சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 28

சருகு 🍂 28

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு…

(அபி தனது படிப்பினை முடித்து.. உதவி இயக்குனராக பணிபுரிந்த சமயம். கவி முதுகலை இறுதியாண்டு பயின்று கொண்டிருந்தான்.)

மாலை நேரம்…

மின்னலை கிழித்து, வான் தன் கண்ணீரை மழையாய் பொழிந்தது.

சாலையோர கடையில் நின்று கொண்டிருந்தான் சசி அபிநவ்.

இந்த மழையிலும் இடம் பார்த்து ஒதுங்காமல், கையில் குடையுமில்லாமல் மழை நீரில் நனைந்தபடி மெதுவாக சாலையை கடந்து கொண்டிருந்தாள் ஒரு யுவதி.

கடையிலிருந்து வெளி வந்தவன் மழையை பொருட்படுத்தாது சாலையில் இறங்கி ஓடினான். மழையில் நனைந்து கொண்டிருந்த இளம் ரோஜாவின் பின் புறம் வந்து நின்றவன்,

“ஹாய், பொண்டாட்டி…” என அழைத்தான்.

அவனது விளிப்பில் அதிர்ந்து திரும்பியவள்,

“ஹலோ மிஸ்டர்.. என்ன திமிரா??? யாரு யாருக்குங்க பொண்டாட்டி” என படபடவென பொறிந்தாள்.

“அய்யோ சாரிங்க… உங்களை பார்க்க அப்படியே என் பொண்டாட்டி மாதிரியே இருந்துச்சுங்க…”

“ஹோ… அவங்க எப்படி இருப்பாங்க?” ஒரு ஆர்வத்தில் அவள் கேட்க,

அவனோ.. “அப்படியே உங்களை மாதிரியே இருப்பாங்க” என்றான்.

“என்னை மதிரியேவா?” அவளது கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன..

“அட.. ஆமாங்க.. நான் எதுக்குங்க முன்ன பின்ன தெரியாத உங்க கிட்ட பொய் சொல்ல போறேன்.”

“எப்போ மேரேஜ் ஆச்சு…?”

“இப்போ தாங்க.. ஒரு 10 மினிட்ஸ் முன்னாடி.”

“என்னங்க சொல்றீங்க.. மழை சத்தத்துல சரியா கேட்கலை.”

“என்னோடது லவ் மேரேஜ்ங்க.”

“வாவ்.. சூப்பர்.. உங்க மனைவியை ரொம்ப பிடிக்குமோ.” ஒரு வித புன்னகையுடன் கேட்டிருந்தாள்.

“ஆமாங்க.. ரொம்ப.. ரொம்ப.. பிடிக்கும்.. நான் காதலிக்க ஆரம்பிச்சதிலிருந்தே, அவங்களை என் பொண்டாட்டியாதாங்க நினைச்சிட்டு இருக்கேன்.” அதிக அழுத்தத்துடன் அவளை பார்த்து கூறினான்.

“அவங்க ரொம்ப லக்கி.. உங்க மனைவி பேரு என்னங்க?”

அவன் அமைதியாக அவளையே ரசித்து பார்த்து… “பேரு… நீங்க தாங்க சொல்லணும்” என்றான்.

“என்னது.. நானா?”

“ஆமாங்க… பட்.. என் பொண்டாட்டி சரியான மக்கு போலங்க.. டிரெக்டா அவ பேரு என்னன்னு கேட்டா கூட சொல்ல தெரியலங்க” என்று அவன் சிரித்துக் கொண்டே கூற,

அவள் தனது இடுப்பில் கை வைத்து  அவனை கோபப்பார்வையில் முறைத்து பார்த்தாள்.

மழையின் குளிர்ச்சியில் அவளது கோபம் சுகமான வெம்மையை அவன் மீது வீசியதோ…

‘அய்யோ கண்ணை விரிச்சு கொல்றாளே..’ அபியின் மனம் மழையின் இடி சத்தத்திற்கு ஏற்றவாறு மத்தளம் வாசித்தது.

அந்நேரம் “அபி” எனக் கேட்ட குரலில் அவன் திரும்பிய நொடி அவள் மறைந்திருந்தாள். அழைத்து இடையூறு செய்த கவியை முறைத்த அபி மழையையும் பொருட்படுத்தாமல் அங்குமிங்கும் ஓடி அவளைத் தேடினான்.

அவளோ பட்டாம்பூச்சியாய் பறந்திருந்தாள்.

நாட்கள் பல ஓடிவிட்டன…

அவனின் தேடல் மட்டும் ஓயவில்லை,

இரவில் மூடிய விழிகளுக்குள் வந்து இம்சை செய்பவளை தடுக்கும் வழி தெரியாது குழம்பினான்.

எங்கு சென்றாலும் யாரையாவது தேடிக்கொண்டிருக்கும் அவனது பார்வையை கண்டு கொண்ட கவி அவனிடம் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. சொல்லக்கூடிய விஷயம் என்றால் அவனே சொல்லுவான் என்பது அவனின் எண்ணம்.

ஒரு ஞாயிறு அன்று அபி மால் ஒன்றிற்கு சென்றிருந்தான். அங்கு எதர்ச்சையாக அவளை காணும் வாய்ப்பு கிட்டியது. அவள் தோழிகளுடன் வந்திருந்ததால் அவளை விட்டு சற்று தள்ளியே இருந்தான். கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அவள் பின்னோடு சுற்றித் திரிந்தான். அவளருக்கும் இடத்தில் உலவுவதே அபிக்கு போதுமானதாக இருந்தது. அந்த சுகத்தில் அவளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்பதை முற்றிலும் மறந்துப் போனான்.

திடீரென தோழியர் கூட்டத்துடன் அவள் மின்தூக்கியில் ஏறிவிட, அபி படிகளிலேறி மேல் தளம் செல்வதற்குள் அவள் மீண்டும் காணாமல் போனாள்.

“உன்னைத் தொலைப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது” என்றவன்… மேலும் இரண்டு மணி நேரம் அவள் பின்னால் சுற்றிய இடத்திற்கெல்லாம் சென்று அவளது வாசத்தை நெஞ்சில் நிரப்பிக்கொண்ட பின்னரே வீடு வந்து சேர்ந்தான்.

அபியும் தனது பணியில் பிஸி ஆகிவிட்டான். ஆனால் எங்கு சென்றாலும் அவளை தேடுவதை மட்டும் அபி நிறுத்தவில்லை.

தேடலிலே ஆறு மாத காலம் உருண்டது.

ஒரு நாள் அபியிடம் வந்த கவி… “பிரண்ட்ஸ் எல்லாரும் இங்க நம் வீட்டிற்கு வரேன்னு சொல்றாங்க, வர சொல்லட்டுமா?” எனத் தயங்கி தயங்கிக் கேட்டான்.

அவனது தயக்கத்திற்கும் காரணம் இருக்கின்றது. அபியின் ஐந்து வருட கல்லூரி வாழ்க்கையில் இதுவரை நண்பர்களென அவன் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு யாரையும் அழைத்து வந்ததில்லை, சஞ்சுவை தவிர…

“இது தான் பைனல் இயர்.. அப்புறம் மீட் பண்ணனும் நினைத்தால் கூட முடியாது” என்ற கவியை நிமிர்ந்து பார்த்த அபி சரியென ஒப்புக்கொண்டான்.

அவனைக் கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்த கவியை தள்ளிவிட்ட அபி, “என்னை இப்படி பிடிப்பது பிடிக்காதூ தெரியும்ல” என்று கடிந்து கொண்டான்.

இப்போது கவியின் அணைப்பினை விரும்பாதவன் பின்னாளில் கவியின் அணைப்பு மற்றும் அரவணைப்பிலே முடங்கியிருப்பானென்று இருவருமே எதிர்பார்க்கவில்லை.

அந்த வார இறுதியில் கவி தன் நண்பர்களை எதிர்பார்த்து காத்திருக்க.. அவர்கள் அனைவரும் வந்து செல்லும் வரை என்னை அழைக்காதே எனக் கூறி மாடியறையில் முடங்கிவிட்டான் அபி.

நண்பர்கள் பட்டாளம் வந்ததும் அவர்களை வரவேற்ற கவி… அவர்களுக்கென சில பிரத்யேக ஏற்பாடுகள் செய்திருந்தான்.

கலகலப்பாக போய்க்கொண்டிருந்த அவர்களின் அரட்டை கச்சேரியில் ராமு அண்ணாவும் சேர்ந்து கொண்டார். அவர் சுட சுட பல பலகாரங்களை செய்து கொடுக்க, அதை அனைவரும் மூக்கு பிடிக்க சுவைத்து அவரை பாராட்டினர். கவியின் நண்பர்கள் வட்டத்தில் பெண்களும் அடக்கம்.

பாட்டு கும்மாளம் என்று முற்று பெறாமல் அவர்களது கச்சேரி அரங்கேறியது. கவியின் தோழிகளில் ஒருத்தி எதேர்ச்சையாக சுவற்றில் மாட்டப்படிருக்கும் கவி மற்றும் அபியின் புகைப்படைத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தாலும் அதனைக் காட்டிக்கொள்ளாது கவியிடம் இது யாரென்று வினவினாள்.

“அவன் என் கசின், பட் ஹீ இஸ் லைக் அனதர் ஃபாதர் டூ மீ” என்றான்.

அதற்கு சிரித்த அப்பெண்… “உன் அப்பா இவ்வளவு எங்’ஆ இருப்பாங்கன்னு எதிர்பார்க்கவில்லை” என கலாய்த்தால்.

அவள் அபியின் போட்டோவினை பார்த்து மகிழ்ந்ததை குறித்துக்கொண்ட கவி அவளின் கேலியை பொருட்படுத்தவில்லை. அதன்பிறகு அவளின் பேச்சு நண்பர்களுக்குள் இருந்தாலும் அவளது பார்வை வீட்டில் யாரையோ தேடுவதையும், அபியின் போட்டோவிலே நிலைப்பதையும் கவனித்தவன், ‘ஒருவேளை அதுவா இருக்குமோ!’ என தன் மனதிடம் கேட்டான்.

‘எதுவா…?’ என்ற மனதினை அடக்கி…

அபி யாரையோ தேடி அலைகிறான் என்றவரை கணித்திருந்த கவிக்கு… அந்த நபர் இவளாக இருக்குமோ என்ற யூகம் எழுந்தது. உடனே தனது சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு, அவளின் அருகிலமர்ந்து, மாடியறையை நோக்கி “அபி” எனக் குரல் கொடுத்தான்.

நான்கு ஐந்து அழைப்பிற்கு பிறகு வேண்டா வெறுப்பாக மேலிருந்து எட்டி பார்த்த அபி.. நண்பர்கள் கூட்டத்தில் கவியை தேடி பிடித்ததும், அவனின் பார்வை முழுவதும் கவிக்கு அருகிலிருந்த அவளின் மீதே நிலைத்தது.

அங்கிருப்போர் அனைவரையும் மறந்தவனாக.. கவி உட்பட, அவளை தன் விழிகளால் பருகிக்கொண்டே கீழிறங்கி வந்தான்.

அவளுக்கு நேரெதிரில் நின்றான்… இமைக்க மறந்தான், உலகம் யாவும் அவனுள் உறைந்துவிட்டது. இதயம் சட்டையை கிழித்து வெளியே குதிப்பதை போல் பிரம்மை அவனுள், நரம்புகள் எம்பிக் குதிக்கின்றன… மூளை மரத்துப் போனது.. அவனது கண்களில் மட்டுமே உயிர் இருந்தது. தன்னவளை கண்டு கொண்ட நிம்மதியில் மனம் நிறைந்து போனது. ஆறு மாத தேடலுக்கு, இன்று அவன் தேடிச்செல்லாமலே பலன் கிட்டியது. ஆம், அவள் அபியின் மனதை கத்தி ஏதுமின்றி கொய்யாமல் கொய்து சென்றவள்.

அபியின் பார்வையை சளைக்காமல் ஏற்றாள் அவள்.

கவி தான் அபியின் தோள் தொட்டு நிகழுலகிற்கு அழைத்து வந்தான். அபிக்கு தன் நண்பர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திய கவி இறுதியில் அவளையும் அறிமுகப் படுத்தினான்.

“அபி… ஷீ இஸ் வெரி க்ளோஸ் டூ மீ… அண்ட் ஷீ ஈ…………ஸ்,” என நிறுத்திட,

“விஷாலி…” என,

கவி அவளது பெயரை கூறும் முன், அவளே தன் பெயரை மொழிந்து அபி முன்பாக தன் கரம் நீட்டினாள்.

அவளது ஸ்பரிசம் அவனுக்கு ரோஜா இதழினை அழுத்தி பிடிப்பதை போலிருந்தது.

அபி அவளது கையை விடுவதையே மறந்தவனாக நின்றிருக்க, விஷாலி செருமி தன் கையினை சுட்டிக்காட்ட.. மெல்லிய புன்னகையுடன் அவளின் கையினை விடுத்தான்.

அதன் பின்னர் அவர்கள் செல்லும் வரை அபியும் ஜோதியில் ஐக்கியம் ஆகிவிட்டான். ஆனால், அவனது பார்வை விஷாலியிடமே நிலைத்திருந்தது.

அபியின் பார்வையை அவள் உணர்ந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

நண்பர்கள் குழு கிளம்பவும் காற்று இறங்கிய பலூனாக அபியின் முகம் சுருங்கிவிட்டது. அதனை கண்ட கவி நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.

செல்லும்போது விஷாலி அபியின் மீது தன் பார்வையை வீசி சென்றாள்.

விஷாலி சென்ற திசையையே பார்த்தவாறு அபி நின்றுவிட்டான்.

அபியின் தோள் மீது கைபோட்ட கவி, “இதுக்குதான் பிரண்ட் கிட்ட எதையும் மறைக்கக் கூடாது” என்க,

“என்னடா சொல்ற.. ஒண்ணும் புரியலையே” என்றான் அபி.

“அதில்லை மச்சி, நீ யாரையோ தேடுற தெரியும். பட் அதை நீயா சொல்லாம நானா கேட்டு தெரிந்துகொள்ள எனக்கு விருப்பமில்லை… நீ மட்டும் என் கிட்ட சொல்லியிருந்தா ஆறு மாசம் வேஸ்ட் பண்ணியிருக்க வேண்டாம்…” என்றான்.

கவியின் பேச்சில் அபி அசடு வழிந்தான்.

அவனின் வெட்கம் புதிது… கவிக்கு அது உலக அதிசயம்.

“சரி எப்போ லவ் சொல்ல போற?”

“அல்ரெடி நான் சொல்லிட்டேன் டா…” முதல் நாள் மழை சந்திப்பில் நடந்த உரையாடலை அபி கவியிடம் கூறினான்.

“அப்போ, நான் தான் உன்னை கூப்பிட்டு சொதப்பிட்டேனா!”

அதற்கு அபி ஆமாம் என மேலும் கீழும் தலையாட்டினான்.

“சரி என்னால் தடைப்பட்ட காதலை நானே அவளிடம் சொல்றேன்” என்ற கவியை தடுத்த அபி…

“இது என் காதல்! வெற்றியோ தோல்வியோ நான் தான் முயற்சி செய்யவேன். நானே சொதப்பலுடன் கற்றுக்கொள்கிறேன்” எனக் கூறினான்.

அதன் பின்னர் கவியின் தோழியாக விஷாலி வாரம் ஒருமுறையாவது, அபியின் வீட்டிற்கு வர ஆரம்பித்தாள். அபி மற்றும் விஷாலியிடம் நல்ல நட்பு தொடங்கியது. முதல் நாளே வெளிப்படையாக தனது காதலை அபி தெரிவித்திருந்தாலும், அவள் அதனைக் காட்டிக்கொள்ளாமல் நட்புடன் பழகும் போது காதலை யாசிக்க அவனுக்கு விருப்பமில்லை.

கவியின் தோழியாக அறிமுகமாகியிருந்தாலும், அபியிடம் மிகவும் ஒன்றிவிட்டாள். வெளியில் செல்ல வேண்டுமானாலும் அபியுடனே என்று வழமையானது.

அவர்கள் சென்னையை சுற்றாத இடமில்லை… நட்பெனும் போர்வைக்குள் பட்டாம்பூச்சியாய் சிறகடித்தனர். எங்கு சென்றாலும் அதன் ஞாபகமாக புகைப்படம் எடுப்பதை பழக்கமாகக் கொண்டனர். இருப்பினும் நட்பென்ற எல்லையை இருவரும் மீறியதில்லை. அவன் காதலியாக முதல் சந்திப்பில் உணர்ந்திருந்தாலும் அவளின் நட்பினை கலங்கப்படுத்த விரும்பாமல் நல்ல நண்பனாகவே பழகினான்.

இப்படியே நாட்களும் பல சென்றன.

ஒரு வருடம் அவர்களது உறவு நட்பா? காதலா? என்ற குழப்பத்திலே நகர்ந்தது அபிக்கு, அதன் பின்னரே விஷாலியின் மனமும் நெருக்கமும் அவனுக்கு புரிய ஆரம்பித்தது. விஷாலியின் மனதில் தன் மீது காதலிருப்பதை கண்டுகொண்ட அபி, இவ்வளவு நாள் தன்னை காக்க வைத்ததற்கு… அவளே வந்து காதலை சொல்லும் வரை தான் சொல்ல கூடாதென்று முடிவெடுத்தான்.

அவளும் அவனின் நிலையிலேயே இருக்க.. அபிக்கும் பணி சுமை அதிகமாகியது. வாரம் இரண்டு முறையாவது சந்தித்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது மாதம் ஒருமுறை கூட சந்திக்க இயலவில்லை. அபி போனில் பேசுவதே குறைந்து போனது. கவியிடம் கேட்டால் அபியின் வேலையைப் பற்றிக் கூறி சமாதானம் செய்வான். விஷாலியும் இது அபியின் கரியர் எனத் தவிக்கும் மனதை அடக்கிக் கொண்டாள்.

மேலும் ஒரு வருடம் கடந்த நிலையில், அன்று அபியின் பிறந்தநாள். ஒரு வாரத்திற்கு முன்பு தான் தனது கிராமத்திற்கு சென்று வந்திருந்தான்.

அதிகாலை முதல் அழைப்பே அவனவளிடமிருந்து தான்… ரிங் சத்தத்தில் தூக்கத்திலிருந்து எழுந்தவன் கண்களை கசக்கிக்கொண்டே இமை திறந்து மொபைலின் திரை பார்க்க, அதில் ஒளிர்ந்த எண்ணைக் கண்டு படபடப்புடனும், பரபரப்புடனும் ஆன் செய்து செவி மடுத்தான்.

இதற்கு முன்னர் வந்த ஒரு பிறந்தநாளுக்கு விஷாலி அபிக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறாள் தான்.. ஆனால், அப்போது இறுதி வாழ்த்து அவளுடையதாக இருந்தது. இன்று, இந்த பிறந்தநாளுக்கு முதல் அழைப்பே தன்னவளிடமிருந்து என்பதற்காகவே இந்த இனிய படபடப்பு.

“மாலை, கபாலீஸ்வரர் கோவில் குளத்திற்கு அருகில் மீட் பண்ணலாமா?” எனக் கேட்பதற்காவே விஷாலி போன் செய்திருந்தாள். அபி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், “முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லணும்” என்றாள்.

வாழ்த்து சொல்லாமல் வேறெதுவோ பேசியவள் மீது கோபம் வர, அவள் முக்கியமான விஷயம் என்றதில் கோபம் மறைந்து முகத்தில் ஒரு ஒளி தோன்றியது. ஒருவேளை ப்ரொபோஸ் செய்யப் போகிறாளோ என எண்ணியவன், சரியென்று சம்மதம் வழங்கினான்.

“மறந்துடாத சசி…”

அவள் எப்போதும் அனைவரையும் போல் அபி என்றே அழைப்பாள். ஆனால், இன்று சசி என்று பிரத்யேகமாக அழைக்கவுமே அவனின் மனம் கண்டு கொண்டது.

உற்சாகத்துடன், “கண்டிப்பா வரேன்” என உறுதியளித்தான்.

மாலை கவியிடம் சொல்லிவிட்டு தன்னவள் வர சொல்லிய கோவிலை நோக்கி, நான்கு மணிக்கெல்லாம் புறப்பட்டான்.

செல்லும் வழியில் அவள் காதல் சொல்லிய அடுத்த வினாடி தானும் தன்னுடைய காதலை சொல்ல வேண்டுமென்று நினைத்தவன், அதற்காக அவளுக்கு மிகவும் பிடித்த அடர் பிங்க் வர்ண ரோஜா பூங்கொத்து ஒன்றும், அவளது மென்விரலில் அணிவிக்க பொன் மோதிரம் ஒன்றும்… அவள் விரும்பி சாப்பிடும் சாக்கலேட் என்று அனைத்தும் வாங்கி சென்றான்.

அவள் காதலை சொல்லிய பிறகு அந்த ஈசனை தம்பதி சகிதமாக வணங்க வேண்டுமென நினைத்தவன்… இறைவனை வணங்காமலே குளக்கரைக்குச் சென்று அமர்ந்தான். தன்னவளின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.

மனதிற்கு பிடித்தவர்கள்… அதுவும் காதலிக்காக காத்திருப்பதில் உள்ள சுகம் அலாதியானதென்று அந்த கணம் அபி உணர்ந்தான்.

நேரம் ஆக ஆக, அபியின் இதயம் தாறுமாறாக குதிக்க ஆரம்பித்தது. படப்பப்பை குறைக்க எண்ணி, மொபைலில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்க்க ஆரம்பித்தான். ஒவ்வொன்றிலும் அவனின் தேவதை ஒவ்வொரு அழகில் காட்சியளித்தாள். அவளின் குழந்தை முகத்தில் முற்றிலும் வீழ்ந்துப் போனான்.

தன்னவளின் பால் முகத்தில் லயித்திருந்தவன்.. மணியை பார்க்க ஆறு எனக் காட்டியது. ‘உன்னை பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் கடப்பதே தெரியாது,

எந்நேரத்தையெல்லாம்,
மொத்தமாக….
காவு வாங்கும்
என் இனிய ராட்சஷி.!!!’

என்று கவிதையாக திட்டியவன், அவள் இன்னும் வரவில்லையே என்று விஷாலிக்கு அழைத்தான்.

நீண்ட அழைப்புகளுக்குப் பின்னர் எடுத்தவள்… “இதோ கிளம்பிட்டேன், வந்து கொண்டிருக்கிறேன்… செம ட்ராபிக், போய்டாத!, வெயிட் பண்ணு” என்றாள்.

“பிரச்சனை இல்லை, எவ்வளவு நேரமானாலும்… நான் வெயிட் பண்றேன், நீ பார்த்து மெதுவா வா!” எனக் கூறி கட் செய்திருந்தான் அபி.

ஆறு மணிக்கு அவள் கிளம்பிவிட்டதாகக் கூறினாள். இப்போது மணியோ எட்டு, எவ்வளவு ட்ராபிக்கா இருந்தாலும் இரண்டு மணிநேரம் ஆகாது என யோசித்தவன், அவளுக்கு அழைப்பு விடுத்தான்… சுவிட்ச் ஆப் என வந்தது.

அணைத்து வைத்திருக்கிறாள் என்று தெரிந்த போதிலும் அவளின் எண்ணிற்கு விடாது தொடர்பு கொண்டான். ஆனால் முயற்சி என்னவோ பூஜ்ஜியம் தான்.

மணி இரவு ஒன்பது, பத்து என்று கடந்து பதினொன்றும் ஆனது.

அவள் வருவாளென்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக பொய்த்து போகத் தொடங்கியது. குருக்கள் கோவிலை சாற்ற வேண்டும் வெளியேறுங்கள் என்று சொல்லிய பிறகே அபிக்கு நடப்பு புரிந்தது. இறுதியாக ஒரு முறை அவளுக்கு அழைத்தான். சுவிட்ச் ஆப் என வந்த அடுத்த நொடி மொபைலினையும் அவளுக்கென அவன் வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களையும் கோவிலின் குளத்தில் வீசியெறிந்தான். விஷாலியின் மீது கோபம் அதிகரிக்க தன்  வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டிற்கு வந்ததும் ராமு அண்ணன் மிகுந்த பதட்டத்துடன், “தம்பி கவி தம்பிக்கு ஒரு போன் வந்துச்சு, அது வந்ததும் தம்பி முகமே சரியில்லை.. உங்களுக்கு போன் போட்டு பார்த்துச்சு லைன் கிடைக்கலையாம். அதான் நீங்க வீட்டுக்கு வந்ததும் ******** ஹாஸ்பிட்டலுக்கு உடனே வர சொல்லிட்டு போயிடுச்சு” என்று மூச்சு விடாமல் கூறினார்.

அவர் தெரிவித்த செய்தி அபிக்கு அவ்வளவு உவப்பானதாக படவில்லை… மனம் நெருட, நெருக்கமான ஒருவருக்கு ஏதோ நேர போகிறது என்ற குழப்பத்துடன் மருத்துவ மனைக்குச் சென்றான்.

அங்கு சென்ற பிறகு அபிக்கு கவியின் வாயிலாக தெரிவிக்கப்பட்ட செய்தி அபியை மரணத்திற்கு இட்டுச்சென்றது.

நம்ப முடியாமல்… கண்கள் சிவக்க… நரம்புகள் புடைக்க கவியின் சட்டையை ஆக்ரோஷமாக பிடித்தவன்.. “நீ சொன்னது பொய் தானே, சொல்லுடா பொய் தானே” என்று வெடித்தான்.

அவனது கலங்கிய குரலின் சத்தம் மருத்துவமனை முழுவதும் எதிரொலித்தது.

அப்போது நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் இருவருக்கும் அருகில் வந்து, ஆவேசமாக கவியின் சட்டை மீதிருந்த கைகளை பிடித்து இழுத்து தன்புறமாக அபியைத் திருப்பியவர், பளாரென அவன் கன்னத்தை தன் கரம் கொண்டு அடித்திருந்தார்.

அவர் அடித்தது அபிக்கு வலிக்கவில்லை. மனம் மரித்து போனதற்கு பிறகு… இந்த அடியெல்லாம் எங்கிருந்து வலியை ஏற்படுத்தும்.

“அநியாயமா என் பொண்ணை கொன்னுட்டியே டா” எனக் கதறிக்கொண்டே மீண்டுமொரு அடி வைத்தார்.

அபி அவரது அடிகளைப் பெற்றுக்கொண்டு அமைதியாக நின்றிருந்தாலும் கவியால் அபி அடி வாங்குவதை பொறுக்க முடியாமல், “உங்க பொண்ணு இறந்ததற்கு அவன் எப்படி பொறுப்பாவான்” என்று அப்பெண்மணியிடம் சினந்தான்.

அதில் ஆத்திரம் வர பெற்றவராக, தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு ஆணின் கரங்கலிலிருந்து சிறு பேக்கினை வெடுக்கென பறித்து.. அதனை அபியின் கைகளில் திணித்து “திறந்து பார்!” என்று கத்தினார்.

அபி நடுங்கும் கரங்களுடன் பையினைத் திறக்க, அதில் அபியும் விஷாலியும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்திருக்கும் புகைப்படம் பிரேம் செய்யப்பட்டு, அதில் “வித் லவ் விஷாலி” என கையெழுத்திடப்பட்டிருந்தது. அதனை பார்த்ததுமே அபியின் கண்கள் ஆறென உடைப்பெடுத்தது.

மேலும் அதில் சிறு டைரியும் நகைப் பெட்டியுமிருந்தது, டைரியை திறந்தவன் முதல் பக்கத்தில் எழுதியிருந்த “மை லைஃப் சசி” என்றதிலே உடைந்தவனாய் அதனை மேலும் படிக்கும் திராணியற்று, டைரியை மூடியவன் தரையில் சரிந்து துடித்துக் கதறினான்.

“உன் கிட்ட காதலை சொல்ல அசையாசையாய் வந்தவளை, எதிரே வந்த பஸ்காரன் காவு வாங்கிட்டானே!, அவ உன்னை பார்க்க கிளம்பாம இருந்திருந்தா இந்நேரம் எம்பொண்ணு உயிரோடு இருந்திருப்பாளே” என்று விஷாலியின் அம்மா கதறினார்.

அவரது வார்த்தைகள் அபிக்குமே தன்னவளின் இறப்பிற்கு தான் தான் காரணமோ என்ற சந்தேகத்தை தோற்றுவித்தது. இவர்கள் சொல்வதைப்போல் என்னை பார்க்க வராமலிருந்திருந்தால் அவளுக்கு எதுவும் ஆகியிருக்காதே என்று தான் ஆண்மகன் என்பதையும் மறந்து தரையில் உருண்டு அழுதான்.

ஆறுமணியளவில் அபி கால் செய்யும் போது விஷாலி சிக்னளில் நின்றிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவேன் எனக் கூறி வைத்தவளின் மனம் முழுக்க தனக்காக தன்னவன் காத்திருக்கிறான் என்ற ஆனந்ததுடன் வண்டியினை செலுத்திக் கொண்டிருந்தவள் எதிரே வந்த பேருந்தினை கவனிக்காமல் அதில் சென்று மோதினாள். வண்டி பேருந்துக்கு அடியில் சிக்கி அப்பளமாக நொறுங்கி போக, அக்கணமே விஷாலியின் உயிர் பிரிந்தது.

மருத்துவ மனைக்கு உடலைக் கொண்டு வந்து, வீட்டாருக்குத் தெரிவித்து அவர்கள் அங்கு வந்து சேர்வதற்குள் எட்டாகிவிட்டது.

மேலும் சில மணி நேரங்கள் சென்ற பிறகு, உங்கள் மகள் வைத்திருந்ததென நர்ஸ் அளித்த பேக்கினை திறந்து பார்த்த பின்னரே, அவர்களுக்கு விஷாலி எங்கு, ஏன் சென்றாலென விளங்கியது.

விஷாலியின் மொபைலில் பதிந்து வைத்திருந்த அபியின் எண்ணுக்கு அழைக்க, அதுவோ நாட் ரீச்சபுள் எனக் கூறியது.

இவர்கள் அவனை அழைக்கவும் அபி குளத்தில் மொபைலினை விட்டெறிக்கவும் சரியாக இருந்தது. ஆனால், அதற்கு முன்னரே விஷயம் அறிந்து விஷாலியின் நண்பர்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். கவி முயற்சித்தும் அபிக்கு லைன் கிடைக்காமல் போகவே ராமு அண்ணாவிடம் தெரிவித்துவிட்டு இங்கு வந்தவன் அபியின் வருகையை எதிர்நோக்கினான்.

தரையில் விழுந்து துடித்து அழுதவனை கவியால் சமாதானம் செய்யவே முடியவில்லை. ஒருக்கட்டத்திற்கு மேல் இறுதியாக தன்னவளின் முகம் காண எண்ணி அனைவரையும் தள்ளிவிட்டு விஷாலியின் உடலிருந்த பிணவறைக்குள் ஓடியவனை தன் பலம் கொண்டு தடுத்து நிறுத்தினார் விஷாலியின் தாயார்.

அபியின் உயிர் உருக்கும் அழுகையும், தோற்றத்தினையும் இவ்வளவு நேரம் நேரில் கண்டும் மனமிலகாதவராக, “எம்பொண்ணை கொன்ன உனக்கு அவளை பார்க்கும் தகுதியில்லை” எனக் கூறினார்.

அவரது வார்த்தையில் மரித்துப் போன அவனது இதயம் மேலும் சுக்கு நூறாகியது.

“நீ இங்கிருக்கும் வரை அவளின் உடலை வெளியில் கொண்டு வர கூட அனுமதிக்க மாட்டேன்” என்ற அவரது வார்த்தைகளில் ஓய்ந்துபோனவனாக, அவர் விட்டெறிந்த விஷாலியின் பேக்கினை எடுத்துக்கொண்டு தளர்ந்த நடையுடன் மருத்துவ மனையை விட்டு வெளியேறினான் அபி.

இறுதியாக ஒருமுறை தோழியின் முகத்தைப் பார்த்துவிட்டு கவி வீட்டிற்கு வந்த சமயம், அபி அவனின் அறைக்குள் இருந்தான். அறை உட்பக்கம் தாளிட்டிருந்தது. சீரான வெளிச்சம் அறையில் ஒளிர்ந்ததால் கவி அபியை தொந்தரவு செய்யாது தன்னுடைய அறைக்கு சென்றான்.

அறையினுள் இருந்த அபி, விஷாலியால் பிரேம் செய்யப்பட்ட படத்தினை கைகளில் வைத்தவாறு அவளின் டைரியை முழுவதுமாக படித்தான்.

படித்து முடித்ததும் வெறிப்பிடித்தவன் போல் கத்தினான். கதறினான். அறையிலிருக்கும் அனைத்து பொருட்களையும் தூக்கி போட்டு உடைத்தான். கைகளில் கிடைப்பவற்றையெல்லாம் விசிறியடித்தான். கொஞ்ச நேரத்தில் அவனின் அறையே போர்க்களமாக மாறியிருந்தது. உடைந்த கண்ணாடிப் பொருட்களின் துண்டுகள் குத்தி அவனது கை, காலெங்கும் ரத்தம் சொட்டியது. இரண்டு கைகளாலும் தலையை பிடித்துக்கொண்டு கத்தியவன், அப்படியே தரையில் மண்டியிட்டு மேலும் உரக்கக் கத்தினான். வெறிப்பிடித்தவன் போல் அறைக்குள்ளே ஓடினான். பைத்தியம் பிடித்தவனாய் ஷாலி, ஷாலி என்று போட்டோவினைக் கையில் வைத்து புலம்பினான்.

சத்தம் கேட்டு ஓடி வந்த கவியும், ராமு அண்ணாவும் கதவினை உடைத்து உள்ளே நுழைந்த போது அபி ரத்தத்தில் மிதந்துகொண்டிருந்தான்.

தன்னவளின் பிரிவுத் துயரை சில மணி நேரங்கள் கூட தாங்க முடியாமல், தனது இரண்டு மணிக்கட்டுகளிலும் கண்ணாடியால் அழுத்தி வெட்டிக்கொண்டான்.

வெயின் கட்டாகிய வேகத்திற்கு ரத்தம் குபுகுபுவென வெளியேறி அபி மயங்கி சரிந்திருந்தான்.

அபியை அந்நிலையில் பார்த்ததும் கவிக்கு என்ன செய்வதென்று ஒரு கணம் புரியவில்லை, எப்படியாவது தன்னுடைய அபியை காப்பாற்ற வேண்டுமென நினைத்து தன்னை மீட்டவன் அபியைத் தூக்கிக்கொண்டு மருத்துவ மனைக்கு விரைந்தான். ஊருக்கு தகவல் அளிக்க கூடாதென்று ராமு அண்ணாவுக்கு கட்டளையிட்டான்.

மருத்துவமனையில் ரத்தம் அதிகம் வெளியேறி இருப்பதாகத் தெரிவிக்கவும், தான் யூனிவர்செல் டோனார் எனக் கூறி கவி அபிக்கு ரத்தம் அளித்தான். வெயின் சரி செய்து, தையலிட்டப் பின்னர் ரத்தப்போக்கு நின்றது. கவியின் ரத்தம் மெல்ல மெல்ல அபியின் உடலுக்குள் செல்ல சிறிது நேரத்திற்கெல்லாம் அபி கண் விழித்தான்.

கண் விழித்ததும், “என்னை ஏன் காப்பாற்றினீங்க, அவளில்லா உலகத்தில் என்னால் வாழ முடியாது. என்னை விட அதிகமா அவள் என்னை காதலித்திருக்கிறாள்” என்றுக் கூறியவன் ஆவேசமாக கையில் ஏறிக்கொண்டிருந்த ட்ரிப்ஸினை பிடுங்கி எறிய கவியின் கை இடியாய் இறங்கியது அபியின் கன்னத்தில்.

கவி அறைந்ததில் அமைதியானவன் அவனையேக் கட்டிக்கொண்டு அழுதான்.

“அந்த டைரியில் முழுக்க என் மீதான காதல் தான்டா அவள் எழுதியிருக்கா, அவள் காதலுக்கு முன் என் காதலெல்லாம் சாதாரணம் டா.. இந்தளவிற்கு என்னை நேசித்தவள் ஏன்டா தனியா விட்டுட்டு போயிட்டாள்” என்று கவியிடம் புலம்பிக்கொண்டிருந்த அபி மருந்தின் வீரியத்தில் உறங்கிப்போனான்.

அடுத்த நாள் அபியை வீட்டிற்கு அழைத்து வரும் வரை கவி தண்ணீர் கூட அருந்தவில்லை.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேளையாக கவி செய்தது. விஷாலியின் டைரியை எரித்தது தான். தோட்டத்தில் வைத்து பற்ற வைத்தவன் அது தீப்பற்றும் முன்னரே உள்ளே வந்திருந்தான்.

கவியின் செயலை பார்த்துவிட்ட அபி, அவனுக்குத் தெரியாமல் டைரியை எடுத்து வந்து ஒளித்து வைத்துக்கொண்டான்.

ஒருவழியாக கவி அபியைத் தேற்றுவதற்கு மாதங்கள் பல கடந்திருந்தன. அபியும் கவிக்காக என எண்ணி தனது வலியை வெளிக்காட்டாமலிருக்க பழகிக்கொண்டான். சோகத்தோடு குடும்பத்துடன் வலம் வர முடியாதென தன்னை தள்ளி வைத்துக்கொண்டான். விஷாலியை மறப்பதற்காக வெறிகொண்டு தன் வேலையில் ஈடுபட்டான். அந்த வெறியே அவனை விரைவில் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.

அனைத்தையும் கவி கூற கேட்டிருந்த வரு தொப்பென்று இருக்கையில் அமர்ந்தாள். கனிக்கு கண்களில் குளம் கட்டிவிட்டது.

தனது அறைக்குச் சென்றவன் மீண்டும் திரும்பி வந்து வருவின் கையில், அன்று தான் எரித்துவிட்டதாக நினைத்திருந்த… அபியின் லாக்கரிலிருந்து எடுத்த டைரியை வருவிடம் கொடுத்தான்.

“என்னடா… காதலைக் கூட சொல்லாம இறந்துபோன ஒருத்திக்காக, தன் வாழ்க்கையையே தொலைக்கிறான்னு நீ சாதாரணமா நினைக்கலாம். அவள் இறந்தும் அவளை மறக்க முடியாம துடிக்கிறான்னா சொல்லாம அவள் காட்டிச்சென்ற அவளின் காதல் எப்பேர்ப்பட்டத்தா இருக்கும்.

அபி இந்தளவிற்கு விஷாலி மீது காதல் வைத்திருப்பதற்கான காரணம் இதை படி” என டைரியை சுட்டிக்காட்டியவன், “உனக்கே புரியும்” என்றவனாக தன் மனைவியை அழைத்துச் சென்று விட்டான்.

வெகுநேரம் டைரியையே பார்த்திருந்தவள், அழும் விழிகளை அழுந்தத் துடைத்து.. மனதை திடப்படுத்திக்கொண்டு டைரியை பிரித்தாள்.

முதல் பக்கத்தில்…..

மழையில் நனைந்தவாறு அபியின் உருவம் வரையப்பட்டு, அதன் கீழே “மை லைஃப் அண்ட் எவர் லவ்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

அது விஷாலி முதன் முதலாக அபியை பார்த்த மழை நாளன்று அவளால் வரையப்பட்டது.

ஹாய் பொண்டாட்டி என்று சத்தம் கேட்டு திரும்பியவளின் கண்ணில் விழுந்த அபி அவளின் மனதிலும் பசைபோல் ஒட்டிக்கொண்டான்.

அவனுக்கேத் தெரியாமல் அவனை ரசித்தவள், அவனின் எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்ற வார்த்தையில் உடைந்தது சிறு கணமே, அடுத்து அவன் கூறிய மறைமுகமான காதல் வார்த்தையில், மனதில் சில்லென்று உணர்ந்தாள்.

கவி அழைத்த பொழுது அபி திரும்பி பார்த்த தருணம், விஷாலியை அவளது தோழி வந்து இழுத்துச் சென்றிருந்தாள்.

வீட்டிற்கு வந்ததும் அவனின் நினைவாக இருக்கவே, அபியை பற்றி தன் டைரியில் எழுத ஆரம்பித்தாள். அபியின் முகத்தை வரைந்த அந்தக் கணம் கண்டு கொண்டாள், சில நிமிடங்களே பார்த்தவனை தன் மனம் இவ்வளவு பதிந்து வைத்திருக்கிறதா என்று யோசித்தவளுக்கு அவன் மீதான ஈர்ப்பு புரிந்தது.

நாட்கள் செல்ல செல்ல விஷாலிக்கு அபியின் மீதிருப்பது வெறும் ஈர்ப்பு மட்டுமில்லை, அதையும் தாண்டிய ஒன்றென்று புரிந்தது. எங்கு சென்றாலும் பெயர் தெரியாத அவனையே அவளது விழிகள் தேடின.

மாலில் அபி விஷாலியின் பின்னால் சுற்றியதை உணர்ந்தவள், அவனும் தன்னைப்போலவே தேடியிருக்கிறான் என அறிந்து மகிழ்ந்தாள். அவன் பார்க்காத பொழுது அவனைப் பார்த்து ரசித்தாள். அவன் எப்படியும் வந்து பேச போவதில்லை என உணர்ந்து அவள் அபியிடம் பேச நினைத்த சமயம் இருவரும் ஒருவரையொருவர் தவறவிட்டனர்.

மீண்டும் அவனை எங்கேயெனத் தேடுவதென்று தவித்து நின்றவளுக்கு அவனே காட்சியளித்தான்.

ஒருநாள் கவியை ட்ராப் செய்ய அவனது காலேஜ்ஜிற்கு சென்றிருந்த அபியை கவியுடன் பார்த்தாள்.

கவி அவனின் கசினுடன் தானே வசிப்பதாகக் கூறியிருக்கிறான் என்று சிந்தித்தவள், நிச்சயம் இவன் கவியின் கசினாகத் தான் இருக்குமென்று யூகித்தாள்.

அதனை உறுதி செய்வதற்காகவே, கவியிடம் பிரண்ட்ஸ் நாங்கயெல்லாம் உன் வீட்டிற்கு வருகிறோம் எனத் தெரிவித்தாள்.

அதன்படி அபியின் வீட்டிற்கு வந்தவள், கவியுடன் அபியிருந்த புகைப்படைத்தைப் பார்த்து உறுதி செய்துகொண்டாள். அவளது பார்வை வீட்டை பலமுறை வலம் வந்தும் அபி தென்படுவதாக தெரியவில்லை.

ஒருவேளை அபி இங்கு இல்லையோ என்று அவள் சிந்திக்க, அவள் மனமோ அவன் இங்கு தானிருக்கின்றான் எனக் கூறியது.

எனவே, அப்போது தான் அபியின் போட்டோவைப் பார்ப்பதைப்போல் பார்த்து, மறைமுகமாக அபியைப் பற்றித் தெரிந்துகொண்டாள்.

அபி வந்ததும் சுற்றம் மறந்து அவனை ரசித்தாலும் அதனை அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை. கவியின் தோழியாக அவ்வீட்டிற்கு வந்தாலும், அவளது நோக்கம் அபியை பார்ப்பதாகவே இருந்தது.

தனது படிப்பு முடியும் வரை தன் காதலை வெளிப்படுத்தக்கூடாது என்றும், அதற்குள் அபி தெரிவித்தால் ஏற்றுக் கொள்ளலாமென்றும் முடிவெடுத்தாள்.

அவளது படிப்பு முடிந்தும் சிறிது காலம் அமைதியாக இருந்தவள், அவன் பிறந்தநாளன்று அபியிடம் தன் காதலை சொல்ல நினைத்து அவனை கோவிலிற்கு வர செய்தாள்.

அவனுக்காக அவள் வாங்கியிருக்கும் கிப்ட்டினை பற்றி கூட அதில் எழுதியிருந்தாள். டைரியின் ஒவ்வொரு பக்கத்திலும் அபி செய்த ஏதாவது ஒன்றினை ரசித்து எழுதியிருந்தாள்.

நிறைய பக்கங்களில், விஷாலியும் அபியும் மணக்கோலம் பூண்டுவது, விஷாலி கருவுற்றிருக்க, அபி அவளைத் தோள் சாய்த்திருப்பது.. இருவரும் கைகோர்த்து நடப்பது… அபியின் கையில் ஒரு வயது குழந்தை தவழ, விஷாலி அவனின் மார்பில் சாய்ந்திருப்பதைப் போன்று பல படங்கள் வரைந்திருந்தாள்.

அபியை சந்திக்க செல்வதற்கு முன்…

டைரியில்….

உன்னால் மட்டுமே துளிர்த்தெழும்
என் உணர்வுகள்
உன்னாலே உணர்விழந்து
என் நெஞ்சுக் கூட்டினில்
மடிந்து விடுகிறது,
தட்டி எழுப்பும் சுவாசமாய்
உன் அன்பினை யாசிக்கின்றேன்,
உன் மீது கொண்ட உணர்வினை
என் விழி நீரில் கரைத்து
உன் விழி நோக்கி
என் ஏக்கத்தை
உனக்குள் கலந்து
உன் நெஞ்சுக் குழியில்
விதையாய் விதைத்து
உனக்குள்
விருட்சமாய் வளர்ந்து
என் அன்பின்
ஆழத்தை உணர்த்த
வரம் தருவாயா..💕💕

என இறுதியாக எழுதியிருந்தாள்.

தன் காதலை வாய் வார்த்தையாகத் தெரிவிக்காமல்.. எழுத்தின் மூலம் வெளிப்படுத்த நினைத்தாள். அதனாலே, காதலை அபியிடம் சொல்வதற்கு முன் டைரியினை படிக்க வைக்க வேண்டுமென்று எண்ணி, இறுதி பக்கத்தில் தன் ப்ரொபோசலுக்கான கவிதையையும் எழுதியிருந்தாள்.

முழுவதும் படித்து முடித்த வரு என்ன மாதிரி உணர்ந்தாளென்று அவளுக்கேத் தெரியவில்லை. கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள். அவனிடம் காதலை கூறுவதற்கு முன்னமே, அவனை தன் கணவனாக, தன் மகவிற்கு தந்தையாய் உருவகப்படுத்தி இருக்கிறாளென்றால் அவள் எந்தளவிற்கு சசி அத்தானை நேசித்திருப்பாள். வருவிற்கு விஷாலியின் காதல் ஆச்சரியத்தை தான் கொடுத்தது.

டைரி முழுக்க அபியை சசி என்றே விஷாலி குறிப்பிட்டிருந்தாள். விஷாலி அளவிற்கு தாம் காதல் வைத்திருக்கிறோமா என்றே சிந்தித்தாள்.

‘அவளுடைய காதல் ஒருவிதத்தில் உயர்வானது என்றால், என்னுடைய காதல் வேறு விதத்தில் உயர்வானது’ என சிறு யோசைனைக்குப் பிறகு சரியாக கண்டறிந்தாள்.

தன் காதலை திகட்ட திகட்ட அபிக்கு அளித்து அவனை மகிழ்வுடன் வைத்துக்கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தாள். ஆனால், ஏதோ ஒன்று அவள் மனதை நெருஞ்சி முள்ளாய் தைத்தது.

கவியிடம் சென்றவள்….

“அத்தான் அவங்க மேல உயிராய் இருப்பதில் தவறில்லை… ஆனால், என்னை அவருடைய தகுதிக்கு ஏற்றவளில்லை என்று கருதும் போது நான் எப்படி அவருடன் வாழ்வது?” எனக் கேள்வி கேட்டாள்.

கவிக்கு ஆயாசமாக வந்தது,

எப்படியும் வருவிற்கு புரிய வைத்துவிடும் நோக்கில், சின்மயி பற்றியும், அவளின் ஒருதலை காதலையும், அபி அவளை அடித்ததற்காக.. அவள் உன்னைக் குழப்ப வேண்டுமென்றே அவ்வாறெல்லாம் பேசியிருக்கிறாளென்று அனைத்தையும் விளக்கினான்.

மறந்தும் அபி உன்னை நேசிக்கத் தொடங்கிவிட்டானென்று கூறவில்லை. அவனின் காதலை மட்டும் அவனேத் தெரிவிக்க வேண்டுமென்று நினைத்தான்.

சின்மயி பற்றி கவி கூறியதும்.. ‘அவசரப்பட்டுவிட்டேனே’ என்று நினைத்தவள்…

“இனியும் என் அத்தானை கவலைக்கொள்ள விட மாட்டேன். விஷாலியின் மூலம் கிடைக்காத காதலை என் மூலம் அவருக்கு கொடுப்பேன்.” வெளிப்படையாகக் கவியிடம் கூறியவள், “என்னை சென்னைக்கு பஸ் ஏற்றி விடுறீங்களா?” என்று அப்பாவியாகக் கேட்டாள்.

தன் காதலை உணர்த்த சென்னை நோக்கி பயணம் செய்பவள் அறிந்திருக்கவில்லை, தனக்கு அங்கு மிகப்பெரிய அதிர்வு காத்திருக்கிறதென்று.

துளிர்விடும் 🌱.

error: Content is protected !!
Scroll to Top