சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 2

சருகு 2 🍂

“வேலுண்டு வினையில்லை..
மயிலுண்டு பயமில்லை..
குகணுண்டு குறையில்லை..
மனமே.. கந்தனுண்டு கவலையில்லை மனமே… (வேலுண்டு)..”

பூஜையறையில் கண்களை மூடி முருகனின் துதியை முணுமுணுத்துக் கொண்டிருந்த வருணா மனதின் சஞ்சலம் நீங்கியவளாய் மெல்ல விழித் திறந்தாள்.

தன்னெதிரே உறங்கிய நிலையில் அமர்ந்திருந்த கனியை பார்த்து சிரித்தவளாய், “அடியேய்.. சாமி முன்னாடி என்னடி சாமி ஆடிட்டு இருக்க, வா ரூமுக்கு போய் தூங்கலாம்” என்று மன நிறைவுடன் எழுந்து சென்றாள்.

“கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் சசி அண்ணாவுக்கு ஏதோ ஆகிடச்சுன்னு என அந்த தவி தவிச்ச, இப்போ இப்படி ஒன்னுமே நடக்காத மாதிரி போறாள்” என்ற குழப்பத்தோடு கனியும் அறைக்கு சென்றாள். இருவரையும் அமைதியாக உறக்கம் தழுவிக் கொண்டது.

தனக்கு அருகில் படுத்திருக்கும் கவியின் உறக்கத்தை உறுதி செய்த அபி அவனது உறக்கம் கலையாதவாறு மெதுவாக எழுந்தான். வார்ட்ரோபிற்கு அருகில் சென்று தனது உடைகளுக்கு அடியில் உள்ள சிறு லாக்கரை திறந்து, தான் மறைத்து வைத்துள்ள நாட்காட்டியை வெளியே எடுத்து பிரித்தான். அதன் முதல் பக்கத்தில் ஒட்டியிருந்த ஃபோட்டோவில் வசீகரிக்கும் அழகுடன் காட்சியளித்த தன்னவளை மெல்ல வருடி, அடுத்த பக்கத்தில் எழுதப்பட்டிருந்த “உன் காதலிற்கு என்றும் உரிமை உள்ளவள்” என்ற வாசகத்தினை படித்தவன்.. “என்னை விட்டு போறதுக்குத்தான் இப்படி உருகி உருகி காதலிச்சியா?” என தன் மனதை தவிக்க விட்டு சென்றவளிடம் காற்றோடு கேள்வி கேட்டிருந்தான்.

தன் வாழ்வின் பொக்கிஷமாக பாதுகாக்கும் குறிப்பேட்டின் சில பக்கங்களை புரட்டினான் அபி.

என்றும் போல் இன்றும் தன்னவளின் காதல் அவனை பிரமிக்க வைத்தது.

“இப்படி காதலித்து விட்டு எப்படி டி என்னை தனியாவிட்டு உன்னால் போக முடிந்தது.” ஒரு நாளைக்கு ஆயிரம் முறையாகத் தோன்றும் அதே கேள்வி இப்போதும் அவனுக்குத் தோன்றியது. அதற்கான விடை அவனிடமிருந்தும் அதனை ஏற்க அவன் மனம் ஏனோ மறுத்தது.

நிலா தன்னை மறைத்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தவன் தனது பொக்கிஷத்தை எடுத்த இடத்திலே வைத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

அவன் வெளிவரும் நேரம், பொழுது நன்கு புலர்ந்திருந்தது. உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தவன் பத்து நிமிடங்களில் சாதாரண ஜீன்ஸ் மற்றும் டி-சர்டில் வந்தான்.

படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த கவிக்கு அருகில் சென்று அமர்ந்தான். அப்போது அவனது கைப்பேசி தன் இருப்பைத் தெரிவித்தது. வாழ்த்து கூறுவதற்கு தனது துறையிலிருந்து அழைப்பார்கள் என எண்ணியவன் மொபைலினை திரும்பி கூட பார்க்கவில்லை. அருகில் மேசையின் மீதிருந்த மேகசின் ஒன்றை எடுத்து அதில் மூழ்கிப் போனான்.

சிறிது நேரத்தில் கவிக்கு அருகில் கிடந்த அவனின் மொபைல் சத்தம் எழுப்பியது. நீண்ட சத்தத்திற்கு பிறகு, “ஒருத்தன் நைட் எல்லாம் சோக கீதம் வாசிச்சு தூங்க விடமாட்றான்.. இப்போ காலையிலேயே…” அவன் புலம்பலை முடிப்பதற்குள்,

“டைம் 8.30” என்றான் அபி.

“சரி சரி.. எப்படியும் என்னை தூங்க விட போறதில்லை…” என்று கவி கூற,

அதற்குள் மூன்றாவது முறையாக கவியின் மொபைல் அலற ஆரம்பித்தது, சலிப்புடன் அதை செவிமடுத்தவனின் காதுகளில் இனிமையாய் ஒலித்தது அவனவளின் குரல்.

“எவ்வளவு நேரம் ஃபோன் அடிக்கிறது… ஒரு முறை ரிங் வந்தா ஆன் செய்ய தெரியாதா?, அண்ணா ஃபோன் என்ன ஆச்சு, ரிங் போகுது அவங்களும் எடுக்கலை…” அவள் படபடவென்று பேசிக் கொண்டே போக, இந்தப் பக்கம் கவியோ… “ஈஈஈஈஈஈ…” என பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான்.

ஃபோனை அட்டென்ட் செய்தவன் பேசாமல் சிரித்துக் கொண்டிருக்கவும், கவியை விநோதமாக பார்த்திருந்தான் அபி.

அபியின் பார்வை மற்றும் அந்தப் பக்கம் பெண்ணின் நீண்ட பேச்சை உணர்ந்தவன்.. “ஏய்… ஏய்… நிறுத்திடி!, ஏன் டி?, காலையிலே பட்டாசு மாதிரி வெடிக்கிற” எனக் கேட்டான் கவி.

கவியின் “டி”யில் பேச்சை நிறுத்தியவள், “இந்த டி போட்டு பேசுற வேலையெல்லம் என் கிட்ட வேண்டாம், உன் கிட்ட ஆசையா பேச ஒண்ணும் ஃபோன் செய்யலை வீட்டுல எல்லாரும் அண்ணா கிட்ட பேசணும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, நீ ஃபோனை அண்ணா கிட்ட குடு” என்று சிடுசிடுத்தாள் அவள்.

அவளது எரிச்சலான பேச்சினை கருத்தில் கொள்ளாதவன்… “நீ சொல்லி கேட்காம இருப்பேனா மை ஃப்ரூட்டி” என்ற கவி மொபைலினை அபியிடம் நீட்டினான்.

“யாராவது சினிமா துறை ஆட்களா இருந்தா நீயே பேசி வைத்துடுடா” என்ற அபியிடம், “வீட்டிலிருந்து” என்க… முயன்று வரவழைத்த உற்சாகத்துடன் கவியிடமிருந்த ஃபோனை வாங்கி தனது காதில் வைத்தான்.

அப்பா, அம்மா, மாமா, அத்தை, தங்கை என வீட்டிலுள்ள அனைவரும் வாழ்த்து தெரிவிக்க அதனை சிறு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான்.

இறுதியில் குடும்பத்தின் மூத்த உறுப்பினரான ராஜகோபாலன் தனது செல்ல பேரனுக்கு மனம் நிறைந்த வாழ்த்தினைத் தெரிவித்தார்.. இவர் அபி மற்றும் கவியின் தாத்தா, இவருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள். மூத்தமகன் வெங்கடாசலம் மருமகள் கலாவதி. இவர்களது தவப்புதல்வன் தான் அபினவ், இவனுக்கு ஒரு தங்கை கனிமொழி.

ராஜகோபாலின் அடுத்த இரு வாரிசுகள் மகள்கள். மூத்தமகள் ராதிகா, அவருடைய கணவர் ரங்கநாதன்.. இவர்களுக்கு ஒரே மகன். அவன் தான் நம் கதையின் மற்றொரு கதாநாயகன் கவியரசன்.

இரண்டாவது மகள் லலிதா, அவருடைய கணவர் சீனுவாசன். இவர்களுக்கு ஒரு பெண் வருணாளினி, ஒரு மகன் விஷ்ணு.

இவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக ஒரே வீட்டில் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். ஒருவருக்கு ஒன்றென்றால் மற்ற அனைவரும் துடித்துவிடுவர். இவர்களது ஒற்றுமையின் ஆணி வேர் ராஜகோபாலன். தன்னுடைய மகள்களை பிரிந்து இருக்க முடியாது என்ற காரணத்தால் வீட்டோடு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்து வைத்தார். அவர்கள் பெயரளவில் மட்டுமே மருமகன்கள். இன்று வரை தனது மகனுக்கு இணையாக அவர்களை நடத்தி வருகின்றார்.

இரண்டாவது மருமகன் சீனுவாசன் ராஜகோபாலின் தங்கை மகன். சிறுவயதிலே அவரது தாய், தந்தை இறந்துவிட, அவரது முழு பொறுப்பும் தானே ஏற்றுக் கொண்டார். தனது மகனுக்கு நிகராக வளர்த்து தன்னுடைய மகள்களில் ஒருவருக்கு மணம் முடித்து தன்னுடனே வைத்துக் கொண்டார்.

சீனுக்கு ஒரு தங்கை அவரையும் எந்தவொரு குறையுமின்றி வளர்த்து பெரிய இடத்தில் மணம் முடித்து வைத்தார். வீட்டின் காரண காரியங்கள் அனைத்திலும் அனைவரது சம்மதமும் முக்கியத்துவம் வாய்ந்தது.
(கொஞ்சம் இல்லை ரொம்பவே பெரிஈஈஈஈஈ……..ய குடும்பம் தான். எனக்கே மூச்சு முட்டுது… அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ…)

இவர்கள் அனைவருக்கும் செல்ல வாரிசு சசி அபினவ். அவனது விருப்பமின்றி இங்கு ஒன்றும் நடைபெறாது. ஆனால் தன் மீது உயிரே வைத்துள்ள தனது குடும்பத்தினரை இரண்டு வருடங்களாக அவன் பிரிந்திருப்பதற்கு காரணம் அவர்கள் மீது அபி கொண்ட நேசமே.

தன்னுடைய வருத்தம் அவர்களுக்கு வேதனையை அளிக்கும் என்பதே அதற்கு காரணம்.

அனைவரிடமும் பேசிய பின்னர் இன்றைய நாளின் ரணம் கொஞ்சம் விலகியதை போல் உணர்ந்தான் அபி.

இப்போது அவன் இயக்கிக் கொண்டிருக்கும் புதிய படத்தின் தயாரிப்பாளர் வந்திருப்பதாக ராமு வந்து கூறியதும் அபி கீழிறங்கி சென்றான்.

கவி தனது தூக்கத்தை தொடர ஆயத்தமாகையில், “கவி தம்பி.. உங்களை சீக்கிரம் கிளம்பி அபி தம்பி வர சொன்னாங்க” என்ற ராமுவின் குரலில் குளியலறைக்குள் வேகமாக சென்றான்.

அபியை கண்டதும் சிநேகமாக புன்னகைத்தார் தயாரிப்பாளர் ஷர்மா. பதிலுக்கு நகை சிந்திய அபி அடுத்து அவர் தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்தினையும் அமைதியாக ஏற்றுக்கொண்டான்.

சில நிமிட இடைவேளைக்கு பிறகு சர்மா தனது பேச்சினைத் தொடங்கினார்.

“மூன்று வெற்றி படங்களை அளித்த பின்பும் உங்களிடம் இருக்கும் இந்த அமைதி எனக்கு ஆச்சரியமா இருக்கு.”

சர்மாவின் கூற்றை சிறு புன்னகையுடன் ஏற்றவன் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க, அப்போது தான் தயாராகி கீழிறங்கி வந்த கவி அதற்கு பதிலளித்தான்.

“இந்த அமைதி தான் அவனுடைய வெற்றிக்கு வழி சர்மா ஜி”, என்று வெளியில் தெரிவித்தாலும் ‘அவனது சேட்டைகள் எல்லாம் என்னிடம் மட்டும் தான்’ என்று மனதோடு புலம்பினான்.

”அதுவும் உண்மை தான் மிஸ்டர். கவி” என ஆமோதித்த சர்மா.. “நான் கிளம்புகறேன் அபி” என்றார்.

திரும்பி இரண்டு அடிகள் எடுத்து வைத்தவர் மீண்டும் அபியின் புறம் வந்து, “ஷூட்டிங்” என மெதுவாக இழுத்தார்.

“இன்று என் பிறந்தநாள் என்பதால் எந்தவொரு ஸ்பெஷலும் இல்லை மிஸ்டர். சர்மா.. சொன்ன பட்ஜெட்டிற்குள் இந்த படத்தினை முடிப்பது என் கடமை.. இன்னும் ஒரு மணி நேரத்தில் பிலிம் சிட்டியில் நான் இருப்பேன்” என அழுத்தமாகத் தெரிவித்தான்.

அவனது பதிலில் நிம்மதியடைந்தவர் “உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா அபி” என வழிந்தார். அவரது கஷ்டம் அவருக்கு, ஒரு நாள் ஷூட்டிங் நடைபெறாவிட்டாலும் அவருக்கு ஏற்படும் நஷ்டங்கள் பல லட்சங்களை அல்லவா விழுங்கும்.

சர்மா விடைபெற்று சென்றதும் சோபாவில் அமர்ந்தவன் தன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டான்.

கவியின் தொடுதலை உணர்ந்த அபி மெல்ல இமை திறந்தான். அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தவன் ,”எல்லா நாளை போல் தான் இந்த நாளுமா டா” எனக் கேட்டான், கவியின் வயிற்றை பிடித்துக் கொண்டு தான் ஒரு ஆண் மகன் என்பதையும் மறந்து கதறியழுதான்.

நிச்சயம் அபியின் அழுகைக்கு எவராலும் ஆறுதல் அளிக்க முடியாது. அதை நன்கு உணர்ந்திருந்த கவி அவனது கதறலை வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தான். தனது கையாலாகாத நிலையை அறவே வெறுத்தான்.

சில நிமிடங்களில் தன் வேதனையிலிருந்து வெளியில் வந்த அபி கம்பீரமாக எழுந்து நின்றான். கவியிடம் எதுவும் கூறாமல் வீட்டை விட்டு வெளியேறி ஷூட்டிங் நடக்கவிருக்கும் இடத்தினை நோக்கி தனது காரில் சீறிப் பாய்ந்தான்.

அபியின் இந்த செயலில் கவிக்கு எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை… பழக்கப்பட்ட ஒன்று தான் எனவே அபியை பின் தொடர்ந்து கவியும் சென்றான்.

இரவில் பலமுறை முயன்றும் தனது சசி அத்தானிடம் பேச முடியவில்லையே என கவலையுடன் கல்லூரியின் மரத்தடியில் அமர்ந்திருந்தாள் வருணா என அழைக்கப்படும் வருணாளினி.

தன்னை யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவள் கையில் மலருடன் தன் முன்னே நின்றிருக்கும் கனியை கருவிழி தெறித்து விடும் அளவிற்கு முறைத்தாள்.

அவளின் முறைப்பை புறம் தள்ளிய கனி வருணாவின் அருகில் நெருங்கி அமர்ந்தாள். அவள் முறைப்பதையே தொடர்ந்து கொண்டிருக்க, “என்ன ராணி மங்கம்மா… இன்னைக்கு இவ்வளவு அமைதியா இருக்க.. உண்மையில் இது நீ தானா..? இல்லை நான் வேற யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கிறேனா?” என்றாள்.

கனியின் அனைத்து கேள்விகளையும் ஒதுக்கியவள்..

“எதுக்கு இந்த பூ” என்றாள்.

“வழக்கம் போல என்னோட அழகுல மயங்கி ஒரு பையன் புரொபோஸ் செய்தான்… பையன் கொஞ்சம் மொக்கை தான், பட் அவன் கையில் வைத்திருந்த பூ நல்லா இருந்துச்சு, அதான் இதை மட்டும் வாங்கிட்டு அவனுக்கு நோ சொல்லிட்டேன்.”

அவள் சொல்லிக் கொண்டே போக… அவர்களுக்கு பின்னால் இரும்பல் சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர்.

அங்கு வந்திருந்தது அவர்களது வகுப்பு தோழி வாசுகி, கனியின் முதுகில் ஒரு அடி போட்டு.. “உன் மூஞ்சிய பார்க்க உனக்கு இதுவரை ஒரு கண்ணாடி கூடவா கிடைக்கவில்லை” எனக் கேட்டாள் கேலியாக, அதற்கு கனி முறைத்த முறைப்பில் அவளிடம் வாய் கொடுத்தால் மீள முடியாது என்பதால்… வருணாவிடம் திரும்பியவள் “மேடம் ஏன் ரொம்ப சைலண்டா இருக்கீங்க… உன் அமைதியால் தான் குளிர் நாளிலே இந்த அளவு வெயில் அடிக்குதா” என்று கேலி செய்தாள்.

அதற்கும் வருணா அமைதியாக இருக்க வாசுவின் கேள்விக்கு பதிலளித்தது என்னவோ கனி தான்.

“சசி அண்ணாக்கு பர்த்டே… மேடம் இன்னும் விஷ் செய்யல.. அதான் மூட் ஆஃப் போல..” என்றாள்.

அதற்கு வாசுகி “ஓஓஓ….. லவ் ஃபீலா… லவ்வர் கிட்ட பேசாம இருக்க முடியாதோ” என கிண்டல் செய்ய, வருணா தனது கரம் கொண்டு வாசுகியின் கன்னத்திற்கு பரிசு கொடுத்திருந்தாள்.

“நான் உனக்கு ஆயிரம் முறைக்கு மேல் சொல்லிட்டேன்.. நான் சசி அத்தான் மேல் வைத்திருப்பது பாசம் மட்டும் தான் கவி அண்ணா மேல் வைச்சிருக்க மாதிரி, இனி ஒரு முறை இது லவ், லவ்வர்.. அப்படி ஏதாவது சொன்ன…” வருணா தனது சுட்டு விரலை நீட்டி எச்சரிக்கை செய்து முடிப்பதற்குள் வாசு எழுந்து சென்றிருந்தாள்.

கனி தன் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

கனி, வருணா ஒரே வீட்டு பிள்ளைகள்.. ஆனால் வாசு அவர்களது பண்ணையில் வேலை செய்யும் ஒருவரின் மகள். அந்த வேறுபாடு சிறிதுமின்றி மூவரும் பள்ளி முதல் இப்போது கல்லூரி வரை நெருங்கிய தோழிகள்.

எவ்வளவு நெருக்கமான நட்பு அவர்களிடையே இருப்பினும் வாசு தனது நிலை அறிந்து எல்லைக்குள் நின்றுவிடுவாள். தன்னைப்பற்றி தெரிந்தும் தான் செய்த சிறு கேலிக்கு வருணா அவ்வாறு பேசியது மற்றும் அடித்தது ஒரு வித கோபத்தை ஏற்படுத்த எழுந்து சென்றுவிட்டாள்.

“ஏன் வருணா இப்படி பண்ணிட்ட.. அவளை பத்தி தான் உனக்கு நல்லா தெரியுமே… இனி அவள் நம்மகிட்ட பேசுறதே கஷ்டம் தான்” என்று கனி வருத்தத்துடன் கேட்டாள்.

“அவளை நான் பார்த்துக்கிறேன்… நான் சசி அத்தான் கிட்ட பேசுறதுக்கு ஏதாவது வழி சொல்லு” என வருணா கனியை படுத்தி எடுத்தாள்.

“ஏன் டி???… இப்படி என் உசுர வாங்குற.. உன் அண்ணனுக்கு போன் பண்ணு டி.. அதை விட்டுட்டு என்ன சொன்னாலும் கேட்டாலும் அத்தான் அத்தான்னு பொலம்பிக்கிட்டு.. போடி…” என்றதோடு கனியும் எழுந்து தனது வகுப்பிற்கு சென்றுவிட்டாள்.

மூன்று பேரும் அந்தப் பகுதியில் உள்ள பெரிய கல்லூரியில் இரண்டாம் ஆண்டு விவசாயம் பயிலுகின்றனர். தமிழ்நாட்டின் முக்கிய தொழில் விவசாயமாக இருந்தாலும் இன்னும் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விவாசயப் படிப்பிற்கான கல்லூரிகள் உள்ளன.
இவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள வேளாண்மை மற்றும் தொழிநுட்ப கல்லூரி மூன்று வருடங்களுக்கு முன்பு தான் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் இவர்கள் இரண்டாவது பேட்ச் மாணவர்கள் ஆவர். மூன்று பேரும் ஒரே துறையை தேர்ந்தெடுத்திருந்தனர். அதற்கு காரணம் வருணா. சிறு வயது முதலே தனது தாத்தா, அப்பா, மாமாக்கள் பல்வேறு தொழில்களை செய்து வந்தாலும் விவசாயத்தை விடாது செய்து வருவதும், அவர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள பக்தியையும் பார்த்து வளர்ந்ததாலும்..  விவசாயம் அழிந்து வரும் இன்றைய சூழலில் அறிவியல் மூலமாக பாதுக்காக்க வேண்டுமென நினைத்தே இத்துறையை தான் தேர்ந்தெடுத்ததோடு மட்டுமல்லாமல் தனது தோழிகளையும் தேர்ந்தெடுக்க வைத்தாள்.

கனிக்கு எப்போதும் வருணா உடன் இருக்க வேண்டும் ஆதலால் இது தான் படிக்க வேண்டும் என்று வருணா சொல்லியதும் சரியென்று விட்டாள். அவள் வேளாண்மையை தனது மேஜர் பிரிவாக செலக்ட் செய்ததில் மிகவும் மகிழ்ந்தது ராஜகோபாலன் தான்.

தனது பேரன்கள் செய்வார்கள் என எதிர்பார்த்த ஒன்றை தன்னுடைய பேத்தி செய்வதில் அவ்வளவு பெருமை அவருக்கு.

கனி எழுந்து சென்றதும் தனது அத்தானின் நினைவில் வகுப்பிற்கு செல்ல விருப்பமில்லாமல் வீட்டிற்கு வந்தவள் தலைவலியென தன் அன்னையிடம் பொய் உரைத்து விட்டு தனது அறைக்குள் சென்று முடங்கிவிட்டாள். அவளது சசி அத்தானின் ஏக்கத்துடன்.
மாலை நேரத்தில் வீட்டின் தொலைபேசி சிணுங்க அதையெடுத்து “ஹலோ” என செவி மடுத்தவளது காதில் தேன் பாய்ந்ததை போல் உணர்ந்தாள்.

“வரு…”

தனது ஹலோ என்ற ஒற்றை வார்த்தையிலே… தன்னை இனம் கண்டு கொண்ட சசியின் அன்பில் இன்றும் மெல்ல கரைந்து தான் போனாள்.

துளிர்விடும்🌱…

error: Content is protected !!
Scroll to Top