தூரமே தூரமாய் 30

தூரமே தூரமாய் 30

ஒருத்தரை நாம் விடணும், விலக்கி வைக்கணும் முடிவு பண்ணிட்டால் அல்லது மனதில் நினைத்துவிட்டால் போதும்… கண்ணில் படும், மனதில் உதிக்கும் யாவும் காரணங்களாகி விடும்.

அதைத்தான் மறைமுகமாக இமையாள் சொல்லியிருந்தாள்.

பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த ருதுவின் கைகள் ஒரு நொடி அப்படியே நின்றது.

இமையாள் சொல்வது பலருக்கு வேண்டுமானால் பொருந்தும். அவனுக்கு?

தன்னை காயப்படுத்த வேண்டுமென்றே சொல்கிறாள் என புரிந்தது. இருப்பினும் அவளது வார்த்தைகள் அவனுக்கு வலி கொடுத்தது.

பாலினை நான்கு தம்ளர்களில் ஊற்றியவள்,

“கழுவி முடிச்சிட்டிங்கன்னா குடிச்சிடுங்க” என்று ஒன்றை அவனுக்காக அங்கேயே வைத்துவிட்டு, அவளுக்கானதை குடித்து முடித்து,

“இதையும் வாஷ் பண்ணிடுங்க” என தான் பருகிய தம்ளரை அவனருகில் வைத்துவிட்டு, தான் சொல்லியதால் அவன் வருந்துவதை பொருட்படுத்தாது சென்றிருந்தாள்.

ஷிவா மற்றும் தேஷ்ஷிற்கு எடுத்துச் சென்றவள் தேஷ்ஷை குடிக்க வைத்து தன்னுடன் அழைத்து வந்தாள்.

அதற்குள் ருது அறைக்கு சென்றிருந்தான்.

அவன் குடித்திருக்கிறானா என்று ஆராய்ந்தவள், தம்ளர் கழுவி வைக்கப்பட்டிருக்க, தேஷ்ஷுடன் மேல் சென்றாள்.

ருது காக்கி உடை அணிந்து கொண்டிருந்தான்.

“ஸ்டேஷன் போறீங்களா?”

“ரவுண்ட்ஸ் போகணும்” என்று அவளின் முகம் பாராது கூறியவன், தேஷ்ஷின் கன்னத்தில் முத்தம் வைத்து நகர்ந்தான்.

“கீழ நானே லாக் பண்ணிடுறேன்” என்றவன் வேகமாக மறைந்திருந்தான்.

அவனது வாடிய முகம் அவளை வருத்தம் கொள்ள வைத்தது. அவனுக்கு வலிக்குமென தெரிந்தே தான் அவ்வாறு கூறினாள். ஆனால் தற்போது அவனைக்காட்டிலும் அவனை வருத்திவிட்டதற்காக அவள் தான் அதீத வலி பெற்றாள். அவன் முன்பு காட்டிக்கொள்ளாது சமாளித்தவளுக்கு அவனது சோக முகம் மனதை வதைத்தது.

தேஷ் அழைத்திடவே சிந்தை திரும்பினாள்.

அதன் பின்னான அவளின் நேரம் தேஷ்ஷுடன் விளையாடி, அவனுக்கு கதை சொல்லி உறங்க வைத்து என வேகமாக ஓடியது.

தேஷ் ஆழ்ந்த உறக்கத்தில் கூட இமையாளை அத்தனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டிருந்தான். விடவேமாட்டேன் என்பதைப்போல். அதில் அவள் உருகிப்போனாள். இத்தனை சிறு வயதில் எத்தனை ஏக்கமென.

நல்ல உறக்கத்தில் அவனது கைகள் தானாக தளர்ந்து தன் மீதிருந்து இறங்கிய பின்னரே, எழுந்து சென்று குளித்து ஆடை மாற்றி வந்தாள்.

வார்ட்ரோப்பில் ருதுவின் ஆடைகளுக்கு நடுவே அவளது உடைகளை அத்தனை நேர்த்தியாக அடுக்கியும் மாட்டியும் வைத்திருந்தான்.

அவனது சட்டையும், அவளது புடவையும் ஒன்றையொன்று ஒட்டி உரசிக்கொண்டிருக்க… அவளின் இதழ் தானாக மலர்ந்தது. மனதிலிருந்த இறுக்கம் மெல்ல தொலைந்திருந்தது.

நேரத்தை பார்க்க பதினொன்றை தாண்டியிருந்தது.

ருது எப்போது வருவானென தெரியவில்லை. அவனை வருத்திவிட்டு வருந்துபவளுக்கு உறக்கம் வருமென்று தோன்றவில்லை.

பிள்ளைக்கு அரணாக இருபக்கமும் தலையனையை வைத்தவள், அறைக்குள்ளே படுக்கை பகுதியை பிரித்தார் போலிருந்த தடுப்பை கடந்து வந்து நீள்விருக்கையில் அமர்ந்தவளாக தொலைக்காட்சியை உயிர்ப்பித்து சத்தத்தை குறைத்து வைத்தாள்.

வெறுமென அவளது கண்கள் திரையை பார்த்திருந்தது. மனமும் கருத்தும் அதில் லயிக்கவில்லை.

ருது அவளுக்கு பெரும் ஏமாற்றம், அதனுடன் கூடிய பெரும் வலி, பெரும் காயம் கொடுத்திருக்கிறான். அதனையே ஏற்றுத் தாங்கிக்கொண்டு காத்திருந்தவளுக்கு, அவனை சிறிதாய் தான் வருத்தியது தாங்கிக்கொள்ள முடியா வதை செய்தது.

அவனது வலி அவளுக்கு அதீத வலியாய்!

அந்நொடி தன் மனம் ருதுவை எத்தனை ஆழம் நேசிக்கிறதென உணர்ந்து கொண்டாள். அவன் மீதான காதலின் வலிமை தெரியும் அவளுக்கு. அதன் பெரும் ஆழம், அவன் தன்னை எவ்வளவு காயப்படுத்தினாலும் அவனுக்காக வருந்தும் மனதில் புரிந்தது.

மெல்ல அவள் விழிகள் மூடிட, ரோந்து பணியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருந்தான் ருது.

தங்கையின் அறையை ஒரு பார்வை பார்த்து, விளக்கு ஒளிராது இருக்கவே உறங்கிவிட்டாள் என மேலே வந்தான்.

விடி விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்க மெத்தையில் தேஷ் மட்டும் இருக்க, பார்வையை சுழற்றினான். தடுப்பைத் தாண்டி மெல்லிய பாடல் சத்தம் கேட்கவே அங்கு சென்றிட, உட்கார்ந்த நிலையிலே உறங்கியிருப்பவளை கண்டவன், அருகில் சென்றான்.

“உனக்கு கோபமே இல்லைன்னு நினைச்சிட்டேன் டி” என்றவன், “உன்னை கட்டிக்கணும் போலிருக்கே! எப்போ மலை இறங்கி வருவ?” எனக் கேட்டபடி மெல்ல அவளை கைகளில் அள்ளிட எண்ணி குனிய, இமையாள் பட்டென்று தன் இமை திறந்திருந்தாள்.

அவனையும் அவனது கைகளையும் பார்த்தவள்,

“அந்த சீனெல்லாம் இங்கில்லை” என்று எழுந்து நின்றாள்.

“ம்க்கும்… அதுக்குத்தான் கொடுத்து வைக்கலையே!” என்றவன், “கொஞ்சம் லேட்டா கண்ணு முழிச்சிருக்கலாம்” என்றுவிட்டு ஆடை மாற்றி வந்தான்.

அவள் இன்னமும் அங்கேயே நின்று கொண்டிருக்க…

“தூங்கலையா?” எனக் கேட்டான்.

“தூங்கணும். எங்கன்னு பார்த்திட்டு இருக்கேன்” என்றாள்.

“எங்கவா? பெட்டில் தான் படுக்கணும்” என்று சொல்லிய ருது அவளை பார்த்து நிற்க,

“நான் உங்களுக்கு சொன்னேன்” என்றான்.

“இந்த கோச் உங்களுக்கு ஓகேவா?”

அவள் காட்டிய கோச்சின் நீளத்தையும் தனது உயரத்தையும் குனிந்து பார்த்தவன்,

“சீரியல் சீனெல்லாம் இங்கில்லை. தேஷ்க்கு அந்தப்பக்கம் நீ, இந்தப்பக்கம் நான்” என்று சொல்லி வேகமாக சென்று தேஷ்ஷின் ஒரு பக்கம் படுத்திருந்தான்.

இமையாளுக்கு அவனது பேச்சிலும், பாவனையிலும் சிரிப்பு வந்தாலும் அதனை இதழ்களுக்குள்ளே ஒளித்துக் கொண்டு மற்றைய பக்கம் சென்று படுத்தாள்.

இருவரும் விழித்து தான் இருந்தனர்.

ஆழ்ந்த அமைதி.

இமையாள், “தேஷ் நைட்டில் விழிப்பானா?”

ருது, “இல்லை.”

அதற்கு மேல் என்ன என்று தெரியவில்லை… மீண்டும் அமைதி.

உருண்டு உருண்டு உறங்க முயற்சித்த ருது, சட்டென்று எழுந்து அமர்ந்தான்.

என்ன என்பதைப்போல் இமையாள் திரும்பிட,

“தேஷ்க்கு மட்டுமில்லை எனக்கும் நீ வேணும்” என்றவனின் வார்த்தையில் அவளது இமை இழைகள் புருவம் தொட்டது.

“அல்ரெடி லேஷஸ் லேஷஸில் மூழ்கிப்போயிருக்கேன். இப்போ எதுக்கு இப்படி பாக்குற?” எனக் கேட்டவன் தான் சொன்னதன் பொருளை உணரவே இல்லை.

அமர்ந்திருந்தவன் அவள் பக்கம் எழுந்து வர, மூச்சு அடைக்க உறைந்தாள்.

அவனோ அவளை கண்டு கொள்ளாதவனாக, அவளருகில் படுத்து அவளின் கையை பிடித்தபடி கண்களை மூடிக்கொண்டான்.

இரண்டு ருதுவிற்கும் நடுவில் அவர்களது சொர்க்கம்.

ருதுவின் செயலில் இமையாளுக்கு சற்று முன்னர் வரை தன் கையை பிடித்துக்கொண்டு உறங்கிய தேஷ் தான் தெரிந்தான்.

அக்கணம் ருதுவும் அவளுக்கு அன்னையின் அரவணைப்பைத் தேடும் சிறுவனாகவேத் தெரிந்தான்.

அப்போதுதான் அவன் சொல்லிய வார்த்தையின் மனப் பொருளை உணர்ந்தாள்.

“மனசு இப்படி லேசா இருந்து பல வருஷம் ஆகுது.”

அவனின் வார்த்தையில் அவனது சொல்லப்படாத வலிகளை அவள் உணர்வதாய்.

இமையாளுக்கு அவன் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியவன் என்ற எண்ணமே இல்லை. அவன் திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லியது முதல் இந்நொடி அவனது மகனாக தேஷ் தன்னருகே படுத்திருக்கும் நிலையிலும், கண் முன் காண்பது, காதால் கேட்பதென யாவும் பொய்யாகவேத் தெரிகிறது அவளுக்கு.

நடுவில் ருதுவின் மீது வந்த கோபம் கூட, அவனை சீண்டுவதற்கெனவே புரிந்தது.

அவனது அருகில் இயல்பாய் அவளால் அவனுடைய தொடுகையை ஏற்க முடிந்தது. எல்லாம் காதல் என்று புரிந்தாலும், அவனை தான் ஏற்றுக்கொண்டோமா? தனக்கு வலி கொடுத்துச் சென்றவனை ஏற்றுக்கொண்டோமா? எனும் பெரும் கேள்வி அவளுள்.

‘எதையும் யோசிக்காதே இமயா!’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் தலையை உதறிட… அந்த அசைவில்,

“என்னாச்சு?” என கண் திறந்தான் ருது.

ருதுவின் பக்கம் முகத்தை நன்றாகத் திருப்பியவள், அவனது கண்களை சந்தித்து,

“சாரி” என்றாள்.

எதற்கென புரிந்தும் அவன் அமைதியாக இருந்தான்.

“வேணுன்னு தெரிஞ்சு தான் சொன்னேன். ஆனால்,” என்றவளின் மீது, ஒருக்களித்து படுத்தவனாக கையை போட்டவன்…

“தெரியும். என்னோட லேஷஸ், என்னை வருத்திட்டு வருந்துவா(ள்)ன்னு தெரியும். தூங்கு” என்று கண்களை மூடினான்.

இமையாள், “தூக்கம் வருதா?”

“உனக்கு வரலையா?” எனக் கேட்டான்.

“வருது” என்றவள், “தூங்க முடியல” என்றாள்.

“காரணம் நானா?”

“என்னால் எதையும் நம்ப முடியல” என்ற இமையாள், “உண்மையாவே தேஷ் உங்க பையன் தானா?” எனக் கேட்டாள்.

“அவன் என்னோட ரத்தம்” என்று அழுத்தமாகக் கூறிய ருது, “நீ அவனை உன் மகனா ஏத்துக்கிட்டன்னு என்னால் உணர முடியுது. அப்புறமும் ஏன் இந்த கேள்வியெல்லாம்?” என்றான்.

“இன்னமும் உங்களை நம்ப சொல்லுதே இந்த காதல். என் ருது எனக்கே எனக்கு மட்டும் தான். இன்னொரு பொண்ணுலாம் அவங்க வாழ்க்கையில் வாய்ப்பே இல்லைன்னு உள்ள சொல்லிட்டே இருக்கே! என்ன பண்ணட்டும்? ” என்று தன் குழப்பத்தின் முக்கியப்புள்ளியை காரணமானவனிடமே வெளிப்படுத்தியிருந்தாள்.

“உங்களை விட்டுக்கொடுக்க முடியல. அது என்கிட்டவே இருந்தாலும்” என்றாள்.

ருது மௌனமாக அவளது பேச்சில் பொதிந்துள்ள காதலை உள்வாங்கிக் கொண்டிருந்தான்.

“என் கண் முன்னாடி தெரிவதையே நம்ப முடியல. என்ன பண்ணட்டும்? உங்களை பைத்தியக்காரத்தனமா காதலிக்கிறேன் போல. உங்களைத் தாண்டி எதையும் நம்பத் தோணல” என்றாள்.

ருதுவிற்கு இக்கணம் எப்படி இருக்கிறதாம்?

அவனின் இமையாவிடம் மொத்தமாக தஞ்சமடைந்திட காட்டாற்றாய் கரைபுரளும் காதலை தனக்குள்ளே அடக்கி வைத்தான்.

“அப்போ லேஷஸ்க்கு ருது மேல் காதல் மட்டும் தான் எப்பவும்… ரைட்?” என்றான்.

…………….

“அப்போ ஹேட் யூ இல்லை.” முன்பு அவள் சொன்னதை வைத்துக் கேட்டான்.

“எனக்குத் தூக்கம் வருது” என்றவள் தேஷ்ஷின் புறம் திரும்பியவளாக கண்களை மூடிக்கொண்டாள்.

“கேடி” என்று முணுமுணுத்த ருது அத்தனை மகிழ்வை உணர்ந்தான் அத்தருணம்.

தன்னவள் தன்மீது எந்நிலையிலும் காதலை மட்டுமே கொண்டிருப்பது அத்தனை நிறைவாய் அவனுள் சுக ராகம் மீட்டியது.

அவனது எண்ணங்கள் யாவும் அவனவளே தன்னைப்போல் நிறைவேற்றியிருந்தாள்.

இன்னும் அவனது பக்கங்கள் மட்டுமே விலக்கப்பட வேண்டும். அவனால் திடமாக சொல்லிட முடியுமா?

‘சொல்லியாகனும்’ என தனக்கே சொல்லியவன், தன்னவளின் மீது கைப்போட்டவனாக உறங்கிப்போனான்.

______________________________

ருது காவல் நிலையம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான்.

ஷிவா தேர்வு என்பதால் முன்னதாகவே கிளம்பியிருந்தாள்.

இமையாள் தேஷ்ஷினை குளிக்க வைத்து, ஆடை உடுத்திக் கொண்டிருந்தாள்.

ருது, “ஷிவா போயாச்சா?”

“அத்தை எப்பவோ ஜூட். நான் ஆல் தி பெஸ்ட் சொன்னனே” என்று தேஷ் சொல்ல…

“சாப்பிட்டாளா?” எனக் கேட்டான்.

“அத்தைக்கு சாப்பாடு வேண்டாமாம். அம்மா ஜூஸ் கொடுத்தாங்க” என்ற தேஷ், ருதுவின் கையிலிருந்த சீப்பினை பறித்து இமையாளிடம் கொடுத்து தலை வாரிவிடக் கூறினான்.

அந்நேரம் இமையாளின் அலைபேசி ஒலித்திட,

“பேபி வாங்க அப்பா கோம்ப் பன்றேன்” என அழைத்தான் ருது.

“இல்லை… தேஷ்க்கு அம்மா தான் எல்லாம் பண்ணனும்” என்று குழந்தை முகம் சுருக்கிட,

இமையாள் மென் முறுவலோடு அவனுக்கு தலை முடியை சரி செய்து, நெற்றியில் முத்தம் வைத்து நிமிர்ந்தாள்.

அதற்குள் அவளது அலைபேசி இரண்டு முறை அடித்து ஓய்ந்திருந்தது.

“எனக்கும் கிடைக்குமா?” ருது கண்களில் காதலை தேக்கி கேட்டிட,

“அடி வேணுன்னா கொடுக்கலாம்” என்ற இமையாள், அழைத்தது யாரென்று அலைபேசியை எடுக்க பள்ளியிலிருந்து சக ஆசிரியரின் அழைப்பு.

“சொல்லுங்க மேம்?”

…….

“ஓகே ஓகே… நாட் ஆன் இஷ்யூ மேம். நான் வரேன்” என்றவள்,

“ஸ்கூல் போகணும்” என்றாள் ருதுவிடம்.

“சம்மர் ஹாலிடேஸ்ல?”

“நியூ அட்மிஷன்ஸ் வொர்க் இருக்கு” என்ற இமையாள் தனது புடவை ஒன்றை எடுத்து, ருதுவின் கையில் திணித்தவளாக “அயர்ன் பண்ணுங்க” என்றாள்.

“அயர்ன் பண்ணப்போலத்தான் இருக்கு.”

“இல்லை கசங்கியிருக்கு. அடுக்கும் போது அவ்ளோ அழகா அடுக்கியிருக்கீங்க” என்றாள் இடையில் கைகளைக் குற்றி.

உள்ளுக்குள் ஜெர்க் ஆனாலும், அவள் சொன்னதை செய்திட ஆயத்தமாகினான்.

“ம்ம்ம்… இப்படித்தான் இருக்கணும்” என்றவள் தேஷ்ஷைக் கூட்டிக்கொண்டு கீழே சென்றிட…

“இருந்தாலும் ரொம்பத்தான் டா ருது நீ அவளுக்கு அடங்கிப்போற” என ருது முணுமுணுத்திட, எதையோ எடுக்க திரும்பி வந்த இமையாள்,

“அடங்கத்தான் வேணும். என்கிட்ட அடங்காம வேற யார்கிட்ட அடங்குவாங்களாம்” என்றவளாய் அவனை பார்த்து உதட்டை சுளித்து வெளியேறியிருந்தாள்.

“பக்கா வைஃப் மெட்டிரியலா மாறி நிக்குறாடா உன் லேஷஸ்” என்று சொல்லிக்கொண்ட ருதுவினுள் ஆயிரமாயிர வண்ணங்கள்.

ருது கீழே வரும்போது, தேஷ்ஷுக்கும் உணவு ஊட்டி தானும் உண்டிருந்தாள் இமையாள்.

ருதுவிற்கு உணவை எடுத்து வைத்தவள், “சாப்பிடுங்க. நானும் கிளம்பி வந்துடுறேன். டிராப் பண்ணிடுங்க” என்றாள்.

அவள் பள்ளிக்கு செல்ல வேண்டுமென சொல்லியபோதே கேட்க நினைத்தான். தான் கேட்கிறோமென அவள் வேண்டாமென்றிடுவாளென கேட்காது இருந்தான். இப்போது அவளாக சொல்லிட வேகமாக ஒப்புக்கொண்டான்.

ருது மகனிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்திருக்க, கிளம்பி வந்த இமையாள்,

“குட்டியை அங்க அம்மாகிட்ட விட்டுட்டு போகலாம்” என்றாள்.

“ராதிகா பார்த்துப்பாங்க” என்று ருது சொல்ல, ராதிகா யார் எனும் விதமாக புருவம் சுருக்கினாள் இமையாள்.

“வெங்கட் வைஃப். பி.சி. ஷீ இஸ் பிரெக்னென்ட். சோ, லீவில் இருக்காங்க. நேத்தும் அவங்க தான் பார்த்துகிட்டாங்க” என்றான்.

ருதுவை முறைத்து வைத்தவள்,

“என் பையன் அவனோட தாத்தா வீட்ல இருக்கிறதுல உங்களுக்கென்ன பிரச்சினை டிசி சார்?” எனக் கேட்டிருந்தாள்.

“ஹேய் நான் அப்படி எதுவும்” என்ற ருதுவை கை காண்பித்து தடுத்தவள்,

“அவங்க கன்சீவ்வா இருக்காங்க. அவங்களையே ஒருத்தங்க பார்த்துக்கணும். தேஷ் ஒரு இடத்தில் உட்காராமல் ஓடிட்டே இருப்பான். அவங்களால் இவன் பின்னாடி ஓட முடியுமா?” எனக் கேட்டதோடு, “நேத்து வேற ஆப்ஷன் இல்லை. அவங்ககிட்ட விட்டிங்க. இப்போ அவனுக்குன்னு சொந்தமான வீடே இருக்குல. உங்களுக்கு என்னவாம்?” என்றாள்.

“இமயா… நான்!” உண்மையில் ருதுவுக்கு பதில் சொல்லிடவே வரவில்லை. அவன் உள் வைத்து எதுவும் சொல்லவில்லை. இயல்பாய் சொல்லிவிட்டிருந்தான்.

தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்திருந்த தேஷ்ஷை ஒரு பார்வை பார்த்த இமையாள், “ஒவ்வொரு முறையும் நான் தேஷ்ஷை என் பையனா நினைக்கிறேன்னு உங்ககிட்ட காட்டிட்டே, உங்களை நம்ப வச்சிக்கிட்டே இருக்க முடியாது ருது” என்றாள்.

இறுதியில் அத்தனை ஆயாசம் அவளது குரலில்.

“ம்ப்ச்…” நெற்றியை தேய்த்துக்கொண்ட ருது, “இனி நானே இல்லைன்னாலும் தேஷ்ஷை நீ…” என நிறுத்தியவன், “என் பொண்டாட்டி விடமாட்டான்னு தெரியும். அதுக்கெல்லாம் எனக்கு விளக்கம் சொல்லனுமில்லை. அவன் அங்கேயே இருந்தாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்றான்.

இமையாள் அவனது பொண்டாட்டி எனும் வார்த்தையில் மின்னலாய் அதிர்வை உள்வாங்கிய போதும், அவனை முறைத்தபடியே இருந்தாள்.

“சும்மா முறைக்காதடி! விரிஞ்சிருக்க அந்த கண்ணுல அழுத்தமா ஒன்னு வைக்கணும் தோணுது” என்றான்.

அவனது பேச்சில் உண்டாகிய குளிரை மறைத்தவளாக,

“எனக்கு டைம் ஆகுது” என தேஷ்ஷை கூட்டிக்கொண்டு வெளியில் சென்றாள்.

மூவரும் சுரேந்தரின் இல்லம் சென்றிட,

அவர்களை வரவேற்று அமர வைத்த தீபா, “அவங்க இப்போதான் பேங்க் போனாங்க” என்றார்.

நேற்றே சுரேந்தர் வங்கி வழக்கிலிருந்து ருதுவால் முழுவதுமாக மீட்கப்பட்டிருக்க, அவர் வழக்கம்போல் பணிக்கு செல்லலாம் என அரசு உத்தரவு கொடுத்தது.

தீபா முதல்முறை தேஷ்ஷை காண்கிறார். இருப்பினும் அவனை அள்ளித் தூக்கியிருந்தார். அவனை பார்க்கையில் அவருக்கு மனமே கனத்து விட்டிருந்தது. இருந்தபோதும் அவன் முன் தன்னை முயன்று இயல்பாக வைத்துக்கொண்டார்.

“எனக்கு ஸ்கூலில் வேலை முடிஞ்சதும் வந்து கூப்பிட்டுக்கிறேன்ம்மா” என்றவள் அங்கிருந்த அவளது ஸ்கூட்டி சாவியை எடுத்துக்கொண்டவளாக “கிளம்பலாம்” என ருதுவை பார்க்க, அவனும் சரியென தீபாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

“நானே டிராப் பன்றேன்.” வெளியில் வந்ததும் அவள் ஸ்கூட்டியை எடுக்க ருது கூறியிருந்தான்.

“எனக்கு எப்போ வொர்க் முடியும் தெரியல. முடியுற நேரம் உங்களுக்கு வொர்க் இருந்தால்?” என்றவள், அவனுக்கு சிறு தலையசைப்பைக் கொடுத்து புறப்பட்டிருந்தாள். அவளிடம் புன்னகையும் தோன்றி மறைந்ததோ.

‘நான் இவ்ளோ கஷ்டப்படுத்தியும் என்னை எப்படிடி சகஜமா ஏத்துக்கிட்ட?’

எல்லாம் காதலென அவனின் மனம் உரக்கக் கத்தியது.

இழந்த யாவும் தன்னவளின் உருவில் தன்னிடம் வந்துவிட்டது என எண்ணிய ருதுவிடம் காட்டவே முடியாத தன் கோபத்தை இன்னும் சில மணி நேரங்களில் காட்டவிருக்கிறாள் இமையாள்.

error: Content is protected !!
Scroll to Top