சருகு 🍂 26
அபி சென்னை வந்து ஒரு வாரமாகிவிட்டது.
கனியும் ஓரளவிற்கு உடல்நிலை தேறியதால் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.
இதற்கிடையில் ஒரு நாள் வெங்கட் போலீசாரிடம் விசாரித்ததற்கு.. “இது அரசியல்வாதி சம்மந்தப்பட்டது, இதற்குமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது” என்று இன்ஸ்பெக்டர் விலகிக்கொண்டார்.
இதனைக் கேள்விப்பட்ட அபி… “இது எதிர்பார்த்த ஒன்று தான், நான் பார்த்துக்கிறேன்” எனக் கூறினான்.
ஆனால், தான் எதிர்பார்க்காத ஒன்று நடைபெற போகிறதென்று யாரும் அறியவில்லை.
ரங்கநாதனை கொலை செய்ய அனுப்பிய ஆட்கள் ஆள் மாற்றி குற்றியதில் கோபம் கொண்டாலும், தான் நினைத்ததை நடக்க விடாமல் செய்த குடும்பத்தில் உயிர்பலி ஏற்படுமென்ற ஆசையில் மண் விழுந்ததைப்போல் ஆனது கனி உயிர்பிழைத்தது.
இந்தக் கொலை முயற்சிக்கு காரணம் சாமிக்கண்ணு தானென்று தெரிந்ததும், பெரிய வீட்டு ஆட்கள் இதில் தீவிரமாக இருக்கின்றனர் என்று சாமிக்கண்ணுவிடம் தெரிவித்து, தான் இந்த வழக்கில் தலையிடாமலிருப்பதற்கு ஒரு பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுக்கொண்டார் அந்த இன்ஸ்பெக்டர்.
சாமிக்கண்ணு ஊர்தலைவர் மட்டுமில்லை அந்த தொகுதி எம்.எல்.ஏ’வும் ஆவார். ஒருவர் இரண்டு தொகுதியில் போட்டியிடுவதைப்போன்று, அவர் இரண்டு பதவி வகிக்கிறார். எம்.எல்.ஏ ஆன பிறகும் தன்னுடைய ஊர் தலைவராக இருப்பதே கெத்தாக கருதி அப்பதவியை யாருக்கும் விட்டுக்கொடுத்ததில்லை. அதற்காக அவர் பல தீய செயல்கள் செய்துள்ளார்.
ஆத்திரம் அதிகரிக்க அவனது பழிவெறி அதிகமானது. ஏதாவது செய்து பெரிய குடும்பத்தை கலங்க வைக்க வேண்டும். அவர்களால் வரவிருந்த பல கோடிகள் தடைப்பட்டுவிட்டது. யோசித்தவனுக்கு ஒரேயொரு திட்டம் தான் கண் முன் உதித்தது.
திட்டம் தோன்றிய அடுத்த நொடியே அதனை செயல்படுத்தவும் தொடங்கிவிட்டான்.
தன் சகாக்களிடம் திட்டத்தைக் கூறியவன் இன்றே செய்து முடித்திருக்க வேண்டுமென்று கட்டளையிட்டான்.
நள்ளிரவில் கருப்பன் கத்தும் சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்த வருணா.. பட்டியில் வந்து பார்க்க, பட்டியின் ஒரு பகுதியில் தீ பற்றியிருந்தது.. அது கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதும் ஊதக் காற்றின் உதவியால் பட்டி முழுவதும் பரவ ஆரம்பித்தது.
கால்நடைகள், பறவைகள் அனைத்தும் நெருப்பின் சூட்டினை தாங்க முடியாமல்.. வெளியிலும் வர முடியாமல் உள்ளுக்குள்ளே அங்குமிங்கும் ஓடின.
வருவிற்கு என்ன செய்வதென்று தெரியாமல், “சுப்பையா” எனக் குரல் கொடுக்க பட்டிக்கு அருகிலுள்ள ஓட்டு வீட்டிலிருந்து சுப்பையா ஓடிவந்தான்.
அவனும் வருவைப் போன்று என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்து நின்ற சமயம்… உயிரினங்களின் அலறல் ஒலி கேட்டு கனியை தவிர அனைவரும் தோட்டத்திற்கு வந்திருந்தனர்.
அதற்குள் வரு பட்டிக்குள்… தீ கங்குகளுக்கு நடுவே குதித்திருந்தாள். சுப்பையா “வேண்டாம்மா” என்று கத்தியது தீக்குள்ளே மறைந்தது.
வீட்டிலிருந்து ஓடிவந்த ஆண்கள் நிலைமையை சமாளிப்பதற்கு… விலங்குகள் நீர் அருந்த தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும் பெரிய தொட்டியிலிருந்து நீரினை வாலியின் உதவியால் விசிறி அடிக்க… நெருப்பு குறைவதற்கு பதிலாக அதிகமானது.
அப்போது தான் நீரினை கவனித்த கவிக்கு அது பெட்ரோல் என்று புரிந்தது. இனியும் தாமதிக்கக் கூடாதென்று அவனும் உள்ளே குதித்தான். அங்கு ஏற்கனவே நெருப்புகளுக்கு நடுவே வரு கால்நடைகளின் கயிற்றினை அவிழ்த்துக்கொண்டிருக்க.. கவி, கூரையின் மீது சொருக்கப்பட்டிருந்த கத்தியினை எடுத்து மாடுகளின் கயிற்றினை அறுத்தெரிந்தான்.
விலங்குகள் அனைத்தும் முட்டி மோதி வெளியேற.. வரு கவியின் உதவியுடன் ஒவ்வொன்றையும் வெளியே தள்ள… சீனுவும், ரங்கநாதனும் அவற்றை நெருப்புக்கு இந்தப் பக்கம் இழுத்துக்கொண்டிருந்தனர்.
தீ கட்டுக்குள் வருவதைப் போன்று தெரியவில்லை.. கோபாலன் தீ அணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க.. அங்கிருந்து எவ்வித தகவலுமில்லை.
தீயின் தாக்கத்தில் நா உலர்ந்து வெளியேறிய கால்நடைகள் நீருக்கு அலை மோத, வெங்கட் கிணற்றிலிருந்து நீர் வெளியேற மோட்டரினை ஆன் செய்தார்.
மின்சாரம் பாய்ந்ததும் கிணற்றிலிருந்து நீர் குழாயின் துணையால்.. பூமியில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் தொட்டியில் பாய்ச்சி அடித்தது.
நீரினைப் பார்த்ததும்… மாடுகளும், ஆடுகளும் கோழிகளும் தண்ணீர் தொட்டியை நோக்கி விரைந்தன.
அதற்குள் தீ பரவுவதற்கு பற்று கிடைக்காமல் மெல்ல மெல்ல அணையத் தொடங்கியிருந்தது. உயிரினங்கள் அனைத்தும் காப்பாற்றுப்பட்டு விட்டன என்ற நிம்மதியில் வரு அச்சூட்டினையும் பொருட்படுத்தாமல் தரையில் முழங்காலிட்டு அமர்ந்து ஆசுவாசமடைந்தாள்.
கவி சற்றே நிம்மதியாக மூச்சு விட்ட நேரம்…
அய்யய்யோ என்று கேட்ட கதறலில்… சாம்பலாகிப் போன பட்டியிலிருந்து கவியும், வருவும் சத்தம் கேட்ட திசைக்கு விரைந்தனர்.
அங்கு அவர்கள் கண்ட காட்சி உயிரையும் பதற வைத்தது.
நீரைப் பார்த்ததும் தாகம் தீர்க்க ஓடி நீர் அருந்திய அடுத்த கணம் கால்நடைகள் அனைத்தும் மண்ணில் சரிந்தன. உயிரற்ற உடலாய் தரையில் விழுந்து கிடக்க, விஷ்ணு முதல் கோபாலன் வரை அனைவரும் அழுகையில் கதறினர்.
பெண்கள் தரையில் புரண்டு அழ.. ஆண்கள் மௌனமாய் கண்ணீர் வடித்தனர். கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட மாடுகள், இருபது ஆடுகள், முப்பதுக்கும் மேற்பட்ட கோழிகள், என அனைத்தும் பிணமாக நிலத்தில் கிடந்தன.
திசையெங்கும் அழுகுரலின் ஓலம் எதிரொலித்தது.
முதலில் நீர் அருந்திய கருப்பு காளை மயங்கி சரிய.. என்னவென்று குடும்பத்தார் உணரும் முன்னர் அடுத்தடுத்து அனைத்தும் மயங்கி சரிந்தன.
உடலின் வலியாலும் மருந்தின் வீரியத்தாலும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கனியும் அழுகுரலின் ஒலியில் நடக்க முடியாமல் அங்கு வந்து சேர்ந்தாள்.
தனது உடல்நிலையையும் மறந்தவளாய் கலாவின் மடியில் படுத்து கதறினாள்.
கவியின் அழுகை கோபமாக மாறியது… சாமிக்கண்ணுவை வெட்டும் அளவிற்கு அவனது ஆத்திரம் வெறியாக உருவெடுத்தது.
மாடுகளின் கயிற்றினை அருப்பதற்காக கையில் வைத்திருந்த கத்தியோடு அந்த நடுநிசி நேரத்தில் சாமிக்கண்ணுவின் வீட்டிற்கு சென்று கதவினை உடைத்து உள் நுழைந்தவன் அவனது படுக்கையறைக்குள்ளே அதிரடியாய் சென்று அவன் கழுத்தில் கத்தியினை வைத்து அழுத்தினான்.
கதவு திறந்த சத்தத்திலே கண் விழித்த சாமி… தன்னை சுதாரிக்கும் முன் கவி அவன் முன் அய்யனார் தோற்றத்தில் நின்றிருந்தான்.
இன்னும் ஒரு நொடி தான் சாமி மேலோகம் பறந்திருப்பார். கவியின் கோபம் உணர்ந்து அவன் பின்னோடு வந்திருந்த வெங்கட்டும், சீனுவும் அவனைத் தடுத்தனர்.
“என்னை விடுங்க, அவனை கொன்னா தான் என் ஆத்திரம் அடங்கும்” என்று திமிறியவன் அபியின் குரலில் அமைதியாகினான்.
கவி யார் சொன்னால் அடங்குவானென்று நன்கு தெரிந்ததால்… வெங்கட் அந்நேரத்தில் அபிக்கு அழைத்து கவியின் செயலை கூறி ஸ்பீக்கர் ஆன் செய்திருந்தார்.
“கத்தியை கீழே போடு கவி…”
அலைகற்றையின் வழியே அழுத்தமாக முழங்கியது அபியின் குரல்.
அபியின் வார்த்தைகளில், கையிலிருந்த கத்தியைக் கீழே போட்டவன்… சாமியை முறைத்து பார்த்தபடி வெளியேறினான். அவனது கண்களில் தெரிந்த வெறியில் வெங்கட்டும் ஒரு நொடி ஆடித்தான் போனார்.
“வாயில்லா ஜீவன்களை வதைத்து எங்க குடும்பத்தை பழித்தீர்க்க நினைத்த நீயெல்லாம் விலங்கினத்தில் சேர்வதற்கு கூட தகுதியற்றவன்” என்றார் வெங்கட்.
“எங்க பையன் அமைதியா இருங்கன்னு சொன்ன ஒரே காரணத்திற்காகத் தான் இப்போ உன்னை எதுவும் செய்யாமலிருக்கோம்” என்று சீனு சொல்லி முடிப்பதற்குள்,
“கிழிச்ச… உன் அப்பனால கூட என்ன ஒண்ணும் பண்ண முடியாது. இப்போ நீங்க கலங்கி நிக்கிற மாதிரி இனிமேலும் அனுபவிப்பீங்க… இதெல்லாம் நான் தான் செய்யறேன்னு நீங்க சொன்னாலும் சாட்சி இருக்கான்னு தான் கேப்பானுங்க.. நான் சாமிக்கண்ணு டா, என் சுண்டு விரலை கூட உங்களால் அசைக்க முடியாது” என்று கொக்கரித்தான்.
ஆனால் அபியின் பேச்சினை மீற முடியாமல் இருவரும் கையாளாகாத தனத்துடன் வெளியேறினர்.
அனைத்தையும் அலைபேசியின் வாயிலாக செவி மடுத்த அபி… இனியும் தாமதிக்கக் கூடாதென்று ஒரு முடிவெடுத்தான்.
தன் முடிவின்படி காலை எட்டு மணிக்கெல்லாம் யாரையோ பார்ப்பதற்காகக் கிளம்பிச் சென்றான்.
அவன் காரிலமர்ந்த சமயம்.. சர்மா அழைத்திருந்தார்.
“அபி… படம் அடுத்தவாரம் ரிலீஸ்… ப்ரோமோவிற்காக கவியும், சின்மயி’ம் **** தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்க வேண்டும். கவி எப்போ வர்றாங்க” எனக் கேட்டிருந்தார்.
“சார் சின்மயி மட்டும் ப்ரோமோவில் கலந்துகொள்ளட்டும்… ஆப்டர் மூவி ரிலீஸ் கவி வருவான். கவிக்கு இது தான் முதல் படம்… சோ, ஒரு கியூரியாசிட்டி கிரியேட் பண்ணலாம். சின்மயி இன்டெர்வியூ கொடுப்பதற்கு முன் நீங்க அவங்ககிட்ட எப்படி என்னென்ன பேசலான்னு சொல்லிடுங்க” என்றவன்… “ஐ ஹவ் ஒன் இம்போர்ட்டெண்ட் ஒர்க் சர்… கேட்ச் யூ லாட்டர்” எனக்கூறி காரினை தார் சாலையில் அதிவேகமாக செலுத்தினான்.
தனது மாமாவை கொல்ல நினைத்து… கனியை மாற்றி குத்தி உயிருக்கு போராட வைத்ததிலே சாமியின் மீது கொலைவெறியிலிருந்த அபி… இன்று, வாயில்லா ஜீவன்களை அழித்தவனை முற்றிலும் கருவறுக்க எண்ணினான். வீட்டில் எந்நேரமும் ஒலிக்கும் கால்நடைகளின் சத்தமும்… அவற்றின் அன்பினையும் நினைத்துப் பார்த்தவன் மனம் கனத்துப் போனது.
“பயிருக்கு தீ வைத்த அப்போவே உன்னை கொன்றிருக்க வேண்டும் சாமிக்கண்ணு… எந்தவொரு அரசியல் பலத்தில் இந்த ஆட்டம் போடுறியோ.. அந்த பலத்தையே உனக்கு எதிரா மாற்றி உன்னை நிர்மூலமாக்குறேன்” என்று மனதோடு சூளுரைத்தான் அபி.
அபி வர வேண்டிய இடத்திற்கு அதிவிரைவிலேயே வந்திருந்தான்.
அபியின் காரின் ஹாரன் ஒலியில் வாட்ச்மேன் கேட்டினைத் திறந்து சல்யூட் வைக்க, சிறு தலையசைப்பில் ஏற்றவன்… போர்டிகோவில் காரினை நிறுத்திவிட்டு பழக்கப்பட்ட வீட்டினுள் நுழைவதை போல் உரிமையுடன் உள் சென்றான்.
நீண்ட கால்களை எடுத்து வைத்து உள் வந்தவனை “வாப்பா” என்று வாஞ்சையுடன் ஒரு குரல் வரவேற்றது. அழைப்பு வந்த திசையில் பார்வையை பதித்தான். அங்கு நாற்பது வயது மிக்க பெண்மணி நடந்து வந்துகொண்டிருந்தார்.
மஞ்சள் பூசிய முகம், நெற்றியில் வட்ட வடிவில் குங்குமமிட்ட பொட்டு, முன் நெற்றியில் ஆங்காங்கே முடிகள் நரையோடியிருக்க… தன் நீண்ட ஈரக்கூந்தலை நுனியில் முடியிட்டு.. சாதாரண பருத்தி புடவையிலும் மாகாலட்சுமியைப் போன்று காட்சியளித்தார்.
“ஹாய் ஆண்ட்டி…”
ஆர்ப்பாட்டமாய் அழைத்தவனை…
“யாருடா நீ… இப்போ தான் இந்த ஆன்டி கண்ணுக்கு தெரிஞ்சனா… உனக்கு கல்யாணம் ஆனது கூட யாரோ மாதிரி பேப்பரில் பார்த்து தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு” என்று ஆதங்கப்பாட்டார் அவர்.
“அய்யோ ஆண்ட்டி இப்போ எதுக்கு இப்படி மூச்சு விடாம கோபப்படுறீங்க…. பாருங்க கோபத்துல உங்க அழகான முகத்தில் ரிங்க்ல்ஸ் வருது” என்று சிரியாமல் கூறியவன்… “ஆனாலும், உங்களை பார்த்தால் ஆண்ட்டி மாதிரியில்லை… உங்களுக்கு மட்டும் மேரேஜ் ஆகாம இருந்திருந்தா… நான் உங்களை அபேஸ் பண்ணியிருப்பேன்” எனக் கூறிக்கொண்டே அவரைத் தோளோடு அணைத்தான்.
“ச்சீ… போடா,” அவர் வெட்கப்பட்ட சமயம்…
“யாருடா அது என் பொண்டாட்டிக்கு ரூட் விடறது மட்டுமில்லாம கட்டிவேற பிடிப்பது” என்று இடியென முழங்கிய கம்பீரக் குரலில் இருவரது பார்வையும் மாடியில் பதிந்தது.
படிகளில் தன் வழக்கமான மிடுக்குடன் இடது கையால் வலது பக்க மீசையை முறுக்கிக் கொண்டே இறங்கிக்கொண்டிருந்தார் விக்ரம். அவரைப் பார்த்தால் ஃபோர்டி ப்ளஸ் என்று யாரும் கூற மாட்டார்கள். இன்னும் கட்டுக்கோப்பான உடலுடன் பார்ப்பதற்கு கம்பீரமாகவே இருந்தார்.
விக்ரமை பார்த்ததும், ஓடிச்சென்று அவரை இறுக்கி அணைத்த அபி… “யூ லுக்கிங் டூ ஹாட்” என்றான்.
அதற்கு அட்டகாசமாய் சிரித்த விக்ரம்.. “உன்னை விடவா அபி” எனக் கூறி அங்கு போடப்பட்டிருந்த நீண்ட கோச்சில் அமர்ந்து அபியையும் தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டார்.
அபியின் படத்தைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டிருக்க… கையில் தேநீர் கோப்பையுடன் வந்தார் நிவ்யா. விக்ரமின் நியா.
இருவருக்கும் கொடுத்தவர் நின்று கொண்டிருக்க.. தன் மனைவியின் கை பிடித்து தனக்கு மற்றொரு பக்கத்தில் அமர செய்தார் விக்ரம்.
தேநீரை பருகிய விக்ரம்… “என்ன நியா காபியில் சர்க்கரையில்லை” என்று முறையிட… “நான் போட்டேனே” என்று நிவ்யாவும் வாதிட்டார்.
இறுதியில் நீயே குடித்துப் பாரென்று விக்ரம் கோப்பையை நிவ்யாவிடம் நீட்ட, வாங்கி குடித்தவர் “சுகர் இருக்கே” எனக் கூற.. “எங்கே கொடு” என்று வாங்கிப் பருகிய விக்ரம் “இப்போ ரொம்ப தித்திப்பா இருக்கே” என்று நமட்டுச் சிரிப்புடன் கூறினார்.
(எல்லோருக்கும் தெரிந்த ஸீன் தான் பட் சின்ன புள்ள நான் என்ன பண்றது… 40+க்கு ரொமான்ஸ் ஸீன் என்ன வைக்கிறது தெரியலையே😁😁😁)
“போலீஸ் திருட்டு வேலை பாக்குறாங்க” என்று விக்ரமின் தோளில் அடி வைத்த நிவ்யா, “அபி சாப்பிட்டுதான் போகணும்” என்ற அன்பு கட்டளையுடன் கிச்சனிற்கு சென்று விட்டார்.
நிவ்யா சென்றதும் “அப்புறம் அபி” என்ற விக்ரமிடம்… “எப்படி அங்கிள் இந்த வயதில் கூட இவ்வளவு லவ் அண்ட் ரொமான்ஸ்” எனக் கேட்டிருந்தான்.
“எல்லாம் காதல் தான் அபி காரணம்… எங்க காதல் குறையாதவரை இந்த அந்யோன்யம் எங்களிடமிருக்கும். புரிதல் இருந்தாலே காதல் நன்கு வளரும்” என்று பதிலளித்தார் விக்ரம்.
அந்த நொடி தானும் வருவுடன் இவர்களைப் போலிருக்க வேண்டுமென்று அபியின் மனம் கூறியது. அவனுக்கே அவன் மனம் கூறியது ஆச்சரியத்தைக் கொடுத்தது.
“என்ன அபி மனைவி ஞாபகமா?” என்ற விக்ரமின் குரலில் தனது சிந்தனையிலிருந்து மீண்டவன் சிறு புன்னகையுடன் அதனை ஆமோதித்தான்.
“சரி அபி, உனக்கு என்ன ப்ரோப்ளம்?”
எனக் கேட்ட விக்ரமை பார்த்து… “அங்கிள் யூ ஆர் ஜீனியஸ்” என்றான் அபி.
“இதிலென்ன இருக்கு அபி இருபது வருஷமா போலீசா இருக்கேன் இது கூட கண்டுபிடிக்கலன்னா எப்படி.. ஒருத்தருடைய முகத்தை வைத்தே என்ன ப்ரோப்ளம்ன்னு சொல்லணும் அவன் தான் உண்மையான போலீஸ்காரன்.
நீ வந்து ட்வெண்ட்டி மினிட்ஸ் ஆச்சு இன்னும் உன் பிரண்ட் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை… சோ, ஏதோ பிராப்ளம் நீ என்னை பார்க்கத் தான் வந்திருக்கன்னு கெஸ் பண்ணிட்டேன்” என நீண்ட விளக்கம் கொடுத்தார்.
“அங்கிள், ரியலி யூ ஆர் இன்கிரிடிபெல்” என்று பாராட்டிய அபி… சாமிக்கண்ணுவைப் பற்றி அனைத்தையும்… இன்று வரை அவன் செய்த எல்லாவற்றையும் கூறினான்.
அமைதியாகக் கேட்டு முடித்த விக்ரம்… “என்னால இதுல என்ன செய்ய முடியும் அபி?”
விக்ரமின் கேள்வியில் அபிக்கு சிறு அதிர்வு தோன்றினாலும் அதனை மறைத்துக் கொண்டு, “ஏன் அங்கிள் அவன் அரசியல்வாதிங்கிறதால நீங்க தயங்குறீங்களா?” என்றவனைப் பார்த்து வெடி சிரிப்பு சிரித்த விக்ரம்… “இதை உன் பிரண்ட் ஈஸியா முடிச்சிடுவான், நீ அவன் கிட்ட சொல்றது பெட்டர்” எனக் கூறினார்.
“அங்கிள், ஐ காண்ட் அண்டர்ஸ்டாண்ட்… உங்களாலே முடியலன்ன அவனால எப்படி?”
“என்ன அபி நீ… எவ்வளவு பெரிய டிரைக்டர்.. இந்த சின்ன விஷியத்தைக் கூட புரிஞ்சிக்காம பேசுற” என்றவர். நான் நம்ம மாநிலம் சவுத் சோனுக்கு தான்ப்பா ஐஜி, சோ இந்த கேஸ் என்னால் சார்ச்ஜ் பண்ண முடியாது. பட் பின்னாலிருந்து சப்போர்ட் கொடுக்க முடியும். இப்போ, உன் பிரண்ட் தான் கள்ளக்குறிச்சி சரவுண்டிங் டிசி… டெபுட்டி கமிஷனர் ஆப் போலீஸ் சோ ஹீ வில் ஹெல்ப் யூ.”
அதில் முகமலர்ந்த அபி… “அவன் ஹைதராபாத்தில் போஸ்டிங்க் போட்டிருக்காங்க சொன்னானே அங்கிள்” என்ற அபியை கூர்ந்து பார்த்த விக்ரம்..
“நீங்க ரெண்டு பேரும் பேசி ரொம்ப நாளாகுதுன்னு நல்லா தெரியுது, உங்களுக்குள்ள என்ன பிரச்சினை நான் கேட்க போறதில்லை. பட் அவனுக்கு டூ மந்த்ஸ் முன்னாடி தான் கள்ளக்குறிச்சிக்கு போஸ்டிங்க் சேஞ் பண்ணாங்க” எனக் கூறி தனக்கு அலுவலகம் செல்ல டைம் ஆவதாகக் கூறி மாடியேறி சென்றார்.
உடனடியாக தான் கள்ளக்குறிச்சி செல்ல வேண்டுமென்பதை உணர்ந்த அபி.. நிவ்யாவிடம் கூறிவிட்டு புறப்பட,
“கடந்தக்காலத்தை மனதில் வைத்து, நிகழ் காலத்தை இழந்துடாத அபி.. உன் பிரண்ட் உன் காதலைப் பற்றியும், உங்களுக்குள்ளான பிரச்சினைப் பற்றியும் ஒருமுறை சொல்லி பீல் பண்ணான். மூவ் ஆன், லிவ் யூர் லைஃப் ஹேப்பிலி…” என்று உள்ளார்ந்த அன்புடன் கூறி அபியை அனுப்பி வைத்தார் நிவ்யா.
அபி செல்லும் முன் தன்னுடைய நண்பனின் மொபைல் எண்ணை மறக்காமல் வாங்கிச் சென்றான்.
நேராக பிலிம் சிட்டி சென்றவன் சர்மாவிற்கு அழைத்து நேரில் வருமாறு கூறினான்.
அபி அழைத்த முப்பதாவது நிமிடம் ஷர்மா அபியின் அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். அவரிடம் தன்னுடைய குடும்ப சூழலை எடுத்துக்கூறியவன்,
“இப்போ நான் அங்கு இருப்பது அவசியம்” என்பதையும் வலியுறுத்தினான்.
அபியின் நிலை அவருக்கு புரிந்தாலும், “நீ இங்கில்லாம எப்படி படத்தை ரிலீஸ் செய்வது” என்று தயங்கினார்.
“உங்க மீதும் என் திறமையின் மீதும் எனக்கு நம்பிக்கையிருக்கு சார், எங்கிருந்தாலும் படத்தின் வெற்றி உறுதி” என்றவனின் வார்த்தைகளில் நிம்மதியடைந்தவர்…
“நான் பார்த்துக்கிறேன்…” என்றவர் அபிக்கு அனுமதி வழங்கினார்.
அபி செல்லும் முன்னர் நிவாஸிடம் படத்தைப் பற்றிய தகவல்கள் எந்த அளவிற்கு எந்த நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டுமென்பதை தெளிவாக விளக்கிக்கூறினான். படம் ரிலீசாகவிருக்கும் இந்த நான்கு நாட்கள் இடைவெளியில் தினமும் படத்தைப்பற்றிய எதிப்பார்ப்பை மக்களிடம் எவ்வாறு அதிகரிக்க செய்ய வேண்டுமென்பதையும் கூறியவன், தன் ஆருயிர் நண்பனைக் காண புறப்பட்டான்.
செல்லும் வழியில் விக்ரமிற்கு அழைத்து… நான் உங்களை சந்தித்ததையும், அவனை பார்க்கவிருப்பதையும் உங்கள் மகனிடம் தெரியப்படுத்தி விடாதீர்கள் என்றான்.
மாலை வேளையில் கள்ளக்குறிச்சியை நெருங்கினான் அபி.
கள்ளகுறிச்சியின் பேருந்து நிலையத்தை கடந்து வலதுபுறமாக அபியின் கிராமத்திற்கு செல்ல வேண்டும். பேருந்து நிலையத்திற்கு அருகே கடும் டிராபிக் நிலவியது, இரண்டு பக்கமும் எந்தவொரு வாகனமும் ஒரு இன்ச் நகர்வதற்கு கூட இயலாத நிலையில் வாகனங்கள் முட்டிக்கொண்டு நின்றிருந்தன, நடுவில் மக்கள் கூட்டம் திரண்டிருக்க என்ன பிரச்சினை எனத் தெரியாமல் அபி காரிலே பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்தான்.
பொறுமையிழந்தவனாக கார் கண்ணாடியை இறக்கியவன் அருகிலிருந்த வாகன ஓட்டியிடம் என்னவென்று விசாரித்தான்.
அவர் கூறியதைக் கேட்டவனுக்கு எல்லோரையும் கொன்று போடுமளவிற்கு ஆத்திரம் வந்தது.
மாலை பள்ளி கல்லூரிகள் விடும் நேரம் அது, பேருந்துகள் கூட்டமாகவும்.. படிகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டும்.. பார்ப்பதற்கே நிறை மாத கர்ப்பிணி போல் காட்சியளித்தன.
நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் மாணவிகளுக்கு வழி விடாமல், படிகளில் தொங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் கலாட்டா செய்ய.. நடத்துனரின் அதட்டலில் வழி விட்டு இறங்கினர்.
மாணவி ஒருத்தி ஏறும் சமயம், பஸ் மூவ் ஆகியது. மாணவி படிகளை கடந்து மேலேறுவதற்குள்.. மாணவர்கள் கூட்டம் அடித்து பிடித்து பஸ்ஸில் ஏற, ஒருவன் பிடிமானத்திற்காக அப்பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுக்க, அவள் நிலைதடுமாறி பேருந்தின் வெளியே விழுந்த நொடி, பேருந்தின் சக்கரம் மாணவியின் மீது ஏறியிருந்தது.
மாணவி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தாள். காப்பாற்றுவோர் யாருமின்றி கிடைந்தவளை சுற்றியிருந்தோர் அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்.
இதனைக் கேட்டதாலே அபிக்கு வேடிக்கை பார்ப்பவர்களின் மீது கோபம் வந்தது. அடுத்த நொடி காரிலிருந்து இறக்கியவன் கூட்டத்தினை விலக்கிக்கொண்டு முன்னேறி சென்ற சமயம்… ஆறடி உயரத்தில்… கண்களில் கூலர்ஸ் அணிந்து, கை தசைகள் புடைத்து வெளியே தெரியுமளவிற்கு ஃபிட்டான வெள்ளை நிற டி சர்ட் மற்றும் காக்கி பேண்டில் மிகவும் கம்பீரமாகவும், தோரனையுடனும் ஒரு காவல்துறை அதிகாரி புல்லட்டில் வந்திறங்கினான். இறங்கிய வேகத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்திருந்த இன்ஸ்பெக்டரை பளாரென அறைந்தான்.
அவனின் அறையில் மொத்தக் கூட்டமும் இரண்டடி பின்னால் நகர்ந்தது.
அவனது செயல் அபிக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், அவனைப் பார்த்ததும் அபியின் வாய் தானாகவே முணுமுணுத்தது…
“சஞ்சய்.”
இன்ஸ்பெக்டரை அறைந்த மாத்திரத்தில் கை முஷ்டியை இறுக மடக்கி,
“டேமிட்…”
தொடையில் தட்டியவன்…
“எவ்வளவு தூரம் நாடு வளர்ச்சியடைந்தாலும் இன்னும் வேடிக்கை பார்க்கும் புத்தி மட்டும் நம்மை விட்டு போகாது இல்லையா?”
ஒரு வேங்கையின் சீற்றம் அவனது முகத்தில் பிரதிபலித்தது.
அபிக்கே சஞ்சுவின் இந்தக் கோப முகம் புதிது. அவனறிந்த வரை கல்லூரி நாட்களில் எந்தவொரு நிகழ்விற்கும் சஞ்சு சிறு கோபத்தைக்கூட பிரதிபலித்தது கிடையாது.
புல்லட்டில் வந்திறங்கியதுமே அபியை கண்டுகொண்ட சஞ்சு, அவனை உறுத்து விழித்தவாரே… “பெரிய ஆளுங்க கூட வேடிக்கை மட்டும் தான் பார்ப்பாங்க போல” என்று நக்கல் செய்தான்.
சஞ்சு வந்ததைப் பார்த்து தான், இனி அவன் பார்த்துக்கொள்வானென்று அபி அமைதியாக நின்றது. இது சஞ்சுவிற்கு தெரிய வாய்ப்பில்லை.
சஞ்சுவின் நக்கலில் சிரித்தாலும் அவனுக்கு பதிலடி கொடுக்க அபி தவறவில்லை.
“இப்போ நீங்களும் பேசி நேரத்தை வீணாக்குறீங்க” என்றான்.
அதில் தனது கூலர்ஸினை ஒற்றை விரலால் கீழிறக்கி… “இஸ் இட்!” என்றவன் தானே மாணவியைத் தூக்கி, ஆம்புலன்ஸ் வந்திராத காரணத்தால் போலீஸ் வாகனத்தில் ஏற்றி விரைந்து மருத்துவமனை செல்லுமாறு ஆணைபிரப்பித்தான்.
போக்குவரத்து காவல் அதிகாரியிடம் வாகன நெரிசலை சரி செய்யக் கூறியவன் கூட்டத்தாரிடம் திரும்பி… “இனியாவது வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தை மாற்றுங்க” எனக் கூறி தன் புல்லட்டிலேறி மருத்துவமனை நோக்கிச் சென்றான்.
செல்லும் முன் சஞ்சுவின் பார்வை அபியின் பார்வையோடு கலந்தது. அவன் தன்னை முறைக்கின்றானோ என்றே அபிக்குத் தோன்றியது.
‘இன்னும் சஞ்சுவுக்கு என் மேல கோபம் போகலயா… இந்நிலையில் அவனிடம் எப்படி உதவி கேட்பது” என்று யோசித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.
வீடு வந்தவனின் மனம் ஆயிரம் சிக்கல்களை நினைத்துக் கொண்டிருந்தாலும், கண்கள் அவனது மனையாளைத் தேடியது.
துளிர்விடும் 🌱.