சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 1

சருகு 🍂 1 :

நேரம் நள்ளிரவு….

சென்னையின் மையத்தில்,
வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வளைந்து நெலிந்து பல்வேறு வடிவங்களில் கட்டப்பட்ட பிளையோவரின் இரண்டடி உயரம் உள்ள பக்கவாட்டு சுவற்றின் மீது ஒருவன் நின்றிருந்தான்.

கைகள் இரண்டையும் அகல விரித்து வான் நோக்கி தன் பார்வையை பதித்திருந்தவனின் ஒரு கையில் மது பாட்டில் இடம் பிடித்திருந்தது.

அதன் சீல் இன்னும் பிரித்திருக்கவில்லை.

“அடியேய்…. அடியேய்… இவளே… என் வாழ்க்கை பாழாக்க பிறந்தவளே…
அடியேய்… அடியேய்… இவளே… என்னை வேண்டான்னு சொல்லிட்டு பறந்தவளே..”

என சத்தமாக பாடியவன்,

“அதான் என்ன விட்டு போய்ட்டாளே… அப்புறம் ஏன் அவளை நினைத்து நான் பாட்டெல்லாம் பாடனும்” என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

கண்கள் தீப்பிழம்பென ரத்த நிறத்தில் காட்சியளித்தது.

பிளையோவரின் சாலையில் கவி என்கிற கவியரசன் நின்று கொண்டு கீழே இறங்குமாறு அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

அவனின் குரல் செவிகளில் விழாதவாறு நின்றிருந்தவன், மீண்டும் பாடத் தொடங்கினான்,

“போ நீ போ…
போ நீ போ…
போ நீ போ…
தனியாக தவிக்கின்றேன்… துணை வேண்டாம்… தூரம் போ….
பிணமாக நடக்கின்றேன்… உயிர் வேண்டாம் … தூரம் போ… போடி… போ… போய்ட்டியே… அப்புறம் ஏன்டி??? இன்னும் இங்கே இருந்து” என தன் நெஞ்சில் கை வைத்து காண்பித்து, “என்னை உயிரோடு கொல்ற” என வெறிப்பிடித்தவன் போல் இரவு வானை நோக்கி கத்தினான்.

“டேய்… சொல்றதை கேளுடா… நீ இப்படி இருக்கிறது எனக்கு கஷ்டமா இருக்குடா” என கவி கவலை குரலில் மன்றாடினான்.

அவனது கண்களில் சிறு நீரும் எட்டிப் பார்த்தது.

அங்கொருவன் தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றான் என்பதை கருத்தில் கொள்ளாமல், மெல்ல தனது கையிலிருந்த பாட்டிலை உறுத்து விழித்தான் அவன்.

அதன் சீலினை பிரித்து மூடியை கழற்றியவன் தனது நாசி அருகே எடுத்துச் சென்று அதன் நாற்றத்தை ஆழ்ந்து உள்ளிழுத்தான். நாசி வழியே நுழைந்த மதுவின் நெடி அவனது சிறு மூளை வழியாக பெரு மூளையை சென்றடைய, விர்ரென்ற ஒரு உணர்வு அவன் உடல் முழுக்க பரவியது.

அவனது செயல்களை வித்தியாசமாக பார்த்திருந்த கவி அவனது கையினை பிடித்து கீழே இறங்குமாறு இழுத்தான்.

இழுத்த கவியின் கைகளை உதறி தள்ளியவன், தனது கையிலிருந்த பாட்டிலை தார் சாலையில் போட்டு உடைத்தான்.

சில்லு சில்லாக உடைந்து நொருங்கிய பாட்டிலின் கண்ணாடி துகள்களை கண்டவன்.. “என் மனசும் இப்படி தான் மச்சான் நொறுங்கி போச்சு” என்றான் கண்களில் வலியுடன்.

தனது மாமன் மகனின் வருத்தத்தைக் காண சகிக்காமல் “நீ முதலில் கீழே குதி டா” என்ற கவி, தான் கூறிய பிறகே தனது வார்த்தைகளில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தான்.

கீழே இறங்கு என்பதற்கு பதிலாக குதி என்றிருந்தான்.

தனது தவறிலிருந்து அவன் வெளி வருவதற்குள்,

“இதோ.. இப்பவே குதிக்கிறேன் மச்சான்” என்றவன் நொடியும் கடக்காது தான் நின்ற இடத்திலிருந்து கீழே குதித்திருந்தான்.

கவி தன் நெஞ்சம் உறைய, சர்வமும் நடுங்க “அபினவ்” என கத்தியிருந்தான்.

இதே நேரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பனிரெண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்கணங்கூர் என்ற கிராமத்தின் மையத்தில் அமைந்துள்ள பெரிய வீட்டின் ஒரு படுக்கையறையில் இளம் பெண் ஒருத்தி தனக்கு அருகில் படுத்திருக்கும் தன்னுடைய மாமன் மகளை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

“கனி… ஏய் கனிமொழி எழுந்திருடி.”

தன்னுடைய அத்தை மகள் வருணாளினியின் குரலில் உறக்கம் விலகாமல் கண்களை கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள் கனி.

“ஹேய்… இப்போ எதுக்கு டி… பேய் வாக்கிங் போற நேரத்துல.. இப்படி உளுக்குற, உனக்கு என்னடி வேணும்..” தூக்கம் கலைக்கப்பட்ட கோவத்தில் கனி எரிச்சலுடன் கேட்க, வருணா அமைதியாக நகம் கடித்து அமர்ந்திருந்தாள்.

அவளது செயலில் ஆத்திரம் கொண்ட கனி.. “இங்க பாருடி, இப்போ என்னன்னு சொல்ல போறியா இல்லையாடி” என்றாள் கோபத்துடன்.

தனது ஆருயிர் தோழியின் கோவம் புரிந்தவளாய், “மணி பன்னெண்டுக்கு மேல ஆகிடுச்சு” என்றாள், வருணா மெல்லிய குரலில்.

“அதுக்கு இப்போ என்ன செய்யணும்” எனக் கேட்ட கனியை முறைத்துப் பார்த்த வருணா..

“நீயெல்லாம் ஒரு தங்கச்சியாடி! இன்னைக்கு என்ன தேதி.. சசி அத்தான் பிறந்தநாள்” என ஆதங்கத்துடன் கூறினாள்.

வருணா கூறிய பிறகு தான் தனது அண்ணனின் பிறந்தநாள் நினைவு வந்தவளாய், “ஆமா, வருணா நானும் மறந்துட்டேன்” என கனி அசடு வழிந்தாள்.

அவளது தலையில் வலிக்குமாறு கொட்டிய வருணா, இரவு உறங்க வரும் போது தெரியாமல் எடுத்து வந்திருந்த தனது பெரியப்பாவின் அலைப்பேசியை தலையணைக்கு அடியிலிருந்து எடுத்தாள்.

“இதை எப்போடி எடுத்துட்டு வந்த, மாமா ஃபோன் தானே… தெரிஞ்சா அவ்வளவு தான். எடுத்த இடத்திலே கொண்டு போய் வைத்துவிடலாம்” என்றாள் கனி பயந்தவளாய்.

நாகரிகம் பல படிகள் முன்னேறி இருந்தாலும் கிராமங்களில் இன்றும் பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் ஒன்று அலைபேசி பயன்படுத்துவது. அது தங்களது பிள்ளைகளின் மீதுள்ள நம்பிக்கயின்மை இல்லை, நாம் சரியாக இருந்தாலும் ஆபத்து நம்மை தேடி வரும் என்கிற முன்னெச்சரிக்கை உணர்வு.

இன்றைய அறிவியல் ஆக்கத்திற்கு பயன்படுவதை விட அழிவிற்கும், அழிக்க நினைப்போருக்கும் தான் அதிகம் உதவுகிறது.

கனி பயத்துடன் வருணாவை பார்த்திருக்க, அவளோ தனது சசி அத்தான் எண்ணிற்கு அழைத்திருந்தாள். அந்தப் பக்கம் அழைப்பு சென்று கொண்டிருந்ததே தவிர யாரும் ஏற்கவில்லை.

இரண்டு மூன்று முறை முயற்சித்தும் பலனில்லாமல் போக வருணாவின் மனதினை பதட்டம் ஆட்கொண்டது. தோழியின் பதட்டத்தை அவள் கூறாமலே அறிந்த கனி,
“அண்ணா வேலைப்பற்றிதான் உனக்குத் தெரியுமே!!!.. எதாவது முக்கியமான வேலையில் பிஸியா இருப்பார். பயப்படாமல் தூங்கு” என்றவளின் பேச்சில் சமாதானம் அடையாத வருணா அந்த நள்ளிரவு நேரத்திலும் பூஜையறை சென்று “தனது அத்தானிற்கு ஒன்றும் ஆக கூடாது” என அங்கே வீற்றிருந்த கடவுள்களின் புகைப்படங்களிடம் வேண்டினாள்.

************

ஃபிளையோவரில் இருந்து அவன் கீழே குதித்ததும் “அபினவ்” என கவி கத்தியது திசையெங்கும் எதிரொலித்தது.

ஆம் அவன் அபினவ் நம் கதையின் நாயகன் அவனைப் பற்றியும் மற்ற கதாபாத்திரங்களைப் பற்றியும் கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்.

கவியின் உடலில் அப்பட்டமாக நடுக்கம் தெரிய தான் நின்ற இடத்திலிருந்து, மெதுவாக இரண்டு எட்டுக்கள் எடுத்து வைத்தான்.

பயத்தில் அந்த நள்ளிரவில் குளிர்ந்த காற்றிலும் கவிக்கு சட்டையில் ஈரம் படரும் அளவிற்கு வியர்த்தது.

கண்களை இறுக மூடியவன் எட்டிப் பார்த்து விழிகளைத் திறக்க மகிழ்ச்சியில் கரகரவென கன்னங்களில் நீர் வழிந்தது.

எங்கோ பறந்து சென்ற உயிர் மீண்டும் உடலோடு தழுவிய உணர்வு அவனுள் ஏற்பட்டது. கீழே குதித்த அபி ஃபிளையோவரின் பக்கவாட்டு சுவற்றின் அடி பகுதியை பிடித்து தொங்கிக் கொண்டிருந்ததான்.

அபிக்கு எதுவும் ஆகவில்லை என்ற மகிழ்வில் கவி அவனை கை பிடித்து தூக்குவதற்கு மறந்தவனாய் தனது தோழனையே வெறித்து பார்த்திருந்தான்.

கவி தனது செயலில் பயந்திருக்கின்றான் என்பதை உணர்ந்து கொண்ட அபி அவனை பார்த்து கீற்று போன்ற புன்னகையுடன் கண் சிமிட்டி… தொங்கிக் கொண்டிருந்த நிலையில் அசால்ட்டாக எம்பி மேலேறி ஃபிளையோவரின் சாலையில் நின்றிருந்தான்.

அதில் உணர்வு வர பெற்றவனாய் அபியை பளார் என அறைந்திருந்தான் கவி.

கவியின் மனநிலையை புரிந்து கொண்ட அபி அவனை ஆரத் தழுவிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் அபியை உதரித் தள்ளிய கவி.. “ஏன் டா! இப்படி செய்ற, உனக்கு ஒன்னுன்னா நம்ம குடும்பத்தில் இருக்கவங்க நிலையை நினைத்து பார்த்தியா?” என்றான் வருத்தத்துடன்.

அதில் தலை குனிந்த அபி.. “அதான் எனக்கு ஒன்னுமாகலையே” என்க,
“எதாவது ஆகியிருந்தால்” என்றான் கவி காட்டமாக..

“என்னை விட்டு நிம்மதியா (நிரந்தரமாக) சென்றவளுக்காக நான் ஏன் டா, என் உயிரை இழக்கணும்” என்ற அபி, “அவள் இல்லாம என்னால இருக்க முடியலை டா” என மனம் உடைந்தவனாய் சாலையில் மண்டியிட்டு கைகளில் முகம் புதைத்து அழுதான்.

அபிக்கு அவனை விட்டுச்சென்று விட்டாளே என்ற கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் அவள் மீது அவன் கொண்ட காதல் துளி அளவும் குறையவில்லை. கோபத்திற்கும், காதலுக்கும் இடையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றான்.

ஒரு தோழனாய், சகோதரனாய், உரிமை உள்ளவனாய் அபியின் மனதினை புரிந்து கொண்ட கவிக்கு அவனது அழுகை ஆச்சரியமாக தெரியவில்லை. ஆனால் அவனை எப்படி தேற்றுவது எனத் தெரியாமல் தவித்தான்.

திடீரென அவனது நிலை புரியவும் சுற்றி தனது பார்வையை சுழல விட்ட கவி அபிக்கு முன்பாக மண்டியிட்டு,

“முதலில் எழுந்திருடா.. மீடியாக்காரன் எவனாவது பார்த்து ஃபோட்டோ எடுத்துட்டா அடுத்த ஒரு வாரத்திற்கு உன் பெயர்தான் எல்லா நியூஸ் பேப்பர்களிலும் ஹாட் டாப்பிக்” என்றான்.

“சுதந்திரமா வருத்தப்படுவதற்கு கூட எனக்கு உரிமை இல்லையா கவி” என கவலையுடன் கேட்ட அபியை தோள் தொட்டு தூக்கியவன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது விலையுயர்ந்த காரின் கதவினைத் திறந்து முன்னிருக்கையில் அமர வைத்து டிரைவர் சீட்டில் கவி அமர்ந்தான்.

சீட்டில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்த அபியை காணும் போது, இரண்டு வருடங்களுக்கு முன்பு கலகலப்பாக சுற்றித் திரிந்த அபி கண் முன் தோன்றி மறைந்தான். அந்த அபிக்கும் இப்போது இருக்கும் அபினவ்விற்கும் மலையளவு வித்தியாசம் கவிக்கு தெரிந்தது.

‘அவனுடன் சேர்ந்து வருத்தப்படுவதை விட, அவனுக்கு ஆறுதலாய் இருப்பதே சரி’ என எண்ணிய கவி சற்று முன்பு அபி கேட்ட கேள்விக்கு பதில் அளித்தான்.

“சுதந்திரமா என்ன செய்யவும் உனக்கு உரிமை உண்டு… ஆனால் அது இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த சாதாரண அபிக்கு.. இப்போது இருக்கும் இயக்குனர் அபினவ்விற்கு” இல்லை என்றான் அழுத்தமாக.

“நீ என்ன செய்தாலும் மற்றவர்களால் விமர்சிக்கப்படும் பிரபலமான நிலையில் இருக்கின்றாய் என்பதை மனதில் வைத்துக்கொள் அபி” என்றவன் வண்டியை கிளப்பிக் கொண்டு வீடு நோக்கி சென்றான்.

அபினவ்… இளம் இயக்குனர்.. நான்கு வருடங்களுக்கு முன்பு உதவி இயக்குனராக இணைந்து குறுகிய காலத்திலேயே திரையுலகில் தன்னை நிரூபித்துக் காட்டியவன். இரண்டு வருடங்களில் மூன்று திரைப்படங்கள். மூன்றும் பிளாக் பஸ்டர். பல விருதுகளை அள்ளிச் சென்றவை, அதிலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு அவன் இயக்கிய படம் ஒன்றிற்காக ‘சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதினை’ சென்ற வருடம் வாங்கியிருந்தான்.

தனது கனவு லட்சியமான திரைத்துறையில் சாதித்த பின்பும் அவனால் மகிழ முடியவில்லை.. அதற்கு காரணம் அவனது இதயத்தை ரணமாய் மாற்றிச் சென்ற காதல்.

காதல் என்றாலே வலி, ரணம், தவிப்பு, சோகம், அழுகை.. இவை தான் நிரந்தரமோ!

வீட்டிற்கு வந்து சேர்ந்த பின்பும் காரிலே அமர்ந்திருந்த அபியை உள்ளே அழைத்துச் சென்ற கவி காலிங் பெல்லை அழுத்த நடுத்தர வயதுடைய ஒருவர் வந்து கதவைத் திறந்தார்.

அவர் ராமு இருவரது உதவிக்காக அபியின் அப்பாவால் கிராமத்திலிருந்து இங்கு அனுப்பப்பட்டவர்.

“என்ன ராமு அண்ணா தூக்கத்தை கெடுத்து விட்டோமா” என்ற கவியின் கேள்விக்கு பதிறியவராய்

“அதெல்லாம் ஒன்றுமில்லை தம்பி.. நீங்க இன்னும் வரலையேன்னு முழிச்சிட்டு தான் இருந்தேன்” என பதிலளித்தார்.
இருவரும் அறைக்குள் செல்ல திரும்பிய பிறகும் ராமு அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

“என்ன ராமுண்ணா எதாவது சொல்ல வேண்டுமா” என்ற கவியிடம் மறுப்பாக தலையசைத்தவர், அபியிடம் சென்று அன்பாக “பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி” என்றார்.

தன்னுடைய சோகத்தை மறைத்துக் கொண்டவனாக உதட்டில் புன்சிரிப்பை உதிர்த்தவன் “தேங்க்ஸ் ராமு அண்ணா” எனக் கூறிச் சென்றான்.
அபியின் பின்னோடு அறைக்குள் நுழைந்த கவி, இந்நாளின் சோகம் அறிந்தவனாய் ஒன்றும் பேசாது மெத்தையில் படுத்திருந்தவனது கைகளை இறுக பற்றிக்கொண்டு படுத்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை பக்கத்து அறையில் தங்கியிருந்த கவி, என்று நள்ளிரவில் அபி வெறிப்பிடித்தவன் போல் அலறித் துடித்ததைக் கண்டானோ அன்றிலிருந்து அவனது அறையில் அவனுடன் தங்கிக் கொண்டான். இன்று அபி செய்த செயலில் மனதில் பயம் சூழ அவனது கையினை இறுக பற்றிக்கொண்டு உறங்கினான்.
கவி தனது கையை பிடித்துக்கொண்டு படுத்ததில் தன்னையும் அறியாமல் சிரித்த அபி “நீ என் மாமன் மகனாக மட்டுமில்லாமல் எனக்கு ஒரு நண்பனாக கிடைத்ததற்கும் அந்தக் கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என மனதோடு கூறிக் கொண்டான்.

error: Content is protected !!
Scroll to Top