சருகு 🍂 25
ஆறு மணி நேரத்தில் வர வேண்டிய இடத்திற்கு நான்கு மணி நேரத்திலேயே அபி வந்திருந்தான். இந்த நான்கு மணி நேரத்தில் என்ன நடந்ததென்று அவன் யாருக்கும் அழைத்துக் கேட்கவில்லை.
விபரீதமாக ஏதாவது இருந்தால் தன்னால் பயணத்தை தொடர முடியாது, அதுமட்டுமில்லாமல் அப்படி ஏதேனும் நடந்திருந்தால் இந்நேரம் அழைப்பு வந்திருக்கும் என்று கருதினான்.
மருத்துவமனை வந்து சேர்ந்ததும்… காரில் சிறிது நேரம் அமர்ந்து தனது பதட்டத்தையும் கலங்கிய முகத்தையும் சரி செய்தான். தான் கொஞ்சம் திடமாக சென்றால் தான் கவியை தேற்ற முடியுமென்று எண்ணினான்.
ரிஷப்ஷனில் உள்ள பெண்ணிடம் விசாரித்து அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்தவனின் இதயம் தாறுமாறாக துடித்தது. அந்த துடிப்பு தன் தங்கை உயிர் பிழைக்க வேண்டுமென்பதற்காக இருந்தாலும், கவியின் கசங்கிய தோற்றத்தை முதல் முறையாக எப்படி காணப் போகிறேன் என்ற பயத்திலே அதிகமாக துடித்தது.
நீண்ட எட்டுக்களை வைத்து அந்த வராண்டாவின் நீளத்தைக் குறைத்தவனின் கண்களில் சோக முகத்துடன் வாடிய தோற்றத்தில் அமர்ந்திருந்த கவியைக் கண்டதும் இதயத்தில் வலி ஏற்படுவதை உணர்ந்தான். அந்த நொடி தான் அவனே உணர்ந்து கொண்டான் கவி தனக்கும் தன் மனதிற்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவனென்று.
அவனருகில் சென்று தரையில் மண்டியிட்டு கவியின் முகத்தினை தன் கைகளில் ஏந்தியவன், அவனது விழிகள் சிந்திய சோகத்தில் தன் நெஞ்சோடு கவியை அணைத்துக்கொண்டான்.
அனைவருக்கும் அபியின் செயல் ஆச்சரியத்தையே அளித்தது. காலில் மண் ஒட்டினாலே அந்த குதி குதிப்பவன் இன்று தரையில் மண்டியிட்டது மட்டுமில்லாமல், உணர்வுகளை அடக்கி பழகியவன் இன்று வெளிப்படுத்தினால் வியப்பாகத் தானே இருக்கும்.
வருவிற்கு அபியின் வருகையே ஆச்சரியமானது தான். எதையும் மறைத்தே வைத்திருப்பவன், மற்றவர்கள் மீது வைத்திருக்கும் பாசம் அவளுக்கு தெரிய வாய்ப்பில்லையே.
அபியின் அணைப்பில் அவனது வருகையை உணர்ந்த கவி.. கதறி துடித்தான்.
“அபி எனக்கு என் கனி வேணும்டா, அவ இல்லாமல் நான் எப்படிடா?” எனக் கேட்டு கண்ணீரில் கரைந்தான்.
கவியின் கதறலும், கண்ணீரும் பார்க்கும் போது அவனுக்காகவாவது கனி உயிர் பிழைக்க வேண்டுமென்று எண்ணினர்.
அபிக்கு என்ன ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை,
கவியை தனது கையணைவில் வைத்தே தேற்றினான். கவிக்கு அபியின் அணைப்பும், அரவணைப்பும் தேவையான ஒன்றாக இருந்தது.
இச்செயல் அவர்களிடையே இருக்கும் பிணைப்பை குடும்பத்தாருக்கு எடுத்து காட்டியது.
கவியின் கண்களில் வழியும் கண்ணீர் நின்றபாடில்லை, ஒரு நிலைக்கு மேல் அபியாலும் தன்னை கட்டுப்படுத்த இயலாமல் கண்ணீர் வடித்தான். கோபாலன் அவர்களை நெருங்கி, “என் பேத்திக்கு எதுவும் ஆகாது” எனக்கூறி அவர்களை தேற்ற முயன்றார்.
விஷ்ணு அபியிடம் சென்று, “அத்தான் எனக்கு அக்கா வேணும் வரசொல்லுங்க” என கேட்க, ஓரளவு புரிந்துகொள்ளும் வயதுடைய அவனின் மனநிலையே இப்படி இருக்கும் போது, அனைத்தும் மறந்து கனி மட்டுமே நிரம்பியிருக்கும் கவியின் நிலையை சொல்லத் தேவையில்லை.
கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்கு பிறகு சிகிச்சை அறையிலிருந்து மருத்துவர் வெளியில் வந்தார்.
அனைவரும் அவரது வாயிலிருந்து வரும் வார்த்தைக்காக காத்திருந்தனர்.
“இனி உயிருக்கு எந்தவித ஆபத்துமில்லை” என்ற மருத்துவர் நகர்ந்து விட்டார்.
இப்போது தான் அனைவருக்கும் சுவாசமே வந்தது.
கவிக்கு தன் உயிரே மீண்டு வந்ததைப் போல் உணர்ந்தான். இப்போது தான் அவனின் இதயம் சீராக துடித்தது.
கவியை பார்த்துக்கொள்ளுமாறு வெங்கட்டை ஒரு பார்வை பார்த்த அபி மருத்துவரின் அறை நோக்கி சென்றான்.
“நான் எங்க அக்காவை பார்க்கலாமா?” என்று ஏக்கமாக கேட்ட விஷ்ணுவை பரிதாபமாக பார்த்த செவிலி, “அவங்களை தொந்தரவு செய்யாம ஒவ்வொருத்தரா பார்த்துட்டு வாங்க” என்று அனுமதி வழங்கினார்.
ஐசியூ’வின் அறை கதவில் திறக்க கை வைத்த விஷ்ணு, கவியிடம் “நீங்க போங்கண்ணா” எனக் கூறினான்.
ஓய்ந்த தோற்றத்தில் அமர்ந்திருந்த கவி, விஷ்ணுவின் குரலில் நிமிர்ந்தான். விஷ்ணுவின் இச்செயல் குடும்பத்தாருக்கு அவனது மன முதிர்வை எடுத்துக்காட்டியது.
நகர மறுத்த கால்களை மெல்ல அசைத்து, நடுங்கிய கரங்களினால் கதவினைத் திறந்து மெல்ல அறை உள்ளே நுழைந்தான் கவி.
கதவினை தட்டி உள் சென்ற அபியை கண்ட மருத்துவர்… சந்தேகத்துடன், “ஆர் யூ டிரைக்டர் மிஸ்டர். அபி… அபினவ்” என்க, சிறு தலையசைப்பில் ஆம் என்றவன், அவர் தனக்கு முன்பாகக் காட்டிய நாற்காலியில் அமர்ந்தான்.
“டாக்டர்… கனி…?”
“நீங்க?”
“நான் கனியோட அண்ணன்.”
“ஹாஸ்பிடல் வந்தப்போ அவங்க நிலை கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன் தான். பட் ஷீ இஸ் ஆல்ரைட் நோவ். கத்தி குத்து ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டிருக்கு, கத்தி ஆழமா இறங்கியதால… உள்ளே காயம் அதிகம். நல்ல வேளை உள் உறுப்புகளை பாதிக்கவில்லை, இல்லைன்னா உயிர் பிழைப்பது கடினமாகியிருக்கும். நாளை காலை தான் மயக்கம் தெளிந்து கண் விழிப்பாங்க, யாராவது ஒருவர் உடனிருந்து பார்த்துக்கோங்க. உள்காயம் சரியாகும் வரை டயட் பாலோ பண்ற மாதிரியிருக்கும்.”
அனைத்தும் கூறிய மருத்துவர் தெளிவில்லா அவனது முகத்தை கவனித்தவராய், எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள் என்றார்.
“வேணும்னா சென்னை, சேலம் அழைத்து செல்லவா?” எனத் தயக்கத்துடன் வினவினான்.
அபியின் மனநிலை புரிந்தவராய், “இப்போ அவங்க உயிருக்கு எந்த ஆபத்துமில்லை… நீங்க பயப்படவே வேண்டாம்.. இப்போ அவங்க உடலிருக்கும் நிலைக்கு, ஆம்புலன்ஸில் வைத்து கூட டிராவல் செய்ய முடியாது. அது நல்லதுமில்லை… ஒரு ஒன் மன்த் ஆனதும் வேணுமானால் செகண்ட் ஒப்பினியன் கேட்டுக்கோங்க” என்றார் தன்மையாக.
“தேங்க்ஸ் டாக்டர்…. தேங்க் யூ சோ மச்..” டாக்டரின் கரம் பற்றி குலுக்கி விடைபெற்றான்.
அறையினுள் நுழைந்த கவி, அங்கே படுக்கையில் வாடிய மலர் கொடியெனக் கிடைந்தவளைப் பார்த்து தனது அழுகையைக் கட்டுப்படுத்தி அவளருகில் சென்றான். அவளையே சிறிது நேரம் பார்த்திருந்தவன்… கனியின் நெற்றியில் அழுத்தமாக தன் வறண்ட இதழினை பதித்துச் சென்றான்.
ஒவ்வொருவராக அனைவரும் சென்று பார்த்ததும்… “யாராவது ஒருத்தர் மட்டும் தான் இங்க தங்க முடியும், எல்லாரும் கிளம்புங்க” என்ற அபியிடம் தான் இங்கிருப்பதாகக் கலா கூறினார்.
அதில் கவி அபியை நிமிர்ந்து பார்த்தான். அவனின் மனம் புரிந்தவனாக அபி தன் தாயிடம் கண்ணசைக்க அவரும் கவியே இங்கிருக்கட்டுமென்று ஒப்புக்கொண்டார்.
அனைவரும் கிளம்பியதும், ‘இவங்க வரலையா’ என்று திரும்பி பார்த்த வருவை அபி சிறிதும் கண்டு கொள்ளவில்லை. கோபாலனிடம் தானும் இங்கிருப்பதாகக் கூறியவன், காரிடாரில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.
வந்ததிலிருந்து தன்னை பார்க்க கூட இல்லை என நினைத்த வருவிற்கு அழுகையாக வந்தது. சூழ்நிலை உணர்ந்து தன்னை அடக்கியவள் எல்லோருடனும் வீடு சென்றாள்.
ஐசியூ என்பதால் அறையின் உள்ளே தங்க யாருக்கும் அனுமதியில்லை. எனவே, இருவரும் அறைக்கு வெளியிலேயே காத்திருந்தனர். கவியை அபி வற்புறுத்தி சாப்பிட வைத்தான். நள்ளிரவில் ஒரு முறை கண் விழித்த கனி மீண்டும் மயக்கத்திற்கு சென்று விட்டாள். அவள் கண் விழித்தாள் என செவிலி கூறியதும் தான் கவி சற்று தெளிவடைந்தான்.
மறுநாள் காலை மறுத்தவர் சொன்ன நேரத்திற்கு கண் விழிக்காமல்.. அனைவரையும் பயம் கொள்ள செய்து.. கவியின் பதட்டத்தை அதிகரித்த பின்னரே, அன்றைய நாளின் முடிவில் கண் விழித்தாள்.
கண் விழித்ததும் அவளின் கண்கள் ஒரு முறை முழு அறையையும் வலம் வந்தது. தனக்காக மொத்தக் குடும்பமும் அங்கு வீற்றிருப்பதை எண்ணி அவள் மனம், தான் யாருமில்லா அனாதையில்லையென்று கூறிற்று.
அபியை பார்த்து கிட்ட வர சைகை செய்தவள்.. அவன் வந்ததும்… அவனது கரம் பிடித்து.. “இன்னைக்கு எனக்கு ஒண்ணுன்னா இவ்வளவு பேரு இருக்காங்க.. அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இதுக்கு முழு காரணம் நீ மட்டும் தான் அண்ணா, நீயில்லைன்னா நிச்சயம் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன், எனக்கு அன்பான ஒரு குடும்பம் கிடைத்திருக்காது” என அழுகையினூடே கூறினாள்.
தங்கையின் கண்ணீரை துடைத்தவன், தன் தோளில் அவளை சாய்த்து… “உன்னை மாதிரி ஒரு தங்கை கிடைக்க நான் தான்டா குடுத்துவச்சிருக்கணும்” என்றான். அவள் முகம் தெளிவில்லாது இருப்பதைக் கண்டவன், அவளை மாற்றும் பொருட்டு… “யாருக்கோ வயிறு எரியுற ஸ்மெல் வருதுல டா” என்று விஷ்ணுவைப் பார்த்து அபி கேட்க, அவனும் புரிந்ததைப்போல் கவியை பார்த்தவாறு ஆமாமென்றான்.
அனைவரும் நடப்பது புரியாமல் குழம்ப, புரிந்தவளோ.. தன் பார்வையை தன்னவனின் பார்வையோடு உரிமையுடன் கலக்க விட்டாள்.
அவர்களது பார்வையுணர்ந்த அபி, “இதுக்குமேல நீ என் மேலே சாய்ந்திருந்தா கவி என்னை அடித்தாலும் அடித்திடுவான்” என்க, அங்கு ஒரு சிரிப்பலை எழுந்தது.
சிரித்ததில் வயிற்றில் வலியெடுக்க.. “ஸ்.. ஆ.. ஆ…” என்று கனி முனகினாள். அதில் பதற்றம் கொண்ட கவி, அனைவரையும் மறந்தவனாக.. தன்னவளை நெருங்கி, “என்னாச்சுடா.. வலிக்குதா.. டாக்டரை கூப்பிடவா?” என்று படப்படத்தான்.
அப்போது அங்கு வந்த செவிலியிடம் கூறி.. அவளை பரிசோதிக்க சொல்லி.. அவர் “ஒன்றுமில்லை, ஜஸ்ட் பெயின் தான்” என்று கூறிய பிறகே அவரை விட்டான்.
“நீயும் கலவரமடைந்து எல்லாரையும் பயம் காட்டாதே கவி.. என் மருமகளுக்கு ஒன்றுமில்லை” என்று ராதிகா அதட்டிய பின்னரே அவன் அமைதியாகினான்.
தன் அன்னையின் மருமகள் என்ற விளிப்பிலே… நேற்று அந்நிலையில் கனிக்கு தாலி கட்டியது அவனுக்கும் அவளுக்கும் நினைவிற்கு வர.. இருவரும் ஒரு சேர அவளது கழுத்தினை நோக்கினர்.
தாலி இல்லாது இருவரும் அதிர்ந்த நேரம்,
மீண்டும் அறைக்குள் வந்த நர்ஸ்.. “சாரி பார் த டிஸ்டபன்ஸ்… முன்ன வந்தப்போ இவர் பண்ண அலப்பறையில் வந்த விஷயத்தையே மறந்துட்டேன்” என்று கவியை பார்த்துக் கூறியவர், சிகிச்சையின் போது கனியிடமிருந்து கழட்டிய நகைகளை கலாவின் கைகளில் கொடுத்தார். அதனை வாங்கியவர், மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட மஞ்சள் கிழங்கு அடங்கிய தாலியை கண்டு அதிர்ந்தார்.
அவ்வதிர்வுடனே அவர் தம் கணவனை பார்க்க, அவரோ சிறு அதிர்வுமின்றி கவியை கனியின் கழுத்தில் மஞ்சள் கயிற்றினை கட்ட சொன்னார்.
நேற்று கனிக்கு எப்படி கத்தி குத்து ஏற்பட்டது என்று மட்டுமே வீட்டு உறுப்பினர்கள் அறிந்திருந்தனர். அதன் பின்னர் நடந்த திருமணத்தை அவர்கள் இருந்த பதட்டத்தில் சொல்லவில்லை.
வெங்கட், “தாலியை கட்டுப்பா” என்றதும்.. எவ்வித தயக்கமுமின்றி கவி தன்னவளுக்கு இரண்டாவது முறையாக மங்கல நாணை அணிவித்தான்.
அபி கவியையும், வரு கனியையும் அணைத்து தங்களது மகிழ்வினைத் தெரிவித்தனர். பெரியவர்கள் அனைவரும் தங்களது உளமார்ந்த ஆசியை இளஞ்சோடிகளுக்கு வழங்கினர்.
இப்போது கனி பொது பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்தால். இருந்தாலும் உட்காயங்கள் ஓரளவிற்கு ஆறும் வரையில் மருத்துவமனையில் இருக்க வேண்டுமென்று மருத்துவர் கூறிவிட்டார்.
அன்றிரவு அபியும் வீட்டிற்கு சென்று விட, கவி மட்டும் கனியுடன் இருந்தான். கவியுடனான தனிமை, இரவு நேரம்.. கனிக்கு இனிமையான படபடப்பாக இருந்தது. தண்ணீர் குடித்து படபடப்பை குறைக்க எண்ணியவள், எழுந்து அமர முயற்சி செய்தாள். வயிற்றில் வலி ஏற்பட முனகியவள், பாதிக்கு மேல் எழ முடியாமல் அவதியுற.. அவளை சேயாகத் தாங்கி.. படுக்கையினை அட்ஜஸ்ட் செய்து சாய்வாக அமர வைத்தான்.
இவ்வளவு அருகில் அவனிருந்தாலும்.. ஏதோ ஒன்று குறைவதாக எண்ணினாள். என்னவென்று யோசிக்கும் போது தான் கனிக்கு புரிந்தது, கவி எவ்வளவு நன்றாக அவளைப் பார்த்துக்கொண்டாலும், கனியின் கண்களை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தான்.
அவளை தொட்டு பணிவிடைகள் செய்யும் போதும்… கடமையே கண்ணாக செய்தானேத் தவிர, அதில் சிறிதளவு கூட காதலில்லை. குழந்தையை பேணும் தாயின் அரவணைப்பு மட்டுமே அது.
மனைவியாக தான் அருகிலிருந்தும் அவனது இந்த ஒதுக்கும் அவளை வதைத்தது. நாள் முழுக்க உடனிருந்தாலும் தேவைக்கு மட்டுமே பேசுகின்றான். அவனது ஒத்துக்கத்திற்கான காரணம் தெரிந்தாலும் வருந்தி மன்னிப்பு கேட்டும் அவன் இளகாதது வருத்தமாக இருந்தது.
கனியின்… ஏக்கப் பார்வையும், அவளது மனதிலோடும் எண்ணங்களையும் சரியாக கண்டு கொண்டவன்.. அவளது ஈர விழிகளை அழுந்த துடைத்து, “எதையும் யோசிக்காம தூங்கு” என்றான்.
“மாமா…”
அவளது கண்ணீர் குரலில்… அவளின் கண்களை சந்தித்தவன்,
“நிச்சயமா உன் மேல கோபமோ, வருத்தமோ எனக்கில்லை. நீ அன்னைக்கு பேசிய வார்த்தைகளின் தாக்கம் குறைய இன்னும் நாளாகும். எனக்கு கொஞ்சம் டைம் கொடு டா” என்றவன் அவளருகில் அமர்ந்து கனியை உறங்கச் செய்தான்.
அவனது நெருக்கத்தில் கவலை நீங்கியவளாகவோ, அல்லது அளிக்கப்படும் மருந்தின் வீரியத்தாலோ அடுத்த நிமிடம் உறங்கிப் போனாள்.
கனியின் முதுகினை கவியின் கைகள் தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தாலும், மனமோ அன்று நடந்த நிகழ்வினை நினைத்துப் பார்க்கத் தொடங்கியது.
அன்று,
விஷ்ணு…. கனி தனியாக ஸ்டோர் ரூமில் இருப்பதாக தெரிவிக்கவும், இன்று எப்படியும் தன் காதலை அவளிடம் சொல்ல வேண்டும், அப்படி இல்லைனா அவளை சொல்ல வைக்க வேண்டுமென்ற உற்சாக மன நிலையில் அவளைத் தேடி அங்கு சென்றான்.
அறையினுள் நுழைந்தவன், யாராவது வந்துவிட்டால் தவறாக எண்ணக்கூடும் என்று நினைத்து கதவினை பாதி திறந்த நிலையில் மூட எண்ணி, கனியை பார்த்துக்கொண்டே சாற்ற.. அவன் தள்ளிய வேகத்தில் முழுமையாக சாற்றிக்கொண்டது. அது அவனது கவனத்தில் பதியவுமில்லை.
தாவணி அணிந்திருந்தவள் தனது பாவாடையை ஒரு பக்கமாக முட்டி வரை ஏற்றி இடையில் சொருகி, மச்சில் உள்ள ஏதோ ஒன்றை ஸ்டூலில் ஏறி நின்று தேடிக் கொண்டிருந்தாள்.
அவளது கொலுசு அணிந்திருந்த கணுக்காலில் பதிந்த கவியின் பார்வை, கனியின் வாழைத்தண்டு கால்களில் நிலைக்க, கிறங்கித் தான் போனான். தன் தலையை இட வலமாக உலுக்கி தன்னை நிலைப்படுத்தியவனின் பார்வை மட்டும் அவளை விட்டு நீங்கவில்லை.
தன் மனம் கவர்ந்தவளின் தனிமை அவனுள் ஒரு வித உரிமையையும், அவனது காதல் மனமோ அவனின் உணர்வுகளையும் மேலே எழுப்பியது. தன்னவள் என்கிற உரிமை உணர்வில் கவியின் பார்வை கனியின் பால் வர்ண இடையில் நிலைத்தது.
யாரோ தன்னை உற்று பார்ப்பதை போல் உள்ளுணர்வு உந்த திரும்பி பார்த்தவள், நிச்சயம் அங்கு கவியை எதிர்பார்க்கவில்லை. அவனை கண்டும் காணாததை போல் அவள் மீண்டும் திரும்பி தான் விட்ட பணியை செய்தாள்.
‘அடியேய்… குள்ளச்சி.. உனக்கு அவ்வளவு திமிரா!’ என உள்ளுக்குள் கருவியவன்.. கனி நின்றுகொண்டிருந்த ஸ்டூலினை அசைக்க.. நிலைத்தடுமாறிய அவள் கவியின் மீதே சரிந்தாள்.
பஞ்சு பொதியென மேலே விழுந்தவளை தன் கரம் கொண்டு அணைத்தான். அவளது வெற்றிடையில் அவனின் கரம் ஊர்வலம் போனது. காதலை சொல்ல வந்தவன், அதை மறந்தவனாக.. தன் மனைவியாக மனதில் உருவக படுத்தியதின் விளைவாக சிறிதும் அச்சமின்றி சற்றே உரிமை எடுத்துக்கொண்டான்.
திடீரென மின்சாரம் தடைபட, ஏற்கனவே தரை தளத்தில் அமைந்திருந்த அறை.. மின் விளக்கில்லாமல் மேலும் இருளில் மூழ்கியது. சாளரத்தின் வழியே மின்னல் கோடென வீசிய வெளிச்சத்தில் அவளது பளிங்கு முகமும்.. வியர்வைகள் அரும்பிய செவ்விதழ் பவள வாயும் கள்வனை பித்தம் கொள்ள செய்தது. அதில் தன்னை மறந்த நிலையில் கவியின் அணைப்பு இறுகியது அவளின் பயம் போக்கும் அரவணைப்பாக.
அந்த இருட்டும், சகோதரன்.. தந்தையல்லாத ஒரு ஆடவனின் தொடுகையும்.. தனது சிறு வயது நிலையை ஞாபகப்படுத்த.. அந்த நொடி இத்தொடுகை தன் மனத்திற்கினியவனின் தொடுகை என்பதை பெண்ணவள் மறந்து போனாள்.
கவியை உதறித் தள்ளியவள்… வார்த்தைகளை தவறவிட்டாள்.
கனி தள்ளியதில்… சிறு எரிச்சலுடன் “என்னடி?” என்றான்…
கனி பழைய நினைவுகளின் தாக்கத்தில் பயத்தில் வெடவெடக்க நின்றிருக்க, அவளை கவி தொட்டு “என்னடி ஆச்சு?” என்று பதறினான்.
பயத்தில் இருந்தவளுக்கு மீண்டும் கவியின் தொடுகை அருவெறுப்பை கொடுக்க.. பின்னால் நகர்ந்தபடி,
“என்னை ஒன்னும் பண்ணிடாத.. நீ தொட்ட அடுத்த நிமிஷம் என் உயிர் என் உடம்புல இருக்காது. நீ தொடுறது உடம்புல எரியர மாதிரியிருக்கு.. கடைசியில எல்லா ஆண்கள் மாதிரிதான் நீயும்.. உனக்கும் என் உடம்பு…” என்று கூறிக்கொண்டிருந்தவள் மேலும் என்ன கூறியிருப்பாளோ கவி அறைந்த அறையில் சுயம் பெற்றாள்.
கன்னம் நெருப்பில் குளித்ததை போன்று தகித்த பின்னரே அவளுக்கு கவி தன்னை அடித்தான் என்று புரிந்தது. ஆனால், எதற்கு அடித்தான் என்பது தெரியாமல் கன்னம் தாங்கி நின்றவளை… தகிக்கும் நெருப்பு விழிகளால் உருத்து விழித்து.. “இனி நீயே என்னைத் தேடி வந்தாலும் எனக்கு நீ வேண்டாம்”.. அழுத்தமாகக் கூறியவன் இதயம் பிளக்கும் வலியுடன் ஆண்மகன் என்பதை மறந்து கண்களில் கண்ணீர் ஆறென பெருக அபியின் அறைக்கு சென்றான்.
‘இவங்க எதுக்கு என்னை அடிச்சாங்க.. இப்போ எதுக்கு இப்படி சொல்லிட்டு போறாங்க..’ என்று யோசித்தவளுக்கு அப்போது தான் தன்னிலை மறந்த நிலையில் தான் பேசிய வார்த்தைகள் நினைவிற்கு வர, தரையில் மண்டியிட்டு துடித்து அழுதாள்.
‘உன் காதலையும், உன்னோட தொடுகையையும் நானே அசிங்கப்படுத்திட்டேனே.. என்னை மன்னிப்பியா.. மன்னிப்பதான.’ காற்றிடம் கூறி கதறி அழுதாள்.
அங்கு அபியிடம் அவனோ தன் காதலை அசிங்கப்படுத்தி விட்டாளென்று கதறினான்.
இருவரும் அன்றைய நாளின் தாக்கத்திலிருந்து மீள.. நான்கு கண்களுமே கண்ணீரில் குளித்திருந்தது.
ஜன்னலருகே நின்றிருந்தவன், அவளது விசும்பல் சத்தத்தில்.. அவளும் அதை தான் நினைத்து வருந்துகின்றாலென்று கண்டு கொண்டான். இருப்பினும், அவளை தேற்றவோ… ஆறுதல் படுத்தவோ துடிக்கும் கரங்களுக்கு ஏதோ ஒன்று தடையாக இருந்தது.
அதன் பின்னர் வந்த நாட்களில்… கலாவை கூட தவிர்த்துவிட்டு, கனிக்கு அனைத்தும் அவனே செய்தான் ஒரு தாயாக.
ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் அபி சென்னைக்கு கிளம்புவதாகக் கவியிடம் கூறினான். இப்போது அவனுக்கு இருக்கும் வேலை பளு அறிந்த கவி மறுப்பு எதுவும் தெரிவிக்காது சரியென்றான்.
ஆனால், செல்லும் முன் வருவிடம் ஒருமுறை அழைத்து பாரென்று வலியுறுத்தினான். அதற்கு மறுப்போ ஒப்புதலோ எதுவுமின்றி அமைதியாக தங்கையிடம் வந்தவன், பத்திரமாக இருக்க வேண்டுமென்று கூறிச் சென்றான்.
கவி வருவை அழைத்துப் பாரென்றதும், அதற்கு அபி அமைதியாக இருந்ததையும் குறித்துக்கொண்ட கனி… அபி சென்றதும், “வருவுக்கும் அண்ணாவுக்கும் என்ன பிரச்சனை?” எனக் கேட்டாள்.
கவி பதில் கூறுவதற்குள்… “ல்லாம் இந்த அண்ணன் தான் காரணமா இருப்பாங்க” என்று வாய்க்குள்ளே சத்தமில்லாமல் கூறினாள்.
அவளின் வாயசைவை வைத்தே என்ன சொல்லியிருப்பாளென்று தெளிவாக யூகித்த கவி… “என்னடி தெரியும் உனக்கு என் அபியை பற்றி.. அவனுடைய காதலை கூட புரிஞ்சிக்க முடியாத முட்டாள் டி, உன் பிரண்ட். அவனுடைய மனசைக் கூட அவளால் உணர முடியல. அவ, இவனை உயிருக்கு உயிரா காதலித்தாளாம்?”
“உன்னால் மட்டும் என் மனசை உணர முடிந்ததா மாமா?”
கவி வருவின் மேல் உள்ள தவறை சுட்டிக்காட்ட.. அதையே கூறி தன்னவள் தன்னை தாக்கவும் தான் அவனுக்கே புரிந்தது.
‘நான் தான் கனியின் மனதை உணர தவறிவிட்டேனா?’ விடை தெரியா கேள்வியுடன் வெளியில் சென்று அமர்ந்து கொண்டான்.
கவியிடம் சென்னை செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிற்கு வந்த அபி.. கூடத்தில் அமர்ந்திருந்த வருவை சிறிதும் கண்டு கொள்ளாது மாடியேறி தன் அறைக்குச் சென்று கிளம்பி, தன் அன்னையை தேடி அடுப்பறைக்கு செல்ல.. அங்கு கலாவைத் தவிர வேறு யாருமில்லை.
“அத்தைங்க எங்க?” என்ற அபியின் குரலில் திரும்பிய கலா…
“அவங்க ரெண்டு பேரும் வயலுக்கு போயிருக்காங்கப்பா… அந்த படுபாவி சாமிக்கண்ணு பயிருக்கு தீ வைக்காமலிருந்திருந்தா.. இந்நேரம் விளைஞ்ச வெல்லாமையெல்லாம் வீடு வந்து சேர்ந்திருக்கும்” என்று வருத்தத்துடன் தெரிவித்தவர்..
“இன்னைக்கு திரும்பவும் நடவு சசி.. உன் மாமா ரெண்டு பேரும் போலீஸ் ஸ்டேஷன் போயிருக்காங்க, அதான் உன் அத்தைங்க ரெண்டு பேரும் ஒழுங்கா வேலை நடக்குதான்னு பார்க்க போயிட்டாங்க.” நீண்ட விளக்கம் கொடுத்தவர்… அவன் தோற்றத்தை வைத்து, “என்னப்பா ஊருக்கு கிளம்பிட்டியா?” என்றார்.
“ம்…”
ஒற்றை எழுத்தில் பதிலளித்தவன்.. “அப்பா எங்க?” எனக் கேட்டுக்கொண்டே.. அங்கிருந்து கூடத்திற்கு வந்தான்.
“அப்பா… மில்லுக்கு போயிருக்காங்க.. இப்போ சாப்பாட்டுக்கு வர நேரம் தான்.”
கலா சொல்லி முடிக்கவில்லை.. அவர்களது பேச்சுக்கு உரித்தானவர் வருகை தந்தார்.
தன் தந்தையிடம் சென்னை செல்வதாக அவன் கூறவும்.. இதுவரை அவனையே பார்த்திருந்த வருவிற்கு, இனி எப்போ இவரை பார்க்க போகின்றோமோ என வருத்தமாக இருந்தது.
வெங்கட் ஏதோ சொல்ல வாயெடுக்க… அபியே பேசினான்.
“அவங்களும் என்னோட வரணும்னா வரலாம்.” வருவை கை காட்டி கூறினானே தவிர அவன் பார்வை சுவற்றின் மீதே பதிந்திருந்தது.
கலாவிற்கு மகனின் இந்த அழைப்பே உணர்த்தியது தன் மகன் மீது தவறில்லையென்று, வருவிடம் “சசி தான் கூப்பிடறானே கிளம்பும்மா!” என்க….
அவளோ… “எனக்கு விருப்பமில்லை” என்ற பதிலோடு, விடுவிடுவென்று அங்கிருந்து சென்றுவிட்டாள்.
‘கிடைத்த வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்கிறாளே இப்பெண்’ என மூத்த தம்பதியர் வருந்தினர்.
உள்ளறையிலிருந்து இங்கு நடந்தவற்றை கேட்டுக்கொண்டிருந்த கோபாலன், “கூட்டு களவாணிங்க எதையோ மறைக்குதுங்க, நம்ம கிட்ட வரும்போது பாத்துக்கலாம்” என்றதோடு அவர்களிடம் எதுவும் கேட்டுக்கொள்ள வில்லை.
பெரியவரிடமும் கூறிக்கொண்டு கிளம்பியவன் ஒருமுறை வரு சென்ற மாடிப்படிகளைத் திரும்பி பார்த்து வெளியேறி விட்டான்.
செல்லும் வழியில் அபியின் மாமாக்கள் சென்றிருப்பதாகக் கூறிய போலீஸ் ஸ்டேஷனிற்கு அவனும் சென்று… ரங்கநாதனை குத்த வந்தது யாரென்று கண்டுபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தினான். இன்ஸ்பெக்டர் “சீக்கிரம் யாருன்னு கண்டுபிடிச்சு சொல்றோம்” என்றதோடு அவர்களை அனுப்பி வைத்தார்.
வெளியில் வந்த ரங்கநாதன் அபியிடம் சாமிக்கண்ணு மீது சந்தேகம் இருப்பதாக தெரிவிக்க… “அப்போ அவன் தான் குற்றவாளின்னா சட்டப்படி நம்மால் ஒன்றும் செய்ய முடியாதே.. அவன் ஆளுங்கட்சியை சேர்ந்தவன்” என சீனுவாசன் இடைப்புகுந்தார்.
“அப்படி அவன் தான் இதுக்கு காரணமா இருந்தா… அவனை கட்சியை விட்டே எப்படி தூக்கணும்னு எனக்கு தெரியும். இங்க இருக்க போலீஸ் பின்வாங்கிட்டாலும் நம்ம குடும்பத்தை சிதைக்க நினைச்ச அவனை நான் சும்மா விடுவதா இல்லை” என்றான் அபி.
“எப்படிப்பா?”
ரங்கநாதனும், சீனுவாசனும் ஒரு சேர கேட்க,
பெரிய போலீஸே என் கையில இருக்காங்க மாமா எனக் கூறி சிரித்த அபி சென்னையை நோக்கி பயணமானான்.
அந்த பெரிய போலீஸ் யாராக இருக்குமென்ற யோசைனையுடனே இருவரும் வீடு திரும்பினர்.
துளிர்விடும் 🌱.