ஐப்பசி மாதத்தின் அடர்ந்த காரிருள் இரவில் ‘சோ’வென மழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது.
வங்கக்கடலில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில், பூம்பாறை என்ற அந்த அமைதியான கடலோர கிராமத்து வயல்வெளிகளின் நடுவே தனித்து நின்றிருந்தது அந்த பழைய ஓட்டு வீடு. சுற்றிலும் பச்சைப் பசேலென்று பூத்து குலுங்கிக் கொண்டிருந்த நெற்பயிர்கள் மீது பொதிந்த மழைத்துளிகளோ வைரம் போல அந்த இரவு நேரத்திலும் மின்னிக் கொண்டிருந்தன.
ஓடுகளின் மீது விழும் மழைத்துளிகளின் சத்தமும், வயல்வெளிகளில் தவளைகளின் கத்தும் சத்தமும் தவிர, அந்த இரவின் நிசப்தத்தைக் கலைக்க வேறு எதுவுமில்லை.
வீட்டின் முதல் அறையில், மழையின் குளிர் தாங்காமல் தடிமனான போர்வையைப் போர்த்திக்கொண்டு சுதாகரும், அவர் மனைவி கலையும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.
அடுத்த அறையில், அவர்களின் செல்லமகள் கமலினி தூங்கிக் கொண்டிருந்தாள். சாளரத்தின் வழியே வீசிய குளிர்ந்த காற்றும், மழையின் சாரலும் அவளது தூக்கத்தை மேலும் ஆழமாக்கியது.
ஆழ்ந்த தூக்கத்திற்குள் இருந்தவளுக்கு ஒரு கனவு வந்தது…
எங்கும் அடர்ந்த காரிருள் நிறைந்த இடம். அப்போது மெல்லிய நிலவொளியில் ஒரு உருவம் மட்டும் வெளிப்பட்டது.
அகன்ற நெற்றியில் பளிச்சென்று பூசப்பட்ட விபூதிப் பட்டையும், கூர்மையான பார்வையுடன், ஒரு பக்க மீசையை இறுக்கமாக முறுக்கிவிட்டபடி கம்பீரமாக நின்று கொண்டிருந்தவனோ மலை போலான தனது நெஞ்சை நிமிர்த்தியவன், “எங்கு போனாலும் உன்ன விடமாட்டான் டி இந்த ருத்ரன்!” என்று கம்பீரமான குரலில், சத்தமாகச் சொன்னான்.
அது சாதாரணக் குரல் போலில்லை. இடி முழக்கம் போல நாலா பக்கமும் எதிரொலித்தது!
அடுத்த நொடி, “அம்மா!” என்று அலறியடித்துக்கொண்டு கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள் கமலினி.
கொட்டும் மழையிலும் அவளுக்கு உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்டியிருக்க, இதயமோ தந்தியைவிட வேகமாகக் அடித்துக்கொண்டிருந்தது.
சடாரென்று சுற்றிலும் பார்த்தாள்; அது தன்னுடைய அறை தான், வெளியே மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை என்பதை உணர்ந்த பிறகுதான் அவளுக்கு இயல்பான மூச்சே வந்தது.
கனவில் பார்த்த அந்த மனிதனின் முகம் இப்போது அவளது நினைவில் துளிக்கூட நிற்கவில்லை. மங்கலாக மறைந்துவிட்டது.
ஆனால்… அவன் சொன்ன அந்த வார்த்தைகளும், “ருத்ரன்” என்ற அந்த கம்பீரமான குரலும் அவளது நெஞ்சுக்குள் எதையோ செய்யவும், என்ன கனவு இதுவென்று புரியாமல், எழுந்து போய் நைட் லேம்பை ஆன் பண்ணிவிட்டு கட்டிலில் வந்து உட்கார்ந்தாள்.
அறையின் மெல்லிய வெளிச்சத்தில், அவளது நிழல் சுவரில் பெரிதாக ஆடியது.
“யார் அவன்? யார் இந்த ருத்ரன்?” என்று யோசித்தபடி தன் இரண்டு கைகளாலும் தலையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டவளுக்கு கனவில் பார்த்த அந்த முகம் இப்போது நினைவில் இல்லைதான்.
ஆனால், அந்தப் பார்வை… நெற்றியில் பூசியிருந்த அந்த அடர்ந்த விபூதிப் பட்டை… எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த ஒரு பக்க மீசையை முறுக்கியபடி கம்பீரமாக ஒலித்த குரல்.
“எங்கு போனாலும் உன்ன விடமாட்டான் டி இந்த ருத்ரன்!”
அந்த வார்த்தைகள் அவள் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தன. வெறும் கனவு என்று கடந்துபோக முடியாத ஏதோ ஒரு அதிகாரமும், ஒருவித ஆழமான உரிமையும் அந்த உரத்த குரலில் இருந்ததை கமலினியாள் உணர்ந்து கொள்ள முடிந்தது.
நாம் பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்த பூம்பாறை கிராமத்தில்தான். நமக்குத் தெரிந்து இந்த ஊரிலையும், ஸ்கூலிலையும் சரி ‘ருத்ரன்’ என்ற பெயரில் யாருமே இல்லையே.
“முன்னே பின்னே தெரியாத ஒருத்தன்… கனவுல வந்து இவ்வளவு அதிகாரமா பேசுறானே? இப்படி ஒரு குரலை இதுவரைக்கும் நாம் கேட்டதில்லை. அதுவும்… ‘உன்ன விடமாட்டேன்’னு சொல்ற அளவுக்கு அவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு?”
என்பதை யோசிக்க யோசிக்க அவளது நெஞ்சு படபடத்தது.
வெளியே மழை இன்னும் தீவிரமாகப் பெய்துகொண்டிருந்தது. ஜன்னல் கதவுகள் காற்றில் படபடவென அடித்துக்கொள்ள, கமலினியின் மனதில் எழும் கேள்விகளுக்கு மட்டும் அவளிடம் பதிலில்லை.
அந்தக் கனவைப்பற்றியே வெகு நேரம் வரை யோசித்து யோசித்துத் தலையே வெடித்துவிடும் போலிருந்தது அவளுக்கு. எவ்வளவு முயன்றும் அந்த முகம் மட்டும் கமலினியின் நினைவுக்கு வரவே இல்லை.
புகைமூட்டத்திற்கு நடுவே தெரியும் உருவம் போல, அது மங்கலாகக்கூட அவள் நினைவில் தங்க மறுத்ததோ விதியின் விளையாட்டு. ஆனால், அந்த கம்பீரமான குரலும், நெற்றியில் வீற்றிருந்த அந்த விபூதிப் பட்டையும் அவளது மனக்கண்ணில் ஆழமாகப் பதிந்துவிட்டன என்பது மறுக்க முடியாத உண்மை.
“யாரது? ஏன் அந்த முகம் மட்டும் எனக்கு நியாபகம் வர மாட்டேங்குது?” என்ற யோசனையுடன் டேபிளின் மேலிருந்து சிறிய அலாரத்தை எடுத்துப் பார்க்க, அதுவோ நேரம் நள்ளிரவு மூன்று மணியைக் காட்டியது.
வெளியே மழையின் வேகம் சற்றே குறைந்திருந்தாலும், அவளது மனதுக்குள் எழும் கேள்விகளின் வேகம் மட்டும் குறையவில்லை.
இனி படுத்தாலும் தூக்கம் வராது என்பதை உணர்ந்துகொண்டு, கட்டிலில் இருந்து இறங்கி ஜன்னல் அருகில் சென்று நின்றாள்.
சாளரத்தின் வழியே வீசிய சில்லென்ற ஈரக் காற்று அவளது முகத்தைத் தீண்டவும், தூரத்து வயல்வெளிகளை மூடியிருந்த காரிருளைப் பார்த்தபடியே, தன் வாழ்நாளில் சந்திக்காத, பார்க்காத அந்த ‘ருத்ரன்’ யார் என்பதைப் பற்றிய சிந்தனையிலேயே உறைந்து போனாள்.
எவ்வளவு நேரம் ஜன்னல் கம்பியில் சாய்ந்தபடி யோசனையில் இருந்தாளென தெரியவில்லை.
மின்னலை வெட்டிக்கொண்டு டமார் என்ற இடி சத்தத்தில் திடிக்கிட்டு நிகழ்வுலகிற்கு வந்தவள், இன்னும் சில மணி நேரத்தில் காலேஜ் அட்மிஷனுக்காக திருச்சிக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் ருத்ரன் பற்றிய சிந்தனையை ஒதுக்கி வைத்துவிட்டு பயணத்திற்கான வேலையைக் கவனிக்கத் தொடங்கினாள்.
குளித்துவிட்டு போட்டு கொள்வதற்காக கபோர்டை திறந்து புதிய சுடிதார் ஒன்றை எடுத்து வைத்தவள், தன் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மார்க் ஷீட்ஸ் மற்றும் டிசி என அட்மிஷனுக்குத் தேவையான எல்லாவற்றையும் அந்த நீலக்கலர் ஃபைலில் வைத்து விட்டு கலைந்து கிடந்த தன் பெட்ஷீட்டை மடித்து வைத்தாள்.
அப்போது அவளது மனசாட்சியோ,
“ஏண்டி கமலி… இங்க பக்கத்துலதான் பூம்புகார் காலேஜ் இருக்குல்ல? அங்க படிக்காம, எதற்கு அவ்வளவு தூரம் திருச்சி வரைக்கும் போய்ப் படிக்கணும்?” என்றது.
அதற்கு கமலினியோ “எனக்கு மட்டும் என்ன ஆசையா… பிறந்த ஊரையும், அப்பா அம்மாவையும் விட்டுட்டு அவ்வளவு தூரம் போய்ப் படிக்கணும்னு? எங்க அப்பா அம்மாதான் சொல்றாங்க… ‘வீட்ட விட்டு வெளியில போய்த் தங்கிப் படிச்சாதான் உலகம் புரியும், சுயமா வாழக் கத்துக்குவ’ன்னு. அவங்க ஆசைக்காகத்தான் நான் போறேன்…” என்று கவலையோடு சொன்னாள்.
இத்தனை வருடமாக தன் பெற்றோரின் அரவணைப்பிலேயே வளர்ந்தவளுக்கு, அவர்களைப் பிரிந்து திருச்சிக்குச் செல்வது மனதிற்குப் பெரிய பாரமாக தான் இருந்தது.
இருந்தும் என்ன செய்ய, நம் நல்லதுக்கு தானே சொல்றாங்க என்று தன்னையே தேற்றிக்கொண்டவள் ரெஸ்ட் ரூமிற்கு சென்று ஹீட்டரை ஆன் செய்து குளித்து வெளியே வந்தவள் சுடிதாரை போட்டுக்கொண்டு தலை முடியை சீவும் போது கமலி கமலி என்னும் அவளது அம்மா கலையின் குரல் கேட்டது.
வரேன்ம்மா என்றவாறு கதவை திறக்க, மகளிடம் சூடான காபி டம்ளரை நீட்டியவர் நல்லவேளை குளிச்சிட்ட என்றபடி அங்கிருந்து போனார்.
அடுத்து ஒரு மணி நேரத்தில் மூவரும் பூம்பாறை டவுனில் இருக்கும் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து திருச்சிக்குச் செல்லும் பஸ்ஸிற்காகக் காத்திருந்தனர்.
அடுத்த கால் மணி நேரத்தில், ‘திருச்சி’ செல்லும் பஸ்சும் வந்து நின்றது.
பூம்பாறையிலிருந்து திருச்சிக்கு சுமார் நான்கு மணி நேரப் பயணம். மூவரும் பஸ்ஸில் ஏறி, காலியாக இருந்த சீட்டில் உட்கார்ந்துகொண்டனர். பஸ் அங்கிருந்து நகர, டிக்கெட் டிக்கெட் என்றபடி நடத்துநர் வரவும், திருச்சிக்கு மூணு கொடுங்க என்று சுதாகர் டிக்கெட்டுகளை வாங்கினார்.
சரியாகக் காலை 7 மணிக்குத் தொடங்கிய அந்தப் பயணம், மெல்ல நகர்ந்து நெடுஞ்சாலையில் வேகம் பிடித்தது.
ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த கமலியின் கவனம் வெளியே சுழன்றோடும் மரங்களின் மீதும் வயல்வெளிகளின் மீதும் இருந்தாலும், மனதின் ஒரு ஓரத்தில் இன்னமும் அந்த ‘ருத்ரன்’ என்ற குரலும், அவனது கம்பீரமான தோற்றமும் நிழலாடிக் கொண்டுதான் இருந்தது.
நான்கு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, காலை 11 மணிக்கெல்லாம் அவர்கள் வந்த பஸ் திருச்சியின் பரபரப்பான சத்திரம் பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது.
பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிய மூவருக்கும் அதிகாலைப் பயணத்தின் களைப்பும் பசியும் சேர்ந்துகொள்ள, சத்திரம் பேருந்து நிலையத்திற்கு எதிரே இருந்த பிரபலமான ‘ரகுநாத் ஹோட்டல்’ அவர்களின் கண்ணில் படவும், அங்கே சென்றவர்கள் காலை டிபனை சாப்பிட்டு வெளியே வந்தனர்.
பின்னர் அங்கு நின்ற ஆட்டோவில் ஏறிக்கொண்டு அண்ணாமலை நகரில் இருக்கும் அந்தப் புகழ்பெற்ற மகளிர் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றார்.
ஆட்டோவும் திருச்சியின் நெரிசல் மிகுந்த வீதிகளைக் கடந்து விரைந்தது. அடுத்த பத்தாவது நிமிடத்தில், பிரம்மாண்டமான தோற்றத்துடன் வீற்றிருந்த அந்த மகளிர் கல்லூரியின் என்ட்ரன்ஸின் முன்பு வந்து நின்றது.
கல்லூரி வாசலில் நின்றபடி, தன் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் தொடங்கப்போகும் அந்தப் பெரிய நுழைவாயிலைப் வியப்புடன் பார்த்தாள் கமலினி.
கல்லூரியின் பிரம்மாண்டமான வரவேற்புக் கூடத்தைக் கடந்து, அட்மிஷன் நடக்கும் பெரிய அரங்கத்திற்குள் மூவரும் நுழைந்தார்கள். அங்கே பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் வரிசையில் காத்திருந்தனர்.
சுதாகர் டோக்கனை வாங்கி வர, கமலினியும் கலையும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டனர்.
சிறிது நேரக் காத்திருப்புக்குப் பிறகு கமலினியின் எண் அழைக்கப்பட்டது. பேராசிரியர்கள் அமர்ந்திருந்த மேஜையை நோக்கிச் சென்றனர். ஆர்கலி தன் சான்றிதழ்கள் அடங்கிய பைலை அதிகாரியிடம் நீட்டினாள்.
“என்ன கோர்ஸ் படிக்க விரும்புறீங்கம்மா?” என்று அதிகாரி கேட்க, கமலினி தயக்கமின்றி, “பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்” என்றாள்.
அவளது பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களைச் சரிபார்த்த பேராசிரியர், “நல்ல மார்க் எடுத்திருக்கீங்க. கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மென்ட்ல சீட் கன்ஃபர்ம் பண்ணியாச்சு” என்று புன்னகையுடன் கூறி, சேர்க்கைக்கான படிவத்தை அளித்தார்.
அடுத்து, தங்கிப் படிப்பதற்கான வசதிகளைப் பற்றி சுதாகர் விசாரித்தார். பூம்பாறையிலிருந்து தினமும் வந்து போக முடியாது என்பதால், கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இருக்கும் விடுதியில் தங்குவதே பாதுகாப்பானது என முடிவெடுத்தனர்.
விடுதிக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதற்குரிய ஹாஸ்டல் கட்டணத்தையும் செலுத்தி, ரசீதைப் பெற்றுக்கொண்டதும், கமலிக்கு அறை எண்ணும் ஒதுக்கப்பட்டது.
எல்லா நடைமுறைகளும் முடிந்து வெளியே வந்த கமலினியோ தன் கையிலிருந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைக்கான சேர்க்கை ரசீதை பார்க்க, இந்தத் திருச்சியும், இந்தக் கல்லூரியும் தன் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்ற சிந்தனை எழுந்தது.
தேடல் தொடரும்…
