சருகு 🍂 20 :
அதிகாலை….
படுக்கையிலிருந்து எழுந்த வரு தனது காலை நேர வேலைகளை முடித்து தலையில் நீர் சொட்ட சொட்ட குளியலறையிலிருந்து வெளி வந்தாள்.
அப்போது தான் கண்விழித்த அபி படுக்கையில் புரண்டு திரும்ப வருவின் முகம் கண்டான்.
சாதரண பருத்தி புடவையில் பால்கனியில் நின்று தன் நீண்ட ஈரக்கூந்தலில் வெண்டைப்பிஞ்சு விரல்களால் அளந்து கொண்டிருந்தாள்.
இளஞ்சூரியனின் செந்நிற ஒளியில் மலர்ந்திட்ட செந்தாமரையென நின்றிருந்தவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன் நிமிடங்கள் கடந்தும் தன் பார்வையை விலக்கவில்லை.
கடிகாரத்தில் கூவும் குயிலின் ஓசையில் கலைந்தவன் தன்னையே கடிந்தான்.
“இவ்வளவு நாள் பேபியாத் தெரிந்தவள் இப்போ உன் மனைவியாத் தெரிகிறாளோ! விஷாலி உன் மனதை விட்டு எங்கு சென்றாள்? இது தான் உன் காதலா?நீ இவ்வளவு பலவீனமான மனம் கொண்டவனா? மனதில் உதித்த காதல், இருவரும் சேர்ந்தில்லையென்றாலும் மனதால் நிலைத்து நிற்கும் என்பதெல்லாம் வெறும் பேச்சுதானா?” எனத் தன்னையே கடிந்துக் கொண்டவனுக்குத் தெரியவில்லை இது அவன் அவள் கழுத்தில் கட்டியுள்ள மஞ்சக்கயிற்றின் உரிமையில் உண்டான உணர்வென்றும் அவளை மனைவியாக அவன் மனம் ஏற்க ஆரம்பித்துவிட்டது என்றும்… காதல் மனம் ஒன்றை தேடி அலைய… இங்கு, கணவன் மனமோ வேறு ஒன்றிடம் தலைகுப்புற கவிழ்ந்துவிடும் போல்.
தன் தலையைக் குலுக்கி தன்னை சமன் படுத்தியவன் படுக்கையில் எழுந்து அமர… உள்ளே வந்த வரு தயக்கத்துடன் அவனை ஏறிட்டாள்..
ஆழமாக மூச்சினை ஆழ்ந்து சுவாசித்து எழுந்து நின்றவன்… அவளை பார்க்காமல், “தயவுசெய்து என் கண் முன்ன வந்துடாத” என்றான். அவள் தன் கணவனின் பேச்சில் விக்கித்து நிற்க, அவனோ குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.
அவன் கதவினை அறைந்து சாற்றியதில் சுயம் பெற்றவள்.. “உங்களை என் அதிரடியால் தான் வழிக்குக் கொண்டுவர முடியும்” என நினைத்தவளாய் அறையை விட்டு வெளியேறி மெல்ல படியிறங்க.. கவி மேலேறி வந்துக்கொண்டிருந்தான்.
அவனைக் கண்டதும் “அண்ணா” என ஓடிச்சென்று அவனைக் கட்டிக்கொண்டாள்.
தன் தங்கையின் அணைப்பை ஏற்றுக்கொண்ட கவி… அவளின் வாடிய முகத்தைக் கண்டுகொண்டவனாக “அந்த ராஸ்கல் உன்னை ஏதாவது காயப்படுத்திட்டானா” என்றுக் கேட்டான் தன் நண்பனைப் பற்றி தெரிந்திருந்தும்.
அவள் மெல்ல தலையசைக்க…
“எனக்கு அவனைப்பற்றியும் தெரியும்… உன்னைப்பற்றியும் தெரியும்” என்றவன் வருவின் மனநிலையை திசை திருப்ப எண்ணியவனாக… “ரொம்ப பசிக்கிதுடா சீக்கிரம் எதாவது செய்து தா. குளித்துவிட்டு வர்றேன்” என்றான்.
“சரி அண்ணா” என்றவள் வேகமாக சமையலறைக்குள் நுழைந்தாள்.
அபியின் அறைக்குள் நுழைந்த கவி அங்கிருந்த தனது உடைமைகளையெல்லாம் வாரி சுருட்டி எதிரே இருந்த அறைக்குள் சென்று அடுக்கத் தொடங்கினான்.
குளித்து முடித்து தயாராகிக்கொண்டிருந்த அபி நண்பனின் செயல்களைக் கவனித்தாலும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
தன் அறையை தயார் செய்த கவி மீண்டும் அபியின் அறைக்குள் நுழைந்து பெட்டிற்கு மேலே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அபியுடன் அவனிருக்குமான புகைப்படத்தை தனது அறைக்கு கொண்டுச்செல்ல கழட்ட, அதற்கு பின்னிருந்த புகைப்படத்தைக் கண்டு கோபம் தலைக்கேற அபியை திரும்பிப் பார்த்தான்.
அபி அமைதியாக அவனது முறைப்பினைத் தாங்கி நின்றான்.
கவி தன்னிடம் எதுவும் பேச போவதில்லை என்பதை உணர்ந்தவனாக, அவனே பெட்டின் மீதேறி தன் மனதில் நிறைந்து இருப்பவளின் படத்தைக் கழட்டி டெஸ்க் ட்ராவில் பத்திரப்படுத்தினான்.
“என் அபி இதுவரைக்கும் என்கிட்ட எதையும் மறைத்ததில்லைன்னு நினைத்திருந்தேன்… ஆனால், அது அந்த டைரியை பார்த்ததுமே இல்லைன்னு தெரிஞ்சிடுச்சு. இன்னும் எதையெல்லாம் மறைத்திருக்க அபி..” எனக் குரல் கமரக் கேட்ட கவி அவனது பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறிவிட்டான்.
அபிக்கு தன் மீதே கோபமாக இருந்தது. மானசீகமாக தன் கவியிடம் மன்னிப்பு வேண்டியவன் கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்துவிட்டான்.
பட வேலைகள் நிறைய இருப்பது ஞாபகம் வந்ததும் வேகமாக கிளம்ப எத்தணித்தவனை தடை செய்தது அவனது மொபைலின் ஒலி.
ஆன் செய்து காதில் வைக்க… அந்த பக்கம் அழைத்திருந்தது கனி.
“சொல்லுடா…”
“அண்ணா… அவங்க வந்துட்டாங்களா?”
“எவுங்க…” தெரிந்துக்கொண்டே யாரென்றுக் கேட்டான்.
“உங்க பிரண்ட்…”
“என் பிரண்டா?” (நான் எப்போ அவன் தங்கச்சி கழுத்துல தாலி கட்டினனோ அப்பவே, அவன் எனக்கு எனிமி ஆகியாச்சு… இது அபியின் மைண்ட் வாய்ஸ்)
“அண்ணா விளையாடாதீங்க… அவுங்க வந்துட்டாங்களா? இல்லையா?”
“ஹோ… என் மச்சானை கேக்குறியா? சார் வந்து ரொம்ப நேரமாச்சு” என்றான்.
பேசிக்கொண்டே அறையிலிருந்து வெளியில் வந்த அபி… தன்னறையிலிருந்து சரியாக அந்நேரம் வெளியே வந்த கவிக்கு கேட்க வேண்டுமென்று சத்தமாகக் கூறினான்.
கவி அதற்கும் அபியை முறைத்துப் பார்க்க..
அபி நமட்டு சிரிப்பு சிரித்தான்…
ஏற்கனவே அபியின் மீது கோபத்திலிருந்த கவி… இப்போது கோபம் அதிகரிக்க அவனிடமிருந்து மொபைலை பிடுங்கி, “என்னைப்பற்றி தெரிஞ்சுக்கணும்ன்னா எனக்கு கால் பண்ணு” எனக் கூறியவன் கட் செய்து மொபைலினை அபியின் சட்டை பாக்கெட்டில் வைத்துவிட்டு விடுவிடுவென கீழிறங்கினான்.
அபிக்கும் சிறிது ஆச்சரியம் தான்… கவியின் இந்த சிறு கோபமும். இருப்பினும் அவனது கோபம் அபிக்கு சிரிப்பைத் தான் வரவழைத்தது.
கவி நேராக சென்று டைனிங் டேபிளில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர, அபி ஹாலிலிருக்கும் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து சோபாவில் சென்று அமர்ந்தான்.
“ஏன்… தொரை சாப்பிட வர மாட்டாங்களோ!”
தன் தட்டில் இடியாப்பம் மற்றும் கடலைக்கறியை பரிமாறிக்கொண்டிருந்த வருவிடம் கவி கேட்க…
“இல்லைண்ணா… நேற்று காலை நான் கொஞ்சம் வயலண்ட்டா பேசி சாப்பிட வைத்தேன். ஆனால், மதியம் சாப்பிட வரல… இரவு சாப்பிட்டே வந்துட்டார். நான் பால் கொண்டுபோனேன். குடிக்காம தூங்கிவிட்டார்” என்று மொத்தமாக பதிலளித்தாள்.
அபி அவ்வளவு விரைவாக தூங்குபவன் இல்லை என்பதை அறிந்த கவி, பையன் ஏதோ பிளான் பண்ணிட்டான் என யோசித்தான்.
அண்ணா… அவுங்களை நீங்க சாப்பிட கூப்பிடுங்க என்ற வருவிடம்… “நேற்று எப்படி கூப்பிட்டியோ அப்படியே இப்பவும் கூப்பிடு” என்றவன் தன் உணவில் கவனமானான்.
காலையில் அபி அவ்வாறு கூறியதிலிருந்து சற்று மனம் தளர்ந்திருந்தவள் இது தான் சமயம் அண்ணாவும் உடன் இருக்கிறார் என்ற தைரியத்தில் தன் அதிரடியை கையில் எடுத்தாள்.
“ஏன் சாருக்கு வந்து சாப்பிடுங்க சொன்னாதான் சாப்பிட வருவீங்களோ!”
வருவின் சத்தமான பேச்சில் திசை திரும்பிய அபி, “எனக்கு பசியில்லை” என்றான்.
“அதெப்படி… பசியில்லாமப் போகும்… நைட் எத்தனை மணிக்கு சாப்பிட்டீங்களோ…” வரு அவன் முகத்தைப் பார்த்து கேட்க,
முயன்று வருவித்த கோபத்துடன் “பசிக்கலன்னா விடு” என்றான்.
அவள் மீண்டும் எதாவது பேசுவதற்குள் வெளியே சென்றுவிட நினைத்து அபி எழ,
“இப்போ நீங்க சாப்பிடாமப் போனால்.. நான் உங்க ஆபிசுக்கு கேரியர் தூக்கிட்டு வர வேண்டியது இருக்கும்” என்றாள்.
‘இவள் வந்தாலும் வருவாள்’ என மனதோடு சொல்லிக் கொண்ட அபி கவிக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
அவன் அமர்ந்ததும் வரு தன் கணவனுக்கு பார்த்து பார்த்து பரிமாற, கவி தன் சிரிப்பினை வாய்க்குள்ளே அடக்கிக் கொண்டிருந்தான்.
இப்போது கவியை முறைப்பது அபியின் முறையாயிற்று.
(நீங்க ரெண்டு பேரும் இப்படியே முறைச்சிகிட்டே இருங்கடா… ஆனால் உங்க முறைப்பெல்லாம் சும்மா… உல்லுலாய்க்கு என்று ரீடர்ஸ்க்குத் தெரியும்).
அபி கவியை ஏன் முறைகின்றான் என புரியவில்லையென்றாலும் அவன் இன்னும் ஒரு வாய் கூட உண்ணாதிருப்பதால்,
“என்ன மொறைப்பு… ஒழுங்கா சாப்பிட போறீங்களா இல்லை… நான் ஊட்டிவிடவா” என்றாள் அடவடியாக..
‘உன் அண்ணன் இருக்கும் தைரியத்தில் ரொம்ப ஆடாதடி…’
கவியை முறைத்துக்கொண்டே தட்டினை காலி செய்தவன் வேகமாக எழுந்துக்கொண்டான்.
கை கழுவியவன்.. கையினைத் துடைக்க டவலினைத் தேட, வரு தன் சேலைத் தலைப்பை அவனிடம் நீட்டினாள்.
“ராமு அண்ணா…” சிங்கம் போல் கர்ஜித்தான்.
வரு பயத்தில் தன் கண்களை அகல விரித்து நிற்க, கவி நாற்காலியிலிருந்து எழுந்தே விட்டான்.
அபியின் கத்தலில் வேகமாக ஓடி வந்த ராமு.. “என்ன தம்பி” என பதட்டத்துடன் வினவ..
“இங்கிருந்த டவல் எங்கே?” எனக் கேட்டான்… வாஷ் பேஷனிற்கு மேலேயிருக்கும் ஆங்கரினை சுட்டிக்காட்டி அதே சீற்றத்துடன்.
அவர் புதிதாக ஒன்றினை எடுத்து வந்து மாட்ட.. அதில் கைகளை துடைத்தவன் வருவை அழுத்தமாகப் பார்த்துக்கொண்டே, “அவுங்கவுங்க வேலையை மட்டும் பார்த்தல் போதும்” என்றான்.
கவியிடம், “எவ்வளவு நேரம் இப்படியே நின்னுட்டு இருக்கப் போற என்ற அபி சீக்கிரம் வந்து சேரு வெயிட் பண்றேன்” என்றவாறு வெளியேறினான்.
அரண்டு நின்று கொண்டிருந்த தங்கையிடம் சென்ற கவி… “என்னடா.. பயந்துட்டீயா.. அவன் கொஞ்ச நாளாவே இப்படி தான்டா இருக்கான் (கொஞ்ச நாளா கவி???), சீக்கிரம் மாத்திடலாம்” என்க..
வருவோ… “அத்தானுக்கு பிபி (bp) இருக்குமா அண்ணா.. என்னா கோவம் வருது” என்றாள் அப்பாவியாக..
அதில் இதழ் விரித்து சிரித்த கவி கோபக்கார அபிக்கு தன் தங்கை தான் ஏற்றவள்.. அவள் மனதில் ஒன்றும் வைத்துக்கொள்ளவில்லையென நிம்மதியாக உணர்ந்தான்.
அபியின் நினைவு வர, “லேட்டா போனா திட்டுவானே” என்றவாறு… வருவிடம் பத்திரமாக இருடா, எதாவதுன்னா போன் பண்ணு” என்றவனாக வெளியே ஓடினான்.
கவி வந்ததும் தோட்டத்தினை வெறித்திருந்த அபி காரிலேற கவியும் அமர கார் பிலிம் சிட்டியை நோக்கி சீறிப் பாய்ந்தது.
********
ஊர் மக்களிடம் சொல்லியது போலவே அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப வெங்கட் விதை நெல்லினை அளித்தார்.
மக்கள் அனைவரும் மகிழ்வுடன் அதனைப் பெற்று.. பெரிய வீட்டு மக்களை வாழ்த்திச் சென்றனர்.
தன் மகனிடம் வந்த கோபாலன்… “சாமிக்கண்ணு இப்போது அடிப்பட்ட பாம்பு, எப்போதும் ஒரு கண்ணு அவன் மீது இருக்கட்டும் என்றார்.
சரியென தலையசைத்த வெங்கட் ரங்கநாதனிடம், “நீங்க கொஞ்சம் சூதானமா இருங்க மச்சான். அவன் கோபம் முழுக்க கவி மேலயும் உங்க மேலயும் தான் இருக்கும். கவி இங்கில்லை. உங்களை எதாவது செய்யத்தான் திட்டம் தீட்டுவான்.”
“அதை விடுங்க மச்சான் பார்த்துக்கலாம்.”
இருவரும் பேசிக்கொண்டிருக்க அங்கு வந்த கனி, “அப்பா அத்தை சாப்பிட வர சொன்னாங்க” என அழைக்க,
மகளின் அழுது வீங்கிய முகத்தினைப் பார்த்து பதறியவராக, “என்ன கண்ணு ஆச்சு? ஏன் முகமெல்லாம் அழுது வீங்குன மாதிரியிருக்கு” என பாசமாகக் கேட்டார்.
தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லையென்பதை போல் ரங்கநாதன் சென்றுவிட,
“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா… வருயில்லாம ஒரு மாதிரியா இருந்தது. அவ்வளவு தான்” என்றவள் கல்லூரிக்கு செல்ல வெளியே வாசு காத்திருப்பதாகக் கூறிச் சென்று விட்டாள்.
ஆனால், மகளின் பதிலினை அந்த அன்புத் தந்தை நம்பவில்லை என்பது அவரது யோசனையிலேத் தெரிந்தது.
விஷ்ணுவும் கனியுடனே பள்ளிக்கு கிளம்பிவிட, ஆண்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டே உணவு அருந்தினர்.
“எப்படியோ நம்ம விருப்பப்படியே… கல்யாணமே வேண்டான்னு சொல்லிட்டிருந்த அபிக்கும், ஒரு பெரிய சிக்கல்ல மாட்டயிருந்த வருவுக்கும் கல்யாணம் முடிஞ்சிருச்சு.”
“அடுத்து நம்ம கவிக்கும் கனிக்கும் தான்…”
பெரியவர் மகிழ்வுடன் தெரிவிக்க,
அனைவரும் அதில் சம்மதம் என்பதைப் போன்று சந்தோஷமாக முகம் மலர,
ஆத்திரம் அடைந்த ரங்கநாதன்… “அப்படியொரு நினைப்பு உங்களுக்கிருந்தா அதை இந்த நிமிஷமே மறந்துடுங்க மாமா” என்றவர் மில்லுக்கு செல்லுவதாகக் கூறிச் சென்றார்.
எல்லோரும் விக்கித்துப் போயினர்.
ராதிகாவிற்கும் கனி தான் தன் மருமகளாக வர வேண்டுமென்று ஆசை.
சிறு வயதில் ஒருமுறை கனியிடம் கடிந்துக்கொண்டவர் அதன் பிறகு அவளை எதுவும் கூறாதது அவளை அவரும் ஏற்றுக்கொண்டதாக நினைத்திருக்க, அவர் இவ்வாறு கூறியதும் ராதிகாவிற்கு தன் ஆசை நிறைவேறாதோ என்ற பயம் உதித்தது.
“ஆண்டவன் சிந்தனை என்னவோ அது தான் நடக்கும்” என்ற வெங்கட்டும் பாதி உணவில் எழுந்துக் கொண்டார்.
ராதிகா கலக்கமாக இருக்க உணவு மேசையினை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த லலிதாவும், கலாவும் “கவிக்கு கனி தான். அதுல எந்த மாத்தமும் இல்லை நீங்க கவலைப் படாதீங்க” என ஆறுதல் அளித்தனர்.
கல்லூரிக்கு சென்ற கனியின் மனம் வகுப்பில் பதியவேயில்லை… கவியின் நினைவாகவே இருக்க வருவும் உடன் இல்லாதது வருத்தமாக இருந்தது.
வாசுவும் கவியைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள். மனதில் எதையோ நினைத்து மருகுவதை ஒரு தோழியாக அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வரு உடனில்லை என்பதால் அதை நினைத்து பீல் பண்றாளோ என எண்ணியவள் அவளிடம் இடைவேளையின் போது நேரடியாகவே கேட்டுவிட்டாள்.
யாரிடமாவது மனம் விட்டு பேசினால் நன்றாக இருக்குமென்று நினைத்திருந்த கனியும் அன்று கவியை அவள் பேசிய வார்த்தைகளையும், நேற்று தான் காதலை வெளிப்படுத்தியும் கவி கண்டு கொள்ளாமல் சென்றதும் கூறினாள். தனது சிறுவயது நிலை யாருக்கும் தெரியாது என்பதால் அதையும்… ரங்கநாதனின் பேச்சுக்களையும் மட்டும் சொல்லவில்லை.
கனி சொல்லி முடித்ததும், வாசு தன்னுடைய கரம் கொண்டு கனியின் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டாள்.
கனி அதிர்ச்சியுடன் தன் தோழியை ஏறிட்டு பார்க்க… வாசு பேசத் தொடங்கினாள்.
கொஞ்சமாவது அறிவிருக்காடி..!!!!
“லூசாடி நீ….
உன் மேலே உயிரே வச்சிருக்க கவி அண்ணாவை பார்த்து எப்படிடி உன்னால இப்படியெல்லாம் பேச முடிஞ்சிது.
அவருடைய காதல் உன் கண்ணுக்கு அப்படித்தான் தெரிஞ்சுதா..!!!
காதலிச்ச பொண்ணு பக்கத்துல இல்லைன்னாவே வேறு ஒரு பொண்ணை சைட் அடிக்கிற பசங்களுக்கு நடுவுல நாலு வருஷமா.. அவர் தன்னுடைய காதலை உன் கிட்ட சொன்ன பிறகும் நீ அவரை விரும்புறீய்யான்னு தெரியாம உனக்காக காத்திட்டிருந்தவரை பார்த்து என்ன பேச்செல்லாம் பேசியிருக்க,
அவருக்கென்ன சிட்டியில வேற பெண்ணே கிடைக்கலைன்னு நினைச்சியா… உன்னைவிட அழகான அறிவான பொண்ணுங்க அவருடைய கிளாஸ்லே கூட இருந்திருப்பாங்க… அப்பவும் உன்னை மட்டுமே தேடி வந்திருக்கார்ன்னா என்ன அர்த்தம், அந்த அளவுக்கு கவி அண்ணாக்கு உன் மேல காதல்.. அதை புரிஞ்சிக்காம இப்படி அவரை காயப்படுத்திட்டியேடி!” வாசு ஆற்றாமையுடன் முடித்தாள்.
வாசுவின் வார்த்தைகள் ரணமாகியிருந்த மனதை மேலும் வலிக்க செய்ய, அவள் மடி மீதே தலை வைத்து கதறினாள்.
“நானே என் தப்பு அறிஞ்சு நொந்துகிட்டு இருக்கேன். இதுல நீயும் என்ன நோகடிக்காத வாசு” எனக் கதறிய தோழியை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள் வாசு.
“இப்போ நான் என்ன பண்றது வாசு… மாமா என்னை வெறுத்திருப்பங்களா?” எனக் குழந்தையாய் கேட்ட கனியிடம்..
“தன் காதலை புரிந்து கொள்ளவில்லையேங்கிற வருத்தத்தில் தான் உன்னை விட்டு விலகியிருப்பாங்க.. இவ்வளவு நாள் அவர் உன் காதலுக்காக உன்னை சுற்றி வந்தாரில்ல.. இப்போ நீ சுற்று” என வாசு கூற.. தனக்கு ஒரு தீர்வு கிடைத்த மகிழ்வில் கனியின் முகம் தெளிவானது.
இன்று முதல் தன் காதல் விளையாட்டை அரங்கேற்ற முடிவு செய்தாள் கனி.
இது தெரியாமல் அவளது மனம் கவர்ந்தவனோ அபியிடம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நின்றிருந்தான்.
காலை அலுவலகத்திற்கு அபியும் கவியும் ஒரே காரில் பயணித்த போதும் ஒருவருக்கொருவர் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.
இருவரும் ஸ்டுடியோவிற்குள் நுழைய நிவாஸ் ரெடியென அபியிடம் கூற, அபி கவியை டப்பிங் ரூமிற்குள் அழைத்துச் சென்றான்.
அபி உள்ளே நுழைந்ததும் அறை முழுவதும் அமைதி நிலவியது. கவி டப்பிங் பூத்திற்குள் நுழைந்து ஹெட் செட்டினை காதில் மாட்டியதும் ரெக்காடர் ஆன் செய்யப்பட்டது. கவிக்கு முன்பாக திரையில் படம் ஓடிக்கொண்டிருக்க தன் கையிலிருந்த பேப்பரினைப் பார்த்து அதிலிருந்த வசனங்களை தங்கு தடையின்றி சரியான ஏற்ற இறக்கங்களுடன் பேச ஆரம்பித்தான்.
அபியின் மெச்சுதலான பார்வையில் சுறுசுறுப்பாக பேசினான். நிவாஸிற்கு கவியின் மீது ஆச்சரியமாக இருந்தது. அபியின் ஒரு வார்தைக்காக என்னவும் செய்யும் அவனது அன்பு வியப்பாக இருந்தது.
கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் கடந்த நிலையில், படத்தின் அனைத்து வசனங்களையுமே கவி முடித்திருந்தான். எஞ்சியிருந்தது ஒரேயொரு காதல் வசனம் மட்டுமே…. நடிக்கும் போது கனியை நினைத்து எப்படி திணறினானோ இப்போதும் அதே நிலையில் தவித்தான். நான் உன்னை வெறுத்துவிட்டேன், இனி என்னால் எந்த பெண்ணிடமும் தாராளமாக காதல் வசனம் பேச முடியுமென வீம்புக்கு மனத்திலிருக்கும் தன்னவளிடம் வம்பு செய்தவனால் ஒன்றரை மணி நேரம் தாண்டியும் காதல் வசனம் பேச முடியவில்லை.
நேரம் கடக்க அபியின் பொறுமையின் எல்லை தாண்டயிருக்கிறது என்பதை உணர்ந்த கவி இறுதியாக ஒருமுறை முயற்சிக்க திரையில் சின்மயிக்கு பதிலாக கனியின் முகமே தோன்றி இம்சித்தது. தன்னால் முடியவே முடியாது என புரிந்துகொண்ட கவி மைக்கினை ஆப் செய்து ஹெட் செட்டினை கழட்டி வைத்துவிட்டு அபியின் முகம் பார்க்காமல் வெளியேறிவிட்டான்.
நிவாஸிற்கு பயம் தொண்டையை அடைத்தது. அபியை பார்க்கவே அவனது கண்கள் மறுத்தது.
ஆனால், அபியோ தனது இருக்கையிலிருந்து எழுந்தவன்… பூத்திற்குள் நுழைந்து வசனத்தை கவியின் குரலில் அழகாக பேசி முடித்து வெளியில் வந்தான்.
நிவாஸ் உச்சக்கட்ட ஆச்சரியத்தில் இருந்தான். “இவரு மிமிக்ரி எல்லாம் பண்ணுவாரு போல்” என்று வியந்தான்.
ஒரு இயக்குனர் ஆக, சம்பந்தப்பட்ட அனைத்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்று அன்று அபியின் செயலில் நிவாஸ் தெரிந்துகொண்டான்.
ஆனால் அபி இதுவரை கவியின் குரலில் மட்டும் தான் மாற்றி பேசியிருக்கின்றான். கடந்த இரண்டு வருடங்களாக வீட்டின் அழைப்பை தவிர்ப்பதற்காக, யாரேனும் அபிக்கு கால் செய்தால் கவியின் குரலில் பேசி அபி பிஸியாக இருப்பதாகக் கூறி வைத்துவிடுவான். கவிக்கே இது தெரியாது.
அபி வெளியில் வந்த சமயம் ஸ்டுடியோவின் வராண்டாவில் கவியுடன் சர்மா பேசிக்கொண்டிருந்தார்.
மரியாதை நிமித்தமாக அவருக்கு புன்னகையளித்த அபி அவர்களுக்கு அருகில் சென்றான்.
“படம் எந்தளவில் இருக்கிறது அபி?” என்ற அவரது கேள்விக்கு.. “டப்பிங் முதல் கொண்டு அனைத்தும் முடிந்துவிட்டது இனி போஸ்ட் ப்ரோடெக்ஷன் அண்ட் ப்ரோமோ வேலைகளை ஆரம்பிக்கலாம்” என்றான்.
“சின்மயி அவுட்டோரில் இருக்காங்களே… அவங்களோட டப்பிங் முடிஞ்சுதா?”
“எஸ்… அல்ரெடி… ஷீ பினிஷெட்… நான் சென்னை வருவதற்கு முன்பே நிவாஸ் அவங்க டப்பிங்கை முடிச்சிட்டான்” என விளக்கம் கொடுத்தான்.
சரியென தலையசைத்த சர்மா… “படத்தின் தலைப்பை எனக்கு மட்டுமாவது சொல்லுங்களேன் அபி” என சிறு புன்னகையுடன் கேட்க அவருக்கு பதிலாக அபியும் புன்னகையையே அளித்தான்.
“இந்த படத்தோட ப்ரோடுயூசெர் அபி நான்… எனக்கே எவ்வளவு நாளைக்கு மறைப்பீங்கன்னு பார்க்கிறேன்…” அவரது குரலில் கேலி நிறைந்திருந்தது.
“ஆடியோ ரிலீஸ் அப்பவே படத்தோட பர்ஸ்ட் லுக் டைட்டிலோட ரிலீஸ் பண்ணிடலாம் சார்… பர்ஸ்ட் லுக் ரெடி ஆனதும் முதல்ல உங்க கிட்ட தான் காட்டுவேன்.” அபியும் அதே கேலி குரலில் கூறினான்.
இவர்கள் இருவரும் சிரிப்புடன் பேசிக்கொண்டிருக்க, கவி வேறொரு சிந்தனையில் மூழ்கியிருந்தான்.
அதனை கவனித்த அபி எதுவும் கேட்டுக்கொள்ளாமல் சர்மாவுடன் தனது அறைக்கு சென்றான்.
“நம்ம மூவியோட சாட்டிலைட் ரைட்ஸ் அதிகமான ரேட்க்கு சேல்ஸ் ஆகிருக்கு அபி. இதற்கு காரணம் நீங்க தான்.”
“மெயின் ரீசன் உங்க ப்ரோடக்ஷன் நேம் தான்.”
இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி நன்றி சொல்லிக்கொண்டனர்.
சர்மா திடீரென “காங்கிராட்ஸ்” என்றார்.
எதற்கு என புரிந்துகொண்டவன் முகம் இறுகியது.
அபியின் இறுகிய தோற்றம் அவரது கருத்தில் பதியவில்லை. மேற்கொண்டு தன் பேச்சை தொடர்ந்தார்… “கல்யாணம் தான் சொல்லிக்காமா செஞ்சுட்டீங்க, உங்க மனைவியை எங்களுக்கெல்லாம் எப்போ நேரில் அறிமுகப் படுத்தப்போறீங்க?”
உங்களது மனைவியென சர்மா கூறும்போது விஷாலியின் முகம் சலனமாகத் தோன்றினாலும், அடுத்த நொடியே வருவின் முகம் அழுத்தமாகத் தோன்றியது. எப்படி இப்படி என யோசித்தவன் ஆடியோ ரிலீஸ்க்கு அழைத்து வருவதாகக் கூறினான்.
“அப்போ ட்ரீட்லாம் இல்லைன்னு சொல்றீங்க” என்றவரை திசைதிருப்பும் பொருட்டு,
“ப்ரோமோ வேலைகளுக்கு சின்மயி இங்கு இருக்கணும் சொல்லிடுங்க சார்” என்க அதற்கு ஆமோதிப்பாக தலையசைத்தவர் வேறு வேலை இருப்பதாகக் கிளம்பி விட்டார்.
மொபைலில் உள்ள விஷாலியின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் “என்னை மன்னிச்சுடு… ஆனா நான் நம் காதலுக்கும் உனக்கும் துரோகம் மட்டும் செய்யல” என்று மறுகினான்.
சிறிது நேரத்தில் தன்னை திடப்படுத்திக் கொண்டவன் வெளியே வந்து கவியை வீட்டுக்கு செல்லுமாறு தெரிவிக்க, எங்கு இவன் இரவு வீட்டுக்கு வருவதை தவிர்ப்பதற்காக தன்னை முன்பே அனுப்புகின்றானோ என நினைத்த கவி “நீயும் வா போலாம்” என்க.. தனக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேலை இருப்பதாக அபி கூறினான்.
கவி, “எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. நீ வேலையை முடிக்கும் வரை நான் வெயிட் பண்றேன்” என்க…
அபி, “நீ அடங்க மாட்ட.. அண்ணனும் தங்கச்சியும் நான் சொல்றத எதுவும் கேட்கக்கூடாதுன்னு இருக்குங்க போல” என நினைத்தவன், ‘வாடா இன்னைக்கு உன்னை வச்சு செய்றேன்’ என மனதில் நினைத்துக்கொண்டான்.
அபியின் அறையில் கவி அமர்ந்திருக்க, அவனிடம் வந்த நிவாஸ் அபி அழைப்பதாகக் கூறினான்.
அபி போட்டோ ஷூட் அறையில் இருந்தான்.
அபிக்கு அருகில் சென்று கவி அமைதியாக நிற்க.. அவன் வந்தது தெரிந்தும் தன் வேளையில் கண்ணாக இருப்பதாக அபி காட்டிக்கொண்டான்.
ஐந்து நிமிடங்கள் கடந்தும் அபி தன்னை பார்க்காததும் திரும்பி செல்ல கவி நகர இருந்த வேளையில்…
“என் கிட்ட சார் பேச மாட்டீங்களோ.. ஈவ்னிங் வீட்டுக்கு போன்னு சொல்லும் போது மட்டும் நீயும் வான்னு பேசன” என கவியிடம் செல்லமாகக் கோபம் கொண்ட அபி.. அந்த அறைக்குள்ளே ஒரு அறையினை காட்டி, “அங்கிருக்கும் ட்ரெஸ் போட்டு வா” எனக் கூறினான்.
அபியின் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு அந்த அறைக்குள் சென்றவன்.. வேகமாக வெளியே வந்து அங்கு இன்னும் சில பேர் இருப்பதை மறந்தவனாக, “அபி என்னால் இந்த ட்ரெஸ் எல்லாம் போட முடியாது” என்று சிணுங்கினான்.
அவனது சிணுங்களில் அபி கீழே குனிந்து அவனுக்கு தெரியாமல் நமட்டு சிரிப்பு சிரிக்க.. நிவாஸ் மற்றும் அங்கிருந்த அனைவருக்கும் கவி எதற்கு இதற்கு போய் அலருகிறான் என எண்ணினர்.
நிவாஸ் ஒருபடி மேலே சென்று ஒருவேளை ஹீரோயின் ட்ரெஸ் எதாவது மாற்றி வைத்துவிட்டனரா என உள்ளே சென்று செக் செய்தான். அதில் அபியின் சிரிப்பு இன்னும் அதிகமானது.
அறையிலிருந்து வெளியே வந்த நிவாஸ்.. “கவி சார் டி சர்ட், லுங்கி தானே இருக்கு. இதை போடுவதற்கு என்ன?” எனக் கேட்டுக்கொண்டே கையோடு அந்த உடையினை எடுத்து வந்திருந்தான்.
லுங்கியை பார்த்ததும் கவியின் முகம் பேயறைந்ததை போலிருக்க. அபிக்கு சிரிப்பு எல்லையைக் கடந்தது. அங்கிருந்த அனைவரும் அபிக்கு இந்தளவிற்கு சிரிக்கத் தெரியுமாவென்று ஆச்சரியமாக பார்க்க… அபி சிரித்துக்கொண்டே நிவாஸிடம், “அவனுக்கு லுங்கி கட்டத் தெரியாது.. சார் இதுவரை லுங்கி கட்டினதும் கிடையாது அப்படியே கட்டினாலும் அவனுக்கு எங்கே அது அவிழ்ந்துடுமோ பயம். அதுதான் இந்த லுக்கு விட்டுட்டு நிக்கிறான்” என்று பழைய சசியாக ஜாலியாக பதிலளிக்க,
அங்கிருந்தோர் அனைவருக்கும் அபி ஒரு நொடியில் இவ்வளவு பேசுவானா என்றிருந்தது.
அனைவரும் தன்னை ஆச்சரியமாக பார்ப்பதை உணர்ந்த அபி தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்.
ஒரு நொடி பழைய சசியாக மாறிய அபியை பார்த்து கவிக்கு கண்ணுக்குள் நீர் கசிந்தது. அதை யாருக்கும் தெரியாமல் மறைத்துக்கொண்டான்.
அபி நிவாஸிடம் கண் காட்ட… கவியிடம், “இதுவும் வேஷ்டி மாதிரி தான் கவி சார் கட்டிக்கோங்க” என்றான் நிவாஸ்.
அதற்கும் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்ட அபி… “அவனுக்கு லுங்கி கட்டவே பயம் இதுல வேஷ்டி வேறவா” என்று நிவாஸிடம் கூறிக்கொண்டே அவன் கையிலிருந்த உடைகளை பெற்று கவியையும் கூட்டிக்கொண்டு மேக்கப் அறைக்குள் நுழைந்தான்.
இருபது நிமிடங்களில் கவியை தானே தயார் செய்த அபி போட்டோ ஷூட்டிற்கு தயாராகினான்.
லுங்கியை ஒரு கையினால் பிடித்துக்கொண்டே கவி நிற்க, “நான் கட்டி விட்டிருக்கேண்டா. அதுல இருந்த கை எடுடா” என்க கவி சிறு பிள்ளை போல் தயங்கியவாறே சரியென்றான்.
அதற்கடுத்து, போட்டோ ஷூட் தொடங்கியது.
அபி சொல்லிய போஸ் கேட்டு கவி திகைத்து நின்றான். அபி அவனது முழி கண்டு சிரிக்க அப்போது தான் கவிக்கு புரிந்தது பயபுள்ள நம்மள வச்சு செய்யுதுன்னு.. இனி அவன் என்ன சொன்னாலும் ஜர்க் ஆக கூடாதென்று நினைத்த கவி அபி சொல்லியவாறு டி சர்ட் அணிந்து லுங்கியை இரண்டு கால்களுக்கும் நடுவில் நீண்டு தொங்கியவாறு கட்டிக்கொண்டு கையில் பிளாஸ்டிக் குடத்துடன் முகத்தில் கோபப் பார்வையுடன் போஸ் கொடுத்தான்.
அதனை அபியின் கையிலிருந்த காமரா அழகாக தன்னுள் சேமித்துக் கொண்டது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் போஸ்டரை கிராபிக்ஸ் உதவியுடன் வடிவமைத்த அபி கவிக்கு காட்ட… உண்மையில் அந்த போஸ்டர் சொல்லாமல் சொல்லிய கருத்தில் மற்றும் படத்தின் தலைப்பில் கவி அசந்து தான் போனான்.
“நல்லாயிருக்குடா மச்சான்” என்ற கவியின் வார்த்தையில் அபி உண்மையில் மகிழ்ந்து தான் போனான். ஒரு வாரத்திற்கு பின்பு கவியின் வாயிலிருந்து இந்த மச்சான் என்றழைப்பு வந்திருக்கிறதல்லவா..!!
சர்மாவிற்கு படத்தின் போஸ்டரை மெயில் செய்தவன் கவியைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்குச் சென்றான்.
தனக்கு காத்திருக்கும் அதிர்வு தெரியாமல்.
அபிக்கு வீட்டில் அதிர்வு காத்திருக்கிறதென்றால், கவிக்கு போன் மூலம் வந்தது.