சருகு 🍂 22 :
வருவின் அமைதி அபியை பாதித்தது. எதனால் இந்த திடீர் அமைதியென அபி எவ்வளவு யோசித்தும் அவனால் யூகிக்க முடியவில்லை.
ஒருவேளை தனது ஒதுக்கம் தான் அவளின் இந்த அமைதி நிலைக்கு காரணமோ… ஒரு இயல்பான முடிவிற்கே அவனால் வர இயலவில்லை.
நேரம் கடந்துகொண்டிருக்க மணியை பார்த்தவன் இன்னும் நாளை மாலை நடக்கவிருக்கும் ஆடியோ ரிலீஸிற்கு நிறைய வேலைகள் இருப்பதாகத் தோன்றவும் நிவாஸின் உதவியுடன் அனைத்தையும் விரைந்து முடித்தான்.
நள்ளிரவிற்கு மேல் வீட்டிற்கு வந்தவன் யாரையும் தொந்தரவு செய்யாது தனது சாவி கொண்டு வீட்டைத் திறந்து உள்நுழைந்தான்.
வீடு முழுவதும் இருள் கவிழ்ந்திருக்க… ஹாலில் உள்ள சோபாவில் ஒரு உருவம் தென்படவம்.. விளக்கினை ஒளிரச் செய்தான். அங்கு வரு அவனுக்காக காத்திருந்த நிலையிலே அமர்ந்து கொண்டே இருக்கையில் பின் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.
தனக்காக காத்திருக்கும் அவளின் அன்பில் அபி தான் எப்படி உணர்கிறோம் எனத் தெரியாமலே வானோக்கி பறந்தான்.
மின்விளக்கு வெளிச்சத்தில் கண் திறந்த வரு… அவளை துளைத்தெடுத்த அபியின் பார்வை உள்ளுக்குள்ளே குறுகுறுப்பை ஏற்படுத்த என்ன செய்வதென தெரியாது.. சிறு திணறலுடன் “வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்தாள்.
அவளுக்கு பதிலளிக்காது சுவர் கடிகாரத்தை நோக்கி பார்வையை கொண்டுச்சென்று மீண்டும் அழுத்தமாக வருவின் மீது தன்னுடைய பார்வையை பதித்தான்.
அதன் பொருளுணர்ந்த வரு… “ஓ… மணி இரண்டுக்கு மேல் ஆச்சா. எப்படியும் சாப்பிட்டிருப்பாங்க.. அதை வாய திறந்து சொன்னா, உள்ளுக்குள்ள யாருக்கும் தெரியாம ஒளிச்சு வச்சிருக்க அவங்க காதலிக்கிற பொண்ணு வெளிய வந்தா குதிச்சிடப் போறாங்க…”
“ஆமாம்…”
தனது சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்தவள், மனதோடு உரையாடுவதாக நினைத்து வெளியே முணுமுணுத்திருந்தாள். அந்நேர நிசப்தமான சூழலில் அவளது முணுமுணுப்பு அபிக்குத் தெளிவாக கேட்க ஆமாம் என்று அழுத்தமாக பதிலளித்தான்.
அவனது அக்குரலில் வருவிற்கு ஒரு நொடி உடல் தூக்கிப் போட்டது.
அவன் என்னவோ சாதரணமாகத் தான் கூறினான். அவனிடம் ஒதுங்கியிருப்பதால் என்னவோ அவளுக்கு அபியின் குரல் நடுக்கத்தை ஏற்படுத்தியது.
அசையாது அவள் நின்றிருக்க….
“ஒரு டம்ளர் பால் கொண்டுவா.” கட்டளையாகக் கூறியவன் அறைக்குச் சென்று தன்னை சுத்தபடுத்திக்கொண்டு வருவிற்காகக் காத்திருந்தான்.
கையில் பாலோடு வந்தவள் டம்ளரை அவனிடம் நீட்ட… “நீயே குடிச்சிடு” என்றான்.
அவன் சொன்னது புரியாததை போல் நின்றிருந்தவளிடமிருந்து டம்ளரை வாங்கியவன் அவளது வாயருகே பாலினைக் கொண்டு சென்று, “எனக்காக காத்திருந்து நீ தான் சாப்பிடல. சோ நீயே குடி” என்றவனாக தன்னுடைய பேபிக்கு புகட்ட ஆரம்பித்தான்.
ஆச்சரியத்தில் தனது தாமரை மலர் போன்ற விழிகளை அகன்று விரித்து அவனை பார்த்தவாறே நிற்க.. அபி டம்ளரை டேபிளில் வைக்கும் சத்தத்தில் தான் சுயம் பெற்றாள்.
அவ்வளவு தான் என்பதை போன்று அபி கட்டிலில் படுத்து உறங்க ஆரம்பித்தான். ‘இவங்களுக்கு என்னவோ ஆகிடுச்சு’ என்று மனதோடு கூறிக்கொண்டவள்… அவனுக்கு மறுபுறம் படுத்தாள்.
ஏதோ சிந்தனையோடு படுத்திருந்தவள் சிறிது நேரத்திலேயே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள்.
அவள் புறமாகத் திரும்பிப் படுத்தவன்…
“ராட்சஷி.. கண்ணை விரிச்சு பார்த்தே ஆள மயக்குறடி. நீ இப்படியே என்னை பார்த்துட்டு இருந்தன்னு வை ஒரு நாள் இல்லை ஒரு நாள் நான் என் எல்லையை மீறப்போறேன். நீ எப்படி எனக்குள்ள இந்தளவுக்கு வந்தன்னு தெரியலடி.. கல்யாணத்தன்னைக்கு முதல் நாள் உன்கிட்ட புடவை கொடுக்க வந்தப்போ பார்த்தியே ஒரு பார்வை அது என் உயிர் வரை தீண்டின மாதிரி இருந்துச்சு.. அதுக்கான அர்த்தம் இப்போதாண்டி புரியுது.. என் மேல அவ்ளோ லவ் வச்சிக்கிட்டு எப்படிடி அவனை கல்யாணம் பண்ண ஓகே சொன்ன? எனக்காகவா.. அவ்வளவு தியாக உள்ளம் கொண்டவளா மேடம் நீங்க? உன் அதிரடி ரொம்ப பிடிச்சுதுடி. இப்போ ஏன் பேபி சைலன்ட் ஆகிட்ட. அப்படி என்னடி உன் குட்டி மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு. முதல் நாளே டைவர்ஸ் கேட்டியே அந்த மாதிரி என்னை விட்டு போகணும்னு ஏதாவது கிருக்குத்தனமா யோசிச்சிட்டு இருந்தன்னு வை அப்புறம் நடக்குற சேதாரத்திற்கு நான் பொறுப்பில்லை. எல்லாம் உன் படிப்பு முடியும் வரை தான்.”
உறங்கிக்கொண்டிருப்பளிடம் பேசியவன் அவளது நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து.. அவளை பார்த்தவாறே உறங்கிப் போனான்.
(ஏம்ப்பா… அபி அவள் தூங்கிறதுக்கு முன்னாடி இதெல்லாம் பேசியிருந்தா நாளைக்கு நடக்கவிருக்க பிரச்சினை நடக்காம தடுத்திருக்கலாமே.)
அதிகாலையிலேயே கவியின் மொபைல் தொடர்ந்து ஒலி எழுப்பியது. மூன்று முறை முழுதாக அடித்து நான்காவது முறை இறுதி ரிங்கில் ஆன் செய்து காதில் வைத்தவனது முழுத் தூக்கமும் பறந்தோடியது. எதிர்முனையில் கொடுத்தது அப்படி.
நாம் பேசாதிருந்தால் அவனாக பேச முயற்சி செய்வானென்று கனி ஏமாந்தாள். இவ்வளவு நாளாகியும் கோபம் போகல போலிருக்கே என்று இரவு முழுவதும் தூங்காமல் கவியின் நினைவில் உழன்று கொண்டிருந்தவள் இதற்கு மேல் முடியாதென அதிகாலையிலேயே கவிக்கு அழைத்து விட்டாள்.
அவன் போனை எடுக்கும் வரை அழைப்பை நிறுத்தாது தொடர்ந்தவள் அவன் எடுத்ததும்… முதல் முத்தத்தினை அலைகற்றைகள் வழியாக வாரி வழங்கினாள்.
நச்சென்று கேட்ட முத்த சத்தத்தில் உறக்கம் கலைந்தவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். இப்போது கவி எப்படி அமர்ந்திருப்பான் என்று நினைத்துப் பார்த்தவள் அடக்க மாட்டாமல் சிரித்தாள்.
அவளது சிரிப்பு சத்தத்தில் அதிர்ச்சியை விடுத்து அவளிடம் சிடுசிடுத்தான்.
“ஏய்… என்ன காலையிலே உன் அலப்பறைய ஆரம்பிச்சிட்டியா?இன்னைக்கு பொழுது ஒழுங்கா போன மாதிரி தான்” என்று வெளிப்படையாகவேக் கூறினான்.
ஆனாலும்.. அவளாக கொடுத்த முத்த சத்தத்தில் உள்ளுக்குள் மயங்கிக் கிடந்தான்.
“நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ மாமா.. இப்போ நான் எதுக்கு போன் பண்ண தெரியுமா?”
“எதுக்கு?”
“ஐ லவ் யூஊஊஊ… கவியரசன்.”
“ஏய் அங்க நேர்ல வந்தன்னு வை…” அவனது வார்த்தைகள் கடுமையாக ஒலித்தாலும்.. முகத்தில் அப்பட்டமாக மகிழ்ச்சி தெரிந்தது.
“வந்து என்ன பண்ணுவ மாமா… நான் போன்ல கொடுத்ததை நீ நேர்ல கொடுப்பியா மாமா” என்றவள் அவன் பதில் கூறுவதற்கு முன் அழைப்பைத் துண்டித்தாள்.
“கொலைகாரி… காலையிலே என்னை கொல்லணும்னு முடிவு பண்ணியிருக்கா.” தன்னவளை செல்லமாகத் திட்டிக்கொண்டே தனது அன்றாட பணிகளைத் தொடங்கினான்.
இணைப்பை கட் செய்தவள்… தொலைபேசியையே சிறிது நேரம் பார்த்திருந்துவிட்டு திரும்பியதும் மின்சாரம் தாக்கியதைப் போன்று அதிர்ந்தாள்.
அந்த அதிகாலை நேரத்தில் வயலுக்குச் செல்ல வந்த ரங்கநாதன் கனியின் உரையாடல் முழுவதையும் கேட்டு ருத்ர மூர்த்தியாக நின்றிருந்தார்.
“அது… அது வந்து… மா….ம்….மாம்….மா.”
“யாருக்கு யாருடி மாமா…” என்று சினந்தவர்,
“உனக்கு அவ்வளவு சொல்லியும்.. என்னத் திமிரு இருந்தா திரும்பவும் என் பையன் பின்னாடி சுத்துவ… உனக்கெல்லாம் கொழுப்புடி.. ஒரு தடவை சொன்னா புரியாதுல.. இந்த வயசுலே அப்படியென்ன கேக்குது” என்ற அவரின் வார்த்தையில் பேதையவள் துடித்துடித்தாள்.
அப்போது, அங்கு வந்து சேர்ந்த சீனுவைப் பார்த்து தனது பேச்சினை நிறுத்தினார்.
கண்களில் கண்ணீர் வடிய.. எங்கு செல்கின்றோம் எனத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி நடந்தவள் தங்களது வயல் மற்றும் தோப்பிற்கு நடுவில் உள்ள வேப்பமரத்தம்மன் கோவிலிற்கு வந்து சேர்ந்தாள்.
வேப்பமரத்தடியில் அம்மன் சிலை நிறுவி… அதனைச்சுற்றி திண்டு போலமைத்து ஊர் மக்கள் வணங்கி வந்தனர். பயிர்கள் செழித்து வளர மற்றும் ஊர் செழுமையாக இருக்க காரணம் அந்த அம்மன் தான் என்பது மக்களின் நம்பிக்கை.
ஊதக்காற்று சிலுசிலுவென உடலைத் தழுவ.. இதயம் மரித்துப் போகுமளவிற்கு வலியெடுக்க.. அழுது கொண்டே அம்மனை பார்த்தவாறு அந்த திண்டின் மீது படுத்துவிட்டாள்.
**************
அபி எழுந்தது முதலே பரபரப்பாகக் காணப்பட்டான். அவனது வேலை பளுவை குறைக்கும் பொருட்டு, “எனக்கும் வேலையிருந்தா சொல்லுடா நான் செய்றேன்” என்ற கவியை தோளோடு அணைத்து சிரித்தவன், “நீ ஹீரோடா அந்த கெத்தோட இரு” என்று நகர்ந்தான்.
“பத்து மணிக்கு ஹோட்டல் ***** ல் பங்க்ஷன் நான் இப்போ கிளம்புறேன். நீ சரியா 9.59 க்கு அங்கிருந்தா போதும்” எனக்கூறி சிரித்தவன், கவியின் பார்வை சென்றதின் பொருளுணர்ந்து.. “இப்போ மீடியா எல்லாரும் வருவாங்க சோ வேண்டாம். நைட் பார்ட்டிக்கு உன் தங்கச்சியை கூட்டிட்டுப் போலாம்” என்க கவி அபியை கட்டிக்கொண்டான்.
இதனையெல்லாம் கேட்ட வருவிற்கு, ‘என்னை உங்க மனைவியா அறிமுகப்படுத்த அவ்வளவு கஷ்டமா இருக்கா அத்தான். பேருக்கு கல்யாணமாச்சுன்னு அறிவிச்சீங்க… அதிலும் என் முகம் தெரியாத போட்டோ போட்டீங்க’ என மனம் சுருங்கினாள்.
அவளது படிப்பின் நலன் கருதி அவன் செய்த செயல்கள் இப்போது அவளுக்கு தவறாகாத் தெரிந்தது.
போட்டோ என்று நினைவில் உதித்ததும் தான் அன்றொரு நாள் தான் பார்த்த போட்டோவின் நினைவு வருவிற்கு வந்தது.
வார்ட்ரோப்பினை அடுக்கி வைக்கலாமென்று சுத்தம் செய்தவளின் கைகளில் அன்று அபி பத்திரப்படுத்திய போட்டோ கிடைத்தது. பொருட்களுக்கு அடியிலிருந்ததால் அபியின் முகம் மட்டும் அரை குறையாகத் தெரிய அதனை எடுத்து பார்த்தவளின் காலுக்கு கீழே பூமி நழுவுவதைப் போன்று உணர்ந்தாள்.
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து… ஒருவருடைய பார்வை மற்றொருவரை தழுவியவாறு அப்புகைப்படத்தில் காட்சியளித்தனர் அபி மற்றும் விஷாலி. இருவரின் பார்வையிலும் விவரிக்க முடியாதளவு காதல் வழிந்தோடியது. பார்ப்பவர் யாருக்கும் அவர்கள் காதல் கரை புரளும் இப்புகைப்படம் ஆச்சரியத்தையே அளிக்கும்.
‘போட்டோவிலே இவ்வளவு காதலென்றால் நிஜத்தில் எப்படியிருந்திருக்கும்.’
‘இப்படி உயிராய் நேசித்தவங்க அவளை விடுத்து என்னை ஏற்க சொன்னா எப்படி ஏற்பார். அவருடைய காதல் அழிவதற்கு நானே காரணமாகிட்டனே’ என்று கதறியழுதாள். இவள் வருவதற்கு முன்பே அவனது காதல் அழிந்து விட்டதென்பதை அறியாமல் குற்றவுணர்ச்சியில் ஒடுங்கினாள். தான் எப்போதும் அவர்களது காதலுக்கு தடையாக இருக்கக்கூடாதென்று நினைத்தவள் அபியிடம் காட்டும் அதிரடியை தொலைத்து அமைதியாகினாள்.
அபியும் இது தெரியாமல் தனது பேச்சினால் அவளிடமிருந்து தொலை தூரம் சென்றான். அவனின் செயலுக்கு தாமே ஒரு காரணம் கற்பித்து மனதளவில் வருந்தினாள்.
அபி சென்றதும் தங்கையிடம் வந்த கவி, “மாலை கல்லூரி முடித்து வந்து தயாராகியிருடா. நான் வந்து அழைத்து போறேன்” என்றான். அவனுக்கு ஒரு தலையாட்டளை மட்டுமே பதிலாக அளித்தாள்.
கல்லூரிக்குச் சென்றவள் சோகமே உருவாக அமர்ந்திருந்தாள். அவளிடம் வந்த நந்து, “வரு ஒரு கால் பண்ணனும் நான் மொபைல் கொண்டு வரல” என காரணம் கூறி வருவின் மொபைலினை வாங்கினாள்.
வரு கல்லூரிக்கு வரும் முதல் நாள் அவளுக்கு மொபைலினை வாங்கி கொடுத்திருந்தான் கவி. அதுவும் அபி கூறியதால். வாங்கி ஓபன் செய்தவள் வால்பேப்பரிலிருந்த அபியின் போட்டோவினைப் பார்த்து உற்சாகமாக… “ஹே வரு உனக்கும் இவரை பிடிக்குமா?” எனக் கேட்டிருந்தாள்.
தானிருந்த குழப்பத்தில் யாரென்று வரு வினவ… “அதான் வரு டிரைக்டர் அபிநவ்” என பதிலளித்தாள்.
“ம்.. பிடிக்கும்…” என்ற வரு நந்து செய்த செயலில் அப்பட்டமாக முகத்தில் அதிர்வினைக் காட்டினாள்.
வருவிடம் பேசிக்கொண்டிருந்தாலும் நந்துவின் பார்வை அபி மீதேயிருந்தது. சுற்றி பார்த்தவள் வரு என்னவென்று உணரும் முன்பு அபியின் நிழல் உருவத்திற்கு முத்தம் வைத்தாள்.
வருவின் அதிர்வினைக் கவனியாதவள்… “எனக்கு மட்டுமில்ல நம்ம கிளாஸ்லே அபியை ரொம்ப பேருக்கு பிடிக்கும் வரு. மூணே படம் தான் இயக்கியிருக்காரு, அதுக்குள்ள நேஷனல் அவார்டுலாம் வாங்கிட்டாரு தெரியுமா! இன்னைக்கு கூட புது பட மியூசிக் ரிலீஸ். வீட்டுக்கு போனதும் டவுன்லோட் செய்யணும். எவ்வளவு சார்மிங்.. எவ்வளவு அழகு. இதுக்கு முன்னாடி இவ்வளவு அழகா டிரைக்டர் யாரும் இருந்திருக்க மாட்டாங்க. இவரு மட்டும் ஹீரோ ஆகியிருந்தார்ன்னா பொண்ணுங்க ஜொள்ளுலே நீந்திட்டு இருந்திருப்பாரு. என்னோட ஆசையே அபியை நேர்ல பாக்கிறது தான். அவரை மட்டும் நான் நேரில் பார்த்தால் அப்படியே இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தான்…”
நந்து ஜொல்லு விட்டுக்கொண்டேப்போக..
“நிறுத்து டி” என்ற வரு… “முத்தம் கொடுக்கணும்ன்னா நாளைக்கு எங்க வீட்டுக்கு வா” என்றாள் கடுப்பாக.
அவளது கடுப்பானக் குரலை கருத்தில் கொள்ளாத நந்து சத்தமாக வாய்விட்டு சிரித்தாள்.
“எப்படி… எப்படி… நான் உன் வீட்டுக்கு வந்தா, அபிநவ்க்கு முத்தம் கொடுக்கலாமா?” எனக் கேட்டு மீண்டும் சிரிக்க…
“எதுக்குடி இப்போ சிரிக்கிற” என்று வரு சிடுசிடுத்தாள்.
“ஹே… கூல் டி.. இப்போ எதுக்கு நீ டென்ஷன் ஆகுற. பின்ன அவரு உன் வீட்டுக்காரர் மாதிரி என் வீட்டுக்கு வா முத்தம் கொடுக்கலான்னு சொல்ற…”
“ஆமா என் வீட்டுக்காரர் தான்…”
இன்றைய தேதிக்கு பல பெண்களோட மனதில் அவரு வீட்டுக்காரரா தான் இருக்கிறார்… எனக் கூறி மீண்டும் நந்து சிரிக்க,
அவளிடமிருந்து தன்னுடைய மொபைலினை பிடுங்கி… கேலரி ஓபன் செய்து தங்களுடைய திருமண போட்டோவினைக் காண்பித்தாள்.
ஆச்சரியத்தில் விழி தெறித்து வெளியே குதித்துவிடுமளவிற்கு கண்களை அகல திறந்து நிஜமாகவா என்றவள்… “ஆனால், நீ உன் ஹஸ் நேம் ஏதோ சசி சொன்னியே” என வினவினாள்.
“சசி அபிநவ்… அவரு பேரு. என் மாமா.” வரு மிடுக்குடன் கூறினாள்.
அவருக்கு கல்யாணம் ஆனது கூட தெரியல. நீயெல்லாம் அவரு ஃபேனு, மிக்சி, கிரைண்டர்ன்னுட்டு..” நந்துவை கிண்டல் செய்தவள் வகுப்பறைக்குள் சென்றாள்.
அதன் பிறகு நாள் முழுக்க நந்து அபியின் ஆட்டோகிராப் வேணும் அவருடன் போட்டோ எடுக்க வேண்டுமென்று வருவின் பின்னாலே கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
‘இதுவும் கெத்தா தானிருக்கு’ என்று நினைத்தவள்.. “நாளை வீட்டுக்கு வா” எனக்கூறி தன்னுடைய தோழியின் கெஞ்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
நகரத்தின் மையத்தில் உள்ள பிரபலமான ஹோட்டலின் அந்த அறை பிரமாண்டமாக டெக்கரேட் செய்யப்பட்டு விருந்தினர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
முதல் வரிசையில் படத்தின் பிரடியூசர், இயக்குனர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் அமர்ந்திருக்க அவர்களுக்கு அருகே, பின்னாலென்று திரைத்துறையை சார்ந்த பல முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர்.
சரியாக பத்து மணிக்கு மேடையேறிய தொகுப்பாளர் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்க இனிதே ஆரம்பமானது.
பட சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் நட்சத்திர பிரமுகர்கள் அனைவரும் படம் வெற்றி பெற வேண்டி வாழ்த்து கூறி பேசிய பின்னர். படத்தின் பாடல்கள் ரிப்பன் கட்டப்பட்ட குறுந்தகட்டினை கொண்டு ரிலீஸ் செய்தனர். பாடல்களை கேட்ட அனைவரும் நன்றாக வந்திருப்பதாக இசையமைப்பாளரைப் பாராட்ட படத்தின் ப்ரோமோஷன் அங்கிருந்து தொடங்கியது.
கடைசி நிமிடத்தில் மேடையேறிய அபி தொகுப்பாளரிடமிருந்து மைக் வாங்கி பேச ஆரம்பித்தான்.
“விழாவினை சிறப்பிக்க வந்த அனைவருக்கும் தேங்க்ஸ். உங்க எல்லாருக்கும் இது இசை வெளியீட்டு விழா என்றுதான் கூறியிருந்தோம், பட் இப்போ இங்கையே படத்தின் பர்ஸ்ட் லுக் அண்ட் போஸ்டெரை ரிலீஸ் பண்ணலாம் நினைக்கிறோம். இந்தப்படம் ஆரம்பத்தில் பல பிரச்சனைகள் சந்தித்திருந்தாலும் அதையெல்லாம் கடந்து என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்த சர்மா சார் அவங்களே ரிலீஸ் செய்யணும் ஆசைப்படுறேன்” என்றவன் சர்மாவை மேடைக்கு அழைத்து ரிமோட் ஒன்றினை கையில் கொடுத்தான்.
ஷர்மா ரிமோட்டில் பட்டனைத் தட்ட மேடையில் பொருத்தியிருந்த ஸ்க்ரீனில் படத்தின் தலைப்பினைத் தாங்கிய போஸ்டர் அழகாக ஒளிர்ந்தது.
படத்தின் நாயகன் (கவி) சாதாரண மிடில் கிளாஸ் தோற்றத்தில் வறண்ட நிலத்தில் நின்றுகொண்டு, இரண்டு கைகளிலும் பிளாஸ்டிக் குடம் பிடித்திருக்க, முகத்தில் கோபமும், கண்களில் ஏக்கமும் தெரிய… காரிருள் சூழ்ந்த வானத்தில் இப்போவோ அப்பாவோ மழையாக பொழிய குளிர்ந்த காற்றை எதிர்பார்த்திருக்கும் கரிய மேகத்தினை பார்ப்பது போல் போஸ்டரில் பிம்பம் அமைந்திருக்க… நீர் திவலைகளால் “மேக தாகம்” என்று படத்தின் தலைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.
பார்க்கும் அனைவரது கண்களிலும் வியப்பும்… மெச்சுதலும் கலந்திருந்தது.
பட போஸ்டரிலே படத்தின் வெற்றி அரம்பித்துவிட்டதாக வந்திருந்தோர் கூறினர்.
சர்மாவிற்கு மகிழ்வு எல்லையைக் கடந்தது. பணத்தின் கவலை அவருக்கு இருக்கத்தானே செய்யும். அவர் கவலை அவருக்கு.
நிகழ்ச்சி நிறைவடைய ஒவ்வொருவராக வெளியேறினர். கவி போஸ்டரை பார்த்துக்கொண்டே நின்றிருக்க, அவனருகில் வந்த நிவாஸ் சிரித்தான்.
“போட்டோ ஷூட் அப்போ நான் கூட அபி சார் உங்களை வேணும்ன்னே வச்சு செய்றாருன்னு நினைச்சேன் சார். பட் மனுஷன் என்னம்மா யோசிக்கிறாரு. எவ்வளவு கிரியேட்டிவிட்டி, அதனால தான் இவ்வளவு சின்ன வயசுலே உயரத்தில் இருக்காரு” என்று புகழ்ந்தான். தன்னையே புகழ்வது போன்று கவி புன்னகையுடன் நின்றிருந்தான்.
அபி மிகவும் சந்தோஷமாகக் காணப்பட்டான். சிரித்த முகமாக ஷர்மாவிடம் அபி பேசிக்கொண்டிருக்க அது மேலும் மகிழ்வினை கவிக்கு கொடுத்தது.
ஷர்மா, “எப்போ தான் அபி உங்க மனைவியை கண்ணுல காட்டப்போறீங்க” என்று வினவ.. சிறு புன்னகையுடன் மாலை பார்ட்டிக்கு அழைத்து வருவதாகக் கூறினான். தன்னவளின் நினைவில் அவனது புன்னகை மேலும் விரிந்தது.
ஒரு மாதத்திற்கு முன்பு உன் வாழ்வின் அனைத்து துன்பங்களும் மறைந்துவிடுமென்று கூறியிருந்தால் அபி நம்பியிருக்க மாட்டான். ஆனால், இன்று இந்த சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் அபியை கவிக்கு மிகவும் பிடித்தது.
யார் இருக்கின்றனர் என்றெல்லாம் பார்க்காமல் அபியை நெருங்கிய கவி ஆனந்தக் கண்ணீருடன் அவனை இறுகத் தழுவிக் கொண்டான்.
கவியின் இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் உணர்ந்த அபி அவனை சகஜ நிலைக்கு கொண்டு வர எண்ணியவனாக, “உன் தங்கச்சிகிட்ட என் காதலை சொல்லிட்டா, இன்னும் அதிகமா சந்தோஷமா இருப்பேன். நீ அதை பார்த்து தினமும் அழலாம்” என்க, அவன் கூறியது புரிந்ததும் கவியின் அணைப்பு இன்னும் இறுகியது.
“அபி, கவி மட்டும் உங்க மனைவியா இருந்திருந்தா உங்களை யாருக்கும் விட்டுக்கொடுத்திருக்கமாட்டாங்க போலிருக்கே” என்ற சர்மாவின் கேலியில் தான் கவி இயல்புக்குத் திரும்பினான்.
வெளிநாட்டிலிருந்து இன்று காலை தான் சின்மயி சென்னை வந்திருந்தாள். வந்த பிறகு தான் அவளுக்குத் தெரிந்தது அபிக்கு திருமணம் ஆனது. கோபம் மனதினை ஆக்கிரமித்தாலும் காதல் வலியெல்லாம் அவளுக்கில்லை. தனது திரை வாழ்க்கைத் திட்டமெல்லாம் இப்படி யாரோ ஒருத்தியால் வீணாகிவிட்டதேயென்று முகம் அறியாத வருவின் மேல் ஆத்திரம் கொண்டாள்.
எப்போதும் கடுவன் பூனைப்போல் காட்சியளிப்பவன் இன்று மலர்ந்த முகத்துடன் வலம் வரவும் சின்மயிக்கு வருவின் மீதான கோபம் பல மடங்கு அதிகமானது. அதுமட்டில்லாமல், அபி அவளை சிறிதும் கண்டு கொள்ளவில்லை அந்த கோபமும் வருவின் மீதே திரும்பியது.
இப்போதும் சிரித்த முகத்துடன் காணப்பட்ட அபியை கண்டு ஆத்திரமடைந்தவள், அவனை பழி தீர்க்க வேண்டுமென்று அவர்களது பேச்சிற்கு நடுவே புகுந்தாள்.
“என்ன அபி உங்களுக்கு மேரேஜ் ஆகிருச்சுன்னு கேள்விப்பட்டேன்.. உங்க வைஃப் கூட்டிட்டு வருவீங்கன்னு ஈகரா எக்ஸ்பெக்ட் பண்ணா இப்படி ஏமாத்திட்டீங்களே.. ஏன் உங்க மனைவியை நாங்கலாம் பார்க்கக்கூடாதா, இல்லை அவங்க உங்க லெவெளுக்கு ஏத்தவங்க இல்லையோ. கிராமத்துல இருந்தவங்க அப்போ இந்த மாதிரி இடத்துல எப்படி நடந்துக்கணும் தெரியாதுல, அதான் கூட்டிட்டு வரலையோ?” என்றுக் கூறி நக்கலாக சிரிக்க…
“அவள் லவ் லெவெளுக்கு நான் தான் பொருத்தமில்லை..” மெல்லிய ஓசையில் சொல்லிக்கொண்டேன்.
அபியின் வார்த்தைகள் கவியை எட்டியதும் அவனின் காதல் மனம் உணர்ந்து அகம் மகிழ்ந்தான்.
“ஈவ்னிங் பார்ட்டியில் சந்திப்போம்” என்றவனாக ஷர்மாவிடம் சிறு தலையசைப்புடன் கவியையும் கூட்டிக்கொண்டு வெளியேறினான்.
சர்மாவிற்கு சின்மயி பேசினது சற்று அதிகப்படி என்றேத் தோன்றியது… அதனால் தனக்கு வேலையிருப்பதாகக் கூறி தன்னிடம் பேச வந்தவளை தவிர்த்தார்.
அபிக்கு எப்படியாவது சின்மயின் மூக்கினை உடைக்க வேண்டுமென்று இருந்தது. ஹோட்டலிலிருந்து அலுவலகம் சென்று மாலை இருவரும் வீட்டிற்கு வந்த சமயம் வரு தோட்டத்திலுள்ள செடிகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள்.
அவர்களைக் கண்டதும் அபியை விட்டு தாம் விலகியிருக்கோம் என்பதை மறந்தவளாய் ஓடிச்சென்று அபியின் கரம் பற்றி… “படத்தோட பாட்டு சூப்பர் அத்தான். அதை விட மூவி டைட்டில் அண்ட் பர்ஸ்ட் லுக் செம மாஸ்” எனத் தெரிவித்தாள்.
திருமணத்திற்கு பிறகு அவள் தொடும் முதல் தீண்டல்… அவள் கரம் பற்றியதில்… தேகம் முழுவதும் சில்லென்று பாய்வதைப் போன்று உணர்ந்தான். பெரிய பெரிய நட்சத்திரங்கள் பாராட்டியதை விட தன்னவளின் உற்சாகம் கலந்த பாராட்டில் தான் ஒரு இயக்குனராக முழுமையடைந்து விட்டதாகக் கருதினான்.
சிறு சிரிப்புடன் அபி கடந்ததும்… வரு இயல்பாக கவியின் தோள் மீது கரம் போட்டு… “அப்புறம் தம்பி பெரிய ஹீரோ ஆகிட்ட, போஸ்டர்லலாம் செமையா கலக்குற. இனி நான் பேசுணும்னாலும் அப்பாயின்ட்மெண்ட் இருக்கணும் சொல்லுவியா?” என்று கேலி செய்ய, கவி தன் தங்கையை அடிப்பதற்கு விரட்டினான். அவளோ அவனுக்கு போக்குக்காட்டி விட்டு அறைக்குள் புகுந்து கொண்டாள்.
வருவின் இச்செயலை ரசித்த அபி எதையோ இழந்ததாக வருந்தினான்.
‘நீ திரும்பவும் என்னுடன் பழைய மாதிரி விளையாடுவ, சிரிப்ப, பேசுவ, அத்தான் அத்தான்னு என் பின்னாலே சுத்தி வருவ. உன்னை என்னை மட்டுமே சுத்தி வர வைக்கிறேன் பேபி’ என்று நினைத்தவன், ‘அதுக்கு உன் படிப்பு முடியணும் பேபி’ என ஏக்கப் பெரு மூச்சு விட்டான்.
மாலை ஏழு மணியளவில் நடைபெற இருக்கும் பார்ட்டிக்கு செல்லத் தயாராகுமாறு வருவிடம் கூறிய அபி, அவளது கையில் கவர் ஒன்றினை அளித்து அதிலுள்ள உடையை அணிந்து வர கூறினான்.
தனக்காக தன் கணவன் திருமணத்திற்கு பிறகு வாங்கித்தரும் உடை என்ற ஆவலில் பிரித்துப் பார்த்தவள் கவுன் போன்ற வடிவில் கையில்லாமல் கணுக்கால் வரை இருந்த ஆடையில் முகம் சுண்டினாள்.
“இதை எப்படி போட்டுட்டு போறது.”
அதை அபியிடமே கேட்டு விடலாமென்று அறையை விட்டு வெளியில் வந்தவளது செவிகளில் அபியின் குரல் தெளிவாக விழுந்தது.
அபி வருவிற்கு உடையளித்ததை பார்த்த கவி… “என்ன மச்சான் தங்கச்சி மேல திடீர் பாசம்” என்க… “காலையில் சின்மயி பேசியதை நீயும் தானே கேட்ட, நம்மகிட்ட பேசின மாதிரி அவ பேபி மனசையும் ஏதாவது கூறி புண்படுத்திட்டா? அதுக்குத்தான் நம்ம இடத்துக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் லூக்கா இருக்கிற மாதிரி வாங்கிக்கொடுத்தேன்” என்றான்.
இதனைக் கேட்ட வருவிற்கு அபியின் அக்கறை புரிந்தது. அது அவளுக்கு பிடித்துமிருந்தது. ஆனால், எப்போதும் தாவிணி, சுடிதார் மட்டுமே அணிந்தவளுக்கு அபி வாங்கி வந்திருந்த உடை அணிய மனம் ஒப்பவில்லை.
“என்னை அங்க யாரும் உங்க ஈகுவெல்க்கு இல்லைன்னு சொல்லிடக் கூடாது அவ்வளவு தானே அத்தான், அதுக்கு இந்த ட்ரெஸ் தான் போடணுமா என்ன?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவள் கிளம்பத் தயாராகினாள்.
மாலை ஐந்து மணிக்கெல்லாம் தயாராகி வருகிறேனென்று அறைக்குள் சென்றவள் ஆறு முப்பதாகியும் வெளியே வரவில்லை. அவள் அறைக்குள் ரெடி ஆகிறாளென்று, தொந்தரவு செய்யாது அபி கவியின் அறையிலேயே உடை மாற்றிக் கொண்டான்.
கவியும், அபியும் மாடி படிகளைப் பார்த்தவாறே கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாக வருவை எதிர் பார்த்து அமர்ந்திருந்தனர்.
இதற்குமேலும் அவர்களது பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றவாறு எப்போதும் ஏனோதானோவென்று இருப்பவள் இன்று வெகு சிரத்தையாக தன்னை அலங்கரித்து கீழேயிறங்கி வந்தாள்.
வரு வருவதை முதலில் கவனித்த அபி இமைக்கவும் மறந்து தன்னவளை முதல் முறையாக வெளிப்படையாகவே ரசித்தான். தனக்கு அருகிலிருப்பவனிடம் எவ்வித அசைவும் இல்லாமலிருக்க அவன் பார்வை சென்ற திசையில் தன் பார்வை பதித்த கவியும் ஒரு நொடி தன் தங்கையின் அழகில் வியந்தான்.
அடர் கருமை நிற புடவையில் அதற்கேற்றவாறு கரு நிற கையில்லாத பிளவுஸ் அணிந்திருந்தாள். புடவையின் பல்லுவை மடிப்பெடுக்காமல் ஒரே பட்டையாக பின் பண்ணியிருந்தாள். தன் நீண்ட கூந்தலை பின்னாமல் முழுவதுமாக முன்புறம் ஒரு பக்கமாக படர விட்டிருந்தாள். நெற்றியில் பொட்டில்லாமல், கண்களுக்கு கருமையாக காஜலிட்டு, இயற்கையாகவே கண்களை மூடினால் கன்னம் தொடும் இமைகளை அகல விரித்து, கழுத்தில் அவனிட்ட தாலியுடன் வைர கற்கள் பதித்த நெக்லஸ் மற்றும் அதற்கேற்றவாறு வைரத் தோடு, வளையலென அணிந்து ஒரு பதுமை போல் நடந்து வந்தாள்.
அவளது பால் வண்ண மேனிக்கு அவள் அணிந்திருந்த கருமை நிற புடவையும், வைரக் கற்கள் பதித்த ஆபரணங்களும் மிகவும் எடுப்பாக இருந்தன.
தங்கையை ஒரு மெச்சுதலான பார்வை பார்த்த கவி… “அபி வாங்கிக்கொடுத்த ட்ரெஸில்” செமயா இருக்கடா என்றுக் கூறினான்.
கவியின் வார்த்தைகளில், “நான் வாங்கிக்கொடுத்த ட்ரெஸ் இது இல்லைடா… அதை போட்டிருந்தாக் கூட இவ்வளவு அழகா இருந்திருக்க மாட்டா” என்று அபி மனதோடு கூறிக்கொண்டான். அவனது கண்கள் அங்குலம் அங்குலமாக தன் மனம் கவர்ந்தவளை ரசித்துக் கொண்டிருந்தது. இறுதியில் அவனது பார்வை நிலைத்து நின்றதோ அவளது பிங்க் நிற இதழில். லிப்ஸ்டிக் இடாமல் இயற்கையிலே தன்னை சுண்டி இழுக்கும் அழகுடன் இருந்த இதழை சுவைக்க எழும் பேராவலை கட்டுப்படுத்த முடியாது திணறினான்.
தனது பேச்சிற்கு பதிலளிக்காமல் இருப்பவளை நன்கு கவனித்த கவிக்கு அப்போது தான் ஒன்று புரிந்தது அவளது கவனம் நம்மிடமில்லையென்று.
அபி மற்றும் வருவின் பார்வை ஒன்றை ஒன்று தழுவியிருக்க, அவனது பார்வை தன்னுடைய ஆன்மாவையே தீண்டுவதை போன்று உணர்ந்தாள். இருவரும் ஒரு விதமான மோன நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களது ரொமான்ஸில் சிறு வெட்கப் புன்னகையுடன் வெளியேறிய கவி மீண்டும் வந்து… தோட்டத்திலிருக்கும் ராமு அண்ணா எங்கே வந்துவிட போகிறாரென்று கதவினை சாற்றி சென்றான். கதவு மூடும் சத்தத்தில் கலைந்தவர்கள் ஒருவர் முகம் ஒருவர் பார்க்க சங்கடப்பட்டு வெட்கப் புன்னகை பூத்தனர்.
புடவையில் எழிலென நின்றவளை விட்டு பார்வையைத் திருப்ப முடியாது திணறினான். “அய்யோ கொல்றாளே! என் கட்டுப்பாடெல்லாம் காணாமல் போயிடும் போலிருக்கே. கடவுளே! இந்த ராட்சஷிகிட்டயிருந்து என்னை காப்பாத்துங்க”, என வேண்டிக்கொண்டவன் நேரமாவதை உணர்ந்து செல்லலாம் என்பதை போன்று விழி அசைக்க, அதில் தடம் புரளும் மனதை அடக்கும் வழி தெரியாமல் மகுடிக்கு மயங்கும் பாம்பு போல் அவன் பின்னாலே சென்றாள்.
இருவரும் வீட்டைவிட்டு வெளியில் வந்த சமயம் கவி காரினைத் தயாராக வைத்திருந்தான்.
யாரிடம் இவள் தன் மனைவியென கெத்தாக காட்ட நினைத்தானோ, அவளால் தான் தன்னை நெருங்கி வந்தவள் மீண்டும் விலக போகின்றாலென்று அறியாமல், சந்தோஷ மனநிலையில் வருவுடன் அபி காரிலேறி அமர பார்ட்டி நடைபெறும் உயர்தர ஹோட்டலினை நோக்கி கவியின் உதவியால் கார் சீறிப்பாய்ந்தது.
துளிர்விடும் 🌱.