என் ஆயுள் நீயே 65
அன்று இரவு உதயன் வீடு சந்தோஷத்திற்கு பஞ்சமின்றி சிரிப்பினால் நிறைந்திருந்தது.
பிரணவ், நனியிதழ் வந்தது தெரிந்ததும், குமரியின் வீட்டிலிருந்த இன்பாவும் தனுவுடன் அங்கு வந்திட, பேச்சும் கலாட்டாவாகவும் இரவு உணவு நேரம் கழிய, காமாட்சி எழிலை விரைந்து உறங்க அனுப்பிய நிமிடமே உதயனும் தன்னுடைய அறைக்கு வந்துவிட்டான்.
இன்பா, தனுவை அழைக்க குமரியும் வந்துவிட…
“அங்க தான் போகணுமா பெரியம்மா?” என்று கங்காவின் காதில் மெல்ல கேட்டான் இன்பா.
“உனக்கு தெரியாதா இன்பா” என்ற கங்கா, “உன் அத்தை என்னவும் பேசி வைக்கும் முன்ன உன் பொண்டாட்டியை கூட்டிட்டு கிளம்பு நீ” என்றார்.
“நீங்க என்னை விரட்டுறீங்க?” இன்பா முகம் சுருக்கி சொல்ல…
அவனின் தாடை பிடித்து ஆட்டிய கங்கா, “இன்னைக்கு அங்கதான் போகணும் இன்பா. பாட்டி பார்க்கிறாங்க. எதுவும் சொல்லும் முன்ன கிளம்பு” என்றார் மீண்டும்.
“என்னவோ அங்க ஒப்ப மாட்டேங்குது பெரியம்மா.”
“அந்த வீட்டுக்கு புதுசா போற மாதிரி சொல்ற?”
“அத்தையே புதுசா தானே நடந்துக்கிட்டாங்க” என்றான் இன்பா. முகம் சுருக்கி.
யாரென்ன காரணங்கள் சொன்னாலும் அந்நேரம் அமைதி அடையும் இன்பாவின் மனம், அடுத்த சில நிமிடங்களில் குமரி தங்கள் வீட்டின் முன்பு நின்னு மொத்த குடும்பத்தையும் பழி சொல்வது போன்று உதயனை பேசியதை நினைத்து குமரியின் மீது கோபம் கொள்வான். அவனால் அத்தனை எளிதாக அதனை கடக்க முடியவில்லை. தனு அவனை விரும்புவதாக சொல்லி குமரி முடியாதென்று மறுத்து பேசியதை மறக்க முடிந்தவனால் இதனை மறக்க முடியவில்லை.
உதயன், ஜெயந்தன் என இருவர் பேசியும் அந்நேரம் அதை கடந்து விடுபவனுக்கு ஏனோ குமரியின் மீது முன்பிருந்த ஓட்டுதல் இப்போது வர மறுத்தது.
“தனுவை பிடிக்குமாடா உனக்கு?”
கங்கா சட்டென்று ஏன் இப்படிக் கேட்கிறாரென்று புரியவில்லை என்றாலும்…
“ரொம்ப பிடிக்கும் பெரியம்மா” என்று நனியுடன் பேசிக்கொண்டிருந்த தனுவை பார்த்தவாறு கூறினான்.
“அவளை பிடிக்கும் அப்படின்னா அவளைச் சார்ந்த எல்லாம் தான். அவளில் வச்சு பாரு… கோபம் காணாம போயிரும். நீ வேணாம் மறுத்தா வருத்தப்படப் போறது தனு தான். புரிஞ்சிக்கோடா” என்று அவனின் கன்னம் தட்டினார்.
“என்னவாம் உங்க சின்ன மகனுக்கு. செல்லம் கொஞ்சுறீங்க?” என்று வந்தார் காமாட்சி.
“அதுல உனக்கென்ன குறையாம்?” என்ற கங்கா, “தனுவை கூப்பிட்டு சாமி கும்பிட சொல்லு” என்றார்.
அடுத்து தனு, இன்பா சாமி கும்பிட்டுவிட்டு, தாத்தா பாட்டியிடம் ஆசி பெற்று குமரியின் இல்லம் சென்றனர்.
இளங்கோ, கஜேந்திரன் தத்தம் அறைக்கு சென்றிட, பிரணவ் மற்றும் நனியிதழ் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற, காமாட்சி சென்று உதயனை அழைத்து வந்தார்.
“சித்தப்பா இல்லையா சித்தி.” அவர் தன்னை வந்து கூட்டிச் செல்லும் காரணமறிந்து உதயன் வினவினான்.
“அந்த மனுஷன் கிட்ட சொன்னா… சின்ன பிள்ளையாட்டாம் வெட்கப்படுறார்” என்று காமாட்சி சொல்ல, உதயன் பொங்கி வந்த சிரிப்பை சத்தமின்றி வெளியேற்ற, “கழுதை வயசாச்சு… மீசை நரைச்ச வயசானகாலத்தில் வெட்கம் தான் குறைச்சல்” என்று மேலும் அவர் நொடித்துக் காண்பித்ததில், “சித்தி போதும். சித்தப்பா பாவம்” என்றிருந்தான் உதயன்.
லட்சுமி நனியின் உச்சியில் கை வைத்து என்னவோ சொல்லிக் கொண்டிருக்க, புன்னகையுடன் தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தாள் நனியிதழ். பிரணவ் அவளையே பார்த்து நின்றிருந்தான். தாத்தாவின் அருகில்.
“பார்த்தாச்சா?” பிரணவ் அருகில் சென்று உதயன் கேட்க,
“எங்க… அதுக்குத்தான் விடமாட்றாங்களே” என்றான் பிரணவ். உதயனை உணராது. தன் பார்வையை மாற்றாது.
“அடேய்… நான் அவள் அண்ணன் டா.”
“இருக்கட்டுமே… நான் அவள் புருஷன்.”
“அப்போ இங்க நின்னே பார்த்திட்டு இரு” என்று உதயன் தோளில் கை வைக்க…
“அச்சோ மாம்ஸ்… நீங்க எப்போ வந்தீங்க?” என்று அதிர்வை காட்டினான் பிரணவ்.
“அப்போ சார் இவ்வளவு நேரம் யாருக்கிட்ட பேசினீங்க?”
“அது…” பிரணவ் புருவத்தை ஒரு விரலால் கீறியவனாக நெளிய… அவனை சங்கடப்படுத்த விரும்பாத உதயன்,
“வா போலாம்” என்றான்.
“எங்க?” பிரணவ் விழிகள் விரிய கேட்க,
“தூங்க வேண்டாமா?” என்றான் உதயன். சிரிப்பை மறைத்துக் கொண்டு.
“தூங்கவா! உங்களோடவா?” அப்பட்டமாக அதிர்வை காட்டினான் முகத்தில்.
“ஆமா… ஏன் என்னோட தூங்கமாட்டியா என்ன?” என்ற உதயன், “உனக்கு மேல கைப்போடும் பழக்கமெல்லாம் இல்லையே” என்று அவனின் தோளில் கைபோட்டு தீவிரமாகக் கேட்டான்.
“அப்படியெல்லாம் இல்லை” என்ற பிரணவ், “நிஜமாவே இன்னைக்கு இல்லையா மாம்ஸ்?” என்றான்.
“என்னது?”
பிரணவ் என்ன கேட்கிறான் என்பது புரிந்தும், புரியாததைப் போல் வினவினான் உதயன்.
இதற்கு மேல் இதை எப்படி வெளிப்படையாகக் கேட்க முடியும்?
“வாங்க போய் தூங்குவோம்” என்ற பிரணவ் உதயனுடன் இணைந்து நடந்தான்.
“உங்க ரூம் தேர்ட் ஃப்லோர்ல?” என்றான்.
“ஆமா” என்ற உதயன், “இப்போ இந்த ரூம்” என்று நனியின் அறையை காண்பித்தான்.
“ம்ம்…” என்ற பிரணவ் கதவை திறக்க கை வைக்க…
“குட் நைட் மச்சான்” என்று சொல்லிவிட்டு பிரணவ் புரியாது நிற்பதையும் கண்டுகொள்ளாது சென்றுவிட்டான் உதயன்.
பிரணவ் சுருங்கிய முகம் கண்ட உதயனுக்கு அப்படியொரு சிரிப்பு, தனது அறைக்கு வந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.
உதயன் சென்றதும் கதவினை திறந்து அறைக்குள் நுழைந்த பிரணவ், மெத்தையில் தூவப் பட்டிருந்த பூக்களைக் கண்டு நாணம் மின்ன முகத்தை ஒற்றைக் கையால் மூடிக் கொண்டான்.
“அடேய் பிரணவ்… இப்படியாடா மானத்தை வாங்குவ” என்று தன்னுடைய கன்னத்திலே மெதுவாக தட்டிக் கொண்டான்.
“என்ன நினைச்சாரோ” என்றவன் பூக்களை ஒதுக்கிவிட்டு மெத்தையில் அமர்ந்தான்.
நனியிதழ் பாலுடன் அறைக்குள் வர…
அவள் பாலினை மேசையில் வைக்கும் முன்னர் அவள் முன் வந்த பிரணவ், “செம மொக்கை வாங்கிட்டேன் இதழ்” என்று அசடு வழிந்தான்.
“கண்டிப்பா மாம்ஸ் சிரிச்சிருப்பாங்க” என்று அவன் சொல்ல…
“என்னன்னு முழுசா சொல்லுடா” என்று மெத்தையில் அமர்ந்தாள்.
பல வருட காதல். கடந்த சில மாதங்களில் இயல்பான பேச்சுக்கள். இதமான சின்ன சின்ன விரல் கோர்ப்புகள்… இவையெல்லாம் திடீரென ஒன்றாக இருக்கும் தனிமையின் தயக்கத்தை போக்கியிருக்க, அந்த இரவை அதனின் கனமின்றி ஏற்றிருந்தனர். அதனால் எப்போதும் போலான பேச்சுக்கள் தன்னைப்போல் இருவரிடமும்.
பிரணவ் நடந்ததை சொல்ல…
நனியிதழ் நெஞ்சில் கை வைத்து, மெத்தையில் பாதி சாய்ந்தவளாக கண்ணில் நீர் இறங்க சிரிக்க, அவளையே பார்த்திருந்த பிரணவ்வின் கண்கள் கணவனின் பார்வையாக மாற்றம் கொண்டது.
நனியிதழ் பிரணவ்வின் அமைதியில் என்னவென்று பார்க்க, அவள் பக்கம் கவிழ்ந்து விழுந்தவன் அவளின் வயிற்றில் கையிட்டு தன் அருகில் மிக நெருக்கமாக இழுத்து, அவளின் கழுத்தில் முகம் புதைத்திருந்தான்.
“அச்சோ பிரணவ் என்னதிது?” என்று கேட்டாலும், அவனின் ஆழ்ந்த நெருக்கத்தை அதீத பிடித்தமாக ஏற்கவே செய்தாள். தானாக அவனுக்கு வளைந்து கொடுக்க ஆரம்பித்தாள்.
“லவ் சொல்றதுல மட்டும் தான் ஸ்லோ போல” என்று கிண்டல் செய்தவளை, மொத்தமாக திணற வைக்கும் வேளையில் முழுதாய் இறங்கியிருந்தான்.
சத்தமின்றி விரிந்திருந்த இதழ்களில் முத்தம் வைத்து சங்கேத கீர்த்தனைகளில் மூழ்கத் துவங்கியவன், அவளின் அசைவுகளுக்கு இசை மீட்டி, ஆலாபனை ஆலிங்கத்தில் மெல்ல கரை சேர்ந்திருந்தான்.
முத்தத்தின் மிச்சங்களும் கொலுசின் ஓசைக்கு இணையாக ஈடு செய்திட, அவனில் கரைந்து உருகியவள், அவனை தனக்குள் அடக்கி ஆளவும் செய்தாள்.
முடிவிலா நீண்ட தொடுகைகளும், முத்தங்களும் தாமாக விடை கொடுத்து இருவரையும் விலகப் பார்த்திட, நெருக்கம் என்ற ஒன்றால் ஒருவருள் ஒருவர் காதலால் பிணைந்து, காதலின் இன்பத்தில் சோர்வாய் பெற்ற இறுதி முத்தத்தில் திளைத்து களைத்து உறங்கியிருந்தனர்.
__________________________
தனு அறைக்குள் வர இன்பா பால்கனியில் நடந்து கொண்டிருந்தான்.
“என்ன மாமா இங்க இருக்கீங்க?” என்று தனு அவன் அருகில் செல்லவும், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“என்னாச்சு? இங்க வந்தாவே உங்க முகம் சின்னதாகிடுது” என்று கேட்ட தனு, அவனின் மடியில் அமர, வாகாக இறுக்கி பிடித்துக் கொண்டான். அவளின் முதுகில் தன் முகம் புதைத்தான்.
சில நிமிடங்கள் இருவருமே தங்களின் நெருக்கத்தை ரசித்து அமைதியாக இருந்தனர்.
“லவ் யூ டி.” சட்டென்று அவள் எதிர்பாராது சொல்லிய இன்பா, அவளின் வெற்று முதுகில் முத்தம் வைக்க கூசி சிவந்தாள்.
இன்பா அவளிடம் காதலை கூட இதுவரை சொல்லியிருக்கவில்லை. அன்று பேச்சு திசை மாறி, மாற்றி ஜோடி சேர்த்திடுவார்களோ என்று அனைவரின் முன்னிலையிலும் தன் மனதை சொல்லியிருந்தான். இன்று தான் அவளிடம் காதல் வார்த்தையைக் கூறியிருக்கிறான்.
மனம் முழுக்க அவள் தவித்துக் கொண்டிருந்த தவிப்புகள் யாவும் நொடியில் அடங்கிய மாயம்.
“இதை சொல்ல என் மாமாக்கு இத்தனை வருஷமாகிருக்கு” என்று தனு அவனின் கன்னத்தில் முத்தம் வைக்க… இதமான கண்களை மூடியவன்,
“இங்க முன்ன மாதிரி சாதாரணமா இருக்க முடியல தனும்மா” என்றான்.
உதயன் மீது பெற்றோருக்கும் மேலாக அன்பும், மரியாதையும் இன்பாவுக்கு. நடந்த நிகழ்வை உதயன் மறந்தாலும் இன்பா மறக்க மாட்டான் என்பது புரிந்தது. அன்று குமரி நடந்துக் கொண்ட முறைக்கு தனுவுக்கும் வருத்தம் உள்ளதே. எப்படி இன்பாவை தேற்றிடுவாள்.
“உன்னால மறக்க முடியலன்னா தள்ளி வச்சிடு மாமா. இன்னைக்கு ஒரு நாள். விடிஞ்சதும் நம்ம வீட்டுக்கு போயிடலாம். அப்புறம் நீ இங்க வரணும் நான் சொல்லவே மாட்டேன்” என்றாள்.
அவனுக்காக யோசித்து, அவளின் வீட்டையே விலகி வைக்க நினைக்கிறாள். அவனை புரிந்து அவனுக்காக பேசுகிறாள். அவளை இன்னும் அதிகத்துக்கும் பிடித்தது.
“அவ்ளோ லவ்வாடி” என்று கேட்டவன், அவளை பதில் சொல்லவிடாது, இதழில் தன் தேடுதலை தொடங்கியிருந்தான்.
இன்பாவின் அணைவின் பிடி கூடுதல் இறுக்கம் காட்டியது.
எப்படி எங்கனம் அறைக்குள் வந்திருந்தனர் என்பதை அறியாது, ஒருவரில் ஒருவர் மூழ்கி, காதலால் மோட்சம் பெற்றிருந்தனர்.
அவனது மனதிற்குள் அழுத்தமின்றி படிந்திருந்த வருத்தங்களுக்கு அவளையே மருந்தாக்கியிருந்தான்.
அவளுக்காக அவன் பார்க்க… அவனுக்காக அவள் பார்த்து, மீதமிருந்த இரவை தங்களின் இரவாக மாற்றி, விடியலில் துயில் கொண்டிருந்தனர்.
மனதில் நிறைந்த காதல் ஒன்று மட்டுமே இரு ஜோடிகளின் வாழ்க்கை பாதையில் முன்னோக்கி அடி வைக்க பெரும் காரணியாக அமைந்தது. அதனை சரியாக வழி நடத்திச் செல்வதில் அவர்களது காதலின் ஆயுள் உள்ளது.