என் ஆயுள் நீயே 8
உதயனின் கரு நிற தார் வண்டியும், பிரணவ்வின் வெண்மை நிற ஆடி வண்டியும் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும் இடைவெளியில் கடந்து சென்றன.
இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ள இன்னும் கால நேரம் கூடிவரவில்லை போலும்.
“வீடு எங்கன்னு கேளுங்க மாம்.” சொல்லிய பிரணவ், மிக அருகில் வரிசைக்கட்டி வரும் அலைகளிடம் தன் மனதை ஒப்புவித்தான்.
கஜமுகன் வீடென்று கேட்டால் யாரும் அவ்வீட்டிற்கு வழி சொல்லுவார்கள் என்று தெரியும். நான்கு ஆண்டுகள் கன்னியாகுமரியில் விடுதியில் தங்கி படித்திருக்கிறான். கஜமுகனின் குடும்பத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம். இருப்பினும் தன்னை அங்கு தெரிந்தவனாகக் காட்டிக்கொள்ள அவனுக்கு விருப்பமில்லை போலும்.
எண்ண அலைகளில் பிரணவ்வின் கண்களில் கல்லூரியின் இறுதிநாளும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் காட்சிகளாக, விமலாவின் குரலில் நிகழ் மீண்டான்.
விமலாவிடம் தரகர் உதயனின் எண்ணை கொடுத்திருக்க, அதற்கு அழைத்தார்.
“ஹலோ!” உதயனின் கம்பீரக் குரல்.
விமலா முறையாக தன்னை அறிமுகம் செய்து, தாங்கள் தற்போது நின்று கொண்டிருக்கும் இடத்தின் அடையாளம் சொல்லிட…
“ஜஸ்ட் டூ மினிட்ஸ் ஆன்டி” என்று அழைப்பை வைத்தான் உதயன்.
“வரேன் சொல்லியிருக்காங்க பிரணவ்.” விமலா பதில் கொடுத்ததும், பிரணவ் வண்டியிலிருந்து இறங்கி, கடற்கரையோர நடை பாதையில் சென்று நின்றான்.
மனதிற்குள் அவனறியா சிறு படபடப்பு.
“நீ எடுத்திருக்க முடிவு சரியா பிரணவ்?” தனக்குத்தானே சுய கேள்வி அவனிடம். சரியென எடுத்த முடிவுக்கு பதில் மட்டும் அவனிடம் வேறாகவா இருந்திடும்.
‘உன்னைப்போல் அவளும் குடும்ப நபர்களின் அழுத்தத்தால் ஒப்புக் கொண்டிருக்கலாம்.’ அவனாகவே நினைத்துக் கொண்டான்.
நம் எண்ணங்களும், பார்க்கும் பார்வையும் தவறாகக் கூட இருக்கலாம் என்பது, அந்த சிறந்த தொழிலதிபனுக்கு ஏனோ தெரிந்திருக்கவில்லை.
உதயன் சொல்லியது போலவே, இரண்டு நிமிடங்களில் அவர்களது வண்டியின் முன் தனது இரும்புக் குதிரையை நிறுத்தினான் எழிலின்பன்.
“ஹாய் ஆன்டி…” என்று வண்டியிலிருந்து இறங்கிச் சென்று, இன்பா சன்னல் வழி விமலாவிடம் பேசினான்.
“தம்பி நீங்க?”, விஜயன் கேட்டிருந்தார்.
உதயன் தரகரின் பெயர் சொல்லி, விளக்கம் கொடுத்திட,
“நாங்க தான்ப்பா” என்ற விமலா, “இப்போ பேசினது நான் தான்” என்றார்.
“நீங்க பேசினது என்னோட அண்ணாகிட்ட ஆன்டி” என்ற இன்பா, “போகலாமா?” என்றான்.
“ம்ம்” என்ற விமலா, “பிரணவ்” என்று அழைக்க, பேண்ட் பாக்கெட் இரண்டிலும் கையை விட்டுகொண்டு, கால்களை அகட்டி வைத்து, முழு உயரத்திற்கும் நிமிர்ந்து, பின்பக்கம் காட்டி நின்றிருந்த பிரணவ், தலையை மட்டும் திருப்பி பார்த்தான்.
கடல் காற்றின் உதவியால், முன் நெற்றியில் அலையலையாய் தவழ்ந்த அவனது கேசமும், கண்ணுக்கு அணிந்திருந்த ரேபானும், சூரிய ஒளியில் அவனது முகத்திற்கு தனி அழகை கொடுத்திட…
இன்பா சடுதியில் தன் தங்கையுடன் பொருத்திப் பார்த்தான்.
‘ஜோடி பொருத்தம் அள்ளுது.’ அண்ணனாக உள்ளுக்குள் மகிழ்ந்தான். தன் தங்கைக்கு ஏற்றவன் என்று நிறைவு கொண்டான்.
பிரணவ் அருகில் வருவதற்கு முன்பு, அவன் பக்கம் சென்று வரவேற்கும் விதமாக கை குலுக்கிட கையை நீட்டியிருந்தான் இன்பா.
“செல்வா?” எனக் கேட்டு பிரணவ் கரம் பற்றினான்.
“இன்பா.” மென் முறுவலோடு குலுக்கிய கரம் பிரித்தான் எழிலின்பன்.
“குட் டூ சீ யூ.” பிரணவ்வின் இதழ் விரிந்ததோ!
“அண்ணாவை உங்களுக்குத் தெரியுமா?” இன்பா கேட்க, பிரணவ்வின் கருவிழிகள் மோதி சீரானது.
“தரகர் நெம்பர் கொடுத்திருந்தார்” என்று சமாளித்தான்.
“ஹோ” என்ற இன்பா முன்னால் அடி வைத்து திரும்பி, “செல்வான்னு சொன்னாரா?” எனக் கேட்டான்.
“அது…” பிரணவ் வார்த்தைகளற்று நின்றான்.
“பிரணவ்.” இன்பாவின் தொடுகையில் தான் மீண்டான்.
“ஆன்டி கூப்பிடுறாங்க”, இன்பா.
“மாம்…” பிரணவ் வண்டியில் ஏறிட,
“நல்ல நேரத்தில் போகணும் பிரணவ்” என்றார் விமலா.
“என்னை ஃபாலோ பண்ணிக்கோங்க” என்று இன்பா முன் செல்ல,
‘பிரணவ் நீயே தெரிஞ்சா மாதிரி காட்டிக்காத மேன்.’ முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான்.
அவள் என்று வருகையில் மட்டும் மனம் ஏன் தடுமாறுகிறது. காரணம் அவனுக்கே விளங்கவில்லை.
‘நான்கு வருடங்களாக அவள் நினைவின்றி தானே இருந்தாய்.’ மனதால் தன்னையே அடித்துக்கொண்டான்.
‘என்ன பேசணும் நினைத்து போறியோ… அதை பேசுற வந்திட்டே இருக்க.’ நினைத்தவன், இன்பாவின் வண்டி பெரிய கேட்டிற்குள் நுழைய தானும் கவனித்து வண்டியை உள் செலுத்தினான்.
வீட்டு ஆண்கள் கேட்டிற்குள், வாயிலிலே நின்றிருந்தனர்.
“வாங்க… வாங்க…” கஜமுகன் அனைவருக்கும் பொதுவாக வரவேற்றிட, விஜயன் இளங்கோவனை பார்த்ததும் கண்டுகொண்டார். முன்பு தொழில்முறையில் உறவு கொண்டிருந்ததை.
அதனை விஜயன் நினைவு கூர்ந்து கேட்கவும் செய்திட, உள் வந்த அமர்ந்ததும் சாதாரணப் பேச்சுக்கள் தடையின்றி வந்தன.
பிரணவ் அமைதியாக அமர்ந்திருந்தான்.
“தம்பி என்ன அமைதியா உட்கார்ந்திருக்கீங்க… ரொம்ப அமைதி சுபாவமா?” எனக் கேட்டார் குமரி.
“புது இடம்… சோ” என்று முடித்துக் கொண்டான் பிரணவ்.
கஜமுகனும், ராகவனும் வயதின் ஒற்றுமை காரணமாக எளிதில் ஒட்டிக் கொண்டனர்.
நேரம் சென்று கொண்டிருக்க, நனியிதழை அழைத்து வருவதைப் போல தெரியவில்லை.
வந்திருந்த அனைவருக்கும் கங்காவும், காமாட்சியும் தான், தேநீர் மற்றும் பலகாரம் கொடுத்து உபசரித்தனர்.
பிரணவ் தன் அன்னைக்கு கண் காட்டினான்.
“பொண்ணை வர சொன்னா நேரில் பார்ப்போம்.” விமலா கேட்க,
“எங்க பெரிய பையன் வெளியில் போயிருக்காங்க. வந்திடட்டும் நினைச்சோம்” என்று இளங்கோவன் பதில் கொடுத்தார்.
“அதனாலென்ன… வரப்போ வரட்டும். நாம் பேசிட்டு இருப்போம்.” வீட்டில் எப்போதும் ஒற்றையாக தனித்து தொலைகாட்சி மற்றும் அலைபேசியோடு நேரத்தை போக்கும் விமலாவுக்கு, இங்கு ஒன்றிற்கு நான்கு பெண்கள் பேச கிடைத்திட, ஆர்வமாகவே அவர்களுடன் இணைந்து கொண்டார்.
“மாம்.” பிரணவ் சத்தமின்றி பற்களை கடித்தான்.
கண்டுகொண்ட இன்பா வாய்க்குள்ளே சிரித்துக்கொண்டு, தங்கையின் அறைக்குள் சென்றுவிட்டான்.
அப்போதுதான் சன்னல் வழி தன்யா கூடத்தில் இருப்பவர்களை எட்டிப்பார்த்தாள்.
“மாமா உன்கிட்ட போட்டோ காட்டினாங்களா நனி?” என்ற தன்யாவின் கேள்விக்கு, அவளோ தயங்கி இல்லையென்று பதில் வழங்கினாள்.
“அப்போ நீ நேரில் பார்க்கும்போது ஃபிளாட் தான் போ. பையன் செமயா இருக்காங்க” என்று சொல்லிக்கொண்டே தனு திரும்ப, மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அழுத்தமான பார்வையோடு நின்றிருந்தான் இன்பா.
“அது… அது வந்து…” தனு நாவால் தந்தியடிக்க…
அவனோ அவளை கண்டுகொள்ளாது, நனியின் அருகில் சென்று அமர்ந்தான்.
“உன்னை பார்க்க ரொம்பவே ஈகரா இருக்கார் போல” என்ற இன்பா, தங்கையின் கையை பிடிக்க, அத்தனை குளுமையாக இருந்தது.
“ஹேய் நனி… என்னடா இவ்வளவு சில்லுன்னு இருக்கு” என்ற இன்பா, கையை நன்கு சூடு பரவ தேய்த்துவிட்டான்.
“ரொம்பவே படபடப்பா இருக்குண்ணா.”
தங்கையின் மனம் அவனுக்கு புரிந்தது.
கொள்ளை காதல் கொண்டிருந்த போதும், அதனை சொல்லிட முடியாது அவள் கொண்டிருந்த தவிப்புகள் யாவும் முடிவுக்கு வர இருக்கும் நேரத்தின் இனிய அவஸ்தை என்பது விளங்கியது.
“ஜஸ்ட் உன் ஃப்ரெண்ட்… கூப்பிடும் போது அப்படி நினைச்சிட்டு வந்து நில்லு” என்றான். சரியென அண்ணனின் தோள் சாய்ந்து கொண்டாள்.
அந்நேரம் உதயனிடமிருந்து இன்பாவுக்கு அழைப்பு வந்தது.
“அண்ணா…”
“இங்க வேலை முடிய டைம் ஆகும் போல இன்பா. எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்” என்று முழு காரணம் எதுவும் சொல்லாது வைத்திட்டான்.
“என்னாச்சு அண்ணா?”, நனியிதழ்.
“அண்ணா வர முடியாதாம்?” என்ற இன்பா, தங்களின் ஷிப்பிங் மேனேஜரை அழைத்தான்.
“அங்க என்ன பிரச்சினை ரமேஷ்?”
“நான் சொல்லலனா, இப்போ உங்களுக்கு தெரியக்கூடாதுன்னு அர்த்தம்.” எதிர்பக்கம் ஒலித்தது என்னவோ உதயனின் குரல்.
“சாரிண்ணா!”
“அங்க நடக்க வேண்டியதை கவனிடா” என்று உதயன் வைத்திட, “அவரை மீறி காற்று கூட திசை திரும்பாது” என எழுந்து சென்றான் இன்பா.
“நீ பையனை பார்க்கலையா நனி. முன்னாடி போய் நிக்கும் போது, நிமிர்ந்து பார்க்க முடியாது. இப்போவே இங்கிருந்து பாரு, நல்லா தெரியுறாங்க” என்றாள் தனு.
“வேண்டாம்… இருக்கட்டும் அண்ணி” என்ற நனியிதழ், “நீங்க வரல?” எனக் கேட்டு உதயனுக்கு தகவல் அனுப்பினாள்.
தகவலை பார்த்ததும் உதயன் தங்கைக்கு அழைத்துவிட்டான்.
“பட்டு என்னடா?”
“ரொம்ப நெர்வஸா இருக்கு செல்வா!”
“ம்ம்… நம்ம ஷிப்பிங் பேக்டரிக்கு ரைட் வந்திருக்குடா.”
தங்கை தன்னை, தனது அண்மையை தேடுகிறாள் என்றதும், அத்தனை நேரம் இன்பா கேட்டும் சொல்லாத, தான் உடனில்லாததற்கான காரணத்தை அவளிடம் சொல்லிவிட்டான்.
“அண்ணா!”
“நத்திங்டா. ஐ கேன் மேனேஜ். நீ அங்க நார்மலா இரு. உனக்கு பிரணவ்கிட்ட பேசணும் அப்படின்னா நேரடியா சொல்லு, அப்பாகிட்ட சொல்லிட்டு தான் வந்திருக்கேன். பெரியவங்க என்ன நினைப்பாங்க யோசிச்சு நின்னுட்டு வந்திடாதே” என்றான்.
“ம்ம்” என்ற நனி, “அவங்க கிளம்பறதுக்குள்ள வரப்பாருங்க” என்றாள்.
வெளியில் சென்ற இன்பா கஜமுகனிடம் உதயன் வர முடியாது என்பதை சொல்லிட, நனியை அழைத்துச்செல்ல குமரி அறைக்குள் வந்தார்.
“இப்பவும் என்ன ஃபோனு நனி. வா கூப்பிடுறாங்க” என்றார்.
குமரியின் குரல் அந்தப்பக்கம் உதயனுக்கும் கேட்க, “சான்ஸ் மிஸ் பண்ணிடாத பட்டு” என்றுகூறி வைத்திட்டான் உதயன்.
குமரி முன் சென்றிட, தனு தான் நனியை அழைத்து வந்தாள்.
நனியிதழ் அனைவருக்கும் முன் வருவதற்கு முன்பே, பிரணவ்வின் பார்வை அவளை கண்டு நிலைத்துவிட்டது.
வான் நீல நிற புடவை, தங்க இழைகள் மின்னும் கத்தரிப்பூ வர்ண பட்டுக்கரை. வகிடெடுத்து பின்னிய கூந்தலில் அளவான மல்லிகைச் சரம். கூரிய நாசியின் வலது பக்கம் கடுகளவில் ஒற்றை கல் மூக்குத்தி. ஒரு நொடி மூக்குத்தியில் பார்வையை அழுத்தமாக பதித்து மேலேற்றினான். நெற்றியில் புள்ளியலவிலான பொட்டு. கண்ணுக்கு மையின்றி, இமை இழைகளுக்கு மட்டும் மை தீட்டியிருந்தாள். நன்கு வளைந்து புருவம் தொட்டு நின்ற இமை இழைகளில் பிரணவ்வின் இதயம் ஊசியால் தைக்கும் உணர்வு பெற்றது. சாயம் பூசாது இயற்கையாகவே பன்னீர் ரோஜா நிறத்தில் அவனை மொத்தமாக ஈர்த்தது பெண்ணவளின் செவ்விதழ்கள்.
“ஊஃப்.” பிறர் கவனம் பெறாது உதட்டினை குவித்து ஊதி, தன்னை நிலைப்படுத்தி பார்வையை சடுதியில் மாற்றிக் கொண்டான்.
‘என்னடா பிரணவ் பன்ற… உள்ள குடையிறாளா?’ கல்யாண வயதுடைய இளம் ஆண் மகன். அழகான பெண்ணை பார்த்து வரும் இயல்பான உணர்வென்று நொடியில் கடந்துவிட்டான்.
மெல்ல நடந்து வந்து அனைவருக்கும் நடுநாயகமாக நின்றாள் நனியிதழ்.
“பெரியவங்களை கும்பிட்டுக்க நனிம்மா.” ஜெயலட்சுமி பாட்டி சொல்ல,
தலை நிமிராது வணக்கம் வைத்த நனியிதழுக்கு, தன்னவனின் முகம் கண்டுவிட உள்ளமும், விழிகளும் அதீத ஆவல் கொண்ட போதும், தன் உற்சாகம் அடக்கி பொறுமை காத்தாள்.