என் ஆயுள் நீயே 64
மணமக்களை அழைப்பதற்காக அவர்கள் பின்னாலே சிறிது தங்கி கிளம்பி வந்திருந்தான் உதயன்.
இளங்கோ, கங்கா வருவார்கள் என்று நினைத்திருக்க, உதயன் வருகையை அஷ்மிதா எதிர்பார்க்கவில்லை.
அதுவும் மூக்குத்தி அளிப்பான் என்று நினைக்கவில்லை. ஆனால் அவளுக்காக அவன் பரிசு கொடுக்கிறான் என்றால் நிச்சயம் அது மூக்குத்தியாகத்தான் இருக்கும். கடந்த நான்கு மாதங்களில் பத்துக்கு அதிகமாக வாங்கிக் கொடுத்திருப்பான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தில், ஒவ்வொரு வர்ணத்தில். அவனுக்கு அவளை பார்க்கத் தோன்றினால், மூக்குத்தி வாங்கி அவளுக்கு புகைப்படம் எடுத்து அனுப்பிடுவான். அடுத்த நிமிடம் அவனை பார்க்க கிளம்பி வந்துவிடுவாள். முடியாத நிலையில் காணொளி அழைப்பு விடுத்திடுவாள்.
ஆரம்பத்திலிருந்தே அவளாக அவனை தேடி வந்தே, அவனுக்கு பழக்கம் கொண்டிருக்க… இப்போதும் அதையே எதிர்பார்த்தான். அவளின் வருகையில் உணர்ந்த காதல் தானே அவனுடையது. அதிலே அதிகம் பிடித்தம் கொண்டான். அவளாக அவனிடம் வருவதில் அவனுக்கு அலாதி இன்பம். அதற்கு தூதாய் அமைந்தது மூக்குத்தி.
இப்போதும் மண்டபத்திலிருந்து அஷ்மிதா வீட்டுக்கு கிளம்பும் தருணம் அவன் வேலையாக இருந்திட, அவள் தன்னை தேடுவதை அறிந்தவன், இங்கு வர கிளம்பிய இளங்கோவிடம், “பார்க்கணும் ப்பா. நானே போயிட்டு வரேன்” என்று நேரடியாகக் கூறினான்.
உதயன் பார்க்கணும் என்றதில் அவனின் மனம் புரிந்த இளங்கோ, மென் முறுவலோடு… “போயிட்டு வாங்க” என்று அவனின் தோளில் தட்டிக் கொடுத்தார்.
“நல்லாயிருக்கு…” இளங்கோ சொல்லிட… உதயன் புருவம் உயர்த்த,
“எங்க உதயனை இப்படி பார்க்கவும் நல்லாதான் இருக்கு” என்றார்.
“அப்பா…” என்று மலர்ந்து சிரிக்க…
“இது இன்னும் அழகா இருக்கே” என்றார் இளங்கோ.
“உங்க பக்கம் நான் வரவே இல்லை” என்று கிளம்பி வந்திருந்தான்.
செல்லும் மகனை பார்த்த இளங்கோவுக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்த உணர்வு.
படிக்கும் போதே தொழிலில் ஏற்பட்ட சிக்கலில்… சரி செய்ய முடியாது பெரியவர்கள் திணறி நிற்கக் கண்டு தானாக முன் வந்து தோள் கொடுத்து தாங்கி பிடித்தவன். இன்னமும் அந்த பிடியை விடவில்லை. அதனாலேயே வயதுக்கு உரிய இன்பங்களில் தள்ளி நின்றவனின் இந்த மகிழ்வு, புன்னகை, மன உணர்வுகள் யாவும் தந்தையாக அவருக்கு அப்படியொரு மகிழ்வை கொடுத்தது.
கண்கள் பனிக்கும் போலிருக்க, இரு விரலால் கண்களை அழுத்திக் கொடுத்தார்.
“ச்சூ… இதென்ன?” என்று அவரை கவனித்து பக்கம் வந்த கஜேந்திரன் அண்ணனின் தோள் தொட…
“அவங்களுக்குள்ளவும் வெளியில் காட்டிக்காத பல பக்கம் இருக்குல?” என்றார் இளங்கோ.
“நாம மரியாதையா நடத்துறோம் அப்படின்னா, அது அவங்களோட குணத்துக்கானது. அதுக்காக வயசாகிடுச்சு, அவங்களுக்கான உணர்வுகள் இருக்காதுன்னா அர்த்தம்? அவங்களுக்கும் வயதுக்குரிய ஆசைகள் இருக்கும் தானே? அஷ்மியால் அவங்க அவங்களா இருக்கணும் இருந்திருக்கு” என்றார் கஜேந்திரன்.
“நல்லாயிருக்கணும் கஜா…”
“நல்லாவே இருப்பாங்க. நம்ம மொத்தமும் அவங்க தானே” என்ற கஜேந்திரனுக்கும் கூட உதயன் வாழ்வு சிறக்க வேண்டுமென்ற பெரும் பிரார்த்தனை.
இருவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கஜமுகனுக்குத்தான் மனமெல்லாம் பாரமேறியது. வந்தனா எனும் பெரும் சிக்கலை தன் பேரனின் வாழ்விலிருந்து எப்படி நீக்குவதென்று தெரியாது வருத்தம் கொண்டு குழம்பி நிற்கிறார்.
அவரின் வருத்தமும் குழப்பமும் அவசியமற்றதென்று… குடும்பத்தின் அனைத்திற்கும் தீர்வு காண்பது போன்று வந்தனாவுக்கும் உதயனே தீர்வு கண்டிருந்தான்.
வந்தனா விடயத்தில் உதயனின் செயல்கள் யாவற்றையும் அறிந்தது அஷ்மிதா மட்டுமே! அவளுக்கு, அவனின் சரிபாதியாகப் போகிறவளுக்கு தன் செயல்களை, அதற்கான விளக்கங்களை சொல்வது கடமையாக அல்லாது, தன்னில் யாவும் அவளென்ற எண்ணத்தில் மறைக்காது பகிர்ந்திருந்தான் உதயன்.
உண்மை தெரியும் தருணம் கஜமுகனுக்கு பெரும் நிம்மதி மனதில் சூழ்வது உறுதி.
எதிர்பாராது வருகை தந்த உதயனின் எதிர்பார்ப்பை அந்த நிமிடமே அஷ்மிதா நிறைவேற்றியிருக்க, அவன் கண்கள் அவளின் மூக்கில் ரசனையாய் தொக்கி நின்றது.
விஜயனிடம் பேசிக் கொண்டிருந்தபோதும், பார்வையால் தன்னவளிடம் தன் உணர்வுகளைக் கடத்திக் கொண்டிருந்தான் உதயன்.
அஷ்மிதாவின் அருகில் வந்த ஆர்யன்…
“மாமா மீன் விக்குற காசெல்லாம் மூக்குத்தி வாங்கியே காலியாகிடும் போல” என்று சொல்ல… அவனின் இடையிலே கை முட்டியால் இடித்தாள் அஷ்மிதா.
“மாம்ஸ் உங்க ஆளு அடிக்கிறா” என்று ஆர்யன் உதயனிடம் முறையிட,
“எனக்கும் கேட்டுச்சு” என்றான் உதயன்.
“மாம்ஸ்…” என்ற ஆர்யன், “உண்மை தானே?” என்றான்.
“மீன் விக்கிற காசு காலியான, உங்க சிமெண்ட், செங்கல் விக்கிற காசுல வாங்கித்தரேன். நான் கேட்டா என் சின்ன மச்சான் நீ கொடுக்கமாட்டியா என்ன?” என்று உதயன் ஆர்யனை மொத்தமாக வாரியிருக்க…
“அச்சோ மாம்ஸ்… அம் யூர் பெஸ்ட் மச்சான். மொத்தமா சரண்டர். நீங்க எப்படி வேணாலும் லவ் பண்ணுங்க. எனக்கென்ன? இருக்கிற அம்புட்டு பணத்துக்கும் வீடு முழுக்க மூக்குத்தியா வாங்கி குவிங்க…” என்றான்.
“அப்புறம் மச்சான்” என்று ஆர்யன் கழுத்தில் கையை போட்ட உதயன், “வன் கைண்ட் இன்ஃபர்மேஷன்… இன்னும் உங்களுக்கு கல்யாணம் முடிவாகல… அதுக்கு இந்த மாமா தயவு ரொம்பவே முக்கியம்” என்று பொய்யாக மிரட்டினான்.
அதில் ஆர்யன் முகம் போன போக்கில் உதயனிடம் அட்டகாசமான சிரிப்பு. இருவரின் சேட்டைப் பேச்சையும் சிரிப்போடு பார்த்திருந்த அஷ்மிதா தற்போது முழுதாய் அவனிடம் தொலைந்து நின்றாள்.
“சைட் அடிச்சது போதும்” என்று சாமி கும்பிட்டுவிட்டு வந்த நனியிதழ் அஷ்மிதாவின் தோள் இடிக்க… அசடு வழிந்தாள் அஷ்மிதா.
“இவனை வாய் மூட வைக்கவும் வெப்பன் இருக்கு போலவே” என்று வந்த பிரணவ், “அவன் சொல்ற மாதிரி உங்ககிட்ட லவ் பண்ண கத்துக்கணும் மாமா” என்று உதயன் காதில் மெல்ல கிசுகிசுத்தான்.
“கத்துக் கொடுக்கலாமே” என்ற உதயன், “டியூஷன் ஃபீஸ் கேட்பேன். பரவாயில்லையா?” என்றான். அவனைப் போலவே மெலிதான குரலில்.
“மாம்ஸ்… யூ ஆர் அன்பில்லிவபுள்” என்றான் பிரணவ்.
சிறியவர்கள் அனைவரும் ஒன்றாக சிரித்து பேசி கலகலவென்று இருக்க, பார்த்திருந்த பெரியவர்களும் அவர்களின் கொட்டத்தில் இணைந்து கொண்டனர்.
புது தம்பதியினரை சிறிது நேரம் ஓய்வெடுக்க சொல்ல, பிரணவ் நனியிதழ் மறுத்துவிட்டனர்.
“எங்களை அனுப்பிட்டு நீங்க மட்டும் அரட்டை அடிக்கவா?” என்ற பிரணவ் உதயனிடம் பேச ஆரம்பித்துவிட்டான்.
“அண்ணா உங்களை விட அவங்களை தான் லவ் பண்றான் போல அண்ணி” என்று அஷ்மிதா நனியிதழிடம் முணுமுணுக்க…
“அவங்க… எவுங்க அண்ணிஈஈ…” என்று சிரித்தாள் நனியிதழ்.
“உங்க ஆளை சொல்றேன்னு என்னை கிண்டல் பண்றீங்களாக்கும். அவங்கன்னா அவங்க தான்” என்ற அஷ்மிதா, நனியை பக்கவாட்டில் கைகளால் அணைத்து அவளின் தோள் சாய்ந்து உதயனை பார்த்திட…
“மொத்தமா ஃப்ளாட் போல” என்றாள் நனியிதழ்.
“அதெல்லாம் எப்பவோ… நாம கடலுக்குள்ள முத்தெடுக்குற இடத்துக்குப் போனோமே… நினைவிருக்கா?” என்ற அஷ்மிதா, “அன்னைக்கே” என்றாள்.
“அப்போவேவா?” என்று நனி ஆச்சரியம் கொள்ள…
“எஸ்” என்று கண்கள் சிமிட்டினாள் அஷ்மிதா.
“எப்படி… உன் லவ் ஸ்டோரி சொல்லு. கேட்போம்.” நனியிதழ் ஆர்வமாகக் கேட்க, அஷ்மியின் அடுத்தப் பக்கம் அமர்ந்திருந்த ஆர்யன் இவர்கள் பக்கம் சரிந்தான்.
“நானும் கேட்கிறேன்” என்றவன், “மாம்ஸ், அக்கா உங்க மேல லவ் வந்த கதையை சொல்லப் போறாங்க” என பிரணவ்விடம் தீவிரமாக பேசிக்கொண்டிருந்த உதயனிடம் போட்டுக் கொடுக்க… உதயன் சட்டென்று பார்த்த பார்வையில்,
“அச்சோ இல்லை” என்று அஷ்மிதா ஓடியேவிட்டாள்.
“இன்னும் சொல்லவே இல்லை. அதுக்குள்ள இப்படி பண்ணிட்டியே ஆரி” என்ற நனியிதழ், “எதோ இன்ட்ரஸ்டிங்கா நடந்திருக்கும் போல” என்றாள்.
“அப்போ உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க… கேட்போம்” என்றான் ஆர்யன்.
“எதுக்கு… ஏன்?” என்றவள், “அது ஒரே சோகம் ஆஃப் இண்டியா கொழுந்தனாரே” என வராத கண்ணீரை சுண்டி விட்டாள்.
“அச்சச்சோ…” ஆர்யன் பரிதாபம் கொள்வது போல உச்சுக்கொட்டினான்.
“என் சோகக் கதையை கேளு தாய் குலமே… தாய் குலமே…”
இருவரையும் கவனித்திருந்த ராகவன் சூழ்நிலைக்கேற்ப பாடல் பாடிட… விஜயன் உட்பட அனைவரும் வெடித்து சிரித்தனர்.
“எல்லாம் உன்னால தான் பிரணவ். லவ் பண்ணா நேரா வந்து சொல்லாம… இப்போ பாரு நம்ம லவ் ஸ்டோரி காமெடி ஸ்டோரி ஆக்கிட்டாங்க” என்று பொய்யாய் கணவனிடம் சண்டையிட்டாள் நனியிதழ்.
“வாரே வாவ்… கல்யாணம் ஆன முதல் நாள் செம வைப்… நல்லாயிருக்கு… இன்னும் எதிர்பார்க்கிறேன் அண்ணி” என்று ஆர்யன் கைத்தட்டி விசில் அடிக்க… அவனின் முதுகிலே அடித்தான் பிரணவ்.
“சும்மா இருக்கவளை ஏன்டா ஏத்தி விடுற?” என்ற பிரணவ், “இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் ஆகியிருக்கு நனிம்மா. நம்ம டபள்யூ டபள்யூ எஃப் கொஞ்ச நாளுக்கு அப்புறம் வச்சுக்கலாம்” என்று சொல்ல அவள் பக்கென்று சிரித்திருந்தாள்.
தங்கையின் சிரிப்பை பார்க்க பார்க்க உதயனுக்குத் தெவிட்டவில்லை. கனிவோடு தங்கை முகம் பார்த்திருந்தான்.
“இப்போ பாசமலர் பாட்டு போடணும் போலயே” என்று ஆர்யன் சொல்ல, “நீ வா உனக்கு நான் வாழ்வே மாயம் சாங் போடுறேன்” என்ற உதயன் பிரணவ் உடன் கை தட்டிக் கொண்டான்.
“என் லவ்வுக்கு எண்ட் கார்டு போட்டுடாதீங்க தெய்வமே” என்ற ஆர்யன், “நேரமாச்சு கிளம்பளையா?” என்றான்.
“ஆரி என்னதிது?” என்று விஜயன் கண்டிக்க…
“அச்சோ மாமா அவன் மீன் பண்ணி சொல்லல. திட்டிடாதீங்க” என்று உடனடியாக ஆர்யனுக்கு துணை நின்றான் உதயன்.
ஆர்யன், “எப்புடி…?” என்று தன் தந்தையை மிதப்பாகப் பார்த்து, “இதுதான் எங்க மாம்ஸ்” என்று உதயன் கன்னத்தை கொத்தாக பற்றி எடுத்து கையை தன் உதட்டில் வைத்தான்.
“இப்போ மாமா பாட்டுக்கு நான் எங்கே போவேன்” என்று மீண்டும் அனைவரையும் ராகவன் சிரிக்க வைத்திருந்தார்.
இப்படி சிரிப்பும் கலாட்டாவாகவும் சென்ற நிமிடங்கள் யாவும் அவர்களுக்குள்ளான புரிதல் இன்னுமின்னும் ஆழம் பெற்றது.
அடுத்து உண்மையிலேயே நேரமாவதை உணர்ந்த விமலா,
“இப்போ கிளம்பினா சரியா இருக்கும் மாப்பிள்ளை” என்றார்.
பிரணவ், நனியிதழ், உதயன் மூவரும் கிளம்பிட… உதயன் பார்வை அஷ்மிதாவை தேடியது.
“கண்டுகொண்டேன்… கண்டுகொண்டேன்… காதல் முகம் காண தவித்தேன்” என்று வார்த்தைகளை மாற்றிப் போட்டு ராகம் இழுத்த ஆர்யன்,
“அஷ்மி அக்கா” என்று குரல் கொடுக்க, தன்னுடைய அறையிலிருந்து கீழே வந்தாள்.
ஆர்யன் பாடியதில் உதயன் முகம் கொண்ட நாணத்தை, சிறு புன்னகையில் மறைத்தான்.
“கிளம்பிட்டிங்களா? அதுக்குள்ள” என்ற அஷ்மிதா உதயன் பார்வையில் வாயினை கப்பென்று மூடிக் கொண்டாள்.
“பார்த்தே ஆஃப் பண்ணிடுவாங்கா.” அஷ்மிதா முனக, “சத்தமா சொல்லுங்க கேட்கல” என்று வேண்டுமென்றே கத்தினான் ஆர்யன்.
“அடேய் ஏன்?” என்று அவனின் வாயை மூடிய அஷ்மிதா “ஒண்ணுமில்லை” என்க, மூவரும் மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.
உதயன் அஷ்மிதாவை அழுத்தமாகப் பார்த்துச் செல்ல…
“கண்டுபிடிச்சிட்டாங்க… போச்சு… போச்சு…” என்று கைகளை உதறிக்கொண்டாள் அஷ்மிதா.