சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 12

சருகு 🍂 12:

இரவு 11 மணியளவில் கிளம்பிய இருவரும் அதிகாலை 5 மணிக்கு தங்களது இல்லம் வந்து சேர்ந்தனர்.

கிராமம் என்பதால் அதிகாலை வேளை மிகுந்த சுறுசுறுப்புடன் காணப்பட்டது.

ஏர்க்கலைப்பையுடன் உழவு மாட்டினை பிடித்துக்கொண்டு உழவர்கள் வயலினை நோக்கி சென்று கொண்டிருக்க, பெண்கள் ஈர கூந்தலை முடியிட்டு மஞ்சள் பூசிய முகத்துடன், சாணம் தெளித்த மண் வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தனர். விடிந்தும் விடியாததுமான அந்த இளங்காலை பொழுது கண்களுக்கு குளிர்ச்சியை அளித்தது.

மலையிலிருந்து வீசும் குளிர் காற்றை கிழித்துக்கொண்டு, தான் ஓட்டி வந்த காரினை தனது வீட்டிற்கு முன்பாக கிறீச்சென்ற சத்தத்துடன் பிரேக் பிடுத்து நிறுத்தினான் அபி.

வாசலில் கோலமிட்டு கொண்டிருந்த கனி…

“கண்ணு தெரியல… ஏன் இன்னும் கொஞ்சம் என் மேல ஏத்தி நிறுத்த வேண்டியது தானே” என கேட்டுக்கொண்டே கைகளிலிருந்த பச்சை நிற வண்ண கோலப்பொடியை விசிறியடிக்க,

அப்போதுதான் காரிலிருந்து கீழிறங்கிய கவியின் முகத்தில் பட்டது. யாரென அவள் கூர்ந்து பார்பதற்குள் எதிர் பக்கம் கதவு திறக்கும் ஓசையில் திரும்பியவள் அதிலிருந்து இறங்கிய அபியை பார்த்ததும் உற்சாகமாக குதித்து கொண்டே..

“அபி அண்ணா” என்று ஓடிச்சென்று அணைத்தாள்.

கனியின் மகிழ்வினை கண்டு தானும் அதே துள்ளலுடன் அவள் நலன் விசாரித்து கை வளைவினிலே தன் தங்கையை வைத்திருந்தவனாய் வீட்டினுள் செல்ல எட்டுக்களை வைத்தான் அபி.

பனியில் நனைந்திட்ட ரோஜா மலரை போல் அதிகாலையிலேயே குளித்து முடித்து வாசலில் கோலமிட்டு கொண்டிருந்த கனியை பத்தடி தூரத்திலே கவியின் காதல் கொண்ட மனம் கண்டுகொண்டது.

அவளை அருகில் காண்பதற்காக மகிழ்ச்சியுடன் இறங்கியவன் கோலமாவினால் தனக்கு அர்ச்சனை நடக்குமென்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

கண்களை கசக்கி கவி விழித்து பார்த்தது அபியை அணைத்திருந்த கனியை தான். அண்ணன் தங்கையே ஆகினும் அபியின் மீது சிறு பொறாமை எட்டி பார்த்தது கவிக்கு,

‘நாங்கலாம் இவ கண்ணுக்கு தெரியவே மாட்டோம் போல’ என முணுமுணுத்தவனாய் வீட்டினுள் நுழைந்தவனின் பின் பக்க தோற்றத்தை கண்ட கனிக்கு அப்போது தான் புரிந்தது, ‘அபி அண்ணா வந்திருந்தால் அவங்களும் வந்திருப்பாங்களே.. அப்போ நான் பொடி தூவியது, அவங்க மேல தானா? போச்சு!’ என உள்ளுக்குள்ளே பயந்தாள்.

தான் எட்டுக்கள் வைத்தும் தன்னுடன் சேர்ந்து நடக்காமல் தேங்கிய தங்கையை என்ன என்பதை போல் அபி பார்வையாலே வினவ, அவளோ தடுமாற்றத்துடன் வாசலில் முழுதாக முடிக்கப்படாத நிலையிலிருக்கும் கோலத்தை காண்பித்து முடித்துவிட்டு வருவதாக கூறினாள். அவனும் சரியென்று உள்ளே நுழைந்தான்.

முதலில் நுழைந்த கவி வீட்டை பார்த்துக்கொண்டே நிலைப்படியில் நின்றிருக்க அவனை தள்ளிக்கொண்டு உள் சென்ற அபி

“என்னடா ட்ரீம்?” என்க,

“பாசமலர் ஸீன் முடிந்ததா?” என்று இவன் கேட்டிருந்தான்.

கவி என்ன கேட்கிறான் என்பது புரியாமல் அவனிருக்க… “அபி” என கரகரப்பாக ஒலித்த குரலில் சத்தம் வந்த திசையை நோக்கினான்.

அங்கு கலா கண்களில் குளம் கட்டியிருக்க தன் மகனை வாஞ்சையுடன் பார்த்திருந்தார்.

நீண்ட காலம் தன் மகனை பிரிந்திருந்த ஏக்கம் அப்பட்டமாக அவரது விழிகளில் தெரிந்தது. ஒரு நொடி குற்றவுணர்வில் தவித்தவன் அடுத்த நொடி ஒன்றுமில்லாதவனாய் மன உணர்வுகளை கட்டுப்படுத்தி தன் அன்னையை நெருங்கினான்.

அபி கலாவிடம் செல்வதற்குள் கவி விரைந்து சென்று “அத்தை” என கட்டிக்கொண்டான். அவரது கண்களில் விழ காத்திருக்கும் நீரினை அறிந்தவன் அவர் மன நிலையை மாற்றும் பொருட்டு,

“/ஐ மிஸ் யூ அத்தை” என்றவாறு தூக்கி சுற்றினான். அவர் தன் மருமகனை கீழே விட சொல்லி கெஞ்சிக்கொண்டிருக்க அவன்,

“முடியாது, வந்ததும் உங்க பையன் தான் கண்ணுக்கு தெரிந்தானா?” என மல்லுகட்டினான்.

அவனது கேள்வியிலும் செயலிலும் சிரித்தவர்… “அபியை விட நீ எனக்கு ஒரு படி மேலே தான்” என்ற பிறகே கீழே இறக்கி விட்டான்.

கவி செய்த அலப்பறையின் சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்த அனைவரும் கூடத்திற்கு வந்திருந்தனர். அனைவரும் இருவரையும் கண்ட மகிழ்வில் பேச்சற்று நெகிழ்ந்திருக்க அங்கு வந்த பெரியவர் தனது இரு பேரன்களையும் அன்புடன் அணைத்து விடுவித்தார்.

அப்போது தான் கவியின் முகத்தை கவனித்தவராய் ராதிகா… “என்னடா இது மூஞ்செல்லாம் கோலமாவு” என்க..

“நம்ம வீட்டிற்கு நான் வந்ததற்கான வரவேற்பு” என்றான்.

தன் அன்னையிடம் பதில் அளித்திருந்தாலும், அவனது பார்வை சற்று நேரத்திற்கு முன்பு லலிதாவின் அருகில் வந்து நின்ற தன்னவளின் மீதே நிலைத்திருந்தது.

அவனது பார்வையின் வெம்மையை தாங்க முடியாதவள்.. இதழ் கடித்து, தலை கவிழ்ந்து கொண்டாள்.

அவள் இதழ் கடித்த அழகில் கவியின் இதயம் தாறுமாறாக தடம் புரண்டது. யாருக்கும் தெரியாமல் பின்னந்தலையை அழுந்த கோதி தன்னை கட்டுப்படுத்தினான்.

“போங்கப்ப… கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க..” என்ற வெங்கடாச்சலத்தின் வார்த்தையில் இருவரும் மேலேறி சென்றனர்.

முதல் தளத்திலிருக்கும் தங்களது அறையை நோக்கி இருவரும் செல்லும் போது…

“கவி அண்ணா,

“அபி அத்தான்” என கேட்ட குரலில் திரும்பிய இருவரும் விஷ்ணுவை பார்த்து அன்புடன் புன்னகைத்தனர்.

விஷ்ணுவும் மகிழ்ந்து அவர்களுடன் சென்றான். மூவரும் அறையில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தனர்.

************

மாடியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற சென்ற கனி அங்கு முற்றிலும் கவியை எதிர்பார்க்கவில்லை.

சட்டென அவனுக்கு முதுகு காட்டி நின்றவள், படபடக்கும் இதயத்தை கட்டுப்படுத்த தெரியாமல்.. தாவணியின் தலைப்பை ஒரு விரலில் சுற்றிக்கொண்டும் மறுநொடி அதனை அவிழ்ப்பதுமாக நின்று கொண்டிருந்த கனியை பின்புறமாக ஒரு ஜோடி கால்கள் நெருங்கின.

மிக அருகில் வீசிய தன்னவனின் வாசம் மூர்ச்சையாக செய்ய, கால்கள் தள்ளாட, படபடக்கும் இதயம் வெளியே குதித்து விடுமோ என்ற பயத்தில் கண்களை இறுக மூடி நின்றிருந்தவளை பின்னாலிருந்து இடையில் கை விட்டு இறுக அணைத்திருந்தான்.

இடையில் அவன் ஸ்பரிசம் தீண்டியதுமே ஒரு இறகை போல் பறப்பதை உணர்ந்தாள். அவன் அணைக்கவும் அவனுக்கு இசைந்து கொடுக்கும் மனத்தினையும், உடலையும் கட்டுப்படுத்த முடியாமல்.. இரண்டு கைகளாலும் பாவாடையை இறுக்கி பிடித்து கால் விரல்களை தரையோடு மடக்கி, நெஞ்சுக்கூடு ஏறி இறங்க ஐஸில் உறைந்திட்ட பனிச்சிற்பமானாள்.

அவளது உருகும் உறை நிலையை கண்டு கொண்டவன், அவளது குழலை முன் பக்கமாக ஒதுக்கி பின்னங்கழுத்தில் தன் முரட்டு இதழை பொருத்தும் வேளையில் எங்கோ கேட்ட “அய்யோ… அய்யய்யோ…” என்ற சத்தத்தில் அடித்து பிடித்து கண்களை திறந்தவன் மயங்கினான்.

அறைக்குள் வந்த மூவரும் (அபி, கவி, விஷ்ணு)அமர்ந்து கதை பேச.. பயண களைப்பினால் கவி உறங்கி விட்டான். உறக்கத்தில் தன்னவளின் நினைவில் மூழ்கியவன், தனக்கு அருகில் படுத்து அபி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்த விஷ்ணுவின் பின்னங்கழுத்தை கையினால் பிடித்திருந்தான். பயத்தில் விஷ்ணு அலற, கனவு கலைந்து எழுந்த கவி தனக்கு முன்பு முனி அவதாரம் எடுத்து நின்ற அபியை சமாளிக்கும் வழி தெரியாமல் மயங்கியதை போல் நடித்தான்.

“அடச்சீ… எழுந்திரு… இவ்ளோ கேவலமா நடிக்காதடா” என்ற அபியின் குரலில்,

‘கண்டுபிடிச்சிட்டானே!’ என்றவாறு மெல்ல எழுந்தமர்ந்த கவியை பார்த்து விஷ்ணு வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான்.

அப்போது மூவருக்கும் கனி தேநீர் கொண்டு வர, அறையில் கேட்ட சிரிப்பு சத்தத்தில் வெளியவே நின்றுவிட்டாள்.

அபி கவியை முறைத்திருக்க, அவனோ தலையை சொறிந்தவனாக… “கனவுல, உன் த…த…. த்… தங்க… கனி.. அதான் நிஜம் நினைச்சு, அவளுக்கு கொடுக்கறன்னு… விஷ்ணு.. கழுத்து..” என திக்கி திணறினான்.

எல்லாம் காதல் படுத்தும் பாடு… அவனும் சராசரி ஆண் தானே…

கவியின் பதிலில்… அவன் கனவில் கனியுடன் குடும்பமே நடத்துகிறான் போலிருக்கே.. இன்னைக்கே தாத்தா கிட்ட அவன் திருமணத்தை பற்றி பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும் என தீர்மானித்தான் அபி.

ஆனால் கனி, கவி திருமணம் அப்படியொரு நிலையில் நடக்குமென கவியே எதிர்பார்த்திருக்கமாட்டான் என்பதை அபி உணரும் காலமும் வெகு தூரமில்லை.

வெளியில் நின்று அனைத்தையும் கேட்ட கனி எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

தான் அவனிடம் தன் காதலை சொல்லாத நிலையிலும் தன்னையே நினைத்துக்கொண்டிருக்கும் அவனது காதலை எண்ணி மகிழ்ந்தவள், ரங்கநாதனை நினைத்து பயந்தாள். பயந்தாள் என்பதை விட மிகவும் வருந்தினாள்.

அவள் நிலை அவள் அறியாததா?அவள் கவியை காதலிப்பது, திருமணம் செய்து கொள்ள விரும்புவது… ‘வரம் கொடுத்த இறைவனின் தலையிலே கை வைப்பதல்லவா..’

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணியதாக அல்லவா தூற்றுவர்.

ஏதோதோ சிந்தனைகளில் பயணித்தவள்.. கிடைக்காத ஒன்றை விட… தனக்கு எட்டாத ஒன்றின் மேல் ஆசை வைப்பது முட்டாள் தனம் என எண்ணியவளாக ஒன்றும் கேட்காததை போல் உள்ளே சென்றாள்.

கனி அறைக்குள் வந்ததும் கவியின் பார்வை அவளையே வட்டமிட்டது. அபி மற்றும் விஷ்ணுவிற்கு தேநீர் அளித்துவிட்டு கவியிடம் வந்தவள்.. தனது முகத்தை அழுத்தமாகவும், பார்வையை விறைப்பாகவும் வைத்துக்கொண்டாள்.

“வரு எங்கடா!” என அபி கேட்கவும், அவன் பக்கம் திரும்பியவள்..

“கொல்லை பக்கம் இருக்கா அண்ணா.. கருப்பன் பசியாறிய அப்புறம் தான் உள்ள வருவா” என்றவள் வெளியேறிவிட்டாள்.

செல்லும் அவளையே பார்த்திருந்த கவியின் மனதில் ஆயிரம் எண்ண ஓட்டங்கள் ஊர்வலம் சென்றன.

‘இவ, எப்போ வந்தாள்.. நான் கிஸ் பண்ண அப்போவா… விஷ்ணு அலறிய அப்புறமா இல்லை.. நான் எல்லாத்தையும் சொல்லும் போதேவா.. எதுவரை கேட்டாள்னு தெரியலையே.. அவ பார்வையே சரியில்லையே.. சும்மாவே நம்ம கிட்ட ரொம்ப நல்லா பேசுவா.. இதுல இதுவேறையா… இங்கிருந்து ஊர் போய் சேர வரை கொஞ்சம் அடக்கி வாசிக்கணும்.’

“திரும்பவும் கனவா… நான் பேசாமல் கனி அக்காவை இங்கவே கூப்பிடவா?”

செவியருகில் கேட்ட விஷ்ணுவின் நக்கலில்.. அசடு டன் கணக்கில் வழிந்தது கவியின் முகத்தில்.

இருவரையும் பார்த்து சிரித்தவனாக அபி கீழிறங்கினான். படிகளில் இவன் அலைபேசியை நோண்டிக்கொண்டே இறங்கினான்… ஏதோ நினைவில் மேலேறி வந்த வருணா சற்றும் அவனை எதிர்பாராமல் அவன் மீது மோதி கீழே விழ இருந்த தருணத்தில் தனது வலிய கரத்தினால், அவளது கை பிடித்து இழுத்தான்.

இழுத்த வேகத்தில் அவன் நெஞ்சோடு மோதி நின்றவள் முகம் கதிரென ஒளிவீசியது. அவள் இதழ் பூவென சிரிக்க, அடுத்த நொடி அவனது “ஆர் யூ ஓகே பேபி” என்ற குரலில் நினைவுலகம் வந்தவளாய் சோகத்தை வெளிப்படுத்தியது அவள் முகம்.

அவளது மகிழ்வினையும், சோகத்தையும் கவனிக்க தவறியவன்… “என்ன கல்யாண பொண்ணே… நடந்து வரும் போதே கனவா?” என கேட்க.. அவளது காதல் மனம் வேதனை கொண்டது.

வருணா அபியையே ஆழ்ந்து பார்த்திருக்க, அவளது முகத்திற்கே நேரே சொடக்கிட்டவன் அவள் தன் உணர்வு அடைந்ததும்..

“கனவு கண்டுட்டே போய் சுவற்றில் முட்டிக்காம, ஒழுங்கா ரூம் போய் சேரு” என்றவனாய் படி இறங்கினான்.

செல்லும் அவனையே இமை மூடாது பார்த்திருந்தவளின் விழிகளில் கோடென கண்ணீர் வழிந்தது. தன் தோளில் கரம் படிவதை உணர்ந்து அவசரமாக கண்களை அழுந்த துடைத்து திரும்பியவள் தன் அண்ணனை கண்டதும் அவன் தோளில் முகம் புதைத்து குலுங்கி அழுதாள்.

தங்கையின் அழுகையை செயலற்று வேடிக்கை பார்த்தவன்..

“நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா” என அவள் முகத்தை நிமிர்த்தினான்.

கவியின் முகத்தை எரிட முடியாதவளாக, “நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். கிடைக்காது தெரிந்தும், எனக்கே தெரியாம ஆசை வைத்தது என்னுடைய தப்பு” என்றவள் ஓடிவிட்டாள்.

தான் சொல்ல வருவதை கூட கேட்காமல் பிடிவாதம் பிடித்தால் என்னால் என்ன செய்ய முடியும்.. முதலில் இந்த கல்யாணத்தை நிறுத்த வழி இருக்கா பார்க்கணும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு காலை உணவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து கலகலப்பாக பேசிக்கொண்டே சாப்பிட்டனர் ஒருவரை தவிர, வருணா அபிக்கு நேரெதிராக அமர்ந்திருக்க அவளால் உணவினை விழுங்க முடியவில்லை.. தொண்டைக்குள் சிக்கிய மீன் முள்ளாய் சிக்கி தவித்து.. அபியை பார்க்க துடிக்கும் கண்களை கடினப்பட்டு தட்டில் பதிய வைப்பது பெரும்பாடாக இருந்தது. சரிவர உணவு உட்கொள்ளாது பாதியிலே எழுந்து விட்டாள். அவளின் நிலை புரிந்த வெங்கட், கவி, கனியால் வருந்த மட்டுமே முடிந்தது.

வெங்கட் தனது மருமகனிடம் கண் ஜாடை செய்து விட்டு செல்ல அதனை சரியாக புரிந்து கொண்ட கவி சரியென்பதை போல் கண் சிமிட்டினான்.

அனைவரும் சாப்பிட்டதும் தாம்தம் வேலைகளை கவனிக்க சென்றனர்.

வழக்கம்போல் பெரியவர் வயல்வெளிகளை பார்வையிட செல்ல அங்கு இவருக்கு முன்பாக சாமிகண்ணு வந்து காத்திருந்தான் தனது சகாக்களுடன்.

பண்ணைக்கு நடுவில் உள்ள ஓட்டு வீட்டிற்கு அருகே உள்ள மரத்தடி நிழலில் வந்திருந்தவர்கள் , அங்கு போடப்பட்டிருக்கும் கயிற்று கட்டில் மற்றும் மர நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். அவர்களை கண்டும் காணாதது போல் வீட்டின் திண்ணையில் அமர்ந்தவர்.. பண்ணையில் வேலை செய்யும் மாணிக்கத்தை அழைத்து வந்திருப்போருக்கு இளநீர் வெட்டி தருமாறு கூறினார்.

“எங்களை பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்துட்டு இளநீர் தந்து உபசரிக்க சொல்கிறீரா… உங்கள் மரியாதை ரொம்ப நல்லாஇருக்கு கோபாலன்” என்ற சாமிக்கணுவை அங்கு இளநீருடன் வந்த மாணிக்கம்..

“யாரை பேர் சொல்லி கூப்பிடுறீங்க.. நீங்க முதலில் வயதில் மூத்தவருக்கு மரியாதை கொடுத்து பேசுங்கள.. இல்லை இளநீர் சீவுர கொடுவாளாலே உங்கள் தலையை சீவிடுவேன்” என மிரட்டினான்.

அவனது கையிலிருந்த கொடுவால் போன்ற அருவாளை கண்டே பயந்த சாமிகண்ணு அதை வெளிக்காட்டிக்காமல் திமிராக இருப்பதைப்போல் காட்டிக்கொண்டு சமாளித்தான்.

கோபாலன் வந்த விசயத்தை கூறுங்கள் என்பதை போன்று கேட்க.. சாமிகண்ணு தான் வந்ததன் நோக்கத்தில் பேச ஆரம்பித்தான்.

“இங்கப்பாருங்க… நம்ம ஊரு நீர்வளம் நிறைந்தது.. இங்கு சாய தொழிற்சாலை உருவானால் நமக்கும் நம் ஊர் மக்களுக்கும் ரொம்ப நல்லது.”

“உனக்கு வேண்டுமானால் நல்லதா இருக்கும் எங்களுக்கோ, ஊர் மக்களுக்கோ இல்லை.”

சாமிகண்ணுவின் பேச்சு தடைப்படுவதை போல் ஒலித்த குரலில் அனைவரும் திரும்பி பார்க்க அங்கு கம்பீர நடையில் அபி நடந்து வந்து கொண்டிருந்தான். நேராக தனது தாத்தாவுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

அபியின் வருகையிலும் பேச்சிலும் உள்ளுக்குள் கொதித்த சாமிகண்ணு வெளியில் காட்டினால் நமக்கு தான் நஷ்டம் என்று யூகித்தவனாக,

“வாங்க தம்பி எப்போ வந்தீங்க? நீங்க ஊர் பக்கமே வரதில்லைன்னு பேசிக்கிட்டாங்க..” அவனது பேச்சில் வெளியில் மகிழ்ச்சி காணப்பட்டாலும் உள்ளே எரிச்சல் மண்டியிருந்தது.

அவன் கேட்டதற்கு அபி பதிலளிக்காமல் இருக்க.. பற்களை கடித்து தான் பேச வந்ததை தொடர்ந்தார்.

“அந்த தொழிற்சாலை மட்டும் இங்கு வந்துட்டா நம்ம ஊர் மக்களுக்கு ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் வேலை கிடைக்கும்… வருமானத்திற்கும் பஞ்சம் இருக்காது.” முகமெல்லாம் மகிழ்ச்சியாக அவன் கூற..

“இப்போ அதுக்கு நான் என்ன பண்ணணும்?” வந்த காரணத்தை மட்டும் சொல்லுமாறு பெரியவர் நேரடியாகக் கேட்டிருந்தார்.

“நீங்க சொன்னா, ஊர் பயலுவலாம் சம்மதிப்பானுவ… ஒரு ஏக்கருக்கு எவ்வளவு கேக்றாங்களோ அவ்வளவு பணமும் ரொக்கமா வாங்கி கொடுத்துடுறேன். நிலைத்தையெல்லாம் எம் பேருக்கு மாத்தி எழுதி கொடுத்துபுட்டா சந்தோஷமா இருக்கும். நிலத்தை எழுதி கொடுக்குற அத்தனை பயலுவளுக்கும் பேக்டரில வேலை வாங்கி கொடுத்துடுறேன்.”

“அது…”

பெரியவர் ஏதோ கூற முனைகையில் அவரை கை நீட்டி தடுத்த அபி…

” சரி இதுக்கு நான் சம்மதிக்கிறேன். வேண்டும் என்றால் எங்க வயலையும் சேர்த்து தரேன்” என்றான்.

அபியின் பதிலில் கோபாலன் அதிர்ச்சியடைய, சாமிகண்ணு உற்சாகமானான்.

“அபி என்னப்பா!?” என்று அதிர்ந்த தனது தாத்தாவை பார்வையாலே சமாதானப்படுத்தியவன் அடுத்து கூறியதில் சாமிகண்ணுவின் முகம் செத்துவிட்டது.

“ஆனால் ஒன்று…” என ஆரம்பித்த அபியின் பேச்சினை அனைவரும் கூர்ந்து கவனித்தனர்.

“நீ இன்றிலிருந்து இயற்கை உணவுவகைகளை முக்கியமாக விவசாய நிலத்தில் பயிராகின்ற உணவு பொருட்களை உட்கொள்ள மாட்டேன் அப்படின்னு எனக்கு எழுதி கொடுத்துடு” என்றான்.

அதில் கோபாலனின் முகம் பிரகாசமாக.. சாமிகண்ணு..

“என்ன பேசுற நீ.. சாப்பிடாம எப்படி இருக்க முடியும்?” என குரலுயர்த்தினான்..

“அதான் பேக்டரி கட்டப்போறீரே. அதுல வர கலர் தண்ணீரை குடிச்சிபுட்டு வாழுல… விவசாய நிலைத்தையெல்லாம் அழிச்சிட்டு சோத்துக்கு தாளம் போட போறீரோ. இன்னும் கொஞ்ச இடத்திலாவது விவசாயம் செழிப்போடு இருக்கிறதால தான் சாப்பாட்டுக்கு பஞ்சமில்லாமல் இருக்கு.. அதுக்கும் ஆப்பு வைக்க நினைக்காதீங்க… வரப்புல தண்ணீ பாய்ந்து.. நெற்கதிர்கள் சாய்ந்து ஆடினால் தான் நீயும், நானும் உயிரோடு இருக்க முடியும்.. உனக்கு காசு தரேன் சொன்னவனை வேற எங்கேயாவது பொட்டல் நிலமா பார்த்து அவன் பேக்டரிய கட்ட சொல்லு.. இந்த ஊருல இருந்து ஒரு அடி நிலம் கூட அதுக்கு கிடைக்காது” என பேசி முடித்தவன், “நீங்க போகலாம்” என செல்வதற்கான வழியை தனது கை நீட்டி காண்பித்தான்.

போகும் போது சாமிகண்ணு…

“இம்புட்டு பேசுறவன்.. எதுக்காக விவசாயம் செய்யாம பட்டணுத்துல போயி படம் புடிக்கிற வேலையை செய்ரீறு” என்றுவிட்டு சென்றான்.

அதில் ஒரு நொடி குற்றவுணர்வு எழுந்தாலும் அதை புறம் தள்ளினான் அபி.

தனது பேரன் தனக்கு விவசாயம் ஒத்து வராது என்று வேறு தொழிலை கையில் எடுத்தாலும் இதன் அருமை அவனுக்கு தெரிந்திருக்கிறதே என அந்த பெரியவர் உள்ளம் நிறைந்து போனார்.

மதிய வேளை கடந்தும் இருவரும் வீட்டிற்கு வரவில்லையென ராதிகா வருணாவின் கையில் அவர்களுக்கு உணவு கொடுத்து அனுப்பியிருந்தார்.

அங்கு வந்தவள் அபியின் பேச்சில் மெய்மறந்தாள்… தன்னை போலவே தன் அத்தானும் விவசாயத்தை நேசிக்கிறார் என்பதில் மகிழ்ச்சி அடைந்தாள். அவர் விவசாயத்தை பற்றி படம் எடுத்து விருது வாங்கியதிலே அது உனக்கு தெரியவில்லையா என கேட்ட மனசாட்சியை எல்லாம் எங்களுக்கு தெரியும் என கூறி அடக்கினாள்.

சாமிகண்ணு சென்றதும் தனது தாத்தாவிடம் நெருங்கிய அபி.. 

“இவன் சும்மா இருக்க மாட்டான் தாத்தா.. அப்பா கிட்ட சொல்லி ஊர் மக்கள்கிட்ட எல்லாம் இங்கு பேக்டரி வருவதில் எங்களுக்கு விருப்பமில்லைன்னு கையெழுத்து வாங்கி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஸ்டே ஆர்டர் வாங்கிட சொல்லுங்க” என்றான்.

பேரனின் புத்திசாலியான பேச்சில் பெருமை கொண்டார் பெரியவர்.

இருவரும் வருணா வந்திருப்பதை அப்போது தான் கவனித்தவர்களாக என்ன என வினவினர்.

சாப்பாடு என தான் கொண்டு வந்திருந்த உணவு பாத்திரங்களை வீட்டிற்குள்ளே சென்று பிரித்து வைத்தாள். இருவரும் வாய்க்கால் நீரில் கை, காலினை சுத்தம் செய்து கொண்டு வந்து அமர்ந்ததும், தோட்டத்தில் அறுத்த தலை வாழை இலையிட்டு இருவருக்கும் உணவு பரிமாறினாள்.

இரண்டு வாய் ரசித்து உண்ட அபி… அடுத்த வாய் சோற்றினை கையில் எடுத்து வருணாவின் வாயருகே நீட்டினான்.

அவள் திருத்திருவென விழிக்க,

“காலையிலே நீ சரியா சாப்பிடல… இப்பவும் எங்களுக்கு மட்டும் தான் இலை அறுத்து வந்திருக்க, நீ சாப்பிட வேற இலையில்லை. அதான் சாப்பிடு” என்றவனை கண்களில் ஆனந்தமாக நீர் குளம் கட்ட அவன் கையிலிருந்த உணவினை வாங்கிக்கொண்டாள்.

பெரியவரும் அவர்களுக்கிடையேயான அன்பு தெரியுமாதலால் அதனை ஒன்றும் தவறாக எண்ணவில்லை. அவரும் அவளுக்கு உணவு எடுத்து ஊட்டினார். இவ்வாறு இருவரும் வருணாவிற்கு உணவு ஊட்டி விட்டு தானும் உண்டு முடித்தனர்.

வருணா பாத்திரங்களை மோட்டார் தொட்டியில் கழுவி எடுத்து வீட்டிற்கு செல்ல தயாராக… நானும் வருகிறேன் என அபி கூறினான்.

தனக்கு வேலையாட்களுக்கு கூலி பணம் கொடுக்கும் வேலையிருப்பதால் நான் வர தாமதமாகுமென கோபாலன் அங்கே இருந்துவிட்டார்.

காலையில் தான் எடுத்து வந்திருந்த புல்லட்டில் வருணாவை ஏற்றிக்கொண்டு அபி வீட்டை நோக்கி கிளம்பினான்.

அந்த சிறு தூர பயணத்தை வருணா அணு அணுவாக ரசித்தாள். அபியை இங்கு வயலில் கண்டதுமே அவளுக்கு நடக்கவிருக்கும் திருமணம் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. காலையில் தான் சரியாக சாப்பிடாததை கவனித்திருக்கிறார் என்றால் அவர் மனதிலும் தாம் இருக்கிறோம் என சிந்தித்தவளது நினைவில் இப்போது இருப்பதெல்லாம் அவளின் சசி அத்தான் மட்டுமே. அவன் தன் மீது வைத்திருக்கும் அக்கறை பாசத்தின் வெளிப்பாடு என்பதை அவளது காதல் கொண்ட மனத்திடம் யார் சொல்வது..

ஏதோ ஒரு உந்துதலில் அவளது வாய் அவளையும் அறியாது “சசி அத்தான்” என முணுமுணுத்தது.

அடுத்த நொடி வண்டியினை சட்டென பிரேக் பிடித்து நிறுத்தினான். வேகமாக சென்று கொண்டிருந்த புல்லட் திடீரென நின்றதில் பிடிமானம் இல்லாமல் அமர்ந்திருந்தவள் அபியின் தோளினை இறுகப்பற்றி அவன் முதுகோடு ஒட்டிக்கொண்டாள்.

எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் வண்டியினை செலுத்திக் கொண்டிருந்தவனின் செவி அருகே கேட்ட சசி என்ற சத்தத்தில்… ரத்த அழுத்தம் எகிற.. ஏதேதோ நினைவுகள் அவனை சூழ்ந்து கொள்ள என்ன என்று தெரியாமல் வண்டியினை நிறுத்தியிருந்தான்.

மெல்ல அவளை திரும்பி பார்த்தவனின் கண்களில் தெரிந்த வலியில் வருணா துடிதுடித்து போனாள்.

அவனது வலிக்கான காரணம் தெரியவில்லையென்றாலும் அதனை தனது வலியாக நினைத்தாள். இருவரது விழிகளும் நேர்கோடாக சந்திக்க அவனையே பார்த்திருந்தவளின் செவிகளில் விழுந்த அவனது வார்த்தையில் பெண்ணவள் மரித்துப் போனாள்.

துளிர்விடும் 🌱.

error: Content is protected !!
Scroll to Top