என் ஆயுள் நீயே 9

என் ஆயுள் நீயே 9

அத்தருணத்திற்கே உரிய இயல்பான படபடப்பு நனியிதழிடம். இரண்டு கை விரல்களையும் கோர்த்து நின்றதில் தெரிந்தது.

அவள் வந்தது முதல் விழிகளை அகற்றாது அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் பிரணவ்.

‘அல்ரெடி ரொம்ப சைலண்ட். இப்போ இன்னும் அடக்கம் ஆகிட்டாளோ! தலையை நிமிர்த்தாம நிக்கிறாள். தரையில் எதும் தேடுறாளோ?’ பிரணவ்வின் மனம் அந்நேரம் இப்படித்தான் நினைத்தது.

மனதை அத்தனை இறுக்கமாக இரும்புத்திரை கொண்டு மூடியிருக்கின்றானோ என்னவோ?

பிரணவ் அத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. அவன் நினைக்கும் ஒன்று நடக்கவில்லை எனும் பயம் அவளிடத்தில் என தவறாக எண்ணிக்கொண்டான்.

‘பெரிய குடும்பம். சொல்றது கஷ்டம் தான்.’ தன்னைப்போல் அவள் மேல் பரிதாபம் கொண்டான்.

“வாம்மா உட்காரு.” விமலா சொல்ல, இன்பாவின் அருகில் சென்று அமர்ந்தாள். அடுத்த கணம் இன்பாவின் கையை பிடித்துக் கொண்டாள்.

புதைத்து வைத்த காதலின் அழுத்தம், அவளவனின் அருகில் கனம் கூடிப்போனதே அவளின் நிலையில்லா தவிப்புக்கு காரணம். அவன் முகம் பார்த்தாள் சேர்த்து வைத்த காத்திருப்புக்கு இணையாக கண்ணீரை கொட்டிவிடுவோம் என்று அஞ்சியே, பிரணவ்வின் முகம் நோக்காது இருக்கின்றாள்.

“ரிலாக்ஸ்டா…” இன்பா மெதுவாக சொல்லியிருந்தாலும், அமைதியாக சூழலில் அனைவருக்கும் கேட்கத்தான் செய்தது.

“ஓகே தான் அண்ணா” என்ற நனியிதழ், “தண்ணி… தண்ணி வேணும் அண்ணா” என்றாள்.

அவளிடம் தென்பட்ட படபடப்பு, தவிப்பு மற்றும் காற்றாய் ஒலித்த அவளின் குரலில், தங்களின் முதல் பேச்சு நினைவுக்கு வந்தது பிரணவ்வுக்கு.

அப்போது இரண்டாம் வருடம். (அஷ்மி முதல் வருடம்.)

பிரணவ்வுக்கு அதுதான் முதல் சந்திப்பு.

ரீமா மற்றும் அஷ்மி வாயிலாக நனியிதழின் பெயர் அறிந்திருந்தாலும், அன்று தான் முதல் முறை ரீமாவின் தோழியாக நேரில் காண்கிறான்.

அவன் மனம் மட்டுமே அறிந்த சந்திப்பு வேறொன்று உள்ளது. அவனாக கூறினால் அன்றி நாம் அறிய வாய்ப்பில்லை.

“லாஸ்ட் மினிட் உன் கோ டான்சர் பொண்ணுக்கு கை உடைஞ்சிடுச்சு சொன்னியே… நனி நல்ல டான்ஸ் பண்ணுவா. ஜாயின் பண்ணிக்கோ” என்ற ரீமா நனியை கையோடு அழைத்து வந்திருந்தாள்.

ரீமாவின் பின் தயக்கத்தோடு விரல்களைக் கோர்த்து பிரித்து என்று படபடப்பாக நின்றிருந்த நனியிதழை கண்டதும், பிரணவ்வின் இதயத்தில் பூ பூத்தது.

‘நனியிதழ்.’ மனதில் சொல்லிக் கொண்டான். மனம் காட்டும் ஆர்வத்தை கண்களில் மறைத்துக் கொண்டான்.

“நோ நீட் ரீமா. நாளைக்கு நூன் டான்ஸ் ஷோ. இன்னும் ஹாஃப் டே தான் இருக்கு. அதுக்குள்ள எப்படி பிராக்டிஸ் பண்ணி, ரிகர்சல் பண்ண முடியும்” என்றான்.

“இல்லை முடியும்” என்று ஓசையின்றி சொல்லிய நனியிதழ்,

“கேட்கல… சத்தமா சொல்லு” என்று அதட்டலாக வந்த பிரணவ்வின் குரலில் வேகமாக விழியுயர்த்தி அரண்டு அவன் முகம் பார்த்தாள்.

“ம்ம்… தட்ஸ் குட். இப்போ சொல்லு” என்றான்.

“நீங்க வன்ஸ் ஸ்டெப்ஸ் போட்டு காட்டுங்க” என்றாள். அப்போதும் அவள் குரல் மெலிந்து தான் வந்தது.

அவளின் இயல்பே இதுதான் போலும் என எண்ணிய பிரணவ், “நீயென்ன அவ்ளோ பெரிய கேஷூவா?” எனக் கேட்க, அவனுடனிருந்த மற்ற நட்புக்கள் யாவரும் சத்தமின்றி சிரித்தனர்.

“டேய் அவள் ஸ்டேஜ் பெர்ஃபாமர் டா. முறையா டான்ஸ் கத்துக்கிட்டிருக்கா. டிஸ்ட்ரிக்ட் லெவல் இன்டர் ஸ்கூல் வின்னர்டா அவள். சைலண்ட் டைப். காலேஜில் எல்லாரும் புதுசு அப்படிங்கிறதால லாஸ்ட் இயர் எதுலையும் பார்ட்டிசிபேட் பண்ணல” என்று ரீமா மற்றவர்களை அடக்கினாள்.

“ஹோ…” எல்லோரும் ஒன்றுபோல வாயால் வட்டமிட்டனர்.

“இப்பவும் பயந்து வரலைன்னு சொன்னவளை, நேத்து புலம்பிட்டு இருந்தியேன்னு சொல்லி கூட்டிட்டு வந்தால் ரொம்ப பண்றீங்க. உங்களுக்கெல்லாம் ஹெல்ப் பண்ண நினைச்சேன் பாரு” என்று தலையில் தட்டிக்கொண்ட ரீமா, “நீ வா நனி” என்று தோழியின் கரம் பற்றினாள்.

“இரு ரீமா. நம்ம காலேஜ் வின் பண்ணனும் தானே!” என்ற நனியிதழ், ரீமா பிடித்த கரத்தை விலக்கிக்கொண்டு பிரணவ் முன் வந்து நின்றாள்.

தற்போது அவளிடம் நடுக்கமோ, பதட்டமோ எதுவுமில்லை. தன் திறமையை நிருபிக்க வேண்டுமென்ற எண்ணம் கொடுத்த திடம் அவளிடம்.

பிரணவ் விழிகளை நேருக்கு நேர் சந்தித்தாள்.

“ஸ்டெப்ஸ் போட்டு காட்டுங்க” என்றாள்.

“ஆஹான்… அதையும் தான் பார்த்திடலாம்” என்ற பிரணவ்வுக்கு நனியிடம் ஏனென்று தெரியாத சுவாரஸ்யம்.

“மியூசிக்” என்ற பிரணவ், தன்னுடன் ஆடும் மற்ற ஜோடியை கண்காட்டி, பார்வையாளர்கள் அமரும்படி சுற்றியிருந்த மேடையில் சென்று அமர்ந்தான்.

பிற நிகழ்ச்சிகளின் பயிற்சியிலிருந்த மாணவ மாணவிகளும் வேடிக்கை பார்க்கும் விதமாக ஆங்காங்கே சுற்றி அமர்ந்துவிட்டனர்.

அந்த ஜோடி மேல்நாட்டு இசைக்கு ஏற்ப ஆடிட, நனியிதழ் அவர்களுக்கு பக்கவாட்டில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

நனியிதழிடம் அழுத்தமான கவனம் இருப்பதைப்போல தெரியவில்லை. இலகுவாக நடனம் பார்ப்பதைப்போல் நின்றிருந்தாள்.

எப்படியும் அவள் ஆட வராதென்று சென்றிடுவாள் என நினைத்தான் பிரணவ்.

அப்போது பிரணவ் தேடி அங்கு வந்த அஷ்மி, ரீமாவுடன் நனியிதழையும் கண்டு, “ஹாய் சீனியர்ஸ்” என்று கையசைக்க, கீற்றாய் புன்னகைத்தாள் நனியிதழ்.

அந்நேரம் மேல்நாட்டு இசை மாறி, குத்து இசை ஒலிக்க, ஆடிக்கொண்டிருந்த ஜோடி விலகிட வேறொரு ஜோடி மாறி ஆடினர்.

“ஒவ்வொரு மியூசிக்கும் ஒவ்வொரு பேர்(pair). பட் நீ டான்ஸ் பண்ணப்போறது மெயின் பிளேஸ். சோ, ஸ்டார்டிங் டூ எண்ட் நீ டான்ஸ் பண்ணனும்” என்றான் பிரணவ்.

ஆடிக் கொண்டிருந்தவர்களை பார்த்துக் கொண்டே… “பண்ணிடலாம்” என்று தலையசைத்தாள் நனியிதழ்.

“அவ்ளோ கான்பிடன்ட்டா?”

“கான்பிடன்ட் தான். என் மேல” என்ற நனியிதழின் பார்வை அழுத்தமாக பிரணவ்வின் முகம் பார்த்து விலகியது.

ரீமா மூலமாக அங்கு நடப்பதை தெரிந்துகொண்ட அஷ்மி, “அண்ணா எனக்கென்னவோ நீ பல்ப் வாங்கப்போறன்னு தோணுது” என்றாள்.

“அடிங்க… நீ எனக்கு சப்போர்ட்டா? இல்லை அவளுக்கா?” என்றான்.

“அஃப்கோர்ஸ் என்னோட சீனியர்க்கு தான். என்னயிருந்தாலும், நீ வேற டிப்பார்ட்” என்று கண்ணடித்தாள்.

மொத்தம் நான்கு ஜோடிகள் முடித்து ஐந்தாவதாக, முதன்மை ஜோடியுடன் மற்ற நான்கு ஜோடிகளும் இணைந்து ஆட வேண்டும்.

“பிரணவ்… ஆல் டூகேதர்.”

“லாஸ்ட் வன் அப்புறம் பார்ப்போம். இப்போ இந்த ஃபோர் செட் ஆஃப் டான்ஸ் பண்ணு” என்றான் பிரணவ்.

“ம்ம்” என்ற நனியிதழ், “தேர்ட் வன் இன்னொருமுறை” என்றாள்.

பிரணவ் புருவத்தூக்கலோடு சிரித்துக்கொண்டே இரு பக்கமும் தலையை ஆட்டி, “டூ இட்” என்றான் அந்த பகுதிக்கான ஜோடியிடம்.

“நனி ஆடிடுவியா? இவனுங்க என்ன கழுத்தை வளைச்சு, கை, கால் முறுக்கி ஆடுறானுங்க. இதுல டைவ் வேற” என்றாள் ரீமா.

“பார்த்துக்கலாம்” என்ற நனி, அவர்கள் ஆடி முடித்ததும், “வன் செக்” என்று அஷ்மியிடம் சென்று எதோ பேசி, அங்கே இருக்கும் அறைக்குள் சென்றாள்.

“உள்ள ரிகர்சல் பார்த்திட்டு வருவாள் போல.” ஒருவன் சொல்லிட, அனைவரும் சிரித்தனர். பிரணவ் பார்த்ததில் சிரிப்பு அடங்கியது.

சில நிமிடங்களில் வெளிவந்த நனியிதழ் மற்றும் அஷ்மி தங்களின் ஆடைகளை மாற்றியிருந்தனர்.

நனியிதழ் ஸ்கர்ட் அணிந்திருந்ததால், டைவ் ஸ்டெப்ஸ் எல்லாம் இருக்கவும், அஷ்மியின் ஜீன்ஸ் மாற்றி வந்திருந்தாள். மேல்சட்டையை டக் இன் செய்திருந்தாள்.

பார்த்ததும் காரணம் கண்டுகொண்டான் பிரணவ்.

“நான் ரெடி. என்னோட பேர்?” என்று ஆடும் இடத்தில் சரியாக சென்று நின்றாள்.

அவளுக்கு ஜோடியாக பிரணவ் சென்று நிற்கவும், அவளிடம் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. அவன் மீது அப்போதே அவளுக்கு கொள்ளை காதல். தற்போது அவன் கரம் பிடித்து கால்கள் பின்னி ஆட வேண்டும். முகம் குப்பென்று வியர்த்து விட்டது.

“ஹேய் ரிலாக்ஸ்…” என்று அவளருகில் சென்ற பிரணவ் தான் அவளை ஆசுவாசப்படுத்தினான்.

இவ்வளவு நேரமும் தன்னால் முடியுமென்று அத்தனை திடமாக இருந்தவளின் முகத்தில் சட்டென்று பூத்த துளி வியர்வையும், துளிர்த்த அலைப்புறுதலும் ஏனென்று தெரியாது பார்த்தான் பிரணவ்.

நனியிதழ் தன் நண்பி ரீமாவை பார்க்க, காரணம் தெரிந்த அவளோ கண்களை மூடி திறந்தாள்.

இருப்பினும் நனியிடம் சிறு பதட்டம்.

“டைம் ஆகுது.” பிரணவ் சொல்லிட,

“ரெடி… ரெடி…” என்று கண்களை இறுக மூடி தன்னை நிலை நிறுத்தினாள்.

இசை ஒலிக்க, பிரணவ் ஆடத் துவங்கினான். மூடிய விழிகளைத் திறக்காது நனியிதழும் இசையின் தாளத்திற்கு ஏற்ப அசைந்தாட, பிரணவ்விடம் மெச்சுதல். அவனிடம் கை கொடுக்க வேண்டிய இடம், கால்கள் பிணைத்து கரம் கோர்க்க வேண்டிய இடமென அனைத்திலும் சரியாக பொருந்தி ஆடினாள்.

பார்வையாளராக இருந்த அனைவரும் இருக்கையின் நுனியில் வியப்பைக் காட்டினர். இறுதி மெட்டுக்கு பிரணவ் அவளின் இடையோடு கையிட்டு அணைக்க, நனியிதழ் ஒற்றை கால் உயர்த்தி, அவனது தோள்களில் தன்னிரு கைகள் வைத்து நிறுத்த, நடனம் முடிவுபெற்றது.

கைத்தட்டல்கள் அவ்விடம் எதிரொலித்தது. அதன் சத்தத்தில் நனியிதழ் கண்கள் திறக்க, பிரணவ்வின் பார்வை அவளது விழிகளில் கவ்வி நின்றது.

இருவரின் கணங்களும் உறைந்து நின்றன.

“வாவ் சீனியர் சூப்பர்.” என்று கைத்தட்டிக்கொண்டு அவர்களின் அருகில் அஷ்மி வரவே இருவரும் சுயம் மீண்டு விலகி நின்றனர். அதிலும் நனியிதழ் மட்டுமே தன் பார்வையை விலக்கியிருந்தாள்.

“பின்னிட்டிங்க சீனியர்” என்று அஷ்மி மட்டுமில்லாது, மற்ற மாணவர்களும் அவளுக்கு கை கொடுத்து பாராட்டி நகர, பிரணவ்வின் ரசனையான பார்வை மட்டும் விலகவில்லை.

அஷ்மி தன் அண்ணனின் விழி மொழியை கண்டு கொண்டாள். அவள் அவனின் தோளில் கரம் பதித்து, “ஃபிரீஸ் ஆகிட்டப்போல” என்று வினவ, அவனிடம் பதிலில்லை.

நினைவின் அழகியலில் மூழ்கி நிகழ் மீண்ட பின்னரும், அன்றைய உறை நிலையில் கொஞ்சமும் மாற்றமில்லாது இன்றும் தன் முன்னே நிற்பவளின் முகத்தில் லயித்து நின்றிருந்தான் பிரணவ்.

இருவரும் இயற்கையின் வரமான சமுத்திரத்தின் பிண்ணனியில் மொட்டை மாடியில் நின்றிருந்தனர்.

எப்படியும் அனைவரின் முன்னும் பிரணவ்விடம் தனித்துப்பேச தன் தங்கை அனுமதி கேட்டிடமாட்டாளென்று தெரிந்திருந்த உதயன், தானிருக்கும் சூழலிலும் இன்பாவுக்கு அழைத்து இருவரும் தனித்து பேசிட வாய்ப்பு ஏற்படுத்துமாறு கூறி வைத்திட்டான்.

தனித்து பேசியதால் தான் தங்கை அழுகைக்கு சொந்தமாகக் போகிறாள் என்பது முன்பே அறிந்திருந்தால், அந்த பாசமிகு அண்ணன் அதனை செய்யாது இருந்திருப்பானோ.

காதலால் அழுத்தம் கொண்டிருக்கும் உடன் பிறப்பின் மனம், தனிமையில் பிரணவ்வுடன் பேசினால் கொஞ்சம் அமைதி கொள்ளும் என்று நினைத்து செய்ய, விதி அவளின் வலியை கூட்டும் வேலையை செய்திருந்தது.

error: Content is protected !!
Scroll to Top