அத்தியாயம் 14
பெரிய வீட்டு திருமணம் என்பதால்… ஊரே அங்கு தான் இருந்தது. மூன்று நாளும் அங்குதான் அவர்களுக்கு விருந்து.
பந்தல் போடுவதை இப்படி அலங்கரியுங்கள் , இதனை இப்படி செய்தால் நன்றாக இருக்குமென மேற்பார்வையிட்டுக்கொண்டே சில வேலைகளையும் அபி செய்துகொண்டிருந்தான்.
இதனை பார்த்த கவி, ‘கல்யாணத்துக்கு மாப்பிள்ளையே வேலை பார்ப்பது இங்கு தான்டா நடக்குது’ என உள்ளுக்குள் சிரித்தான்.
வேலைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க வருணாவை கிழக்கு நோக்கி அமர வைத்து ஊர் பெண்கள் நலங்கு வைத்தனர். சாவி கொடுத்த பொம்மை போல் அனைத்தும் செய்து கொண்டிருந்தாள் வருணா. தாய்மாமன் என்ற முறையில் வெங்கடாச்சலம் முகத்தில் விரிந்த புன்னகையுடன் வருணாவிற்கு மஞ்சள் பூசி நெற்றியில் குங்குமம் வைத்து நலங்கு வைத்தார். காலை பொன்னுருக்களுக்காக வேலுவின் வீட்டில் இறுகியிருந்தவர் இங்கு சந்தோஷமாக நலங்கு வைப்பதை பார்த்த கவிக்கு ஆச்சரியமாக அதே சமயம் கோபமாகவும் இருந்தது.
அவர் வேறு பக்கம் நகர்ந்ததும் அவரிடம் சென்றவன்… “உங்களுக்கே இது அநியாயமாக இல்லையா.. என்னவோ சந்தோஷமா நலங்கு வச்சிட்டு வரீங்க.. அபி கதை தெரிந்த பிறகு இத்திருமணத்தை நிறுத்திட்டு வருக்கும் அபிக்கும் கல்யாணம் பண்ண பாப்பீங்க நினைச்சா நீங்க என்னவோ சந்தனத்துல கை நனைச்சிட்டு நிக்குறீங்க” என்றான் காட்டமாக.
அதற்கு வெங்கடாச்சலம் வாய்விட்டு சிரித்து மேலும் கவியை வெறுப்பேற்றினார்.
“மாமா…” என அவன் பற்களை கடிக்க…
“நடக்கப்போறது என் பையன் கல்யாணம் டா.. அதுல நான் சந்தோஷமா இல்லாமல் மூஞ்சி தூக்கி வச்சீட்டு இருந்தா நல்லாவா இருக்கும்” என அவர் விஷம புன்னகையுடன் கேட்க.. கவி வாயை பிளந்தான்.
அந்தப்பக்கம் ஏதோ எடுக்க வந்த கனி.. “நிஜமாவா அப்பா” என துள்ளிகுதித்து கத்தினாள். அவளது தலையில் ஒரு கொட்டு வைத்தவர் “ஷ்ஷ்ஷ்” என்று வாய் மீது விரல் வைத்து அதட்டினார்.
சரி சரி என இரு கைகளாலும் வாயினை பொத்திக்கொண்டு ம் ம் ம் என்று மண்டையை உருட்டினாள்.
அதற்கும் அவர் நகைத்துக்கொண்டே… “காலையில் எனக்கும் வருத்தமாதான் இருந்தது.. அதன் பிறகு என்னவென்று தெரியவில்லை அடி மனதில் இத்திருமணம் நடக்காது என்று ஒரு நம்பிக்கை” என்றார்.
அவர் கூறியதில்… ஹே என மகிழ்ந்தவள் தனது அப்பாவிற்கு அருகிலிருந்த கவியை நோக்கி உற்சாகமாக ஹை ஃபை கொடுக்க கரம் உயர்த்த அவனோ அவளை கண்டு கொள்ளாது..
“நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது மாமா அதற்கான முயற்சியை நாம்தான் எடுக்க வேண்டும்” என்றான்.
அதனை ஆமோதித்தவர், “வேலுவின் எண்ணத்தை சீனு தெரிந்து கொள்ளுமாறு செய்தாலே போதும் கல்யாணம் நடக்காது. ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்று தான் தெரியவில்லை” என்க,
“இங்கு என்ன மாநாடு.. போய் கல்யாண வேலையை பாருங்க” என்ற கலாவின் அதட்டும் குரலில் வெங்கடாச்சலம் அப்படியே நகர்ந்து விட்டார்.
தன்னை விழிகளாலே முகம் சிவக்க செய்பவன், தான் இவ்வளவு அருகில் நின்றும் கண்டு கொள்ளாமல் இருப்பது கனியின் மனதை வருந்த செய்தது. நேற்று இரவு தான் பேசியது அதிகப்படியோ என காலம் கடந்து சிந்தித்தவள் அங்கிருந்து செல்ல அடி எடுத்து வைத்தவனை கரம் பிடித்து தடுத்து நிறுத்தினாள்.
தனது கரத்தினை பற்றியவளை உறுத்து விழித்தவன்.. “தயவு செய்து என் கண் பார்வையில் கூட வந்துடாத”.. என குரலில் அவ்வளவு ஆத்திரத்தை காட்டி அழுத்தமாக கூறினான். அவனது வார்த்தையில் அதிர்ந்து அவனின் கரத்தினை விடுவித்தவள் அழுகையுடன் தனது அறை நோக்கி ஓடினாள்.
அவனது வார்த்தை அவளுக்கு எவ்வளவு வலித்ததோ.. அதை விட அதிகமாக அவனுக்கு வலித்தது. அதை விட நேற்று அவள் பேசியது மட்டும் நடந்துகொண்டது நினைவில் வந்து அவனது காதலை மரிக்கச் செய்தது.
‘என்னையும் என் காதலையும் தவறா பேசிய நீயேதான் என்னை தேடி வர வேண்டும்’ என மனதோடு கூறியவன் வலியோடு மற்றவைகளை கவனிக்க சென்றான்.
அறைக்குள் வந்த கனி அவன் பேசியதன் தாக்கத்தில் அழுதாள்.. சிறுது நேரத்தில் அவனே என்னை விட்டு விலகுவது தான் நல்லது.. அதற்கு நேற்று தான் பேசியது சரியே என அழுகையை கட்டுப்படுத்தினாள்.
நலங்கு சடங்கு முடிந்ததும் மாடியேறி அறைக்குள் நுழைந்தவள் கனியிருப்பதை கவனிக்காமல் கை மற்றும் முகத்தில் தடவியிருந்த சந்தனத்தை பரபரவென தேய்த்து, தலையில் வைத்த பூவினை பிச்சி எடுத்து தரையில் வீசினாள். அறையிலிருந்த பொருட்கள் , புத்தகம் என அனைத்தையும் தூக்கி விசிறியடித்தவள்அணிந்திருந்த புடவையை கலைந்து குளியளறைக்குள் புகுந்த ஓய்ந்து போனவளாய் கண்ணீர் வழிய நீருக்கடியில் நின்றாள்.
ஒரு மணி நேரம் கழித்து ஒன்றும் நடவாதது போல் உள்ளே வந்தவள் தான் அலங்கோலமாக ஆக்கி சென்ற அறை சுத்தமாக இருப்பதை கண்டு, கட்டிலில் அமர்ந்திருக்கும் கனியின் முகத்தை கூட பார்க்காதவளாக உடலை குறுக்கி படுத்து கொண்டாள்.
“எதுக்கு இவ்வளவு ஆவேசம்.. யார் மேல் உனக்கு கோபம்… விருப்பமில்லனா இல்லைன்னு சொல்ல வேண்டியது தானே.. அதை விட்டு, வெளிய உங்க அப்பா முன்னாடி சம்மதங்கிற மாதிரி எல்லாம் பண்ணிக்கிட்டு ரூம்குள்ள எதுக்கு இந்த பேயாட்டம் போடுற?” என குரலுயர்த்தி கனி கேட்ட கேள்விக்கு தனது மௌனத்தையே பதிலாக அளித்தாள் வருணா.
அதில் கடுப்பான கனி தன் தலையை அருகிலிருந்த சுவற்றில் தெரிந்தே முட்டிக்கொண்டாள்.
உறவினர்கள் அனைவரும் வருவதும் போவதுமாய் அன்றைய நாள் விரைந்தோடியது. இரவு பெண்கள் அனைவரும் பலகாரம் செய்து முடிக்க நள்ளிரவிற்கு மேல் ஆகிவிட அவர்களுடன் அமர்ந்து செய்து கொண்டிருந்த பலகாரங்களை வேடிக்கை பார்த்திருந்த அபி அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு தனது அறை நோக்கி சென்றான்.
படிகள் ஏறி வருணாவின் அறையை தாண்டி செல்லும் போது அங்கிருந்த சிறு கூடத்தில் ஒரு உருவம் தென்பட்டது. இருட்டில் யாரென்று தெரியாததால் மின்விளக்கை ஒளிர செய்தான்.
அழுது வீங்கிய முகத்துடன் கனியை அந்நேரத்தில் அங்கு கண்டவன் பதறி போனான். அவள் எதற்கு அழுகிறாள் என்று சரியாக கணித்தவன்..
“செய்யறதெல்லாம் செஞ்சிட்டு இப்போ எதுக்கு அழற, எல்லாம் சரியாகிடும் ரூம்க்கு போ” என அனுப்பி வைத்துவிட்டு தனது அறைக்கு சென்றான்.
இரண்டாவது நாள் வேலுவிற்கு தாய் மாமன் வீட்டு நலங்கு..
அந்த முறையில் சீனு மற்றும் வீட்டின் முக்கிய உறுப்பினர்கள் மட்டும் வைதேகி வீட்டிற்கு சென்றனர்.
அனைவரும் வீட்டில் நலங்கிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டு வேலுவிற்காக காத்திருந்தனர். பதினைந்து நிமிடங்கள் கடந்திருந்த போதும் வேலு வரவில்லை. என்ன என்று வேலுவின் அறைக்கு பார்க்க சென்ற வைதேகி அவன் இருந்த நிலைமையை கண்டு நெஞ்சில் அடித்துக்கொண்டார்.
“அடப்பாவி எல்லோரும் உனக்கு மஞ்சள் பூச வந்திருக்காங்க நீ என்னடான்னா காலையிலே இந்த கருமத்தை கையில வச்சிட்டு இருக்கியே டா…” வைதேகியின் குரல் காதில் விழாதவாறு மீண்டும் கையிலிருந்த மதுவை குடித்தான்.
கவி கல்யாணம் நடக்காது என்று மறைமுகமாக கூறியது அவனை வெறியாக்கியிருந்தது. அதனாலே நேரம் காலம் பார்க்காமல் குடித்துக் கொண்டிருந்தான்.
சொல்ல சொல்ல கேட்காமல் குடித்துக்கொண்டிருப்பவனை கட்டுப்படுத்த முடியாமல் அவன் எதிரே இருந்த பாட்டிலையும் கையில் வைத்திருந்த கிளாசினையும் பிடுங்கி தூக்கி போட்டு உடைத்தார்.
அதில் அவன் கோபம் முற்று தாய் என்பதையும் மறந்து வைதேகியை எட்டி உதைத்தான். அவர் சுருண்டு கீழே விழ,
“கீழே போய் வந்தவங்களை சமாளி நான் பத்து நிமிஷத்தில் வர்றேன்” என உறுமிவிட்டு குளிக்க சென்றான்.
வலித்த போதும் சமாளித்து தரையில் கை ஊன்றி மெல்ல எழுந்து நின்ற வைதேகி தன்னை சரிப்படுத்திக்கொண்டு வெளியில் வந்தார்.
கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவான் என்ற வைதேகி உள்ளே வேலையிருப்பதை போல் சென்றுவிட்டார். அங்கே இருந்தால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு எப்படி அவரால் பதில் சொல்ல முடியும்.
குளிர்ந்த நீரை போதை இறங்கும் வரை தலையில் ஊற்றியவன் பொறுமையாக வெளியே வந்தான். அவன் வந்ததும் சடங்கு ஆரம்பமானது. முதலில் சீனு மஞ்சள் பூச அருகே சென்றவர் அவனின் சிவந்த கண்களை வைத்து அவனது நிலையை கண்டுகொண்டார். வெளியில் எதையும் அவர் காட்டிக்கொள்ளவில்லை. சடங்கு முடிந்ததும் பூ, பழம் மற்றும் வெற்றிலை அடங்கிய சீர் தட்டினை மாப்பிள்ளை கையில் கொடுத்து விடைபெற்றனர்.
வேலுவிற்கு குடி பழக்கம் உள்ளது என்பதே சீனுவிற்கு இப்போது தான் தெரியும். இன்றும் அவனால் குடியை கட்டுப்படுத்த முடியாமல் மது அருந்திருக்கிறான் என்றால் வேலு எப்பேர்ப்பட்ட குடிகாரனாக இருப்பான் என சிந்தித்தவர்… இறுதியில் ஜோசியர் சொல்லியதாக வைதேகி கூறிய பொய்யினால் தனது மருமகனின் உயிர் தான் முக்கியம் என்று முடிவெடுத்தார். திருமணத்திற்கு பின் தன் மகளின் அன்பால் அவன் குடிப்பழக்கத்தை விட்டு விடுவான் என்று தப்பு கணக்கு போட்டார்.
வேலு வெளியில் நல்லவனாக வேஷம் போடும் கயவன் என்று அவருக்கு தெரியாமல் போனது அவருடைய விதி.
சோகமாக இருந்த சீனுவிடம் ரங்கநாதன் என்ன என்று விசாரிக்க ஒன்றுமில்லையென கூறிவிட்டார்.
மாலை பெண் அழைப்பிற்கு வருணாவை உறவுக்கார பெண்கள் தயார் செய்து கொண்டிருந்தனர். கனி நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தாள். அறையின் கதவு தட்டப்படும் ஓசையில் ஒருவர் யாரென கேட்க வெளியிலிருந்து வந்த குரலில் உண்மையில் மகிழ்ந்து தான் போனாள் வருணா.
“அபி” என்றதும் கனி வேகமாக சென்று கதவை திறந்தாள்.
அவன் கையில் கவர் ஒன்று இருந்தது. கனியை பார்த்து மெல்ல இதழ் பிரித்தவன், “உள்ள வரலாமா” என அங்கிருந்த உறவுக்கார பெண்களிடம் கேட்டான்.
அவர்கள், “நீங்க தாராளமா வரலாம்” என்று கூறி.. வருணாவிற்கு செய்து கொண்டிருந்த அலங்காரத்தை பாதியிலே விட்டு விலகி நின்றனர்.
அபி வருணாவின் அறை பக்கம் செல்வதை பார்த்த கவியும் அங்கு வந்திருந்தான்.
அபியை பார்த்ததும் அனைத்தும் மறந்து போக சிலையென அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் வருணா.
கனியும் அவ்வாறே உள்ளே நுழைந்த கவியை பார்க்க அவனோ கனி என்ற ஒருத்தி அங்கிருப்பதையே மறந்தவனாய் தன் பார்வை முழுவதையும் அபியின் மீதே பதித்திருந்தான்.
அதில் கனியின் காதல் கொண்ட நெஞ்சம் அடிபட்டு போனது, தான் பேசியதை மறந்து.
இமைக்காமல் பார்த்திருக்கும் வருணாவின் பார்வையை சிறுது நேரம் தாங்கி நின்ற அபி, உள்ளுக்குள் ஏதோ புதிதாய் பாய்வதை போல் உணர்ந்தான். ஏற்கனவே சருகாய் வறண்டு போயிருந்த இடத்தில் புதிதாய் சாரல் அடித்து துளிர் விடுவதை போன்று தோன்ற தன் தலையை உலுக்கி தன்னை சமன் படுத்திக்கொண்டான்.
இதேபோல் ஏற்கனவே ஒரு விழி வீச்சில் தொலைந்து போனது நினைவில் உதிக்க அதை முயன்று புறம் ஒதுக்கினான்.
இன்னமும் அசையாமல் பார்த்திருக்கும் வருவின் தோள் தொட்டு நடப்பிற்கு கொண்டு வந்தவன்.. தன் கையிலிருந்த கவரிலிருந்து அழகிய பட்டு புடவை ஒன்றினை எடுத்து அவள் கைகளில் கொடுத்தான்.
அவளுக்கு பிடித்த அடர் மாம்பழ வர்ணத்தில்… பிங்க் ஒரு வரியாகவும், பச்சை நிறம் ஒரு வரியாகவும் பார்டரில் அமர்ந்திருக்கும் விபாஞ்சி பட்டுப்புடவை. பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது.
“இதை இப்போ வியர் பண்ணிக்கோ பேபி” என கூறினான், அவள் விழிகள் காட்டிய வியப்பில் அவளுக்கு புடவை மிகவும் பிடித்திருக்கிறது என்பதில் மகிழ்ந்தவனாய்.
கனியும் அங்கிருந்த மற்ற பெண்களும்.. “சூப்பர் செலக்ஷன். வரு நிறத்திற்கு இந்த சாரீ எடுப்பா இருக்கும்” என கூறினர்.
‘இந்த பயபுள்ள நம்ம கூடவே தானே சுத்திட்டு இருந்தான் அப்புறம் எப்போ போய் புடவையெல்லாம் எடுத்தான்’ என கவி மனதோடு சிந்தித்தான்.
அங்கிருந்தவர்களில் ஒரு வயதான பெண் ஒருவர்… “பெண் அழைப்புக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து வரும் புடவை தான் உடுத்தனும்” என கூற..
கவியோ… ‘எப்படியும் அபி தான் மாப்பிளை அப்போ அவன் கொடுக்கிற புடவையை உடுத்த வச்சிடனும்’ என நொடியில் யோசித்தவனாக.. “ஒரு வகையில் பார்த்தால் அபி வேலுவிற்கு சகோதர உறவு… அப்போ இந்த புடவையும் மாப்பிள்ளை வீட்டு முறையா எடுத்துக்கலாம்” என்க, அனைவரும் அதை ஆமோதித்தனர்.
வருணாவின் மனமும் இந்த நிகழ்வால் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியடைந்தது. வேலுவின் கையால் எடுத்த புடவையை உடுத்த வேண்டாம் என்று. ஆனால் அவன் கட்டும் தாலிக்கு தான்தாம் சம்மதம் சொல்லியிருக்கின்றோம் என்பதை மறந்து போனாள்.
“எல்லாரும் வெயிட் பண்றாங்க.. அக்காவ சீக்கிரம் கூட்டிட்டு வர சொல்லி வைதேகி அத்தை கத்திட்டு இருக்கு” என்று விஷ்ணு வந்து கூறவும், அபி மற்றும் கவி விஷ்ணுவுடன் வெளியேறினர்.
வெளியில் வந்த அபிக்கு உள்ளுக்குள் என்றோ உடைந்துபோன ஒன்று மீண்டும் உடைந்து விழுவதை போல் இருந்தது. அது என்னவென்று அவனுக்கு சுத்தமாக தெரியவில்லை.
வருணாவின் பார்வையே அவன் கண்கள் முன் தோன்ற அது கூறிய செய்தி அவனுக்கு பிடிபடவில்லை. இப்படியே இருந்தால் ஏதாவது தோன்றிக்கொண்டே தான் இருக்குமென மற்றவர்களுடன் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் அபி வாங்கி கொடுத்த புடவையில் பேரெழிலோடு ஜொலித்தவளை கட்டியணைத்து இதழ் பதித்த கனி, “நான் மட்டும் பையனா இருந்தா இந்த நொடியே தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணியிருப்பேன்” எனக்கூறி சிரித்தாள்.
கூச்சத்தில் நெலிந்த வருணாவிற்கு அப்போது தான் நினைவு வந்தது தனக்கு இடப்புறம் அமர போவது அபி இல்லையென… நினைவு வந்த விசயம் இதயத்தில் ரணத்தை ஏற்படுத்தியது. எப்படி என் மனம் முழுக்க சசி அத்தான் இருக்கும் போது அந்த வேலுவை மணந்து கொள்ள சம்மதித்தேன்.. எப்படி இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன் என தன்னை நினைத்தே அருவெறுத்தாள்.
வருணாவிற்கு அலங்காரம் செய்த பெண்கள் அப்போதே சென்றிருக்க.. வருணா இருக்கையில் தொப்பென அமர்ந்தாள். சசி அத்தான் வேண்டுமானால் வேறொரு பெண்ணை நேசிக்கலாம் ஆனால் நான் அவரை தானே விரும்புகிறேன்.. எனக்கு அவர் கிடைக்கவில்லையென்றாலும் நான் அவர் நினைவிலே வாழ்ந்து சாவது தான் சரியாக இருக்குமென முடிவெடுத்தவள் அருகில் பழத்தட்டிலிருந்த கத்தியினை எடுத்து தன் மற்றொரு கை மணிக்கட்டில் வைத்து கத்திக்கு அழுத்தம் கொடுத்தாள்.
நொடியில் சுதாரித்த கனி இமைக்கும் நேரத்தில் வருணாவிடமிருந்து கத்தியினை பிடுங்கி வெளியே ஜன்னல் வழியாக வீசினாள்.
அவர்கள் அறை ஜன்னலுக்கு வெளியே கீழே கல்யாணத்திற்கு மைக் செட் போடும் நபரிடம் பேசிக்கொண்டிருந்த கவியின் காலருகில் வந்து விழுந்தது, கனி தூக்கி எறிந்த கத்தி.
மேலே நிமிர்ந்து பார்த்தவன் அது வருணாவின் அறையிலிருந்து விழுந்திருக்கு என்றும், ஏதோ சரியில்லை என்பதையும் கணித்தவனாக, பேசிக்கொண்டிருந்தவரை அனுப்பிவிட்டு விரைந்து வீட்டிற்குள் நுழைந்து மாடியேறி தன் தங்கையின் அறைக்கு சென்றான்.
அங்கு கனி வருணாவை திட்டிக் கொண்டிருந்தாள்.
“செத்துப்போய்ட்டினா எல்லாம் சரியா போய்டுமாடி… உன் மேல உயிரே வச்சிருக்க நம்ம வீட்டு ஆளுங்களுக்கு நீ கொடுக்கிற பரிசு இது தானா.. ரொம்ப நல்லாயிருக்கு… நீ தானடி அந்த பொறுக்கியை கல்யாணம் பண்ணிக்க சரி சொன்ன.. உன்கிட்ட வந்து அவன் வேண்டான்னு எத்தனை பேரு கெஞ்சினோம்.. என்னவோ அபி அண்ணாவுக்கு தியாகம் செய்ற மாதிரி பில்டப் கொடுத்துட்டு.. நீ பண்ண நினைச்ச காரியம் உனக்கே சரின்னு படுதா…”
கனி கோபத்திலும், பயத்திலும் படபடத்தாள்… இன்னும் அவளால் வரு செய்ய நினைத்த செயலை ஜீரணிக்க முடியவில்லை. ஒரு நொடி தாமதித்திருந்தாலும் தன் கண் முன் நிற்பவள் உயிரற்று போயிருப்பாளே… இங்கு ஒரு கலவரமே நிகழ்ந்திருக்குமே என பயந்தாள்.
கனி பேசிய அனைத்தையும் கேட்ட கவிக்கு தன் தங்கை செய்யவிருந்த செயல் புரிந்தது. அவன் மனம் தங்கையின் மீது கோவத்தில் கனன்றது.
வாசலில் நிழலாட இரு பெண்களும் திரும்பி பார்க்க உணர்வற்ற முகத்துடன் கவி நின்றிருந்தான்.
மெல்ல அவன் உள்ளே அடியெடுத்து வைக்க… அண்ணா என்ற கேவலுடன் ஓடி வந்து அவன் நெஞ்சோடு சாய்ந்த வருணா…
“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” என துடித்து அழுதாள்.
கவிக்கு அவள் மீது கோபம் இருப்பினும் கதறியழுபவளை எப்படி தேற்றுவது எனத் தெரியவில்லை. அதற்குள் வெளியில் சென்ற கனி தனது தந்தையை அழைத்து வந்திருந்தாள்.
தங்கையின் முதுகை ஆதரவாக தடவி கொடுத்தவன்.. “நீ கவலைப்படாதடா, நிச்சயம் உன் திருமணம் அபியுடன் தான்” என்றான் அழுத்தமாக.
கவி கூறியதில் பதறி விலகியவள் சுவரோடு ஒண்டி, “இல்லை வேண்டாம்.. அவருடைய காதலை கொன்னுட்டு எனக்கு அத்தானுடன் கல்யாணமா, வேண்டவே வேண்டாம்” என தரையில் கால்களை மடங்கி அமர்ந்து வெடித்து அழுதாள்.
அழுதவளிடம் அவன் காதல் ஏற்கனவே…
“கவி…”
அதுவரை இவற்றை அமைதியாக பார்த்த வெங்கடாச்சலம் கவி சொல்ல போவதை யூகித்தவராக சத்தமாக அழைத்து அவனை தடுத்து நிறுத்தினார்.
தன் மருமகளிடம் நெருங்கி… “நீ எதற்கும் கவலைப்படாதேம்மா.. நாங்க பார்த்துக்கிறோம். அபியுடன் திருமணம் இல்லாவிட்டாலும் நிச்சயம் அந்த வேலுவுடன் உன் திருமணம் நடக்காது. நடக்க நான் விட மாட்டேன்” என்றார்.
அதில் அழுகையை நிறுத்திய வருணா “உண்மையாவா மாமா” என எதிப்பார்ப்புடன் கேட்டிருந்தாள்.
ஆம் என தலையசைத்தவர்.. “போம்மா.. போய்.. முகம் கழுவி வா.. இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை கூட்டிட்டு போக மேல வருவாங்க” என குளியலறை பக்கம் அவளை அனுப்பி வைத்தார்.
வருணா பாத்ரூமிற்குள் சென்று கதவை தாளிட்டதும்.. “ஏன் மாமா அபி விஷயத்தை சொல்லவதற்குள் தடுத்தீங்க.. சொல்லியிருந்தா அவ தனது சங்கடம் குழப்பம் நீங்கி அபியை திருமணம் செய்து கொள்ள ஒத்திருப்பாள்” என்றான்.
கனி இருப்பதை மறந்து கவி அவரிடம் கேட்டிருக்க.. கனியை ஒரு பார்வை பார்த்த வெங்கடாச்சலம், அவளிடம், “வருணா வந்ததும் அவள் அலங்காரத்தை கொஞ்சம் சரி பண்ணும்மா” என்றதோடு கவியை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றார்.
“என்னை ஏன் தடுத்தீங்க” என மீண்டும் கேட்டவனை தீர்க்கமாக பார்த்த வெங்கடாச்சலம்..
“அதுதான் முடிந்த அத்தியாயம் ஆகிவிட்டதே. மீண்டும் அதை நாம் ஏன் பேச வேண்டும். அதுவும் அபியின் மனம் இப்போது எந்த நிலையில் இருக்கிறது எனத் தெரியாம,… எனக்கு நிறையவே நம்பிக்கை இருக்கு கவி. வருவின் திருமணம் அபியுடன் தான், அதனால் திருமணத்திற்கு பிறகு அபி இதைப்பற்றி வருவிடம் சொல்ல வேண்டுமென முடிவெடுத்தால் சொல்லிக்கொள்ளட்டும்” என்றார்.
“என்னவோ மாமா… நீங்கதான் அப்பப்போ சொல்றீங்க வருக்கும் அபிக்கும் தான் கல்யாணமென… எனக்கு ஒன்றும் இது சரியாக நடக்குமென தெரியவில்லை… நாம எந்த முயற்சியும் எடுக்காம வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” வருத்தத்துடன் பேசியவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
கீழே வந்தவனை அபி, “மண்டபத்திற்கு போலாம்” என்று கூறி அழைத்து சென்றுவிட்டான்.
மீண்டும் வருவின் அறைக்குள் நுழைந்தவர்.. “என்னை நம்புடா.!!” என்றதோடு அடுத்தக்கட்ட வேலைகளை பார்க்க சென்றார்.
கலா மற்றும் ராதிகா மேலே சென்று தயாராகியிருந்த வருணாவை கீழே அழைத்து வந்தனர். வீட்டின் பூஜையறையில் வருணாவை விளக்கேற்ற கூறி சாமி படங்களின் முன்பு விழுந்து எழுந்திருக்க சொல்ல.. அவர்கள் சொல்லியதை சிறு தலையாட்டாலுடன் செய்து முடித்தால்.
“தாத்தா காலில் விழுந்து வணங்கும்மா” என்ற தனது அன்னையின் வார்த்தையை ஏற்று விழப்போனவளை பெரியவர், “தடுத்து திருமணம் முடிந்ததும் மொத்தமாக ஆசிர்வாதம் செய்றேன்” எனக் கூறிவிட்டார்.
இவ்வளவு நாள் தங்களது செல்ல பேரனுக்கு என நினைத்திருந்தவள் வேறொரு வீட்டிற்கு செல்வதை உடனடியாக அந்த பெரியவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனைக் கண்ட வைதேகி தனது தோளில் முகவாயை நொடித்துக் கொண்டு, “சரி வாங்க கிளம்பலாம் நேரமாகிவிட்டது” என்று பரபரத்தார்.
திடீரென ஒருவித பயம் மனதில் சூழ அருகில் நின்றிருந்த கனியின் கையை இறுக பற்றிக்கொண்டாள். கனியும் அவளது மனநிலை புரிந்து ஆறுதலாக வருணாவின் கையில் அழுத்தம் கொடுத்தாள்.
தனது மகளை படுப்புடவை உடுத்தி அதற்கேற்றவாறு நகை பூட்டி பார்த்ததில் சீனுவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவருக்கும் காலையில் வேலுவின் ஒரு முகம் தெரிந்ததிலிருந்து சிறு கலக்கம் ஏற்பட்டிருந்தது. இப்போது மகளை இந்த ஒப்பணைகளில் பார்த்ததும் தனது மகளுக்கு அந்த வேலு பொருத்தமானவன் தானா என சிந்தித்தார். காலம் கடந்து சிந்திப்பதில் பலன் இல்லையே. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது.. நடப்பது நடக்கட்டுமென எண்ணிக்கொண்டார்.
வைதேகி, தனது வீட்டிற்கு சென்று அதன் பிறகு மண்டபத்திற்கு செல்லலாம் எனத் தெரிவித்தார். அதில் கலக்கமடைந்த வரு தனது மாமாவை விளுக்கென நிமிர்ந்து பார்க்க நான் பார்த்துக்கொள்வதாக கண்களை மூடி திறந்தார்.
நிம்மதியடைந்த வரு தலை குனிந்து கொண்டாள்.
“அதெல்லாம் சரி வராது வைதேகி… இப்போவே டைம் ஆச்சு.. அங்க போய்ட்டு மண்டபம் போவதற்குள் நல்ல நேரம் முடிந்திடும்” என வெங்கடாச்சலம் மறுப்பு தெரிவித்தார்.
வைதேகியுடன் வந்திருந்த உறவினர்களும் அதையே ஆமோதிக்க வைதேகிக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் ஒப்புக்கொள்ளும்படி ஆனது.
ஆரம்பத்திலிருந்தே வைதேகி சொல்வது அனைத்திற்கும் தன் மகன் ஏதாவது ஒருவகையில் மறுப்பு தெரிவிக்கின்றானே என யோசித்த பெரியவர்.. மெல்ல வெங்கடாச்சலம் பக்கமாக நகர்ந்து சென்று, “ஏதோ பிளான் பண்ணிட்ட போலிருக்கு.. என்னவோ நான் நினைச்சது நடந்தா சரிதான்” எனக்கூறி சிரிக்க… அவர் மகனோ நமட்டு சிரிப்பு சிரித்தார்.
வெங்கடாச்சலத்திற்கு பின்னால் நின்றிருந்த லலிதா இவர்களது பேச்சை கேட்டுவிட , அவருக்கும் தன் மகள் மணம் குறித்து இருந்த பயம் நீங்கியது. அதன் பிறகு அனைத்திலும் புன்சிரிப்புடன் கலந்து கொண்டார்.
வைதேகி மொபைலில் வேலுவிடம் நேராக மண்டபத்திற்கு செல்வதை தெரிவிக்க.. அதற்கு அவன் ஒரு ஆட்டம் ஆடிய பின்பே போனை கட் செய்திருந்தான்.
வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் காரில் ஏறிக்கொள்ள.. உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் ஏறினர்.
சரியான நேரத்திற்கு அவர்கள் பயணம் செய்த வாகனங்கள் கள்ளக்குறிச்சியில் இருக்கும் மிக பெரிய திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தன.
அனைவரையும் வரவேற்க்கும் பொருட்டு வாசலிலே நின்றிருந்த அபி மற்றும் கவி வந்தவர்களை இன்முகத்துடன் உள்ளே வரவேற்றனர். வேலுவும் அவர்களுக்கு பின்னொடு வந்துவிட வருணாவையும் வேலுவையும் ஒன்றாக ஒரு சேர அழைத்து வந்தனர்.
இரவு நேரத்தில் வானத்து நிலவென ஜொலிக்கும் வருணாவை இமைக்க மறந்து ரசித்து பார்த்தான் அபி… அவனது பார்வையில் உண்மையில் அருகிலிருந்த கவி மகிழ்ந்து தான் போனான். ஆனால் சுற்றியிருப்போர் தவறாக எண்ணிவிடுவரோ என தன் தொண்டையை செருமி அபியை கலைத்தான்.
நடப்புக்கு வந்த அபி, “ரொம்ப அழகா இருக்கா டா… வரு பேபி.. பர்ஸ்ட் அம்மாகிட்ட சொல்லி சுற்றிப்போட சொல்லணும்” என்று கவியிடம் தெரிவித்தான்.
அதைக்கேட்டு கவிக்கு சத்தமாக கத்த வேண்டும் போலிருந்தது.
‘இவனை வழிக்கு கொண்டு வரவே முடியாதா ஆண்டவா.. இப்போ தான் அப்படி ரசிச்சு பார்த்தான்.. ஆனால் அவன் பார்வைக்கும், பேச்சுக்கும் சம்மந்தமே இல்லையே.. இன்னும் அவளை குழந்தையாவே பார்க்கிறானே.. ஏதாவது செஞ்சு அவனை காதல் பார்வை பார்க்க வை ஆண்டவா’ என இறைவனிடம் முறையிட்டான்.
இறவனோ.. ‘மகனே நான் கடவுள்.. என்னிடம் இந்த வேலையெல்லாம் செய்ய சொல்லக்கூடாது.. முடிந்தால் நீயே பார்த்துக்கொள்’ என்று பின்வாங்கிவிட்டார்.
மணமக்கள் மண்டபத்திற்குள் நுழைந்ததும் வரவேற்பிற்கு ஆயத்தமாக.. அப்போதும் ஆபத்பாந்தவன் போல் வந்து வெங்கடாச்சலம் தனது மருமகளை காப்பாற்றினார்.
“வரவேற்பு உண்டுன்னு நீ சொல்லவேயில்லையே வைதேகி.. பத்திரிக்கையிலும் அதை குறிப்பிடவே இல்லையே அப்புறம் எதற்கு திடீர் ஏற்பாடு.”
வெங்கடாச்சலத்துடன் ரங்கநாதனும் சேர்ந்து கேட்க, “வைதேகி இதெல்லாம் இப்போ பழக்கம் தானுங்களே” என கேட்க..
“அதெல்லாம் தாலி கட்டுவதற்கு முன் பெண்ணையும் பையனையும் ஒண்ணா மேடையில் நிக்க வைக்க முடியாது” என தெளிவாக இருவரும் மறுத்துவிட, ஏற்கனவே நடக்கவிருக்கும் திருமணம் சரிதானா என்ற நிலையில் இருந்த சீனுவும், “வரவேற்புலாம் வேண்டாம்” என கூறிவிட்டார்.
இதில் வைதேகியின் முகம் சிறுத்துவிட்டது.. வருணாவின் மீது வெறி மேலும் அதிகரித்தது. கோபம் தலைக்கேற அங்கிருந்து நகர்ந்து வேகமாக மணமகன் அறைக்கு சென்றுவிட்டார்.
உள்ளிருந்து அனைத்தும் கேட்டிருந்த வேலு, “எல்லாம் இந்த ஒரு இரவு நாளைக்கு அவ கழுத்துல தாலி கட்டனதும் ஒவ்வொருத்தனுக்கும் வச்சிருக்கேன் ஆப்பு” என தன் தாயிடம் சினத்தில் உரைத்தான்.
வரவேற்பும் இல்லையென்றதில் முற்றிலும் கவலை நீங்கிய வருணா நாளை திருமணமும் நடக்காது என்பதில் நம்பிக்கை கொண்டாள். ஆனால் நடக்கவிருப்பது விதி வசம் அல்லவா.
மணடபத்தில் வந்திருப்போரை கவனிப்பது மற்றும் இருக்கும் பல வேலைகளை அனைவரும் செய்து முடிக்க நள்ளிரவினைத் தாண்டியது. அதிகாலையும் வேலையிருப்பதால் எல்லோரும் உறங்க ஆயத்தமாகினர்.
மாலையே வாசுகியும் மண்டபத்திற்கு வந்திருக்க, கனி, வரு, வாசு என மூவரும் கல்லூரி கதை பேசி நேரத்தை போக்கிக்கொண்டிருக்க, அங்கு வந்த லலிதா அதட்டி அவர்களை உறங்க செய்தார்.
காலை உணவிற்கு தேவையானவற்றை சரி பார்த்துக் கொண்டிருந்த வெங்கடாச்சலத்திடம் வந்த விஷ்ணு…
“மாமா…. அக்கா பாவம் மாமா… கல்யாணம் நடக்காது சொன்னீங்க…” அழுதுவிடுவதை போல் ஒலித்தது விஷ்ணுவின் குரல்.
“நிச்சயம் இந்தக் கல்யாணம் நடக்கும்… ஆனால் மாப்பிள்ளை உன் அபி அத்தான் தான்.”
வெங்கடாச்சலம் கூறியதில் சந்தோஷமாக அவரை கட்டிக்கொண்டான் விஷ்ணு.
“பார்த்தா அப்படி எதுவும் நடப்பதை போல் தெரியவில்லையே” என்றான் விஷ்ணுவின் பின்னோடு வந்த கவி.
அதற்கு புன்சிரிப்பினை பரிசளித்த வெங்கடாச்சலம்.. கவியிடம், “நீ போய் எல்லாரும் தூங்கிட்டங்களான்னு பார்த்துட்டு வா” என்றார்.
“வரும் போதே பார்த்துட்டு தான் வந்தேன். சித்தப்பா(சீனு) மட்டும் தான் விழித்திருக்கார். அவர் முகத்தை பார்த்தா ஏதோ வருத்தத்தில் இருப்பதை போல் தெரிகிறது” எனக் கூறினான்.
“காலை நலங்கு வைக்க வேலு வீட்டிற்கு சென்று வந்ததிலிருந்தே அவன் முகம் சரியில்லை.. அநேகமாக, அவனுக்கும் வேலுவுடனான வருவின் திருமணத்தில் எதாவது நெருடல் ஏற்பட்டிருக்கலாம். சரி வா நாம் போய் நம்ம வேலையை பார்ப்போம். அதற்கு இது தான் சரியான நேரம்.”
“போங்க மாமா… கடுப்பேத்தாதீங்க… எனக்கு நம்பிக்கையே போச்சு.. மணி ரெண்டு ஆச்சு இதற்கு மேல எப்படி கல்யாணத்தை நிறுத்துவது” என்று கோபமாக பேசியவன் அபியை தேடிச்சென்றான்.
தனக்குள் சிரித்தவாறு தன் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தார்.
********************
அதிகாலை நான்கு மணி கலா சென்று மணமகள் அறையில் உறங்கிக்கொண்டிருந்த அனைவரையும் எழுப்பி அதிகாலை திருமணத்திற்கு முன்பான நலங்கு வைப்பதற்கு தயாராக சொன்னார்.
அவர் அவ்வாறு கூறி சென்றதும் வருணாவிற்கு, ‘இந்த திருமணம் நிக்கவில்லையா… மாமா அவ்வளவு உறுதியா சொன்னாரே…’ கண்களில் நீர் கசிந்துவிடும் போலிருந்தது. அவளது நிலை கண்டு வாசு வருணாவை தேற்ற முயல.. அவளோ கனியின் கையினை பிடித்து, “எப்படியாவது மாமாவை அழைத்து வாடி” என்றாள் கெஞ்சலகா.
கனி அறை வாயிலில் நின்று வெளியே ஹாலை எட்டிப் பார்க்க.. மணவறையின் இறுதி அலங்கார வேலைகள் நடைபெற்று கொண்டிருக்க… மேடையில் ஐயர் அமர்ந்து திருமணத்திற்கு தேவையான பொருட்களை சரி பார்த்து கொண்டிருந்தார்.
விஷ்ணு முதல் பெரியவர் வரை சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நடந்தபடி மும்முரமாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்து கொண்டு வரும் உறவினர்களை கவனித்துக் கொண்டும் இருந்தனர்.
‘நடப்பவற்றை பார்த்தால் கல்யாணம் நிற்காது போலிருக்கே’ என கலக்கத்துடன் கனி நின்றிருக்க, அவளை கடந்து சென்ற கவியை தடுத்து நிறுத்தி “இந்தக் கல்யாணம் நிக்கலையா?” என்றாள் கவலையுடன்.
“ஏன் நிக்கணும்?”
அவன் கேட்டதில் கனியை அடுத்து அவள் பின்புறம் நின்றிருந்த வாசுவிற்கும் அதிர்ச்சியாக இருந்தது.
இருவரின் அதிர்ச்சியை சற்று நேரம் உற்று நோக்கியவன்… “வரு சம்மதம் சொல்லிதான் திருமணம் நடக்குது. அப்புறம் இதை ஏன் நிறுத்த வேண்டும்” என விற்றேற்றியாக பதிலளித்தவன் அங்கிருந்து நகர்ந்தான்.
அதன் பிறகு அங்கு யாருக்கும் யோசிப்பதற்கு கூட நேரமிருக்கவில்லை. வேலைகள் நடந்து கொண்டிருக்க… முதலில் மாப்பிள்ளையை அமர வைத்து நலங்கு செய்து முடித்து திருமண பட்டாடையை கொடுத்து சீக்கிரம் தயாராகி வர அனுப்பினர். பின்னர் மணப்பெண்ணிற்கும் அதே முறையில் அனைத்தும் செய்து முகூர்த்த புடவை அளித்து அலங்காரம் செய்து வர ஐயர் பணித்தார்.
அறைக்குள் புடவையுடன் உள்ளே நுழைந்த வருணா நெஞ்சுக்கூடு ஏறி இறங்க, துக்கம் தொண்டையை அடைக்க என்ன செய்வது எனத் தெரியாமல் கண்ணாடி முன்பு சென்று அமர்ந்தாள்.
மேக்கப்பிற்கு வர வழைக்கப்பட்டிருந்த பெண் தன் பணியை செய்ய ஆரம்பித்தார்.
மற்றவர் அனைவரும் பரபரப்பாக செயல்பட்டிருக்க அறைக்குள் வருணாவுடன் இருந்த கனியும், வாசுவும் என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர். அதிலும் கனியின் கலக்கம் அதிகமாக இருந்தது. வேலுவின் உண்மை முகம் தெரிந்தவள் அல்லவா, ஆனால் ஒன்றும் செய்ய முடியாததை நினைத்து இந்நேரத்தில் அவளால் அழ கூட முடியவில்லை. தான் அழுதால் கூட ஒரு தோழியாய் மடி தாங்கிய வருணாவிற்கு ஒன்றும் செய்ய முடியாத இந்த கையறு நிலையை எண்ணி மனம் வெறுத்தாள்.
காலை 6.30 – 7.30 முகூர்த்தம் என்பதால் விரைவில் தயாராகி பெண்ணும் மாப்பிள்ளையும் மணவரையில் அமர்த்தப்பட்டனர்.
கெட்டிமேளம்…. கெட்டிமேளம்…
ஐயர் குரல் ஒலியை தொடர்ந்து மங்கள இசை நாதம் முழுங்க.. புத்தம் புதிய மஞ்சள் கயிறு பொன் தாலி கோர்க்கப்பட்டு வருணாவின் கழுத்தில் ஏறியது. நெஞ்சை உரசி தொங்கிய தாலியினை இமைக்காமல் பார்த்தாள். இடது கண்ணிலிருந்து ஒற்றை துளி உருண்டு வழிந்து தாலியினை தொட்டது.
முடிந்தது எல்லாம் முடிந்தது….
துளிர்விடும் 🌱.