சருகு 🍂 21 :
அபி மற்றும் கவி தங்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல் இருவரும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
வீட்டை அடைந்ததும் இருவரும் காரிலிருந்து இறங்கி உள்ளே நுழையும் வேளையில் கவியின் கைப்பேசி ஒலி எழுப்பியது. வீட்டு எண்ணாக இருக்கவும் ஆன் செய்து காதில் வைத்தவன் உள்ளே செல்லாமல் தோட்டத்திற்கு சென்றான்.
உள்ளே நுழைந்த அபி அங்கு ஹாலில் அமர்ந்து டிவி பார்க்கும் தன் மனைவியை கொஞ்சமும் கண்டு கொள்ளாது படிகளை இரண்டிரண்டாக தாவி மேலேறி தனது அறைக்குள் நுழைந்தவன் “பேபி” என்று வீடே அதிரும்படி சத்தமிட்டான்.
ஹாலில் அமர்ந்திருந்த வரு “இந்த அத்தானுக்கு எப்போ பாரு கத்தறதே வேலையாப்போச்சு” எனக் கூறிக்கொண்டவள் ஒன்றை மட்டும் கவனிக்கத் தவறினாள்… அவன் கோபத்திலும் தன்னை பேபி என்றே அழைத்ததை… ஆனால், அதனை அபி உணர்ந்தான். எவ்வளவு தான் முயன்றாலும் அவனால் தன் பேபியை எப்போதும் வெறுக்க முடியாது என அப்போது நன்கு உணர்ந்து கொண்டான்.
அபியின் கோபமான அழைப்பில் மெல்ல மாடியேறி வந்தவள் “என்ன அத்தான்” எனக் கேட்க… அவனோ, சுவற்றில் புதிதாக மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி “என்னதிது?” என்று வினவினான்.
“கவி அண்ணா மாட்ட சொன்னதா காலையிலே ஒருத்தர் வந்து மாட்டிட்டுப் போனாங்க அத்தான். உங்களுக்கு பிடிக்கலன்னா கழட்டிடுறேன்” எனக் கூறியபடி கழட்டப் போனவளைத் தடுத்தவன், “பரவாயில்லை இருந்துட்டு போகட்டும்” என்றான்.
அதில் வருவின் முகம் மகிழ… ‘தான் என்ன மனநிலையில் இருக்கட்டும் சொன்னேன்’ எனப் புரியாமல்… “கவிக்காக… இப்போ இதை கழட்டினா அவன் என்னை ஒருவழி செய்துடுவான்” என்றான். அதில் வருவின் முகம் மகிழ்வினை தொலைத்தது.
எதுவும் பேசாமல் வெளியேறிய வருவின் சோக முகம் அபிக்கு கவலை அளித்தது. ஆனால், அதை புறம் தள்ளியவன் தான் இப்படி அவளிடம் நடந்துகொள்வது தான் நல்லது என நினைத்தவன் பார்வை அந்த புகைப்படத்திலிருந்து விலகவில்லை.
அபி வருவின் கழுத்தில் தாலி கட்டும் போது எடுத்த புகைப்படம். வரு அபியின் முகத்தை காதலாகப் பார்க்க… அபியோ கடமையென முகம் வைத்திருந்தான்.
போட்டோவில் வருவின் காதல் வழியும் முகத்தை பார்த்தவனது காதில்… “மனசு முழுக்க உங்க மேல காதலை சுமந்துகிட்டு தான் உங்க கையால தாலி வாங்கிக்கிட்டேன்.” அன்று வரு சொன்னது எதிரொலித்தது. அவளது காதல் வழியும் முகம் அவனுக்கு அதிர்வைத்தான் கொடுத்தது.
அதில் வருத்தம் மேலோங்க, “என் மேல உனக்கு எப்படி பேபி காதல் வந்தது” என தன் முன் இல்லாதவளிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.
‘காதல் யார் மீது எப்போ எப்படி வருங்கிற கேள்விக்கு காதலித்துக்கொண்டிருக்கும் உனக்கு பதில் தெரியாதா அபி’ என்று தன் மனசாட்சி கேள்விகேட்க தனது சிந்தனைக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்தான்.
மொபைலினை காதில் வைத்து ஹலோ என்ற கவி எதிர் முனையில் பேசாமல் இருக்கவும் துண்டித்து விட்டான். மீண்டும் அழைக்க ஆன் செய்து ஹலோ என்றவன் வீட்டு எண்ணாக இருக்கவே பொறுமையாக மீண்டும் ஹலோ என்க “மாமா” என்ற குரல் அவன் காதில் விழுந்தது. ஒரு நொடி காதலோடு ஒலித்த அந்த குரலில் மயங்கியவன் “ப்ரூட்டி” என்று அழைத்து அந்த நாளின் தாக்கத்தில் வருவிக்கப்பட்ட கோபத்துடன் யாரெனக் கேட்டிருந்தான்.
கவியின் அழைப்பிலே அவனது காதல் மனதை கண்டுகொண்ட கவி.. யாரென அவன் கேட்டதில் ஆத்திரமடைந்தாள்.
‘உன்னை இப்படியே விடக்கூடாது மாமா’ என நினைத்தவள் தன் விளையாட்டை ஆரம்பித்தாள்.
“என்னையா யாருன்னு கேட்டீங்க.. உண்மையா நான் யாருன்னு தெரியலயா மாமா?”
‘கொலைகாரி… வேணுன்னே மாமான்னு கூப்பிட்டு வேறுப்பேத்றா.’
வெளியில் கோபமாக, “ஆமா” என்றான்.
“நான் யாருன்னு தெரியாது அப்படித்தானே!” என மீண்டும் கனி கேட்க இவனும் ஆமாமென்றே மீண்டும் பதிலளித்தான்.
“சரி… அங்க என் வீட்டுக்காரரு இருப்பாரு.. பேரு கவி.. அவுக கிட்ட கொஞ்சம் போன் தரீங்களா?” என்றாள்.
அவளது குரலில் நக்கல் கலந்திருக்கிறதோ என யோசித்த கவி… “என்னடி திமிரா?” என்க,
“ஆமா… என் மாமனுக்கு இருக்க திமிருல கொஞ்சமாவது இருக்க வேண்டாமா!” என்று பதிலுக்கு கேட்டிருந்தாள்.
‘ஏதோ முடிவு பண்ணிட்டா…’ உள்ளுக்குள் நினைத்தவன்.. வெளியே, “இப்போ எதுக்கு போன் பண்ண சொல்லு” என்றான்.
“என் வூட்டுக்காரவுகிட்ட போன் குடுங்க நான் சொல்லிக்கிறேன்.”
“என்னது வீட்டுக்காரனா.. யாருக்கு யாருடி..?” கோபமாகக் கேட்டிருந்தாலும் அவளது வார்த்தைகள் அவனுக்கு இன்பமான அதிர்வை கொடுத்தன.
“நான் உனக்கு பொண்டாட்டின்னா நீ எனக்கு வீட்டுக்காரன், புருஷன் எல்லாமே தானே மாமா.” அவளது குரல் வெட்கத்தில் ஒலித்தது.
அதை ஆழ்ந்து ரசித்தான். இப்போது என்னுடைய விலகல் இவளை இப்படி பேச வைக்கின்றது. இந்த மாற்றம் எத்தனை நாளென்று தெரியவில்லை அவள் முழுதாக அவளுடைய காதலை வெளிப்படுத்தட்டும் என்று அதுவரை தள்ளியிருக்கவே முடிவு செய்தான்.
“அப்படியெல்லாம் இங்க யாருமில்லை” என பதிலளித்தவன் உடனடியாக இணைப்பத் துண்டித்தான். மேலும் அவள் பேசி தன்னை மடக்கிவிடுவாளோ என்ற பயம் தான். ஆனால் அவளது இந்தப் பேச்சும் கவிக்கு பிடித்து தான் இருந்தது.
போன் கட் ஆனதும்.. “இன்னைக்கு இது போதும்.. உன்னையெல்லாம் விட்டு தான் மாமா பிடிக்கணும்” என நினைத்தவள் உறங்கச் சென்றாள்.
தோட்டத்திலிருந்து உள்ளே நுழைந்த கவி ஞாபகம் வந்தவனாக விரைந்து மாடியேறினான். போட்டோவினைப் பார்த்து அபி எங்கு தங்கையை கடிந்திருப்பானோ என்ற பயம் உள்ளுக்குள் உதறலை ஏற்படுத்தியது. அதனை வெளிக்காட்டாது அபியின் அறைக்குள் நுழைந்தவன் புகைப்படம் தான் சொல்லிய இடத்தில் மாட்டப்பட்டிருக்கவும் ஆழ்ந்து சுவாசித்தான்.
நிச்சயம் அபி பார்த்திருக்க வேண்டும்.. ஆனால், அமைதியாக இருந்திருக்க மாட்டானே என்று கவி யோசித்துக் கொண்டிருக்க… அபி குளியலறையிலிருந்து வெளி வந்தான்.
வந்தவன் போட்டோவினையும் கவியையும் ஒருமுறை அழுத்தமாக பார்க்க.. கவி பெட்டின் மீதேறி அப்புகைப்படத்திற்கு பின் வேறு ஏதேனும் புகைப்படம் இருக்கிறதாவென ஆராய்வு செய்தான். அப்படி எதுவும் இல்லையென்றதும் அபியை முறைத்துக்கொண்டே தன் அறைக்கு சென்றுவிட்டான்.
கவியின் அச்செயல் அபிக்கு சிரிப்பை வரவழைத்தாலும் எல்லாம் வருவின் மீதும் தன் வாழ்வின் மீதும் கொண்ட அக்கறையென நன்கு புரிந்தது.
நள்ளிரவில், தன் அறையில் படுத்திருந்த கவிக்கு திடீரென உடல் கணப்பதைப்போல் தோன்றவும் எழ முயன்றவனால் முடியவில்லை. என்னவென்று தன் கண்களை நன்றாக கசக்கி திறந்து பார்த்தவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
அபி கவியின் மீது கையினைப் போட்டு நெருங்கி படுத்திருந்தான்.
கவிக்கு எங்காவது முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.
தனது காலினால் அபியை உதைத்து எழுப்ப… அவன் எழுந்து அமர்ந்தான்.
“எதுக்குடா… எழுப்பி விட்ட…” அபியின் முகத்தில் உறக்கத்தை கலைத்த எரிச்சல் அப்பட்டமாகத் தெரிந்தது.
“நீ எப்போட என்னோட வந்து படுத்த…” கவியும் எரிச்சலுடனே கேட்டான்.
“இது என்னடா புதுசா கேட்குற… எப்பவும் உன்னோடதானே தூங்குவேன். அதுவுமில்லாம பேபியோட நான் எப்படிடா ஒரே அறையில்…” எதுவும் தெரியாததை போன்று பேசினான் அபி.
“பேபி… பேபின்னு நல்லா கொஞ்சு… ஆனால் அவளை உன் மனைவியா மட்டும் ஏத்துக்காத? உனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு அபி.” கவி சிடுசிடுத்தான்.
“உனக்கு எல்லாம் தெரிந்தும் நீ இப்படி பேசுறது எனக்கு ஆச்சரியமா இருக்கு கவி. என்னால எப்படி வருவை என் மனைவியா ஏற்க முடியும்?”
“ஏன் முடியாது?” கவியின் குரல் அதிவேகமாக வெளிவந்தது.
“என் மனசில்…”
“உன் மனசுல வேறொருத்தி இருந்திருக்கலாம் ஆனால், இனி வரு மட்டும் தான் இருக்கணும்.
அபிக்கு ஆற்றாமையாக இருந்தது.
அபிக்கு வருவை ரொம்பவே அதிகமாக பிடிக்கும்… மனைவியாக ஏற்க மட்டுமே அவனது மனம் இடமளிக்கவில்லை.
அவனும் திருமணத்திற்கு பிறகு அவளை ரசித்து பார்த்திருக்கிறான். அதெல்லாம் தன் மனைவியென்ற உரிமையில் தான் என்பதை அவனாக தான் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏற்கனவே காதலித்த மனதால் இன்னொரு முறை காதல் வயப்பட முடியாதென்பது அபியின் வாதம்.
“இதோ பார் அபி… உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை, உனக்கு விருப்பமில்லைன்னா யார் வற்புறுத்தி இருந்தாலும் நீ வரு கழுத்தில் தாலி கட்டியிருக்கமாட்ட. நீ குடும்பத்திற்காகன்னு நினைத்தால் அது உனக்கு நீயே கூறிக்கொள்ளும் சப்பைக்கட்டு.
உன் வாழ்க்கையில் விஷாலி வராமலிருந்திருந்தா… நீ இப்போ வருவை, உன் பேபியை எந்தளவிற்கு நெஞ்சில் சுமந்திருப்ப எனக்குத் தெரியும். உன்னை விட்டுச்சென்ற விஷாலி உனக்களித்த வலியை.. அந்த நேரம் யாரும் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைத்து நீ தாலிக்கட்டினியோ அவளுக்கு கொடுத்துடாத.
நீ அனுபவிக்கும் காதல் வலியை நீ அன்பு வைத்திருக்கும் உன் பேபிக்கு நீயே கொடுத்துடாத.
உன்னை விட.. எங்க எல்லாரையும் விட ஆயிரம் மடங்கு அதிகமா வரு உன்னை நேசிக்கிறாள்.
நீ காதலித்த விஷயம் வருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கு. உன் மேல அவள் காதலை உணர்ந்த பிறகு தான் வரு வேலுவை திருமணம் செய்து கொள்ளவே சம்மதிச்சாள்.”
கவியின் இந்த செய்தி அபிக்கு புதிது.
அபி உள்ளுக்குள் ஏன் எனக் கேட்டாலும் வெளியே கேட்கவில்லை.
கவி தொடர்ந்தான்…
“வேலுவோட கல்யாணப்பேச்சு பேசினப்போதான்,உன்னைத் தவிர யாரையும் மனசால் கூட நினைத்துப் பார்க்க முடியாதுன்னு வரு உணர்ந்திருக்கா… உணர்ந்த அடுத்த நொடி உனக்காக உன் காதலுக்காக அவள் தடையாகி விடுவாலோன்னு வேலுவை கல்யாணம் செய்ய ஒத்துகிட்டாள். நான் எவ்வளவு சொல்லியும் அவள் கல்யாணத்தை நிறுத்த மாட்டேன் அபி அத்தான் நல்லாயிருக்கணும் சொல்லிட்டாள். அவள் ஒரு வார்த்தை உன்னை நேசிக்கிறேன்னு தாத்தாகிட்ட சொல்லியிருந்தா குடும்பமே அதை மறுத்திருக்காது.
உனக்காக உன் மீதான காதலையே அவள் தியாகம் செய்ய தயாரா இருந்தான்னா உன்மேல எவ்வளவு நேசம் வைத்திருப்பாள்..
உன்னை விட்டு போனவளை மறக்க முடியாம நீ தவிக்கும் போது… வரு காதலித்த நீ… அவள் கண் முன்னே அவளது கணவனா நடமாடும் போது அவள் எந்தளவிற்கு தவிப்பாள்.
கொஞ்சம் யோசித்து பாருடா மாமா…. விட்டுப்போன நினைவுக்காக உன் வாழ்க்கையோட உன் பேபி வாழ்க்கையையும் சேர்த்து அழிச்சிடாதே. முதல் காதல் நிறைவேறாத யாரும் அடுத்த லைஃப் ஏத்துக்கிறதே இல்லையே என்ன?”
கவி கூறிய அனைத்தையும் கேட்ட அபி சிலையென அமர்ந்திருக்க… இதற்குமேல் தான் கூற எதுவுமில்லையென்று கவி உறக்கத்தை தொடர்ந்தான்.
‘என் பேபி எனக்காக அவள் வாழ்க்கையை பணயம் வைத்தாளா? (உனக்காக தானே வேலுவை பற்றி நன்கு தெரிந்தும் மணக்க ஒப்புக்கொண்டாள்).’ யோசித்தவனின் மனதை வரு மெல்ல மெல்ல முழுவதுமாய் ஆக்கிரமித்தாள்.
ஏற்கனவே அபிக்கு வருவின் மீது அளவு கடந்த அன்பு.. அந்த அன்பு காதலாக மாற அதிக நாட்கள் தேவையில்லை. ஆனால், அபிக்குத் தான் அதனை உணர முடியவில்லை.
முடிந்த காதலுக்கும் தொடங்கிய காதலுக்கும் இடையில் சிக்கித் தவித்தான்.
கவி இவ்வளவு கூறிய பிறகும் நாம் இங்கே படுத்தால் அடித்தாலும் அடித்து விடுவானென எண்ணிய அபி பல யோசனைகளுடன் தனது அறைக்குச் சென்றான்.
மெத்தையில் மலர் கொடியென சுருண்டு படுத்திருந்த வருவை ஆழ்ந்து நோக்கியவன் மனதில் குழப்பங்கள் நீங்கி ஒருவித இதம் பரவுவதை உணர்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாக விஷாலியின் நினைவுகள் இதயத்தின் அடி மூலைக்குள் செல்வதை அறிந்தான்.
அதில் திடுக்கிட்டு சோபாவில் அமர்ந்தவன்… ‘எப்படி… அப்போ விஷாலியை சந்திக்காம இருந்திருந்தால் ஒருவேளை நானும் என் பேபியையே லவ் செய்திருப்பேனா. நான் வருவை என் மனைவியா ஏற்றுக்கொண்டேனா? விஷாலி மீதான காதலை மறந்துட்டேனா? அப்போ நான் உயிரா விஷாலியை நேசித்தது.. அவள் இல்லையென்பதையும்.. என்னைத் தவிக்க விட்டு முழுவதுமா சென்றுவிட்டாள் என்பதையும் என் மனம் ஏற்க தொடங்கிவிட்டதா?” தனக்குத் தானே கேட்டுக்கொண்டவனை..
ஏற்றுக்கொள்ளாமல் தான் பதிரிக்கைக்காரர்களிடம் உன் மனைவியென்று தெரியப்படுத்தினாயா.. அதற்கு நீ வேறொரு காரணம் கூறினாலும் அவள் உன் மனைவி என நீ ஏற்று அவளை நேசிக்கத் தொடங்கிவிட்டாய் என்பதே உண்மையென அபியின் மனசாட்சி அவனைக் கொட்டியது.
தன் பேபி மனைவியாக தன்னை முழுவதும் ஆக்கிரமித்து விட்டாள் என்று அவன் உணர்ந்த அந்த நொடி மிகவும் மகிழ்ந்தான். தன் மனச்சிறகுகள் நீண்டு… நெடிய நாட்களுக்கு பிறகு சந்தோஷ வானில் பறப்பதைப் போன்று உணர்ந்தான்.
இப்போது அபிக்கு தெளிவாகப் புரிந்தது… விஷாலியின் மீது அவன் கொண்ட காதலும் உண்மை.. இப்போது வருவிடத்தில் தோன்றியிருக்கும் காதலும் உண்மை… இரு காதலும் உயிர்க்காதல் தான். முடிந்து போன காதலுக்காக வேண்டுமென்றே நிகழ் காதலை இழக்கக் கூடாது.
‘தனக்காக இல்லையென்றாலும் என் பேபிக்காக அவள் மீதான என் காதலை வளர்த்துக்கொள்ளப் போகிறேன்’ எனத் தெளிவாக முடிவெடுத்தான்.
உதித்திருக்கும் காதலுக்காக மடிந்த காதலை மறக்க வேண்டுமென்றில்லை… அது ஒரு மறக்க முடியாதா பகுதியாக அவன் நெஞ்சத்தில் குடியிருக்கும். முதல் காதல் எப்போதும் சம்திங் ஸ்பெஷல் தானே.
காதலை உணர்ந்ததும் தன் மனைவியின் அருகில் சென்று அமர்ந்தவன் அவள் நெற்றியில் முதல் முறையாக தன் அன்பினை பதிவு செய்தான். தன்னவனின் தீண்டலை பேதையவளும் உணர்ந்தாளோ… உறக்கத்தில் “சசி அத்தான்” என மெல்ல முணுமுணுத்தாள்.
அதில் அவனது மனம் சிலிர்க்க, ‘அத்தான் மேல் அவ்வளவு காதலா பேபி’ எனக் கேட்டவன் அப்போது தான் கவனித்தான் அவள் எதையோ கட்டிப்பிடித்து உறங்குவதை… என்ன என்று பார்த்தவன் இன்பமாக அதிர்ந்தான்.
வரு அபியின் படத்தை கட்டிக்கொண்டு படுத்திருந்தாள். தான் என்ன மாதிரி உணர்கின்றோம் என்று அவனுக்கேத் தெரியவில்லை. காற்றில் மிதப்பதைப் போன்று தோன்றியது. அந்த நொடியே அவளை அள்ளி அணைக்க வேண்டுமென்று எழுந்த ஆவலை கஷ்டப்பட்டு அடக்கியவன்… அவளது வயதினை கருத்தில் கொண்டு, படிப்பினை முடிக்கட்டும் அதன் பிறகு தன்னுடைய காதலை சொல்லிக்கொள்ளலாம்… முதலில் அவளை கல்லூரியில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்தான். முதல் முறையாக… தன்னவளாக… தன் காதலியாக… தன் மனைவியாக… தன் பேபியை ஆசை தீர பார்த்தவன், மனதில் எழும் பேராவலை அடக்கும் வழி தெரியாது தவித்தான். இப்போவே இப்படி இருக்கிறதென்றால்… என் காதலை வெளிப்படுத்திய பிறகு நெருங்கும் அவளை விலக்கி வைக்க முடியாது.. சோ, அவளது படிப்பு முடியும் வரை தன் காதலை வெளிப்படுத்தாது தள்ளியிருக்க வேண்டுமென்று முடிவு செய்தான்.
(இப்போ தான்டா அபி கொஞ்சம் முன்னாடி நல்ல முடிவு எடுத்திருக்கன்னு நினைச்சேன்… திரும்பவும் சொதப்ப ஆரம்பிச்சிட்டியே.. இதுக்கு நீ உன் காதலை உணராமலே இருந்திருக்கலாம். இது என்னோட மைண்ட் வாய்ஸ்😁😁😁)
அபி தான் கொண்ட காதலை வருவிடம் சொல்லியிருந்தால் பின்னால் வரவிருக்கும் பல பிரச்சனைகளை தடுத்திருக்கலாம். விதி யாரை விட்டது. நீயும் கொஞ்ச நாள் என்னிடம் மாட்டி அனுபவி என விதி அபியை பார்த்து சிரித்தது.
மறுநாள் வழக்கத்திற்கு மாறாக உற்சாகமாகவே அபி காணப்பட்டான். அவனது கண்கள் திருட்டுத்தனமாக அவனின் மனைவியை பின்தொடர்ந்தது.
காலை உணவினை முடித்து கை கழுவியவன் வருவின் அருகே வந்து அவளது சேலை தலைப்பில் கையினை துடைத்தான். வருவிற்கு மயக்கம் வரும் போலிருந்தது.
கவி… ‘என்னடா இங்கு நடக்குது’ என்று ஆச்சரியமாக விழிவிரித்தான்.
நேற்று தான் அந்த குதி குதித்தான் இன்று அச்செயலை செய்தால் சின்ன பையன் பாவம் ஷாக் ஆக மாட்டானா! ஆனால், நேற்று தாம் பேசியதற்கு பிறகு இவனுக்கு ஞானோதயம் பிறந்துடுச்சு போலென்று கவி சந்தோஷப்பட்டான்.
கவியின் அதிர்ச்சி பார்வையை கவனித்த அபி அவனை பார்த்து ஒற்றைக் கண்ணடித்தான். அதில் கவி ஆவென பார்க்க அவனருகே வந்த அபி… “பிரசாத் கிட்ட எல்லாம் பேசிட்டேன்.. நீ உன் தங்கச்சியை கூட்டிட்டு போய் காலேஜ் அட்மிஷன் போட்டுவிடு. எப்படியும் நாளையே கிளாஸ் அட்டெண்ட் பண்ற மாதிரி இருக்கும். இன்னைக்கு காலேஜ் போயிட்டு வந்து மதியத்துக்கு மேல பிலிம் சிட்டி வந்தால் போதும்” என்றவன் வெளியேறினான்.
தான் விட்ட… தனக்கு பிடித்த பாடத்தை மீண்டும் படிக்க போகின்றோம் என்பதில் வரு துள்ளி குதித்தாள்.
கவியுடன் உற்சாகமாகவே கிளம்பிச் சென்றாள். கல்லூரியை கண்டதும் அதன் பரந்த தோற்றத்தில் இவ்வளவு பெரிய கேம்ப்பசா என்று வாய்விட்டே கூறினாள்.
“இங்கு, மருத்துவ துறையை தவிர்த்து எல்லா படிப்புக்கான துறையும் இருக்கும். இந்த குழுமத்தின் நிர்வாகி அபியுடைய நண்பன் பிரசாத்தின் அப்பா. அவருக்கு பல தொழில்கள். இப்போ இந்த காலேஜ் பிரசாத் கன்ட்ரோல்.”
கவி சொல்லிக்கொண்டே போக, “எல்லா காலேஜும் இதுக்குள்ளவே இருக்கா” என்று ஆச்சரியப்பட்டாள்.
தங்கையின் முக பாவனையில் மெல்ல இதழ் விரித்தவன் நேராக கல்லூரி முதல்வரின் அறைக்குச் சென்று அட்மிஷன் பார்மாலிட்டிஸ் முடித்து… இன்று வியாழக்கிழமை என்பதால் நாளை ஒருநாள் தான் கல்லூரி அதனால் திங்கட்கிழமையிலிருந்து வருவதாக முடிவெடுத்தனர். பிரசாத்திற்கு நன்றி தெரிவித்துவிட்டு வெளியில் வந்ததும் அபியின் அழைப்பு வந்தது.
நகரத்தின் பிரபலமான நகைக்கடை ஒன்றின் பெயரை சொல்லி இருவரையும் அங்கு வரச்செய்தான்.
“இங்க எதுக்குடா வர சொன்ன” எனக் கேட்ட கவியிடம் இரண்டு தாலி கொடிகளை காண்பித்து, “இதுல ஒன்றை உன் தங்கச்சியை செலக்ட் செய்ய சொல்லு” என்க…
“அவ என்ன லண்டன்லயா இருக்கா!நீயே சொல்றதுக்கென்ன” என்று முணுமுணுத்த கவி வருவிடம் இரண்டு சங்கிலிகளையும் கொடுத்தான்.
வரு விழி விரித்து இரண்டையும் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டிருந்தாள். அது வெறும் சங்கிலி தான் ஆனால், அதன் உள் வேலைப்பாடுகள் சிறு சிறு வைரக் கற்கள் பொறிக்கப்பட்டு கண்ணை கவர்ந்தது.
“வாங்கி கொடுக்கிறத கொஞ்சம் பெருசா தான் வாங்கிக்கொடுத்தா என்னடா? எதுக்கு இவ்வளவு மெலிசா. இதைப்பார்த்தா தாலி கொடி மாதிரியே தெரியல. ஏதோ பேன்சி செயின் போல இருக்கு” என்ற கவியிடம், “அவள் காலேஜ் போகணும்டா. அங்க பசங்க யாரும் கிண்டல் பண்ணக்கூடாது பாரு, இதுன்னா பார்த்தாலும் தாலி மாதிரி தெரியாது” என அபி விளக்கம் கொடுத்தான்.
“அப்போ அவளுக்கு கல்யாணம் ஆனது தெரியக்கூடாது சொல்றீயா…” கவி அதிர்ந்து கேட்டான்.
தெரியக்கூடாது சொல்லல… நாமளா சொல்ல வேண்டாம் சொல்றேன். பசங்களைப்பற்றி உனக்கு நல்லாவே தெரியும், சாதாரணமாவே கேலி பேசுபவாங்க.. திருமணமானது தெரிந்தால்… அவளிடம் பேசினாலே ஆப்டர் மேரேஜ் லைப் பற்றி தான் பேசுவாங்க. அவள் அந்த நினைப்புல மட்டும் தான் இருக்கிற மாதிரி கிண்டல் செய்வாங்க. அதற்கு தான் காலேஜ்ல அவர்களாத் தெரிந்து கொள்ளும் போது தெரியட்டும்” என்று நீண்ட விளக்கம் கொடுத்தான்.
“உனக்கு திருமணம் ஆனது போட்டோவோடு பத்திரிக்கையில் வந்தது யாராவது ஒருவருக்கு கூடவா கல்லூரியில் தெரிந்திருக்காது.”
கவியின் கேள்விக்கு சிறு புன்னகை சிந்திய அபி.. “அதனாலதான் தாலி கட்டும் புகைப்படத்தைக் கொடுத்தேன். அதுல என் கை வரு முகத்தை பாதிக்குமேல் மறைந்திருக்கும்” என்க,
“எல்லாமே பிளான் பண்ணி தான் பண்ற.. பண்ணு… பண்ணு” என்றதோடு கவி அமைதியாகிவிட்டான்.
அதன் பிறகு வீட்டிற்கு வந்ததும் தனது அன்னைக்கு அழைத்தவன் வருவின் தாலியை மாற்ற வேண்டும் அதற்கான வழிமுறை என்ன எனக் கேட்க அந்த தாயுள்ளம் தன்னுடைய மகனது திருமண வாழ்க்கை சிறக்கும் என நம்பிக்கைகொண்டார்.
“நாளைக்கு வெள்ளிக்கிழமை தான் சசி… சூரிய உதயத்துக்கு முன்னாடி குளிச்சிட்டு சாமி படத்துக்கு முன்னாடி மாத்திக்க சொல்லுப்பா. காலையில சொல்லியிருந்தா கூட இந்நேரம் நானாவது கிளம்பி வந்திருப்பேன்.. இப்போ அவசரமா ஏன்ப்பா மாத்தணும்?”
அபி கேட்டதற்கு விளக்கமாக செய்ய வேண்டியவைகளைக் கூறினாலும் பெரியவர்கள் யாருமில்லாமல்லாமல் எதற்கென்று சங்கடமாக வினவினார்.
அன்னையின் வருத்தத்தை கண்டுகொண்ட அபி… “வரு காலேஜ் போகணும்மா” என்ற காரணத்தைக் கூறவும் சரியென ஒப்புக்கொண்டார்.
விடியற்காலை கலா சொல்லியதை போன்று தாலியை செயினில் கோற்றவன்.. தன் கரங்களினாலே தன்னவளின் கழுத்தில் அணுவித்தான்.
முதல் முறை போன்று அல்லாது இம்முறை தன்னவளின் மீதான காதலோடு தாலியை அவளது சங்கு கழுத்தில் இட்டான்.
கவிக்கு இக்காட்சி எதையோ வென்றுவிட்டதைப் போன்று இருந்தது.
வருவிற்கு நடப்பது நிஜம் தானா… இக்கனவு கலைந்து போகக் கூடாது என இறைவனிடம் வேண்டிக்கொண்டாள்.
அபியின் பார்வை எதையோ உணர்த்தினாலும் அவன் நேரடியாக வருவிடம் பேசுவதை தவிர்த்துக் கொண்டிருந்ததால் அவன் மனம் மாறியிருப்பான் என்று அவளால் உறுதியாக நம்ப இயலவில்லை.
இதையெல்லாம் அவர் அன்பு வைத்திருக்கும் பேபிக்காக மட்டும் செய்வதாக எண்ணிக்கொண்டாள்.
முதல் நாள் கல்லூரி… தனது வகுப்பிற்குள் அமர்ந்திருந்தவளை பேராசிரியர் அறிமுகம் செய்து கொள்ள கூறினார். தன்னை அறிமுகம் செய்து கொண்டவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
தனக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண் வகுப்பினைக் கவனிக்காது தன்னையே குறுகுறுவென பார்ப்பதை உணர்ந்து மெல்லிய புன்னகை சிந்தினாள். பதிலுக்கு அப்பெண் நந்தினி எனக் கூறி கரம் பற்றினாள். அங்கு அவர்களுக்கிடையே அழகானதொரு நட்பு உருவாகியது.
நாட்கள் செல்ல, இருவருடைய நட்பும் வலுப்பெற்றது. தன்னுடைய குடும்பம் மற்றும் தன்னைப்பற்றியும் நந்தினி ஒளிவு மறைவின்றி கூறவும்… அவளது நட்பிற்கு தாம் உண்மையாக இல்லையோ என்று வருத்தம் கொண்டு தன்னைப்பற்றி அனைத்தையும் வரு சொல்லிவிட்டாள். திருமணம் உட்பட… அவளது திருமண நிகழ்வுகளைக் கேட்ட நந்தினிக்கு ஏதோ மூவி பார்த்தது போலிருந்தது.
நந்தினியும் அபியைப் போன்றே, “உனக்கு திருமணமானதை வேறு யாரிடமும் சொல்லிடாத… இப்படித்தான் நம் வகுப்பில் திருமணம் ஆன பெண் ஒருத்தியிருந்தாள், அவளை நேரடியாவே கிண்டல் பண்றேன்னு கல்யாணத்துல அடுத்த கட்டத்தை பற்றி பேசியும் கேலி செய்துமே காலேஜ் வர விடாம பண்ணிட்டாங்க” என்றாள்.
அதை கேட்டதும் வருவிற்கு மனதளவில் பயம் ஆரம்பித்தது. “நீ உன் மேரேஜ் விஷயத்தை சொல்லாதவரை பிரோப்ளேம் இல்லை.. சோ கூல்” என்ற நந்துவின் வார்த்தையில் பயம் நீங்கினாள்.
வருவிற்கு கல்லூரியில் அனைத்து விதத்திலும் உதவியாக நந்தினி இருந்தாள்.
வரு கல்லூரி செல்வதற்கென்றே அவளுக்கென்று ஒரு கார் வாங்கி ட்ரைவரையும் வேலைக்கு நியமித்தான் அபி.
கவி தானே தினமும் கூட்டி சென்று அழைத்து வருவதாக சொல்லியதும்… படத்தின் ப்ரோமோ வேலைகள் தொடங்க உள்ளன இந்நிலையில் நீ வெளியில் சுற்றுவது சரியாக இருக்காதென்று மறுத்துவிட்டான்.
கவிக்கு தனது சுதந்திரமே பரிபோய்விட்டதாக எண்ணினான். ஜாக்கிங் செல்ல தயாராகினால் கூட,
“வீட்டைச் சுற்றி தோட்டத்திற்குள்ளே ஓடு” என்றான்.
ஜாலியாக ஒரு ரவுண்ட் பைக்கில் செல்லலாம் என்று கிளம்பினால் “காரில் போ” எனத் தடுத்தான்.
கவி ஒரு நாள் கன்னத்தில் கை வைத்து தங்களது வீட்டிற்கு எதிரே இருக்கும் கடலை வெறித்தவாறு அமர்ந்து விட்டான்.
அபி படம் ரிலீஸ் ஆகும் வரை பிசி என்பதால் அவனிடம் கூட கவியால் சரியாக பேச முடியவில்லை.
‘ஒரு படம் நடிச்சிட்டே நான் இந்த பாடு படறனே… விஜய், அஜித்தெல்லாம் எப்படி, வெளிய ஃபிரீயா காத்து கூட வாங்க முடியாதே! என்ன வாழ்க்கைடா’ என்றிருந்தது அவனுக்கு…
கனி அன்று ஒருநாள் கவிக்கு அழைத்து வம்பு செய்தது தான். அதன் பின்னர் அவளும் பேசவில்லை.. இவனும் பேச முயற்சி செய்யவில்லை. தினமும் இரவில் அவள் நினைவாக தவிப்பவன் பகலில் உணர்வுகளை அடக்க பழகிவிட்டான்.
இப்போதும் அவளைத்தான் நினைத்துக்கொண்டிருகிறான். ஆனால், அவனால் அவளிடம் பேச இயலாது. அன்று அவளது வார்த்தைகளால் காயப்பட்ட இதயம் இன்றும் அவனுக்கு ரணமாய் வலியளித்தது.
கவியைப் போன்றே அங்கு அலுவலகத்தில் வேலைகளை முடித்துவிட்டு சிறிது ஓய்வெடுத்துகொண்டிருந்த அபியும் தன்னவளின் நினைவில் மூழ்கியிருந்தான்.
ஒருநாளாவது தான் இயல்பாக பேச மாட்டோமா என்று தன்னை பின் தொடரும் வருவின் ஏக்கப் பார்வையை அபியால் எளிதில் கடக்க முடியவில்லை. ஆரம்பத்தில் மட்டும் அடவடியாக நடந்துக்கொண்டு பேசினாய் இப்போதும் அதை போலவே பேச வேண்டியது தானே என்று அவளிடம் செல்லமாகக் கோபம் கொண்டான்.
அதிரடியாக நடந்துக்கொண்ட வரு அமைதியாக வலம் வருவதற்கு காரணம் அவளது குற்றவுணர்வு என்று அபிக்கு எப்படித் தெரியும்.
அன்று கவி சுவற்றிலிருந்து கழட்டிய புகைப்படம்… கவியிடமிருந்து பிடுங்கி வார்ட்ரோப் டிராவில் அபி வைத்தது. அன்றே தன் காதலை உணர்ந்துகொண்ட அபி வருவின் நினைவிலே சுழல்வதாலும் படத்தின் வேலை பளுவாலும்.. தனது இதயத்தின் அடி ஆழத்தில் சென்றுவிட்ட விஷாலியை மறந்தும் போனான். தினமும் அவளது புகப்படத்தைப் பார்ப்பதையும் முற்றிலும் மறந்து போனான். அதுவே வருவின் அமைதி நிலைக்கு காரணமாகியது.
துளிர்விடும் 🌱.