என் ஆயுள் நீயே 7
காலை கண் விழித்த பிரணவ் கீழே வர, அனைவரும் பெண் பார்க்க செல்ல ஆயத்தமாகி அவனுக்காகக் காத்திருந்தனர்.
பிரணவ் எங்கென்று கேட்கும் முன்பு,
“சீக்கிரம் கிளம்பி வா பிரணவ். நல்ல நேரத்தில் போய் சேரணும்” என்றார் விமலா.
“எங்க மாம்?”
“பொண்ணு வீட்டுக்குடா!” அசராது அவன் தலையில் இடியை இறக்கினார்.
“வாட்?”
“என்னடா? நேத்து நைட் நீதானே சரின்னு சொன்ன?” என்று அவனை மடக்கினார் விமலா.
“ஆமா… அதுக்குன்னு இன்னைக்கேவா? அவங்களுக்கு ஓகேவா தெரியாம எப்படி மாம் போறது” எனக் கேட்டான்.
“அதெல்லாம் நேத்து பொண்ணு போட்டோ பார்த்து பிடிச்சதுமே, அவங்க வீட்டுக்கு இன்னைக்கு நாள் நல்லாயிருக்கு பொண்ணு பார்க்க வரோம்ன்னு தகவல் கொடுக்க சொல்லி தரகர்கிட்ட சொல்லிட்டேன்” என்றார்.
“ஏதே!” என்று அதிர்ந்த பிரணவ், “டாட் என்னதிது” என்றான்.
“அம் ஹெல்ப்லெஸ் மை சன்” என்ற விஜயன், “நீங்க வாங்கப்பா நாம தோட்டத்தில் இருப்போம். அம்மாவுக்கும் பையனுக்கும் நடுவில் மாட்டினால் நம்ம தலை தான் உருளும்” என்று ராகவனையும் கூட்டிக்கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.
“ஹேய் அஷ்மி, வாட் இஸ் திஸ்? நைட் தான் சொன்னீங்க… இப்போ பொண்ணு வீட்டுக்குப் போகணும் சொல்றீங்க. திஸ் இஸ் நாட் குட்” என்றான் பிரணவ்.
“எங்களுக்கு இது குட் தான். இந்தப் பொண்ணுதான்னு ஃபிக்ஸ் பண்ணதுமே, நீ ஓகே சொன்ன உடனே வேகமாக எல்லாம் செய்ய முன்னவே பிளான் பண்ணிட்டேன். நீ எப்போ மாறுவன்னு தெரியாதே, அதான். இந்நேரம் பொண்ணு வீட்டுல எல்லாரும் நமக்காகக் காத்திருப்பாங்க” என்று அவனை கிளம்ப விரட்டினார்.
“எதுக்கு இவ்ளோ அவசரம் மாம்?”
“உன்னை கல்யாண கோலத்தில் பார்க்கத்தான்.” மகனின் வாயடைக்க விமலாவுக்கு சொல்லியாத்தர வேண்டும்.
பிரணவ் யோசித்துக்கொண்டே நின்றிருக்க…
“இன்னைக்கு இம்பார்ட்டன்ட் மீட்டிங் ஒன்னு இருக்கு மாம்” என்றான்.
“அப்போ நான் வரல. நீங்க போயிட்டு வாங்க. இங்க மீட்டிங்கை நான் பார்த்துக்கிறேன்.” சொல்லிய தங்கையை தீயாய் முறைத்தான் பிரணவ்.
“சும்மா எதும் காரணம் சொல்லிட்டு இருக்காதடா! நைட் நீதானே ஓகே சொன்ன. ஓகே சொல்லிட்ட… எப்போ போய் பொண்ணு பார்த்த என்ன?” என சரியாகக் கேட்டாள் அஷ்மி.
“எனக்கு வில்லி நீதான். வெளியில யாரும் வேணாம்” என்று அஷ்மியின் கன்னம் கிள்ளிய பிரணவ், “கிளம்பி வரேன்” என்று தனதறை நுழைந்தான்.
பிரணவ் குளித்து முடித்து ஆடை உடுத்திய சமயம், அஷ்மி கதவினை தட்டி உள்ளே நுழைந்தாள்.
கண்ணாடி முன்பு நின்று சிகை சரி செய்து கொண்டிருந்தான்.
மார்பிர்க்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவனருகில் சென்று நின்றாள் அஷ்மி.
தங்கையை பக்கவாட்டாக பார்த்தவன், கண்ணாடியில் கண்ணாக இருந்தான். என்ன என்று எதுவும் கேட்கவில்லை.
பிரணவ் தலைமுடியை சரி செய்து, ஆடையில் வாசனை திரவியம் அடித்து, கையில் லோஷன் தடவி, தங்கையின் பக்கம் திரும்பி, போகலாமா எனும் விதமாக வாயில் நோக்கி கை காண்பித்து, அவளைத் தாண்டி அடி வைத்தான்.
“உண்மையாவே சீனியரை உனக்கு பிடிச்சிருக்கு… மேரேஜ்க்கு நீ ரெடின்னா மட்டும் அங்க போகலாம் அண்ணா” என்றாள். அவளின் குரலில் என்ன உணர்வென்று அவனால் பிரித்தறிய முடியவில்லை. ஆனால் அவனது நடை சட்டென்று நின்றது.
“எனக்கு என்ன… சொல்லத் தெரியல. பட், எதிர்பார்ப்பு கொடுத்து ஏமாத்துறது ரொம்ப பெரிய வலி” என்றாள்.
முழுதாக திரும்பி தங்கையின் முகம் நேருக்கு நேர் பார்த்த பிரணவ், “பெரிய மனுஷி மாதிரி பேசாம வா” என்று அவளின் தலையில் தட்டி அழைத்துக்கொண்டு கீழே வந்தான்.
அஷ்மி தவிர்த்து மற்றவர்கள் வண்டியில் ஏறி அமர்ந்திட, வரவில்லையா என்று பார்த்தான் பிரணவ்.
“வயசுப்பொண்ணு அங்க எதுக்குடா?” விமலா அவனின் தோளில் அடிக்க, “அப்போ மீட்டிங் பார்த்துக்கோ. ரீமாகிட்ட சொல்லியிருக்கேன்” என்று வண்டியை இயக்கினான். இதழ் குவித்து ஊதிய பெருமூச்சொடு.
அஷ்மி உடன் வந்தால், தன் எண்ணத்தை செயல்படுத்தாமல் விட்டாலும் விட்டுவிடுவான். அவனின் முகம் பார்த்தே அஷ்மி கண்டுகொள்வாளே! அஷ்மி வராதது அவனுக்கு சாதகம் தான். அதனாலேயே அவளில்லை என்றதும் வாதம் செய்யாது கிளம்பியிருந்தான்.
இதுவே நன்முறையில் அடுத்தக்கட்டதிற்கு நகர்த்துபவனாக இருந்திருந்தால், தங்கை இல்லாது தன் வாழ்வில் ஒரு நிகழ்வா என மூச்சை பிடித்துக்கொண்டு பேசியிருப்பான்.
“அஷ்மியை வீட்டுல விட்டு வர பிளான் முன்னவே இருந்தும், நான் மீட்டிங் இருக்கு சொன்னப்போ வேணுன்னே, ரெண்டு பேரும் டிராமா பாண்ணியிருக்கீங்க அப்படித்தானே!” என்றான்.
“உன்னை நம்ப முடியாதே அதான்” என்ற விமலா, அடுத்து அகத்தீஸ்வரம் வரும் வரையிலும் நனியிதழ் பற்றி தான் பேசிக்கொண்டு வந்தார்.
“எவ்வளவு அழகு. அடக்கம். முகத்துல அமைதி தெரியுது. அப்படியொரு கனிவு.” சிலாகித்துப் பேசிக்கொண்டு வந்தார்.
விமலா எதையும் மிகைப்படுத்தி சொல்லவில்லை என்று பிரணவ்வுக்குத் தெரியும். அதனால் அமைதியாகவே வந்தான்.
தான் நேரில் பார்த்து வேண்டாமென்று சொல்லிவிடுவேனோ என்று அன்னை நனியிதழ் பற்றி பேசிக்கொண்டே வருகிறார் என்றும் அவன் அறிவான்.
அன்னை சொல்வதைப்போல நனியிதழ் அத்தனை பொறுமை. அதிர்ந்துகூட பேசிட வராது. அவனே, “பலமுறை நீ பேசினால் வெறும் காத்து மட்டும் தான் வருது” என்று அவளை கிண்டல் செய்திருக்கிறான்.
கல்லூரி நினைவு மேலெழும்பி அவன் இதழ் விரியச் செய்தது.
பிரணவ் எதையோ நினைத்து முகம் மலர, அவனின் அருகில் அமர்ந்திருந்த விமலா, பெண்ணின் நினைவில் திருமணக் கனவு நினைத்து மலர்கிறான் என நினைத்து, பின்னால் திரும்பி தன் கணவர் மற்றும் மாமனாரிடம் கண் காண்பித்தார்.
அத்தோடு பிரணவ்வுக்கு நனியிதழை அதிகம் பிடித்துவிட்டது என்று அவர் நம்புவதற்கு காரணமும் இருந்தது.
இரவு பிரணவ் ஏனென்றே தெரியாது நனியிதழின் படத்தை தனக்கு அனுப்பிக்கொண்டது. அனுப்பிய தடம் அவரின் அலைபேசியில் கண்டு அத்தனை மகிழ்ந்துப் போனார்.
“கல்யாணமே வேணாம் சொல்லிட்டு இருந்தவன், போட்டோ பார்த்ததும் பிளாட் ஆகிட்டான்” என்று கணவரிடம் இரவு முழுக்க சொல்லி அவரை தூங்கவிடாது ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்.
“ஊர் வந்தாச்சு மாம். வீடு எங்கிருக்கு?” ஊருக்கு அரண் போல் காட்சியளிக்கும் கடலை கார் சன்னல் வழி பார்த்துக்கொண்டே வினவினான்.
அந்நேரம் அவனது வண்டியை கடந்து, அதிவேகத்தில் உதயனின் கருநிற தார் வண்டி பறந்துச் சென்றது.
தரகர் உதயன் எண்ணை கொடுத்திருக்க… விஜயன் உதயனுக்கு அழைத்தார்.
_________________________
அதிகாலை விடிந்ததுமே அந்நாளுக்கான பரபரப்பு உதயனின் வீட்டில் ஆரம்பமாகியிருந்தது.
அவர்கள் வீட்டின் இளவரசியை பெண் பார்க்க வருகின்றனர் என்ற சிறு நிகழ்வும் அவர்களுக்கு கொண்டாட்டம் தான்.
எப்போதும் அமைதியாக எதையோ இழந்ததைப்போல் வலம் வரும் நனியிதழ் முகத்தில் மகிழ்வை தேக்கி, துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள்.
“அக்கா செமயா இருக்கீங்க.” கல்லூரிக்கு கிளம்பி வந்த எழில், தன்யாவின் கை வண்ணத்தில் அழகோவியமாக காட்சியளித்த நனியிதழை வியந்துக் கூறினாள்.
“ஹேய் நீயென்ன பேக் மாட்டிட்டு நிக்கிற. காலேஜ் போறியா?” நனிக்கு வளையல் அணிவித்துக்கொண்டே தன்யா எழிலிடம் வினவினாள்.
“ஆமா… இன்னைக்கு போயே ஆகணும். பிராக்டிக்கல் இருக்கு” என்று முகத்தை சுருக்கிக் கூறிய எழில், “போட்டோ எடுங்க. நான் வந்து பார்க்கிறேன்” என்றாள்.
“கிளம்பிட்டியா வாலு” என்று வாயிலிலே நின்றிருந்த எழிலின் பின்னால் வந்து நின்ற இன்பா, எழிலின் தலையில் தட்டி, “வா வா… உன்னை விட்டுட்டு, அவங்க வரதுக்குள்ள நான் திரும்பி வரணும்” என்றான்.
“ம்ம்” என்று எழில் நகர்ந்து வெளியில் வர, நனியிதழை அலங்காரத்தில் பார்த்த இன்பா விழிகள் மலர்ந்தான்.
“யாருடா இது…” என்று உள்ளே நுழைந்தவன், தங்கையின் இரு கன்னங்களிலும் தன் உள்ளங்கை வைத்து, “உன் முகம் எப்பவும் இதே சந்தோஷத்தோட இருக்கணும்டா” என்றான்.
“தேங்க்ஸ் அண்ணா” என்ற நனி, அவனின் இடையோடு கட்டிக்கொள்ள… “இன்னும் யாரும் போட்டோ எடுக்கல தானே?” எனக் கேட்டு, “நாம பர்ஸ்ட் வன் செல்ஃபி” என்று அலைபேசியை உயர்த்தி பிடிக்க, உதயன் வந்தான்.
தங்கையை பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டான்.
“நீங்களும் வாங்கண்ணா!” இன்பா அழைக்க, சிரிப்போடு மறுத்துவிட்டான் உதயன்.
“ஹேய் வாலு வா” என்று எழிலை அழைக்க, உதயன் தவிர்த்து மற்ற நால்வரும் பல்வேறு போஸ்களில் சுயமி எடுத்துக் கொண்டிருக்க, நனியிதழின் இதழின் சிரிப்பில் மலர்ந்த இருந்தது.
தங்கையின் கண்களில் பல வருடங்களாக தொலைந்துப்போன உயிர்ப்பை இன்று தான் காண்கிறான் உதயன். மனம் நிறைந்து தங்கையின் சிரிப்பில் உறைந்துபோனான்.
இதற்காக, இந்த நொடிக்காக நான்கு வருடங்களாகக் காத்திருக்கிறான். நெஞ்சத்தின் நெகிழ்வு கண்களில் ஒளிர, இமை தட்டி சரி செய்தான்.
“அண்ணா பிளீஸ்… வன் பிக்.” நனி கண்கள் சுருங்க, விரல் காண்பித்து கேட்க, நால்வருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
“பெரியண்ணா பக்கத்தில் நான் தான்… எவ்ளோ அழகா இருக்கு” என்று எழில் எடுத்த படத்தை பார்த்து மகிழ, “நாங்களும் அண்ணா கூட நிக்கிறோம்” என்றான் இன்பா.
“ம்க்கும் போடா…” என்ற எழில் உதடு சுளிக்க, “யாரை டா சொல்ற” என்று இன்பா அவளை அடிக்க வர, எழில் உதயனின் பின்னால் மறைந்தாள்.
“அண்ணா நகருங்க…” என்று இருவரும் உதயனைச் சுற்றி ஓடிட, மற்ற மூவரும் இருவரின் சேட்டையில் சிரித்துக் கொண்டிருந்தனர்.
நனியிதழிடம், கண்களில் நீர் இறங்கும் அளவிற்கு அழுத்தமான சிரிப்பு. அதனை பார்த்த உதயன் அவளின் உச்சியில் தன் கை வைத்து அழுத்தம் கொடுத்தான்.
“இப்படி அஞ்சு பேரும் ஒண்ணா திரியாதீங்க எத்தனை தரம் சொல்லுறது. எங்க கண்ணே படும்” என்ற ஜெயலட்சுமியின் குரலில் தான் தங்கள் நிலை மீண்டனர்.
“எதுக்கு இப்படி ஒண்ணா ஒரேயிடத்தில் நின்னு சிரிக்கிறீங்க. கங்கா பார்த்தா சுத்திப்போடுறேன்னு என்னத்தையும் கையில் தூக்கிட்டு வந்திடுவாள்” என்றவர், “அம்சமா இருக்கடா” என்று பேத்தியின் கன்னம் வழித்து உதட்டில் ஒற்றியவராக அங்கிருந்து சென்றார்.
“எப்போ வராங்க மாமா?” தன்யா கேட்க, “பக்கம் வந்திருப்பாங்க” என்றான் உதயன்.
எழிலிடம், “காலேஜ் கிளம்பு நீ” என்ற இன்பா, “நான் அவங்க வரதுக்குள்ள வரணும்” என்று அவளுடன் நகர, உதயனின் அலைபேசி சிணுங்கியது.
எடுத்துப் பார்த்த உதயன் நெற்றி முடிச்சிட்டது. யோசனையாக எடுத்து செவிமடுத்தான்.
எதிரில் சொல்லப்பட்ட செய்தியின் தீவிரம், அவனை வேகமாக செயல்பட வைத்தது.
“இன்பா…” அழைத்த உதயன், “எழிலை நான் ட்ராப் பண்றேன். நீ இங்கயிரு” என்று கூறினான்.
“அண்ணா நீங்க இங்க” என்று இன்பா சொல்ல, திரும்பி நனியிதழை பார்த்தான் உதயன்.
உதயனின் முகத்தில் தெரிந்த தீவிரமே, அவன் தற்போது செல்ல வேண்டியதன் முக்கியத்துவம் புரிய,
“நீங்க போயிட்டு வாங்கண்ணா” என்றாள் நனியிதழ்.
தங்கையின் கன்னம் தட்டிய உதயன், “எல்லார் முன்னாடியும் எதும் பேசணும், சொல்லணும் அப்படின்னா தயங்காம பேசு. வந்துடுறேன்” என்று எழிலைக் கூட்டிட்டு கிளம்பினான்.
“எதும் பிரச்சினையா அண்ணா. நான் வேணுன்னா போகட்டுமா? நீங்க இங்க இருங்க” என்றான் இன்பா. நனிக்கு உதயன் எத்தனை முக்கியமென்று அறிவானே! எத்தனை பேர் இருந்தாலும் தங்கை பெரியவனை தேடுவாள் என்பதை அறிந்தவனாக உதயனை இருக்க வைக்கக் கூறினான் இன்பா.
“பட்டுக்கு நீயும் அண்ணன் தான்.” உதயனின் அழுத்தமான வார்த்தைகளில் இன்பா அமைதியாக நின்றுவிட்டான்.
உதயன் எழிலை கூட்டிக்கொண்டு புறப்பட, எதிரே பிரணவ் ஊருக்குள் நுழைந்து உதயனின் வீட்டைத் தேடியவனாக வண்டியை நிறுத்தியிருந்தான்.