என் ஆயுள் நீயே 62

என் ஆயுள் நீயே 62

விடிந்தால் திருமணம். ஒரே நேரத்தில் இரண்டு திருமணம்.

உதயன் பம்பரமாக சுழன்றான் என்று தான் சொல்ல வேண்டும். நடுவில் வந்தனாவை வேறு அவனது கண் பார்வையில் வைத்து கவனித்துக் கொண்டிருந்தான்.

தம்பி, தங்கையின் திருமணம் என்று மட்டும் பாராது, பிரணவ், தனுவையும் உறவுகளாக தன் பந்தத்தில் ஒருவராக பாவித்து ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தான்.

பெரியவர்கள் எது செய்தாலும் அங்கு உதயனின் முடிவு முன் வைக்கப்பட்டு, அவனின் வேலைப்பளுவை வெகுவாகக் குறைக்க முயன்றனர்.

அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் கஜமுகன் இல்லத் திருமண விழா, உதயன் ஏற்பாட்டால் நகரத்தில் அதீத கவனம் பெற்றது.

பிரணவ் மற்றும் இன்பா மேடை ஏறியிருக்க… மணப்பெண்ணான நனியிதழ் மற்றும் தனுவை, அஷ்மிதா, எழில், ரீமா மூவரும் அழைத்து வந்தனர்.

மேடை ஏறியதும் உதயன் நின்றிருக்க,

“செல்வா” என்று உச்சரித்த நனியின் கண்கள் பனித்தன.

தங்கையின் உச்சியில் கை வைத்து அழுத்தம் கொடுத்த உதயன்…

“ஸ்மைல் மிஸஸ் நனியிதழ்” என்றான்.

“அச்சோ அண்ணா” என்ற நனியிதழ், அவனின் தோள் சாய, உதயன் அவளின் நெற்றியில் ஆதுரமாய் முத்தம் வைத்து, தானே அழைத்து வந்து பிரணவ் அருகில் அமர வைத்தான்.

“எங்களுக்கு எல்லாம் இல்லையா?” பிரணவ் கண்கள் சுருக்கி கேட்க,

“அடேய்…” என்ற உதயன் பிரணவ்வின் கன்னம் இரண்டிலும் தன் உள்ளங்கை வைத்து, அவனின் முகம் பற்றி, உச்சியில் முத்தம் வைத்திருந்தான்.

ஆத்ம நிறைவு.

நேசத்திற்கு, வைக்கும் அன்பிற்கு வேறுபாடு இல்லை. அதனை சிறு செயலில் காட்டியிருந்தனர்.

பார்த்த அனைவருக்கும் கனிவாய் புன்னகை இதழின் ஓரம் தேங்கியது.

“அண்ணா…”

பிரணவ் விட்டு உதயன் விலகி நிற்க, இன்பா அழைத்திருந்தான்.

“இவனும் ஆரம்பிச்சிட்டான்” என்று உதயன் பக்கம் செல்ல, “எனக்கு” என்றிருந்தான் இன்பா.

“அநியாயம் பண்றீங்கடா” என்ற உதயன், இன்பாவின் உச்சியில் முத்தம் வைக்கப் போக, “அங்கில்லை… இங்க” என்று தன் கன்னத்தை விரல் தட்டி காண்பித்தான் இன்பா.

“இன்பா” என்று சிரித்த உதயன், அழுத்தமாக இதழ் ஒற்றிட…

“அச்சோ கண்ணு படுமே” என்று பதறினார் கங்கா.

“அச்சோ அக்கா… படுற கண்ணு படத்தான் செய்யும். நீங்க நம்ம பிள்ளைங்க சந்தோஷத்தை மட்டும் பாருங்க. இப்போவே சுத்திப் போடணும் புலம்ப ஆரம்பிக்காதீங்க” என்று பிடித்து வைத்தார் காமாட்சி.

“எங்களுக்கும் கிடைக்குமா?” ஆர்யன் ஒற்றை கண்ணடித்து, உதயன் பின்னிருந்து கிசுகிசுப்பாகக் கேட்க, “உனக்கும் இந்த நாள் வரட்டும் கொடுத்திடலாம்” என்றான் உதயன்.

எழில் உதயனை முறைத்துக் கொண்டு நிற்க,

“இவளை விட்டேன் பாரேன்…” என்ற உதயன் கை நீட்டி பக்கம் அழைத்து தன் தோளோடு அணைத்து விடுத்தான்.

“இந்த பாசம் எப்பவும் இருக்கணும் பகவதி தாயி” என்று லட்சுமி பாட்டி அப்போதே கரம் குவித்து நிறைவாய் வணங்கியிருந்தார்.

அடுத்தடுத்த சடங்குகள் நடந்து கொண்டிருக்க, உதயன் யாரும் அறியாது மெல்ல நகர்ந்து அஷ்மிதாவின் அருகில் வந்து நின்றான்.

அருகருகே தோள்கள் தீண்டும் தீண்டா நெருக்கம். அவனது சட்டையில், அவளது புடவையும் உரசியும் உரசா நிலை, ஆனால் இருவருக்குள்ளும் குளிர் பரவியது.

“பார்வை பலமா இருக்கே.” உதயன் உதடு அசைந்ததா என்பது தெரியாதளவிற்கு அவனது வார்த்தைகள் வெளி வந்தது.

“பார்க்க வைக்கிறீங்க… பார்க்கிறேன்” என்ற அஷ்மிதா, “எனக்கெல்லாம் இல்லையா?” எனக் கேட்டாள்.

அவள் கேட்டது புரிந்திட, உதயன் பக்கவாட்டில் அவளை பார்த்து சடுதியில் திரும்பியிருந்தான்.

“கொடுக்க நான் ரெடி… அஷ்மிதாவுக்கு ஓகேவா.” உதயன் கேட்ட விதத்தில் அவளுக்கு மின்னல் அடித்த உணர்வு.

“உதய்…”

“எஸ் அஷ்மிதா… கொடுக்கலாமா?” உதயன் சிரிப்போடு வினவ, அதிர்வில் விரிந்த அவளின் கண்கள், சட்டென்று ஒலித்த கெட்டிமேள சத்தத்தில் மணமக்கள் புறம் திரும்பியது.

இரு ஜோடிகளும் பெரியோர் மற்றும் இறைவனின் ஆசீர்வாதத்தில் தங்கள் திருமண பந்தத்தில் அடி வைத்திருந்தனர்.

மனம் நிறைந்த மகிழ்வோடு இரு திருமணங்கள்.

அக்னி வலம் வந்த இரண்டு ஜோடிகளும், ஒருவர் பின் ஒருவராக பெரியவர்களின் பாதம் வணங்கி எழ, உதயன் காலில் விழ முயன்றவர்களை மார்போடு அணைத்து விடுத்தான் உதயன்.

கஜமுகனுக்கு உதயன் செயல்கள் யாவும், இந்த குடும்பத்திற்கு அவன் ஒருவன் போதும். தனக்கு பின்பும் தன்னுடைய சந்ததிகள் பல தலைமுறைகள் ஒன்றுகூடி இணக்கமாக வாழ்ந்திடுவார்கள் என்று நெஞ்சம் கனிய நம்பிக்கை கொண்டார்.

சுற்றம் உறவினர்கள் யாவரும் மெல்ல கிளம்பிச் சென்றிட,

முதலில் இரு ஜோடிகளும் உதயன் வீட்டிற்கு செல்வதாக முடிவாகி வந்து சேர்ந்தனர்.

தனு பூஜையறையில் விளக்கேற்ற… குமரிக்கு பெரும் ஆசுவாசம். இதற்காகத்தானே அவர் காத்திருந்தது… சாமி கும்பிட்டு வெளியில் வந்த மகளை அணைத்து முத்தம் வைத்து மகிழ்ந்தார்.

“அத்தை கோபமெல்லாம் போயிருச்சு போல.” எழில் சொல்லிட, உதயன் கண்ணமர்த்தினான்.

“எங்க என்ன பேசணும் தெரியாதா எழில்” என்ற காமாட்சி, “இறங்கினவங்க எப்போ வேணாலும் ஏறுவாங்க. கணிப்புக்கு அப்பார்ப்பட்ட ஆளு குமரி அண்ணி” என்றார்.

“இவங்கதான் வீட்டில் டெரர் பீஸா?” அவர்களின் பேச்சை வைத்து ஆர்யன் எழிலிடம் கேட்க, உதடு சுளித்து விட்டு பதில் சொல்லாது முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் எழில்.

“என்னவாம்? மேடம் சூடா இருக்கீங்கப் போல?” ஆர்யன் கேட்க, அதற்கும் எழிலிடம் பதிலில்லை.

“பேசலன்னா விடுங்க…” அசட்டையாகக் கூறியவனாக ஆர்யன் நகர,

“இப்போதான் நான் கண்ணுக்குத் தெரியிறனாக்கும்!” என்றாள் எழில்.

“இல்லையே நேத்து மண்டபத்துக்கு வந்ததுலேர்ந்து உன்னை மட்டும் தான் பார்த்திட்டு இருக்கு என்னோட கண்ணு. அதுவும் இன்னைக்கு அண்ணியையும் அக்காவையும் மேடைக்கு கூட்டிட்டு வரும் போது…” என்று நிறுத்திய ஆர்யன், “மூச்சு முட்டிடுச்சி போ” என்றான்.

“அப்போ பார்த்தும் பார்க்காத மாதிரி இருக்க. சரியா பேச மாட்டேங்கிற… என்னடா நினைச்சிட்டு இருக்க” என்று எகிறினாள்.

ஆர்யன் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்திருக்க…

“என்னடா… ஈசியா எல்லாரும் ஓகே சொல்லிட்டாங்கன்னு நான் சாதாரணமா தெரியிறனா?” என்றாள்.

அவளின் கண்கள் கூட லேசாக கலங்கிவிட்டது.

நிச்சயம் அன்று அவனிடம் பேசியது. அதன் பின்னர் கல்லூரியும் தேர்வு நாட்களுக்கு மட்டுமென்று இருக்க பார்த்துகொள்வதே அரிதாகியது. இவளாக அழைத்தோ, தகவல் அனுப்பியோ பேச முயற்சித்தாலும், தேர்வுக்கு படிக்க வேண்டுமென்பதை காரணம் காட்டினான். அதன் பின்னரான நாட்கள், “இப்போதான் அப்பாவுக்கு துணையா அவரோட ஃபீல்டுக்கு வந்திருக்கேன். கவனமா எல்லாம் லர்ன் பண்ணனும் எழில்” என்று தவிர்த்தான்.

காதலை சொல்லி அனைவரும் ஏற்கும் வரை அவன் கொண்டிருந்த தவிப்புகள் யாவும் தற்போது எழிலிடம் தஞ்சம் புகுந்திருந்தது.

உண்மையிலேயே அவனுக்கு தன்னிடம் பேசாததற்கு நேரமின்மை தான் காரணமென எழில் அமைதியாக இருக்க, திருமணமென்று ஒன்று கூடிய இரு நாட்களிலும் கூட அவனாக அவளிடம் பேச முயற்சிக்கவே இல்லை.

நீண்ட நாட்கள் கழித்து பார்த்துக்கொள்ளப் போகிறோம் என்று அவனுக்காக பார்த்து பார்த்து அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்து நிற்க, அவனோ சாதாரணப் பார்வையில் கடந்து விட்டான்.

ஒருவித ஏமாற்றம் சூழ, இந்த நொடி அவனிடம் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தி விட்டாள்.

“என்னைத் தேடினியா எழில்?” முகம் மலர ஆர்யன் கேட்க,

“ஆமா… என்னடா இப்போ. மிஸ் பண்றேன் போதுமா. காலேஜ் டேசில் பேசாம இருந்த அப்போலாம் கூட நீ பக்கத்திலே இருப்ப… தெரிஞ்சிக்கல. ஆனால் இப்போ, இவ்ளோ பக்கம் இருக்க, ஆனா பேச மாட்டேங்கிற. என்னவோ மாதிரி இருக்கு ஆர்யா. நான் எதும் உன்னை ஹர்ட் பண்ணிட்டனா” என்று அவள் கலங்கி கேட்க, இழுத்து தனக்குள் அடைகாத்துக் கொள்ள தோன்றும் எண்ணத்தை அடக்க வெகுவாக சிரமம் கொண்டான்.

“பேசனா தான் என்னை உணர முடியுமா எழில்?” என்ற ஆர்யன்,

“வீட்டில் எல்லாருக்கும் சம்மதம். இந்த சம்மதம் எனக்கு அவங்க நம்ம மேல வச்சிருக்க நம்பிக்கையாதான் தெரியுது. அந்த நம்பிக்கை நம்ம கல்யாணம் வரை கொஞ்சமும் குறையாம இருக்கணும் நினைக்கிறேன். நீ எப்படின்னு தெரியல. ஆனால் எனக்கு உன்னை பார்த்தாலே ஹார்ட் மெல்ட் ஆகுது. என் கைக்குள்ள உன்னை நிறுத்தி வச்சிக்கணும் தோணுது. இப்போ கூட என்னைத் தேடி எனக்காக சண்டை போட்டு நிக்கிற உன்னை இழுத்து கிஸ் அடிக்கணும் போல தோணுது…” என்று அவன் சொல்ல, அதிர்வில் அவள் இரண்டடி தள்ளி நின்றாள்.

“தோணுதுன்னு தான்டி சொன்னேன். சொன்னதுக்கேவா” என்ற ஆர்யன், “மனசால நெருங்கி இருக்கும் போது, பார்வை மட்டும் போதும். பேச்சு அவசியமா என்ன?” எனக் கேட்டான்.

ஆர்யன் சொல்ல வருவது முழுதாய் புரிந்தது.

காதலின் முதல் அடியில் இருப்பவளுக்கு அதனின் பரவசத்தை அனுபவித்திடவே மனம் உந்தியது. ஆனால் தற்போது அவனது பேச்சிற்கு பின் ஒரு தெளிவு.

“நீ எப்படி வேணாலும் இருந்துக்கோ. எட்ட நில்லு… தூரம் நில்லு… ஏன் அந்த கடலுக்கு அந்தப் பக்க்கம் கூட போயி நில்லு. ஆனால் தினமும் நான் கால் பன்ற நேரம் ஒழுங்கா பேசுற. இல்லை… நேரா உன் முன்ன வந்து நிப்பேன்” என்று விரல் நீட்டி மிரட்டியவள், கங்கா கூப்பிடவும்,

“வரேன் பெரியம்மா” என்று சொல்லிவிட்டு, “இவங்களா வந்து லவ்வை சொல்லுவாங்களாம். அப்புறம் தள்ளி நில்லு. நம்பிக்கையை காப்பாத்துண்ணு வசனம் பேசுவாங்களாம்” என்று முனகிவிட்டுச் சென்றாள்.

அவளின் அதிரடிப் பேச்சில் ஆர்யன் சிரித்துக் கொண்டு நிற்க… அவனது அலைபேசி ஒலித்தது.

“என்னடா தம்பி கிளம்பியாச்சா?”

அஷ்மிதா தான் அழைத்திருந்தாள்.

திருமணம் முடிந்து வீட்டிற்கு மணமக்கள் வரும் நேரம் வீட்டில் ஆளிருக்க வேண்டுமென்று அஷ்மிதாவும், ராகவனும் உதயன் வீடு வராது, மண்டபத்திலிருந்து நேராக அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

“எல்லாம் முடிஞ்சுது அஷ்மி அக்கா. அங்க வந்திட்டு திரும்ப இங்க வரணும் போல. நைட் ரிச்சுவல்ஸ் பொண்ணு வீட்டுல தானாம். சோ, இப்போ சீக்கிரமே எல்லாம் பண்ணியாச்சு” என்று ஆர்யன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

“ஆரி… கிளம்பலாம்” என்று அவனருகில் வந்தார் விஜயன்.

“கிளம்பியாச்சுக்கா” என்று அழைப்பை வைத்த ஆர்யன் எழில் எங்கென்று தேட இப்போது அவன் கண்ணில் அவள் படவில்லை. அவள் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் பிடிபடவே சிறு சிரிப்போடு காரிலேறி அமர்ந்தான்.

பிரணவ், நனியிதழ் மகிழ்வாக கிளம்ப, அவர்களுக்கு இணையாக இன்பா, தனு குமரியின் இல்லம் சென்றனர்.

தங்கையின் அருகில் பிரணவ். அவளது கணவனாக. இதற்காக உதயன் கொண்ட மெனக்கெடல்கள் அதிகம். அதன் கனங்கள் யாவும் இந்த நிமிடம் பனியாய் கரைந்த உணர்வு.

போயிட்டு வரேன் எனும் விதமாக நனியிதழின் தலை மெல்ல அசைந்து கொடுக்க… உதயனின் இதழ்கள் நீண்டு விரிந்தது. அவனது கண்கள் காட்டிய நிறைவில் நனியிதழின் உள்ளம் பேரின்பம் கொண்டது.

error: Content is protected !!
Scroll to Top