சருகு 🍂 15 :
திருமணத்தை நிறுத்துவதற்கு எந்தவிதமான முயற்சியும் எடுக்காததால் கவி கோபத்துடன் சென்றான். சிறு புன்னகையுடன் கவியின் கோபத்தை ரசித்த வெங்கடாச்சலம் விஷ்ணுவை தூங்குமாறு அனுப்பி வைத்தார்… மறைவாக சென்று யாருக்கோ கால் செய்தார்.
சற்று நேரத்தில் அந்த நபர் வந்ததும், “வேலு முழிச்சிட்டு ரூமில் தனியா தான் இருக்கான்.. மெல்ல அவனிடம் பேச்சு கொடு நான் சீனுவை அழைத்து வர்றேன்” என்று நகரப்போனவர் திரும்பி அந்த நபரிடம், “நீ செய்யப்போகின்ற உதவிக்கு ரொம்ப நன்றி பா” என கூறிச்சென்றார்.
“அய்யோ.. ஐயா!!! என்னங்கய்யா.. எனக்கு போய் நன்றிலாம் சொல்லிக்கிட்டு.. நீங்க முதலில் வந்து உதவி கேட்ட அப்போ நண்பனுக்கு தவறு இழப்பதா நினைத்து மறுக்கத்தானே செய்தேன்… ஆனால் இது ஒரு பொண்ணோட வாழ்க்கைங்கிறதால தானுங்க இதுக்கு சம்மதித்தேன். என் தங்கச்சியா இருந்திருந்தா வேலு மாதிரி ஒருத்தனுக்கு நிச்சயம் கட்டிக்கொடுக்க சம்மதிச்சியிருக்க மாட்டேங்கய்யா..” என்றான்.
அவன் வேலுவின் நண்பன் பாண்டி… இருப்பினும் அவனது குணக்கேடான விஷயங்கள் தெரியுமாதலால் வெங்கடாச்சலம் சென்று தனது திட்டத்தை கூறியதும் முதலில் மறுத்தவன் பின்னர் ஒப்புக்கொண்டான். பாண்டி பெரிய வீட்டு பண்ணையில் தான் வேலை செய்கிறான், உதவி செய்கிறேன் என்றது அந்த விசுவாசத்திற்காக கூட இருக்கலாம்.
மெல்ல மணமகன் அறை கதவினை திறந்து கொண்டு உள் சென்ற பாண்டியை கண்டதும் வெடி சிரிப்பு சிரித்த வேலு, “வாடா பங்காளி.. வந்து ஜோதியில் ஐக்கியமாகு” என தனக்கு எதிரே வீற்றிருந்த மது பாட்டில்களை காண்பித்தான்.
கொஞ்ச நேரம் அமைதியில் சென்றது. தனக்கு எதிரே அமர்ந்திருந்த பாண்டியிடம், “அப்புறம் பங்காளி.. காலையில் கல்யாணத்துக்கு தான் வருவன்னு நினைச்சேன்…” என கையில் உள்ள மதுவினை வாயில் ஊற்றிக்கொண்டே பாண்டியிடம் வேலு கேள்வி கேட்டான்.
பாண்டியின் மூலம் வேலுவிடம் பேச்சு கொடுத்து அனைத்தையும் அவன் வாயால் கூறும் போது சீனுவை கேட்க வைக்க வேண்டும் என்பதே வெங்கடாச்சலத்தின் திட்டம்.
அறையின் வெளிப்புற ஓரம் சீனுவை அழைத்து வந்து மறைவாக வெங்கடாச்சலம் நிற்பதை கண்ட பாண்டி வேலு கேட்டதற்கு பதிலளிக்காமல் தான் வந்ததின் நோக்கில் பேச ஆரம்பித்தான்.
“என்னடா மச்சான்… சொன்ன மாதிரியே உம் மாம(ன்) மவள கல்யாணம் கட்டிக்க போற போல…”
“யாரு… நானு… அவள கல்யாணம் கட்டிக்கப்போறனா..? தாலிகட்டி பழிவாங்கப்போறேன்…” குழரலாக வார்த்தைகளை உதிர்த்தான் வேலு.
தன்னை எதற்கு இந்த நேரத்தில் இருக்கும் வேலைகளையெல்லாம் விடுத்து இவர் (வெங்கடாச்சலம்) எங்கு அழைத்து செல்கிறார் என எண்ணிய சீனு, வேலுவின் அறை பக்கத்தில் வந்து நின்றதும் முற்றிலும் குழம்பி தான் போனார்.
அந்த குழப்பத்துடன், “என்ன மச்சான்… இந்த நேரத்துல எதுக்கு இங்கன வந்து நிக்கிறோம்” என சீனு கேட்க தன் வாயின் மீது விரல் வைத்து, “சத்தம் போடாதே” என்று சைகை செய்தார் வெங்கடாச்சலம்.
அறைய நோக்கி கை காட்டி அவர்கள் பேசுவதை கேட்குமாறு கூறினார். சீனுவும் ஒன்றும் புரியாமல் உள்ளே கேட்கும் குரல்களை கேட்க ஆரம்பித்தார்.
கிராமத்திற்கு வந்ததிலிருந்து கல்யாண வேளைகளில் பிசியாக இருந்த அபி, வருவின் திருமணத்திற்கு வந்திருந்த தன் பள்ளிக்கால தனது ஊர் நண்பர்களை கண்டு பேசிக்கொண்டிருந்தான். அப்போது வெங்கடாச்சலத்திடம் கோபம் கொண்டு கவி அங்கு வந்தான். இருவரும் மற்றவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு மண்டபத்திற்குள்ளே வர, ஹாலினை தாண்டி மணமகன் அறை வாயில் முன்பாக மறைந்து நின்றிருந்த இருவரையும் பார்த்து அங்கு சென்றனர்.
அபி மற்றும் கவி வருவதை கண்டு கொண்ட வெங்கடாச்சலம் சைகையின் மூலம் அமைதியாக மறைந்து நிற்க கூறினார். அதன்படி இருவரும் அறையின் மற்றொரு புறம் தங்களை மறைத்துக்கொண்டு நின்றனர்.
வெளியில் நின்றிருந்த நால்வரில் இருவர் மட்டுமே வேலுவின் பதிலில் அதிர்ச்சிக்குள்ளாயினர். சீனு மற்றும் அபி தாம் தம் மச்சானை அதிர்வுடன் நோக்க கவியும் வெங்கடாச்சலமும் பொறுத்திருந்து மேலும் கேளுங்கள் என மெல்லிய குரலில் கூற… மீண்டும் நால்வரின் கவனமும் வேலுவின் பேச்சில் பதிந்தது.
முதல் மது பாட்டில் காலியாக மற்றொன்றை எடுத்து வேலு ஓபன் செய்கையில்… அதனை பாண்டி தடுத்தான்.
தடுத்தவனை என்ன என்பதை போல் பார்த்த வேலு… “என்னடா..!!! எனக்கு இருக்க சந்தோஷத்துக்கு இந்த இரண்டு பாட்டில் எல்லாம் பத்தாது.. விடுடா” என கூறிக்கொண்டே பாட்டிலினை மொத்தமாக வாயில் சரித்தான்.
“இன்னும் மூன்று மணி நேரத்தில் உனக்கு கல்யாணம் இப்போ எதுக்குடா இப்படி குடிச்சிட்டு இருக்க…” பாண்டியின் கேள்வியில் சத்தமாக வில்லாத்தனமான சிரிப்பினை உதிர்த்தான் வேலு.
அவனின் சிரிப்பிற்கான… காரணம் புரியாமல் பாண்டி பார்க்க.. வேலு தனது பேச்சினை தொடர்ந்தான்,
“எனக்கு மீசை முளைச்ச காலத்திலிருந்தே வருணா மேல ஒரு கண்ணு… வயசுக்கு வந்துட்டான்னு அங்க போய் பார்த்தா… அந்த வயிசிலே சும்மா கும்முன்னு இருக்கா… அன்னையிலிருந்தே எப்படியாவது அவளை அடைஞ்சிடனும்ங்கிற வெறி என் மண்டைக்குள்ள ஏறிப்போச்சு…”
அவன் பேசுவதை கேட்ட அபி அருவெறுப்பில் முகத்தை சுளித்தான். சீனு இப்படிப்பட்ட ஒருத்தனுக்கா என் பொண்ணை கொடுக்கணும் நினைத்தேன் என எண்ண ஆரம்பித்தார்.
“ஆனால்… அன்னைக்கு பஸ் ஸ்டாப்பில் என்ன அடிச்சா பாரு அப்போ முடிவே பண்ணிட்டேன் அவளை கல்யாணம் செஞ்சு தினமும் நரகம்ன்னா என்னான்னு காட்டணும்னு.. ஆனால் அவளை இன்னைக்கு மண்டபத்திற்கு கூட்டிட்டு வரும் போது… அப்பப்பா… என்னா ஒரு அழகு… அத்தனை பேரு மத்தியிலும் அவளை ஆண்டு அனுபவிக்கனும் என் உடம்பு துடிச்சிது டா… அப்படியே… அவளை… கட்டி…”
வேலு சொல்லிக்கொண்டே இருக்கும் போதே… ஆத்திரத்தில் நரம்பு புடைக்க.. புஜங்கள் முறுக்கேற அறையினுள் புயலென நுழைந்த அபி தன் நீண்ட காலினை வேலுவின் நெஞ்சில் பதித்து கீழே தள்ளினான்.
விழுந்ததில் அபியின் மீது கோபம் கொப்பளிக்க எழ போன வேலுவை எழ விடாமல் மீண்டும் மீண்டும் உதைத்தான் அபி.
அபியை தடுக்காமல் மற்ற நால்வரும் வேடிக்கை பார்க்க… அபி வேலுவை புரட்டி எடுத்தான்.
“ஏண்டா…. எவ்வளவு தைரியம் இருந்திருந்தா… என் பேபி வாழ்க்கையை நாசம் செய்யணும் நினைச்சிருப்ப… உன் உயிருக்கு ஆபத்து வரக்கூடாதுன்னு நினைச்ச அவரு பொண்ணு வாழ்க்கையை எப்படிடா உன்னால கெடுக்கணும் தோணுச்சு?” சீனுவை கைக்காட்டி வேலு அடித்துக்கொண்டே கேட்க…
குடிபோதையில் கோணலாய் சிரித்த வேலு… “என் உயிருக்கு ஆபத்தா…? அது இந்த கல்யாணத்துக்கு இந்த பெருச ஒத்துக்க வைக்க நாங்க சொன்ன பொய்… சும்மா சொல்ல கூடாது என்னை பெத்தவலும் அப்படியே நம்புற மாதிரி சொன்ன பொய்யில இவன் (சீனு) அப்படியே நம்பி யோசிக்காம இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான்” என அனைத்தையும் உலறிக்கொட்டினான்.
அனைத்தையும் கேட்ட சீனு தன் மடத்தனத்தை நினைத்து அங்கிருந்த இருக்கையில் தொப்பென அமர்ந்தார். தான் ஒரு வயது முதிர்ந்த ஆண் என்பதையும் மறந்து அவர் கண்கள் கண்ணீரை சுரந்தது.
அவன் கூறியதை கேட்ட அபி, “நீ பண்ண தப்புக்காக உன்னை அடிச்சா, அதுக்கு என் பேபியை பழிவாங்க முடிவெடுப்பியா?” என தன் ஆத்திரம் அடங்கும் வரை வேலுவை துவைத்து எடுத்துவிட்டான் அபி. இதற்கு மேல் அடித்தால் அவன் இறந்தாலும் இறந்து விடுவான் என கவி தான் அபியை தடுக்க வேண்டியதாக போயிற்று.
அந்நேரம் வைதேகி அங்கு வர தன் மகன் இருந்த நிலை கண்டு பதறி போனார். சுருண்டு கிடந்த வேலுவின் அருகிலிருந்த அபியின் சட்டையினை பிடித்து, “என் மவனை எதுக்குடா இப்படி அடிச்ச?” என அவர் கத்த…
“நீங்….நீ வயதில் பெரியவங்க என்பதால் தான் உன்னை சும்மா விடுறேன்.. இப்போவே உன் பையனை தூக்கிட்டு இங்கிருந்து போய்டு” என கர்ஜித்தான்.
அபியின் கர்ஜனையில் வைதேகி அரண்டு தான் போனார். வெங்கடாச்சலம் கண் காட்ட அதனை புரிந்து கொண்ட கவி சென்று கோபாலனை அழைத்து வந்தான்.
வைதேகி பயத்துடன் அங்கு அமர்ந்திருந்த சீனுவை, “அண்ணா” என்றழைக்க.. அவரது கை இடியென வைதேகியின் மீது இறங்கியது.
“ச்சீ… என் கண் முன்னாடியே நிக்காத.. உறவுமுறை சொல்லிக்கிட்டு இனி ஒருதரம் நீ என்கிட்ட வர கூடாது” என அவர் அதட்டியதில் வைதேகி வேலுவை சிரமப்பட்டு அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஓய்ந்து போய் அமர்ந்துவிட்ட சீனுவை தோள் தொட்டு வெங்கட் ஆறுதல் படுத்த.. அங்கு வந்த கோபாலன் நடந்ததை கேட்டு கோபம் அடைந்தாலும் உள்ளுக்குள் மகிழ்ந்தார்.
‘அப்பாடா… ஒருவழியா அந்த வேலு உடனான திருமணம் நின்னு போச்சு’ என கவி குதியாட்டம் போட்டான் மனதோடு.
அடுத்து என்ன என அனைவரும் அமைதியாக இருக்க… வெங்கடாச்சலம் ஏற்கனவே கூறியிருந்ததை போல் பெரியவர் பேச ஆரம்பித்தார்.
“பெரிய வீட்டு கல்யாணம் நின்னு போச்சுன்னு தெரிஞ்சா ஊருக்குள்ள பழைய மாதிரி நம்மாளால் தலை காட்ட முடியுமா? என் பேத்தி வாழ்க்கை ஆரம்பமே இப்படி அமைஞ்சி போச்சே” என வருத்தத்துடன் அவர் தெரிவித்தார்.
அவருடையது உண்மையான வருத்தம் என நினைத்து , அவ்வளவு நேரமும் கட்டுக்கடங்காத கோபத்துடன் இருந்த அபி மெல்ல அவர் அருகில் வந்தான்.
பெரியவரிடம்… “வருவிற்கு இன்னும் வயது இருக்கிறது. முதலில் அவள் படிப்பை முடிக்கட்டும், அதன் பிறகு ஒரு நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து வைக்கலாம்… ஊர் என்ன பேசும் நினைத்து மீண்டும் அவள் வாழ்க்கையில் ஏதாவது குழப்பம் செய்து விடாதீங்க” என அழுத்தமாகக்கூறி கீழே அமர்ந்துவிட்டான். திருமணம் நின்றதில் அபிக்கு உண்மையிலே வருத்தம் தான் ஆனால் அதை விட வேலுவிடமிருந்து தன்னுடைய பேபி தப்பித்தத்தில் அவனுக்கு மகிழ்ச்சியே.
திருமணம் நின்றுவிடும் என உறுதியாக தெரிவித்தும் இன்னும் அதற்கான அறிகுறிகள் தென்படவில்லையே என்ற பயத்துடன் தனது அண்ணனை தேடி வந்த லலிதா நடந்த அனைத்தையும் பார்த்து அதிர்ந்தாலும் நிம்மதியடைந்தார்.
ஆனால் இறுதியில் அபி பேசியதை கேட்டவர் இவன் என்ன திட்டத்தையே மாத்திடுவான் போலிருக்கே என நொடியில் சிந்தித்தவராக… சீனுவிடம் சென்று… “பாவி மனுஷா.. நான் அப்போவே சொன்னேனே கேட்டியா.. உன் தங்கச்சி பாசம் நம்ம பொண்ணு வாழ்க்கையை எங்க கொண்டு வந்து விட்டிருக்கு பார்த்தியா.. உன் பொண்ண விட அப்படி என்னய்யா உன் தங்கச்சி மேல பாசம்.. கல்யாணம் வரை வந்து ஒரு பொண்ணு கழுத்துல தாலி ஏறலனா இந்த ஊர் என்ன பேசும் தெரியுமா… என் பொண்ணு ராசியில்லாதவன்னு இந்த ஊர் உலகமே அவளை ஒதுக்கி வச்சிடுமே..” என அவர் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்.
வெங்கடாச்சலாமோ… “தங்கச்சி பெர்பார்மென்சுல பின்னுதே” என வியந்தார்.
லலிதாவின் ஆதங்கமான பேச்சில் அமைதியாக இருந்த சீனு… குற்றவுணர்ச்சியில் குன்றினார்.
லலிதா அழுதுகொண்டே இருக்க அபி அவரை ஆறுதல் படுத்தும் விதமாக பேசினான்.
அபியை சற்று நேரம் ஆழ்ந்து பார்த்த சீனு அவனின் கைகளை பிடித்துக்கொண்டு, “என் மகளுக்கு வாழ்க்கை கொடுப்பா” என யாசித்தார்.
அவர் இவ்வாறு கேட்டதும் தான் நம்ம திட்டம் வீண் போகவில்லையென அனைவரும் நிம்மதியடைந்தனர். கவிக்கு தன் நண்பன் என்ன கூறுவானென திக் திக் மொமெண்ட்டாக தான் இருந்தது.
சீனு கேட்டதும் பதறி தன் கைகளை அவரது பிடியிலிருந்து உருவியவன்..
“இது சரி வராது மாமா” என உறுதியாக மறுத்தான்.
லலிதாவிற்கு அய்யோவென இருந்தது. நாம அழுததுலாம் வீணா போய்டும் போலிருக்கே என்றவர், தன் கண்களை துடைத்துக்கொண்டு,
“ஏன் அபி என் பொண்ண நீ கட்டிக்கமாட்டியா?” என அவர் கேட்டதில் அபியும் தடுமாறி தான் போனான். ஒரு நொடி அழகிய பதுமையென நடந்து வந்த வருணாவின் தோற்றாம் அவன் கண்முன்னே வந்தது.
தன் எண்ணம் செல்லும் போக்கில் திடுக்கிட்டவன்… “இது சரி வராது அத்தை.. எங்க இரண்டு பேருக்கும் நடுவுல எட்டு ஒன்பது வருஷம் வித்தியாசம் இருக்கு… வரு என்னோட பேபி… அவளை நான் இதுவரை வேற கண்ணோட்டத்தில் பார்த்ததேயில்லை” என்றான்.
“எனக்கும் உங்க அம்மாவுக்கு கூட 11 வருஷம் வயசு வித்தியாசம் இருக்கு நாங்க சந்தோஷமா இல்லையா?” என குறுக்கிட்ட வெங்கடாச்சலத்தை “உங்க காலம் வேற” என வாயடைத்தான்.
“உங்க பையன் நீங்க அடிக்க சொன்ன பால் எல்லாத்தையும் திருப்பி அடிச்சிடுவான் போலையே.. வேற எதாவது பண்ணுங்க” என்று தன் காதில் முணுமுணுத்த கவியை முறைத்தவர்… “நான் தான் எல்லாம் செய்யணுமா நீ போய் பேசுடா” என கடிந்தார்.
தன் மாமாவின் கடி தாங்காமல்…
“சித்தி இவ்வளவு கெஞ்சுறாங்க சரி சொல்லு அபி… இன்னொருத்தவன் வந்தாலும் நின்னு போன இந்த கல்யாணத்தை வச்சு நம்ம வருவ சந்தேக படமாட்டான்னு என்ன நிச்சயம்?” என கேட்டுக்கொண்டே போன கவி.. அபியின் கோபப்பார்வையில் தன் வாயினை மூடிக்கொண்டான்.
பெரியவரும் அபியிடம், “நம்ம குடும்ப மானத்தை காப்பாற்றுப்பா” என கெஞ்ச, “என்னால் முடியாது” என்று திட்டவட்டமாக கூறினான்.
அபி ஒத்துக்கொள்ள போவதில்லை என எண்ணிய சீனு… “என் மகள் வாழ்க்கையை நானே நாசம் பண்ணிட்டேன்” என வருந்தி தளர்ந்த நடையுடன் யாருமில்லாத பக்கத்து அறைக்கு சென்று கதவினை உள் தாழிட்டு கொண்டார். அவர் சென்ற தோற்றம் சரியில்லையென பின்னே சென்ற வெங்கடாச்சலம் ஜன்னல் வழியே உள்ளே சீனு செய்யும் செயலை பார்த்து அரண்டவராய் கதவினை பலம் கொண்ட மட்டும் தட்டி உடைக்க முயற்சி செய்தார்.
சத்தம் கேட்டு அனைவரும் அங்கு செல்ல… ஃபேனில் தூக்கு போட்டு கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்த சீனுவை நோக்கி வேண்டாமென சத்தமிட்டு தடுத்தனர். அபியும் ஒரு நொடி பயந்து தான் போனான். அடுத்த நொடி கதவினை தன் முறுக்கேறிய காலினால் பல முறை உதைத்து உடைத்திருந்தான்.
வேகமாக உள்ளே நுழைந்து நாற்காலியின் மீது நின்றுகொண்டிருந்த சீனுவை பிடித்து கீழ் இறக்கினான். சத்தம் கேட்டு வீட்டின் மற்ற உறுப்பினர்களும் அங்கு வந்துவிட விஷயம் அறிந்த ரங்கநாதன்,
“நீ தூக்கு போட்டுகிட்டா நின்னு போன கல்யாணம் நடந்திடுமா” என கோபமாக சீனுவை கேட்டார்.
அதற்கு அமைதியாக… “எனக்கு வேற வழி தெரியல” என்ற சீனு.. “என் பொண்ணை தயவு செய்து கல்யாணம் பண்ணிக்கோப்பா… அவளுக்கு வேலு மேல் விருப்பம்லாம் இல்லை, என் பேச்சிற்காக தான் ஒப்புக்கிட்டாள்” எனக் கூறிக்கொண்டே அபியின் காலில் விழப்போக “அண்ணா” என அழைத்து அவரை தடுத்திருந்தார் கலா.
அதற்குள் காலில் விழப்போன தன் மாமாவையும் தடுத்து பிடித்து, “என்ன காரியம் செய்கிறீங்க” எனக் கடிந்தான் அபி.
மீண்டும் அவர் கை கூப்பி அபியிடம் இரைஞ்ச… “அபி வரு கழுத்துல தாலி காட்டுவான் நீங்க எல்லாரும் போய் நடக்க வேண்டியதை பாருங்க” என்றார் கலா.
அதில் அபி அதிர்ந்து “அம்மா” என்றழைக்க.. “உண்மையாவே இந்த அம்மா வார்த்தை மேல உனக்கு மதிப்பு இருந்தா நான் சொன்னதை செய்” என்றதோடு அங்கிருந்து நகர்ந்துவிட்டார் கலா.
தன் அன்னையின் பேச்சில் திக்பிரம்மை பிடித்தது போல் அபி நின்றுவிட்டான்.
இவனுக்குலாம் கலாவுடைய அதிரடி தான் சரியென எண்ணிய அனைவரும் நடக்கவிருக்கும் ஏற்பாட்டினை கவனிக்க சென்றனர்.
கவி மட்டும் அபியிடம் எப்படி நெருங்குவதென சிந்தித்தான். மெல்ல… “மச்சான்” என கவி தயக்கத்துடன் அழைக்க, நிமிர்ந்து பார்த்த அபி “இனி நீ நல்லா உரிமையோடே மச்சான்னு சொல்லலாம்” என தெரிவித்தான்.
‘இவன் சாதாரணமா சொல்றானா இல்லை கோபமா சொல்றானா’ என்று கவி குழம்பி போய் நின்றான்.
வெங்கடாச்சலம் நான்கு மணியளவில் வந்து அபியை தயாராக சொல்ல… “உங்க ஆசை நடக்க போகுதுன்னு சந்தோஷமா?” என நக்கலாக கேட்க.. அதை கண்டு கொள்ளாதவாறு… “ரொம்ப நாளா நான் எதிர்பார்த்த என் பையனோட கல்யாணம் நடக்க போகுதூங்குற சந்தோஷம்” எனக் கூறிச்சென்றார்.
அவரது பதிலில் அபி ஆத்திரத்தில் பற்களை கடிக்க… கவி உள்ளுக்குள் சிரித்தான். உனக்கு எப்பவும் உள்ளுக்குள் தான் சிரிப்பு என விதி கவியை பார்த்து சிரித்தது.
ஒன்றும் செய்ய முடியாத தன் நிலையை நினைத்து அபியின் மனம் கோபம் கொண்டது.
விஷயம் அறிந்த விஷ்ணு மிகவும் மகிழ்ந்து போனான். செய்தியை தெரிவித்த கவியை கட்டிக்கொண்டு ஆர்ப்பரித்தான்.
“இப்போவே அக்காகிட்ட சொல்றேன்” என ஓடியவனை தடுத்து மேடையில் இது வருவிற்கு சர்ப்ரைஸ் ஆக இருக்குமென கவி தடுத்துவிட்டான். அதனாலே கனி பதட்டத்துடன் கல்யாணம் நிக்கவில்லையா என கேட்டதற்கு விட்டேற்றியாக பதிலளித்தான்.
வீட்டில் உள்ள அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி கலை தாண்டவமாடியது. அதுவும் தன் செல்லப்பெண் தனக்கு மருமகளாக வருவதில் கலாவிற்கு தலை கால் புரியவில்லை. மகிழ்ச்சியில் திளைத்தார்.
அனைவரது மகிழ்வினையும் கண்ட அபி இதற்காகவேணும் நாம் வருவின் கழுத்தில் தாலி கட்ட வேண்டுமென முடிவெடுத்தான். திருமணம் என்பது வெறும் தாலி கட்டுவதில் மட்டுமில்லையென அந்த அறிவாளிக்கு யார் கூறுவது.
ஒரு பெண்ணின் காதலை மனதோடு நினைத்துக்கொண்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள போகிறோம் என்பது அபிக்கு நெருடலாக இருந்தது. இது சரியா தவறா என அவனால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.
‘என்னை ஏமாத்திட்டியே சசி’ என ஒரு பெண்ணின் அழு குரல் அவன் காதில் ஒலிக்க, தன் காதுகளை கரங்களால் பொத்திக்கொண்டு வெறிப்பிடித்தவன் போல் கத்தினான். அறையே நடுநடுங்கி போனது. அபியுடன் இருந்த கவி மீண்டும் அபியின் இந்த பழைய நிலையை கண்டு பயந்து போனான்.
“நான் இப்போவே இந்த கல்யாணத்தை நிறுத்தப்போறேன்” என கிளம்பியவனை கவியின் பேச்சு தடுத்தது.
“போ… போய் நிறுத்து… தூக்கு போட்டுக்க நினைச்ச சித்தப்பாவோட சேர்ந்து சித்தியும் தூக்கில் தொங்கட்டும்… நாம இவ்வளவு சொல்லியும் நம்ம பையன் என் பேச்சை கேட்கலையேன்னு அத்தை வேதனை படட்டும்… தன்னுடைய பேரனாலே தன் மானம் போச்சுன்னு தாத்தா மனசொடிஞ்சு போகட்டும்…. சந்தோஷமா இருக்க இந்த இடம் துக்க இடமா மாறட்டும்” என வெடித்தான் கவி.
உண்மைகள் புரிய தன் மனதை மீறி வருவுடன் தன்னால் வாழ முடியாது என நினைத்தவன், “எல்லாம் தெரிந்தும் நீயே இப்படி செய்தா நான் என்னடா பண்ணட்டும்… வேலு வருவுடன் வாழ்ந்து பழிவாங்கனும் நினைச்சான்… நான் அவளோட வாழாம அவ வாழ்க்கையை வீணாக்கிடுவேன்.. அப்புறம் அவனுக்கும் எனக்கும் என்னடா வித்தியாசம்?” என கவியிடம் அபி கேட்டான்.
“உன்னை அந்த பொறுக்கி கூட கம்பேர் பண்ணாத… இப்போவே வரவுக்காக இவ்வளவு யோசிக்கிற நீ நிச்சயம் அவளை நல்லா பார்த்துப்ப.. முதலில் கிளம்பு” என கூறிய கவியிடம், “நல்லா பார்த்துகிறது மட்டும் திருமணமில்ல” என்ற அபி பட்டாடை உடுத்த ஆரம்பித்தான்.
அபி கூறிய வார்த்தைகள் கவிக்கு புரிந்தாலும் எல்லாம் சரியாகிவிடுமென நல்லதாகவே நினைத்தான் கவி.
ஐயர், “மாப்பிள்ளை பொண்ணை அழைத்து வாருங்க” என குரல் கொடுக்க… அபியின் ஒரு புறம் கவியும் மறுபுறம் விஷ்ணுவும் நின்று அழைத்து வர…
“நான் எங்கயும் ஓடிடமாட்டேன் இது என்னடா பாடிகார்டு மாதிரி. கொஞ்சம் தள்ளி பின்னால் வாங்கடா” என எரிந்து விழுந்து வேகமாக சென்று மணமேடையில் அமர்ந்தான்.
அதேபோல் வருவை கனியும், வாசுவும் அழைத்து வர… மணமேடையில் அமர்ந்திருந்த அபியை பார்த்து இருவரும் மகிழ்ந்தனர். அபிக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த கவியை கனி எப்படி என கண்களால் கேட்க அவன் கவினியாதது போல் வேறு பக்கம் திரும்பி கொண்டான்.
போடா என உள்ளுக்குள் கவியை திட்டிய கனி வருவின் கையை சுரண்டினாள். தலை குனிந்து நடந்து வந்த வரு மேடையை பார்க்கும் திரணற்று கண்களை தனது கை விரல்களில் பதித்தே மேடையேறி அபிக்கு அருகில் அமர்ந்தாள்.
ஐயர் சொல்லிய மந்திரங்கள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்து கொண்டிருந்த அபி தனக்கு வலதுபுறம் அமர்ந்த வருவை திரும்பி பார்த்து ஒரு நொடி பல்வேறு எண்ண அலைகளுக்குள் சிக்குண்டுப்போனான்.
ஐயரின்…
“கெட்டி மேளம்… கெட்டி மேளம்…”
என்ற சத்தத்தில் நினைவுலகிற்கு மீண்டவன் ஐயர் அளித்த தாலியினை வாங்கி வருணாவின் கழுத்தை நோக்கி கொண்டு செல்ல, அவனையும் அறியாமல் அவனது மனம் நிமிர்ந்து, “என் கண்ணை பாரு பேபி” என கூறியது.
அபி மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட பொன் தாலியினை வருவின் கழுத்தில் பதிக்க….
‘முடிந்தது…. எல்லாம் முடிந்தது!’
என மனதோடு வருணா கூற… பின்னங்கழுத்தில் தாலியை பதித்த அபியின் விரல் ஸ்பரிசத்தில் சிலிர்த்து முகத்தினை நிமிர்த்தி தனக்கு அருகில் இடது புறம் அமர்ந்திருப்பவனை பார்த்த நொடி அவள் அடைந்த உவகைக்கு அளவே இல்லை.
அவள் தன் குட்டி கண்களை அகல விரித்து அபியை பார்க்க அவனும் அந்நேரம் அவளை தான் பார்த்திருந்தான். இருவருடைய பார்வையும் ஒருவரையொருவர் கவ்விக்கொள்ள ஒரு விதமான மோனை உலகில் இருவரும் சஞ்சரித்தனர்.
“நாழி ஆகுது… சீக்கிரம் கட்டுங்கோ” என்ற ஐயரின் குரலில் நடப்புக்கு வந்த அபி அவளது கண்களை உற்று நோக்கிக்கொண்டே கயிற்றில் இரண்டு முடிச்சிட்டு மூன்றாவதையும் போட முயல்கையில், “இந்த முடிச்சு கனி போடட்டும்” என்ற கலாவின் வார்த்தையில் தனது கையினை எடுத்துக்கொண்டான்.
அபி, வருவிற்கு பின்னால் நின்றிருந்த கனி மற்றும் கவி.. அவர்களின் நிகழ்வில் ஒருவருக்கொருவர் தங்களை பார்த்து கொள்ள கவியின் மனதில் ஒரு விரக்தி தோன்றி மறைந்தது.
“அண்ணாவை பார்த்தது போதும் மூன்றாவது முடிச்சு போடு” என்ற விஷ்ணுவின் மென் குரலில் தன்னவனை பருகிக்கொண்டே தனக்கு அண்ணியாகிய தோழியின் கழுத்தில் முடிச்சிட்டாள் கனி.
இதுவரை கல்யாணம் நடக்குமா நடக்காதா என குழப்பத்தில் சஞ்சரித்த… அனைவரும் இன்முகத்துடன், மனம் நிறைந்த மகிழ்வுடன் அட்சதை தூவி மணமக்களை ஆசீர்வதித்தனர்.
வருணாவை பார்க்கும் போது தன் மனம் உணரும் உணர்வு அவனுக்கு புரியவில்லை.
‘தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம்… அப்போ என் காதல்?’ அபிக்கு கழுத்தை நெறிப்பதை போல் இருந்தது. “
‘தான் தன் காதலுக்கு துரோகம் இழைத்து விட்டதாக மருகினான்.’ அவனின் குழப்ப முகத்தை பார்த்து உணர்ந்து கொண்ட கவி மெல்ல அவனருகில் குனிந்து…
“அவ்வளவு தான் அபி, எல்லாம் சரியாகிவிட்டது” என்க..,
“அவ்வளவுதானே?” என அழுத்தமாக கேட்டவன், கவி கூற வருவதை கேட்காமல்… மணமேடையிலிருந்து எழுந்து மாலையை கழற்றி கவியின் கையில் கொடுத்து யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் விடுவிடுவென மண்டபத்தை விட்டு வெளியேறினான்.
சில நிமிடங்களுக்கு முன்பு தன் கழுத்திலேறி மார்போடு உறவாடும் தாலியினை தன் நடுங்கும் விரல்களால் அழுத்தி பிடித்தாள். வேக நடையுடன் செல்லும் தன் கணவனையும் தாலியையும் மாறி மாறி பார்த்தவளது கண்களில் கரகரவென நீர் இறங்கியது.
அனைவரும் அவனது செய்கையில் சதம்பித்து விட்டனர்.
துளிர்விடும் 🌱.