகவல் அனுப்பினாள்.

சில நிமிடங்களில் அவளுக்கு ரீமாவிடமிருந்து அழைப்பு வந்தது.

ரீமா நம்ப முடியாது கேட்டிருந்தாள்.

“பய ஒத்துக்கிட்டானா?”

“ஆமாக்கா.”

“நம்ப முடியலையே” என்று தன் தாடையை நீவிய ரீமா, “அவன் காலேஜ் டேசில் பொண்ணுங்க பக்கம் திரும்பிக்கூட பார்க்காததுக்கு காரணம், அவனோட ட்ரீமில் டிஸ்ட்ராக்ட் ஆகக்கூடாதுன்னு தான். அதே காரணத்தை தான் இப்போவரை சொல்லிட்டு இருக்கான். சடனா எப்படி ஓகே சொன்னான் அஷ்மி?” என்றதோடு, “அவன் வேறெதுவும் பிளான் பண்ணியிருக்கப்போறான்” என்றாள்.

“அப்படிலாம் எதுவும் இருக்காது ரீமா’க்கா. அண்ணா காலேஜில் பொண்ணுங்க யாரையும் பார்த்தது இல்லை தான். ஆனால், சீனியரை(நனி) அவன் சைட் அடிச்சு நான் பார்த்திருக்கேன்” என்றாள்.

“இது எப்போ? நான் நனியோடவே தானே சுத்திக்கிட்டு இருந்தேன்.” ரீமாவிடம் கதை கேட்கும் சுவாரஸ்யம்.

“நீங்க சீனியர் கூடவே இருந்ததால் தான் உங்களுக்குத் தெரியல” என்ற அஷ்மி, “டான்ஸ் பிராக்டிஸ் அப்போ. என்னை கூப்பிட வந்துட்டு, சீனியரை இமைக்க மறந்து பார்த்திட்டு நின்னான்” என்றாள்.

“ஹோ… அது வெறும் சைட்டா கூட இருந்திருக்கலாம்” என்ற ரீமாவின் பேச்சை தடை செய்து, “நீங்க சொல்ற மாதிரி வெறும் சைட்டா மட்டும் இருக்கட்டுமே! இப்போ அது பார்த்ததும் லவ் ஃபீல் வந்திருக்கலாம் இல்லையா?” என்றாள் அஷ்மி.

“வேலிட் பாயிண்ட்” என்ற ரீமா, “இருந்தாலும் அவனை நம்ப முடியாது. என்ன காரணமோ? இவ்வளவு நாள் காத்திருந்த காதல் கல்யாணத்தில் சேர்ந்தால் சந்தோஷம் தான்” என்றாள்.

“எஸ்… பட் எந்த கௌசிக்கும் குறுக்க வராமல் இருக்கணும்” என்றாள் அஷ்மி. 

அங்கு குறுக்கே வரும் கௌசிக்கே பிரணவ் தான் என்பதை அறியாது போயினர் இருவரும்.

“இப்போ நடக்கும் பெண் பார்க்கும் படலத்திற்கும் உனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லையே?” என்று சம்மந்தமே இல்லாது கேட்டாள் ரீமா.

ஒரு நொடி தடுமாறினாலும், “இல்லை ரீமாக்கா. எனக்கு சீனியர் பக்கம் யாரையும் தெரியாதே! நான் எப்படி அரேஞ் பண்ணியிருக்க முடியும்?” என்று கேட்டு, ரீமாவையே குழப்பிவிட்டு இணைப்பைத் துண்டித்திருந்தாள் அஷ்மிதா.

உறக்கம் வராது அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த பிரணவ்,

நான்கு வருடங்களுக்குப் பின்னர் தன்னுடைய காண்டாக்ட் லிஸ்டில் நனியிதழின் பெயரைத் தேடினான்.

கல்லூரி நாட்களில் கூட அவளின் எண்ணிற்கு அவன் அழைத்தது சொற்பமே.

தேடியது கிடைத்ததும் அழைத்து விட்டான். ஆனால் ஒலி சேர்வதற்கு முன்பே துண்டித்தும் விட்டான்.

திடீரென திருமணமென்று எப்படி பேசிட முடியும்? பார்த்து தெரிந்து பழகிய பெண்ணாக இருந்தாலும், நான்கு வருட இடைவெளி இருக்கிறதே! தயக்கம் கொண்டான்.

‘வாட்ஸ் அப் பண்ணுவோமா’ என்று புலனம் திறந்து அவளது கணக்கை தேடி எடுத்தான்.

முகப்புப் படத்தில் பூவாய் அவள் முகம்.

சில நிமிடங்கள் அசைவற்று பார்த்தான். ஏனென்று அவனுக்கும் தெரியவில்லை. தலையை உலுக்கி சுயம் மீண்டான்.

‘மெசேஜ் பண்ணுவோமா?’

‘இத்தனை வருஷம் இல்லாம இப்போ மட்டும் என்னன்னு கேட்டால்?’

‘வேணாம். நேரிலே பேசிப்போம்.’

அழுத்தமாக முடிவெடுத்தவனாக அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான்.

ஒருத்தியை உயிரோடு மரிக்கச் செய்யப்போகிறோம் என்பது அறியாது ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினான்.

வழக்கமாக எழும் நேரம் கண் விழித்து கீழே வந்த பிரணவ் அனைவரும் எங்கோ வெளியில் செல்லத் தயாராகி இருப்பதைக் கண்டு புருவம் சுருக்கினான்.

அடுத்து விமலா சொல்லியதில்,

“அதுக்குள்ளவா?” எனக் கேட்டு அதிர்ச்சியில் விழிவிரித்தான்.

“எஸ் உன்னை கட்டம்கட்டி தூக்கியாச்சு. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது” என்று சிரித்த அஷ்மியின் தலையில் கொட்டிய பிரணவ், “கிளம்பி வரேன்” என்று அறைக்குள் நுழைந்தான்.

error: Content is protected !!
Scroll to Top