என் ஆயுள் நீயே 63

என் ஆயுள் நீயே 63

குமரியின் வீட்டிற்கு தன் மனைவியுடன் வந்த இன்பாவுக்கு முன்பிருந்த இயல்பு அங்கில்லை.

குமரி உதயனை முன்னிறுத்தி குடும்பத்தை அவமானப்படுத்தும் விதமாக பேசியிருக்க, அதனை இன்பாவால் சட்டென்று மறந்திட முடியவில்லை. உதயனின் சொல்லுக்காக, தன்னுடைய தனுவிற்காக கடந்திட முயற்சித்திட்டான்.

“என்ன மாப்பிள்ளை முகம் ஒரு மாதிரி இருக்கு?” இன்பாவின் அருகில் அமர்ந்திருந்த ஜெயந்தன் கேட்க, “ஒண்ணுமில்லை மாமா” என்றான். முயன்று வெளிக்கொணர்ந்த புன்னகையோடு.

“சங்கடம் எனக்கு புரியுது மாப்பிள்ளை. என்னாலே மன்னிக்க முடியல. மறக்க முயற்சி செய்யுங்க. காலத்துக்கும் நீடித்திருக்க வேண்டிய சொந்தம்” என்று அவனின் தோளில் தட்டிக் கொடுத்தார் ஜெயந்தன்.

“அதுதான் முயற்சி செய்யுறேன் மாமா” என்ற இன்பா, சற்று தள்ளி குமரியுடன் பேசிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான்.

அவனுக்காக அவள் கொண்ட காதலெல்லாம் தாலி கட்டும் தருணம் ஒற்றை பார்வையில் மொத்தமாக அவனது அகம் நிறைத்திருந்தாள்.

அந்த நொடி முதல் முழுதாய் அவளுடன் அடங்கிப்போகும் எண்ணம் அவனுள்.

“எல்லாரும் கிளம்பியாச்சா மாமா?” வீட்டில் அவர்கள் தவிர்த்து யாருமில்லாததால், ஜெயந்தன் பக்க உறவுகள் சென்றுவிட்டார்களா என்று விசாரித்தான்.

“அப்போவே மண்டபத்திலிருந்தே போயாச்சு மாப்பிள்ளை” என்ற ஜெயந்தன், “நீங்க தனு ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்கிறதுன்னா எடுங்க” என்றார்.

அவனும் சட்டென்று எழுந்துவிட்டான்.

இன்பா உதயன் அளவுக்கு இறுக்கமான ஆள் கிடையாது. ஜெயந்தனிடம் தோளில் கைபோட்டு பேசுமளவிற்கு நெருக்கமாக இருந்தவன். ஆனால் குமரி செய்த செயல் அவனால் அவரிடம் கூட முன்பு போல இருக்க முடியவில்லை.

“எப்பவும் நான் உன் மாமா தான் மாப்பிள்ளை” என்ற ஜெயந்தனை பார்க்கையில் தன்னை அறியாது தான் காட்டும் விலகல் அவரை வருத்துகிறது என்பது புரிந்த கணம் அவரை அணைத்து, “நானும் எப்பவும் உங்க மாப்பிள்ளை தான் மாமா” என்று விடுத்தான்.

“சந்தோஷம் இன்பா” என்று அவர் நெகிழ, இன்பா சிறு முறுவலோடு தனுவின் அறைக்குச் சென்றான்.

“இன்பா தனியா போயிருக்கான் பாரு. பார்த்து என்ன வேணும் கேளு” என்று மகளை விரட்டினார் குமரி.

“ம்ம்மா…” தனு இடுப்பில் கை வைத்து முறைக்க, குமரி “என்னடி?” என புரியாது வினவினார்.

“இதுநாள் வரை வேணும்னா அவங்க உனக்கு அண்ணன் மகனா இருக்கலாம். ஆனால் இன்னையிலிருந்து மருமகன். இந்த வீட்டோட மாப்பிள்ளை. உன் பொண்ணோட ஹஸ்பெண்ட். கண்டிப்பா நீ அதுக்கு உண்டான மரியாதையா கொடுக்கணும். இல்லை நான் உன்கிட்ட சண்டைக்கு வருவேன் பார்த்துக்கோ” என்று ஒற்றை விரல் நீட்டி நீட்டி அவள் பேச, குமரியே வாயடைத்துப் போனார்.

“ஒரு நாளுல இவ்வளவு மாத்தம் ஆவாது தனு” என்ற குமரி, “குதிக்காதா… இனிமே மரியாதைக்கு எந்த குறையும் வைக்கமாட்டேன்” என்று மகளின் கன்னம் இடித்தார்.

“அது” என்று தனு நகர, அவளின் கையை பிடித்து நிறுத்திய குமரி, “அவசரமில்ல தனு. எல்லாம் ராத்திரிக்கு தான்” என்றார்.

“அச்சோ அம்மா” என்று சிணுங்கிய தனு, “போம்மா” என்று ஓடிவிட்டாள்.

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இந்த வெட்டு வெட்டிட்டுப் போறா” என்று மகள் சென்ற திசையை பார்த்து நின்ற குமரியின் அருகில் வந்த ஜெயந்தன்…

“சந்தோஷம் தானே குமரி?” எனக் கேட்டார்.

“நான் நடுவுல பண்ணதெல்லாம் நினைச்சா எனக்கே அவமானமா இருக்குங்க” என்றார் குமரி.

“அதை நினைக்க வேண்டாம். இந்த நிமிஷம்… மனசு நிறைஞ்சிருக்கு. இந்த சந்தோஷம் சீரா தொடருறது உன் கையில் தான் இருக்கு. நீ எப்போ மாறுவங்கிற கவலை எனக்கே இருக்கு” என்ற கணவனை இன்னதென்று விளங்கா பார்வை பார்த்த குமரியின் மனம் இந்த கணம் அனைத்தையும் ஏற்று அமைதியாக இருந்தாலும், அவரின் இயல்பே எதிலும் தான் முதன்மை பெறுவது என்பது தானே. சற்று அடங்கியிருக்கும் இந்த குணம் பின்னாளில் பெரும் பிரச்சினைக்கு அடித்தளமாக அமைந்தது. அதில் அவரிடம் அதிகம் சிக்கிக்கொண்டு தவித்தது, யாருக்காக என்று அனைத்தும் பார்த்து ஆசை கொள்கிறாரோ அவரது மகள் தன்யா தான்.

“ஹாய் மாமா…” என்று துள்ளல் குரலோடு தனு அறைக்குள் நுழைந்ததோடு, மெத்தையில் அமர்ந்திருந்த இன்பாவின் மடியில் அமர்ந்து அவனது கழுத்தைச் சுற்றி தன்னுடைய கைகள் கோர்த்து, “பைனலி யூ ஆர் இன் மை ரூம். நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு மாமா” என்று கத்தி சொல்லியவள், அவனின் கன்னத்தில் கடித்து, அழுத்தமாக சத்தத்தோடு முத்தம் வைத்தாள்.

முத்த சத்தம் அறைக்குள் மட்டுமே அடங்கியிருந்தாலும், தனு கத்தி சொல்லிய வார்த்தைகள் வெளியிலும் கேட்டிருக்க, மகளின் ஆசையின் ஆழம் குமரி உணர்வதாய்.

வீம்புக்கென்று தன்னுடைய பிடியில் நின்றிருந்தால் மகளின் கண்ணீர் மட்டுமே மிச்சமிருந்திருக்கும் என்று புரிந்து கொண்டார்.

இந்த புரிதல் பின்வரும் நாட்களில் இல்லாமல் போனதாலே அனைவரின் பார்வையிலும் இறங்கிப்போயிருந்தார்.

“என்னடி இவ்ளோ சத்தம்?” என்ற இன்பா, தன் மடியில் அமர்ந்திருந்தவளின் இடைச்சுற்றி தன்னுடைய கைகளால் அரண் அமைத்திருந்தான்.

இடையில் ஊரும் அவனது ஸ்பரிசத்தில் நிலையின்றி அசைந்தாள்.

“எதுக்குடி நெளியுற” என்று அவளின் நெற்றி முட்டிய இன்பா, “ஒன்னு பத்தலையாம் தனு” என்றான்.

“ஹான்…” அவன் எதை குறிப்பிடுகிறான் என்பது புரிந்து அவள் அதிர்வை காட்டிட…

“இப்போ நான் உன் புருஷன்டி கேட்டது கொடுக்கலன்னா தான் தப்பு” என்றான்.

மிக நெருக்கத்தில் தெரிந்த இன்பாவின் முகத்தில் கண்கள் தொடங்கி, அவன் உதட்டில் பார்வையை நிலைக்கவிட்ட தனு, அவனது உதட்டில் தன் விரல் வைத்து வருட… இன்பாவின் விழிகள் தானாக மூடிக் கொண்டன.

அவளின் மென் தொடுக்கைக்கு அவனது முகத்தில் வர்ணஜாலம் நிகழ்ந்தது.

“இதுக்கேவா?” அவள் அவனின் முக ஒளியில் தொலைய காற்றாய் வினவினாள்.

“கரைய வைக்கிறடி” என்று இன்பா கிறக்கமாக மொழிய, அவனின் கீழ் உதட்டை இரு விரலால் பிடித்து இழுத்த தனு, அவன் இமைகள் திறக்கவும், “நீ சொன்ன தப்பெல்லாம் நைட்டு தானாம் மாமா” என்று இழுத்த உதட்டில் வலிக்க கடித்து அவன் அலறிய இடைவெளியில் சிரித்துக்கொண்டே வெளியில் ஓடியிருந்தாள்.
___________________________

பிரணவ் நனியிதழின் கரம் பற்றி வீட்டு வாயிலில் நின்றிருக்க, ரீமாவும், அஷ்மிதாவும் ஆலம் சுற்றினர்.

ஆரத்தி தட்டோடு அஷ்மி வெளி வாயில் நோக்கிச் செல்ல…

“லவ் டூ மேரேஜ். சார் முகத்துல தவுசன் வாட்ஸ் பல்பு மின்னுது. வாட் நெக்ஸ்ட் டா?” என்று உள்ளே விடாது வம்பு செய்தாள் ரீமா.

“ஹனி மூன் தான்” என்று பட்டென்று பிரணவ் சொல்லிட, அங்கே சிரிப்பின் ஆர்ப்பரிப்பு.

ராகவன் சிரிப்பை மறைத்துக் கொண்டு உள்ளே செல்ல…

“அச்சோவ்… என்ன நீங்க” என்று பிரணவ்வின் முதுகில் தன் முகம் மறைத்தாள் நனியிதழ்.

பிரணவ் சொல்லிய வேகத்திற்கு ரீமா உறைந்து நிற்க…

“ஏன் கேட்டோம்ன்னு இருக்கா?” என்று ஆர்யன் கேட்க, “இவன் என்னடா பொசுக்குன்னு எல்லார் முன்னாடியும் சொல்லிட்டான்” என்று அதிர்ந்த விழி மாற்றாது கூறினாள் ரீமா.

“சீக்கிரம் நீங்களும் கல்யாணம் பண்ணுங்க” என்றான் ஆர்யன்.

“அதெல்லாம் செட் ஆகாதுடா தம்பி” என்று ரீமா நகர்ந்திட, செல்லும் அவளின் முதுகை ஆராய்வாக துளைத்தது பிரணவ்வின் பார்வை.

“என்னடா ரீமாவையே பார்த்திட்டு இருக்க…” என்று அவனது இடையில் இடித்த நனியிதழ், “அத்தை உள்ளே கூப்பிடுறாங்க” என்றாள்.

“ம்ம்” என்று மனைவியின் கரத்தை வளைத்து தன் மார்பில் அழுத்தி வைத்தவன், “போலாமா” என்று அவளின் விழிகளோடு தன் விழிகள் கலந்து வீட்டிற்குள் ஒன்றாக அடி வைத்தனர்.

கோர்த்திருந்த கரங்கள் பிரணவ்வின் நெஞ்சில் பதிந்திருக்க, பக்கவாட்டில் நனியிதழ் நோக்கி தாழ்ந்திருந்த பிரணவ்வின் முகமும், அவனது முகம் பார்க்க உயர்ந்திருந்த நனியிதழ் முகமும் காதலின் ரசனைகளை உள்வாங்கி கலந்திருக்க ஆர்யன் தன் அலைபேசியில் அக்காட்சியை அழகாய் சேமித்தான்.

“மெஸ்மரைசிங் ஸ்நாப்” என்று ஆர்யன் கூவிட, தன் முகம் பார்க்க உயர்ந்திருந்த நனியின் உச்சியில் தன் தாடை பதித்து விலகிய பிரணவ்,

“தூக்கிட்டு போயிடவா?” என ஹஸ்கி ஒலியில் கேட்டான்.

“எனக்கு வழிவிட்டுடுட்டு லவ் பண்ணுங்கடா” என்று ஆரத்தி எடுத்த தட்டோடு பிரணவ்வின் பின்னால் அஷ்மிதா அடி வைக்க…

தங்கையின் கழுத்தில் பின்னோடு கையிட்டு வளைத்து, தங்கள் இருவருக்கும் இடையில் நிறுத்திய பிரணவ்,

“இங்க மேடம் தான் உனக்கு மாமியார். பார்த்து நடந்துக்கங்க பொண்டாட்டி” என்று நனியிடம் கண் சிமிட்டினான்.

“என்னடா வீட்டுக்கு வந்ததும் எங்களுக்குள்ள மூட்டிவிடப் பாக்குறியா?” என்று இடையில் கைகள் குற்றி அஷ்மிதா முறைத்தபடி வினவ, “அதானே! நல்லா கேளுங்க நாத்தனாரே” என்று கணவனை மிதப்பாகப் பார்த்தாள் நனியிதழ்.

“உங்களுக்குள்ள சண்டை இருந்தா தானே… வீடு எண்டர்டெயினிங்கா இருக்கும்” என்று பிரணவ்விடம் ஹை ஃபை அடித்தான் ஆர்யன்.

“போங்கடா” என்ற அஷ்மிதா, “ஷீ இஸ் மை ஸ்வீட் அண்ணி… உங்க கொண்டாட்டத்துக்கு நாங்க ஊறுகாய் ஆக முடியாது” என நனியிதழை அணைத்து நிற்க, உதயன் வீட்டிற்குள் வந்தான்.

“வாங்க மாப்பிள்ளை…” முதலில் பார்த்துவிட்டு ராகவன் அழைக்க,

“என்ன மாமா உங்க தங்கச்சியை முன்னாடி அனுப்பிட்டு… நாங்க நல்லா பார்த்துக்கிறோமான்னு பின்னாடியே பார்க்க வந்தீங்களா?” என்று ஆர்யன் கேட்க, “என்ன பேச்சுடா இது” என்று அவனின் முதுகிலே அடித்தார் விமலா.

“அவன் கிண்டலா கேட்கிறான். விடுங்க அத்தை” என்ற உதயன், “ஆமாங்க சின்ன மச்சான். என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைச்சிருக்கேன். அதில் ஆனந்த கண்ணீரை மட்டும் தான் நான் பார்க்கணும்… அப்படிங்கிற சிவாஜி டயலாக் சொல்ல மறந்துட்டேன். அதான் பொறுப்பான பாசமலரா சொல்லிட்டுப் போலான்னு வந்தேன்” என்று தனக்கு சமமாக இறங்கி கேலி செய்த உதயனிடம் தலைக்கு மேல் கும்பிட்டு விட்டான் ஆர்யன்.

“க்ளீன் போல்ட்” என்று ஆர்யன் சொல்ல…

“இதை எங்க ஊருல டோட்டல் டேமேஜ் சொல்லுவாங்க” என்று ரீமா சொல்லியதில், அங்கே மௌனத்திற்கு பஞ்சமாகிப் போனது.

“பேசிட்டே நின்னா நேரம் போறதே தெரியாது. வந்து விளக்கேத்து நனிம்மா” என்ற விமலா, “ரெண்டு பேரும் ஒண்ணா சாமி கும்பிடுங்க” என்று பூஜையறை அழைத்துச் சென்றார்.

மூவரும் சென்றிட, “நாங்க அப்படி ஓரமா போகணுமா மாமா?” என உதயனிடம் கேட்டான் ஆர்யன்.

“சொன்னாதான் போவீங்களா மச்சான்” என்று உதயன் கேட்டதில், ரீமா சத்தமாக சிரித்தபடி ஆரியனை கூட்டிக்கொண்டு நகர்ந்தாள்.

உதயன் மற்றும் அஷ்மிதா மட்டும் அவ்விடம் நின்றிருக்க…

“அண்ணா, அண்ணியை கூட்டிட்டுப்போக வந்தீங்களா?” எனக் கேட்டாள் அஷ்மிதா.

“அதுவும் தான்” என்ற உதயன், “உன் சாரிக்கு இந்த நோஸ் பின் செட் ஆகல…” என்றான்.

“இதுதான் இன்னொரு காரணமா?”

“அஃப்கோர்ஸ் அஷ்மிதா” என்ற உதயன் தன்னுடைய சட்டை பையிலிருந்து, இன்று திருமணத்திற்காக உடுத்தியிருந்த புடவை நிறத்திற்கு கல் பதித்த மூக்குத்தி ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“உதய்…” அஷ்மியின் விழிகள் ஆச்சரிய பாவனை காட்டிட…

ஒற்றை விரலால் அவளின் கன்னம் தட்டிவிட்டு, அங்கு கூடத்தில் விஜயன் அருகில் சென்று அமர்ந்தான்.

சில நிமிடங்களில் அஷ்மிதா மூக்குத்தி மாற்றி அணிந்து வந்து நிற்க… உதயனின் விழிகளில் அப்பட்டமான ரசனை. ஒளிவு மறைவின்றி.

error: Content is protected !!
Scroll to Top