சருகு 🍂 17 :
இரண்டு முப்பது மணியளவில் சென்னையின் கடற்கரை பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டின் முன்பு காரை நிறுத்தினான் அபி.
கடல் சற்று தூரத்தில் இருந்தாலும் வீட்டின் முன் படிகளில் நின்று பார்த்தாலே கடலின் அழகை ரசிக்க முடியும். காரிலிருந்து இறங்கியதும் உடலைத் தழுவிய உப்புக் காற்றை ஆழ்ந்து சுவாசித்தவள், கடலின் அலைகளை ஒரு நிமிடம் ரசித்து விட்டு வீட்டிற்குள் நுழைய வலது காலை எடுத்து வைத்த சமயம்,
“எனக்கு ஸ்டுடியோவில் வேலையிருக்கு வர்றேன்” என்ற அபி வருவிடம் வீட்டு சாவியினை கொடுத்துவிட்டு அப்படியே காரினை ரிவர்ஸ் எடுத்து சென்று விட்டான்.
இருட்டில் தனித்துவிடப்பட்ட குழந்தையைப் போல் தவித்து நின்றவள், “பாப்பா” என முதுகுக்குப் பின்னால் கேட்டக் குரலில், கண்களில் துளிர்த்த நீரை உள்ளே புதைத்து திரும்பிப் பார்த்தாள். புன்னகை முகமாக ராமு நின்றிருந்தார்.
தனக்கு துணைக்கு ஆள் கிடைத்த மகிழ்வில், “ராமு அண்ணா வாங்க, நீங்க எப்படி?” என வரு ஆச்சரியமாகக் கேட்ட கேள்விக்கு,
“கல்யாணம் முடிந்ததும் கவி தம்பி என்னை இங்க போகச் சொல்லிட்டாரு பாப்பா. அது ஏன்னு இப்போ தான் புரியுது, நீங்க வறீங்கன்னு கவி தம்பி போன் பண்ணி சொல்லிச்சு அதான் பதார்த்தம் வாங்கப் போயிருந்தேன்.. அதுக்குள்ள வந்துட்டீங்க, நீ உள்ள வா பாப்பா.. அபி தம்பி எப்பவும் இப்படி தான் வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்கும்” என்று கதவைத் திறந்து அவர் உள்ளே செல்ல,
தொலைந்துபோன பாதையில் தன்னுடைய வழித்தடத்தை தேடி முதல் அடியை கலக்கத்துடன் எடுத்து வைத்து உள் நுழைந்தாள் வருணாளினி.
வருவின் கையில் காபி கோப்பையை அளித்தவர், “என்ன பாப்பா வீடு பிடிச்சிருக்கா?” எனக் கேட்டார்.
“வீடு ரொம்ப சுத்தமா அழகா இருக்குண்ணா…”
“அபி தம்பிக்கு தரையில முகம் தெரியற அளவுக்கு சுத்தமா இருக்கணும் பாப்பா, லீவ் கிடைச்சா தம்பியும் சும்மா இருக்காம வீட்டை சுத்தம் பண்றேன், அழகா வச்சிருக்கணும்ன்னு எல்லாத்தையும் தொடச்சி எடுத்து வைக்கும். மேல ரெண்டு ரூம் இருக்கு பாப்பா, வலது பக்கம் தான் அபி தம்பி ரூம், அது என்னவோ தெரியல பாப்பா… ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் ராத்திரி அபி தம்பி வெறி பிடிச்ச மாதிரி கத்தி அலறி துடிச்சுது. அதுல இருந்து கவி தம்பியும் அபி தம்பி ரூம்லே தங்க ஆரம்பிச்சிருச்சு. அன்னையிலிருந்து அபி தம்பி பழைய தம்பியாவே இல்லை பாப்பா, நீ தான் நம்ம அபி தம்பியை பழைய மாதிரி மாத்தணும்” என்று கவலையுடன் கூறியவர், “நீ போ பாப்பா, பிரயாணம் செஞ்சது களைப்பா இருக்கும், செத்த ஒய்வு எடு” என்றார்.
வருவும் சரியெனக் கூறி கீழேயிருந்த ஒரு அறையில் சென்று படுத்துக்கொண்டாள். அவளது மனம் அபியைப் பற்றியே சிந்தித்தது.
‘ராமு அண்ணா சொல்றதைப் பார்த்தா, அப்படியென்ன சசி அத்தான் வாழ்வில் நடந்திருக்கும்.’ சிறிது நேரத்தில் குழப்பத்துடன் உறங்கியும் விட்டாள்.
இங்கு கிராமத்தில் கடைசியாக அபி கவியிடம் கூறிவிட்டு சென்றதை வைத்து கவி தற்போதைய அபியின் படத்து ஹீரோ என்பதை தெரிந்துக் கொண்ட கனி, கவி தன் மீது கோபமாக பேசாது இருக்கின்றான் என்பதை மறந்தவளாய் அவனைத் தேடி அவன் அறைக்குச் சென்றாள்.
கனி வந்திருப்பதை அறிந்து கவி என்ன என்பதைப் போன்று பார்க்க,
“நீங்க ஹீரோவா? படம் நடிக்கிறீங்கன்னு யார் கிட்டவும் சொல்லவேயில்லையே” எனக் கேட்டாள்.
“ஏன்.. யார்கிட்ட சொல்லணும்?”
பதில் அளிக்காது எதிர் கேள்வி கேட்ட கவியிடம்,
“என்கிட்ட சொல்லணும் தோணலையா?” என சிறு வருத்தத்துடன் கேட்டாள்.
அதற்கு அவனோ சற்றும் அசராது, “வீட்டில் யார் யாரிடம் சொல்லணுமோ அவர்களிடம் சொல்லியாச்சு.. உன்கிட்ட நான் எதற்கு இதையெல்லாம் சொல்லணும்” எனக் கூறியவன், “எப்படி மேடம் தனியா என் ரூமுக்கு வந்திருக்கீங்க என் மேல் அவ்வளவு நம்பிக்கையா?” என நம்பிக்கை என்ற வார்த்தையை அதிக அழுத்தத்துடன் உச்சரித்தான்.
அதில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் செய்த தவறு கனிக்கு புரிந்தது. தன்னை யாரோ போல் அவன் பேசுவதும் மனதில் வலியை ஏற்படுத்தியது. அடுத்த நொடி அங்கிருக்காமல் வெளியேறிவிட்டாள்.
கனி சென்றதும்… “ஏன்டி! நான் இப்படி பேச நீதானே காரணம்.. அன்னைக்கு என்ன வார்த்தையெல்லாம் பேசுன, இப்போ நான் சொல்லிக்காட்டும் போது வலிக்குதா.. உன்னை விட உன்னை காயப்படுத்துறேன்னு எனக்குத் தாண்டி அதிகமா வலிக்குது” எனக் கவி புலம்பித் தவித்தான்.
ஊரே அமைதியில் உறங்கிக்கொண்டிருந்தது. நள்ளிரவு கடந்து இரவா, பகலா எனப் பிரித்தறிய முடியாத சாம நேரத்தில், எங்கோ தூரத்தில் கேட்ட மக்களின் அலறல் குரல் கேட்டு கண்விழித்த கவி கீழே இறங்கி வர நடுத்தர வயதுடைய ஒருவர் கோபாலனிடம் கதறிக்கொண்டிருந்தார். வீட்டு ஆண் மக்கள் அனைவரும் விரைந்து வயல் பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி உயிரையும் உறைய வைத்தது.
நெற்கதிர்கள் பால் பிடித்து பச்சையும் மஞ்சளும் கலந்து காணப்பட்ட வயல்கள் முழுவதும் ஒரு பக்கம் எரிந்து கரு நிற சாம்பலாகவும், மறுபுற வயல்கள் அந்த இரவு நேரத்திலும் சூரியனின் பிரகாசமாக தீச்சுவாலைக்கு இரையாகிக் கொண்டிருந்தன. வாய்க்காலில் ஓடும் நீரை கைகளாலும், பாத்திரத்தையும் கொண்டு அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர் ஊர் மக்கள். பெற்ற பிள்ளைக்கும் மேலாக உயிரை வியர்வையாய் கொட்டி வளர்த்த பயிர் கண் முன்னே கருகுவதைக் கண்ட ஒரு சிலர் நெஞ்சில் அடித்துக் கதறி அழுத காட்சி கல் நெஞ்சம் கொண்டோரையும் கரைக்கும் வகையில் இருந்தது.
உறைந்து நின்ற கவி மக்களின் அழுகுரலில் கலைந்து விரைந்து செயல்பட்டான். ஒரு பக்கத்திலிருந்து தீ விரைந்து பரவி வர , மறுபுறத்திற்கும் தீக்கும் நடுவில் இறங்கி நெற்கதிர்களை அறுத்து தீப்பிடிக்காத பக்கம் தூக்கிப் போட்டான். அவனது நோக்கம் புரிந்து மற்றவர்களும் அதையே செய்ய , அவர்கள் அறுத்த நடுப்பகுதியோடு தீ பரவுவது நின்று போனது. கிணற்று மோட்டாரிலிருந்து நீண்ட ரப்பர் குழாயினை போட்டு மீதம் எரிந்து கொண்டிருந்த தீயினை அணைத்துக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் பொழுது புலர்ந்திருந்தது. அனைவரும் சோர்ந்து சோகமே உருவாக கருகியிருந்த வயலில் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர்.
இரவு இரண்டு மணிக்கு தீ பிடித்தது. தீயணைப்புத் துறைக்கு கால் செய்தும் அவர்கள் வரவில்லை.
“ஊருக்குள் இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்திருக்கு அந்த தலைவர் இன்னும் இங்க எட்டிக்கூட பார்க்கல.” வெங்கடாச்சலம் தனது தந்தையிடம் கூறிக் கொண்டிருந்தார்.
அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த கவி, “எனக்கு என்னவோ இது அந்த சாமிகண்ணு, இங்கு சாயத் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தில் இருக்கும் அந்த மும்பைக்காரனுடைய சதியாக இருக்குமெனத் தோன்றுது” என்றான்.
“எப்படித் தம்பி சொல்ற?” எனக் கேட்ட ரங்கநாதனிடம், “பாருங்கப்பா இங்கு எரிந்து சாம்பலாக் காட்சியளிக்கும் நிலங்கள் யாவும் தொழிற்சாலை அமைப்பதற்காக அவர்கள் கேட்ட நிலப்பகுதி” என்றான்.
கவி கூறியதற்கு பிறகு தான் வெங்கட்டிற்கும் அது புரிந்தது. இப்போதே போலீஸிடம் செல்லலாம் என்றவரை தடுத்தார் கோபாலன்.
“அது வேஸ்ட், தீயணைப்புத்துறையை தடுத்தவனுக்கு போலீசை விலைக்கு வாங்குவதா கஷ்டம். இதில் என்ன நடந்தாலும் யாரும் கண்டுக் கொள்ள போவதில்லை. நமக்காக நாம் தான் போராட வேண்டும். இங்கு அரசாங்கமும், அரசாங்க ஊழியர்களும் அவனை மாதிரி ஆட்களுக்காகத் தான் இருக்கிறார்கள் என்றார் கோபத்துடன்.
கோபம் உள்ளுக்குள் வெடித்துக் கொண்டிருந்தாலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அனைவரும் அமைதி காத்தனர்.
*********************
மதியம் வெளியில் சென்ற அபி இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை. ஏன் வரவில்லை எனத் தவித்தவளை ராமு அண்ணா தான் பல காரணங்கள் கூறி உறங்க வைத்திருந்தார்.
மறுநாள் காலை பத்து மணியளவில் வீடு திரும்பிய அபி, அங்கு அவனுக்காக, அவனது வரவிற்காகக் காத்திருந்த வருவை சற்றும் கண்டு கொள்ளாது மாடியேறி தனது அறைக்குள் நுழைந்தான். அடுத்த அரைமணி நேரத்தில் கிளம்பி வந்தவன் வருவிடம் “சாப்பிட்டியா?” எனக் கேட்டான். அதற்கு அவள் பதிலளிக்கும் முன்பே,
“ராமு அண்ணா பட வேலையில் ரொம்பவே பிஸி.. சோ, எனக்காகலாம் வெயிட் பண்ணாதீங்க.. இன்னும் ஒரு மாதத்திற்கும் மேல் நான் வீட்டிற்கு எப்போ வருவேன் போவேன்னு எனக்கேத் தெரியாது” என சொல்லி முடித்தவன் விடுவிடுவென வெளியேறிவிட்டான்.
ராமுவின் முன்பு வருவின் நிலை பரிதாபமானது. நாம் ஏதேனும் கூற போய் அது வருவை மேலும் குழப்பி விடுமோ என்று நினைத்த ராமு எதுவும் பேசாமல் உள்ளே சென்றார். வருவும் தனக்கான இடம் இதுதான் என்பதை போல் அனைத்தையும் வெறுத்தவளாக விரக்தியாக எண்ணிக்கொண்டாள்.
நேற்று வருவிடம் சொல்லிச் சென்றவன் நேராக ஸ்டுடியோவிற்கு தான் சென்றான். படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில் அடுத்தகட்டமாக எடிட்டிங் வேலையை ஆரம்பித்தான். எடிட்டரிடம் சீன்ஸ் வரிசையையும், படத்தின் முக்கிய காட்சிகளையும் கூறியவன் பணியைத் தொடங்கி அவருடன் அமர்ந்து உதவி புரிந்தான்.
எப்போதும் வேலையென்று வந்துவிட்டால் அனைத்து உணர்வுகளையும் வெளிக்காட்டாது முழு தீவிரத்துடன் பணியில் ஈடுபடும் அபியின் முகம் இன்று கவலையில் தோய்ந்திருந்தது. அதனை கவனித்த நிவாஸ், “சார் உடம்பு சரியில்லையா?” என்று அக்கறையாக வினவினான்.
அபியின் இல்லையென்ற பதிலில், அவரது கவலையை எப்படித் தெரிந்து கொள்வது என்று யோசித்த நிவாஸை கலைத்தது அபியின் குரல்.
“உடனடியா ஒரு பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு பண்ணுங்க நிவாஸ்…”
“சார்… எனி ப்ரொப்ளம்?”
“நத்திங்… நிவாஸ்… பட் இதை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தலன்னா, இயக்குனர் அபினவ்விற்கு பிரச்சனைகள் வரலாம். சோ, ஐ வான்ட் இம்மிடியட்லி.. பிலீஸ் அரேஞ் இட்.”
அபியின் வார்த்தைகளின் தீவிரம் புரிந்தவன், “ஓகே சார்” என்றதோடு.. அதற்கான வேளைகளில் இறங்கினான்.
அடுத்த அரை மணி நேரத்தில் பிரபலமான பல பத்திரிக்கைகளிலிருந்து நிருபர்கள் பிலிம் சிட்டி ஸ்டுடியோவிற்கு வருகை தந்திருந்தனர்.
அவர்களுக்கு முதலில் ஜூஸ் குடுக்க சொல்லிய அபி, கவிக்கு தனது மொபைலிலிருந்து அழைத்தான். கவியினால் அழைப்பு எடுக்கப்பட்டதும், அவன் பேசுவதற்கு முன்பு, “நேற்று நடந்த வெட்டிங் போட்டோஸ் எனக்கு இப்போவே அனுப்பி வை” என்றான்.
அதற்கு கவி, “நேற்று நடந்த திருமணமா? யாருக்கு டா நடந்துச்சு?” என நக்கலாகக் கேட்டான்.
பற்களை கடித்த அபி, “கடுப்பேத்தாம அனுப்பி வைடா” என்று கத்தியவன் போனை அணைத்திருந்தான்.
‘தன்னுடைய திருமணம் என சொல்லக் கூட யோசிப்பவன் எப்படி வருவை மனைவியாக ஏற்றுக்கொள்ளப் போகிறான்’ எனக் கவலைக்கொண்ட கவி, நேற்று திருமணத்தின் போது அவனது மொபைலில் விஷ்ணு எடுத்த போட்டோக்களை அனுப்பி வைத்தான்.
பிரெஸ் பீப்புள் அனைவரும் அபியின் வருகைக்காகக் காத்திருந்தனர். பத்து நிமிடங்கள் கழித்து அவர்கள் முன் வந்தான் அபி.
நிருபர்கள் அனைவரும் அபியின் தற்போதைய படத்தைப் பற்றிய தகவலினை எதிர்பார்த்து வந்திருக்க, அவன் கூறிய செய்தியில் அதிர்ச்சியடைந்தனர். நிவாஸிற்கு இவர் உண்மையை தான் கூறுகிறாரா என சந்தேகித்தான். ஏனெனில் அபியின் குணம் ஓரளவிற்குத் தெரிந்தவனாயிற்றே.
“ஹாய்… எவ்ரி ஒன்.. இப்போ உங்களை நான் அழைத்ததற்கானக் காரணம் என் படத்தைப் பற்றியது அல்ல, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தப்பட்டது”. நான் சாதாரண ஒரு நிலையிலிருந்திருந்தா இதைப்பற்றி தெரிவித்திருக்க மாட்டேன். ஆனால், திரைத்துறை என்று வந்துவிட்டால்… இங்கு, நாங்கள் தும்பினால் கூட அது விமர்ச்சிக்கப்படும். அதனாலே, உங்கள் மூலம் மக்களுக்கு அறிவித்துவிடலாமென்று வரவழைத்தேன்.”
அங்கிருந்த அனைவரும் என்னவாக இருக்குமென்று எதிர்பார்ப்புடன் அபியின் முகத்தையே கூர்ந்து பார்த்திருந்தனர்.
“நேற்று எனக்குத் திருமணம் நடந்து விட்டது. என்னோட கிராமத்தில் திருமணம் நடைபெற்றதால், யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. அதுவும் திடீரென அமைந்துவிட்டதால் முன்னறிவிப்பும் செய்ய முடியவில்லை. நாளை, ஒரு பெண் என் வீட்டில் வசிக்கின்றாள் என்று யாரும் தவறானக் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது என்பதற்கே இப்போதைய அறிவிப்பு. இதோ, இவர் தான் எனது மனைவி” என்று சற்று நேரத்திற்கு முன்பு கவி அனுப்பி வைத்த தன்னுடைய திருமண போட்டோவினை அனைவருக்கும் காண்பித்தான்.
“திடீர் கல்யாணம் சொல்றீங்களே… பெரியவங்களுடைய கட்டாயத்தால் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?”
“இந்தக் கல்யாணத்தில் உங்களுக்கு விருப்பம் இல்லையா?”
“அவசரமாக நடந்த காதல் கல்யாணமா?”
“பொண்ணு யாரு, உங்களுக்கு சொந்தமா?”
“உங்க மனைவி என்ன பண்றாங்க?”
ஒவ்வொருத்தரும், வித விதமான பல கேள்விகளைக் கேட்க, கோபத்தின் எல்லையை கொஞ்சம் கொஞ்சமாக கடந்துக் கொண்டிருந்தான் அபி.
கண்கள் கோபத்தில் சிவக்க அபி நின்றிருந்ததே நிவாஸிற்கு, இத்திருமணம் இவர் விருப்பமின்றி நடைபெற்றுள்ளது என்பதை யூகித்தவனாக, நிருபர்களிடம் சென்று, “நாளை உங்களுடைய அனைத்து ஊடகங்கள் மற்றும் செய்தித்தாளில் வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது அவருடைய பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டு, அபி சார் விருப்பத்துடன் நடைபெற்றது தான்” என்றுக் கூறி அனைவரையும் வழியனுப்பி வைத்தான்.
எல்லோரும் சென்றுவிட, கோபத்திலிருந்து வெளி வந்த அபி நிவாஸிடம், “தேங்க்ஸ்” எனக் கூறி தனது அறைக்குள் நுழைந்தவன் மனதை கடந்த கால சோகங்கள் தனக்குள் இழுத்துக் கொண்டன. அதில் முற்றிலும் வருணாவை மறந்தே விட்டான்.
அபியின் மனநிலையை ஓரளவு கணித்திருந்த நிவாஸ் அவனை தொந்தரவு செய்யாது, அபிக்குத் துணையாக அலுவலகத்திலேயே தங்கிக்கொண்டான்.
மறுநாள் காலை, இரவு நீண்ட நேர கண் விழிப்பிற்கு பிறகு அதிகாலையில் அசந்து உறங்கிக்கொண்டிருந்த அபியை… நிவாஸ் தான் எழுப்பி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
அபி சென்றதும், நிவாஸ் உடனடியாக கால் செய்தது கவிக்கு தான். ஏனென்றால் அபியை கவியால் மட்டுமே தன்னிலையில் வைத்திருக்க முடியுமென்று நினைத்தான். ஆனால், அவனது அழைப்பிற்கு கவியிடமிருந்து பதிலில்லாமல் போனது.
தீயினை அணைத்து, ஊர் மக்களை கவலைப்படாமல் இருக்க சொல்லிவிட்டு பெரிய வீட்டு ஆண்கள் அப்போது தான் வீட்டிற்கு வந்தனர். செய்தி கேள்வி பட்ட பெண்கள் வருத்தம் அடைந்தனர். அவர்களுக்கு முடிந்தளவு உதவிகளை செய்ய வேண்டுமென அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, டிவி பரர்த்துக்கொண்டிருந்த விஷ்ணு கத்திய கத்தலில் அங்கு சென்று பார்த்த எல்லோரும் சிறு நிம்மதி கொண்டனர்.
தொலைக்காட்சியில் நேற்று அபி அளித்த பிரத்யேகப்பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எங்கே வருணாவுடன் வாழ முடியாது எனக் கூறிவிடுவானோ என்று பயந்துக்கொண்டிருந்த பெரியவர்களுக்கு, ஊருக்கே தன் மனைவியாக வருணாவை அவன் அறிவித்தது ஆறுதலாக இருந்தது.
கவிக்கு மட்டுமே அபியின் இந்த செயலுக்கு பின்னாலிருக்கும் நோக்கம் புரிந்தது. யாரும் அபியையும் வருணாவையும் தவறான உறவாக எண்ணிவிடக் கூடாதென்பதற்கே இந்த ஏற்பாடு.
உடனடியாக நிவாஸிற்கு அழைத்து நடந்த அனைத்தையும் கேட்டு, அபி இரவு முழுக்க வீட்டிற்கு செல்லவில்லை என்றும், இப்போதும் போனதும் வந்துவிட்டான் எனத் தெரிந்துகொண்டான். உடனடியாக ராமு அண்ணாவுக்கு அழைப்பு விடுத்திருந்தான்.
கவி அழைப்பு என்றதுமே தனது மொபைலை வருவிடம் அளித்து விட்டு அவர் தோட்டத்திற்கு சென்றுவிட்டார்.
“ஹலோ… வரு…”
“அண்ணா…”
கவியின் குரலைக் கேட்டதும் உடைந்தக் குரலில் அண்ணா என்றழைத்தவள், விசும்ப ஆரம்பித்தாள். தங்கையின் அழுகை சத்தத்தில் பதறினான்.
“என்னாச்சுடா.. அபி ஏதாவது திட்டிட்டானா?”
இல்லையென அவள் தலையசைத்தது மொபைலின் அந்த பக்கம் இருந்த கவிக்கு தெரியவில்லை. அவன் மீண்டும், “என்னாச்சும்மா.. சொல்லு” என பதட்டம் கொள்ள, “என்னை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டுப்போறியா” எனக் கேட்டிருந்தாள்.
“ஏன்?”
என்ற ஒற்றை வார்த்தை மிகுந்த அழுத்தத்துடன் கவியிடமிருந்து ஒலித்தது.
“அவருக்கு என் ஞாபகமே இல்லை கவி அண்ணா, எனக்கு இங்க ஒரு நாளிலே அனாதை மாதிரி பீல் ஆகுது.” தன் மனநிலையைக் கூறியவள் அழுதுகொண்டே, “வந்து கூட்டிட்டு போ, இல்லை.. நீ இங்க வா” என்றாள்.
வருவின் வருத்தம் கவியை பாதித்தது. ஆனால், இப்போது ஊரில் நடக்கும் பிரச்சனைகளை எடுத்துக் கூறி தன்னால் முடிந்தவரை சீக்கிரம் வர பார்க்கிறேன் என்றான். இருப்பினும் வருவை கொஞ்சம் நம்பிக்கையுடன் இருக்க வைக்க வேண்டும் என்று நேற்று அபி அளித்த பேட்டியையும் இன்று அது அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது எனபதையும் தெரிவித்து, அபி உன்னையும் உன் காதலையும் ஏற்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை, அதுவரை அவன் மீதான காதலுடன் நம்பிக்கையாக இரு எனக் கூறி போனை வைத்துவிட்டான்.
இணைப்புத் துண்டிக்கப்பட்டதும் விரைந்து சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்து கவி கூறிய செய்தி சேனலை வைத்து பார்த்தாள்.
நம் நாட்டில் உயிர் போகும் பிரச்சனைகள் பல இருப்பினும் அவற்றையெல்லாம் மூலையில் ஒரு துண்டு செய்திகளாக அறிவிக்கும் ஊடகம் , இந்த மாதிரி திரை பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கிசுகிசு என்ற பெயரில் மணிக்கு பத்து முறை ஒளிபரப்பு செய்து தங்களது டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகரித்துக் கொள்வர். மக்களும் இது போன்ற கவர்ச்சி செய்திகளையே விரும்புகின்றனர் என்பதே நிதர்சனம்.
அபி தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூறியிருந்ததை விட, இவர் தான் என் மனைவியென்று அவர்களது திருமண புகைப்படத்தைக் அவன் காட்டியது தான் வருவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அந்த மகிழ்ச்சியுடன் அன்றைய பொழுதினைக் கழித்தவள் ராமு அண்ணாவை உட்கார வைத்து விட்டு அபிக்காக இரவு உணவினை பார்த்து பார்த்து அவனுக்கு பிடித்ததாக செய்து வைத்துக் காத்திருந்தாள்.
மணி ஒன்பதைக் கடந்து சென்றிருக்க, “அவங்க எப்படினாலும் இருக்கட்டும்.. இனி நான் மனைவியா நடந்துக்கணும். அதற்கு இந்த அழு மூஞ்சி வருவை ஏறக்கட்டி வைத்துவிட்டு பழைய வருவா மாறனும், அவங்க வாழ்வில் யார் இருந்தாலும் அவருடைய மனைவி நான் மட்டுமே” என ஒரு முடிவெடுத்தவளாக அபிக்கு கால் செய்தாள்.
முதல் இரண்டு ரிங்கிலே ஆன் செய்தவன், வரு பேசுவதற்கு முன்பு…
“எனக்கு வேலை இருக்கு. முடிஞ்சா பிறகு பேசுறேன்” என்க, அதற்கு வரு அவனை விட வேகமாக, “இன்னும் ஒரு மணி நேரத்தில் நீங்க இங்க இருக்கணும்.. அப்படி வரலன்னா, நான் அங்க வந்துடுவேன்” என்று மிரட்டும் தொனியில் கூறி அவன் பதில் பேச வாய்ப்பளிக்காது போனை வைத்து விட்டாள்.
கிராமத்தில் மாலை நான்கு மணியளவில் வயலில் தீ பிடித்ததால் பாதிப்படைந்த மக்கள் அனைவரும் பெரிய வீட்டின் முன்பு கூடியிருந்தனர். அடுத்து என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை. கவலையுடன் அனைவரும் அமர்ந்திருக்க… அங்கு, சாமிக்கண்ணு வந்தார்.
அனைவரையும் பார்த்து சாமிகண்ணு விஷமப் புன்னகையுடன் எல்லாரும் நலம் தானே என்றுக் கேட்க, கவி ஆத்திரத்தில் கைகளை முறுக்கி அவனை அடிக்க எகுறுகையில், ரங்கநாதன் பிடித்துக் கொண்டார்.
சாமிகண்ணு பெரியவரை விடுத்து… மக்களிடம், “நான் நேரடியாவே விஷயத்திற்கு வர்றேன்” என்று ஆரம்பித்தார்.
“இப்போ எரிந்து போன உங்களது பயிர்களுக்கும் சேர்த்து நிலத்தின் மதிப்போடு இரண்டு மடங்காக பணம் கொடுக்கிறேன், உங்கள் நிலங்களை எனக்கு எழுதிக் கொடுத்துடுங்க” என்றான். ஒருசிலர் சரியெனக் கூற மற்றும் சிலர் யோசித்து சொல்வதாகக் கூறினார்.
“பணமென்றால் அனைவரும் சரிவது இயல்பு தானே ராஜகோபாலன்.”
மக்கள் தன் பக்கம் எப்படியும் சாய்ந்து விடுவர் என்று நக்கலாக பெரியவரைப் பார்த்து கூறிச்சென்றான் சாமிகண்ணு.
வீட்டின் மூத்த தலைமுறையினர் அமைதியாக இருக்க, கவி வெறுப்புடன் உள்ளே சென்றான். பெரியவரின் கவலையைப் பார்த்த மக்கள், “எங்களை மன்னிச்சிடுங்க ஐயா… எங்களுக்கும் வேறு வழியில்லையே ஐயா!!”
“சாமிகண்ணு சொல்வதைப் பார்த்தால், நிலத்திற்கு நான்கு மடங்கு பணமல்லவா கிடைக்கிறது, இப்போது எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பிற்கும், எங்களுடைய வருமான செலவுக்கும் பணம் தேவைங்க ஐயா…”
தாங்கள் ஒப்புக்கொண்டதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்க, கோபமாக உள்ளேச் சென்ற கவி மடிகணினியுடன் வெளியில் வந்து அனைவருக்கும் முன்பாக வைத்தான்.
அனைவரும் என்னவோ, ஏதோவென்று பார்த்திருக்க.. கவி பேச ஆரம்பித்தான்.
“உங்களுடைய நிலை எனக்கு புரிகிறது, இப்போ நீங்க இருக்கும் நிலைக்கு நிலத்தை விற்று வரும் பணம் உபயோகமாக இருக்கும்… அதை நான் ஒப்புக்கொள்கிறேன். இப்போது அவன் கொடுக்கும் பணம் அதிகபட்சமாக உங்களுக்கு ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத் தேவைகளைத் தீர்க்குமா!!!, அதற்கு பிறகு… கூலி வேலைக்கு சொல்வீர்களா???. கூலி வேலையை நானொன்றும் தப்பு சொல்லவில்லை, நம் நிலத்தில் முதலாளியாக வேலை பார்த்துவிட்டு மற்றவரிடத்தில் சென்று வேலை செய்வது எவ்வளவு கஷ்டம்… அதை விடுங்கள், எரிந்து சாம்பலாகக் காட்சியளிக்கும் நிலங்கள் யாவும் நீர்ப்பாய்ச்சி, இரண்டு முறை உழுதால் சரியாகிவிடும், அதன் பிறகு எத்தனை முறை வேண்டுமானாலும் பயிர் செய்து லாபம் பார்க்கலாம். ஆனால், இப்போது ஏற்பட்டிருக்கும் சிறு நஷ்டத்திற்கு விலையாக உங்கள் நிலத்தையே கொடுத்தால், அவன் அந்த சாய தொழிற்சாலை நிறுவ காத்திருப்பவனிடம் சென்று விற்ப்பான். அவன் பசுமையாகக் காணப்பட்ட நிலத்தில் கட்டிடத்தைக் கட்டி நில வளத்தையே மாற்றிவிடுவான். அந்த தொழிற்ச்சாலை மட்டும் இங்கு வந்துவிட்டால் அடுத்த இரண்டு வருடத்தில் நம் ஊர் மற்றும், ஊரைச் சுற்றி ஓடும் ஆற்றின் நிலை என்னவாகும் தெரியுமா??? அதுமட்டுமில்லை காற்று, நீர் போன்றவை மாசடைந்து அதனால் புது புது நோய்கள் உருவாகி பாதிப்படைய போவது நீங்களும் தான்” எனக் கூறியவன் மடிக்கணினியை ஆன் செய்து இப்போது அவன் கூறியவற்றை காட்சிகளாகக் காண்பித்தான்.
அதில் தற்போது பசுமையாக இருக்கும் பகுதி, தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதும் ஒரு சில வருடங்களில் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபட்டு, கழிவுகளால் நீர்வளம் அழிந்து ஊரே வறட்சியாக மாறுவதைப்போல் எடுத்துக் காட்டப்பட்டது. அதை பார்த்த மக்கள் சிந்திக்கத் தொடங்கினர்.
துளிர்விடும்🌱.