சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 27

சருகு 🍂 27

அபி வந்த நேரம் பெரிய வீடே அமைதியாகக் காட்சியளித்தது. வீட்டிலுள்ளோரை தேடியபடி பின்பக்கம் சென்றான்.

அனைவரும் அன்றைய பொழுது நீர், உணவு மறந்து, எரிந்து சாம்பலாக உருகுலைந்திருந்த பட்டியில் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர்.

அபியைப் பார்த்ததும் விஷ்ணு அவனைக் கட்டிக்கொண்டு.. “அத்தான் எல்லாமே செத்துப்போச்சு.. கருப்பன் கூட உயிரோடில்லை” என்று கூறி அழுதான். அபிக்கும் கண்கள் கலங்கின. ஆனால், தேற்ற வேண்டிய நிலையில் தான் இருப்பதால் முயன்று தன்னை திடப்படுத்திக்கொண்டான்.

ஆண்கள் அனைவரும் ஆற்றங்கரை ஓரமிருக்கும் அவர்களுக்கான சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் உயிரிழந்த அனைத்து கால்நடைகளையும் மண்ணுக்கு இரையாக்கின கணத்த மனதுடன்,

பெண்களை தேற்றி குளித்து வீட்டை கவனிக்கச் சொல்லிய அபி நேராக வந்தது அங்கு தான்.

இறுதியாக அவர்கள் கருப்பனை புதைக்கும் சமயம் வந்து சேர்ந்தவன்… கருப்பனிடம் மண்டியிட்டு “கருப்பா” என்று வெடித்து சிதறினான். இவ்வளவு நேரம், தன் வீட்டு உறுப்பினர்கள் போன்றிருந்த உயிரினங்களின் இழப்பை அடக்கிக் கொண்டிருந்தவன், வாய்பிளந்து உடல் விரைத்து மண்ணில் கிடந்த கருப்பனைப் பார்த்ததும் கட்டுப்பாட்டினை இழந்தான்.

அபியை எழுப்பி இறுக்கி அணைத்து ஆறுதல் படுத்திய கவி… “அந்த சாமிக்கண்ணை உயிரோடு கூறு போடணும்” என்றான் அழுத்தமாக.

“அவனை கொல்றது ஒரு நிமிஷ வேதனை தான்… அவனை ஒன்றுமில்லாதவனாக்கி, தினம் தினம் சாகடிக்கணும் கவி. அதுக்கு பொறுமையா தான் இருக்கணும்” என்றான்.

“அவனை அழிக்க முடியுமா அபி…” எதிர்பார்ப்புடன் கேட்டிருந்தார் ரங்கநாதன்.

“நிச்சயமா” என்ற அபியிடம்..

“எப்படிடா?” என வினவினார் வெங்கட்.

“சஞ்சய்…”

அபிக் கூறிய ஒற்றைப் பெயரில்.. கவியின் கண்ணில் மின்னல் வெட்டியது.

“ஆனால், சஞ்சு…”

ஏதோ கூற வந்த கவியின் பேச்சினை தடை செய்தது அபியின் வார்த்தை.

“இப்போ இந்த ஏரியாவுக்கு சஞ்சு தான் டிசி.”

உனக்கு இது தெரியாதா என்ற பார்வையை அபி கவியிடம் வீசினான். அதன் அர்த்தத்தை உணர்ந்த கவி, “ரெண்டு மாசத்துக்கு முன்னாடி சஞ்சு தமிழ்நாட்டிற்கு மாற்றல் ஆவதாக சொன்னான். அப்புறம் நானும் படம் நடிப்பில் பிஸி… அவனிடம் பேசவேயில்லை” என்று விளக்கமளித்தான்.

அதன்பிறகு கருப்பனுக்கு இறுதி சடங்கு செய்துவிட்டு ஆற்றிலே குளித்து முடித்து அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

கிராமங்களில் வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால்.. மனிதனின் இறுதி சடங்கிற்கு செய்யப்படும் அனைத்து காரியங்களும் இவற்றிற்கும் செய்யப்படும்.

கிராம மக்கள் அனைவரும் விஷயம் கேள்விப்பட்டு அந்நேரத்திலே வந்துவிட்டனர். ஆனால், அவர்களும் கோபாலனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட அபி “நம்மால் இனி ஊர் மக்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் வர கூடாது” என்றவன்.. “அவர்களை இதில் தலையிடாம இருக்க சொல்லுங்க” என்றான் தனது தந்தையிடம்.

அதன் பிறகு அனைவரையும் ஒருவாறு தேற்றி.. உணவு உண்ண வைத்து அவர்களது அறைக்கு அனுப்பி வைத்தான் அபி. தன் தங்கையிடம் சென்று அவளது உடல்நிலை அறிந்துகொண்டவன் தானும் அறைக்குச் சென்றான்.

அறைக்குள் நுழைந்தவன் பால்கனிக்கு சென்று இருளை வெறித்தான்.

“அத்தான்” என்று செவியருகில் கேட்ட குரலில் திரும்பியவன், அங்கு நின்றிருந்த வருவை பார்த்து என்ன என்பதைப்போல் புருவம் உயர்த்தினான்.

“லாங் டிரைவ் பண்ணியிருக்கீங்க… இங்க வேற எல்லோரையும் சமாதானம் செய்யுறேன்னு ரொம்ப சோர்ந்து போயிட்டீங்க. ஆனால் ஒழுங்கா சாப்பிடவேயில்லை. இந்த பாலையாவது குடிங்க” என்று கையோடு கொண்டுவந்திருந்த பால் குவளையை அவனிடம் நீட்டினாள்.

பாலையும், அவளையும் மாறி மாறி பார்த்தவன்… “மேடம்க்கு என்ன புதுசா அக்கறையெல்லாம், நான் வேண்டான்னு விட்டுட்டு சொல்லாம கொள்ளாமல் போனவதான நீ… தயவு செய்து என் கண் முன்னாடி நிக்காதே.” பொறுமையாக ஆரம்பித்தவன் ஆதங்கத்தில் முடித்தான்.

ஆனால் அவளுக்கோ அவன் கோபத்தில் பேசுவதாக தோன்றியது.

கண்ணில் நீர் வடிய நின்றிருந்தவளை பார்க்க பார்க்க அபிக்கு உள்ளுக்குள் வலித்தது. உரிமையாக என்னிடம் பேசுபவள் இன்று தயங்கி தயங்கி பேசுவதே அவனது கோபத்திற்கு காரணம், அதனாலே அபி அவ்வாறு பேசினான்.

அவள் அழுவதை பொருக்காதவன், “இப்போ எதுக்கு அழுகுற… பொண்ணுங்க உங்களுக்கு தெரிஞ்ச ஒண்ணு அழறது தானா” என்று கேட்டவன் பால்கனி சுவற்றில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டியை கை முட்டியால் குத்தினான்.

தொட்டி உடைந்து சிதறிய சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள், அபியின் கையில் வழிந்த ரத்தத்தை கண்டு பதறினாள்.

“அய்யோ ரத்தம்” என்றவள் அவன் கை பிடித்து துடைக்க முயல, கையை உருவிக்கொண்டவன்… மெதுவாக, அழுத்தமாக.. “போதும் போடி” என்றான்.

அபியின் வார்த்தையில் ஒரு நொடி பின்னுக்கு அதிர்வுடன் நகர்ந்தவள்.. தனது கலங்கிய விழிகளை அவனது கோபம் பொங்கும் விழிகளில் கலக்க செய்து ஓடிவிட்டாள்.

வரு வெளியேறும் நேரம் உள்ளே நுழைந்த கவி… அபியை கடிந்துகொண்டான்.

“யாராவது ஒருவர் இறங்கி போவதில் தப்பில்லை” அபி என்றவனிடம்,

“மேடம் தான் இறங்கி வரமாட்டேன்னு அடம்பிடிக்கிறாங்க” என்க,

“ரெண்டுபேரும் இப்படியே சொல்லிட்டிருங்க, நீ உன் காதலை சொல்லும் வரை அவள் இப்படித்தான் இருப்பாள்” என மொழிந்தவன் அபியின் கையினை துடைத்து கட்டிட்டு சென்றான்.

தன்னுடைய அறைக்கு வந்த கவி.. கனியை மாத்திரை முழுங்கச் செய்து, தையலிட்ட வயிற்று பகுதியில் தானே களிம்பைத் தடவினான். ஏதோ கடமை போல் தினமும் தவறாது செய்பவனை நினைத்து வருந்தினாள். காதலனாக அவனது தொடுகைக்கு பெண் மனம் ஏங்கியது.

அவளது காயத்திற்கு மருந்திட்டவன் தன் கடமை முடிந்ததாக எண்ணி தரையில் போர்வையை விரித்து படுத்துவிட்டான். இரண்டு வார காலமாக இது நடப்பது தான், இன்று ஏனோ அவளுக்கு மிகவும் வலித்தது. தன் பக்க தவறினை தாம் தான் சரி செய்ய வேண்டுமென்று நினைத்தவள்.. தன் மனநிலையை அவனிடம் தெளிவாக எடுத்துக்கூற முடிவு செய்தாள்.

இருட்டில் மெல்ல கட்டிலிலிருந்து இறங்கியவள்.. கீழே படுத்திருக்கும் கவியின் அருகில் அமர்ந்தாள். அவள் தூங்காது எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறாளென்று உணர்ந்தவன் தானும் தூங்காது விழிகளை மட்டும் மூடி அவளது செயல்களை கவனித்திருந்தான்.

கனி தன்னருகில் அமர்ந்ததும் என்ன செய்கிறாளென்று பார்ப்போமேன எழாமல் அமைதியாகவே படுத்திருந்தான்.

மெல்ல “மாமா” என அழைத்தவள், அவன் அசையாதிருக்கவும் சிறு தயக்கத்துடனே அவனது தோள் தொட்டு எழுப்பினாள். அப்பவும் கவி வீம்பாக படுத்திருக்க கனிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. சிறு விசும்பலுடன் எழப்போனவளை கரம் பிடித்து தடுத்து நிறுத்தியவன், எழுந்து விளக்கினை ஒளிரச் செய்தான்.

அவளருகிலமர்ந்து.. “இப்போ எதுக்கு இப்படி டேம் திறந்து விட்டுட்டிருக்க,” என தலையில் கொட்டினான்.

“மாமா…”

“சொல்லு கனி…”

“இப்போலாம் ஏன் நீங்க டி போட்டு கூப்பிடுறதில்லை?”

“உனக்கு நான் அப்படி கூப்பிட்டா பிடிக்காதே!”

“நான் எப்போ சொன்னேன்.”

“நீ சொல்லலதான், இருந்தாலும் அன்னைக்கு நீ அப்படி பேசினப்புறம் சகஜமாக அப்படி கூப்பிட முடியல.”

உண்மையை மறைக்காமல் கூறினான்.

“அப்போ என்னை மன்னிக்க மாட்டீங்களா?”

கண்ணீர் சிந்தும் விழிகளுடன் அவனை ஏறிட்டு வேதனையுடன் கேட்டாள்.

அவளே, இவ்வளவு வெளிப்படையாக கேட்கும் போது தானும் ஒளிவு மறைவின்றி பேசுவது தான் நல்லது என நினைத்தவன், “உன் மேல என்னால் கோபப்பட முடியாது கனி, உன்மேல தப்பில்லை” எனும் போது இதில் மன்னிக்க என்னயிருக்கு. நானும் உரிமை உணர்வில் ஏதோ செய்துட்டேன். அதுக்கு நீ தான் என்னை மன்னிக்கணும்” என்று கூறியவனின் வாயினை கரம் கொண்டு மூடி தலையை இட வலமாக ஆட்டியவள் அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

“அப்புறம் எதுக்கு மாமா என்னோட சரியா பேசாம, என் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காம இருக்கீங்க.. என்னை பிடிக்கலயா?”

சிறு பிள்ளையென கேட்டவளை அள்ளி அணைக்கும் வேகம் எழுந்தாலும் அதனை அடக்கியவன்.. “நீ சொன்ன வார்த்தைக என்னைத் தடுக்குது” என்றான் பட்டென,

அதில் அவனிடமிருந்து விலகியவள்… “நான் தெரிஞ்சு அப்படி பேசல” எனக் கூறி தன் மனநிலையைத் தெளிவாக அவனுக்கு புரிய வைத்திடும் நோக்கில் விளக்கிக் கூறினாள்.

அவளது விளக்கத்தில் தெளிந்தவன்.. “அவளின் சிறு வயது நிலையை எப்படி மறந்துப் போனேன்” எனத் தன்னையே கடிந்து கொண்டான்.

அப்போ அன்று தன் தொடுகையை அவள் அருவெறுப்பாக நினைக்கவில்லை, தன் காதலையும் கொச்சைப் படுத்தவில்லை… அன்று இருட்டில் அவளுக்குள் எழுந்த பழைய நினைவே அவளை அவ்வாறு பேச வைத்துள்ளதென்று நன்கு உணர்ந்த கவியின் மனதிலிருந்த திரை மெல்ல விலகியது.

பழைய நினைவுகளின் தாக்கத்தில் அழுது கொண்டிருப்பவளை இந்த முறை எந்தவித தயக்கமுமின்றி கட்டி அணைத்து ஆறுதல் படுத்தினான்.

“மன்னிச்சிட்டியா மாமா?” என்றவளை செல்லமாக முட்டி, “நான் தான் அன்னைக்கே சொன்னனே அதை மறந்துட்டேன்” என்றவன் அவளது அழுத விழிகளுக்கு தன் முத்திரையை பரிசளித்தான்.

அவனது தொடுகையும் முதல் முத்தமும் அவளுக்கு உள்ளுக்குள் என்னவோ செய்தது. தன்னிடத்தில் உருகி குழையும் அவளது உடலின் நெருக்கத்தை உணர்ந்தவனின் தாபம் அதிகரித்தது. கண்களில் ஆரம்பித்த முத்தம் அவளது கழுத்து வளைவில் வந்து புதைந்தது.

கணவனின் முத்த வேட்கையில் தன்னை மறந்தவள் கண் மூடி அவனுக்கு ஒத்துழைத்தாள். கவி தன்னவளை இறுக்கி அணைக்க, வயிற்றில் உள்ள தையளில் ஏற்பட்ட வலியால் அவள் ஸ் என முனங்கினாள். அதில் பதறி விலகியவன் “சாரி டி…”

அவனைத் தடுத்தவள் மேலும் தன்னவனை ஒன்றினாள். மனைவியின் இணக்க நிலை கணவனாக அவனுக்கு கர்வத்தை கொடுத்தது. 

கவி அமைதியாக அவளை வருடிக் கொண்டிருந்தான்.. சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள், அவன் ஒன்றும் செய்யாதிருக்க கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.

மனைவியின் ஏக்கப் பார்வையை புரிந்துகொண்டவன்.. “எல்லா பிரச்சனைகளும் சரியாகனும்.. அபி வரு வாழ்க்கை சீராகனும்.. முதல்ல என் ப்ரூட்டி உடல் நிலை குணமாகனும்” என்று அவளது தாடையை பிடித்து ஆட்டியவன்… “காலம் நமக்கு நீண்டு கிடக்குடா” என்று அவளது நெற்றியில் முத்தம் வைத்தான்.

“அதான் ஒன்றுமில்லைன்னு சொல்லியாச்சுல அப்புறம் எதுக்குடா முத்தம் கொடுக்கிற” என்றவளை தன் கைவலைவில் கொண்டு வந்து, “அது மட்டும்தாண்டி இப்போதைக்கு வேண்டான்னு சொன்னேன்.. அதுக்காக சுத்தமா ஒண்ணுமே இல்லாமல் மாமனை காயப் போட்டுடாதடி” எனக் கூறி அவளது இதழினை முற்றுகையிட்டான்.

அவன் ஆரம்பித்த முத்த யுத்தத்தை பேதையவள் முடிவுக்கு கொண்டு வந்தாள்.

நேரமாவதை உணர்ந்து, “நீ போய் படுத்துக்கோ” என்றவனை வெட்டவா குத்தவா என்று முறைத்தாள்.

“இப்போ எதுக்கு காளி அவதாரம் எடுக்கிற?” எனக் கேட்டவனிடம்.. “நீயும் மேலயே படுத்துக்கோ மாமா” என்று கட்டிலைக் காண்பித்தாள்.

“இவ்வளவு நாள் உன் மமேல மன வருத்தத்தில் இருந்ததால் என்னை கட்டுப்படுத்திக்க முடிஞ்சது. ஆனால், எல்லாம் சரியான பிறகு வந்த நெருக்கம் என்னை நிச்சயம் சும்மா இருக்க விடாது” என்றான்.

“ஆமாம்… கட்டிலுக்கும் தரைக்கும் கடலளவு தூரம் இருக்கு பாரு” என நொடித்துக் கொண்டவள் அமைதியாக சென்று படுத்துகொண்டாள். அவளது வார்த்தைகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோஷமாக சிரித்தவன் தானும் கட்டிலில் அவளின் மீது கைபோட்டவாறு படுத்தான். கணவனின் ஸ்பரிசம் உணர்ந்து அவன் புறம் திரும்பியவள் கணவனை கட்டிக்கொண்டு உறங்கிப்போனாள். இப்போதைக்கு மனைவியின் நெருக்கமே ஆறுதலாக இருக்க… அவனையும் நித்திராதேவி ஆட்கொண்டாள்.

காலை எழுந்ததும் வழக்கம்போல தோட்டத்திற்கு வந்த வரு பட்டியை பார்க்க… நேற்று நடந்த சம்பவம் கண் முன்னே விரிந்தது. அதில் மனம் கணத்து கண்களில் நீர் வழிய தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள். நேரம் செல்வதை உணராமல் அமர்ந்திருந்தவளின் தோளில் ஒரு கரம் படிந்தது.

அது அபியென்றதும்… அனைத்தும் மறந்தவளாக, “அத்தான்” என்ற விளிப்புடன் அவனைக் கட்டிக்கொண்டு.. “எனக்கு நம்ம ஆடு மாடெல்லாம் வேணும்” என அழுதாள். அவளது அணைப்பில் ஒரு நொடி தடுமாறினாலும் இப்போது தன் அதட்டலே அவளது அழுகையினைக் கட்டுப்படுத்தும் என அறிந்தவன்.. அவளைத் தன்னிலிருந்து பிரித்தெடுத்து.. “இப்போ எதுக்கு இப்படி அழற.. எல்லாருக்கும் தான் வருத்தம் இருக்கு. அதுக்காக உன்னை மாதிரி அழுதுட்டேவாயிருக்காங்க” என்றவன், “போ போய் வேலையைப்பார்” என்று கடிந்தான்.

அபியின் கோபத்தில் மற்றவை பின்னுக்கு செல்ல.. இப்போவெல்லாம் ஏன் என் மீது எறிந்து விழுகிறாரென்ற சிந்தனையோடு.. அழுகையை நிறுத்தியவளாய் வீட்டிற்குள் சென்றாள். காரணமேயின்றி அவனை விட்டு வந்ததை இன்னும் அவள் உணரவேயில்லை போலும். அபியின் மனமும், கடந்த காலமும் தெரிந்த பின்னர் என்ன செய்வாளோ!

வீடு பழையபடி காட்சியளித்தாலும்…. தாம் தம் வேலைகளை சரியாக செய்ய ஆரம்பித்திருந்தாலும், அங்கிருப்போரின் மனம் என்னவோ சோகத்தில் தான் இருந்தது.

வீட்டு பிள்ளைகள் போல் பராமரித்த கால்நடைகள் போன சோகம் அவர்களை விட்டு நீங்கவில்லை. பேருக்கு உண்டு நடமாடினர். கோபாலன் முற்றிலும் ஒய்ந்துபோனார்.

காலை எழுந்ததும் அன்றாட பணிகளை முடித்து, முதல் வேலையாக கவியை அழைத்துக்கொண்டு அபி வந்த இடம் காவல் நிலையம்.

இடம் : டெபுட்டி கமிஷனர் அலுவலகம்.

மணி : ஒன்பது முப்பது.

அபி மற்றும் கவி உள்ளே சென்று கான்ஸ்டபிள் ஒருவரிடம் டிசி’யை பார்க்க வேண்டும்… அர்ஜெண்ட் எனக் கூறினர்.

அபி இயக்குனராக பிரபலமானவன் என்பதால்.. கான்ஸ்டபிள் இருவரையும் பவ்யமாக வரவேற்று காத்திருப்போர் இருக்கையில் அமர வைத்துவிட்டு, “சார் ரவுண்ட்ஸ் போயிருக்கார்.. வர டைம் தான் சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” எனக் கூறிச் சென்றார்.

திடீரென அலுவலகம் பரபரப்புக்குள்ளானது. என்னவென்று இருவரும் வாயிலை நோக்க… காக்கி உடையில் ஒரு வேங்கை போன்று நடந்து வந்துக்கொண்டிருந்தான் டிசி.திரு. சஞ்சய் ஐ.பி.எஸ்.

“போலீஸ் ஆனா நல்லா கெத்தா மாறிவிடலாம் போலடா! நம்ம சஞ்சு சும்மா எப்படி நடந்து வரான் பாரு” என்று கவி சிலாகித்துக் கூற, “இதெல்லாம் நான் நேத்தே பார்த்தாச்சு” என்றான் அபி.

அலுவலகத்தில் நுழைந்ததுமே இருவரையும் கண்டு கொண்ட சஞ்சய்… கவியை நெருங்கி “மச்சான்” என்று அணைக்க.. கவியோ “மாப்ள” என்ற உற்சாக கூவலுடன் சஞ்சுவை இறுக்கினான்.

இருவரது நெருக்கமும் அபிக்கு புகையை வரவழைத்தது.

அலுவலகமே சஞ்சுவின் உற்சாக செயலை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருக்க, கவியை விடுத்தவன் தன் பார்வையாலே அனைவரையும் தாம் தம் வேலைகளை செய்ய பணித்தான்.

“அப்புறம் மச்சான் எப்படியிருக்க.. பெரிய ஹீரோ ஆகிட்ட,” என்று கவியிடம் கேட்ட சஞ்சய் அபியை சுட்டிக்காட்டி, “யாருடா இவரு” என்றான்.

அவனது கேள்வியில் அபிக்கும் சஞ்சுவின் மீது சிறு கோபம் எட்டிப்பார்த்தது.

‘இவனுங்க ரெண்டு பேருமே என்னால் தான் பிரண்ட் ஆனானுங்க, இப்போ என்னையே யாருன்னு தெரியாத மாதிரி நடந்துக்கிறான்..’ வாய்க்குள் கூறிக்கொண்ட அபி சஞ்சுவின் பெயர் மாட்டப்பட்டிருந்த அறையை நோக்கி உரிமையுடன் சென்று இருக்கையில் அமர்ந்தான்.

“என்னடா பச்சை மிளகாய் செம காரமா இருக்கான் போல” என்ற சஞ்சு.. “ஆமா, நான் தானடா இங்க போலீஸ்.. இவன் என்னவோ சட்டமா போறான், அவன் அறை மாதிரி, கொஞ்ச நேரத்தில் நான் போலீஸே இல்லன்னு என்னை நம்ப வைத்திடுவான்” எனக் கூறி கவியை அழைத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்றான்.

உள்ளே நுழைந்த சஞ்சு அங்கு அமர்ந்திருந்த அபியின் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தான். அதனை சிறிதும் கண்டு கொள்ளாத அபி, “சாருக்கு கோபம் போயிடுச்சா?” என வினவினான்.

அதற்கு சஞ்சய்… “பெர்செனல் விஷயம் பேசுற மாதிரியிருந்தா ஈவினிங் வீட்டுக்கு வாங்க” என்றான் அழுத்தமாக.

சஞ்சுவை முறைத்துக்கொண்டே தான் வந்தக் காரணம், இதுவரை சாமிக்கண்ணு செய்த செயல்கள் யாவையும் கூறினான். அன்று கவி கத்தியோடு சாமியின் வீட்டிற்கு சென்ற போது… அவன் என்னை ஒன்றும் சேய்ய முடியாதென கொக்கரித்ததை மொபைல் லைனில் இருந்த அபி ரெக்கார்டு செய்திருந்தான். அதையும் போட்டுக் காட்டினான்.

இறுதியில், “கம்ப்லையண்ட் ஏதாவது அபிசியலா கொடுக்கணும்ன்னாலும் ரிட்டர்ன் ஸ்டேட்மெண்டா எழுதி தர்றேன்” என்றான்.

“நான் ஏற்கனவே அந்த சாமிக்கண்ணுவைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். இந்த தொகுதி அமைச்சர் அப்டிங்கிறதால அவனால நிறைய லா அண்ட் ஆர்டர் பிரோப்ளேம், எல்லாத்தையும் முடிவுக்கட்ட நானும் அவனுக்கு எதிரான ஆதாரங்களை எல்லாம் கிட்டத்தட்ட சேகரித்துவிட்டேன்.”

“அவன் மேல் கம்ப்ளெயின்ட் கொடுக்க ஆளில்லாமதான் எப்படி நெருங்குவதென்று யோசித்துக்கொண்டிருந்தேன். நீ இப்போ சொல்றத பார்த்தால் அவன் மீது உடனடியா நடவடிக்கை எடுக்க வேண்டும்போலிருக்கே.

நடவடிக்கை தானே எடுத்துறுவோம்… நடவடிக்கை எடுத்துறுவோம்…”

விஷம புன்னகை தவிழ கூறியவன், நாளையே அதற்கான முதல் அடியை எடுத்து வைக்கின்றேன் எனக் கூறினான்.

செல்லும் போது, “அங்கு ரைட்டரிடம் ரிட்டர்ன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துடுங்க” என்றான்.

இருவரும் இருக்கையிலிருந்து எழுந்ததும்,

“நீ கடந்த காலத்திலிருந்து மீளாம இருந்ததாலே உன் மேல கோபம இருந்தேன். எப்போ உனக்கு மேரேஜ் ஆகிடுச்சு தெரிந்ததோ அந்த நொடியே என் கோபமெல்லாம் போய்விட்டது. நீ நல்லாயிருக்கணும் அபி” என்ற சஞ்சுவை நீண்ட பிரிவிற்கு பிறகு மிக இறுக்கமாக ஆரத் தழுவினான் அபி.

என்றும் போல் இன்றும் கவிக்கு அவர்களது நட்பு ஆச்சரியமாகவே இருந்தது.

அபி தன் காதல் தோல்விக்கு பிறகு மிகவும் ஓய்ந்துவிட்டான். சஞ்சு எவ்வளவு எடுத்து சொல்லியும் அதிலிருந்து வெளிவர அபி முயலவில்லை. அதுவே இருவருக்கும் பிரிவை ஏற்படுத்தியது. இருவரும் பிரிந்திருந்தாலும், ஒருவரது நலனை மற்றொருவர் கவியின் மூலம் அறிந்து கொண்டனர். சஞ்சு கவிக்கு அழைக்கும் போதெல்லாம் அபியை பற்றி விசாரிக்காமல் விட மாட்டான். அபியும் சஞ்சு அழைப்பை உணர்ந்து மறைமுகமாவது கவியிடம் அவனைப் பற்றி கேட்டு தெரிந்துகொள்வான்.

அவர்கள் இருவரும் விலகுவதாக தெரியவில்லை.

“டேய்… போதும்டா…

பொண்டாட்டியை கட்டிபிடிக்க வேண்டிய வயசில் இப்படி நீங்க ரெண்டு பேரும் கட்டிபிடிச்சிட்டு நிக்குறீங்களே டா” என்று கலாய்த்த கவியின் குரலில் இருவரும் நகர்ந்து நின்றனர்.

அபியும் கவியும் விடைபெற்ற பின்னர்.. சாமிக்கண்ணுவை அடியோடு சாய்க்க திட்டம் வகுத்தான் சஞ்சய்.

சஞ்சுவின் முதல் அடியாக சாமியின் வீட்டுக்கு வருமானவரித் துறையினர் தங்களது தேடுதலை ஆரம்பித்தனர். அவர்களுடன் சஞ்சுவும் சாமியின் வீட்டுக்கு வருகை தந்திருந்தான்.

ஒரு நாள் முழுக்க நடைபெற்ற சோதனையில், சுமார் நானூற்றி ஐம்பது கோடி மதிப்பிலான சொத்துக்கள் கையகப் படுத்தப்பட்டன. அடுத்த அரை மணி நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சாமிக்கண்ணு நம் சஞ்சுவால் கைது செய்யப்பட்டார்.

தனிமரமான சாமிக்கு உதவி செய்வதற்கு யாரும் முன்வரவில்லை.

அவனது கட்சி மேலிடமும் கைவிரித்துவிட்டது. சாமிக்கண்ணுவின் அளவுக்கு அதிகமான சொத்துக்குவிப்பில் அவரது கட்சிக்கும் பங்கு உண்டு என ஊடகங்கள் பரப்பிய செய்தியில், எங்கு கட்சியின் பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என பயந்த அக்கட்சியின் தலைவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே சாமியை நீக்கம் செய்தார்.

சாமியின் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் அனைத்தும் அரசாங்கத்தின் கீழ் மாற்றம் செய்யப்பட்டது. அவன் வளைத்துப் போட்டிருந்த அனைத்து நிலங்களும் புறம்போக்கு நிலமென்பதால், அவை யாவும் அரசாங்கத்துக்கே உரித்தானது. இறுதியில் அவனுக்கு எஞ்சியது, அவன் வாழ்ந்திருந்த வீடு மட்டுமே.

இன்னும் இரண்டு தினங்களில் சாமிக்கண்ணுவின் வழக்கு நீதிமன்றத்திற்கு வரவிருக்கின்றது.

விஷயமறிந்த அபி நேராக சஞ்சு வசிக்கும் காவலர் குடியிருப்பு பகுதிக்கே சென்று தனது நன்றியைத் தெரிவித்தான்.

சொத்துகுவிப்பு வழக்குடன், நீ அளித்த வழக்கும் சேர்ந்து நிச்சயம் சாமிகண்ணுக்கு தண்டனை கிடைத்துவிடுமென்ற சஞ்சுவின் வார்த்தையில் நம்பிக்கைக்கொண்ட அபி ஒருநாள் கட்டாயம் வீட்டுக்கு வரவேண்டுமென்ற கட்டளையுடன் அவனிடமிருந்து விடைபெற்றான்.

அபியின் படம் வெளியாகும் அன்று தான் சாமிக்கண்ணுவின் தீர்ப்பும்.

அன்று மிகுந்த பரபரப்புடன் அபி நடமாடிக்கொண்டிருந்தான். ஒரு பக்கம் படம் வெளியீடு. இன்னொரு பக்கம் கோர்ட், வழக்கு, தீர்ப்பு. பத்து மணியளவில் கோர்டிற்கு செல்ல வேண்டும்.

மிகவும் டென்ஷனாக காணப்பட்டான்.

“அபி… நிச்சயம் நீ படத்தைப் பற்றி நினைத்தெல்லாம் இவ்வளவு டென்சன் ஆக மாட்ட, கவலைப்படாதே தீர்ப்பு நமக்கு சாதகமாகவே வரும்” என்றுக் கூறி அவனது டெண்ஷனைக் குறைக்க முயன்றான்.

கனி, “நானும் கோர்ட்டுக்கு வரணுமா?” என்றதற்கு… “உன் உடல்நிலை கருத்தில் வைத்து நீ வர முடியாதுன்னு அல்ரெடி கோர்ட்டில் உன் மெடிக்கல் ரிப்போர்ட் சப்மிட் செய்தாச்சு” என்று தகவல் வழங்கிய அபி மணியை பார்க்க, அது ஒன்பது எனக் காட்டியது.

இப்போ கிளம்பினால் சரியாக இருக்குமென்று நினைத்தவன் கவியிடம் “போகலாம்” என்று அழைத்த சமயம்,

“ஒரு நிமிஷம் அத்தான்” என்று வரு தடுத்தாள்.

“இப்போ நேரமில்லை எதுவாயிருந்தாலும் நான் திரும்பி வந்ததற்கு பிறகு பேசிக்கொள்ளலாம்” என்றவனை மறித்து தான் பேசவேண்டியதை பேசினாள்.

கவியும், கனியும் அப்படியென்ன பேசப்போகிறாளென்று ஆர்வமாக கவனித்தனர். அந்த ஆர்வமெல்லாம் அபிக்கு இல்லை போலும், நீ சொல்ல வந்ததை சொல்லு என்பதை போல் நின்றிருந்தான்.

அபி யாரும் கோர்டிற்கு வர வேண்டாம் எனக் கூறியதால், ஆண்கள் அனைவரும் தங்களது வேலைகளை கவனிக்க வெளியில் சென்றிருந்தனர். விஷ்ணுவும் பள்ளி சென்றிருக்க, பெண்கள் மூவரும் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

இப்போது வீட்டிலிருப்பது இவர்கள் நால்வர் மட்டுமே…

அபியின் பார்வையை சளைக்காது நேருக்கு நேர் தாங்கிய வரு, அவன் முன் ஒரு வெற்று காகிதத்தை நீட்டினாள். அதனை வாங்காமலே அபி நிற்க, கவி தான்.. “என்ன வரு இது?” எனக் கேட்டிருந்தான்.

“இதுல என் கையெழுத்து இருக்கு,”

“எதுக்கு?” கேட்டது என்னவோ மீண்டும் கவி தான்,

“நான் அவங்க வாழ்க்கையிலிருந்து மொத்தமா விலகிக்கிறேன். அவங்க விரும்புற பொண்ணை திருமணம் செய்துட்டு நல்லா வாழட்டும், வேண்டா வெறுப்பா என்னை கூட வச்சிக்க வேண்டாம்.. அவங்க ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி என்னால நடந்துக்க முடியாது.. அவங்க ஒரு பொண்ண விரும்புறாங்க தெரியும்.. அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் நிச்சயம் நான் குறுக்க வர மாட்டேன். அதுக்கு தான் இந்த கையெழுத்துப் போட்ட பேப்பர்” என்றாள்.

வரு பேசியதும்.. “அவ்வளவு தானே” என்றவன், ஒரு அடிப்பட்ட பார்வையை கவியின் மீது வீசிச் சென்றான்.

அப்பார்வையின் பொருளுணர்ந்த கவிக்கு வருவின் மீது கோபம் கோபமாக வந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் அருகிலிருந்த, தண்ணீர் நிறைந்த கண்ணாடி குவளையை தரையில் போட்டு உடைத்தான்.

“அண்ணா…” என்று அலறிய வருவை, தன் வாய் மீது விரல் வைத்து, “எதுவும் பேசாத” என்றவன்..

“அபி பார்த்த பார்வைக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு.. இப்போ நீ செய்த காரியத்தால் அவன் மனம் உள்ளுக்குள் எப்படி நொறுங்கியிருக்கும் தெரியுமா…?” முதன் முறையாக தன் தங்கையிடம் வெடித்துச் சிதறினான்.

“அவரைப்பற்றி மட்டும் யோசிக்கிறீங்களே, என்னை என் மனம் உங்களுக்கு புரியாதா?” ஆற்றாமையுடன் கேட்டவளை உற்று நோக்கி,

“உன்னை புரிஞ்சிக்காமதான் நீ அங்கிருந்து காரணமேயில்லாம வந்த பிறகும் வாவென்று அழைத்தானா?” அடக்கப்பட்ட சினம் கவியின் குரலில் இருந்தது.

“நீங்க சொல்லித்தான் அவர் அழைத்திருப்பார்.”

என்ன சொன்னாலும் பதிலுக்கு பதில் பேசுபவளுக்கு எப்படி அபியின் காதலை புரிய வைப்பேன் என்று ஆயாசமாக உணர்ந்தான்.

கவி அதற்கு மேல் வாதிடாமல் அமைதியாயிருக்க வருவே தொடர்ந்தாள்.

“நான் சொல்லியதில் அவருக்கும் விருப்பம் இருப்பதால்தான எதுவும் மறுப்பு தெரிவிக்காம சென்றுவிட்டார். அவருக்கும் என்னை எப்படியாவது கழித்து கட்டி அவுங்க காதலியோட நிம்மதியா வாழணும்.. (முதல் நாளே நீ தான் விவாகரத்து கேட்டு அவனை கழித்துக் கட்ட நினைத்ததை மறந்து விட்டாயா வரு).. என் வாழ்க்கை எப்படி போனாள் என்ன?”

பேசிக்கொண்டிருந்தவள் தரையில் தொப்பென்று விழுந்தாள். அதன் பின்னரே அறிந்தாள் தன் அண்ணன் தன்னை அடித்திருக்கிறானென்று.

கனி அதிர்ச்சியின் உச்சத்தில் சிலையென நின்றாள்.

“இன்னொரு வார்த்தை என் அபி பற்றி ஏதாவது பேசுன.. கொன்னுடுவேன்.”

விரல் நீட்டி எச்சரித்த கவி, பின்னந்தலையை தடவி… ஆழ்ந்த மூச்சினை வெளியேற்றி தன்னை நிலைப்படுத்தினான்.

“ஏன் இப்படி இருக்கீங்க… ஏற்கனவே ஒரு பொண்ணால மொத்தமா சிதைந்து போயிருந்தவன… மீண்டும் ஏன் உயிரோடு வதைக்கிற. செத்தவனை மீண்டும் மீண்டும் எத்தனை முறை தான் சாவடிப்ப. அவன் உன்னை காதலிக்கிறான். எப்போ புரிந்துகொள்ளப்போற.

எத்தனை முறை தான் காதலினால் அவன் வாழ்வு நாசமாகுமோ?

அவன் காதலிக்கும் பெண்ணோடு வாழ சொல்றியே. அவன் அவளோட வாழ அவள் உயிரோட இருக்கணுமே” என உரக்கக் கூறினான்.

கவி கூறியதைக் கேட்டதும் வருவிற்கு இதயம் இரண்டாக உடைந்ததை போலிருந்தது. அவன் உன்னை காதலிக்கிறான் என்ற போது நம்பாத பார்வையை வீசியவள்.. அபி காதலித்தப் பெண் உயிரோடில்லை என்றதும், அபி எப்படி துடித்திருப்பான் என்று வருந்தினாள். அவன் உணர்ந்த வலியை இப்போது அவள் உணர்ந்தாள்.

“காயம்பட்ட அவன் இதயத்திற்கு நீ மருந்த இருப்பன்னு நினைத்தேன்.. ஆனால் நீ மேலும் ரணப்படுத்தும் கத்தியா தான் இருக்க” என்ற கவி, வருவை நேருக்கு நேர் பார்த்து… “உன்னை அவன் ஏன் ஏற்க முடியாமல் தவிக்கிறான் என்பதை நீ முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, அவனின் கடந்த காலம் உனக்குத் தெரிய வேண்டும்” என்றவன் அபியின் முதல் காதல் வாழ்க்கையைக் கூற ஆரம்பித்தான்.

**********

கோர்ட்டிற்கு தான் மட்டும் வந்த அபி வருவின் வார்த்தைகளிலே உழன்று கொண்டிருந்தான். மேலும் மேலும் தன் வலி அதிகரிப்பதைப்போல் உணர்ந்தான்.

அவனை கவனித்த சஞ்சு, “ஆர் யூ ஓகே அபி” என்க, சிறு புன்னகையுடன் “அம் குட்” என்றான்.

சாமிக்கண்ணுவின் வழக்கை முழுவதுமாக விசாரித்த நீதிபதி..

சொத்துகுவிப்பு, பொது நிலங்கள் ஆக்கிரமிப்பு, பயிர் எரிப்பு, கொலை முயற்சி, அப்பாவி கால்நடைகளுக்கு தீ மற்றும் விஷம் அளித்தது.. ஒரு பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு இப்படிப்பட்ட இழிவான செயல்களை செய்ததற்காக ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார்.

சஞ்சு… சாமியின் சகாக்களை புரட்டி எடுத்தத்தில், அவர்கள் எந்தவித பூசலுமில்லாமல் உண்மையை கோர்ட்டில் கூறியதால் குற்றம் உறுதி செய்யப்பட்டு எளிதில் வழக்கு முடிந்தது.

அபி சஞ்சுவின் கரம் பற்றி நன்றி தெரிவித்தான்.

“வீட்டுக்கு வாடா” என்று அபி அழைக்க…

“என்னை கேரளாவிற்கு மாற்றம் செய்துள்ளனர். நேர்மையா இருந்தால் இது தான் அடிக்கடி நடக்கும். இந்த வழக்கிற்காக தான் இங்கிருந்தேன். நாளை நான் அங்கிருக்க வேண்டும். அதற்கு இப்போதே கிளம்ப வேண்டும். இன்னொரு நாள் வருகிறேன்” எனக் கூறிய சஞ்சய் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரிலேறி, தன் அடுத்த அப்பரேஷனுக்காக கேரளா பயணமானான்.

நாமும் டிசி.சஞ்சய் அவர்களுக்கு விடை கொடுப்போம்.

சஞ்சுவை வழியனுப்பிய அபியின் மனம் முழுக்க வருவின் வார்த்தைகளே வலம் வந்தன. வீட்டுக்கு செல்ல விருப்பமில்லாமல், தனது தந்தைக்கு அழைத்து தீர்ப்பை பற்றி கூறியவன்.. அங்கிருந்தே சென்னை கிளம்பிவிட்டான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஷர்மா அழைத்திருந்தார்….

“கங்கிராட்ஸ் மேன்… யூ டன் அ கிரேட் ஜாப்.. யூ நெயில்ட் இட் யங் மேன்… மீண்டும் ஒருமுறை நீ சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறாய்” என்றவர்.. உற்சாகத்துடன், “தமிழ்நாடு முழுவதும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு.. சினிமா வட்டாரம் முழுக்க கவியின் நடிப்பைப் பற்றி தான் பேச்சா இருக்கு. கண்டிப்பா படம் நின்னு பேசும்” என்றவர், “நூன் ஷோ சத்தியம் செல்கிறேன்” எனக் கூறி கட் செய்தார்.

அவனால் தன் படத்தின் வெற்றியை கூட அனுபவிக்க முடியவில்லை… காதுகளில் வரு பேசியதே எதிரொலித்திருந்தது.

காரினை சீரான வேகத்தில் செலுத்தியவனுக்கு,

வாழ்க்கையே கசந்தது….

காதலென்றால் வலி மட்டுமே என்றவன் தன் கடந்த காலத்தில் சருகாய் போன காதலை நோக்கி பயணித்தான்.

துளிர்விடும் 🌱.

error: Content is protected !!
Scroll to Top