சருகு 🍂 23
விடியலின் போதே வயலிற்கு நடுவிலுள்ள கோவிலுக்கு வந்த கனி நேரம் செல்வது தெரியாமல் கண்ணீரில் கரைந்தாள்.
மணித்துளிகள் விரைவாக கடக்க மாலை மங்கிய நேரத்தில் மலையிலிருந்து வீசும் குளிர் காற்றின் குளுமையை உணர்ந்திட்டப் பிறகே தாம் எங்கிருக்கின்றோம் என்று தன்னிலை பெற்றாள்.
ஒரு நாள் முழுவதும் தண்ணீர் உணவின்றி அழுகையிலே மூழ்கியிருந்ததால் உடல் மரத்து எழுந்திருக்க முடியாது தடுமாறினாள்.
மெல்ல எழுந்து நின்றவள் நிற்கும் சக்தியற்று நிலத்தில் சரிய போகும் சமயம், “அம்மாடி கனி” என்ற கூவலுடன் தன் மகளை மடி தாங்கினார் வெங்கடாச்சலாம்.
“அப்பா!” என்றவளை…
“என்னம்மா ஆச்சு… உன்னை எங்கெல்லாம் தேடுறது.. உன் அம்மா நீ சொல்லாம கொள்ளாம கல்லூரிக்கு போயிட்டதா காலையிலிருந்து ஒரே புலம்பல்… மாலை நேரம் கடக்கவும், நீ வீடு வந்து சேராததும் தான்… வாசுவை விசாரிக்க நீ கல்லூரிக்கே போகலன்னு தெரிந்தது. உன்னை எங்கெல்லாமோ தேடினாள்… நீ இங்க வந்து இந்த நிலையில் இருக்க” என்று வருந்தினார்.
அவளது கண்கள் அவரது பேச்சிற்கு கண்ணீரை மட்டுமே சுரந்தது.
“என்னடாம்மா?”
அவரின் கலக்கம் நிறைந்த குரல் அவளுக்கு வலியை கொடுத்தது.
தனது தந்தையின் கலக்கத்தை நீக்கும் பொருட்டு முயன்று வரவைத்த திடத்துடன், “ஒண்ணுமில்லைப்பா” என்றாள்.
தன் மகள் தன்னிடம் ஏதோ மறைக்கின்றாள் என்று எண்ணிய வெங்கட்…
“சரி வாம்மா வீட்டுக்கு போலாம்… உன்னை காணாம எல்லாரும் படப்படப்பா இருக்காங்க” என்றவாறு கனியை கைத்தாங்களாக வீட்டை நோக்கி அழைத்துச் சென்றார்.
வீட்டில் கனியை பார்த்ததும் கலா ஓடிவந்து தன் மகளை இறுக அணைத்துக்கொண்டார்.
“சொல்லாம எங்கடி போன” என்று கோபமாகக் கத்தியவர்.. தன் மகளின் கண்களில் தெரிந்த பசியை அறிந்து துடித்துப் போனார். அடுத்த கணம் அவளிடம் எதுவும் கேட்காது உணவு கூடத்திற்கு அழைத்துச்சென்று உணவினை தட்டிலிட்டு ஊட்டிவிட்டார். மறுப்பு ஏதுமின்றி உண்டு முடித்தவள் தனது அறைக்குச் செல்வதாகக் கூறிச் சென்று விட்டாள்.
என்ன நடந்தது அவள் ஏன் வீட்டிற்கு வராமல் ஒரு நாள் முழுவதும் கோவிலிலே இருந்தாள் என்று யாருக்கும் தெரியாது ஒருவரைத் தவிர… அவர் ரங்கநாதன். ஆனால், யாரும் அவளிடம் அதைப்பற்றி கேட்டு அவளை கஷ்டப்படுத்த வேண்டாமென்று அப்படியே விட்டு விட்டனர்.
தனது அறையில் கட்டிலில் படுத்து உடல் குலுங்க அழுதவள்,
“அக்கா…” என்றழைப்பில் எழுந்து அமர்ந்தாள்.
விஷ்ணு தான் வந்திருந்தான்.
கனிக்கு அருகில் நெருங்கி அமர்ந்து அவள் கண்களை துடைத்து விட்டான். சிறுவன் அவனுக்கு எதற்கு தனது அக்கா அழுகின்றாலென்று தெரியவில்லை… அதற்கு எப்படி ஆறுதல் கூற வேண்டுமென்றும் புரியவில்லை… ஆதலால், கனியை கட்டிக்கொண்டு தானும் அழுதான்.
“இனி நீ எங்க போறதா இருந்தாலும் என்னையும் கூட்டி போக்கா… உன்னை காணும்ன்னு அத்தை, அம்மா, பெரியம்மாலாம் எவ்ளோ கவலையா இருந்தாங்க தெரியுமா?தாத்தா அவர் நாற்காலியை விட்டு எழுந்திருக்கவேயில்லை, மாமாவும், அப்பாவும் உன்னை காணாம தவிச்சுப் போயிடாங்கக்கா… எனக்கும் அழ அழய்யா வந்துச்சு…”
தன்னைக் கட்டிக்கொண்டு அழும் தம்பியின் அன்பில் நெகிழ்ந்து தனது அழுகையை நிறுத்தினாள்.
நேரமாவதை உணர்ந்து, “உன் அறைக்கு போ விஷ்ணு… டைம் ஆச்சு… போ தூங்கு” என்றாள்.
அவனோ, “நான் உன்னோடவே தூங்குறேன்” எனக் கூறி அவள் மீது கைபோட்டவாறு படுத்துவிட்டான்.
தான் இந்த வீட்டு பிள்ளையில்லையென்று தெரிந்தும் தன் மீது உயிரே வைத்திருக்கும் அனைவரது அன்பிலும் உள்ளுக்குள் உருகினாள். அவர் (ரங்கநாதன்) ஒருவருக்காக தான் சோகமாக நடமாடி அனைவரையும் கவலைப் படுத்த வேண்டாமென்ற தெளிவான மனநிலையில் கனியும் உறங்கிப் போனாள்.
************
கவி காரினை விரைந்து ஓட்ட அபியும் வருவும் அமைதியாக வெளியே வேடிக்கைப் பார்த்திருந்தனர்.
டிஜே’வின் கை வண்ணத்தில் பலதரப்பட்ட இன்னிசைகள் அதிர… பல வண்ண மின் விளக்குகள் ஒளிர அழகாக காணப்பட்டது அந்த பார்ட்டி ஹால்.
அங்கிருப்போர் தங்களது நண்பர்களுடன் பேசி சிரித்து, ஹாட் அண்ட் கூல் ட்ரிங்க்ஸ் கிளாசினை கையில் பிடித்தவாறு, அங்கு ஒலிக்கும் இசைக்கேற்ப அசைந்தாடி கொண்டிருந்தனர்.
எல்லோரும் உற்சாக மனநிலையிலிருக்க சின்மயி மட்டும் அபியின் வருகையை எதிர் பார்த்திருந்தாள். தன்னை திரும்பி கூட பார்க்காத அபி ஒரு பட்டிக்காட்டை கல்யாணம் செய்து கொண்ட கோபம் அவளுக்கு. அவள் அப்படியென்ன பேரழகு என்று பொறும்பினாள்.
அனைவரது பார்வையும் ஒரு சேர ஒன்றாக வாயிலை நோக்க அபி வருவின் கையினை பிடித்தவாறு நடந்து வந்துக் கொண்டிருந்தான். அவர்களது ஜோடிப் பொருத்தம் அனைவரையும் வியக்கச் செய்தது. பல கண்கள் வருவையையே மொய்த்தன.
இதெல்லாம் புதிது என்பதால் வருவிற்கு சிறு பயம் ஏற்பட்டது. அதனால் தன்னையும் அறியாது அபியின் கையினை இறுக பற்றிக்கொண்டாள். அபி, கவியின் வருகை அறிந்து யாருடனோ பேசிக்கொண்டிருந்த ஷர்மா விரைந்து வந்து வரவேற்றார்.
கவியை அணைத்து விடுத்தவர்.. அபியின் கரம் குலுக்கி… “யூர் வைப் இஸ் சோ பியூட்டிபுள்… லுக்கிங் கார்ஜியஸ்” என்றார். அதனை சிறு வெட்கப் புன்னகையோடு ஏற்றவன் அப்போது தான் கவனித்தான் அங்கிருக்கும் ஆண்களின் கண்கள் தன் மனைவி மீதே படிந்திருப்பதை. அடுத்தவன் மனைவியை எப்படி பார்க்கின்றனர் என சிறு கோபம் எட்டிப் பார்த்தாலும் நாகரிகம் கருதி அமைதியாக இருந்தான்.
அபியிடம் பேசிவிட்டு வருவிடம் திரும்பிய ஷர்மா… “இவ்வளவு நாட்கள் ஆகியும் ஏன் அபி உங்களை எங்கையும் அழைத்து வரலன்னு இப்போ தான்மா தெரியுது” என்றார். அதற்கு வரு புரியாமல் பார்க்க, “இவ்வளவு அழகா மனைவியிருந்தா பார்ப்பவர்கள் கண் பட்டுடுமே” என விளக்கமாகக் கூறிச் சிரித்தார்.
அப்போது அவர்களருகில் வந்த நிவாஸூம்… “சார் உங்களுக்கு ஏற்ற ஜோடி” எனக் கூறி வாழ்த்தினான்.
இருவரது பேச்சிலும், கணவனின் அருகாமையிலுள்ள சிவக்கும் முகத்தினை கடினப்பட்டு யாருக்கும் தெரியாமல் தலை கவிழ்ந்து மறைத்தாள்.
அவளது வெட்கத்தில் சத்தமாக சிரித்த ஷர்மா… “போத் ஆப் யூ ஸ்டன்னிங் மேன்… யுவர் பேர் இஸ் மேட் பார் ஈச் அதர்” என்று அபியிடம் கூறினார்.
அபி உள்ளே நுழைந்ததிலிருந்து சின்மயின் பார்வை முழுவதும் வருவின் மீதே படிந்திருந்தது. இயற்கையாகவே பேரெழிலுடன் இருந்த வருவின் மீது ஏனென்றே தெரியாமல் சின்மயிக்கு ஆத்திரமும் கோபமும் பல மடங்கு அதிகரித்தது. மேலும் அதில் தூபம் போடுவதை போலிருந்தது வருவின் வெட்கமும், அபியின் சிரிப்பும்.
நேராக அபியிடம் வந்தவள் அவனை நெருங்கி ஒட்டி உரசியவாறு நின்று… “இவள் தான் உங்க மனைவியா… என் அளவுக்கு இல்லையென்றாலும் ஏதோ கொஞ்சம் அழகாதான் இருக்கிறாள். அதான் பெண்கள் என்றாலே பத்தடி தள்ளி நிற்கும் நீ இவளுக்கு தாலி கட்டிட்டியா?” எனக் கேலியாகக் கேட்டாள்.
சின்மயின் பேச்சால் வருவின் வெட்கமும், புன்னகையும் இருந்த தடம் தெரியாமல் போனது. அதில் அபியின் மனம் வருந்தியது.
அவளை கன்னம் பழுக்குமளவிற்கு அடிக்க வேண்டும் போலிருந்தது.
அவளது வார்த்தைகளில் கோபம் கொண்டவனாக, பல பேர் முன்னிலையில் அநாகரிகமாக நடக்க விரும்பாமல் தன் கை முஷ்டியை மடக்கினான். அபியின் கோபம் உணர்ந்த கவி அவனுக்கருகில் வந்து நின்று கொண்டான்.
ஷர்மா தான் ஏதோ கூறி அவளை அழைத்துச் சென்றார். அதன் பிறகு மூவரும் வட்ட வடிவ மேஜையை சுற்றி போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
சிறிது நேரத்தில் மீண்டும் வந்த ஷர்மா தனது நெருங்கிய நண்பர் படத்தின் ஹீரோவை பார்க்க வேண்டும் என்றதால் கவியை அழைத்துச் சென்று விட்டார்.
அபியும், வருவும் தனித்து அமர்ந்திருந்தனர். சுற்றி ஆட்கள் இருந்தாலும் அவனுக்கு நேரெதிரே அமர்ந்திருப்பது படப்படப்பாக இருந்தது. அவனுக்கு தன்னவளின் அழகு அந்த மங்கிய வெளிச்சத்தில் போதை ஏற்றியது. அவனுக்கு அது இனிய அவஸ்தையாக இருந்தது. அவளுக்கு முன்பாக தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர போராடியவன் முடியாமல் போகவே தன்னை காக்கும் பொருட்டு, ரெஸ்ட் ரூம் சென்று வருவதாக அவளிடம் கூறி தப்பிச் சென்றான்.
அவளது அழகில் சித்தம் தடுமாறும் தன்னை காக்க எண்ணியவன் வருவை தனித்து விட்டு வந்திருப்பதையும் மற்றவர்களிடமிருந்து தன் மனைவியை ஒரு கணவனாக காக்கும் பொறுப்பினையும் மறந்தான்.
இரைக்காகக் காத்திருக்கும் விலங்கினைப் போன்று… வரு தனிமையில் சிக்க மாட்டாளா என்று எதிர்பார்த்திருந்த சின்மயிக்கு இது தான் சரியான சமயமென்று வருவிற்கு அருகிலுள்ள இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
தன் கணவனின் நினைவில் உழன்று கொண்டிருந்த வருவிற்கு… சின்மயி தன் பக்கத்தில் வந்து அமர்ந்தது தெரியவில்லை.
“ஆள் பார்க்க கொஞ்சம் அழகா இருக்கல, அதான் அபியை மயக்கிட்டப் போல…”
சின்மயின் வார்த்தைகளில் அதிர்ந்து நினைவிற்கு மீண்டவள்.. என்ன ஏதென்று உணரும் முன்பு சின்மயி தான் வந்த வேலையை தொடங்கியிருந்தாள்.
“அபி என்னை தான் திருமணம் செய்து கொள்வதா இருந்தார்… ஆனால், நீ குறுக்க வந்துட்ட.. எல்லாம் உன் அதிர்ஷ்டம். அழகா மட்டும் இருந்தால் போதுமா.. அபிக்கு மனைவியா இருக்கக்கூடிய தகுதி ஏதாவது உனக்கு இருக்கா.. நாலு பேருக்கிட்ட அவருக்கு ஏற்ற மாதிரி உன்னால் நடந்துக்க முடியுமா? அந்த ஷர்மா என்னவோ சொன்னான்னு பட்டிக்காடு மாதிரி நாணி கோணிக்கிட்டு நிக்கிற.. நீ வெள்ளைத்தோலா இருந்தாலும் அவருக்கு நீ கம்மி தான்.. எல்லாம் உனக்கு வந்த வாழ்வு. நான் இவ்வளவு பேசிட்டிருக்கேன் ஒரு வார்த்தை வாய் திறந்து பேசுறீயா.. எல்லாம் நான் இருக்க வேண்டிய இடத்துல இப்போ நீ இருக்கங்கிற திமிரு.. என் அபியை எப்படி என் கிட்ட வரவைக்கணும் தெரியும்” என்றவள் அங்கிருந்து நகர போனவள் மீண்டும் வந்து, “ஆமா நீ ஏதோ கிராமம் சொன்னாங்க உனக்கு இங்கிலீஷாவது பேசத் தெரியுமா?” என நக்கலாகக் கேட்டாள்.
அதற்கு வரு கலங்கிய விழிகளுடன் தெரியும் என்பதை போல் தலையாட்ட,
“எ பார் ஆப்பிள்… பி பார் பால்…” அப்படித்தானே என்றுக் கூறி எள்ளி நகையாடிச் சென்றாள்.
வருவின் சோக முகமும் கண்ணீரும் ஒருவித இன்பத்தை சின்மயிக்கு அளித்தது. எதையோ வென்றுவிட்டதை போன்று மகிழ்ந்து போனாள்.
கண்களில் நீர் கரகரவென வழிய அமர்ந்திருந்த வருவின் மனதெல்லாம்.. “அபிக்கு மனைவியாக இருக்க ஏதேனும் ஒரு தகுதியாவது உனக்கிருக்கா” என்று அவள் கேட்டதே வியாபித்திருந்தது.
சரியாக அந்நேரம் அபி அவளுக்கு உடை வாங்கிக்கொடுத்தது ஞாபகம் வந்து “உண்மையில் தான் அத்தானுக்கு சற்றும் பொருந்தாதவள் தானா” என்று தோன்ற வைத்தது.
‘அவருக்கு நான் ஏற்றவளாக இருக்கிறேன் நினைத்திருந்தா அவர் ஏன் ஸ்டைலான உடை வாங்கி வந்து தரப்போறார்…’ நினைத்தவளது மனம் சுருண்டது. அப்போது அக்கறையாக தெரிந்தது இப்போது வேறு விதமாக தெரிந்தது.
‘இவங்கள அத்தான் கல்யாணம் செய்து கொள்வதா இருந்தாங்கன்னு சொன்னாங்களே அப்போ அன்னைக்கு போட்டோவில் பார்த்தது யார்?” என்ன யோசித்தும் வருவிற்கு ஒன்றும் விளங்கவில்லை. மனதில் பாரமேறிய உணர்வு. குழப்பமாக இருந்தது.
அந்நேரம் ஏதோ உள்ளுணர்வு உந்த திரும்பிப் பார்த்தாள்.. ரெஸ்ட் ரூம் சென்ற அபி தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தான். அபியின் கம்பீர நடையையும், வசீகரத் தோற்றத்தையும்… சிறு தலையசைப்பில் அனைத்தையும் ஏற்கும் மிடுக்கையும் கண்டு, ‘தான் இவருக்கு ஏற்றவள் தானா?’ என்று தவறாக எண்ணினாள்.
இறுதியில் அவளுக்கு புரிந்தது மற்றும் மனம் முழுக்க நிலைத்தது… ‘தான் அத்தானுக்கு ஏற்றவள் இல்லை. அவரை விட்டு நான் விலகினாதான் அவருக்கு ஏற்ற பெண்ணுடன் நிம்மதியா வாழ்வார்’ என்று தவறான சிந்தனை.
அடுத்த கணம் அபியை விட்டு பிரிந்தே ஆக வேண்டுமென்று உறுதியெடுத்தாள். எடுத்ததை அப்போதே செய்துவிடவும் தீர்மானித்தாள்.
தனக்கு மிக அருகில் அபி வந்ததும் அவனை பார்க்காததை போல் தலை குனிந்து அழுத கண்களை சரி செய்து முகத்தினை அழுந்த துடைத்து தன்னை சீர்படுத்திக் கொண்டாள்.
அந்த மங்கிய ஒளியில் அவள் அழுதது உண்மையில் அபிக்கு தெரியவில்லை. ஆனால், அவளது முகத்தை பார்த்ததும் என்னவோ நடந்திருக்கிறதென்று மட்டும் புரிந்து கொண்டான்.
“பேபி…”
நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் அழைக்கும் அழைப்பு.. அவளது இதயத்தில் சில்லென்று இறங்கியது.
அவன் விளிப்பிற்கு விழி மலர்த்தி பார்த்தவளிடம், “என்னாச்சு?” என அக்கறையாகக் கேட்டான்.
“ஒன்றுமில்லை…”
அவள் பதில் சொல்வதற்கு முன்பு,
“அபி சார்” என்ற ஒலியுடன் நிவாஸ் அவர்கள் அருகில் வந்தான்.
என்ன என்பதை போல் ஒற்றை புருவத்தை அபி ஏற்றியிறக்க…
“சார்… அந்த ஹீரோ *****… உங்க கிட்ட பேசணும், அடுத்து அவர் கூட நீங்க ஒரு படம் பண்ணனும்னு போன் பண்ணிட்டே இருக்கார்” என்றான்.
“ரொம்ப டார்ச்சரா” என்ற அபியிடம் “ஆமா சார்” என நிவாஸ் கூறினான்.
“சரி.. இன்னொருமுறை கால் பண்ணா, எங்கிட்டவே கொடு” என்று அபி சொல்லிக்கொண்டிருக்கும் போதே நிவாஸின் மொபைல் தன் இருப்பைத் தெரிவித்தது.
அவர் தான் சாரென்று… மொபைலின் திரையை பார்த்தவாறே ஆன் செய்து அபியிடம் கொடுத்தான் நிவாஸ்.
அதை ஏற்ற அபி வருவிடம், “ஜஸ்ட் எ மினிட்” எனக் கூறி போனில் பேசிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.
நிவாஸ் வந்ததிலிருந்து அபியின் செய்கை மற்றும் பேச்சினை கவனித்த வரு அவனின் கம்பீரம் கலந்த ஆளுமையை கண்டு அதிசயத்தாள்.
இண்டஸ்ட்ரீயில் நெம்பர் ஒன் இடத்திலிருக்கும் பெரிய ஹீரோவின் கால் அது. அவரே அபியிடம் பேசுவதற்கு நாள் கணக்காக காத்திருக்கிறார் என்றால் அத்தான் எவ்வளவு பெரிய ஆளென்று வியந்தாள். அந்த வியப்பே தான் துளியும் தனது அத்தானுக்கு பொருத்தமில்லாதவளென்று அவளுக்கு மேலும் அழுத்தமான எண்ணத்தை பதிய வைத்தது.
போன் பேசிக்கொண்டே மனைவியை திரும்பி பார்த்த அபி… திருவிழாவில் தொலைந்துபோன சிறு பிள்ளை போல் அவள் விழிப்பதை கண்டு ‘என்னோட குட்டி பேபி அநியாயத்துக்கு என்னை கொல்றாளே’ என்று மனதோடு கூறிக்கொண்டான்.
அபியின் பார்வையை உணர்ந்த வரு… தான் எடுத்த முடிவு தளர்வதை உணர்ந்தாள். இனியும் இங்கிருந்தால் சரிவராதென்று அவள் நினைக்கும் சமயம்… கையில் உணவுடன் கவி வந்தமர்ந்தான்.
தங்கையிடம் ஒரு பிளேட் உணவினை வழங்கி சாப்பிடக் கூறினான். அவளோ உணவை மறுத்தவளாக, “வீட்டுக்கு போலாம்மாண்ணா” என்றாள்.
அவளது வாடிய முகத்தை அப்போது தான் கவனித்த கவி… “என்னடா என் மாமாங்காரன் ஏதாவது சொன்னானா?” எனக் கேட்டான்.
அண்ணனின் கேள்விக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்தவள் “தலை வலிக்குது” எனக் கூறி சமாளித்தாள்.
அவள் லேசான தலைவலி எனக் கூறும்போது… அபி அங்கு வர அவன் காதுகளில் அது தெளிவாக விழுந்தது.
பதறியவனாக வருவின் அருகிலமர்ந்து.. “ரொம்ப வலிக்குதா பேபி.. டீ கொண்டு வர சொல்லவா?” என வினவினான்.
தன்னை மனைவியாக பிடிக்கவில்லையென்றாலும் அவன் காட்டும் அக்கறை அவளுக்கு கண்களை கரித்துக் கொண்டு வர செய்தது.
அபியிடம் அதெல்லாம் வேண்டாம் என்றவள் வீட்டிற்கு உடனே செல்ல வேண்டுமென்று அடம் பிடித்தாள்.
அவளது பிடிவாதம் அபிக்கு நெருடலை ஏற்படுத்தியது. சந்தேகத்தையும் விளைவித்தது. இருந்தாலும் வீட்டில் போய் கேட்டுக்கொள்ளலாம் என விட்டுவிட்டான்.
“பார்ட்டி முடியாம நானும் கவியும் கிளம்ப முடியாது” எனக் கூறியவன் நிவாஸை அழைத்து வருவை விட்டு விட்டு வரச் சொன்னான்.
காரிலேறி அமர்ந்தவள் கவியிடம் தலையசைத்து… அபியை கண்கள் வழியே மனதில் நிரப்பினாள்.
நிவாஸ் காரை கிளப்பியதும்… “அண்ணா, கோயம்பேடு பஸ் ஸ்டாப் போங்க” என்றாள். அபியும் நிவாஸிடம் எங்கு என்று கூறாததால் அவனும் சரியென்றான்.
பேருந்து நிலையத்திற்கு உள்ளே சென்ற வரு கள்ளக்குறிச்சி செல்லும் பேருந்தில் அமரும் வரை நிவாஸ் அவளுடனே இருந்தான். பேருந்து கிளம்பியதும் நிவாஸூம் கிளம்பினான்.
பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தவள் இருக்கையில் பின் சாய்ந்து தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். உள்ளுக்குள் புயலே அடித்திக்கொண்டிருந்தது. மூடிய விழிகளுக்குள் அபியின் முகம் தோன்றி கவலை கொள்ளச் செய்தது.
நிவாஸ் ஹோட்டலிற்கு செல்லும் நேரத்தை கணித்தவள் அபிக்கு குறுந்தகவல் ஒன்றினை அனுப்பி வைத்து மொபைலினை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டாள்.
நிவாஸ் ஹோட்டலிற்குள் வந்ததும், “பத்திரமாக கொண்டு போய் விட்டீங்களா?” எனக் கேட்ட அபிக்கு ஆமென்று கூறினான். அப்போது ஷர்மா வந்து படத்தின் டிஸ்டிபியூட்டர் பற்றி பேச அவர்களது கவனம் அவரின் பக்கம் சென்றது.
இரவு 11 மணியை நெருங்கிய வேளையில் பார்ட்டி முடிந்து அனைவரும் கிளம்பிவிட்டனர். இறுதியாக அபி மற்றும் கவி ஷர்மாவிடம் சொல்லி விட்டு செல்லத் தயாராகிய சமயம் அபியின் மொபைல் ஒலித்தது. அதனை ஆன் செய்து பேசியவன் கட் செய்யும் போது தான் கவனித்தான் நோடிபிகேஷனில் வரு அளித்த குறுந்தகவல் ஒளிர்ந்தது.
தன்னவள் தனக்கு அனுப்பிய முதல் மெசேஜ் என இனிய படபடப்புடன் அதனை ஓபன் செய்து படித்தவன் ஆத்திரத்தில் தன் கை முஷ்டியை மடக்கி தொடையில் தட்டிக் கொண்டான்.
அபியின் செயல் கவிக்கு வித்தியாசமாக படவும் என்னவென்று கேட்க தனது கையிலிருந்த மொபைலினை காண்பித்தான் கவி.
“நான் போறேன் அத்தான்… மொத்தமா உங்க வாழ்க்கையிலிருந்து போறேன். உங்க தகுதிக்கு நான் சரியானவள் இல்லை. இனியாவது உங்கள் மனதிற்கு பிடித்த பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழுங்க.”
அதனை படித்ததும் தங்கை மீது கட்டுக்கடங்கா கோபம் கவிக்கு வந்தது.
எல்லாம் சரியாகிவிடுமென்று இருந்த நிலையில் வரு இப்படி செய்தது கவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆறுதலாக கவி அபியின் தோளை தொட அப்போதுதான் சுற்றுப்புறம் புரிய நிவாஸ் என்று அந்த அறையே அதிரும் வகையில் சத்தமாக அழைத்திருந்தான் அபி.
நிவாஸ் ஓடி வந்ததும்..,
“வருவை எங்க விட்டுட்டு வந்த?”
உயிரை நடுங்க வைக்கும் அபியின் குரலில் நிவாஸிற்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது பயத்தில்.
கவி, நிவாஸின் அமைதியில் பொறுமையிழந்து “சொல்லுங்க” என்றான்.
“சார்… அது வந்து… மேடம் தான் கோயம்பேடு பஸ் ஸ்டாப் போக சொன்னாங்க… அவங்க கள்ளக்குறிச்சி பஸ் ஏறி கிளம்பியதும் தான் வந்தேன்” என்றான்.
அதை கேட்டதும் அபி அங்கேயே இருக்கையில் தொப்பென்று அமர்ந்தான்.
நிவாஸ்… பதட்டத்துடன் “சார்” என்க..
“கெட் அவுட் ஆஃப் மை சைட்” என்று அபி கத்தினான்.
நடப்பது எதுவும் புரியவில்லை என்றாலும்.. இப்போது அபிக்கு தனிமை தான் தேவையென்று ஷர்மா அங்கு எஞ்சியிருந்த ஒரு சிலரையும் அனுப்பிவிட்டு அவரும் சென்றுவிட்டார்.
அறையிலிருந்தது அபி, கவி மற்றும் நிவாஸ் மட்டுமே…
கவி நிவாஸையும் கிளம்புமாறு சொல்ல… ஒருவித தயக்கத்துடனே அவனும் வெளியேறினான்.
அபிக்கு முன்பு மண்டியிட்டு அமர்ந்த கவி… என்ன கூறுவதென்று தெரியாமல் அபியின் கைகளை பற்றியவாறு அவனின் முகம் பார்த்தான்.
“எனக்கும் காதலுக்கும் ஒத்தே வராதா கவி… அவளோட காதலை நான் புரிஞ்சிக்கிட்டு நெருங்குற நேரம் ஏன் இப்படி பண்ணா…” அபியின் கண்களில் கண்ணீர் வழிந்ததோ.
கவிக்கு ஆச்சரியமாக இருந்தது.
முதல் காதல் முடிந்த போது கூட அபி கவலை கொண்டான்… பைத்தியம் பிடித்தவன் போல் நடந்து கொண்டான்.. எப்போதும் சோகமாகவே இருந்திருக்கிறான் தான்.. ஆனால், அப்போதெல்லாம் அவன் அழுததில்லை. அவனது சோகம் மற்றும் வலியிலும் கூட அழ கூடாது என்று திடமாக இருந்தான்.
ஆனால், இன்று அவன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவனை அறியாமல் வருவின் மீதான காதலை கவிக்கு உணரச்செய்தது.
அமைதியான அந்த அறையில் காலடிச் சத்தம் கேட்கவும் இருவரும் திரும்பி பார்க்க சின்மயி இவர்களை நோக்கி வந்தாள்.
வந்தவள், “என்ன அபி எங்கே உன் அழகு மனைவி… நான் உன்னை தொட்டதுக்கே அந்த குதி குதிச்சியே. அதுக்கு தான் உனக்கு இந்தத் தண்டனை… என்னையவா கை நீட்டி அடிக்கிற… நல்லா அனுபவி… உன் பொண்டாட்டிகிட்ட எப்படியெல்லாம் பேசுனுமோ அப்படியெல்லாம் பேசி… உனக்கு அவள் தகுதியே இல்லாதவன்னு அவளையே நினைக்க வச்சு எப்படி உன்னைவிட்டு போக வைத்தேன் பார்த்தியா?” என்று திமிராகக் கூறினாள்.
அவளை அடிக்க ஓங்கிய கையினை கீழிறக்கிய அபி… “ச்சீ.. உன்னையெல்லாம் அடிப்பது கூட பாவம்” என்றவன் வேகமாக வெளியேறினான். கவியும் அவனுடன் சென்று காரிலேற விரைந்து வீட்டிற்கு வந்தான்.
அபியின் முகத்திலே அவனது கோபம் தெளிவாக கவிக்கு தெரிந்தது. இப்போது தான் எது பேசினாலும் அது வேறுவிதத்தில் தான் முடியுமென்று நினைத்து அமைதியாக அமர்ந்திருந்தான்.
வீட்டிற்குள் நுழைந்து தனது அறைக்குச் சென்ற அபி… வெறிப்பிடித்தவன் போல் கத்தி, அறையிலிருக்கும் அனைத்துப் பொருட்களையும் தூக்கி விசிறியடித்தான். ஒரு சில விநாடிகளிலே அறை போர்களமாக காட்சியளித்தது.
சத்தம் கேட்டு ஓடிவந்த கவிக்கு… இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் அபியிருந்த நிலையை இன்றையநிலை ஞாபகப்படுத்தியது. எங்கே மீண்டும் அபி பழைய நிலைக்கு சென்றுவிடுவானோ என்ற பயம் தோன்றியது.
கலக்கத்துடனே… சிங்கத்தின் தோற்றத்துடன் நின்றிருந்தவனை தோள் தொட்டு கவி திருப்ப.. நொடியும் தாமதிக்காது.. தாயை தேடும் கன்று போல் விரைந்து கவியை கட்டிக்கொண்டான் அபி.
அச்செயல், அபி எவ்வளவு வேதனைக்கொள்கிறான் என்று அபிக்கு உணர்த்தியது.
அபியை அமைதியாக்கும் பொருட்டு, மெல்ல அவனை கட்டிலில் படுக்க வைத்து அவனருகிலமர்ந்த கவி அபியின் முதுகில் ஆதரவாக தட்டிக்கொடுத்தான்.
மன உலைச்சலின் காரணமாக உடல் சோர்வடைய கவியின் அரவணைப்பில் அபி தூக்கத்தை தழுவினான். சிறிது நேரத்தில் அபியின் ஆழ்ந்த உறக்கத்தை உறுதி செய்த கவி அவனது கைக்குள் அடங்கியிருக்கும் தன் கையினை மெதுவாக விடுவிக்க.. அதில் மெல்ல அசைந்த அபி… “ஏன் டி நீயும் என்னை விட்டு போய் சாகடிக்கிற.. காயம்பட்ட இடம் திரும்ப காயப்பட்டு அதிகமா வலிக்குது பேபி” என்று உறக்கத்திலே உலறினான்.
அதனைக்கேட்ட கவி அவனது காதலில் கற்சிலையானான்.
எவ்வளவு கம்பீரமான திடமான ஆண்மகனையும் கூட காதல் அழ வைத்துவிடுமென கவி அப்போது நன்கு புரிந்துகொண்டான். தானும் காதலுக்காக வருந்திக் கொண்டிருப்பவன் தான் என்பதை அப்போது கவி ஏனோ மறந்து போனான்.
தானும் காதலுக்காக வருந்திக் கொண்டிருப்பவன் தான் என்பதை அப்போது கவி ஏனோ மறந்து போனான்.
தன் ஒற்றை பார்வையிலே அனைத்தையும் நடத்திக்காட்டும் அபி இன்று காதலுக்காக சிறு பிள்ளையென அழுவது கவிக்கு ஆச்சரியமாக இல்லையென்றாலும் வலித்தது. ஏற்கனவே ஒரு வலியிலிருந்து மீண்டு வர அபி துடித்த துடிப்பை நேரிலிருந்து பார்த்தவனாயிற்றே, மீண்டும் அதேபோன்ற இன்னொரு வலியை அவன் எப்படி ஏற்பானென்று கவியின் உள்ளம் மருகியது.
தூக்கத்தில் விடாது பேபி என்று ஒலித்த அபியின் குரலில் அவ்வளவு வருத்தமிருந்தது. இனி, தான்… தான் ஏதாவது செய்ய வேண்டுமென முடிவெடுத்தவனாக கீழே வந்த கவி, உறங்கிக்கொண்டிருந்த ராமு அண்ணாவை எழுப்பி, “ஒரு இரண்டு நாளிற்கு அபியை கூடவே இருந்து பார்த்துக்கோங்க.. நான் ஊருக்கு போய் வர்றேன்” என்றவன் அந்த நள்ளிரவு நேரத்திலும் தன் தோழனாகிய மாமனின் வாழ்வினை சரிசெய்திடும் நோக்கத்துடன் காரில் விரைந்தான்.
அபியின் வாழ்வினை சரிசெய்யும் நோக்கில் செல்பவன் தனது வாழ்வில் எதிர்பாராத திருப்பம் ஒன்று தனக்காக காத்திருப்பதை அறியவில்லை.
அபியின் அழுகையையே தாங்கிக்கொள்ளாதவன்.. தன் மனம் கவர்ந்தவளின் உயிர் பிரியும் தருணத்தை தாங்காமல் தான் கதறித் துடிக்கப் போகிறோம் என்பது தெரியாமல் கிராமத்தை நோக்கி பயணமானான்.
துளிர்விடும்🌱.