குற்றம்-09 டீசர்…
ஆதவ் மதிமாறன்
வயது: 32 | பதவி: ACP
கம்பீரமான தோற்றம்… கூர்மையான பார்வை… அதிகாரத்தை எடுத்துச் சொல்லத் தேவையில்லாத ஆளுமை!
ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சண்முகநாதனின் வளர்ப்பு மகன். கண்டிப்பையே கவசமாக அணிந்துகொண்ட அவருக்கு, அடங்காத குறும்புகளையே ஆயுதமாகக் கொண்டவன் ஆதவ் மதிமாறன்.
அவர் வேண்டாமென்று சொல்வதை வேண்டுமென்றே செய்து முடித்துவிட்டு, ஒன்றுமே தெரியாத அப்பாவியைப் போல வந்து நிற்பதில் அவனுக்கு அத்தனை ஆனந்தம். தாயின் மடியில் உலகத்தையே மறந்துகிடந்த அந்தச் சிறுவனுக்கு, தன்னைத் தாயிடமிருந்து பிரித்த மனிதர் வில்லனாகவே தெரிந்தார். அந்த வன்மம் வயதோடு வளர்ந்ததே தவிர, ஒருபோதும் குறையவில்லை.
ஆனால், காலம் அவனுக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள், அவனுடைய குறும்புத்தனத்தை மட்டுமல்ல; அவனுக்குள் இருந்த மென்மையான இதயத்தையும்கூட இறுகச் செய்துவிட்டன.
ஒருகாலத்தில் குடும்பமே உலகமென்று வாழ்ந்தவன், இன்று அதே குடும்பத்தைத் தன் உலகத்தின் எல்லைக்கு வெளியே நிறுத்தியிருக்கிறான். அவன் நேசித்துக்கு உரியவள், அவன் ஏற்றுக்கொண்ட ஒருத்தி, அவனிடமிருந்து பிரிக்கப்பட்ட அந்த நாளில், அவனுக்குள் ஏதோ ஒன்று மொத்தமாய்ச் சிதைந்துவிட்டது.
இன்று அவனிடம் அதிகாரம் இருக்கிறது. ஆளுமை இருக்கிறது. குற்றவாளிகளைக் கலங்கடிக்கும் துணிச்சல் இருக்கிறது. ஆனால், இழந்துபோன தன் வாழ்க்கையை மீட்டெடுக்கும் வழிதான் இல்லை.
தன்னைச் சுற்றியிருக்கும் குடும்ப உறவுகளுக்கு அவன் கதவை மூடிவிட்டான். அந்தக் கதவைத் திறக்க யாருக்கும் அனுமதியில்லை.
ஆனால், விதி அவனுக்காக வேறொரு கதவைத் திறந்துவைத்திருந்தது.
அவனுடைய கடந்த காலத்தை மீண்டும் தோண்டியெடுக்கப்போகும் ஒரு விசித்திரமான கொலை வழக்கு!
அந்த வழக்கு அவனை அவனுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறது. அவன் விலக்கிவைத்த மனிதர்களின் முகங்களுக்கு முன்னால் மீண்டும் நிறுத்துகிறது. அவன் புதைத்துவிட்டதாக நினைத்த நினைவுகளையும், மறக்க முடியாத ஒருத்தியின் சுவடுகளையும் மீண்டும் உயிர்ப்பிக்கிறது.
குற்றங்களைத் துப்பறியும் அதிகாரியால், தன் வாழ்க்கையின் மர்மத்தை அவிழ்க்க முடியுமா?
தன்னைப் பிரிந்த குடும்பத்தை மன்னிக்க அவன் மனம் இடமளிக்குமா? இல்லை, அவர்கள் இல்லாமலேயே தன் வாழ்க்கையைத் தொடரத் துணிவானா?
எல்லாவற்றுக்கும் மேலாக…
அவன் இதயத்தில் இன்றுவரை அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் அந்த ஒருத்தி யார்?
Heroine :- அனலி 🌸
வயது: 20 | பதவி: காவலர் (Constable)
கண்களில் ஆயிரம் கனவுகள்… இதயத்தில் ஏராளமான ஏக்கங்கள்… உதட்டில் எப்போதும் ஒரு குறும்புச் சிரிப்பு!
வண்ணங்களை நேசிப்பவள். ஆடைகளை வடிவமைப்பதில் ஆர்வம் கொண்டவள். ஒரு சிறந்த ஃபேஷன் டிசைனராக வேண்டும் என்பதுதான் அவளுடைய மிகப்பெரிய கனவு. ஆனால், வாழ்க்கை அவளுக்காகத் தேர்ந்தெடுத்த பாதையோ முற்றிலும் வேறானது.
ஐந்து வயதிலேயே தாயை இழந்தவள். தந்தையின் இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு, அதுவரை தாயின் அன்பில் வளர்ந்திருக்க வேண்டிய குழந்தை, தன் வீட்டிலேயே அந்நியமாகிப் போனாள்.
அவளுடைய சித்தி கொடூரமானவள் அல்ல. அவளை அடித்துத் துன்புறுத்துபவளும் அல்ல. ஆனால், தன் கணவனின் முதல் மனைவிக்குப் பிறந்தவள் என்ற எண்ணம் மட்டும் அனலியை அவரிடமிருந்து தள்ளியே நிறுத்தியது.
அடுத்த ஆண்டே பிறந்த இரட்டைக் குழந்தைகளான தம்பி, தங்கையிடம் அனலிக்கு அளவுகடந்த பாசம். அவர்களை வாரியணைத்துக் கொஞ்ச வேண்டும்; அவர்களுடன் சிரித்துப் பேச வேண்டும்; அவர்களுடைய சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற வேண்டும்… என்று அவளுக்குள் ஆயிரம் ஆசைகள்! ஆனால், ஆசைப்படுவதற்கும் அனுபவிப்பதற்கும் இடையிலான தூரத்தை அவளுடைய குடும்பச் சூழல் எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருந்தது.
தம்பி அவளிடம் அன்பாக இருந்தாலும், தங்கையிடம் மட்டும் தாயின் குணம் அவ்வப்போது வெளிப்படும். அந்த வீட்டில் தனக்கான இடத்தைத் தேடிக்கொண்டே வளர்ந்தவள், தன் மனதிலிருக்கும் வலிகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சிரிக்கக் கற்றுக்கொண்டாள்.
அவளுடைய கனவுகளுக்குத் துணையாக இருந்த ஒரே மனிதர் அவளுடைய தந்தை!
அவர் உயிரோடு இருந்தவரை, தனக்குப் பிடித்ததைப் படிக்க முடிந்தது. தன் கனவுகளைத் துரத்த முடிந்தது. ஆனால், அவர் இறந்ததும் அவளுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது.
கனவுகளைப் பாதியில் நிறுத்திவிட்டு, குடும்பத்தின் பொறுப்புகளைத் தன் தோள்களில் சுமக்க வேண்டிய கட்டாயம். தந்தை பார்த்துவந்த வேலையான காவலர் பணியே அவளுக்கும் கிடைக்க, குடும்பத்திற்காகத் தன் ஆசைகளை ஓரமாக வைத்துவிட்டாள்.
இப்போது அவள் ஒரு காவலர்!
ஆனால், அவளுடைய கையில் இருக்கும் காவல் துறையின் கோலுக்கும், அவளுடைய மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கனவுகளுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லை!
காவல் நிலையத்தில் அவள் செய்யும் சொதப்பல்கள் தனிக்கதை. ஒரு வேலையைச் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டு, இன்னொரு பிரச்சினையில் போய் மாட்டிக்கொள்வாள். மேலதிகாரிகளின் முன்னால் கம்பீரமாக நிற்க வேண்டும் என்று நினைத்தாலும், தவறு செய்துவிட்டு ஆதவ் மதிமாறனின் பார்வையில் மாட்டிக்கொள்ளும்போது மட்டும் அவளுடைய விழிகள் தன்னிச்சையாக அங்குமிங்கும் ஓடும்.
அதிலும் அவன் வேறு யாருமல்ல… முப்பத்திரண்டு வயதான, கண்டிப்புக்குப் பெயர்போன ACP ஆதவ் மதிமாறன்!
அவனுடைய ஒரு பார்வையே போதும்; அவள் செய்த தவறுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளியே வந்துவிடும். அவன் திட்டும்போது முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு நிற்பவள், அடுத்த ஐந்தாவது நிமிடமே ஏதாவது ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டு அவன் முன்னால் வந்து நிற்பாள்.
அதிகாரி என்று தெரிந்தும், அவனுடைய ஒவ்வொரு கண்டிப்புக்கும் உள்ளுக்குள் முணுமுணுப்பவள். அவன் சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டு நிற்பதற்குப் பதிலாக, அதில் ஒரு சந்தேகத்தைக் கண்டுபிடித்து வாதாடத் தொடங்கிவிடுவாள்.
அவளுடைய இந்த அதிகப்பிரசங்கித்தனத்தைப் பார்த்து அவன் எத்தனை முறை கோபப்பட்டிருக்கிறான் என்று அவனுக்கே கணக்குத் தெரியாது!
ஆனால், அவளுக்குத் தெரியாது…
அவனுடைய இறுக்கமான உலகத்திற்குள், அவள் மெல்ல மெல்ல நுழைந்துகொண்டிருக்கிறாள் என்பது!
ஒரு விசித்திரமான கொலை வழக்கு அவர்களை ஒரே பாதையில் பயணிக்க வைக்கிறது. அங்கே அவளுடைய கேள்விகள் அவனுக்குத் தலைவலியாக மாறுகின்றன. அவளுடைய கவனக்குறைவு அவனைக் கோபப்படுத்துகிறது. அவளுடைய அதிகப்பிரசங்கித்தனம் அவனுடைய பொறுமையைச் சோதிக்கிறது.
ஆனால், அதே விசாரணையின் நடுவே, அவன் கவனிக்கத் தவறிய ஒரு சிறிய தடயத்தை அவள் கண்டுபிடிக்கும்போது, அவளைப் பற்றிய அவனுடைய பார்வை மாறத் தொடங்குகிறது.
அவள் வெறும் சொதப்பல் காவலர் அல்ல என்பதை அவன் உணர்கிறான். அவளுக்குள் கூர்மையான கவனிப்புத் திறன் இருக்கிறது. அநீதியைப் பார்த்தால் அமைதியாக இருக்க முடியாத மனம் இருக்கிறது. தன்னுடைய வாழ்க்கையிலேயே அன்புக்காக ஏங்கியவள் என்பதால், பிறருடைய வலிகளைப் புரிந்துகொள்ளும் இதயமும் இருக்கிறது.
அவனுக்குத் தெரியாமல், அவனுடைய கோபத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வலியைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறாள் அனலி.
அந்த புரிதல் எப்போது அக்கறையாக மாறியது?
அந்த அக்கறை எப்போது காதலாக மாறியது?
அவளுக்கே தெரியவில்லை!
கனவுகளைத் தொலைத்துவிட்டு வாழும் பெண்ணுக்கு, உறவுகளையே மறுத்து வாழும் ஓர் ஆணின் இதயத்தில் இடம் கிடைக்குமா?
தன்னைப் பிரிந்த குடும்பத்தைக்கூட மன்னிக்க மறுக்கும் ஆதவ், தன் இதயத்திற்குள் அனலி நுழைந்த பிறகு மாறுவானா?
அவனுடைய கடந்த காலத்தின் காயங்களை அவள் ஆற்றுவாளா? அல்லது அவனுடைய வாழ்க்கையில் ஏற்கெனவே ஆறாத காயமாக இருக்கும் ஒருத்தியின் நினைவுகளோடு போராட வேண்டியிருக்குமா?
அவளுடைய வாழ்க்கைத் துணையாக அவன் மாறுவானா? இல்லை, அவனுடைய வாழ்க்கையில் அவள் வெறும் தற்காலிக வசந்தமாக மட்டுமே இருப்பாளா?
இந்த கேள்விக்கு எல்லாம் வர்ற திங்கள்ல இருந்து ஒவ்வொரு பதிலா பார்க்கலாம்…
போட்டிக் கதை படிக்க யாரெல்லாம் ரெடியா இருக்கீங்க.. நல்லா நச்சுனு ட்விஸ்ட்ஸ் அண்ட் டர்ன்ஸ் ஓட ஒரு கிரைம் திரில்லர் இன்வெஸ்ட்டிகேஷன் கதை படிக்க தயாரா நண்பர்களே!!
இணைந்திருங்கள்
நான் உங்கள்
ஆஷா சாரா….
