என் ஆயுள் நீயே 60
அனைவரும் அஷ்மியை எதிர்பார்த்து காத்திருக்க… உதயன் அஷ்மிதாவுக்கு அழைக்கலாம் என நினைத்து அலைபேசியை கையில் எடுத்தான்.
காலை அவனுக்கு அழைத்தவள், “சும்மா குட் மார்னிங் சொல்ல கூப்பிட்டேன்” என்று சொல்ல அதில் உதயன் அட்டகாசமாய் சிரிக்க, அந்த சத்தத்திற்கே சிலிர்த்து அடங்கினாள் பெண்.
“உதய் லைஃப்ல அஷ்மிதா அடி வைக்கப் போறா… லவ் யூ சொல்லணும் போல இருக்கு. சொல்லணுமா உதய்? புரியுதுல உங்களுக்கு?” எனக் கேட்டவளின் வார்த்தைகளில் கரை புரண்டு உணர்வுகளின் ஆதிக்கத்தில் சிரிப்பை நிறுத்திய உதயன் முகம் ஜீவன் கொண்டு ஒளிர்ந்து புன்னகைத்தது.
“சொல்லணும்… கேட்கணும்… இப்போ இல்லை” என்ற உதயன், “இதைத்தாண்டி உணரணும் அஷ்மிதா. உணர முடியுதே. அஷ்மிதா அங்க நினைக்கிறது, அங்க நான் இருக்கேன்னு உணர முடியுதே” என்ற உதயனின் வார்த்தைகளில் தொலைந்து, கரைந்தாள்.
“உதய்…”
“நேரில் பார்க்கலாம். அஷ்மிதா உதய் பக்கத்தில் உட்காருவாங்களே… நெருக்கமா பார்க்கலாம்” என்ற உதயன், “மேக் ஓவர் முடிஞ்சுதா அஷ்மிதா?” எனக் கேட்டான்.
“ஆல்மோஸ்ட்” என்றவள், “நான்” என்று ஆரம்பித்து சொல்லாது, “அவ்ளோதான். கிட்ட வந்ததும் மெசேஜ் பண்ணுங்க” என்று சொல்லி வைத்தவள், அவன் திருச்செந்தூர் அருகில் வந்ததும் அனுப்பிய தகவலை இன்னும் பார்த்திருக்கவில்லை.
உதயன் அவளின் எண்ணை தொடும் முன்பு, அவளிடமிருந்து தகவல்.
“பிக் மீ உதய்” என்று தற்போது அவளிருக்கும் இருப்பிடத்தையும் அனுப்பியிருந்தாள்.
பத்து நிமிட தூரம் காட்ட, யாருக்கும் சொல்லவில்லை. இருக்கும் சூழலில் தன்னை செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்று. பிரணவ் மட்டும் கவனித்ததை கண்ட உதயன், அவன் சமாளித்துக்கொள்வான் என்று புறப்பட்டிருந்தான்.
அதிக வாகன நெரிசல் இல்லாததால் குறிப்பிட்ட நேரத்தைக் காட்டிலும் முன்னவே வந்திருந்தான்.
அவளுக்கு அழைக்க பார்க்க… அழகு நிலையம் வெளியவே நின்றிருந்த அஷ்மிதா, உதயன் வந்து விட்டதை அவனது தார் வைத்தே கண்டு கொண்டவளாக, கார் கதவை திறந்து ஏறியிருந்தாள்.
மெல்லிய லாவண்டர் நிறத்தில், அதே அடர் வர்ண கரையிட்ட பட்டு புடவையில் தேவதையென கொள்ளை கொள்ளும் அழகில் பக்கத்தில் வந்து அமர்ந்தவளை அகம் தொடும் ரசனையோடு தீண்டி மீண்ட உதயன்… வண்டியை இயக்க பார்வையை நேர்கொண்டு வைத்த அடுத்த நொடி…
“அஷ்மிதா” என அவள் முகம் பார்த்திருந்தான்.
“நல்லா இருக்கா? உதய்க்கு பிடிச்சிருக்கா?” கண்கள் சிமிட்டி, இதழ் விரித்து பற்கள் தெரிந்த புன்னகையோடு அஷ்மிதா கேட்க, உதயனின் கண்களில் மின்னல் வெட்டு. ஒளிக்கூடியது.
அஷ்மிதாவின் மூக்கில் புதிதாய் பூத்திருக்கும் மூக்குத்தியை தொட்டு விட அவனது சுட்டு விரல் நீண்டிட, சட்டென்று விரலை பின்னால் இழுத்திருந்தான்.
ஸ்டியரிங்கில் அவனது விரல்கள் தாளமிட… பட்டென்று அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்திருந்தான்.
அஷ்மிதாவுக்கு நனிக்காக முதல் முறை அவளது எண்ணுக்கு தகவல் அனுப்பிய போது, புலனத்தில் அவளின் படத்தை கவனித்து பார்த்தது இல்லை. அவளை நனியுடன் பார்த்திருக்கிறான். முகம் நினைவிருக்க, பார்க்க வேண்டுமென்ற எண்ணம் அப்போது இருந்ததில்லை. ஆனால் அவள் தன்னை தொடர்கிறாள் என்பதில், மறைந்து நின்று பார்ப்பவளை கவனிக்காது கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் அனைத்தும் மனதில் அவனறியாது ஆழமாகப் பதிந்து கொண்டிருந்தது. அஷ்மிதாவிடம் தன் விருப்பத்தை சொன்ன அன்றுதான், அவளின் புலனத்தின் முகப்பு படத்தையே திறந்து பார்த்திருந்தான்.
அவள் முகம் பார்த்ததும், அவனுள் குளிரடித்த வேளை, அவனை வெகுவாக கவர்ந்திழுத்தது, அவளின் மூக்குத்தி. அதில் தானாக ஒரு பிடித்தம் வந்தது. அந்த நொடியே, அவனை கொள்ளையிடும் முகத்திற்கு அந்த மூக்குத்தி மேலும் அழகை கூட்டுவது போலிருக்க… அதில் அத்தனை லயிப்பு. தினமும் ஒரு முறையாவது திறந்து பார்த்திடுவான். அவளின் நிழலுருவில் அந்த மூக்குத்தியை தொட்டுவிட நீளும் விரலை, இப்பொழுது போன்றே அப்போதும் இறக்கிடுவான்.
முதல் முறை அவளை பார்க்கப்போகிறோம் என்றதும், அவளுக்கு எதும் வாங்கி செல்ல வேண்டுமென நினைத்த நொடி அவனின் மனதில் தோன்றியது மூக்குத்திதான்.
அவளுக்கு லாவண்டர் நிறம் பிடித்தமென்று உதயன் தானாகவே அறிந்திருந்தான். அதற்கு காரணம் அஷ்மிதா அதிகம் பயன்படுத்துவது அந்த வர்ணம்.
அதே நிறத்தில் ஒற்றை கல் வைத்து, புள்ளி அளவிலான தங்க முத்து அசைவது போன்ற மூக்குத்தி. கொடுக்க வாங்கி வந்தவன், அன்று கொடுக்காது விட்டிருந்தான்.
பெண் பார்க்க வந்த அன்று அவன் கண்கள் அவளின் முகத்தில் முதலில் கவனித்தது மூக்கினை தான். மெல்லிய ஏமாற்றம் எழவே, அவளிடம் அறைக்குள் “நோஸ் பின் போடலையா” எனக் கேட்டிருந்தான்.
அதற்கு அஷ்மி சொல்லிய பதிலில், சிறு ஏமாற்றம் பெரிதாகியது. இருப்பினும் அவளிடம் தனக்கு பிடித்திருக்கிறது. நீ எனக்காக செய் என்று அவனால் சொல்ல முடியவில்லை. மூக்குத்தி போடுவது பிடித்திருந்தாலும், எதோ காரணத்திற்காகத்தான் மூக்கு குத்தவில்லை என்பதை, “நான் நோஸ் பியர்ஸ் பண்ணல. அது இன்ஸ்டன்டா போட்டுக்கிறது” என்று அஷ்மிதா சொல்லிய பதிலில் கண்டு கொண்டிருந்ததால், தான் வாங்கி வந்ததாக கொடுத்தால், அவளை மூக்கு குத்த சொல்வதைப் போலிருக்கும், அவளுக்கு பிடிக்காததை தனக்காகவும் செய்ய வேண்டாமென்று கொடுக்காது விட்டுவிட்டான்.
ஆனால் முகம் கழுவச் சென்றவன் தன்னை மறந்து குளியலறைக்குள் வைத்துவிட்டு வந்தது, அவளது கரம் சேர்ந்தது அவனே எதிர்பாராதது.
அவளின் கரம் சேர்ந்த பின்னரும், அவள் அதைப்பற்றி தன்னிடம் கேட்காது இருந்தபோதே அவள் இப்படித்தான் செய்வாள் என்று ஒரு யூகம் இருந்தாலும், அடுத்தடுத்த நாட்கள் அவள் அதனை செய்தது போல் தெரியாததால், தன்னுடைய சிறிய ஆசையை மறைத்தும் கொண்டான். எதிர்பார்ப்பை விலக்கியும் வைத்தான்.
ஆனால் தான் எதிர்பாராத தருணத்தில் இப்படி செய்வாள் என்று உதயன் முற்றிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
“அஷ்மிதாவுக்கு உதய் எண்ணம் புரியுதா?”
அவளின் பின்னந்தலையில் உதயன் உள்ளங்கை அழுத்திக் கொண்டிருக்க, அவளின் நெற்றி அவனின் மார்பில் முட்டி முகம் புதைந்திருந்தது.
அவனது இதயத் துடிப்பின் ஓசை அவளுள் இதம் பரப்ப,
“உதய்’யை புரியுது” என்றாள்.
அவளின் பதிலில் உதயன் தன் கையை எடுக்க, நிமிர்ந்து நேராக அமர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
அந்தப் பார்வையில் ஊற்றும் காதலை, மிட்சமின்றி தனக்குள் உள்வாங்கிக் கொண்டான்.
மூக்கு குத்திய இடம் சிவந்திருக்க,
“பெயின் இருக்கா?” என்றான்.
“ஸ்கின் நம்(ப்ஃ) (Numb) பண்ணிட்டு தான் பியர்ஸ் பண்ணாங்க. வன் ஷாட் தான். ஹெவி பெயின் இல்லை” என்று சிரித்தவளின் கண்கள் காட்டிக் கொடுத்தது அவளின் வலியை. லேசாக சிவந்திருந்தது. வலியினால் கண்கள் கலங்கியதால்.
உதயன் அவளை கூர்ந்து நோக்க…
“நிஜமா பெயின் இல்லை உதய். ஷாட் பண்ணும் போது லைட்டா” என்றாள்.
உதயன் அவளையே பார்த்திருக்க,
“வன் செல்ஃபி” என்று அலைபேசியை காண்பித்தாள்.
உதயன் பார்வை மாற்றம் பெறாதிருக்க…
அவளாகவே அவன் தோள் உரச நெருங்கி அமர்ந்து, அலைபேசியை உயர்த்திப் பிடித்தாள்.
உதயனும் அவள் புடவை நிறத்தில் சட்டை அணிந்திருக்க, புகைப்படத்தில் பளிச்சென இருவரின் பொருத்தமும் முதன்மை பெற்றது.
“அவ்ளோதான் எடுத்தாச்சு” என்றவள் படத்தை அவனிடம் காண்பிக்க…
“என்ன பன்ற அஷ்மிதா?” என்றான்.
“ஆங்…”
“என்ன பன்ற என்னை” என்றவன், “தள்ளியே இருடி. கல்யாணத்துக்கு வேற நிறைய நாளிருக்கு” என்று பற்களைக் கடித்துக்கொண்டு சொல்லியவன் வண்டியை இயக்கியிருந்தான்.
அவனின் அந்த கடுகடுப்பிலும் அவன் முகம் காட்டிய காதலில் அவனுள் கட்டுண்டு அவனையே பார்த்தபடி வந்தாள் அஷ்மிதா.
“உன் கார்?” என்றான். நினைவு வந்தவனாக.
“தெரிஞ்ச பிளேஸ் தான். அப்புறம் வந்து எடுத்துக்கலாம்” என்றாள்.
இருவரும் கோவில் வந்து சேர,
“மாம் திட்டப்போறாங்க. லேட் பண்ணிட்டேனா?” எனக் கேட்டு முன்னே இறங்கி வேகமாகச் சென்றவளின் கை பிடித்து நிறுத்தியவன்…
“சேர்ந்து வா” என்றான்.
இருவரும் இணைந்து கோவில் மண்டபம் வர, குடும்பத்தினருக்கு பார்க்க கண்கள் போதவில்லை.
அஷ்மிதாவைப் பார்த்ததும், இந்நேரத்தில் அவசரமாக எதற்கு அழகு நிலையம் சென்றாளென்று தெரிந்ததால், யாரும் எதுவும் கேட்கவில்லை.
“இப்படி அப்பப்போ ஒட்ட வச்சு மாட்டிக்கிறதுக்கு… ஒரே டைம் குத்திக்கிட்டா இன்னும் நிறைய டிசைனில் மூக்குத்தி போடலாமே அப்படின்னு மாம் எத்தனை முறை சொல்லியிருப்பாங்க… அப்போ எல்லாம் வலிக்கும் சொன்னீங்க. இப்போ வலிக்கலையா அஷ்மி அக்கா?” என்று ஆர்யன் ஏற்ற இறக்கத்தொடு கேட்க, அஷ்மி என்ன பதில் சொல்வதென்று திருதிருத்தாள்.
“ரொம்ப யோசிக்க வேண்டாம். காரணம் எங்களுக்கே தெரியுது” என்று நனியிதழ் சொல்ல, பெரியவர்கள் கூட சத்தமின்றி சிரித்திருந்தனர்.
“நல்லாயிருக்கு மாமா.” உதயன் மறைத்த புன்னகையை கண்டு கொண்டவனாக பிரணவ், அவனது காதில் கிசுகிசுக்க… இன்பா, எழிலும் என்னவென்று அவனை நெருங்கினர்.
“வெட்கப்பட வச்சிடாதீங்கடா. அல்ரெடி ஹார்ட் மெல்ட் ஆகியிருக்கு” என்று உதயன் சொல்ல, மூவரும் ஒன்றாக “ஓ” என்று கத்த,
“போச்சு… போச்சு…” என்று சத்தமின்றி உதடசைத்து உதயன் சிந்திய துளி நாணத்தில் மொத்த குடும்பமும் மனம் கனிந்து முழுதாய் அவனை நிறைத்துப் பார்த்தனர்.
அதில் அப்பட்டமாக உதயன் தன் விழி விரிப்பைக் காட்டிட…
‘ஆத்தே கண்ணு படுமே’ என நினைத்த கங்கா, “ஆக வேண்டியதை பார்ப்போம்” என்று அனைவரின் கவனத்தையும் நடக்கவிருக்கும் நிகழ்வில் திருப்பினார்.
முதலில் உதயன், அஷ்மிதா ஒன்றாக அமர வைக்கப்பட்டு, ஆறு மாதத்திற்கு பிறகான அவர்களின் திருமணத்திற்கு குறித்த நாள் வாசிக்கப்பட, அதனைத் தொடர்ந்து குருபிரணவ், நனியிதழ் மற்றும் எழிலின்பன், தன்யா இரண்டு ஜோடிகளுக்கான திருமணம் பெரியவர்களால் இறைவனின் சந்நதியில் உறுதி செய்யப்பட்டது.
வந்த உறவினர்கள் கிளம்பிட…
“ஒவ்வொரு ஜோடியா போய் சாமி கும்பிட்டு வாங்க” என்றார் காமாட்சி.
“எதுக்கு தனித்தனியா… எல்லாரும் வாங்க. சேர்ந்தே போவோம்” என்றான் உதயன்.
உதயன் சொல்லிய சேர்ந்தே போவோம் எனும் வார்த்தை வாழ்வின் முழுமைக்கும் என்று புரிய, இரு குடும்பமும் ஒரு குடும்பமாய் இணைந்து இறைவன் முன்பு நிறைந்த மனதுடன் கரம் கூப்பி நின்றிருந்தனர்.
மூன்று ஜோடியும் ஒரு பக்கம் நின்றிருக்க, அவர்களுக்கு எதிரில் மற்றவர்கள் நின்றிருந்தனர்.
ஆர்யன் மூன்று ஜோடியையும் ரசித்து பார்த்து நின்றிருக்க…
“நல்லாயிருக்குல” என்றாள் எழில்.
“ஆமா” என்ற ஆர்யன், “நீயும் நானும் எப்போ இப்படி நிக்கிறது?” என அவன் தன்னைப்போல் கேட்டுவிட, அவன் பக்கம் நின்றிருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பார்வையும் அவன் மீது அழுத்தமாகப் படிந்தது.