என் ஆயுள் நீயே 61
மொத்த குடும்பத்தினர் பார்வையும் ஆர்யன் மீது தான்.
விழிகள் விரிய நெஞ்சில் கை வைத்திட்டான்.
‘அடேய்… அண்ணா. காப்பாத்துடா’ என்று பார்வையால் அவன் பிரணவ்வுக்கு செய்தி கடத்த, அவனோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்ற பாவனையில் “அனுபவி” என்று உதடு மட்டும் அசைத்து கண்ணடித்தான்.
“நீயெல்லாம் உடன் பிறப்பாடா?” என்ற ஆர்யன் தோற்றத்தில், அனைவரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.
“அடுத்த ஜோடியும் ரெடி ஆகுது போல” கஜமுகன் ராகவனின் கரம் பற்ற…
“அய்யோ தாத்தா அப்படியெல்லாம் இல்லை” என்றாள் எழில்.
“ஹோ… அப்போ தப்பா புரிஞ்சிக்கிட்டோமா?” என்று இளங்கோ சொல்ல…
“பெரியப்பா” என்றாள் எழில். புரியாது.
“அவங்க மூணு ஜோடியை விட நீங்க தான் ஸ்பீடா இருக்கீங்க” என்ற விமலா, “நடக்கும் போது எல்லாம் நடக்கும். கொஞ்சம் அடக்கிவாசி மகனே” என்றார் ஆர்யனிடம்.
ஆர்யனுக்கு தன் வீட்டு ஆட்களிடம் தயக்கமில்லை. அவர்கள் அவனைப்பற்றி எல்லாம் அறிந்தவர்கள்.
ஆனால் உதயன் வீட்டில் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று நினைத்த ஆர்யன் உதயனை பார்க்க, அவனோ கண்களை அழுத்தமாக மூடி திறந்தான்.
மெல்ல புன்னகைத்த ஆர்யன்,
கஜமுகன் முகம் பார்த்து,
“இப்போவேன்னு இல்லை. எனக்கான எங்களுக்கான நேரம் வரும்போது… எழிலை எனக்கே எனக்குன்னு கொடுங்க. பத்திரமா பார்த்துப்பேன். வேறென்ன சொல்லணும், சொன்னது சரியா தெரியல. ஆனால் எழில், அவள் தான் எல்லாம். ஓகே சொல்லிடுங்க பிளீஸ்” என்றான்.
கஜமுகன் தன்னிரு மகன்களையும் பொதுவாய் பார்க்க, அவர்கள் இருவரும் உதயன் முகம் பார்த்தனர்.
“எனக்குத் தெரியும்” என்று உதயன் சொல்லியதுமே, “எங்களுக்கும் சம்மதம்” என்று சொல்லியிருந்தார் கஜமுகன்.
வேகமாக உதயனை அணைத்த ஆர்யன், “தேங்க்ஸ் மாமா” என்றான்.
“ஆனால் இப்போ இல்லை” என்று கண்டிப்புக் காட்டினான் உதயன்.
“எழில் பக்கம் கூட திரும்பல. எப்போவா இருந்தாலும் எனக்கு ஓகே” என்றான் ஆர்யன்.
ஒரு நிகழ்வில் இணைய இருந்த குடும்பம், இன்று ஒன்றில் ஒன்று அடக்கம் கொண்டது.
நிறைந்த மனதுடன் பிரணவ் இல்லம் வந்தனர்.
சிறிது நேரம் திருமணம் குறித்து கலந்து பேசியவர்கள், மாலை நேர சிற்றுண்டி முடித்து உதயன் குடும்பம் அத்தீஸ்வரம் கிளம்பியது.
அடுத்தடுத்து திருமண வேலைகள் அனைத்தும் துரித நிலையில் நடைபெறத் துவங்கியது. இங்கு உதயன் அனைத்தையும் எடுத்து செய்தான் என்றால், அங்கு பிரணவ்வை ஒன்றும் செய்ய விடாது ஆர்யன் மற்றும் அஷ்மியுடன் ரீமாவும் இணைந்து எல்லாம் செய்தனர்.
நடுவில் ஆர்யன் மற்றும் எழிலுக்கான தேர்வுகளும் முடிந்திருக்க, ஆர்யன் தன் தந்தையின் தொழிலில் இறங்கினான். தந்தைக்கு உதவியாக இருந்த பிரணவ் தன் தொழிலில் மட்டும் தற்போது செயல்பட்டான்.
எல்லாம் கோலாகலமாக அரங்கேறியது.
அன்று நனியிதழை வழி மறித்து தான் செய்து வைத்திருக்கும் நிலைக்கு உதயனை காரணமாக்கி தனக்கொரு வழி சொல்லுமாறு வந்தனா கேட்டதோடு சரி… அதன் பின்னர் அவளை நனியிதழ் பார்க்கவே இல்லை.
அவ்வவ்போது கஜமுகன் நனியிடம் விசாரித்தாலும், “உங்க கல்யாணம் முடியட்டும். அதுக்கு அப்புறம் உதயா கல்யாணம் முன்பு இதனை சரி செய்யணும்” என்றிடுவார்.
இன்னமும் இந்த விஷயத்தை இருவரும் யாரிடமும் சொல்லாது தான் வைத்திருக்கின்றனர்.
உதயனுக்கு தெரிந்தால் என்னவாகும் பயம் தான். இதுவரை பொறுமையாக கையாளும் உதயனுமே கூட இவ்விஷயம் தெரிந்தால் கோபம் கொள்வான் என்பது திண்ணம்.
அன்று பத்திரிகை அடித்து வந்திருக்க, கோவிலில் வைத்து வணங்குவதற்காக பகவதி அம்மன் கோவில் வந்திருந்தான் உதயன்.
அவன் மட்டும் சென்று வைத்துவிட்டு வந்தால் போதுமென்று லட்சுமி பாட்டி சொல்லியிருக்க… தான் மட்டுமாக வந்திருந்தான்.
எல்லாம் சரியாக சென்றுகொண்டிருந்தாலும்… வந்தனாவின் அமைதி அவனை அடிக்கடி யோசிக்க வைக்கும்.
சட்டென்று ஒருவர் அமைதியாக இருக்கின்றார்கள் என்றால் பெரும் சூறாவளி ஒன்று அவர்களிடமிருந்து வீசப் போகிறதென்று அர்த்தம்.
அன்று கஜமுகன் மருதனிடம் சென்று பேசி வந்த பின்னர் கூட வந்தனா, எல்லாம் மறந்து விலகிவிடுவாள் எனும் எண்ணம் உதயனுக்கு கொஞ்சமும் இல்லை.
அமைதியாக விலக நினைப்பவளாக இருந்தால், உதயனுக்கு திருமணம் முடிவாகியது தெரிந்த பொழுதே மறந்திருப்பாள் எனும் எண்ணம்.
அம்மனை தரிசித்து உதயன் வெளியில்வர, அஷ்மிதா அவனது தார் அருகில் நின்றிருந்தாள்.
“அஷ்மிதா சொல்லவே இல்லை.”
உதயன் தன்னை பார்த்ததும் மலர்ந்து சிரித்த அஷ்மிதாவின் புன்னகையில் தானும் இதழ் விரித்த உதயன், அவளின் பக்கம் வந்து சொல்லியிருந்தான்.
“எங்கேஜ்மெண்ட் அப்போ பார்த்தது. கிட்டத்தட்ட டூ மன்த் ஆகப்போகுதே. முன்ன மாதிரி உங்க வொர்க் பிளேஸ் வந்து தூரம் நின்னுலாம் பார்க்க முடியாது. அதான் கோவிலுக்கு போறீங்க சொன்னதும் வந்துட்டேன்” என்றாள்.
“பார்த்தாச்சா?” எனக் கேட்டவாறு, உதயன் தன் கையிலிருந்த குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றியில் தன்னைப்போல் வைத்தான்.
அவன் விரல் தீண்டிடாத ஒற்றல். அதற்கே கண்கள் மூடி சிலிர்க்க நின்றாள்.
ஒரு நொடி அவளின் முகத்தில் ரசனையாய் தேங்கிய அவனின் பார்வை, அவளது மூக்கில் நிலைத்து இதழ் இறங்க முயல, வலுக்கட்டாயமாக வேறு பக்கம் திரும்பினான்.
“பார்க்க வந்துட்டு கண்ணை மூடிட்டு இருந்தா என்ன அர்த்தம் அஷ்மிதா” என்ற உதயன், “பிரணவ் வந்தாச்சா?” எனக் கேட்டான்.
“அண்ணா நாளைக்கு தான் வராங்க. இன்னும் வன் வீக் இருக்கே” என்றவள், மூடிய உள்ளங்கையை அவன் முன் நீட்டினாள்.
“என்ன?” என்றான்.
“சும்மா…”
உதயன் அவளின் கையை தன் ஒற்றை விரலால் தொட்டு எடுக்க, கையை விரித்தாள். உள்ளங்கையில் ஒற்றை வைரம் பதித்த பிளாட்டினம் மோதிரம்.
“என்ன சடனா?” எனக் கேட்ட போதும், மோதிரத்தை தான் எடுக்காது, அவள் போட்டுவிடுமாறு கையை திருப்பி அவள் முன் நீட்டியிருந்தான்.
“நீங்க நோஸ் பின் குடுத்தீங்களே நான் இப்படி கேட்டேனா?” என்றாள்.
“நான் கொடுக்கலை. நீயா எடுத்துக்கிட்ட” என்று உதயன் சொல்ல…
“ஆமா ஆமா. உங்க ஷர்ட் பாக்கெட்டில் கை விட்டு எடுத்தேன்” என்று முணுமுணுத்தாள்.
உதயன் சத்தமாக சிரித்திட,
“வன் டைம் உங்ககிட்ட லவ் சொல்லிடனும் நினைச்சு வாங்கினேன். ரிங் எடுத்திட்டு உங்க வரை வந்த தைரியம் பக்கம் வந்து சொல்ல இல்லாமப் போச்சு. இப்போ தான் உங்க விரலுக்கு வரணும் இருந்திருக்கு” என்று சொல்லிக்கொண்டே அவனது விரலில் போட்டு விட்டாள்.
“அப்போவே சொல்லியிருக்கலாம்.” உதயன்.
“என்னது? என்ன சொன்னீங்க?”
“நிறைய டேஸ் வேஸ்ட் பண்ணிட்டன்னு சொன்னேன்” என்று அவளின் நெற்றியின் மத்தியில் சுட்டு விரல் தொட்டு எடுத்தான்.
“பிடிச்சிருக்கா?”
“ம்ம்… அஷ்மிதாவை நிறைய பிடிக்கும். இன்னும் நிறைய நிறைய பிடிக்கவும் செய்யுது.”
அவன் இப்படி சொல்வானென்று அவள் எதிர்பார்க்கவில்லை போலும். விழிகள் விரியப் பார்த்தாள்.
“என்ன?”
அவனுக்கு அவளிடம் எல்லாம் வெளிப்படையாக இருந்திடத்தான் ஆசை. அது அவனது மனதின் உணர்வுகளாக இருந்தாலும்.
“ஐ லவ் யூ அப்படின்னு சொல்லியிருந்தா கூட இந்தளவு ஃபீல் வந்திருக்காது” என்று நெகிழ்வாய் கூறிய அஷ்மிதா, “நல்லா லவ் பண்றீங்க உதய்” என்றாள்.
“ஆஹான்…” என்ற உதய், “வா வீட்டுக்கு போகலாம்” என்றான்.
“இல்லை இப்போ வேண்டாமே!”
அஷ்மிதா மறுப்பாய் சொல்லவும் உதயனின் புருவம் உயர்ந்தது.
“உங்களோட…” எங்கு தான் மறுத்ததை தவறாக புரிந்து கொள்வானோ என நினைத்த அஷ்மிக்கு எப்படி சொல்வதென்று சரியான வார்த்தைகளும் வராதுபோக, “அச்சோ எனக்கு அஷ்மிதா உதயச்செல்வனா வரணும்” என்றிருந்தாள்.
அஷ்மியின் தடுமாற்றத்திலேயே அவள் இதைத்தான் சொல்வாளென்று யூகித்த உதயன், அவள் சொல்லிய விதத்தில் பொங்கி வரும் உணர்வில் தத்தளித்தவனாக மேல் உதட்டின் நுனியை கீழ் பற்களால் கடித்து விடுத்தான்.
அதுவரை அவனருகில் இல்லாத அவஸ்தை அவனின் அச்செயலில் உண்டாக…
“மேரேஜில் பார்க்கலாம்… கிளம்புறேன்” என்று வேகமாக அவளது காரில் ஏறி அமர்ந்தாள்.
உதயன் தன்னுடைய தாரில் சாய்ந்து நிற்க… வண்டியை இயக்காது அவனைப் பார்த்தாள் அஷ்மிதா.
அவனது பார்வையை கடந்து அவளால் செல்ல முடியுமென்று தோன்றவில்லை.
“அச்சோ உதய்” என்று சத்தமின்றி அவள் உதடசைக்க…
“போ” என்று கண் காட்டினான்.
எப்போதும் அவளின் காதலில் உதயனுக்கு பிரமிப்பு தான். மனதால் காத்திருந்து, அவள் உணர்வால் அவனை உணர வைத்த காதலல்லவா! அவளில் அப்படியொரு பிடித்தம் உண்டாகியிருந்தது.
அஷ்மிதா பார்வையால் விடைபெற்று செல்ல, அவளின் கார் மறையும் வரை நின்று பார்த்திருந்த உதயன், விடுவிடுவென சென்று பத்தடி தூரத்தில் பாறைக்கு பின் மறைந்து நின்று தங்களை பார்த்திருந்த வந்தனாவின் முன் சென்று நின்றான்.
_________________________
பத்திரிகை வந்துவிட்டதை புகைப்படம் எடுத்து நனியிதழ் பிரணவ்வுக்கு அனுப்பியிருக்க, அவசர வேலையாக வெளிநாட்டிற்கு திடீரென பயணமான பிரணவ் அன்றைய வேலை முடிந்த பின்னர் தான் அதனை பார்த்தான்.
பார்த்ததும் நனிக்கு அழைத்துவிட்டான்.
“அழகா இருக்குல பிரணவ்?” நனியிதழ் கேட்டதிலேயே அவளின் மகிழ்வின் அளவு அவன் உணர்வதாய்.
“எஸ்” என்ற பிரணவ், “பார்க்கணும் இதழ்…” என்றான்.
“வேண்டாம் சொல்ல சொல்ல கேட்காம போனீங்க தானே! கல்யாணம் அன்னைக்கே பார்த்துக்கோங்க” என்றாள்.
“ரொம்ப பன்ற நீ” என்ற பிரணவ், “வெட்டிங் மார்னிங் தான் வருவேன் போல” என்றான்.
“வாட்?” என்று அதிர்ந்த நனியிதழ், “அன்னைக்கு மட்டும் ஏன் வர. அப்படியே அங்கவே இருந்திடு” என்றாள்.
“என்னடி சட்டுன்னு இப்படி சொல்லிட்ட” என்ற பிரணவ், “நேத்து வந்தனா எனக்கு மெசேஜ் பண்ணியிருக்கா. வொர்க் பிசியில நான் இப்போ தான் பார்த்தேன்” என்றான்.
“உங்களுக்கு ஏன் பண்ணனும்?” என்ற நனி, “அவள் அமைதியா இருக்கா… மாறிட்டா நினைச்சேன்” என்றாள்.
“பெரிய பிளானில் இருக்கா” என்ற பிரணவ் அவள் அனுப்பிய தகவல் என்னவென்று சொல்ல,
“இந்தளவுக்கு போவாங்களா?” என்ற நனியிதழ், “இதுக்குமெல அண்ணாகிட்ட சொல்லாம இருக்க முடியாது” என்றாள்.
“தாத்தாகிட்ட பர்ஸ்ட் சொல்லு இதழ். இங்க நான் கேர்ஃபுல்லா பார்த்துக்கிறேன். ஆல்ரெடி மாம்ஸ் வெட்டிங் வொர்க்ல பிஸியா இருக்காங்க. இது தேவையில்லாத டென்ஷன்” என்றான்.
“எப்படி கூலா இருக்கீங்க நீங்க? அவள் அஷ்மியை கொன்னுடுவேன் சொல்லியிருக்கா. அப்பட்டமா மிரட்டியிருக்கா” என்ற நனியிதழ், “நம்ம மேரேஜ் வரை விட்டு வச்சா இன்னும் என்னவும் செய்வாள். இதுக்கு மேல விட முடியாது” என்றாள்.
“ஹேய் ஃபர்ஸ்ட் காம் ஆகு நீ” என்ற பிரணவ், “நீ குதிக்கிற அளவுக்கு ஒண்ணுமில்லை. அஷ்மி நிழலை கூட அவளால் நெருங்க முடியாது. நீ நம்ம மேரேஜ் நினைச்சு சந்தோஷமா இரு. பார்த்துக்கலாம்” என்றான்.
இருவருக்குமே வந்தனாவின் நிலை ஓரளவுக்கு புரியத்தான் செய்தது.
உதயனை விட்டுவிடக் கூடாது என்பதற்காக, தோன்றுவதை எல்லாம் கிறுக்குத்தனமாக செய்து கொண்டிருக்கிறாள் என்று. இருந்தாலும் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறதே. அதனைத்தான் ஏற்க முடியவில்லை.
அதன் பின்னர் ஏதேதோ பேசி நனியிதழை ஆற்றுப்படுத்தியே அலைபேசியை வைத்தான் பிரணவ்.
ஆர்யனுக்கு அழைத்து அனைத்தும் மேலோட்டமாக பகிர்ந்து, அஷ்மி எங்கு சென்றாலும் அரணாய் உடனிருக்க வலியுறுத்தினான்.
எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்க, திருமண நாளும் வந்தது.