தூரமே தூரமாய் 29

தூரமே தூரமாய் 29

இனியனின் அழைப்பில் தன்னை இயல்பாய் வைத்து, நண்பனின் குரலுக்கு செவி மடுத்தான் ருது.

“என்னடா கான்பிரன்ஸ் இல்லையா?” எனக் கேட்டவனின் குரல் பேதத்தை இனியனால் உணர்ந்திட முடிந்தது.

“என்னாச்சு ருது?”

நண்பன் மீதான மொத்த அக்கறையையும் ஒரு வார்த்தையில் காட்டியிருந்தான் இனியன்.

“கொஞ்சம் எமோஷனலி லாக்ட்” என்ற ருது, தேஷ்ஷின் நிலையை சொல்ல,

“அதான் தேஷ்க்கு அவன் அம்மா கிடைச்சிட்டாங்களே! அப்புறம் என்னடா உனக்கு கவலை. இமயாவிடம் உண்மையை சொல்லி ஒழுங்கா வாழப்பாரு” என்றான் இனியன்.

“உனக்கு… உனக்கு என்மேல் வருத்தம் ஏதுமில்லையாடா?”

“எதுக்கு?”

“அவளோட அண்ணனா?”

“நீ என் ஃபிரண்ட் டா” என்ற இனியன், “உன்னை விட்டுக்கொடுத்திடுவேன் நினைச்சியா?” எனக் கேட்டு, “என் தங்கச்சி உன்னோட இருந்தால் மட்டும் தான் சந்தோஷமா இருப்பான்னு எனக்கு நல்லா தெரியும்போது, நான் ஏன் உன்மேல் வருத்தப்படனும்?” என்றான்.

“தேஷ்?”

“அவனுக்கு நான் தாய் மாமா. அவ்வளவு தான்” என்று அழுத்தமாக அந்தப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திட்ட இனியன், “வேறெதுவும் கேட்கணுமா? இந்த நிமிஷத்தோட நீயே எதையும் நினைச்சு உன்னை வருத்திக்கிறதை நிறுத்து. இதைப்பற்றி இனி நமக்குள்ள பேச்சே இல்லை” என்றான்.

இனியன் நேரிலிருந்திருந்தால் தாவி அணைத்திருப்பான் ருது.

“எப்போ வர?”

“வன் வீக்.”

“ஹோ…”

“என்னவாம் டிசி சாருக்கு?”

“மிஸ் யூ…” ருதுவின் குரல் கரகரப்பில், இனியனிடம் ஆழ்ந்த மௌனம். சட்டென்று அவனது கண்கள் கண்ணீரைக் காட்டியிருந்தது.

தொண்டையை செருமியவனாக,

“மிஸ் யூ லாட்” என்று வைத்திருந்தான். அதற்கு மேல் பேசினால் உடைந்து விடுவோமோ என்று அஞ்சினானோ?

இனியன் சொல்லிய தாய் மாமா என்கிற வார்த்தையிலே ருதுவின் அனைத்து கலக்கங்களும் நீங்கியிருந்தது.

தாய் மாமா என்றால் என்ன அர்த்தம்? அத்தனை நெகிழ்வு ருதுவிடம். சுற்றியிருக்கும் அனைவரும் அவனின் சந்தோஷத்துக்காகப் பார்ப்பதை எண்ணி கம்பீரமான அவனே சடுதியில் நெகிழ்ந்து விடுகிறான்.

இனியனிடம் பேசியதில் கிடைத்த தெளிவோடு மேலேறி வந்த ருது, மனைவி மற்றும் பிள்ளையுடனான உரையாடலில் மொத்தமாய் கரைந்து போனான்.

ருதுவே எதிர்பார்த்திடாத நொடி அது.

அன்னையின் அன்புக்காக ஏங்கிய பிள்ளையை தாய்மையாய் அரவணைத்துக் கொண்டாளே அவனவள். இருவரின் அணைப்பில் தானும் பொருந்திப்போக பெரும் ஏக்கம் கொண்டான்.

அவன் மனம் ஏங்கியது ஈடேறியிருந்தது. அவனது ஏக்கம் அறியாது அவனவளே அவனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருந்தாள்.

இனி அவளிடம் உண்மையை சொல்ல அவனுக்குத் தயக்கம் ஏதுமில்லை. ஆனால் தற்போது அவளிடம் சொல்லுவதற்கான திடம் தான் அவனிடமில்லை. தன்னை மணந்த முதல்நாளே அவளை கவலைக்குள்ளாக்க வேண்டாமென எண்ணினான்.

தேஷ்ஷை மகனாக ஏற்றுக்கொண்டவள், தன்னை காதலாக மட்டுமே ஏற்க வேண்டுமென பேராசை கொண்டான்.

அவனுக்காக அவனது சிந்தையில் எண்ணத்தையும் தன்னைப்போல் தன்னவள் நிறைவேற்றி வைப்பாள் என்கிற அதீத நம்பிக்கை ருதுவிடம்.

‘ரொம்ப காக்க வச்சிடாதடி’ என ருது மனதோடு சொல்லிக்கொண்டிருந்த கணம் தான்… இமையாள் தேஷ்ஷை தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைய முற்பட்டாள்.

தன்னைப்போல் அவளுக்கான அவனது உள்ளத்து காதலை வார்த்தையால் காட்டி அவளை உறையச் செய்திருந்தான்.

“உன்னை விட்டால் எனக்கும் யாருமில்லை லேஷஸ்… என்னையும் கைப்பிடிச்சு கூட்டிட்டு போயிடு” என்ற ருதுவின் குரலில் அடுத்த அடி வைத்திட முடியாது தடுமாறி நின்றாள் ருத்விக்கின் இமையாள்.

ருதுவின் முகத்தில் கொட்டிக்கிடந்த காதலில் கட்டுண்டவள், கரையத் துடித்த மனதை இழுத்துப் பிடித்தவளாக…

“விடுறன்னு யார் சொன்னா?” எனக் கேட்டு, “உங்களை பழிவாங்க நிறைய இருக்கே!” என உள் சென்றிருந்தாள்.

ருதுவின் இதழ்கள் பற்கள் தெரிய நீண்டது.

‘இனி எல்லாமே வசந்தம் தான்’ என நினைத்தவனாக விசிலடித்தபடி உள்ளே வந்தவனிடம்,

ஷிவா பிரித்து வைத்துச்சென்ற பெட்டிகளைக் காட்டியவள்…

“அடுக்கி வையுங்க” என்றாள்.

“எதே!”

“என்ன சொன்னாலும் இப்படி ஷாக் ரியாக்ஷன் கொடுக்காம, சொன்னதும் செய்யப் பழகுங்க. நானும் பேபியும் கேம் விளையாடப்போறோம்” என்று அங்கிருந்த தொலைக்காட்சியின் முன் மகனோடு சென்று அமர்ந்தாள்.

“என்னடா இது டிசிக்கு வந்த சோதனை” என முணுமுணுத்தாலும், சந்தோஷமாகவே மனைவி சொல்லியதை செய்யத் துவங்கினான்.

தொலைக்காட்சியை உயிர்ப்பித்து டிஸ்க்கை பொருத்திய இமையாள்,

“பாஸ்வோர்ட் என்ன?” எனக் கேட்க,

“லேஷஸ்” என்றான் தேஷ்.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று சத்தமாகவே ருதுவுக்கு கேட்கும்படி முணுமுணுத்தவள் தேஷ்ஷுடன் விளையாட்டில் மூழ்கிப்போனாள்.

தன் வேலை முடித்து இருவரையும் பார்த்தவாறு அமர்ந்த ருது, வெங்கட்டிற்கு அழைத்து காவல் நிலையத்தின் நிலவரம் அறிந்து கொண்டு தன்னவர்களை கவனிக்க ஆரம்பித்துவிட்டான்.

இமையாள் இயல்பாய் தேஷ்ஷுடன் சிரித்து, பேசி, கொஞ்சியென விளையாடுவதை கண்டவனுக்கு பெரும் பாரம் ஒன்று நீங்கி மனமே நிறைந்துவிட்டது.

அவர்களை பார்த்தவாறு சாய்ந்து அமர்ந்திருந்தவன், அரிதாக கிடைத்த நிம்மதியில் தன்னை மறந்து உறங்கியிருந்தான்.

அதுவரை ருதுவின் பார்வையை உணர்ந்தபோதும் திரும்பிடாதவள், மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.

‘என்ன ரகசியம் ருது உங்க மனசில் இருக்கு?’ எனக் கேட்டுக்கொண்டவள், “அப்பா தூங்கியாச்சு. டிஸ்டர்ப் ஆகும். வாங்க நாம கீழப்போய் தாத்தா, பாட்டிக்கூட விளையாடலாம்” என அழைத்துச் சென்றாள்.

அம்பிகா இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்தார்.

“வாம்மா” என்ற வேங்கடம்,

“அம்மா வந்ததும் தாத்தாவை மறந்துட்டியே தேஷ்” என்றிட, “தேஷ் தாத்தாவோட நிறைய விளையாடிருக்கேன். அம்மாகூட இப்போ தானே” என்றவன் இமையாளை கட்டிக்கொண்டவனாக மேலும் நெருங்கி நின்றான்.

வேங்கடத்திற்கு மட்டுமல்ல இமையாளுக்கும் தேஷ்ஷின் வார்த்தைக்கு பின்னிருந்த ஆழம் அத்தனை வலி கொடுத்தது.

“உனக்காகத்தான் ரெண்டு பேரும் ஏங்கி இருக்காங்க. பார்த்துக்கோம்மா” என்றவர், “ருது உன்னை அவ்வளவு நேசிக்கிறான்” என பரிவாய் அவளின் தலையில் கை வைத்தார்.

“ஒன்னு கேக்கட்டுமா மாமா?” என்றவள், வேங்கடம் “கேளும்மா” என்றதும், “அவங்களுக்கு அக்கா தானே? எப்படி தங்கச்சி?” எனக் கேட்டாள்.

“அவனே சொன்னால் தான் சரி வரும்மா” என்றவர், “அவனை மட்டும் நம்புடா” என்று எழுந்து சென்றார்.

இமையாளுக்கு ஒன்று புரிந்தது ருதுவாக சொல்லாமல் தன்னிடம் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள் என்று.

“என்னம்மா நின்னுட்டே இருக்க?” என்று வந்த அம்பிகா, “இவன் முகத்துல மட்டுமில்லை… ருது முகத்துல கூட இன்னைக்குதான் உண்மையான சந்தோஷம் தெரியுது” என்றார்.

மென்மையாக சிரித்த இமையாளுக்கு என்ன பேசிட வேண்டுமென்று தெரியவில்லை. மனதிலிருக்கும் குழப்பங்களுக்கு கேள்விகளைக் கேட்டால் இவரும் சொல்லமாட்டார் என்பதால் மௌனமாக அவர் பேசுவதை கேட்டபடி இருந்தாள்.

“இப்போ சப்பாத்தி செய்திருக்கேன். உனக்கு ஓகேவா இமயா?”

“ம்ம்… அதுவே போதும் அத்தை” என்றவள், “நான் வேலைக்கு போவதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையே அத்தை?” எனக் கேட்டாள்.

“உன் விருப்பம் டா. இதில் நான் சொல்ல என்ன இருக்கு?” என்றார்.

“அப்போ நான் ஸ்கூலுக்கு டெய்லி அம்மாவோடவே போயிட்டு வருவேன்” என்று துள்ளி குதித்தான் தேஷ். அவனது புன்னகையை ஆதுரமாக பார்த்து ரசித்த இமையாளை கனிவோடு பார்த்தார் அம்பிகா.

இமையாளின் மனம் அத்தனை எளிதாக யாருக்கும் வந்திடாது. தேஷ்ஷை மகனாக ஏற்றதற்கு ருதுவின் மீதான அவளது காதல் காரணமாக இருந்தாலும், இப்படி எத்தனை பேர் எளிதாக ஏற்றுக்கொள்வர். ருது ஏன் இமையாளை இந்த அளவிற்கு நேசிக்கிறான் என்பது அவருக்கு புரிந்தது.

குதித்துக் கொண்டிருந்த தேஷ்ஷை தூக்கி தன் மடியில் அமர்த்திக்கொண்ட இமையாள்…

“குட்டிக்கு சாப்பிட என்ன பிடிக்கும்?” எனக் கேட்டாள்.

“சாக்லேட் தோசை.”

“நைட்ல சாப்பிடக் கூடாதே” என்ற இமையாள் தேஷ் உடன் தாயாக ஒன்றிப்போனதை ஒரு தாயாக அம்பிகாவால் உணர முடிந்தது.

“ருது என்னம்மா பன்றான்?”

“தூங்குறாங்க அத்தை.” பதில் அம்பிகாவுக்கு வழங்கியிருந்தாலும், அவள் கவனம் தேஷ்ஷிடம் தான் இருந்தது.

“இந்நேரத்தில்” என மணியை பார்த்தவர்,

“நைட்லே சரியா தூங்கமாட்டான். இன்னைக்கு ஆறரை மணிக்கெல்லாம் தூங்கியிருக்கான். அது நீ அவன் பக்கத்தில் வந்துட்டேங்கிற நிம்மதி இமயா” என்றார்.

இமையாளுக்கு ருதுவின் காதல் தெரியும். அவனுக்குத் தன்னை எத்தனை பிடிக்குமென்று தெரியும். ஆனால் அவனது நிறையே தான் தான் என்பது அம்பிகாவின் பேச்சில் தான் தெரிந்தது.

இமையாள் அவரை பார்த்தபடியே இருக்க…

“எல்லாம் ரெடி அம்பிகா. நீ கிளம்பிட்டால் புறப்படலாம்” என்று வந்தார் வேங்கடம்.

“முப்பது வருஷத்துக்கு மேல பீகாரில் இருந்ததால் குலதெய்வம் கும்பிடவே இல்லை இமயா. ரெண்டு நாளுக்கு முன்னர் தான் பிளான் போட்டோம். இன்னைக்கு உங்களுக்கு கல்யாணம் நடக்கும் எதிர்பார்க்கல. கோவிலுக்குன்னு புறப்பட்டது தடங்கல் ஆகக் கூடாதே அதான் கிளம்புறோம்” என்றார்.

அம்பிகா முப்பது வருஷம் என்றதில் அவளுக்கு தலையே சுற்றியது.

‘அப்படி என்னதான்டா நடந்தது?’ மனதில் ருதுவின் தலையிலே நன்கு கொட்டினாள்.

அம்பிகா அவளின் பதிலுக்காக பார்த்திருக்க…

“சரிங்க அத்தை” என்ற இமையாள், “நீங்களும், மாமாவும் மட்டுமா அத்தை?” என வினவினாள்.

“ஆமாடா” என்றவர், “ஷிவாவுக்கு எக்ஸாம் இருக்கு. ருது கோவிலுக்குன்னு சொன்னாலே வாய் திறக்கமாட்டான்” என்று நகர்ந்தார். அடுத்த கால் மணி நேரத்தில் இருவரும் புறப்பட்டிருந்தனர்.

“வர ரெண்டு மூணு நாள் ஆகும். பார்த்து ஜாக்கிரதையா இருங்க” என்ற வேங்கடம், தேஷ்ஷை தூக்கி முத்தம் வைத்துவிட்டு வண்டியில் சென்று ஏறி அமர்ந்தார்.

“படிச்சிட்டே இருக்கமா நேரத்துக்கு சாப்பிடு ஷிவா” என்ற அம்பிகா, “ருது எழுந்ததும் சொல்லிடு இமயா. அசந்து தூங்கிறவனை எழுப்ப வேண்டாம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

மூவரும் உள்ளே வர,

“அம்மா பசிக்குது” என்றான் தேஷ்.

இமையாள் தேஷ்ஷை சமையலறை பக்கம் கூட்டிச்செல்ல,

“நான் ஏதும் ஹெல்ப் பண்ணட்டுமா அண்ணி” எனக் கேட்டு முன் வந்தாள் ஷிவன்யா.

படித்துக்கொண்டிருந்த ஷிவன்யா, பெற்றோர் புறப்படுகிறார்கள் என்பதால் வழியனுப்பிட புத்தகத்தோடு வந்திருந்தாள்.

அவளின் கையிலிருந்த புத்தகத்தை பார்த்த இமையாள்…

“நீ படி ஷிவா. நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.

“ஓகேவா உங்களுக்கு” என்ற ஷிவா, “நான் டைனிங் டேபிளில் உட்கார்ந்து படிக்கிறேன். நீங்க எதாவதுன்னா கேளுங்க” என்று உணவு மேசை இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

“தேஷ்க்கு சப்பாத்தி பிடிக்காது” என்றான் சிறுவன்.

“அப்போ என்ன வேணும்?” எனக் கேட்டவள், அவன் முன்பு சொல்லியதை வைத்தே, “சாக்லேட் தோசை நாளைக்கு டே டைம் செய்து கொடுக்கிறேன். இப்போ வெஜிடபிள் தோசை ஓகே வா” என்றவாறு மகனை உணவு கூடம் மேடையில் அமர வைத்தாள்.

“குட்டிக்கு என்னென்ன வெஜிடபிள்ஸ் பிடிக்கும்?” எனக் கேட்டு குளிர்சாதனப் பெட்டியை திறந்தாள்.

“கேரட், மஷ்ரூம், காலிஃபிளவர்” என்று தேஷ் தன் விரல்களை ஒவ்வொன்றாய் திறந்தபடி கூற, இமையாள் காய்களை எடுத்து பொடியாக நறுக்க ஆரம்பித்தாள்.

நறுக்கிய கேரட் துண்டு ஒன்றை தேஷ்ஷின் கையில் கொடுத்தவள்,

“குட்டி இதை சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள, அம்மா தோசை சுட்டுடுவேனாம்” என்றாள்.

“ம்ம்ம்” என்று வேகமாக தலையாட்டிய தேஷ், “மஷ்ரூம் நான் போடுறேன்” என்றான்.

அடுப்பில் தோசை கல்லினை வைத்தவள், வட்டமாக மாவினை ஊற்றி தேய்த்து, பொடியாக நறுக்கி கலந்து வைத்த காய் கலவை அடங்கிய கிண்ணத்தை தேஷ்ஷின் முன் நீட்டினாள்.

இவர்களின் சம்பாஷனையில் ஷிவாவின் பார்வை இவர்கள் மீதே இருந்தது.

“புக் ஓபன் பண்ணி வச்சிட்டு, என்ன வேடிக்கைப் பார்க்குற?” எனக் கேட்டபடி உறக்கம் கலைந்து எழுந்து வந்து ஷிவாவின் அருகில் மற்றொரு இருக்கையில் அமர்ந்திருந்தான் ருது.

வரும்போதே அம்பிகா, வேங்கடம் கிளம்பியதைப்பற்றி அலைபேசியில் விசாரித்திருந்தான்.

“அங்க பாருங்க டார்லிங்” என்று சமையலறைக்கும் உணவு மேசைக்கும் ஏதுவாக இருக்கும் கிச்சனின் ஓபன் விண்டோ பக்கம் ருதுவின் தலையை திருப்பியிருந்தாள் ஷிவா.

மேடையில் தேஷ் சம்மணமிட்டு அமர்ந்தபடி, இமையாள் நீட்டிய கிண்ணத்திலிருந்த காய்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தோசையில் தூவிக் கொண்டிருக்க, இமையாள் “இங்க கொஞ்சம், அங்க கொஞ்சம்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

அக்காட்சி பார்க்கவே கவிதையாய். இருவரின் முகத்திலும் அப்படியொரு உற்சாகப் புன்னகை. தேஷ்ஷின் முகம் பூவாய் மலர்ந்திருந்தது. பார்க்கும் ருதுவுக்கு அந்த நொடி மட்டும் போதுமெனத் தோன்றியது.

“ஹவ் க்யூட்” என்ற ஷிவா, “நீங்க இன்னும் முன்னாடியே அண்ணியை கூப்பிட்டு வந்திருக்கலாம் டார்லிங். தேஷ் முகத்தை விட உங்க முகத்தில் தான் அதிக ஒளி தெரியுது. ரீசன் அண்ணி தானே?” என்றாள்.

“என்னை ஆராயாமல் படி” என்று வலிக்காது அவளின் தலையில் கொட்டியவன்,

சமையலறை உள்ளே சென்று இமையாளின் அருகில் மேடையில் சாய்ந்து நின்றவனாக, “எனக்கும் தோசை கிடைக்குமா?” எனக் கேட்டான்.

“பூசை வேணுன்னா கிடைக்கும்” என்று தோசை கரண்டியால் அவனின் கையில் அடித்தவள்,

“குட்டிக்கு நெய் பிடிக்குமா?” எனக் கேட்டு, அளவாய் ஊற்றி, தோசையை வார்த்து தட்டில் எடுத்து வைத்து தேஷ்ஷின் முன் நீட்டியவளாக, சிறிது பிய்த்து ஊட்டிவிட்டாள்.

சுவைத்த தேஷ் சப்புக்கொட்டி விரலால் சூப்பர் என காண்பித்தான்.

“நாம உட்கார்ந்து சாப்பிடுவோம்” என்று ருதுவை கண்டுகொள்ளாது நகர,

“எனக்கில்லையா?” எனக் கேட்டிருந்தான் ருது.

“இருக்கே” என்று அம்பிகா பரத்தி மூடி வைத்திருந்த சப்பாத்தி மாவினை காண்பித்தவள், “அத்தை தேய்த்து வச்சிட்டாங்க. நீங்க இப்போ அதை சுட்டு எடுத்துட்டு வாங்க. சாப்பிடணும்” என்றாள்.

“இந்த பழிவாங்கல் எல்லாம் ரொம்ப ஓவர். என் ரேஞ்சுக்கு பழிவாங்குடி” என்றான்.

அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள்,

“உங்களுக்கு இதுவே கௌரவம் தான்” என்று தேஷ்ஷிற்கு கதை சொல்லியபடி உணவினை ஊட்ட ஆரம்பித்திருந்தாள். நடுவில் ஷிவாவும் படித்துக்கொண்டே வாய் திறந்து காட்டிட அவளுக்கும் ஊட்டிவிட்டாள்.

தன்னவள் தன் பந்தத்தோடு அழகாய் பொருந்திப்போனதை ரசித்தவாறு மனைவி சொல்லிய வேலையை சிரத்தையாக செய்தான்.

இடையில் தேஷ்க்கு முடித்து, ஷிவாவுக்கு அவன் செய்து வைத்த சப்பாத்தியை எடுக்க வந்த இமையாள்,

“ரவுடிங்களை சுடுறது பெரிசில்லை. சப்பாத்தியை ஒழுங்கா சுடனும். இது வேகல, இது கருகிடுச்சு, இது சுத்தம்” என்று ஒவ்வொன்றாக எடுத்து குறை சொல்லியவளாக சென்றவள்,

“ரொம்பத்தான் பழிவாங்குறடி நீ?” என்று சத்தமாக சிரித்தவனை திரும்பி முறைத்தாள்.

“லவ் யூ டி.” அவளின் முறைப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளாதவனாக, சத்தமின்றி உதடசைத்து கண் சிமிட்டினான்.

“ம்க்கும்” என்று உதட்டை சுளித்தவள் முகத்தை வெட்டி திருப்பிக்கொண்டாள்.

“ரொம்பத்தான்… பார்த்து” என்றவன் சாப்பாத்திகளை சுட்டு முடித்து எடுத்துக்கொண்டு அவர்களின் அருகில் வந்து அமர்ந்தான்.

இமையாள் ஷிவாவுக்கும் தேஷ்ஷுக்கும் மாற்றி மாற்றி ஊட்டிக் கொண்டிருக்க, ருது இமையாளையே அசையாது பார்த்திருந்தான்.

இருவரின் விளையாட்டை கண்டும் காணாது படித்துக்கொண்டிருந்த ஷிவா, உணவு போதுமென எழுந்து, இமையாள் அறியாது ருதுவுக்கு பெருவிரலை காண்பித்து “ஆல் தி பெஸ்ட் டார்லிங்” என்று உதடசைத்துச் சென்றிருந்தாள்.

ருது இதழில் தோன்றிய புன்னகையை நன்கு படர விட்டிருந்தான்.

“என்னவாம் டிசி சாருக்கு?” என்றவள், தேஷ்ஷை அழைத்துச் சென்று வாய் துடைத்துவிட்டு, தானும் உணவு உண்ண தட்டினை எடுத்து வைத்து அமர்ந்தாள்.

“நான் அத்தைகிட்ட போறேன்” என்று தேஷ் ஓட, “மெதுவா போ தேஷ்” என்றாள் இமையாள்.

“லேஷஸ்க்கு கோபமே இல்லைல?”

அவளிடம் பதிலில்லை. எப்படி இல்லையென்று ஒப்புக்கொள்வாள். அவன் மீது காதலிருக்கிறது. கொண்ட காதலால் அவனது உறவுகளை அவளது உறவுகளால் மிக எளிதாக, அத்தனை விரைவில் ஏற்க முடிந்தது. அந்த காதலை காட்டிடக்கூடாதென்பதற்காகவே அவள் வாய் திறக்கவில்லை.

“தேஷ் யாருன்னு இப்போ சொல்லு லேஷஸ்?” என தானே கேட்டான் ருது. அவள் மீதான தன் பார்வையை மாற்றாது.

“நீங்க அப்பான்னா நான் தான் அம்மா” என்றவள், “உங்களுக்காகத்தான் எல்லாம் போதுமா? உங்களை ஏன் இவ்ளோ லவ் பன்றேன் தெரியல. எம் மேல தான் கோபம். இந்த கோபம் முன்பே உங்க மேல் வந்திருக்கணும். ஏன் வரலன்னு என்மேலே கோபம். இப்போ, நேத்து நீங்க கார்னர் செய்து… ம்ப்ச், இப்பவும் வரமாட்டேங்குது. எல்லாம் இந்த காதலால” என்றவள் துடித்து வெளிவரும் கண்ணீரை அவனுக்கு காட்டாது எழுந்து சென்றிருந்தாள்.

சற்றும் காதலை காட்டிடக் கூடாதென நினைத்தவள், நொடியில் மொத்த காதலையும் வலியோடு காட்டியிருந்தாள்.

தன்னவளின் இந்நேர அழுகை அவனுக்கு அத்தனை சந்தோஷத்தை அளித்தது. அவனுக்கான அழுகையல்லவா அது. அவளின் காதலுக்கான சான்றல்லவா அந்த கண்ணீர். அவனுக்கு இதைவிட வேறென்ன வேண்டுமாம்.

“லவ் யூ லேஷஸ்” என மெல்ல முணுமுணுத்தான்.

அவன் முன் டொங்கென்று தட்டினை வைத்தவள், உணவினை எடுத்து வைத்து, “சாப்பிடுங்க” என்றாள்.

“லேஷஸ் ஊட்டிவிடணுமே?!” என்றான்.

“முடியாது” என பட்டென்று சொல்லியிருந்தாலும், அவளின் கை உணவோடு அவன் முன் நீண்டிருந்தது.

வாய் திறந்து வாங்கியவன் உணவை மென்றபடி,

“நிறைய கஷ்டப்படுத்திட்டேன்ல?” என்றான்.

“ஆமா… இப்போ என்ன அதுக்கு?” என அடுத்த வாய் உணவினை வைத்தவள்,
“கஷ்டப்படுவேன் தெரியாமலில்லை. தெரிஞ்சு தானே பண்ணீங்க? அப்புறம் என்ன வருத்தம் போல கேள்வி” என்று மெல்ல முனகினாள். அவனுக்கு கேட்கும்படியே!

சில நிமிடங்களில் அவனை பேசவே விடாது உணவினை ஊட்டி முடித்திருந்தாள்.

இறுதி வாய் உணவை விழுங்கியவன்,

“இப்படியும் பழிவாங்கலாமா?” எனக் கேட்டு புன்னகைக்க…

“இப்படியும் வாங்கலாம்” என்றவள் “பாத்திரமெல்லாம் நீங்க தான் வாஷ் பண்ணணும். ஒழுங்கா எழுந்து வந்து செய்யுங்க” என்று அதட்டியபடி சமையலறைக்குள் செல்ல, ருதுவும் அகத்தில் தோன்றிய மலர்ச்சியோடு அவளின் பின் சென்றான்.

ருது பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்க… இமையாள் பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

தனக்காக அவள் எதையும் நொடியில் ஏற்றுக்கொள்வாள் என்பது, அவள் பாந்தமாய் ஒரு நாளிலே அவ்வீட்டில் உரிமையாய் வளைய வருதலில் புரிந்து கொண்டான்.

“விட்டுப்போகனும் நினைச்சது இல்லை. விட்டுப்போனால் நல்லா இருப்பன்னு நினைச்சேன்” என்றான். அன்றைய நாளின் தன் மனதை குறிப்பிட்டான்.

“இதை உங்களோட காதல்ன்னு நான் எடுத்துக்கணுமா?” எனக் கேட்டவள், “விட்டுப்போக நினைச்சிட்டால் நினைப்பதெல்லாம் காரணம் தான்” என்று முதல் முறை அவனுக்கு வலிக்க கொட்டு வைத்தாள். தன் வார்த்தையால்.

error: Content is protected !!
Scroll to Top