Skip to content

சருகு 🍂 19
“அப்பாகிட்ட மட்டும் என்னை கொண்டு போய் விட்டுடாதீங்க அண்ணா.”
“ஏன்?”
“அவர் சாராயம் குடிக்க காசு இல்லைன்னா திரும்பவும் என்ன யாருக்காவது வித்துடுவாறு.”
அப்பாவியாக கனி கூறிய பதிலில் தன் சர்வம் அடங்க.. முதல் முறையாக தான் ஒரு ஆண் என்பதற்கு வெட்கினான். இப்படியும் சில மிருகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், ‘குடிக்காக பெற்ற மகளையும் பிசாசுகளுக்கு விற்பதை இப்போது தான் நேரில் பார்க்கிறேன்’ என மனதோடு குமுறினான்.
சசி அத்தோடு எதுவும் பேசாமல் அமைதியாக வரவும், “ஏன் அண்ணா அமைதியா வர்றீங்க. அதுக்குள்ள உங்களுக்கும் என்னை பிடிக்காம போயிடுச்சா” என முகத்தில் சோகத்தோடு கேட்ட சிறுமியிடம் உடனடியாக மறுத்து இல்லையென தலை அசைத்து, “இனி நீ எதுக்கும் பயப்படக்கூடாது, உனக்கு அண்ணா நான் இருக்கேன். அதுக்குமேல நமக்கு ஒரு குடும்பம் இருக்கு, ரொம்ப பெரிய குடும்பம், அங்க எல்லோரும் உன்னை அன்பா பார்த்துப்பாங்க” என அபி கூறியதும்…
முகமெல்லாம் மகிழ்ச்சியாக, “பசிக்கும் போதெல்லாம் நிறைய சாப்பாடு தருவங்களா?” எனக் கேட்டாள்.
கனியின் கேள்வியில் ஒரு நொடி ஆடிப்போன சசி… தன் கண்களை அகல விரித்து “ம்ம்ம்ம்ம்ம்ம்” எனக் கூற, தன் சந்தோஷத்தின் வெளிப்பாடாக… அவளது உயரத்திற்கு அவனது கால்களை மட்டுமே கட்டிக்கொள்ள முடிந்தது..
அவளது மகிழ்வில் சுகமாய் நெகிழ்ந்தான் சசி.
வகுப்பு முடிந்ததும் அரை மணி நேரத்தில் வீட்டில் இருப்பவன், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாகியும் வராததால்… வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் சசியின் வருகைக்காக வாயிலிலே காத்திருந்தனர்.
சசியின் தலையைக் கண்ட பிறகே அனைவருக்கும் மூச்சு சீரானது. சசி அவர்களின் உயிராயிற்றே. இந்த அளவு பதட்டமாவது இல்லையெனில் எப்படி?.
“ஏன்ப்பா இவ்வளவு தாமதம்?” எனக் கேட்ட கோபாலன் உட்பட அனைவரும் அப்போது தான் கவனித்தனர், சசியின் காலினை அணைத்தவாறு… மருண்ட விழிகளுடன் நின்றிருந்த கனியை.
முதலில் யாரெனக் கேட்ட தன் அன்னையிடம் பதில் கூறாமல், சிறுமியிடம் குனிந்து… “கனிம்மா, இவங்க தான் நம்ம அம்மா” எனக் கூறினான் சசி.
மொத்தக் குடும்பமும் எதுவும் புரியாமல் அதிர்ச்சியுடன் சசியை பார்த்திருந்தனர்.
“என்னடா இது?” எனக் கேட்ட ரங்கநாதனிடம், “மாமா, அவள் ரொம்ப பசியா இருக்காள்… முதலில் சாப்பிடட்டும். பிறகு பேசிக்கலாம்” என்ற சசி யாரையும் கண்டுகொள்ளாது கனியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று உணவு கூடத்தில் அமர வைத்தான்.
தட்டில் உணவினை எடுத்து வைத்து தானே அவளுக்கு ஊட்டியும் விட்டான். இதுவரை அரவணைப்பு என்ற ஒன்றை அறிந்திடாத அந்த சின்னஞ்சிறு சிட்டு, புதிதாக உணர்ந்திட்ட அன்பில் ஒரு பிடி அதிகமாகவே உண்டாள்.
பார்த்து பார்த்து உணவு ஊட்டி விட்டவன், வருவிடம் “உன் அறைக்கு அவளை கூட்டிட்டுப்போ… இனி அவள் உன்னோடதான் தங்குவாள்” என வீட்டு உறுப்பினர்கள் அனைவரையும் சுழன்று ஒரு பார்வை பார்த்துக் கூறினான்.
தன்னுடைய சசி அத்தான் என்ன கூறினாலும் செய்யும் வருவும், கனியை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
அதன் பின்னர் அனைவரிடமும் கனியைப் பற்றியும், அவளுக்கு நடக்கவிருந்த அவலத்தையும் எடுத்துக் கூறினான். அனைவருக்கும் கனியின் நிலை பாவமாகத் தோன்றியது.
“உங்களுடைய பரிதாபம் அவளுக்குத் தேவையில்லை, அன்பும், அரவணைப்பும் தான் தேவை” என்றவன், “இப்போலேர்ந்து அவள் இந்த சசி அபினவின் தங்கை” எனக் கூறினான். அவன் குரலை உயர்த்தவில்லை, ஆனால் தன் கூற்றை அனைவரும் ஏற்று தான் ஆக வேண்டுமென்ற கட்டளையும், அழுத்தமும் அதில் விரைவியிருந்தது.
தன்னுடைய மறுபதிப்பாகவே காட்சியளிக்கும் பேரனின் ஆளுமை கலந்த உறுதியான முடிவில் தனக்கு சம்மதம் என்பதைப்போல் கோபாலன் சிறு புன்னகையுடன், “உன் முடிவு எதுவா இருந்தாலும் அது தான் உன்னுடைய விருப்பம் என்பதால் இதில் எனக்கு முழு சம்மதம்” எனத் தெரிவித்தார்.
தனது மகனின் இரக்கக் குணத்திலும், எல்லோரையும் அரவணைக்க வேண்டுமென்ற பண்பிலும் மகிழ்ந்த வெங்கட், “எனக்கு ஒரு மகள் கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம்” என்றார்.
கலாவோ… “உனக்கு அடுத்து ஒரு பெண் பிள்ளை இல்லைன்னு நான் ஏங்காத நாளில்லை சசி… அதற்கான கொடுப்பினை இன்னைக்கு உன் மூலமா கிடைக்க வேண்டுமென்று ஆண்டவன் நினைத்திருக்கான். இனி அவள் என் மகள்… எல்லாரும் அப்படித்தான் பார்க்கணும்” என கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் கூறிக்கொண்டே தன் மகனைக் கட்டிக்கொண்டார்.
மகளாக அவர்களே ஏற்றுக்கொண்ட பின்னர் நமக்கென்ன என்ற ரீதியில் அனைவரும் கனியை முழு மனதோடு ஏற்றுக்கொண்டனர்…
ஒருவரைத் தவிர,
அனைவரும் தன் முடிவை ஏற்றுக்கொள்ள சசி மிகுந்த உற்சாகத்துடன் தன் தங்கையைத் தேடிப்போனான். ஆனால், அவளோ கலாவிடம் தன் கைகளை அசைத்து கதைகள் பேசிக் கொண்டிருந்தாள்.
“அம்மாவும் பொண்ணும் அதுக்குள்ள ராசியாகிட்டீங்களா?” எனக் கேட்டுக்கொண்டே சசி உள்ளே நுழைய, “இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் எனக்கொரு மக கிடைச்சிருக்கா, கண்ணு வைக்காதடா” என்றார் கலா.
அதற்கு உரக்க சிரித்த சசி, “இப்படியே போனால் என்னை மறந்துடுவீங்க போலவே,” என்றான்.
அவனுக்கு கலா பதில் அளிக்கும் முன்னர் அப்போது தான் அவர்களைத் தேடி வந்த வெங்கட் பதிலளித்தார்.
“எங்களுக்கு ரெண்டு பேரும் ரெண்டு கண்ணு.”
******************
ஒரு நாள் மாலை ரங்கநாதன் சிற்றுண்டி உண்டு கொண்டிருந்த சமயம் அங்கு கனியுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த வரு ரங்கநாதனின் தட்டிலிருந்து பலகாரத்தை எடுத்து வாயில் வைத்து கடித்துக்கொண்டு ஓடினாள். தன் மகளின் செயலில் மகிழ்ந்த ரங்கநாதன் ஒரு இடத்தில் அமர்ந்து “ஒழுங்கா சாப்பிடு வருணா” என்றார்.
வருவைப் பின்பற்றி கனியும் அவர் தட்டில் கை வைக்க… தட்டினை விசிறியடித்திருந்தார். அதில் அரண்டு போய் நின்றிருந்த கனியை இழுத்து வீட்டின் மூலையில் தள்ளிவிட்டு, “இனி நீ இங்கதான் இருக்கணும்… இந்த வீட்டோட சொந்தக்காரி மாதிரி மொத்த இடமும் திரியக் கூடாது” என்றார்.
அவரது பேச்சில் மிரண்ட மொட்டு சுவற்றோடு பயத்தில் ஒண்டினாள்.
அதில் பதறிய ரங்கநாதனின் மனைவி ராதிகா… “அவளும் இந்த வீட்டுப் பொண்ணு தான்.. அப்படி நினைக்கலைனாலும் பரவாயில்லை, சிறு பிள்ளைங்கிறதையாவது மனதில் வைத்து பேசுங்க” என்றார் குரலை உயர்த்தாமல்.
தன்னை எதிர்த்து வாய் திறக்காதவள் இன்று முதல் முதலாக கனிக்கு சப்போர்ட் செய்யும் விதமாக பேசவும் ஆத்திரம் பொங்க யோசிக்காமல் வார்த்தைகளை சிதறினார்.
“அவள சொன்னா உனக்கு என்னடி கோவம் பொத்துகிட்டு வருது… குடிகார அப்பன் இருந்தும் ரோட்டோரம் பொறுக்கிட்டு திரிஞ்ச அனாதை கழுதை தானே…”
“மாமாஆஆ…”
அந்த காலத்து பழைமையான வீடு என்பதால்… சசியின் அழைப்பு மர தூண்களில் முட்டி மோதி வீடெங்கும் எதிரொலித்தது.
ஒரு நொடி அவனது விளிப்பில் ரங்கநாதனே நடுங்கித்தான் போனார்.
வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் கூடத்தில் கூடிவிட்டனர்.
அவர் அருகில் சென்று தன் முழு உயரத்துக்கு நிமிர்ந்து நின்றான்.
“உங்ககிட்ட அதிகமா பேசப்போறதுக்கு மன்னிச்சிடுங்க.”
முதலிலே மன்னிப்பை வேண்டியவன் பேச ஆரம்பித்தான்.
“யாரை அனாதைன்னு சொன்னீங்க… அவள் என் தங்கை, எனக்கிருக்கும் எல்லா உரிமையும் இங்க அவளுக்கும் உண்டு. உங்களுக்கு அவளை பிடிக்கவில்லைன்னா ஒதுங்கிடுங்க, இனி ஒருமுறை என் தங்கையை நீங்க முறைப்பதை பார்த்தால் கூட மாமாங்கிற உறவை நான் மறக்க வேண்டியிருக்கும்.” அழுத்தமாக, நிதானத்துடன் கூறினான். நான் சொன்னதை செய்வேன் என்ற திமிர் அதில் தெரிந்தது.
தங்கள் மகளாகவே மாறிவிட்ட பின்னர் ரங்கநாதன் இவ்வாறு நடந்துகொண்டது சசியின் தாய் தந்தைக்கு வருத்தத்தை அளித்தது. அதனால் அபி பேசியதற்கு கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக நின்றிருந்தனர்.
சசி ரங்கநாதனுக்கு பிடித்தமான மருமகன், எனவே அவனிடத்தில் கோபத்தைக் காட்ட முடியாது… கோபாலனிடம் திரும்பிய ரங்கநாதன், “என்ன மாமா நீங்களும் பார்த்துட்டிருக்கிறீங்க, அவள் என்ன சாதியோ.. எப்படிபட்ட பெத்தவங்களுக்கு பிறந்தாளோ… அப்படி பரிதாபம் பார்த்தா ஏதாவதொரு இல்லத்தில் சேர்த்து விடாம இதென்ன உறவுமுறை சொல்லி வீட்டில் வளர்ப்பது” என்றார் சத்தத்துடன்.
“சசியின் முடிவில் அவனது பெற்றோரே தலையிடாமல் ஏற்றுக்கொண்டப் பின்னர் நமக்கென்னப்பா… அவள் ஒருத்தி சாப்பிடுவதால் நம் பண்ணையே வற்றிவிடப்போகுதா என்ன? உன்னைத் தவிர அனைவருக்கும் அவளை பிடித்திருக்கு. ஒரு பெண் பிள்ளையை வளர்ப்பதால் நம் கௌரவம் ஒன்னும் கெடப்போவதில்லை. சசி சொன்ன மாதிரி உனக்கு பிடிக்கலன்னா அவளிடம் ஒதுங்கியிரு” என்றார்.
அவள் இனி இந்த வீட்டுப் பெண் தான் என்ற மறைமுகக்கூற்று அவரது பேச்சில் இருந்தது.
தனக்கு விருப்பம் இல்லையெனினும் குடும்பத்தாரை பகைத்துக் கொண்டு நிறைவாக வாழ முடியாதே என எண்ணிய ரங்கநாதன் எதையும் கண்டு கொள்ளாது கனியிடமிருந்து தள்ளி நிற்க பழகிக் கொண்டார்.
அனைவருக்கும் அதுவே போதுமானதாக இருந்தது.
நாட்கள் கடந்து விரைந்தோடியது…
காலம் யாருக்கும் நிற்பதில்லையே… யாருக்காவும் மாறாமல் தனது வேகத்தைக் குறைத்துக் கொள்ளாமல் செயல் படுவது காலம் ஒன்றே!
அந்த வயதில் தனக்கு நடக்கவிருந்தது என்னவென புரியவில்லையென்றாலும் வளர வளர அனைத்தும் கனிக்கு புரிந்தது.
எல்லாம் புரிந்த போது கனிக்கு சசி அண்ணனாக மட்டுமில்லாமல் கடவுளாகவே தெரிந்தான். தன்னால் முடிந்தவரை இக்குடும்பத்திற்கு விசுவாசத்துடன் இருக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டாள்.
வருணாவும், கனியும் பத்தாவது படித்துக்கொண்டிருந்தனர்.
கனி வருவை விட இரண்டு வயது மூத்தவளகா இருப்பினும், பெரிய வீட்டிற்கு வந்து சேர்ந்த போது பள்ளி இடையில் சேர்க்க முடியாததால் அந்த வருடம் விடுத்து, அடுத்த வருடம் வருவுடனே ஒரே வகுப்பில் சேர்க்கப்பட்டாள். அவள் ஏற்கனவே மூன்றாம் வகுப்போடு முடித்து நான்காம் வகுப்பு சேர்க்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தாள்.
சசி தனது படிப்பினை முடித்துவிட்டு திரை துறையில் இயக்குனருக்கு உதவியாளராய் பணி புரியத் தொடங்கிய காலம்.
கவியும் தனது கல்லூரி வாழ்க்கையின் இறுதி பகுதியில் இருந்தான்.
செமஸ்டர் விடுமுறைக்காக கவி சென்னையிலிருந்து கிராமத்திற்கு வந்திருந்தான்.
வந்தவனுக்கு தினமும் விருந்து உபச்சாரம் தான். தனது அறையில் ஏதோ சிந்தனையில் இருந்தவனை கொலுசொலி ஈர்த்தது. தனது அறையின் சன்னல் கம்பிகளின் வழியே எட்டிப் பார்த்தவனுக்கு காட்சியளித்தது மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்த ஒரு ஜோடி மலர் பாதங்கள்.
கொலுசின் திருகாணியுடன் பிணைக்கப்பட்ட மூன்று முத்துக்கள் ஒலி எழுப்ப…. மெல்லிய வெள்ளி கொடியில் கோர்க்கப்பட்ட மயில் வடிவ கொலுசு நடந்துசென்ற ரோஜா நிற பாதங்களுக்கு கூடுதல் அழகைக் கொடுப்பதாக எண்ணினான்.
அது யாராக இருக்குமென மனதில் ஒரு பரபரப்புத் தோன்ற, அவள் உன்னவள் என்ற எண்ணம் இதயத்தின் மூலையில் உதிப்பதை உணர்ந்தான்.
“காலைப் பார்க்கும் போது சின்னப் பொண்ணு மாதிரி தெரியுது, ஒருவேளை வருவா இருந்தா…” அப்படி நினைக்கும்போதே, “சே… சீ… அப்படி இருக்காது” என்று உள்மனம் மத்தளமிட்டது.
மனதின் படபடப்பு அடங்குவதாக தெரியவில்லை, எனவே அந்த பாதங்களுக்கு சொந்தக்காரி யாரென்று அறிந்திட கவியும் மொட்டை மாடிக்கு விரைந்துச் சென்றான்.
தன் மனதிற்கு இனியவளை பார்க்கும் மகிழ்வில் மாடியில் பார்வையைப் பதித்தவன் குழம்பிப் போனான். அங்கு பத்துக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் இருந்தனர். இதில் யாராக இருக்குமென யோசித்துக் கொண்டிருந்தவனை வருவின் குரல் கலைத்தது.
“அண்ணா… இங்க என்ன பண்றீங்க… இவங்கெல்லாம் என் பிரண்ட்ஸ்.. நம்ம வீட்டை பார்க்கணும் சொன்னாங்க அதான் இன்னைக்கு வந்திருக்காங்கா” எனக் கூறியவள் ஒவ்வொருவராக தனது அண்ணனுக்கு அறிமுகப்படுத்தினாள்.
கவியின் வாய் அவர்களுக்கு ஹாய், ஹலோ கூறினாலும் அவனது பார்வையோ தரையில் அவர்களது பாதத்தில் நிலைத்திருந்தது.
“எல்லாரும் வருக்கு மட்டுமில்ல எனக்கும் பிரண்ட்ஸ் தான்” என்ற குரலில் தன் கண்களை கீழே பார்த்தவாறு திரும்பியவன் தனது மலர் பாதங்களைக் கண்டு கொண்டான். யாரென அறிந்துகொள்ள நொடியும் கடக்காது நிமிர்ந்தவன் அவளது விழி வீச்சில் தொலைந்து போனான்.
‘என் மனசில் சலனத்தை ஏற்படுத்தியது கனியா?’
‘இது எப்படி சாத்தியம் இதுவரை அவளிடம் நான் வருவிடம் பழகிய அளவிற்கு கூட பழகியதில்லை… அப்படியிருக்கையில் இவள் மீது எப்படி காதல் வந்தது. இது சரியா, தவறா?’ எனக் குழம்பியவன் அமைதியாக தனது அறை நோக்கி சென்று விட்டான்.
காதல் எப்போது எந்த நொடி யார் மீது வருமென யாருக்கும் தெரியாது என்பது அவனுக்கு தெரியவில்லை.
அறைக்குள் வந்தவன் பலவாறு யோசித்தான்… ‘இது எப்படி சாத்தியம், கல்லூரியில் தொட்டு பேசும் அளவிற்கு நெருக்கமான பெண் தோழிகள் இருக்கின்றனர், அவர்கள் மீதெல்லாம் வராத காதல் இப்போ கனி மீது எப்படி? கூடவே வளர்ந்ததால் மனசு விரும்புதோ?’ தன்னையே கேட்டுக் கொண்டான்.
‘வெறும் நான்கு வருட வித்தியாசம் தான்… எல்லாம் ஒத்து வரும்.’ மனம் இடித்துரைத்தது.
நள்ளிரவில் இரண்டு உருவம் மட்டும் வீட்டை விட்டு வெளியேறி தோப்பு பக்கம் சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது தான் சென்னையிலிருந்து வந்திருந்த சசி தனது அறையில் உடை மாற்றி விட்டு சன்னல் வழியே வெளியே பார்க்க அந்த இரண்டு உருவத்தைக் கண்டு யாரென பார்க்க பின் தொடர்ந்தான்.
இவன் வீட்டை விட்டு வெளியேறுவதற்குள் இரண்டு பேரும் பல அடிகள் முன்னேறியிருந்தனர்.
தோப்பிற்குள் நுழைந்து அவர்கள் எங்கென சுற்றி பார்வையை சுழல விட்டவனுக்கு சற்று தூரத்தில் பேச்சு குரல் கேட்டது. இரவு நேரம் என்பதால் நன்றாகவே செவிகளில் விழுந்தது. குரல் வந்த திசை நோக்கி மெல்ல முன்னேறினான்.
அருகில் நெருங்கிய பின்னரே அவர்கள் யாரென்று சசிக்கு தெரிந்தது.
“ஏட்டி…. கீழ ௭(இ)றங்குடி…”
“ஷ்ஷ்… சத்தம் போட்டு நீயே ஆளுங்கள வர வைச்சிடுவ போலிருக்கே.”
“இந்நேரத்துல யாருடி வர போறா…”
“தெரியுதுல.. அப்புறம் என்னத்தக்கு பயப்படறவ…”
“ஏன்டி? , இந்த அக்கப்போரு பண்ற.. யாராவது பார்த்தாக்கா, மானம் போயிடும்டி. உன்ன கெஞ்சிக் கேக்குறன் எறங்குடி.”
“யே… யாருடி.. இவ.. செத்த இரு. எம்புட்டி தைரியம் இருந்தா நேத்து நம்ம விஷ்ணு கேட்டதுக்கு ஒரு மாங்கா கூட இல்லன்னு சொல்லியிருப்பான். இன்னைக்கு இந்த மரத்து காயெல்லாம் அதோ அங்கிட்டு இருக்க கெணத்துல பறிச்சு போடல எம் பேரு வருணாளினி இல்லை.”
“அச்சச்சோ.. இவ, பண்றதுல எனக்கு அடி வயிரே கலங்குதே.. யாராவது பார்த்துட்டு தாத்தாவுக்கு மட்டும் இந்த செய்தி தெரிஞ்சுது அம்புட்டு தான்…” என புலம்பியவாறு, கனி கைகளை பிசைந்து கொண்டு நிற்க, தோளில் ஒரு கரம் பதிந்ததும், “ஆத்தே!” என அலறி அடித்து திரும்பினாள்.
தன் மீது கை வைத்த உருவத்தைக் கண்டு அதிர்ந்தவள்.. ‘போச்சு.. எல்லாம் போச்சு.. இந்த அண்ணா ஏன் இப்போ இங்க எப்படி இந்நேரத்துக்கு வந்தாங்க, ஒருவேளை இவுக ஊர்ல இருந்து வீட்டுக்கு உள்ள வந்த சமயம் நாங்க வெளிய வரத பார்த்துட்டு வந்திருக்கங்களோ!’ என மனதிற்குள் யோசித்தவளாய்..,
“என்னண்ண… இந்தப் பக்கம், இந்நேரத்துல” என்றாள் தடுமாற்றமாக,
“அதை நான் கேட்கனும்…” என அழுத்தமான பார்வையை தன் தங்கை கனியின் மீது பதித்தான் சசி.
அதில் அவளது உடல் சில்லிட்டு போக… பயந்தவளாய், “மாங்காய் பறிக்க வந்தோம்” என்றாள்.
‘சும்மா பார்த்தாலே நடுங்கும், இதுல இந்த அண்ணா மொற மொறன்னு மொறைக்குதே.. இங்க இருக்குற வரைக்கும் ஜாலியா தான் இருந்தாங்க, வெளியூருக்கு படிக்க போய் தான் இப்படி ஆகிருச்சு.’
அவளை நன்கு முறைத்தவன், “ஒரு மாங்காய் பறிக்க இந்த அர்த்த ராத்திரியில் தோப்புக்கு வரணுமா?” என்று அடித் தொண்டையில் சீறினான். யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் வந்ததே அவனது கோபம்.
அதில் அவளது மேனி தூக்கிப்போட… தனது கோபத்தை மறைத்தவனாய், “நம்ம வீட்டிலே மரம் இருக்கே!” என அமைதியாக அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே…..
மரத்தின் மீது நின்று மாங்காயினை பறித்துக் கொண்டிருந்தவள், இவ்வளவு நேரம் புலம்பிக் கொண்டிருந்தவளின் பேச்சு சத்தம் இல்லாமல் போக கீழே குனிந்து பார்க்க, அவள் யாருடனோ பேசுவது போல் தெரிய.. மேலே கிளையிலிருந்து தொப்பென தரையில் குதித்தாள்.
தாவணி அணிந்திருந்தவள் தன் ஒரு பக்க பாவடையை முட்டிக்கு மேலே உயர்த்தி இடுப்பில் சொருகியிருக்க, தனது தாவணியின் ஒரு முனையில் பறித்த மாங்காய்களை பிடித்துக் கொண்டு, கீழே குதித்த வேகத்தில் ஏதும் விழுந்து விட்டதா என சுற்றும் பார்த்தவள், நிமிர்ந்து பார்க்க… உள்ளுக்குள் நடுங்கினாலும் அதை வெளிக்காட்டாது சமாளித்தவாறு,
“என்ன அத்தான் மோகினி கூட இந்நேரத்தில டான்ஸ் ஆட வந்தீங்களா? ஆமா, எங்க உங்க மோகினியை காணோம். சோலோவா சுத்திட்டு இருக்கீங்க… ஓ… உங்களுக்கு விஷயம் தெரியாதுல.. நேத்து தான நம்ம ஊருக்கு வந்தீங்க.. நம்ம தெக்கு தெரு பொன்னாயாள் பாட்டி போன வாரம் செத்துப் போச்சு… அது இங்கிட்டு தான் சுத்திட்டிருக்கு.. உங்கள மாதிரி அம்சமா கலரா இருக்க பசங்கள பார்த்தா, என்னய கல்யாணம் கட்டிக்கோன்னு பின்னாலே வருதாம்.. நாங்க வூட்டுக்கு தான் போறோம், நீங்களும் வாங்களேன் நானே கூட்டிட்டுப் போறேன்” என்றாள்.
“அடிங்.. என்ன லந்தா… வூட்டுக்கு வாங்க உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு…” என்றவனாய், சசி தனது தங்கையின் கையை பிடித்து அழைத்துக்கொண்டு பாதையில் முன்னே சென்றான்.
“அச்சச்சோ இந்த நெட்ட கொக்கு தாத்தா கிட்ட வத்தி வச்சிட்டா.. என் கதி அவ்ளோதான். சென்னைக்கு போன பிறகு தான் இந்த அத்தான் சிடுசிடுன்னு இருக்கு” என்று சிந்தித்தவள் தனக்கு முன்னால் பல அடி முன் சென்றவனை, “ஓய் மாமோய்!” என சத்தமாக அழைத்தாள். அந்த இருளில் அவளது வார்த்தைகள் காற்றில் கலந்து திசையெங்கும் எதிரொலித்தது.
அதில் திரும்பி நின்று அவளை முறைத்தவன்… “என்ன பேபி” என அழுத்தமாகக் கேட்டான்.
சசி கேட்ட விதத்திலே அவன் கோபமாக இருக்கின்றான் என்பதை உணர்ந்துகொண்ட வரு… “இந்த மங்காயெல்லாம் என்ன பண்றது?” என்று ஒன்றும் அறியாதவள் போல் தன் பாவாடையை விரித்து அதிலிருந்த காய்களை காண்பித்தாள்.
எல்லாத்தையும் “நீயே அமுக்கு” என்றவன் கனியைக் கூட்டிக்கொண்டு முன் சென்றான்.
கனி… “அண்ணா வரு” என்க,
“அந்த பொன்னாயாள் பாட்டியை கட்டிக்கிட்டு இங்கேயே சுத்தட்டும்” என்றான்.
அதில் பதறிய கனி, “உண்மையாவே பேய் இருக்கா அண்ணா” என்று பயத்துடன் வினவினாள்.
“அப்படியே பேய் இருந்தாலும் இவளை ஒண்ணும் செய்யாது.”
“ஏன் அண்ணா?”
“இவள் தான் குட்டிச்சாத்தானாச்சே…”
வருணா தங்களுக்கு பின்னால் வருகிறாள் என்பதில் ஒரு பார்வை வைத்திருந்தான் அபி. அந்நேரத்தில் அவளை மட்டும் எப்படி விட்டுச் செல்வான்.
சசியின் பதிலில் வருவிற்கு இது சரியான பேரு தான் என்று கனி வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க,
“என்னைப் பார்த்தால் அப்படியா தெரியுது” என்று இடுப்பில் கை வைத்து முறைப்புடன் வரு கேட்டாள்.
அதற்கு சசி… “இதுக்கு முன்னால் எப்படியோ, ஆனால் இப்போ நிஜமாவே நீ அப்படி தான் இருக்க” என்க.. அவனையும், கனியையும் வரு துரத்த ஆரம்பித்தாள்.
இவர்கள் ஒட்டமாகாவே வீட்டை வந்து அடைந்தனர்.
வருவும், கனியும் தங்கள் அறைக்குள் செல்ல எத்தனிக்க, “இனியொருமுறை இந்தமாதிரி இரவு நேரத்தில் வெளிய போகக்கூடாது” என அறிவுறுத்திய பின்னரே அவர்களை விட்டான்.
காலையில் விடிந்ததும்… கவி முதலில் தேடி வந்தது தனது தங்கையிடம் தான்.. அவள் கொட்டகையில் குட்டி கருப்பனுக்கு வைக்கோல் வைத்துக்கொண்டிருந்தாள்.
தங்கையை நெருங்கியவன்… சுற்றி யாரும் இல்லையென்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு,
தான் கனியை காதலிப்பதை வருவிடம் தெரிவித்தவன், ஒரு சிறு காகிதத்தாளை அவளது கையில் திணித்து “இதை கனியிடம் கொடுத்துடு” என்றான் கட்டளையாக…
பள்ளி படிக்கும் வருவிற்கு காதல் என்பதே கெட்ட வார்த்தையாகிப் போயிருக்க, தனது அண்ணனின் செயல் தவறாகவேத் தோன்றியது.
“அண்ணா, இது தப்பு…” என அவள் இழுக்க..
அவர்களுக்கு பின்னால் “மாமா” என்றக் குரல் ஒலித்தது.
இருவரும் யாரென்று பார்க்க கனி நின்றிருந்தாள்.
அப்போது தான் தலைக்கு குளித்துவிட்டு வந்திருப்பாள் போல்.. தலையில் துவாலையால் கொண்டையிட்டிருக்க, முன் நெற்றியில் முடிகளின் வழியே நீர் சொட்டிக்கொண்டிருந்தது. அந்த தோற்றத்தில் கவி கனியை பார்த்தது பார்த்த மாதிரி சிலையென நின்றிருக்க,
கனி கவியின் அருகில் நெருங்கி வந்து, மீண்டும் “மாமா” என்றழைக்க.. அந்த அழைப்பு அவன் இதயத்தை தடம் பெயர்த்தது. எப்போதும் அழைக்கும் விளிப்பு தான் ஆனால் இன்று ஏதோ ஒரு சுகம் அதிலிருப்பதை போன்று உணர்ந்தான்.
அவன் அப்படியே நிற்க…
“உங்களை தாத்தா வர சொன்னாங்க” என்றதோடு தன் வேலை முடிந்ததென்று கிளம்பிவிட்டாள்.
இன்னொரு முறை அவளது மாமா என்ற அழைப்பை எதிர்பார்த்து ஏமாந்து போனான்.
“நீங்களே.. கொடுத்துடுங்க…”
வருவின் வார்த்தையில் மீண்டவன்.. “நான் சொன்னதை செய், ஈவினிங் வரும்போது அவ என்ன சொன்னான்னு நீ எனக்கு சொல்லணும்” என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.
பள்ளியில்…. வகுப்புகள் எதையும் கவனிக்காது ஒரு வித பயத்திலே வரு காணப்பட்டாள். இடைவேளையில் என்ன என்று கேட்ட கனியிடம் கவி அளித்த பேப்பரினைக் கொடுத்தாள்.
அதனை பிரித்துப் பார்த்த கனிக்கு அதில் எழுதியிருந்த முதல் வார்த்தையிலே அது என்ன விதமான கடிதமென்று புரிந்து போனது. மேலே ஒரு வார்த்தை கூட படிக்காமல் வருவின் கையில் திணித்த கனி, “இதை யார் உன்னிடம் கொடுத்தாங்களோ அவரையே நேரில் வந்து சொல்ல சொல்லு” என தைரியமாகக் கூறினாள்.
வருவிற்கு தான் இதை கவியிடம் எப்படி தெரிவிப்பதென்ற பயம் உண்டானது.
மாலை வீடு வந்து சேர்ந்த வரு கவியின் கண்களிலிருந்து பதுங்கி பதுங்கி சென்றாள்.
தூண் மறைவிலிருந்து தங்கையை பிடித்து இழுத்தவன், “என்ன சொன்னாள்?” என்றான்.
“அண்ணா… சாரி’ண்ணா… நீங்களே கொடுத்துடுங்கண்ணா.”
“ஏன்.. உன் பிரண்ட் என்ன சொன்னா?”
“எதுவும் சொல்லல…”
“ஒழுங்கா.. மறைக்காம சொல்லு.. நான் ஒன்னும் சொல்லமாட்டேன்.”
“அச்சச்சோ இந்த அண்ணா விட மாட்டாங்க போலிருக்கே!” தன் அண்ணனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என அவள் யோசித்துக் கொண்டிருக்க..,
அங்கே வந்தான் சசி… தன் நண்பனை கண்டதும், தன் தங்கையிடம் கேட்டுக் கொண்டிருந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
“என்ன நான் வந்ததும் பேசிய விஷயத்தை நிறுத்திட்டீங்க… என்ன பேபி, உன் அண்ணன் என்ன சொல்றான்?”
அவன் கேட்டதும் தன் அண்ணனை மாட்டி விடுவதற்கு சரியான நேரம் என நினைத்தவள், “அண்ணா உங்களுக்கு தைரியம் இருந்தா நேரா வந்து சொல்ல சொன்னாள்” என கத்திக் கொண்டே ஓடி விட்டாள்.
போச்சுடா என தன் நண்பனை பார்த்துக் கொண்டே தலையில் கை வைத்துக் கொண்டான் கவி.
“என்னடா மச்சான்… லவ்வாஆஆடா.. சொல்லவே இல்லை” என்று அவன் கேட்க.. “கன்ஃபார்ம் ஆனதும் சொல்லலாம் நினைத்திருந்தேன் மாமா… மாப்ள…” என்று கவி தடுமாறினான்.
“சரி.. சரி… நாளைக்கு காலையில என்னையும் கூட்டிட்டுப்போ.”
“எங்கடா?”
“அதான் டா… சிஸ்டர் நேரா வந்து உன் லவ் சொல்ல சொன்னான்னு பேபி சொல்லிட்டு போகுதே.”
அதற்கு அவன்… “என்ன சிஸ்டரா…” என அதிர்ந்து, ‘உண்மையாவே நான் லவ் பண்ற பொண்ணு உன் தங்கச்சி தான்டா மாமா’ என மனதிற்குள் கூறிக் கொண்டு வெளியில் ஈஈஈஈ என சிரித்து வைத்தான்.
மறுநாள் காலையில் மாணவர்கள் அனைவரும் பள்ளி செல்லும் சாலையில், ஊருக்கு எல்லையில் அமைந்திருக்கும் அய்யனார் கோவிலில் காத்திருந்தான் கவியரசன்.
தன் நண்பன் நேற்று தானும் உடன் வருவதாக சொல்லியதும்.. ‘லவ் சொல்றதுக்கு முன்பே ஒரு வில்லன் ரெடி ஆகிடுவான் போலிருக்கே’ என கலக்கம் கொண்டு சசி’யை கழட்டி விட்டு சரியான நேரத்திற்கு வருவதற்குள் அவனுக்கு போதும் போதுமென்று ஆனது.
சாலையின் இரண்டு பக்கமும் பச்சை பசேல் என வயல்கள் நெற்பயிர்களை தாங்கி நிற்க, நடுவே கருப்பு வண்ணம் தீட்டிய தார் சாலையில் இரட்டை பின்னலில் டிசம்பர் மலர் வைத்து பள்ளி சீருடையில் ஒயிலாக மிதிவண்டியில் வந்து கொண்டிருப்பவளைக் கண்டதும் அவன் மனம் தாளம் தப்பியது.
சற்று தூரத்தில் உள்ள மலையின் குளிர்ந்த காற்று அவன் உடலை தழுவிச் செல்ல காதல் வானில் எங்கோ சிறகடித்து பறந்தான்.
தன் மனம் கவர்ந்தவள் கோவிலைத் தாண்டி செல்வதை உணர்ந்தவன் பறப்பதை நிறுத்தி விட்டு தனது மிதிவண்டியை அவளை நோக்கி வேகமாக மிதித்தான்.
முன்னே சென்று கொண்டிருந்தவளின் குறுக்கே அவன் தன் மிதிவண்டியின் முன் சக்கரத்தை நிறுத்தி தடை செய்ததில், திடீரென ஏற்பட்ட தடுமாற்றத்தால் மிதிவண்டியுடன் சேர்ந்து அவளும் கீழே விழுந்தாள்.
அவள் விழுந்ததை கூட உணராமல்… “நேரில் வந்து சொல்ல சொன்னியாமே! வந்துட்டேன்.. சொல்லட்டுமா?” என அவன் திமிராக கேட்க..
கீழே விழுந்தவாறே அவனது முகத்தை நிமிர்ந்து முறைத்து பார்த்தவள், “அவன் சொல்லட்டுமா?” என்றதில் அவசரமாக எழுந்து தனது துணியில் ஒட்டியிருந்த மணலை உதறி, விழுந்து கிடந்த மிதிவண்டியை தூக்கி நிறுத்தி அதிலேறி அமர்ந்தவள், “போடா எருமை..!!” என திட்டி வேகமாக சென்று விட்டாள்.
போடா எருமை என்ற அவளது வார்த்தையில் இவனது முகம் தான் விளக்கெண்ணெய் குடித்தது போல் ஆனது.
அத்தோடு… கனியின் வயது மற்றும் படிப்பினை மனதில் வைத்து ஒதுங்கியிருக்க முடிவு செய்தான் கவி.
வீட்டிற்கு வந்தவனிடம் என்ன ஆனது எனக் கேட்ட சசியிடம், “இது ஒத்து வராது மச்சான்” என்றதோடு உள்ளே சென்றுவிட்டான் கவி.
பின்னாளில் எல்லாம் சரி வருமென்று நினைத்த சசி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.
கவியின் பார்வையிலிருந்தே அவன் காதலிக்கும் பெண் தன் தங்கை தான் என்று சரியாக கண்டு கொண்டான் சசி.
அன்று இரவே இயக்குனரிடமிருந்து கால் வரவும் சென்னை கிளம்ப அபி ஆயத்தமாகினான்.
இனி இங்கிருந்தால் ஏதாவது ஒரு விதத்தில் கனியை நெருங்க முயற்சி செய்து காயப்படுத்தி விடுவோமென்று நினைத்த கவியும் அபியுடன் ஊருக்கு செல்ல முடிவெடுத்தான்.
“நீ உன் லீவ் முடிந்து வந்தால் போதும்” என்ற அபிக்கு மௌனமே பதிலாக அளித்து அவனுடன் கவியும் கிளம்பிவிட்டான்.
அன்று சென்றது தான்… அதன் பிறகு இரண்டரை வருடங்கள் கடந்து வருவின் திருமணத்திற்கென்று தான் அபி தன் கிராமம் வந்தான்.
அந்த இரண்டரை வருடங்கள் என்ன நடந்தது எனத் தெரியாமல் வருணாவும், தன் வாழ்வின் கசந்த பகுதியிலிருந்து மீண்டு கனியும் நடப்பிற்கு மீண்டனர்.
கவியோ… ‘நான் அவளை விரும்புறேன் என்று கனிக்கு எப்படியோ தெரிந்தாயிற்று. அவளுக்கு காதல் வரும் வரை காத்திருப்போம்’ என்ற முடிவுடன் காத்திருந்தவன், இன்று அவளுக்கு காதல் வந்த பிறகு தானே ஒதுக்கும் நிலையை அறவே வெறுத்தான்.
போதுமென நினைத்தவன் தொடர்வண்டியின் குலுக்களில் நினைவுகளிலிருந்து கலைந்தான்.
ஊரிலிருந்து தான் சென்னை வந்த பிறகு நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க அஞ்சிய சசி மெல்ல நிகழ்காலம் திரும்பினான்.
(சசியின் காதல் வாழ்க்கை இன்னமொரு பிளாஷ் பேக்காக வேறொரு பதிவில் இடம் பெரும்.)
error: Content is protected !!