அத்தியாயம் 13.1
தனது செவியருகே கேட்ட “சசி அத்தான்” என்ற அழைப்பில்… சசி என்பது அவன் வாழ்வின் ரணத்தை நினைவூட்டியது. மழை நீரில் நனைந்த மலர்குவியளின் முகம் கண் முன்னே தோன்ற வண்டியை சட்டென நிறுத்தியிருந்தான்.
தனக்கு பின்புறம் முதுகை ஒட்டி அமர்ந்திருந்தவளை திரும்பி அவளது விழிகளை நேருக்கு நேராக தாங்கினான். அபியின் விழிகளில் தெரிந்த வலியில், அதை காண சகிக்காமல் நிலம் நோக்கினாள்.
“இனி என்னை இப்போது அழைத்த மாதிரி எப்போதும் அழைக்காதே. எனக்கு அது சுத்தமா பிடிக்காது.”
நினைவுகளின் தாக்கத்தில் மற்றொரு குரலின் சசி என்ற அழைப்பு தென்றலாய் வருடியது. அதன் தாக்கத்தில் “நான் நேசிக்கும் பெண் மட்டுமே என்னை அவ்வாறு அழைக்க வேண்டும்” என பட்டென கூறினான்.
அவன் சொல்லியதோ அவளின் சசி என்ற அழைப்பை மனதில் கொண்டு, அவள் புரிந்து கொண்டதோ தனது அத்தான் என்ற அழைப்பை தான் கூறுகிறான் என்று.
இப்போவா.. அப்போவா… என விழ துடிக்கும் கண்ணீரை முயன்று கண்களுக்குள்ளே புதைத்தவள் சரியென தலையசைத்தாள்.
அடுத்து அவன் வண்டியை கிளப்பியதும்… கடந்த நிமிடமிருந்த சுகம் இப்போது இல்லை. முள் மேல் அமர்ந்திருப்பதை போல் உணர்ந்தாள். சாதாரண அழைப்பிற்கு கூட தன்னை தள்ளி வைப்பவன் எவ்வாறு தன்னை மணந்து கொள்வான். நிஜத்தை மறந்து கனவில் கட்டுண்டு பயணித்த தன் மனதை எண்ணி அவளால் அழ கூட முடியவில்லை.
அவனுடனான பயணம் நீளாதோ என்ற ஏக்கம் தொலைந்து முடிவடையாதோ என்ற எண்ணம் தோன்றிற்று. வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தியதும் இறங்கி தன் முகத்தை கூட பார்க்காமல் தலை கவிழ்ந்து செல்பவளை “பேபி” என அழைத்தான்.
அவனது பேபி என்றழைப்பில் காயம் பட்ட மனம் கொஞ்சம் இதத்தை அனுபவித்தது.
தனது நடையை நிறுத்தியவளை நெருங்கியவன்…
“நீயும் எல்லார் மாதிரி அபின்னே கூப்பிடு” என சொல்லிவிட்டு அவள் பதிலுக்கும் காத்திருக்காமல் வருணாவை கடந்து உள்ளே சென்றுவிட்டான்.
எல்லோரையும் போன்று என்பதில் அவள் மனம் மிகவும் அடிப்பட்டு போனது. உங்களுக்கு எல்லோரும் நானும் ஒன்றா அத்தான் என மனதோடு கேள்விகேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தவள் கூடத்தில் அமர்ந்திருந்த வைதேகி மற்றும் வேலுவை பார்த்து ஒரு நொடி தயங்கி உள்ளே செல்ல எத்தணித்தாள்.
அவர்களுடன் அமர்ந்திருந்த சீனு, “அம்மாடி இங்கு வாம்மா” என்றழைக்க, அவள் அசையாது… தந்தையின் குரல் கேட்டு நின்ற இடத்திலே நின்றிருந்தாள்.
தாங்கள் வந்திருப்பதை அறிந்தும் கண்டு கொள்ளாதது போல் சென்றவள், தனது அண்ணன் அழைத்தும் இங்கே வராது அங்கேயே நிற்பதை கண்டு வைதேகிக்கு உள்ளே கனல் மூண்டது.
‘திமிர் உடம்பு முழுக்க திமிர் இன்னும் நாலே நாள் உன் திமிரை ஒட்ட நறுக்கி காட்டுறேன்டி.’ மனதில் சூலுறைத்தார் வைதேகி.
ஆனால் இது எதையும் கண்டு கொள்ளாத வேலுவின் பார்வை வருணாவின் உடல் முழுக்க மேய்ந்தது.
வருணாவை இறக்கிவிட்டு வெளியே வந்த அபி உள்ளே அவர்களுடன் சென்று நல விசாரிப்புகளுடன் அமர்ந்தான்.
வருணா அங்கவே நிற்பதை உணர்ந்த அபி அவளிடம் எழுந்து சென்று…
“வா பேபி.. உன் திருமண பத்திரிகை பிரின்ட் ஆகி வந்திருக்கு. பாரு பேபி” என்றான் மகிழ்வுடன்.
அவனது முகத்தில் தெரியும் மகிழ்வு அவளது மனதிற்கு வேதனையையே அளித்தது. இதற்கு மேலும் இங்கு நின்றுகொண்டிருக்க முடியாது என்பதால்,
“எனக்கு தலை வலிக்குது அ…அத்…. மா…”
முதலில் அத்தான் என சொல்ல வந்து தடுமாறியவள் மாமா என்று அழைக்க முடியாததாலும்… இதுவரை சசி அத்தான் என்றே அழைத்து பழகியிருந்ததாலும் திடீரென எல்லோரையும் போன்று அபி என்று அழைக்க மனமில்லாமல் அதோடு நிறுத்திக்கொண்டாள்.
வருணா தலைவலி என்றதும், “ஒய் பேபி என்னாச்சு.. வரும்பொழுது நல்லாதானே இருந்த.. திடீரென எப்படி தலைவலி வந்தது, பீவர் இருக்கா?” என கேட்டுக்கொண்டே அவளது நெற்றியில் கை வைத்து பார்த்தான்.
அவனது அக்கறையில் மனம் நொந்தவள், “ஜூரம் எல்லாம் இல்லை… தலைவலி மட்டும் தான், படுத்து எழுந்தா சரியாகிடும்” எனக்கூறி அடுத்த கணம் அங்கிருக்க விருப்பமில்லாமல் தனது அறையை நோக்கி நகர்ந்தாள்.
வைதேகியிடம், “வருணாவுக்கு உடம்பு முடியல சித்தி. அவள் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். பிறகு வந்து இன்விடேஷன் பார்ப்பாள்” என்றவன் நேராக சமையலறை பக்கம் சென்றான் அபி.
அபி வருணாவை அன்புடன் பேபி என்று அழைத்ததும், கனிவுடன் அவள் உடல் நலன் தெரிந்துக்கொள்ள தொட்டு பார்த்ததும் வேலுவிற்கு ஆத்திரமாக வந்தது. தன்னை நிமிர்ந்து கூட பார்க்காதவள் அவனை தொட அனுமதிப்பதை நினைத்தவனின் மனம் வருணாவை கொன்றுவிட வேண்டும் என வன்மத்தில் துடித்தது.
சமையலறைக்குள் அபி நுழைந்ததும், அங்கு மாலை சிற்றுண்டி தயாரித்துக்கொண்டே கதை அளந்து கொண்டிருக்கும் தனது அத்தைகள் மற்றும் அம்மாவிடம், “என்ன சதி திட்டம் பலமா இருக்கும் போலையே” என வம்பிழுத்தான்.
“ஆமா… ஆமா… பெரிய சதி திட்டம் தான்.. உன்னை இங்கனவே எப்படி புடிச்சு வைக்கிறதன்னு தான்.”
தனது பெரிய அத்தை கூறியதில்..
“ரொம்ப பெரிய சதி திட்டமாவல்ல இருக்கு..” என்ற அபி தனது அத்தையை அணைத்து, “இனி அடிக்கடி வந்து போறேன் ராது” என்றான்.
“அடிக்கடி வந்து போவதற்கு இது என்ன சுற்றுலா தளமா.. உன் வீடு தம்பி.. ஏதுக்குய்யா, இப்படி எங்களலாம் விட்டு அங்கன தனியா இருக்க?” என லலிதா கேட்டதில்..
‘ஒரு நான்கு ஐந்து நாட்கள் வேண்டுமானால் என்னால் உங்கள் முன் சந்தோஷமா இருப்பதை போல நடிக்க முடியும்.. இங்கே நான் வந்துட்டா என் ஆயுள் முழுவதும் நடிக்க வேண்டியிருக்குமே அத்தை..’ மனதோடு நினைத்தவன் வெளியே எதையும் கூறாமல் அமைதியானான்.
“இப்படி எதாவது கேட்டால் உடனே அமைதியாகிடு… சரி அடுப்பங்கரைக்கு எதுக்கு வந்த, சாப்பிட ஏதும் வேண்டுமா.. பஜ்ஜி போட்டு தரட்டுமா..” கலாவதி மகனிடம் வருத்தத்தில் ஆரம்பித்து, அக்கறையில் முடித்தார்.
“அதெல்லாம் எதுவும் வேண்டாம்மா… வரு பேபி தலை வலிக்குது சொன்னா.. சோ ஒரு கப் காபி கிடைக்குமா?”
“ஏன் அதை அந்த கழுதை வந்து போட்டு குடிக்க முடியாதா.. அந்த மகாராணிக்கு காபி போட ஒரு ஆளு, எடுத்துட்டு போய் கொடுக்க ஒரு ஆளு சேவகம் பண்ணணுமோ?”
அபி வருவிற்காக தேநீர் கேட்க, லலிதா மகளிடம் கோபம் கொண்டார். எந்த நொடி வேலுவை திருமணம் செய்துகொள்ள வருணா சம்மதம் தெரிவித்தாளோ அப்போதிலிருந்து மகள் மீது கோபத்தில் உள்ளார்.
அதற்குள் காபி கலந்து, “விடு லல்லு… எல்லாம் இன்னும் ஒரு நாலு நாளுக்கு தான்..” என்ற அபியின் கையில் கலா கொடுத்தார். அவனும் வாங்கிக்கொண்டு மாடி நோக்கி சென்றான்.
காலையில் உணவு உட்கொள்ளும் போது தன்னை வந்து பார்க்குமாறு ஜாடை செய்த தனது மாமாவினை மதிய உணவிற்கு பிறகு அவரது ஓய்வு நேரத்தை தெரிந்து கொண்டு மில்லுக்கு சென்றிருந்தான் கவி.
தங்களது கிராமத்தை தாண்டி இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிறு டவுனில் அவர்களுக்கு பெரிய அரிசி ஆலை உள்ளது. அங்கு அரிசி ஏற்றுமதி வேலை நடந்து கொண்டிருக்க அதனை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார் வெங்கடாச்சலம்.
ஆலையின் நீராவி குழாயில் புகை அதிவேகமாக வெளியேறியது. ஆலைக்கு வந்த பல்வேறு வகையான நெல் மிகப்பெரிய அளவிலான உருண்டை வடிவ ட்ரம்களில் வேக வைக்கப்பட்டிருந்தன.
ஆலை முழுக்க நெல் அவியல் மணம் பரப்பியது. பரந்த சமதள சிமெண்ட் தரை பரப்பில் ஏற்கனவே அவியல் செய்யப்பட்ட நெல் அதிகளவில் உலர்த்தப்பட்டிருந்தது. நெல்களை காலினால் சில பெண்கள் உலர்த்தி கொண்டிருக்க சிலர் கைகளினால் பரப்பிவிட்டிருந்தனர். ஒரு பகுதி முழுவதும் குவியல் குவியலாக நெல் குமிக்கப்பட்டிருந்தன. ஆண்கள் உலர்த்தப்பட்டிருந்த நெல்களை அரவை இயந்திரத்தில் செலுத்தி அரிசி ஆக்கிக்கொண்டிருந்தனர். அரிசி ஆக்கப்பட்டவை தரம் பிரிக்கப்பட்டு மூட்டைகளில் நிரப்பி ஏற்றுமதிக்கு தயாராகின.
நெல் விளைவித்து அறுவடை செய்தபிறகும் அரிசியாய் நம் கைகளுக்கு வந்து சேருவதற்கு நடுவில் எத்தனை செயல்முறைகள் மற்றும் பல பேருடைய உழைப்பு உள்ளது என அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கவிக்கு புரிந்தது.
விவசாயிகளை நினைக்கும் போது பெருமையாக இருந்தது. எவ்வளவு வசதி இருந்தாலும் தன் வீட்டார் விவசாயத்தை தொடர்ந்து செய்து வருவது கவிக்கு கர்வமாக இருந்தது.
‘நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மட்டும் அரசாங்கம் ஏற்று நடத்தினால் எவனும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார மாட்டான்’ என சிந்தித்தவன், மாடர்ன் உடையில் ஏர் கலப்பை பிடித்து சேற்றில் உழுவதை போல் கற்பனை செய்து பார்த்தான்.
வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய அரிசிமூட்டைகளை சரிபார்த்து லாரிகளில் ஏற்றி கணக்கை முடித்த வெங்கடாச்சலம் தனக்காக காத்திருக்கும் தன் மருமகனிடம் வந்தார்.
“சாப்பிட்டு தானே வந்த…”
முதுகுக்கு பின்னால் கேட்ட தனது மாமாவின் கேள்விக்கு.. ஆம் என தலையசைத்துக்கொண்டே தனது சிந்தனையிலிருந்து வெளியேறினான்.
“என்ன மாமா… வேலை நிறைய இருக்கும் போல் தெரிகிறது.”
“நாகரிகத்தின் மோகத்தில் கோட்டு சூட்டுக்குள் ஒளிந்துகொண்டு, சிறு டப்பாவின் முன்பு முகத்தை புதைத்துக்கொள்ளும் உங்களை மாதிரியான இளைஞர்களுக்கு எப்படிப்பா தெரியும் விவசாயிகளின் உழைப்பும், வேலை பளுவும்…” ஆதங்கத்துடன் அவரது வார்த்தைகள் வெளிவந்தது.
“நம் நாட்டோட முதுகெலும்பையே உடைச்சிட்டு… நான் வல்லரசு ஆக்கப்போறேன் சொன்னால் சிரிப்பு தான் வருது… நாளைய சமூகம் இளைஞர்கள் கையில்ன்னு சொல்றீங்க… ஆனால் இன்னைக்கு எத்தனை இளைஞர்கள் கௌரவம் பார்க்காம சேற்றில் கால் வைக்கத் தயாரா இருக்கீங்க.. உங்களுடைய ஆதங்கம் எல்லாம் வெறும் பேச்சோடு மட்டும் தான்.. வாட்ஸ் ஆப்பில் டிபி மாத்துறது, முகநூலில் பதிவு செய்துவிட்டு எத்தனை லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் வருதுன்னு பார்ப்பதில் தான் நேரத்தை செலவிடுகின்றீர்கள். இதெல்லாம் செய்து விட்டால் நம் விவசாயம் காப்பாற்றப்பட்டு விடுமா? பேச்சோடு நிறுத்தாம செயலில் இறங்கி செய்துகாட்ட எத்தனை இளைஞர்களுக்கு தைரியம் இருக்கு.?” அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் விவசாயிகளின் ஏக்கத்தை வெளிக்கொணர்ந்தது.
“எங்க மாமா போதிய நீர்வளம் இல்லை.. அதனால் தான் விவசாயம் அழிந்து வருது, நீர்வளம் மட்டும் அதிகரித்தால் எல்லோரும் விவசாயத்தை நோக்கி தான் வருவாங்க..” கவி கூறி முடித்ததும் வெங்கடாச்சலம் படப்படத்தார்.
“நீர்வளம்… எப்படி தம்பி இருக்கும்… நீர்… வளமா எப்படி கிடைக்கும்.. நம்மாழ்வார் சொல்லியிருக்கார். நிலத்தடி நீரைத்தேடி நாம போக கூடாது, வானம் நமக்கு அளிப்பதை சேமித்தாலே நிலத்தடியில் நீர் வளமாய் பெருகும்… எங்க நாம் தான் மழைநீரை சாக்கடையில் கலக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறோமே… அப்புறம் எங்கிருந்து நீர்வளத்தை சேமிக்கிறது, பெருக்கிறது…”
மாமாவின் பேச்சினை சிறு தலை குனிவுடன் கேட்டுக் கொண்டிருந்தவனால்.. எதிர்த்து பதிலளிக்க முடியாத நிலையில் இருந்தான். அவர் கூறுவது அப்பட்டமான உண்மையல்லவா.. எப்படி எதிர்த்து வாதிட முடியும்.
“பஞ்சம், பசி, பட்டினி… இதெல்லாம் வந்தாலும் நமக்கு சோறு வேணும்… ஆனால் நாம விவசாயம் செய்து சோறு போடணும்னு நினைக்கிறவன் யாரும் இல்லை. இது தான் விவசாயத்திற்கு வந்த முதல் அடி, இழப்பு. சரி விடுப்பா நான் ஒருவன் பேசுறதால என்ன மாறிட போகுது.. மாற்றம் வேண்டும் நினைக்கிற யாரும் இங்கு மாற்றுவதற்கு சிறு முயற்சி கூட செய்வதில்லை. இது தான் ஃபாக்ட்.
நீ வா… அங்கு அலுவலக அறை சென்று பேசுவோம். உன்னை வர சொன்னதற்கான காரணத்தை விடுத்து நான் வேறு என்னவோ பேசுறேன்” என்றவர் கவியை அழைத்துக்கொண்டு குடவுனிற்கு உட்புறமாக இருக்கும் அலுவலக அறைக்குச் சென்றார்.
உள்ளே சென்று அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் கவியை அமர செய்தவர், தானும் ஒரு இருக்கையில் அமர்ந்தார்.
சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய… “சொல்லுப்பா… உன் பிரண்ட் விரும்புற பெண் யாரு?”
தனது முகத்திற்கு நேரே நீ உண்மையை மட்டும் தான் சொல்ல வேண்டும் என்று கூரிய பார்வையுடன் தன்னை கேட்பவரின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்தான்.
“எனக்கு எப்படி தெரியும்… இதைப்பற்றி நீ யோசிக்க வேண்டாம்.. அபி இங்கு மகிழ்ச்சியா காட்டிக்கிறான் என்பது எனக்கு நன்றாக தெரியும். அவனிடம் கேட்டு மேலும் வருந்த செய்ய எனக்கு விருப்பமில்லை. அவனது இந்த நிலைக்கும் அவன் விரும்பிய பெண்ணிற்கும் சம்மந்தம் உண்டா? அவர்களுக்குள் ஏதேனும் பிரச்சினை என்றால் என்னிடம் சொல், இருவரிடமும் பேசி அவர்களுக்கு குடும்பத்தின் சம்மதத்துடன் நான் திருமணம் செய்து வைக்கிறேன்” என்றார்.
“அப்படி ஒன்று நடக்க வாய்ப்பேயில்லை…”
தான் கேட்டு முடித்ததும் சிறு தடங்கலும் இல்லாது அது நடக்க வாய்ப்பேயில்லை எனக் கூறிய கவி அடுத்து உச்சரித்த வார்த்தைகளில் அதிர்ந்து, தான் அமர்ந்த நாற்காலியிலிருந்து எழுந்தே விட்டார். நாற்காலி இரண்டடி பின்னால் போய் விழுந்தது.
அறையிலிருந்த ஜன்னல் பக்கம் சென்று நின்றவன் மிக அருகில் தெரிந்த நீரோடையை வெறித்து பார்த்தான். நீரில் தெரியும் சலசலப்புகளை போன்று கவியின் மனதிலும் கடந்த கால சலசலப்புகள் மெல்ல மேலெழும்பின.
அபி அப்பெண்ணை பார்த்ததிலிருந்து… இறுதி வரை சிறு நிகழ்வையும் மாற்றாமல் அனைத்தையும் கூறினான். கூறி முடித்தவன் திரும்பிப் பார்க்கையில் தன் கண்களில் கோடென வழிந்த கண்ணீரை கவிக்கு காட்டாமல் மறைத்தார்.
“இப்போ சொல்லுங்க மாமா.. இந்த நிலையில் அவன் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்.. என்னோட சகஜமா இருந்தாலும் அந்த நினைவுகள் இல்லாம அவன் இருந்ததே இல்லைங்கிறதே எனக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் தெரிய வந்தது.” அபி ஒளித்து வைத்திருந்த குறிப்பேட்டை மனதில் வைத்து பேசினான்.
தன் மகன் வாழ்வில் இப்படியொரு துயர சம்பவம் இருக்குமென அவர் கனவிலும் நினைக்கவில்லை. நண்பனை பற்றிய கவலைகள் எல்லாவற்றையும் இறக்கி வைத்ததால் மனம் அமைதியுற கண்களை அழுந்த துடைத்து அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
கவி சென்றதும் இருக்கையில் தொப்பென அமர்ந்தவர் மனதில் பாரம் ஏறியதை போன்று உணர்ந்தார்.
அவரது முகத்திலும், சிந்தனையிலும் நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்துவதில் ஒருவிதமான தீவிரம் குடிக்கொண்டது.
அவர் நினைத்ததை போல் திருமணத்தை நிறுத்த முடியுமா… எல்லாம் விதியின் கையில். அவரது மனம் சிந்தித்ததை மூளை வகுக்க ஆரம்பித்தது. அதன் பலன் கிட்டுமா???. பொறுத்திருந்துதான் பார்ப்போம் என விதி அவரை பார்த்து மெல்ல சிரிக்கின்றது.