சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 18

சருகு 🍂 18

வரு போன் செய்து அவ்வாறு கூறியதும் அபிக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு அழைக்கிறாள் எனத் தெரியாமல், நிவாஸிடம் நாளை செய்து முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்.

சொல்லிய நேரத்திற்கு முன்பாகவே வீட்டிற்கு வந்த சேர்ந்தான் அபி.

“எனக்கு எவ்வளவு வேலையிருக்குத் தெரியுமா? எதுக்கு அவசரமா வர சொன்ன?” எனக் கேட்க,

அவளோ, “முதலில் வந்து சாப்பிடுங்க, பிறகு எல்லாம் பேசிக்கலாம்” என்று உணவு மேசையை நோக்கி நடந்தாள்.

அவர்களுக்குள் ஆயிரம் இருக்குமென ராமு அண்ணா தனக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குள் சென்று முடங்கினார்.

அமைதியாக உணவு உண்டு முடித்தவன் கை கழுவி வந்து அமர்ந்ததும், “சாப்பாடு எப்படி அத்தான் இருந்தது, நல்லா இருந்ததா, உங்களுக்கு பிடிச்சிருந்துச்சா, உங்களுக்காக பார்த்து பார்த்து நானே செஞ்சேன்” என பல கேள்விகள் அவள் கேட்க அவனோ, “எதுக்கு வர சொன்ன?” என்றான் மறைக்கப்பட்டக் கோபத்துடன்.

அவன் சீரியஸாக இருப்பதை உணர்ந்தவள், “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் அத்தான், கேட்க நீங்க தயாரா இருக்கீங்களா?” எனக் கேட்டாள்.

“சொல்லு…”

“ஒரு வார்த்தைக்கு மேல பேசக்கூடாதுன்னு ஏதாவது வேண்டுதலா அத்தான்.” சிறு கேலியுடன் கேட்டவள் அவனது முறைப்பில் தனது கேளிக்கையை விடுத்து தன் மனதில் முடிவெடுத்ததைக் கூறினாள்.

“நீங்க எந்த நினைப்பில் என் கழுத்துல தாலி கட்டுனீங்கன்னு எனக்கு தெரியாது… ஆனால், உசுருல உங்களையும் மனசு முழுக்க உங்க மீதான காதலையும் அளவுக்கு அதிகமா சுமந்துகிட்டுதான் உங்க கையால தாலி கட்டிக்கிட்டேன். என்னடா, திடீர்னு காதல் அது இதுன்னு சொல்றாளேன்னு நீங்க நினைக்கலாம். ஆனால், நான் உங்க மேல வச்சிருக்க காதல் உண்மை அத்தான். என் காதலுக்காக என்னைத் தவிர மத்த எல்லோரும் நிறைய கஷ்டப்பட்டங்க, மாமா, கவி அண்ணா, கனி, தாத்தா, விஷ்ணு இப்படி இவங்களாம் போராடி கிடைச்ச என் காதலை அவ்வளவு சீக்கிரம் நான் விட்டு விலகிப் போய்டுவனா அத்தான்.

நீங்க யாரை வேணுனாலும் காதலித்து இருக்கலாம்… ஆனால், இப்போ நீங்க என் கணவர்… உங்களை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது. சோ, வேலைக்கு போனோமா, பொண்டாட்டி நமக்காகக் காத்திருப்பாளேன்னு… நேரமா வீட்டுக்கு வந்தோமான்னு இருக்கணும் அதை விட்டுப்புட்டு உங்க சினிமா ஆபீஸே கதின்னு கிடைந்தீங்க, நான் அங்கு வந்து குடும்பம் நடத்த வேண்டியதா இருக்கும்.”

மனதில் எண்ணியவற்றை வார்த்தையாகக் கூறி முடித்தவள், “போய் படுங்க அத்தான். பால் கொண்டு வர்றேன்” என்றதோடு கிச்சனிற்குள் நுழைந்தாள்.

அபிக்கு கொஞ்ச நேரம் புயலடித்தமாதிரி இருந்தது.

“பேபி உனக்கு இவ்வளவு பேசத் தெரியுமா?” என நினைத்தவனுக்கு அப்போதே உரைத்தது அவள் அவனை காதலிப்பதாகக் கூறியது.

இப்போது அவனுக்கு, திருமண நாளிற்கு முதல் நாள் வருவிடம் புடவை கொடுக்க சென்ற போது அவள் பார்த்த பார்வைக்கான அர்த்தம் புரிந்தது.

‘உன் காதலை ஏற்க முடியாது.. என் மனதில் வேறு ஒருத்தி வாழ்ந்துக் கொண்டிருக்கிறாளே பேபி, அவள் ஒருத்தி மட்டுந்தான் என் வாழ்வுன்னு நினைச்சிருக்கனே’ என மனதோடு கூறியவனுக்கு ஏனோ வருவின் மீது கோபம் வரவில்லை. அவளை பேபியாகவேப் பார்த்தவனுக்கு இப்போதும் அவளது பேச்சுக்கள் சிறு பிள்ளைத்தனமாகவேத் தோன்றியது.

ஆனால், எல்லாம் தெரிந்தும் இத்திருமணம் நடப்பதற்கு கவியும் ஒரு காரணம் எனத் தெரிந்ததில் அபிக்கு கவி மீது கோபம் வந்தது. அந்தக் கோபத்துடன் மேலேறி அறைக்குச் சென்றவன், சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் அவனது புகைப்படத்தினை திருப்பி… கவிக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த தன்னவளின் முகத்தை வேதனை விழிகளுடன் பார்த்தான். மெதுவாக கட்டிலில் படுத்தவன் அவளது நினைவுகளில் சுகமாக மூழ்கிப் போனான். அவனது நினைவுகளை முழுவதும் அவனின் மனம் கவர்ந்தவளே ஊர்வலம் செல்கிறாள்.

************

கவி காட்சிகளாகக் காண்பித்ததும் மக்களுக்கு தெளிவாகப் புரிந்தது. வருங்காலம் விவசாயத்தை நம்பி தான் இருக்கு. நாமே நிலங்களையும், நீரையும் அழித்து விட்டால் நம் சந்ததியினருக்கு மிச்சமென்று எதுவும் இருக்காது என்பது புரிந்தது.

அனைவரும் ஒருமித்தக் குரலில் தங்களது முடிவைத் தெரிவித்து விட்டு தங்களது இல்லங்களுக்குச் சென்றனர்.

அடுத்த நாள் அனைத்து ஏற்பாடுகளுடன், சாமிகண்ணு காத்திருந்தான். ஊர்க்காரர்கள் வந்ததும், “எல்லோரும் ரெடி தானே! வாங்க பத்திரத்தை கொடுத்து கையெழுத்துப் போட்டுட்டு பணத்தை வாங்கிட்டுப் போங்க” என்றான்.

அனைவரும் அமைதியாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்க, “என்ன பணம் இன்னும் அதிகமா வேணுமானாலும் கேளுங்க பார்த்துப் போட்டு தரேன்” என்று நக்கலாகக் கூறினான்.

“உன் பணம் யாருக்குய்யா வேணும், இன்னைக்கு நீ எங்க தேவைக்கு பணம் கொடுத்திடலாம், ஆனால் நாளைக்கு எங்க வயிறு பசிக்குமே அதுக்கு உன்னால சோறு பொங்கி போட முடியுமா?” எனக் கூட்டத்தில் ஒருவர் கேட்க, “பயிர் விளையிர நிலைத்தையெல்லாம் கட்டிடம் கட்டிட்டா, அரிசிக்கே வழி இருக்காதாம்… இதுல எங்க சோறு பொங்குறது” என்று மற்றொருவர் குரல் கொடுத்தார்.

“முடிவா என்னாதால சொல்றீங்க” என கோபாக சாமிகண்ணுக் கேட்க,

“இத்தனை நாளா எங்களுக்கு சோறு போட்ட பூமி இனியும் எங்களை கைவிடாது நம்புறோம்.. எங்க நிலத்தை நாங்க கொடுக்கிற மாதிரியில்லை, உன் பிச்சைக்காசை எடுத்துட்டு கிளம்பு” என அனைவருக்கும் பொதுவாக ஒருவர் கூறினார்.

“நீங்களாம் யார் கொடுக்கிற தைரியத்துல பேசுறீங்கன்னு தெரியும். நீங்க நிலம் கொடுக்கலன்னா என்ன, இந்த ஊர்ல பேக்டரி கட்டி.. உங்க நிலத்தை எல்லாம் எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும்.” கோபத்தில் சாமிக்கண்ணு கொந்தளிக்க அங்கு கவியுடன் வந்த ரங்கநாதன்,

“நீ கட்டணும் நினைச்சா உடனே கட்டிட முடியுமா? இந்த ஊருக்குள்ள எந்தவிதமான தொழிற்சாலையும் கட்டக்கூடாதுன்னு ஹை கோர்ட்டில் ஸ்டே ஆர்டர் வாங்கியாச்சு” என தனது மீசையை நீவி விட்டுக்கொண்டார்.

அந்தப் பேப்பரை வாங்கிப்பார்த்த மும்பைக்காரன் சாமிக்கண்ணுவிடம்,

“இனி இங்க நான் நினைத்தது நடக்காது. நான் என் தொழிற்சாலையை வேறெங்காவது தொடங்கிக்கிறேன். ஆரம்பமே பிரச்சனையா இருக்கு. நீங்க இந்த காரியத்தை முடித்து தரதா கூறி என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்துடு” எனக் கூறி கிளம்பிவிட்டனர்.

சாமிகண்ணுவிற்கு பல கோடிகள் கைக்கு கிடைக்க இருந்தது போய்விட்டதே என்ற ஒட்டு மொத்தக் கோபமும் ரங்கநாதன் மீது திரும்பியது. கோபத்துடன் நடந்ததை அவமானமாக எண்ணியவன் ரங்கநாதனை கொலைவெறியுடன் ஒரு பார்வை பார்த்து இடத்தை காலி செய்தான்.

சாமிகண்ணு சென்றதும் ஊர் மக்களிடம் திரும்பிய கவி, “உங்களுக்குத் தேவையான அனைத்தும் பெரிய வீட்டில் வந்து எப்போது வேணுனாலும் தயங்காம கேளுங்க. முதலில் வயலை சரி செய்து ஏர் உழுவதற்கு ஏற்பாடு செய்யுங்க” என்றுக் கூறினான்.

கவியைத் தொடர்ந்து பேசிய வெங்கட், “அனைவருக்கும் வேண்டிய விதை நெல்லினை இன்னும் இரண்டு நாட்களில் நான் ஏற்பாடு செய்றேன்.. சோர்ந்து விடாது முயற்சி செய்வோம், நம்பிக்கையை கை விடாதீங்க” என்றார்.

ஒரு பெரும் பிரச்சனைத் தீர்ந்ததில் அனைவருக்கும் நிம்மதி உண்டாயிற்று. அடுத்து நடக்க வேண்டிய வேலைகளை கவனிக்கத் தொடங்கினர்.

வீட்டிற்கு வந்த கவி மதியமே சென்னைக்கு கிளம்புவதாகக் கூறியதும் ஏன் என்ற ராதிகாவிடம் பட வேலைகள் இருப்பதாகக் கூறி பயணத்திற்குத் தயாராகினான். அறையின் கதவு தட்டப்படவும் திறந்தவன், அங்கு கைகளை பிசைந்துக் கொண்டு நின்றிருந்த கனியைப் பார்த்து எதுவும் பேசாமல் உள்ளே சென்று தனது வேலையைத் தொடர்ந்தான்.

என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் தவித்து நின்றிருந்தாள் கனி. பத்து நிமிடங்கள் கடந்த போதிலும் கவி கனியை நிமிர்ந்து பார்த்தானில்லை. அவனது மௌனம் அவளைக் கொல்லாமல் கொன்றது. தனது உடைமைகளை அடுக்கி வைத்தவன் பேக்கினை தோளில் மாட்டி வெளியே செல்ல அடியெடுத்து வைத்தான்.

கவியின் அசைவில் திடீரென அவனது கரம் பற்றி தடுத்து நிறுத்தியவள், கவியின் விழிகளுடன் தன்னுடைய கலங்கிய விழிகளை கலக்கவிட்டு, “நான் மனசார உங்களை விரும்புறேன்…” என தன் இதயத்தை தொட்டுக் காண்பித்து.. “முழுசா நீங்க மட்டும் தான் இருக்கீங்க, என்னை ஏத்துப்பீங்களா??” என்றாள்.

ஒரு நிமிடம் கைகளையும், கண்களையும் இறுக மூடித் திறந்தவன், ஆழ்ந்த பார்வையொன்றை அவள் மீது அமைதியாக வீசிச் சென்றான். அப்பார்வையில் தெரிந்த வலி மற்றும் வேதனையில் தரையில் மண்டியிட்டு அமர்ந்து உயிர் உருக கரைந்து அழுதாள்.

கவி ஊருக்கு போவதாகக் கூறியதும் கனியின் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை கவனித்த ரங்கநாதன் அவளைப் பின்தொடர்ந்தார்.

அதன் பயனாக கனியின் வார்த்தைகளையும், கவியின் ஒதுக்கத்தையும் கண் கூடாகப் பார்த்தார். ஏற்கனவே, ஒரு பெரும் காரணத்தால் கனியை வெறுப்பவருக்கு, கனியின் காதல் வார்த்தைகள் அவள் மீது கோபத்தை உண்டு பண்ணியது. கவியை அனைவரும் வழியனுப்பி வைத்ததும் மாடியேறி மேலே வந்தவர் தரையில் அதே நிலையில் இன்னும் அழுது கொண்டிருக்கும் கனிக்கு அருகில் சென்று நின்றார்.

அவரது அரவம் உணராது அழுது கொண்டிருந்தவளின் இதயத்தை ரங்கநாதனின் வார்த்தைகள் குத்தீட்டீயாய் கிழித்தது.

“எங்க இருந்தோ வந்த ஊர் பேரு தெரியாத அனாதை கழுதைக்கு என் பையன் கேக்குதா? உன்னை பத்தி தெரிஞ்சும் என் பையன் உன் மேல வந்து விழ அவன் என்ன முட்டாளா?அதான் நீ வேண்டான்னு முகத்தை திருப்பிக்கிட்டுப் போய்ட்டானே. ஒழுங்கா இருப்பதுன்னா இங்கிரு.. இல்லைன்னா யாருக்கும் சொல்லிக்காமா இங்கிருந்து ஓடிடு. திரும்பவும் காதல் அது இதுன்னு சொல்லிட்டு இருந்த, அபிக்காகன்னு கூட பார்க்க மாட்டேன். உன்னைக் கொன்னுட்டு தான் மறுவேளை பார்ப்பேன்.” மிரட்டலாக தனது வார்த்தைகளை வெளியேற்றியவர் விடுவிடுவென வெளியேறிவிட்டார்.

ரங்கநாதன் கூறிய வார்த்தைகள் எதுவும் கனியின் செவிகளில் விழவில்லை, அவர் முதலில் கூறிய அனாதை என்ற வார்த்தையிலே அவளது உள்ளமும் உடலும் மரத்து விட்டது.

‘நான் அனாதையா… அண்ணனுக்கு அண்ணனா என்னை எந்நேரமும் நெஞ்சில் தாங்கும் அபி அண்ணா, தோளில் சுமக்கும் தந்தை, மடி ஏந்தும் அம்மா என்று அனைவரும் இருக்கும் போது நான் எப்படி அனாதை ஆவேன்.’ அரற்றிய அவளது ஆழ் மனது உண்மையில் நீ யாருமற்ற அனாதை தானே கனியென்று அரைந்துக் கூறியது.

கண்களில் கரகரவென கண்ணீர் வழிய அவளது நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. ஆறு வயது சிறுமியாக கனி அவளது கண்களுக்குள் தோன்றினாள்.

****************************************

அறையில் உறங்கிக்கொண்டிருந்த அபி, தன் நெஞ்சின் மீது உணர்ந்த கனத்தில் கண் விழித்தான். அரை தூக்கத்தில் இருந்தவன் தன் இதயத்தில் தலை வைத்து உறங்கிக்கொண்டிருக்கும் வருவை பார்த்து கோப ஊற்று பெருக உதறித் தள்ளினான்.

உறக்க கலக்கத்தில் திடீரென கீழே விழுந்ததில் அடித்து பிடித்து எழுந்து நின்றவள் என்ன நடந்தது என்று புரியாமல் விழித்து நிற்க, அபியோ ருத்ர மூர்த்தியாக மாறியிருந்தான்.

அவளை நெருங்கி , தன் கண்களை கோபத்தில் அகல விரித்து… “இப்படி ஒட்டி உரசி என் மேல வந்து விழுந்தா உன்னை என் மனைவியா ஏத்துப்பேன் நினைப்பு உனக்கிருந்தா அதை இந்த நொடியே மறந்துடு, நைட்டு நீ அடவடியா பேசியதை ஏதோ சின்ன பெண் நினைத்து சும்மாவிட்டா…. இன்னும் ஏதாவது நடந்துகிட்டா நீ வேற அபியை பார்க்க வேண்டியிருக்கும்.” சிங்கத்தின் சீற்றத்துடன் உரைத்தவன் குளியலறை சென்று மறைந்தான்.

ஷவர்க்கு கீழே நின்றவனின் மனம் உலைக்கலனெனக் கொதித்தது. வருவிடம் தான் பேசிய வார்த்தைகளை நினைத்து வெட்கினான். எப்போது வரு அபியிடத்தில் “மனசு முழுக்க உங்களை சுமந்துக்கிட்டு தான் நான் தாலி கட்டிக்கிட்டேன்” எனக் கூறினாளோ அப்போதே அபி ஒரு முடிவெடுத்திருந்தான். இனி, அன்பாக பழைய அபியாக நடந்துகொண்டால் வரு தன்னை விட்டு விலகமாட்டாள், அவளாக என்னை விட்டுச்சென்று அவள் வாழ்வை வாழ அவள் முன்பு தன்னைக் கோபமாகக் காட்டிக்கொள்ள முடிவு செய்தான்.

கோபத்தின் மூலம் வரு தன்னை நெருங்குவதை தடுக்கலாம் என்று நினைத்தான். ஒருமுறை வருவிடம் கோபமாக பேசியதே தன்னை வதைக்கிறதே இனி தினமும் என்றால், யோசித்தவனின் மனம் அதிகமாக வலித்தது. அந்த வலியுடனே கவி மற்றும் வருவுடன் சந்தோஷமாக சுற்றித் திரிந்த சிறு வயது ஞாபகத்தை தன் நினைவு அடுக்குகளில் தேடினான்.

இரவு அதிரடியாக அபியை அலுவலகத்திலிருந்து வரவழைத்து தான் பேசியதற்கு அவன் அமைதியாகச் சென்றதும், அபியை மாற்றுவது எளிது என நினைத்திருந்தாள் வருணா.

ஆனால், இப்போது பேசிவிட்டு சென்ற அபி வருவிற்கு புதிது, எப்போதும் சிரித்த முகத்துடன், பேச்சில் கனிவுடன் தன்னிடம் நடந்துகொள்ளும் அபியைத் தான் வருவிற்கு தெரியும். குறைந்தளவு கோபம் கூட அபிக்கு இதுவரை வந்ததில்லை ஒரு நிகழ்வைத் தவிர, அதுவும் அவனது தங்கை கனிக்காக வந்த கோபம் அது. அதன் பிறகு இன்று தான் அபியின் கோபத்தை வருணா பார்க்கிறாள்.

‘உங்களுக்கு இந்தளவிற்கு கோபம் வருமா அத்தான், நீங்க என் சசி அத்தான் தானா? தூக்கத்தில் உருண்டு உங்க அருகில் வந்ததற்கா அவ்ளோ கோவம்?’ மனதோடு கேட்டுக்கொண்டவளின் மனதில் பழைய அபி வந்து போனான். கால்களை மடக்கி தரையில் அமர்ந்தவள் நினைவுகளுடன் கண்ணீரில் கரையத் தொடங்கினாள்.

சென்னையை நோக்கி ரயிலில் பயணம் செய்யத் தொடங்கிய கவி, கனியின் வார்த்தைகளுக்கு பதிலளிக்காமல் வந்து சேர்ந்த தன் மடத்தனத்தை நினைத்து வருந்தினான். அவள்மீது கோபம் இருப்பினும் அதைவிட மலையளவு காதல் அல்லவா இருக்கிறது.

‘இனி, தன் காதல் பாதையும், அபியின் வாழ்க்கை பாதையையும் எப்படி சரியான பாதையை நோக்கி பயணிக்க வைக்கப் போகிறேன்’ என்ற கவலை அதிகமானது. அக்கவலையுடனே, கனி தன் வீட்டிற்கு வந்த முதல் நாளை எண்ணிப்பார்க்க ஆரம்பித்தான்.

ரங்கநாதனின் வார்த்தைகளில் மனதில் தைத்த வலியுடன் கண்ணீரில் கரைந்துக் கொண்டிருந்த கனியும் தன் வாழ் நாளில் நினைத்துப் பார்க்கக் கூட அஞ்சும் கடந்த நாட்களை எண்ணிப்பார்க்க ஆரம்பித்தாள்.

***********************

பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு.

ஒருவன், “சட்டையைக் கூட கழுட்ட விட மாட்டேங்கிறாடா.. எப்புடி இறுக்கமா புடிச்சிருக்கா பாரு” என ஆத்திரத்தில் வெடித்தான்.

மற்றொருவனோ, “கொஞ்ச நேரம் உன் துணிலாம் கழட்டிட்டு இந்த மாமா கூட தூங்கு காலையில உன்னை உங்க அப்பா கிட்ட சேர்த்துடறோம்” என நயமாக பேசினான்.

அந்த பிஞ்சோ அவன் பேசிய வார்த்தைகளில் உள்ள விரசத்தை அறியாமல், “எதுக்கு மாமா தூங்குறதுக்கு ட்ரெஸ் எல்லாம் கழட்டனும்” என அப்பாவியாகக் கேட்டாள்.

முதலாமவன்… “இதிலெல்லாம் இவளுங்க வெவரம் தான் டா… அவ கிட்ட என்னடா கொஞ்சிட்டு இருக்க, அவள இழுத்து அப்படி போடுடா. நீ தள்ளு முதல்ல என் வேலையை முடிச்சிடுறேன்” என அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அருகில் ஆள் அரவம் கேட்டது.

பதினேழு வயது சசிக்கு என்ன நடக்கின்றது என ஓரளவிற்கு யூகிக்க முடிந்தாலும், எப்படி தடுப்பது எனத் தெரியவில்லை. எனவே தரையில் படிந்திருக்கும் சருகுகளை களைத்து சத்தத்தை எழுப்பினான்.

அச்சத்தத்தில் யாரென பார்க்க ஒருவன் புதரிலிருந்து வெளிவர, அவனுக்கு குறுக்காக தனது காலை நீட்டி அவனை கீழே விழ செய்திருந்தான் சசி.

கால் இடறி கீழே குப்புற விழுந்தவன் நெற்றி தரையில் கிடந்த கூர்மையான கல் குற்றி அம்மா எனக் கத்திக்கொண்டே மயக்கநிலையை அடைந்தான்.

அவனின் சத்தம் கேட்டு புதரிலிருந்து, “என்ன ஆச்சுடா” என்றவாறு வெளியே ஓடி வந்தவனின் பின்னந்தலையில், தனக்கு அருகே கிடந்த கட்டையால் ஓங்கி அடித்திருந்தான் சசி.

அவனும் வலியில் அம்மா என அலறித் துடித்து தரையில் விழுந்தான். இரண்டு தடியர்களுக்கும் அருகில் சென்ற சசி, “ஏன்டா வலியில் அம்மா சொல்ற நீங்க, உன் அம்மாவைப் போலத்தான் மற்ற பெண் பிள்ளைகளையும் பார்க்கணுங்கிறதை மறந்துதுட்டிங்ககளா?” எனக் கேட்டு தன் காலினால் இருவரையும் ஓங்கி எத்தினான்.

உடனே… சிறுமியின் நினைவு வர புதருக்குள் நுழைந்தவன்.. கண்ட காட்சியில் நெஞ்சம் வெடிப்பதை உணர்ந்தான்.

ஏழெட்டு வயதே ஆன சிறுமிக்கு தடியர்கள் பேசியது மற்றும் தன்னிடம் நடந்துகொண்ட செயல்கள் புரியவில்லை எனினும் தனக்கு ஏதோ தவறாக நடக்கிறது என்றளவில் புரிந்தது.

திடீரென இரண்டு தடியர்களும் வெளியில் செல்லவும், அந்த அடர்ந்த இருட்டில் என்ன செய்வதென தெரியாமல் தன் கால்களை மடக்கி மொத்த உடலையும் குறுக்கி முகத்தை தரையில் புதைத்து படுத்திருந்தது அந்த தளிர்.

மெதுவாக சிறுமியின் அருகில் சென்ற சசி அவளது தோள் தொட்டு எழுப்ப, உடல் தூக்கிப்போட்டு பயத்தில் நடுங்கிய குரலில், அய்யோ என்ன விட்டுடுங்க… நீங்க என் மேல் கை வைப்பது எனக்கு புடிக்கல, தப்பா தெரியுது” என்றாள். அதில் சசி முற்றிலும் உடைந்து தான் போனான்.

மெல்ல அவளை எழுப்பி நிற்க வைத்து, “நான் உன் அண்ணன் டா… நீ என்னை பார்த்து ஏன் பயப்படுற? வா நாம் நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றான்.

அவன் அண்ணன் என்றதிலே சிறு நம்பிக்கைத் தோன்ற, “நீங்க உண்மையிலே என் அண்ணனா?எனக்கு அண்ணா இருக்கிறதா அப்பா சொல்லவேயில்லையே” என அப்பாவியாகக் கேட்டு அதற்கும் அவளே ஒரு பதிலைக் கண்டுபிடித்தவளாக சிறிது யோசித்து, “உங்களை அம்மா சாமிகிட்ட இருந்து அனுப்பிச்சாங்களா?” என பதில் கண்டுபிடிக்கவும் சசி முற்றிலும் உடைந்தே விட்டான்.

கண்களில் நீர் துளிர்க்க, “ஆமா… அம்மா தான் நீ தனியா இருக்கன்னு உனக்குத் துணையா என்னை அனுப்பி வைத்தாங்க” எனக் கூறியவன் அவளது கரம் பற்றி தார் சாலைக்கு அழைத்து வந்தான்.

படர்ந்து விரிந்த காரிருளைக் கண்டு மிரண்ட குழந்தையை, “அண்ணன் இருக்கும்போது இனி நீ எதற்கும் பயப்படக்கூடாது” எனக் கூறி நடக்க ஆரம்பித்தான்.

குழந்தை, “அண்ணா பசிக்குது” என்கவும் தனது பையிலிருந்த பிஸ்கெட் பாக்கெட்டினை பிரித்துக் கொடுத்தான். அதனை அவள் உண்ட வேகத்திலேயே குறைந்தது இரண்டு நாளாவது சாப்பிடாமல் இருந்திருப்பாள் போல் என நினைத்தான்.

மெல்ல அவளிடம் உன் பெயர் என்னவென சசி கேட்க, “கனிமொழி” என்றாள் பிஸ்கெட் ஒட்டிய பற்கள் தெரியும் வகையில்.

பிஸ்கெட்டினை முழுவதும் உண்டு முடித்தவள்… “அண்ணா நாம வேற எங்கயாவது போலாம், அப்பா கிட்ட மட்டும் போக வேண்டாம்” என்று அச்சத்தில் கூறினாள்.

ஏன் என சசி கேட்ட கேள்விக்கு கனி அளித்த பதிலில்… தான் ஒரு ஆண்மகன் என்பதை நினைத்து அருவறுத்தான்.

துளிர்விடும்🌱.

error: Content is protected !!
Scroll to Top