சருகு 🍂 24
இரவு ஒன்பது மணியளவில் தன் பயணத்தை தொடர்ந்த வரு… நள்ளிரவிற்கு மேல் கள்ளக்குறிச்சியினை நெருங்க அரை மணிநேரம் இருக்கும் தருணத்தில் தன்னுடைய மாமாவிற்கு அழைத்தாள்.
இருக்கையில் கண் மூடி அமர்ந்திருந்தாளே தவிர ஒரு நொடி கூட கண்ணயரவே இல்லை. தன் உயிரே பிரிவது போன்ற வலி இதயத்தில் படர்வதை உணர்ந்தாள்.
வீட்டிற்கு சென்றால் மனம் கொஞ்சம் அமைதியாகும் என நினைத்தவள், எங்கு வந்திருக்கிறோம் என்று ஜன்னல் வழியாக பார்த்தாள். கள்ளக்குறிச்சி செல்ல இன்னும் அரை மணிநேரமாகுமென்று யூகித்து மொபைலில் மணியை பார்த்தாள் அது இரண்டு என்று காட்டியது. இந்நேரத்தில் கிராமத்திற்கு செல்ல பேருந்தில்லை.. ஆட்டோவில் தனியாக செல்லவும் முடியாது என்று யோசித்தவள் வெங்கட்டிற்கு அழைத்திருந்தாள்.
தூக்கத்திலிருந்தவர் இறுதி ரிங்கில் காலினை அட்டெண்ட் செய்தார். உறக்கத்திலிருந்ததால் திரையில் ஒளிர்ந்த பெயரை பார்க்காமல் அழைப்பினை ஏற்று மொபைலினை காதில் வைத்திருந்தார்.
“மாமா…”
அந்தப்பக்கம் கேட்ட குரலில்… தூக்கம் பறந்தோட, “என்னடா… இந்தநேரத்தில்… அபி எதாவது பிரச்சினை செய்தானா?”
அவருடைய வார்த்தையிலே தெரிந்தது எவ்வளவு கலக்கம் கொண்டுள்ளார் என்று,
“மாமா… இன்னும் அரை மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி வந்துடுவேன்.. நீங்க கொஞ்சம் வந்து என்னை கூட்டிட்டு போறீங்களா?”
அவர் கேட்டதற்கு பதில் அளிப்பதை தவிர்த்து தன் வருகையை அவருக்கு தெரிவித்தாள்.
“சரிம்மா… நீ வருவதற்குள் நான் வந்துடுவேன்” என்றுக் கூறியவர்.. காரில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றார்.
அங்கு என்ன நடந்திருக்குமென்று அவரால் கணிக்க முடியவில்லை. ஒரு கையால் காரினை செலுத்திக்கொண்டே கவிக்கு அழைத்து என்னவென்று கேட்டார்.
புயல் வேகத்தில் காரினை செலுத்திக்கொண்டிருந்த கவி, வேகத்தை குறைத்து தன் மாவிடமிருந்து வந்த அழைப்பினை ஏற்றான்.
அவரது காலென்றதுமே தன் தங்கை பத்திரமாக சென்று விட்டாளென்ற நிம்மதியில் கொஞ்சம் ஆசுவாசமாகினான்.
அவர் அங்கு என்ன நடந்தது என்று கேட்டதற்கு, “மாமா நான் நேரில் வந்து சொல்றேன். இப்போ அங்கதான் வந்துடிருக்கேன்” என்றவன் அழைப்பத் துண்டித்து கவனத்தை சாலையில் பதித்தான்.
வெங்கட் பேருந்து நிலையத்திற்கு சென்று பத்து நிமிடம் கழித்தே வருவின் பேருந்து வந்தது.
அதிலிருந்து இறங்கியவளின் தோற்றத்தைக் கண்டு பதறிப்போனார்.
கேசம் கலைந்து, கண்ணீரில் கரைந்த கண்கள், அழுததில் வீங்கிய முகம்… என்று பார்க்கவே பரிதாபமாகக் காட்சியளித்தாள்.
தனது மாமாவை பார்த்ததும் சுற்றுப்புறம் மறந்து ஓடிச்சென்று அவரது நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் வடித்தாள். பரிவுடன் அவளது தலையை வருடிக்கொடுத்தவர் ஒன்றும் கேட்காமல் அழைத்து வந்தார்.
வீட்டிற்கு வந்ததும் கலாவை எழுப்பி வருவை சாப்பிட வைக்க சொன்னார். இந்நேரத்தில் தனியாக வந்திருக்கும் தன்னுடைய செல்ல மருமகளைக் கண்டு பதறிப்போனார் கலா.. என்ன நடந்ததென்று கேட்க வாய்திறந்த கலாவை பார்வையாலே தடுத்தார் வெங்கட்.
கலா எவ்வளவோ வற்புறுத்தியும் ஒரு வாய் கூட உண்ண மறுத்துவிட்டாள்.
சரி தூங்கியெழுந்தால் சரியாகிவிடுமென்று, “நீ கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோம்மா” எனக் கூறினார்.
வருவோ தயக்கத்துடன், “அத்தை நான் உங்களோட படுத்துக்கவா?” என்று கேட்டாள். அவளது கசங்கியத் தோற்றமே விஷயம் பெருசென்று சொல்லாமல் சொல்லியது. அறைக்கு அழைத்து வந்து தன் மடியில் படுக்க வைத்தவர் ஆறுதலாக அரவணைத்துக்கொண்டார்.
அறையிலே சாய்வு நாற்காலியில் அமர்ந்து வருவையே பார்த்துக்கொண்டிருந்த வெங்கட்டிற்கு மனம் கணத்துப் போனது.
தான் பெற்றெடுக்காத இரண்டு மகள்களுக்குமே வாழ்வு என்ன வைத்துக் காத்திருக்கிறதென்று தெரியாமல் வேதனை கொண்டார். வரு மற்றும் கனி இருவருக்கும் என்ன கஷ்டமென்று தெரியாமல் எப்படி எங்கிருந்து சரிசெய்வதென்று குழம்பினார்.
குழப்பத்துடனே மெல்ல கண் உறங்கினார்.
வழக்கம் போல் அதிகாலையில் ரங்கநாதன் வயலிற்கு கிளம்பிவிட்டார்.
வாசல் தெளித்து கோலம் போட்டு வீட்டுக்குள் நுழைந்த கனியிடம் டீ அடங்கிய சிறிய தூக்கு ஒன்றினை அளித்த ராதிகா, “வெள்ளனவே உன் மாமா வயலுக்கு போயிட்டாரு… செத்த இந்த டீ’யை குடுத்துட்டு வாம்மா” என்றார்.
அவரிடம் என்ன சொல்லி மறுப்புத் தெரிவிப்பதென்று தெரியாமல் தூக்கினை வாங்கிச் சென்றாள்.
கனி வீட்டை விட்டு வெளியேறவும் கவியின் கார் வாசலில் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. நான்கு மணிநேரத்திலே இங்கு வந்து சேர்ந்திருந்தான். இவ்வளவு நேரம் சமன்பட்டிருந்த மனம் திடீரென அதிவேகமாக துடிப்பதை போன்று உணர்ந்தான். ஏனென்றே புரியாமல் உள்ளக்குள் நெருடுவதை அறிந்தான்.
வீட்ற்குள் கவி வரும் போது எதிரே தென்பட்ட தனது தாத்தாவிடம், “வரு எங்க?” எனக் கேட்டான்.
“வரு இங்க எப்போ வந்தா?” என்ற கேள்வியிலே தங்கை வந்தது இங்கு இன்னும் யாருக்கும் தெரியாதென உணர்ந்தான்.
“வரு உங்களைலாம் பார்க்கணும் போல் இருக்கு சொன்னா. அதான் கூட்டி வந்தேன். நான் காரினை நிறுத்திவிட்டு வருவதற்குள் உள்ளே வந்தாள், ஆளை காணோமேன்னு கேட்டேன்” என்று கூறு சமாளித்தான்.
அவனது சமாளிப்பை கேட்டுக்கொண்டிருந்த கலா… “வாப்பா.. வந்ததும் உன் தங்கச்சி தூக்கம் வருதுன்னு எங்க அறையிலே படுத்துகிட்டா, தூங்கி எழுந்து எல்லோரையும் பார்க்கிறேன் சொன்னா” எனக் கலா கூறி , கோபாலனின் நம்பாத சந்தேகப் பார்வையை மேலும் சமாளித்தார்.
‘இதுங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து நம்மகிட்ட இருந்து எதையோ மறைக்குதுங்க’ என்று நினைத்தவர்… பூனைக்குட்டி வெளியில் வந்து தானே ஆகணுமென்று அமைதியாக சென்றுவிட்டார்.
பெரியவர் சென்றதும் கவியின் அருகில் வந்த கலா… “வரு உள்ள தான் தூங்குறா.. அந்த ராத்திரி நேரத்தில் அவ கிளம்பி வர அளவுக்கு அங்கு என்னடா நடந்துச்சு” என வருத்தத்துடன் கேட்டார்.
“எல்லாம் அப்புறம் சொல்றேன்.. மாமா எங்க?” என எதிர் கேள்வி கேட்டான் கவி.
“அவரு இப்போ தான் எழுந்தாரு… மனசு பாரமா இருக்கு செத்த காத்தாட நடந்துட்டு வரேன்னு வயல் பக்கமா போயிருக்காரு” என்றது தான்.. “நான் போயி மாமாவை பார்த்திட்டு வரேன்” என கிளம்பி விட்டான்.
கவி வெளியேறுவதைக் கண்ட லலிதா, “என்ன அண்ணி கவி மாதிரி தெரியுது.. எப்போ வந்தான்.. எதுக்கு இப்படி ஓடுறான்” என்க.. பெரியவரிடம் கூறிய அதே காரணத்தை லலிதாவிடமும் கூறினார் கலா.
வரு வந்திருக்கிறாள் என்றதும்.. “அவளுக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சுட்டு வருவை எழுப்பலாம் அண்ணி” என்று சந்தோஷத்துடன் அடுக்கலைக்குள் புகுந்தார் லலிதா.
***********
கட்டிலில் நன்கு உறங்கிக்கொண்டிருந்த அபி… தூரத்தில் ஒலித்த பாடலின் சத்தத்தில் கண் விழித்தான்.
“மாற்றங்கள் அதையும்
தூரங்கள் இதையும்
என் சிறு இதயம் பழகுதடி
நீ அற்ற இரவு
வீட்டுக்குள் துறவு
ஏன் இந்த உறவு விலகுதடி
இது நிலை இல்லை
வெறும் மழை என்றோ
இது மழை இல்லை
சிறு மழை என்றோ
இந்த நொடிகள் கனவே எனவே உறவே
சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு
போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரதியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே
போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரத்தியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே
போ உறவே…”
பாடலின் ஒலியில் எழுந்து அமர்ந்தவன்… அமைதியாக அதன் வரிகளில் மூழ்கியிருக்க.. பாடலின் இறுதி வார்த்தைகளில் வேகமாக எழுந்து அறையை விட்டு கீழிறங்கி வந்தான்.
தொலைக்காட்சியில் பாடல் ஓடிக்கொண்டிருக்க… காயம்பட்ட அவனது மனதின் ரணங்கள் அதிகமாகியது. நெஞ்சத்தை பிழிவதை போல் உணர்ந்தவன், அருகிலிருந்த பிளவர் வாஷினை தூக்கி அடிக்க.. அது டிவி’யின் திரையை சரியாக குறிபார்த்து நொறுக்கியது.
கண்ணாடி உடையும் சத்தத்தில், கிச்சனிலிருந்து ஓடி வந்த ராமு… “வீடு அமைதியா என்னவோ போல் இருந்துச்சு தம்பி அதனால தான் டிவி போட்டேன்” என்று தவறு செய்த பாவனையில் அவன் கேட்காததற்கு பதில் கூறினார்.
அவரின் பதிலை கண்டுகொள்ளாதவன், “கவி எங்கே?” என்றான்.
“தம்பி அவரு ராத்திரியே ஊருக்கு போறேன்னு உங்க கிட்ட சொல்ல சொல்லிட்டு போயிட்டாருங்க” என்க,
கடலைத் தாண்டிட துடிக்கும் அலையை போல் அபியின் கோபமும் எல்லையை தாண்டியது.
கவிக்கு அழைத்து… “என் காதலை புரிஞ்சிக்காம எவளோ ஒருத்தி சொன்னதை கேட்டு ஒன்னுமில்லாத விஷயத்துக்காக என்னை விட்டு போன அவ எனக்கு வேண்டாம். அவளை, நீ மறுபடியும் இங்க கூட்டிட்டு வந்த நான் மனுஷனாக இருக்க மாட்டேன்” என சிங்கத்தின் சீற்றத்தில் கர்ஜித்தவன் கவியின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பினை துண்டித்தான்.
தனது காதலை அவள் புரிந்துகொள்ளவில்லையென்று கோபம் கொள்ளும் நான்… இதுவரை என்னுடைய காதலை அவளிடம் தெரிவிக்கவேயில்லை என்பதை அபி உணரவேயில்லை.
சொல்லிய காதலெல்லாம் சேர்கின்றாதா என்றால் தெரியாது. ஆனால், சொல்லாத காதல் யாவும் நிச்சயம் சேர்வதில்லை. அவை திறக்கப்படாத புத்தகங்கள் போன்றவை. அபியும் திறக்கப்படாத புத்தகம் தான். அதனை வருவின் இதயம் கொண்டு தான் திறக்க வேண்டும். ஏற்கனவே மரித்துப் போன இதயத்தை மீண்டும் மரிக்கச் செய்த வரு அபியின் காதலை உணரும் நொடியும் தொலைவில் இல்லை. ஆனால், வரு திரும்பி வருகையில் அபி ஏற்ப்பானா அல்லது வருவைத் தேடி அபி செல்வானா, எல்லாம் விதியிடமே.
கவிக்கு என்ன செய்ய வேண்டுமென்றே புரியவில்லை… உடனடியா அபியின் வாழ்வை சரிசெய்ய வேண்டும், இல்லையென்றால் அபி மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிடுவான், தனது மாமாவிடம் கூறினால் ஒரு வழி கிடைக்குமென்பதால் தான் வந்ததும் வெங்கட்டை தேடிச்சென்றான்.
ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தவரை கண்டுபிடித்து சென்ற கவி அவரிடம் பேசும் சமயம் அபி கால் செய்திருந்தான். அபி பேசியதை வெங்கட்டும் கேட்க, கவி சொல்லாமலே இருவருக்குள்ளும் என்ன பிரச்சினை என்று அவரால் யூகிக்க முடிந்தது.
அபி கட் செய்ததும் பேச வார்த்தைகளற்று கவி நின்றிருக்க.. வெங்கட் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
“என்ன மாமா சிரிச்சிட்டு இருக்கீங்க.. எல்லாம் சரியாகும் நினைக்கும் போது வரு இப்படி பண்ணது உங்களுக்கு தப்பா தெரியலையா?” என்று வெங்கட்டிடம் கோபமுற்றான் கவி.
“இவ்வளவு நாள் அபி அவனுடைய முதல் காதலை மறந்து நம்ம வருவை சீக்கிரம் ஏத்துக்கணும்ன்னு ஆசை பட்டோம்.. அது நடந்திருச்சுல.. அதுக்குத்தான் இந்த சிரிப்பு. அபியே மாறிட்டான், நம்ம வரு மனசை மாத்துவதா கஷ்டம்.. சரி பண்ணிடலாம் வாடா” என்று நம்பிக்கையாகப் பேசி வெங்கட் கவியை அழைத்துக் கொண்டு வயல் பக்கம் போனார்.
இருவரும் பேசிக்கொண்டே கிணற்றடியிலிருந்து கரும்புத் தோட்டம் அருகில் செல்லும் போது மனிதர்களின் சலசலப்பு சத்தம் கேட்டது. அருகே நெருங்க நெருங்க ஏதோ சண்டை நடப்பதைப் போன்று சத்தம் தாறுமாறாகக் கேட்க, இருவரும் அந்தப்பக்கத்தை நோக்கி ஓடினர்.
அங்கு, நான்கு ஐந்து தடியர்களை ரங்கநாதன் அடி வெளுத்துக்கொண்டிருந்தார். சிறு இடைவெளியில் பயத்துடன் கனி நின்றிருந்தாள்.
தனக்கு வர வேண்டிய பல கோடி பணம் கைவிட்டு போனதற்கு முதல் காரணம் அந்த ரங்கநாதன் புத்திசாலித்தனமாக கோர்ட்டில் ஸ்டே வாங்கியதுதானென்று அவர் மீது கொலைவெறியிலிருந்த சாமிக்கண்ணு அவரை போட்டு தள்ளுவதற்கு சமயம் பார்த்துக் காத்திருந்தான்.
தினமும் அதிகாலையில் ரங்கநாதன் தனியாக வயலிற்கு வருவதை ஆட்கள் வைத்து கண்டறிந்த சாமிக்கண்ணு இன்று ரங்கநாதனை கொலை செய்வதற்கு தனது ஆட்களை அனுப்பியிருந்தான்.
அதன்படி கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த தடியர்கள்.. ரங்கநாதன் கரும்புத் தோட்டத்தை ஒட்டி அமைந்துள்ள அம்மன் கோவிலிற்கு அருகில் வரும் போது நீண்ட அரிவாள், கத்தியுடன் வெளிப்பட்டனர்.
அவர் என்ன என்று உணரும் முன்பு ஒருவன் கத்தியை அவரை நோக்கி வீசினான்.
கோவிலை சுற்றி சிறிதளவு நிலப்பரப்பு இருக்கவே கீழே குனிந்து சுதாரித்தார்.
ரங்கநாதனுக்கு தேநீர் கொண்டு வந்த கனி மாந்தோப்பு, தென்னந்தோப்பு என்று பல இடங்களில் அவரை தேடிவிட்டு இறுதியாக கரும்புத் தோட்டத்திற்கு வந்தவள் அங்கு நடந்துகொண்டிருந்த சண்டையை பார்த்து அதிர்ச்சியானாள்.
மீண்டும் அவர்கள் தன்னை தாக்குவதற்குள் அருகிலிருந்த கட்டையினை எடுத்து தாக்க ஆரம்பித்திருந்தார். அச்சமயம் தான் வெங்கட் கவி சத்தம் கேட்டு அவர்களுக்கு வலது பக்கமாக விரைந்து ஓடி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, ரங்கநாதனால் அடிப்பட்டு தரையில் உருண்டு கொண்டிருந்த ஒருவன் வயல் சேற்றினை கைகளால் அள்ளி அவர் முகத்தின் மீது வீசினான்.
கண்களில் சேறு பட்டதால் அவர் நிலைத் தடுமாற, அதுதான் சமயமென்று இரு தடியர்கள் இரண்டு பக்கமும் அவரை பிடித்துக்கொள்ள மற்ற இரு தடியர்கள் அவரை குத்துவதற்காக கத்தியை கொண்டு சென்றனர்.
நிலைமையின் வீரியம் புரிந்து கவி, வெங்கட் முயன்று வேகமாக ஓடி வர,
ஒரு ஆள் இடைவெளியில் இரு தடியர்களும் கையினை பின்னுக்கு இழுத்து அதிக விசையுடன் ரங்கநாதனின் வயிற்றை குறி பார்த்து தாக்க, மாமா என்ற கூவலுடன் கனி இடையில் புகுந்து இரண்டு கத்தி குத்தினையும் தான் வாங்கினாள்.
அதனைக் கண்ட கவி.. அவ்விடமே அதிர கனியென்று கத்தினான்.
எவ்வளவு தான் முயன்றும் தூரத்திலிருந்ததால் கவி, வெங்கட்டால் வரப்பின் மீது அதி வேகமாக ஓடிவர இயலவில்லை. அவர்கள் கிட்ட நெருங்கிய சமயம் நிலைமை கை மீறியிருந்தது.
கனியின் வயிற்றில் தாங்கள் வைத்திருந்த கத்தி அதிக அழுத்தத்துடன் ஆழமாக இறங்கியதும் கண் இமைக்கும் நேரத்தில் அந்த தடியர்கள் காணாமல் போயிருந்தனர்.
கனி குறுக்கே வருவாளென்று சற்றும் எதிர்பாராத ரங்கநாதன் அதிர்ந்தார். கீழே நிலத்தில் சரிந்தவளை தன் மடி தாங்கினார். அவர் மடி தாங்கியதே.. தன்னை ஏற்றுக்கொண்டதாக எண்ணி கனி அந்நிலையிலும் மகிழ்ந்தாள்.
“மாமா… என்மேல கோபம் போயிடுச்சா?”
அந்த வலியிலும் தன் அன்பை பெற ஏங்குபவளை நினைத்து ரங்கநாதனின் மனம் முதல் முறையாக அவளுக்காக துடித்தது.
“எதுவும் பேசாதம்மா…” என்று நா தழுதழுக்க அவர் கூறும் போது அவர்கள் அருகில் வந்திருந்த கவி அவளது கன்னம் தட்டி, “ஏன்டி இப்படி பண்ண, குறுக்க போறதுக்கு முன்னாடி நான் உன் கண்ணுக்கு நினைவில் வரலயா?” என்று கதறினான்.
அதற்கு கனி, “எனக்கு அப்போ மாமா உயிர் மட்டும் தான் முக்கியம்ன்னு தோணுச்சு” என்று திக்கி திணறி கூறினாள்.
அதில் ரங்கநாதனின் திமிர் மொத்தமும் அடங்கியது. இப்படிப்பட்ட பெண்ணையா இவ்வளவு காலம் தள்ளி வைத்தேனென்று வருந்தினார்.
கண்களில் நீர் வழிய தன் மகளினருகில் அமர்ந்த வெங்கட்.. “அம்மாடி” என்றழைக்க அவளால் “அப்பா” என்று மட்டுமே கூற முடிந்தது.
மூன்று ஆண்களும் தாங்கள் ஆண் என்பதை மறந்து அவளுக்காக கண்ணீர் சிந்தினர்.
கவி தான் சுயம் பெற்று மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டுமென்பது புரிய அவளை தன் கைகளில் தூக்கினான்.
மூச்சு விட காற்றுக்காக அவளின் மூச்சுக்குழல் திணற, காட்சிகள் யாவும் அவள் பார்வையில் மங்கலாகின.
தனது நிலை அடுத்து என்னவென்று உணர்ந்ததாலோ, கவியிடம் “மாமா… எனக்கொரு ஆசை. இதை என் கடைசி ஆசைன்னு கூட வச்சிக்கோ” என அவள் கூற..
“ஏன் டி… இப்படியெல்லாம் பேசுற, உனக்கு ஒன்னுமில்லை.. நான் எதுவுமாக விடமாட்டேன்” என்று கதறியவனின் வாயினை தன் கரம் கொண்டு மூடியவள்,
“எனக்கு உன் கையால் தாலி கட்டிக்கணும் மாமா… நான் சாகும் போது உன் மனைவியா சாகணும்” என்றாள்.
“நீ சாகமாட்டடி.. ஹாஸ்பிடல்,”
அவன் சொல்லும் போது இடை புகுந்தவள்.. “ஹாஸ்பிடல் போனாலும் நான் பிழைப்பது கஷ்டம் தான், என்னோட நிலை எனக்கே தெரியுது. தாலி கட்டு மாமா” என்று வலியில் முணகிக்கொண்டே கெஞ்சினாள்.
அவன் விழிநீரோடு அமைதியாக இருக்க, அவளோ அன்று தான் பேசியதற்கு இந்நிலையில் மன்னிப்பு வேண்டினாள்.
“அன்னைக்கு உன்னை அப்படி பேசுனதுக்கு என்னை மன்னிச்சிடு மாமா…!!”
உடல் முழுக்க ரத்தத்தில் குளித்திருக்க, அவளிருந்த நிலையில் மன்னிப்பு கேட்டவளை பார்த்து அவன் இதயம் இரண்டாக பிளந்தது.
அழுதுகொண்டே.. “நான் அதெல்லாம் எப்பவோ மறந்துட்டம்மா. இப்போ வா ஹாஸ்பிடல் போகலாம்” என்றவனிடம், “மாமா தாலி” என்றாள்.
என்ன செய்வதென்று தவித்தவனின் கண் முன்னே ரங்கநாதன் தாலியினை நீட்டினார்.
கவி தன் தந்தையை விழியுயர்த்தி பார்க்க.. “என்னப்பா.. இது இந்த அம்மனோட தாலிதான்” என்று வேப்பமரத்திற்கு அடியிலிருக்கும் தெய்வ சிலையை சுட்டிக்காட்டியவர், “இந்த அம்மன் முன்னாடியே கனி கழுத்தில் தாலி கட்டுப்பா” என்று கட்டளையாகக் கூறினார். வெங்கட்டும் “கட்டுப்பா” என்க,
அதற்குமேல் ஒன்றும் யோசிக்காதவன் தன்னவளின் ரத்தம் படிந்த கரங்களினாலே தன் மனம் நிறைந்தவளுக்கு அழும் விழிகளுடன் அவளது வலி நிறைந்த விழிகளை பார்த்தவாறு தங்களது தந்தையர் முன், இயற்கையை சாட்சியாக வைத்து மூன்று முடிச்சிட்டான்.
மனம் நிறைந்த சந்தோஷத்துடன் தனது கணவனை பார்த்து புன்னகை பூத்தவள், கண்கள் சொருகி, தலை சரிய, அவனின் நெஞ்சத்தில் சரிந்தாள்.
கனியென்று கதறியவனை தேற்றி அவளை மருத்துவமனை கொண்டு சென்றனர் எல்லாம் முடிந்த நிலையில்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கனிக்கு துரிதமாக சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருந்தது.
வெங்கட்டிற்கு ரங்கநாதன் ஆறுதல் கூறிக்கொண்டிருக்க.. கவி பிரம்மை பிடித்தவன் போல் கனிக்கு சிகிச்சை நடைபெறும் அறை வாயிலின் முன்பு அமர்ந்திருந்தான். அவன் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது.
வீட்டிற்கு தகவல் அளிக்க அனைவரும் கதறிக்கொண்டு மருத்துவமனை வந்தனர். கலா தலையில் அடித்துக்கொண்டு அழ, ராதிகாவும் லலிதாவும் தங்களது சோகத்தினை மறைத்து அவருக்கு ஆறுதல் கூறினர்.
“இந்த வயதில் தான் நன்றாக இருக்கும்போது வாழ வேண்டிய வயதில் உயிருக்கு இப்படி போராடிக் கொண்டிருக்கின்றாளே.. ஆண்டவா என் உயிரைக் கூட எடுத்துக்க என் பேத்தி உயிரை காப்பாத்து” என இறைவனிடம் முறையிட்டுக்கொண்டிருந்தார் பெரியவர்.
வருவும், விஷ்ணுவும் கவியின் இரு புறம் அமர்ந்து அவனது கரம் பற்றி அழுது கரைந்தனர்.
ஓரளவிற்கு அனைவரும் தேறி கனி உயிர் பிழைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்க, கவி மட்டும் மருத்துவமனை வந்த போது எப்படி அமர்ந்தானோ அதே நிலையிலேயே இருந்தான். எவ்வளவோ கூறியும் தண்ணீர் கூட குடிக்க மறுத்துவிட்டான்.
இப்படியே சென்றால் கவியையும் மருத்துவ மனையில் சேர்க்கும் நிலை வந்துவிடுமென அனைவரும் பயந்தனர். அபி வந்தால் மட்டுமே கவியை சகஜமாக்க முடியுமென்று தெரிந்த வெங்கட் அபிக்கு அழைப்பு விடுக்க ரிங் போய்கொண்டிருந்ததே தவிர அவன் எடுக்கவில்லை.
பத்து முறைக்கு மேல் அழைத்தும் அபி எடுக்கவில்லை.
காலை ராமுவிடம் கத்திவிட்டு கோபமாக வெளியேறியவன் நேரே சென்றது கடற்கரைக்கு தான்,
அபியின் உள்ளம் அந்த கடலுக்கு இணையாக, ஆர்ப்பரித்தது.
காதல் என்றாலே வலிகள் நிறைந்தவை தானோ…
காதலித்துப் பார் கையெழுத்து அழகாகும் என்று சொல்லுபவர்களுக்கு காதலிப்பவனின் தலையெழுத்தே காணாமல் போய்விடுவது தெரிவதில்லை.
முதல் காதல் சுனாமியாய் சுழன்றது என்றால்… இரண்டாவது காதல் எரிமலை குழம்பாய் தகிக்கச் செய்கிறதே என்று மருகினான்.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை… “வலியில்லாமல் காதலில்லை”, படத்தில் மட்டும் தான் காதலித்தவனையே திருமணம் செய்து கொள்வது, அவனுக்காக அனைத்தும் தியாகம் செய்து போராடுவதெல்லாம்…
‘ச்சே… இந்த பொண்ணுங்க எல்லாம் பன்’ணுங்கடா.. எப்போ, சாஃப்டா இருப்பாளுங்க… எப்போ, காஞ்சி போய் வரட்டி ஆவளுங்கன்னு அவளுங்களுக்கே தெரியாது.’
தான் ஏன் இப்படியெல்லாம் நினைக்கின்றேன் என்று கூட அவனுக்கு புரியவில்லை. முதல் காதல் போன போது கூட அவன் அனைத்தும் ஒடுங்கி ஒதுங்கி இருந்தானே தவிர இப்படி புலம்பவில்லை, அழுததில்லை.
கடற்கரை மணலில் பரந்த வான்வெளியை வெறித்திருந்தவன்… சூரியனின் சூட்டில் தான் இவ்வுலகம் வந்தான்.
நிதானமாக எழுந்தவன் தனது காரினை நோக்கிச் சென்றான். காரின் உள்ளே அமர்ந்ததும் மொபைலினை எடுத்து பார்த்தான். அதில் பத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் அவனது தந்தையிடமிருந்து வந்திருந்தது. எப்படியும் மருமகளுக்காக பேச தான் இருக்குமென்று திரும்பி அவரை அழைக்கவில்லை.
புயல் போல் கடற்கரைக்கு வந்தவன் , புயலுக்கு பின்னே அமைதி என்பதற்கேற்ப அனைத்தும் வெறுத்தவனாக மிகவும் மெதுவாக வீட்டிற்கு வந்தான்.
அபி உள்ளே நுழைந்ததும் எங்கும் வருவின் பிம்பமே. எதையும் நினைவுபடுத்தும் சக்தியற்று சோபாவில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான்.
“தம்பி…”
ராமுவின் அழைப்பில் கண் திறந்தவன், அவரது முகத்தை பார்க்க முடியாதவனாக.. காலையில் நடந்துகொண்டதற்கு மன்னிப்பு வேண்டினான். அதில் பதறியவர், “அதெல்லாம் வேண்டாம் தம்பி” என்று கூறிவிட்டு தயங்கி நின்றார்.
என்ன என்பதைப்போன்று அபி பார்க்க…
“அது வந்து தம்பி… ஐயா உங்களுக்கு நிறைய போன் பண்ணாராம் நீங்க எடுக்கலைன்னு இங்க வீட்டு போனுக்கு பண்ணியிருந்தாங்க.. ஏதோ அவசரம்ன்னு உங்களை போன் பண்ண சொன்னாங்க” என்றுவிட்டு நகர்ந்தார்.
அப்படியென்ன அவசரமென்று அபி யோசித்துக்கொண்டிருக்கும் போது அவனது மொபைல் ஒலியெழுப்பியது.
அழைத்தது நிவாஸ்….
ஆன் செய்து ஹலோ என்க,
“சார்…. வெங்கட் சார் கால் பண்ணியிருந்தார். உங்க தங்கை, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹாஸ்பிட்டலில் சேர்த்திருப்பதா சொன்னாங்க” என்று பதட்டத்துடன் தெரிவித்தான்.
“வாட்?”
நிவாஸின் செய்தியில் அதிர்ந்த அபி… “ஓகே நிவாஸ்” எனக் கூறி கட் செய்து தனது தந்தைக்கு அழைத்தான்.
அபியின் அழைப்பிற்காக காத்திருந்த வெங்கட் முதல் ரிங்கிலே அட்டெண்ட் செய்து… கலங்கிய குரலில் அனைத்தையும் கூறினார். கவியின் நிலையையும் கூறியவர், உடனே கிளம்பி வருமாறு சொல்லி வைத்து விட்டார்.
நொடியும் கடக்காது கிளம்பியவன் தனது காரிலேறி அசுர வேகத்தில் அதனை செலுத்தினான்.
தங்கை உயிர் பிழைக்க வேண்டுமென்ற வேண்டுதல் அபியின் மனம் முழுக்க பரவியிருக்க, கவியை நினைத்து அதிகமாக அபியின் உள்ளம் வருந்தியது.
எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வருபவன், சுவற்றை வெறித்து… கண்களில் கண்ணீரோடு பிரம்மை பிடித்தவன் போல் அமர்ந்திருக்கிறான் என்று வெங்கட் சொன்னது அபிக்கு கவலை அளித்தது.
கவியின் இதே சூழ்நிலையில் இருந்தவனாயிற்றே… அவனது வேதனை இப்போ எப்படியிருக்குமென்று அவனுக்கு தெரியாதா? தான் செல்லும் வரை வேறெந்த விபரீதமும் நடக்காமல் இருக்க வேண்டுமென்று, இதுவரை வேண்டாத பல இறைவன்களிடம் வேண்டினான்.
தனக்குள் சொல்ல முடியாத வேதனைகள் அடங்கியிருப்பினும், இந்நேரத்தில் கவிக்காக மட்டுமே அபியின் இதயம் துடித்தது. அன்றொரு நாள் தான் இருந்த நிலையில் இன்று கவியிருப்பது அவனுக்கு மிகவும் கவலையை அளித்தது.
இந்த வலி எப்படியிருக்குமென்று உணர்ந்தவனால் கவிக்காக வேதனை கொள்ள மட்டுமே முடிந்தது.
தன் சோகங்களை மறந்து கவியை அவனது சோகத்திலிருந்து மீட்க செல்பவன், அன்று அபியை கவி மீட்டெடுத்ததை போல் இன்று கவியை மீட்டெடுப்பானா?
துளிர்விடும் 🌱.