சருகு 🍂 29
சென்னைக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த வருவிற்கு நினைவுகள் முழுவதும் தனது கணவனிடமே பயணித்தது.
‘காயம்பட்டவனை மேலும் காயப்படுத்தி விட்டோமே’ என்று வருந்தினாள். காதல் வலியை சிறிது காலம் அவளும் அனுபவித்ததாலோ என்னவோ அபியின் வேதனையை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
‘சொல்லாத காதலையே இவ்வளவு தூரம் போற்றி பாதுகாப்பவன், உயிருடன் இருக்கும் தன் காதலை எப்படி கொண்டாடுவான்’ என சிந்தித்தவளுக்கு அந்த நினைவே தித்திப்பாக இருந்தது. முதலில் இந்த அத்தானுக்கு என் மேல் காதல் வரவைக்க வேண்டுமென்று தன் மனதிடம் கூறிக்கொண்டாள்.
கோர்டிலிருந்து நேராக சென்னை சென்ற அபி.. வீட்டிற்கு கூட செல்லாமல் அலுவலகம் சென்றிருந்தான்.
நிவாஸ் படத்தின் வெற்றியை அபியிடம் உற்சாகத்துடன் தெரிவிக்க, அபியின் வருகையறிந்து அங்கு வந்த ஷர்மா அவனை அணைத்து தனது சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார்.
அடுத்த படமும் நாம் இருவரும் சேர்ந்து தான் பண்ண போகிறோமென்று கூறினார்.
“கவி முதல் படத்திலே நிரூபித்துக் காட்டிவிட்டான்… பல இயக்குனர்கள் கவியைப் பற்றி கேட்கின்றனர், மீண்டும் நாம் இணையும் படத்திற்கும் கவியையே ஹீரோவாக போட்டுவிடலாம் அபி” என உற்சாகத்துடன் பேசிக்கொண்டே போனவரை அபியின் வார்த்தைகள் தடுத்தன.
“சாரி சார்…. கவி இனி எந்தவொரு படத்திலும் நடிக்க மாட்டான்.”
அபியின் குரலிலிருந்த அழுத்தமே, இனி இதைப்பற்றி பேச நான் விரும்பவில்லை என்னும் பொருளை உணர்த்தியது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து.. வாழ்த்து செய்திகள் வந்துகொண்டிருக்க அலுவலகத்திலிருந்து அபியால் நகர முடியவில்லை. பேசாமல் இங்கு வராமலே இருந்திருக்கலாம் என்று அபியை எண்ண வைத்துவிட்டன, விடாமல் வந்து சேர்ந்த அழைப்புகள்.
“பெய்யும் மழையினை கடலிலும், சாக்கடைகளிலும், தெருக்களிலும் ஓடவிட்டு வீணாக்காது, ஏரி, குளம், மதகு, அணை போன்ற இடங்களில் சேமித்து வைத்தாலே இப்போது இருக்கும் சூழலில் நமக்கே நீர் கிடைக்கும், ஆறுகளில் மணலினை அல்லாமல் தூர் வாரி நிலத்தடி நீரினையும் காக்க வேண்டும்… அப்போது தான் நாளைய தலை முறைகளுக்கு நீர் ஒரு சொட்டாவது கிடைக்கும்” என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்த அபியின் மேக தாகம் திரைப்படம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி.. மிகப் பெரிய வெற்றியை உறுதி செய்தது.
ஆனால் உழைப்பிற்கு கிட்டிய வெற்றியை அபியின் மனம் அவனை சுவைக்கவிடவில்லை…. வருவை பற்றியே சிந்தித்தது.
நேரம் விரைந்துகொண்டிருக்க,
“சார் சாப்பிட ஏதாவது வாங்கி வரட்டுமா?” என்று நிவாஸ் கேட்ட பிறகே அபிக்கு இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது புரிந்தது.
வேண்டாமெனக் கூறியவன் வீட்டிற்கு புறப்பட்டான்.
அந்நேரம் கோயம்பேடு வந்திறங்கிய வரு தனது கணவனுக்கு அழைப்பு விடுக்க… பல முறை அழைப்புக்கு பிறகே அட்டெண்ட் செய்தான்.
வரு “அத்தான்” என்றழைக்கவும்…
எதிர் முனையில் டொம்மென்ற சத்தத்துடன் கார் உருளும் ஒலியும் கேட்டு வருவிற்கு கிளியை ஏற்படுத்தியது.
“அத்தான்… அத்தான்…”
அவள் குரலைக் கேட்க எதிர்முனையில் யாருமில்லை..
உடனே நிவாஸிற்கு அழைத்து… “அண்ணா அவர் எங்கே?” என்று அழுகையோடு வினவினாள்.
“இப்போ தான் கிளம்பி ஒரு பத்து நிமிடம் இருக்கும்” என்று அவன் கூறியதும்,
“அண்ணா, அவருக்கு என்னவோ ஆகிருச்சு.. கொஞ்சம் நீங்க போய் பாருங்களேன்” எனக் கெஞ்சினாள்.
அவளின் அழுகையும், கெஞ்சலும் நிவாஸிற்கு உள்ளுக்குள் என்னவோ செய்ய…
“பயப்படாதம்மா… நான் போய் பார்த்துட்டு கால் செய்றேன்” என்றான்.
சாலையின் இருமங்கிலும் அபியின் கார் தெரிகிறதா எனப் பார்த்துக்கொண்டே நிவாஸ் தனது பைக்கினை விரட்டினான்.
சரியாக பத்து நிமிட தூரத்தில் கார் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்தது.
சிறு பயத்துடனே அருகில் சென்று பார்த்த நிவாஸ் அதிர்ச்சியடைந்தான். அபி தலைகுப்புற மயங்கிய நிலையில் காருக்குள் கிடந்தான். உடனடியாக ஆபுலன்ஸ் வரவைத்தவன் அபியை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
வருவிற்கு அழைத்து தகவல் சொல்லியவன்.. மருத்துவமனையின் பெயரினைக் குறிப்பிட்டு, “பார்த்து வாம்மா” என்று அக்கறையுடன் கூறினான்.
அடித்து பிடித்து… கண்களில் நீரை சுமந்தபடி, மூச்சிரைக்க ஆட்டோவில் வந்து சேர்ந்தவளை மருத்துவமனையின் வாயிலிலே நின்று அழைத்துச் சென்றான் நிவாஸ்.
“நீங்க.. அவர்கூட இல்லாம ஏன் அண்ணா எனக்காக வெளிய காத்திருக்கீங்க” எனக் கேட்டவளை வினோதமாகப் பார்த்தான்.
அவனின் பார்வையை அறிந்து… நடந்து கொண்டே, “என்னா அண்ணா… அவருக்கு ஒன்றும் சீரியஸ் இல்லையே” என உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வினவினாள்.
வந்ததும் அவரின் நலனைத் தெரிவிக்காமல் சிறு பிள்ளையை கலங்கச் செய்கின்றோம் எனத் தன்னையே கடிந்துகொண்டவனாக,
“உயிருக்கு எந்தவித ஆபத்துமில்லை…. ஹீ இஸ் சேஃப்… பட் கையில் பிராக்ட்ச்சர்.. சரியாக டூ, த்ரீ மந்த்ஸ் ஆகுமாம்” என்றான்.
அறையினுள் வரு மட்டும் செல்ல, நிவாஸ் வெளியில் நின்று கொண்டான்.
வரு உள்நுழைந்த சமயம் அபி நெற்றியில் சிறு கட்டு மற்றும் வலது கையில் பெரிய கட்டுடன் மயக்கத்திலிருந்தான்.
கணவனின் அருகில் மெல்ல சென்றவள், அபியின் கரத்தினை தன் கரங்களுக்குள் பொத்திக்கொண்டாள். தன்னவளின் சபரிஸம் அந்நிலையில் உணர்ந்தானோ.. “பேபி வந்துட்டீயா, இனி என்னை விட்டு போகமாட்டீயே” என தூக்கத்திலே அவளிடம் கேட்டான்.
இந்நிலையிலும் என் நினைவா… என்ன மாதிரி அன்பு இது.. தான் எப்படி உணர்கிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.
சத்தமில்லாமல் அழுகையில் கரைந்தாள்…
“ஐ லவ் யூ வனி….”
தீடிரென அவன் கூறக் கேட்டவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது… யாறந்த வனி என சிந்தித்தவளுக்கு கிடைத்த பதில் எல்லையில்லா மகிழ்வினை தந்தது. தன் காதல் நிஜமானதில் விழிநீர் கன்னம் தாண்டி அவள் கைகளுக்குள் இருக்கும் அவனது கையில் பட்டு தெறித்தது.
(வ)ருணாளி(னி)…
தன்னவளின் சூடான கண்ணீரை உணர்ந்தவனுக்கு.. அவளின் வாசம் மூச்சுக்குழலை நிரப்பி.. மயக்கத்திலிருந்து மெல்ல கண்களை திறந்தான்.
அபி கண் விழித்ததும், தனக்கு அருகில் நின்று கொண்டிருந்தவளை உருத்து விழித்தான். தனது கையை அவளிடமிருந்து உருவ முயன்றான். எங்கே, அவள் விட்டால் தானே. அபி தன் காதலை அவனறியாமல் சொல்லிய பிறகும் தள்ளி இருப்பதற்கு அவளென்ன முட்டாளா.
“இப்போ எதுக்கு கை இழுக்குறீங்க… என் கைக்குள்ள இருந்தால் குறைஞ்சு போய்டுவீங்களா?” என வம்பு செய்தாள்.
‘புருஷன் அடிபட்டு கிடக்கிறேன்… கண் முழித்ததும் இப்போ எப்படி இருக்கு, வலி இருக்கா அத்தான்னு கேட்காம சண்டை இழுக்குறா சண்டைக்காரி’ என மனதில் வைதான்.
அவனது மனக் குரல் அவளின் செவிகளில் விழுந்ததோ…. மெல்ல நகைத்தாள்.
அவன் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு… “இப்போ மட்டும் எதுக்கு வந்த?” என வெடுக்கென்று கேட்டான்.
பெட்டில் அவனருகில் நெருங்கி அமர்ந்தவள்.. அபியின் கன்னங்களை தன் கரங்களில் ஏந்தி அவனின் விழிகளில் தனது காதல் பார்வையை செலுத்தியவள் “நான் உங்களை காதலிக்கிறேன் அத்தான்.. இனி எப்பவும் விட்டுப்போக மாட்டேன்,” சாவில் கூட… அழுத்தமாகக் கூறினாள்.
“நான் உன்னை லவ் பண்ணலன்னு சொன்னா?”
ஏதோ ஜோக் கேட்டதைப்போல் சத்தமாக சிரித்தவள், “நீங்க நான் வந்ததுமே பேபி சொன்னீங்களே அப்பவே, கண் முழிசிட்டீங்கன்னு எனக்குத் தெரியும்… நேர்ல சொல்ல முடியலன்னு.. இப்போ இந்த மயக்கத்தை யூஸ் பண்ணிக்கிட்டீங்க” என்றாள்.
“அடிப்பாவி, நீ நல்ல கேடி தான்” எனக் கூறிய அபி அமைதியாகினான்.
“என்னாச்சு அத்தான்… கோபம் போகலையா, நான் உங்ககிட்ட சொல்லாம போனது தப்புதான்.. மன்னிச்சிடுங்க” என்று வேண்டினாள்.
“உன் மேல எந்த தவறுமில்லை வனி… நான் உணர்ந்ததும் என் காதலை உனக்கும் உணர்த்தியிருக்க வேண்டும்.. மனம் திறந்து பேசாததால் தான் இந்தக் குழப்பமே” என்றான்.
“அதை எல்லாம் விடுங்க அத்தான்… இப்போ தான் நமக்குள்ள இருக்க காதல் ரெண்டு பேருக்கும் தெரிஞ்சிடுச்சுல.. இனி யார் என்ன சொன்னாலும் நான் உங்களை விட்டுட்டு போகமாட்டேன்” எனக் கூறியவள் அவன் நெஞ்சிலே சாய்ந்து உறங்கிப்போனாள். பயண அலைச்சல் மற்றும் மன உளைச்சல் நீங்கிய நிம்மதி உணர்வும் அவளுக்கு உறக்கத்தை அளித்தது.
முதல் முறையாக மனைவியாக உரிமையுடன் தன் நெஞ்சில் சாய்ந்திருப்பவளை திகட்ட திகட்ட பார்த்து ரசித்தான்.
மறுநாள் அபிக்கு அனைத்து பணிவிடைகளும் வருவே தனது கணவனிற்கு பார்த்து பார்த்து செய்தாள்.
ஒன்பது மணியளவில் அபியை பார்க்க ஷர்மா வந்திருந்தார்.
“அபி இதற்கு காரணமான அரவிந்தை பற்றி நமது சங்கத்தில் புகார் அளித்துவிட்டேன். இன்னும் நான்கு வருடங்களுக்கு அவன் எந்தப் படத்திலும் நடிக்க முடியாது” எனக் கூறினார். அதற்கு அபி புன்னகையையே பதிலாக அளித்தான்.
“எப்படி அபி இவ்வளவு கேர்ளசா டிரைவ் பண்ணீங்க… கொஞ்சம் வேகமாக இடித்திருந்தால் என்னவாகியிருக்கும்?” என்று கவலையடைந்தவரிடம்,
“நான் சுதாரித்ததால் தான் இந்த அளவோடு தப்பித்தேன்… இரண்டு பக்கமும் இரு கண்டெய்னர் லாரி லாக் பண்ணிடுச்சு.. ஒருவாறு சுதாரித்து வந்தால் எதிரில் ஒரு லாரி, வண்டியை வளைத்து திருப்பியதில் உருண்டு கவிழ்ந்தது.. பள்ளம் எதுவுமில்லாம மணலா இருந்ததால் உயிர் பிழைத்தேன்” என்று விளக்கமளித்தான்.
அந்நேரம் அபிக்கு கவி கால் செய்ய, வரு அவனிடம் மொபைலை அளித்தாள். அதை ஏற்று காதில் வைக்க, “எப்படிடா இருக்கு.. பெயின் எதுவும் இருக்கா எனக் கேட்ட கவி.. சாரிடா மச்சான், கனிக்கு இப்படி இருப்பதால் என்னால் வர முடியவில்லை” என பாவம் போல் அவன் கூற..
“டேய்… திருட்டு பயலே, நீ அறைக்கு வெளியில் தான் இருக்கேன்னு தெரியும் ஒழுங்கா உள்ளே வா” எனக் கூறி வைத்தான் அபி.
“எப்படிடா கண்டுபிடிச்ச?” என்ற கேள்வியுடன் உள் நுழைந்த கவியுடன்.. அபியின் மொத்த குடும்பமும் வருகை தந்திருந்தது.
உயிருக்கு வந்த ஆபத்து கையோடு போனதே என அனைவரும் நிம்மதி கொண்டனர்.
இரு தினங்களில் அபி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
ஒருவாரம் அபியுடனே அனைவரும் தங்கியிருந்து அவனை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டனர்.
சென்னையில் பெரிய மருத்துவமனை ஒன்றில் கனியை பரிசோதிக்க அனுமதி வாங்கியிருந்தான் அபி. கவி கனியை அழைத்துச் சென்று அனைத்து விதமான பரிசோதனைகளும் முடிந்ததும்..
“இனி பயப்படும்படி ஒன்றுமில்லை.. ஷீ இஸ் பெர்பகட்டிலி ஆல் ரைட்” என்று மருத்துவர் சொல்லிவிட, அனைவரும் மகிழ்ந்தனர்.
கிராமத்தில் அனைத்து வேலைகளும் தேங்கி நிற்க நாங்க எல்லோரும் கிளம்புகிறோம் என்று அனைவரும் கிளம்பிவிட்டனர் கனி மற்றும் கவியை தவிர்த்து.
இரண்டு இளம் ஜோடிகள் தனித்து விடப்பட்டனர்.
கவி வந்த அன்றே தங்கள் இருவரின் மணமாற்றத்தை அபி அவனிடம் தெரிவித்துவிட்டான். இதனை அறிந்த மூத்த உறுப்பினர்கள் அனைவரும் தங்களது குலம் தழைத்துவிடுமென்று நம்பிக்கை கொண்டனர்.
இரண்டு ஜோடிகளுக்கும் இடையேயான அனைத்தும் அறிந்த பின்னர், இவ்வளவு நடந்தும் என்னிடம் எதுவும் கூறவில்லையே என்று கோபாலன் முருக்கிக்கொள்ள…
“வயசான காலத்துல உங்களுக்கு இந்த வீம்பு தேவையா தாத்தா” என்று விஷ்ணு செய்த நக்கலில் அவரும் தன் கோபம் விடுத்தார்.
இரண்டு நாட்கள் கழித்து, “வரு கல்லூரியிலே நீயும் படிக்கிறியா?” என அபி கேட்டதும் கனி ஒரு மாதிரியாக கவியை பார்த்தால். அபி என்னவென்று கேட்க, கவி சிரிப்புடன் அறைக்குள்ளே சென்றுவிட்டான்.
அபி கனியை பார்க்க, “இதுக்கு அப்புறம் நான் படிச்சு என்ன அண்ணா பண்ணப்போறேன்.. ஏற்கனவே, எனக்கு இரண்டு வருடம் சின்ன பசங்க கூட படிச்சிட்டு இருக்கேன்… இனி எதுக்கு காலேஜெல்லாம் மாத்திக்கிட்டு நான் வீட்லே இருந்துக்கிறேன்” எனக் கூறியவள் அபியின் பதிலை எதிர்பார்க்காமல் ஓடிவிட்டாள்.
தங்கையின் செயலில் சிரிப்புடன் அபி அமர்ந்திருக்க, அப்போது தான் வரு கல்லூரி விட்டு வீடு வந்தாள்.
காலை எழுந்ததும் ஒரு மனைவியாக கணவனுக்கு அனைத்தும் செய்து முடித்து கல்லூரி செல்பவள், சரியாக உணவு நேரத்தில் அபிக்கு கால் செய்து சாப்பிட சொல்லி, மருந்து மாத்திரைகள் விழுங்க நினைவு கூறுவாள். அவனுக்கே இத்தகைய அக்கறையும் அன்பும் ஆச்சரியம் அளித்தது. ஒரு பெண்ணால் தன் கணவன் மீது எவ்வளவு அன்பு வைக்க முடியுமோ அவ்வளவையும் வரு தன் செயலால் அபிக்கு உணர்த்தினாள்.
மாலை கல்லூரி விட்டு சோர்ந்து வருபவளை பார்க்கையில் அபிக்கு வருத்தமாக இருக்கும். தன்னையும் கவனித்துக் கொண்டு கல்லூரி சென்று வருகின்றாள் இனி தன் வேலைகளை தானே செய்ய வேண்டுமென்று நினைத்துக்கொண்டான்.
வீட்டிற்கு வந்ததும் அபியின் அருகில் அமர்ந்தவள், அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டாள்.
“என்ன பேபி ரொம்ப சோர்வா இருக்கா?”
அபியின் கேள்விக்கு சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், “அத்தான் என்ற திணறளுடன்… எனக்கு இங்கிருக்கவே பிடிக்கல, இந்த சிட்டி வாழ்க்கை.. கல்லூரி எல்லாம் ஏதோ இயந்திரத்தனமா இருக்கு. எனக்கு பிடிக்கல” எனக் கூறியவள் உடைமாற்ற அறைக்குள் சென்று விட்டாள்.
அபி ஒரு முடிவெடுத்தவனாக அமர்ந்திருந்தான்.
மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில், அபிக்கு கை பூரணமாக குணமடைந்து விட்டது.
தோட்டத்தில் அமர்ந்திருந்தவன் கவியை அழைத்து, “நீ ஊருக்கு போய் அங்கேயே இரு” என்றான்.
“உன்னை விட்டு என்னால் போக முடியாது” என்றவனை, “என்னை மதிப்பவனா இருந்தா நான் சொல்றதை செய்” என்றவன் உள்ளே எழுந்து சென்று விட்டான்.
“சாருக்கு, பொண்டாட்டி வந்ததும் நானெல்லாம் அந்நியமாகிட்டேன்” என்று கவி புலம்பிய நேரம், வெங்கட் அழைத்திருந்தார்.
“சொல்லுங்க மாமா” என்று கடுப்புடன் கேட்டவனை… “யார் மேல் இருக்கும் கோபத்தை என்கிட்ட காட்டுற மருமகனே” என்று வினவினார்.
“எல்லாம் உங்க பையன் மேல் தான் மாமா” என்றவன், “நீங்க எதுக்கு போன் பண்ணீங்க” எனக் கேட்டிருந்தான்.
கள்ளகுறிச்சியின் பிரபலமான கல்லூரி ஒன்றின் பெயரை சொல்லியவர், உனக்கு அங்கிருந்து பேராசிரியராக பணிபுரிய அழைப்பு கடிதம் வந்திருப்பதாகத் தெரிவித்தார். நான் ஏதும் விண்ணப்பிக்கவில்லையே என்றவனிடம், அபி தான்டா காரணம் என்க… சந்தோஷத்துடன் அபியைத் தேடி வீட்டிற்குள் ஓடினான்.
அங்கு, கனி அரை மயக்கத்தில் வருவின் மீது தலை சாய்த்து அமர்ந்திருக்க, அபி மருத்துவருக்கு அழைத்திருந்தான். உள்ளே ஓடி வந்த கவி அபியைக் கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் முத்தம் வைத்து “தேங்க்ஸ் டா மச்சான்” என்று கத்தினான்.
“ஒருவழியா சாருக்கு நான் ஊருக்கு போக சொன்னதற்கான காரணம் தெரிஞ்சிருச்சா” என்க, கவி ஆம் என தலையசைத்தான்.
அப்போது தான் கனியை கவனித்தவன் “என்னாச்சுமா?” என்ற பதட்டத்துடன் அவளருகில் அமர, அபி அழைத்திருந்த பெண் மருத்துவர் வந்து சேர்ந்தார்.
கனியை பரிசோதித்த மருத்துவர் அவளின் தாய்மையை உறுதி செய்ய, அபி கவியை அணைத்துக்கொண்டான். வரு கனியை கேலி செய்து முகம் சிவக்கச் செய்தாள். வீட்டினருக்கு தகவல் அளிக்க அவர்களும் மகிழ்வில் திலைத்தனர்.
இந்நிலையில் பயணம் செய்யலாமா என்று உறுதி செய்துக்கொண்டு அபி இருவரையும் ஊருக்கு அனுப்பிவைத்தான்.
“அடுத்த வாரம் தானே வேலையில் சேர வேண்டும்.. ஏன்டா இப்போவே துரத்துற” என்ற கவியிடம், “கனி இந்த மாதிரி நேரத்தில் அங்கிருந்தாதான் பெரியவர்களின் கவனிப்பு அவளுக்கு கிடைக்கும்” என்று தன்மையாக எடுத்துக்கூறி வழியனுப்பி வைத்தான்.
“நன்றி சொல்ல மாட்டேன் மச்சான், சீக்கிரம் என் பையனுக்கு ஒரு மருமகளை பெற்றுக்கொடு” என்ற கேலியுடன் அவனும் விடைபெற்றான்.
கவியின் வார்த்தைகள் தந்த சிரிப்புடன் அபி உள்ளே வர, “இப்படியிருந்தா மருமக எங்கிருந்து வருவா… ஒண்ணும் வராது.. ஹாஸ்பிட்டலில் நெருக்கமா பேசியதோடு சரி, கை நல்லானது பிறகு கூட கிட்ட வரதில்லை, சரியான சாமியார்” என்ற முணுமுனுப்புடன் வரு அவனுக்கு முன் சென்றாள்.
வேகமாக ஓடிச்சென்று தன்னவளை பின்னாலிருந்து இறுக்கமாக கட்டியணைத்தவன், “யாரடி சாமியார்ன்னு சொல்ற, சின்ன புள்ள… எக்ஸாம் வேற நடந்துச்சேன்னு கொஞ்சம் தள்ளியிருந்தா, ரொம்ப பேசுற” என்றவன் வன்மையாக அவளின் இதழை சிறை செய்திருந்தான்.
அச்சோ விடுங்க அத்தான் என்று அவனை தள்ளிவிட்டவள், வீங்கிய தனது உதட்டினை தடவிக்கொண்டே “நீங்க ரொம்ப மோசம் அத்து” என்ற சிணுங்களுடன் தங்களது அறைக்குச் சென்றாள்.
மனைவியின் பின்னூடு சென்றவன் அவளைத் தன் மடி மீது இழுத்து அமர வைத்து… “அது யாரடி அத்து” என்றான்.
“அத்தான் என்பது நீளமா இருக்குல..”
“நானென்ன கேட்கிறேன் நீயென்ன சொல்ற” என்று பார்த்தவனை,
தலையில் தட்டி, “அய்யோ மக்கு அத்தான்… அத்தானை தான் அத்துன்னு சொன்னேன்” என்றாள்.
“அப்போ சாமியார்… இப்போ மக்கா டி… வாய் ரொம்ப அதிகமாகிடுச்சு” என்ற அபி தன்னவளின் பின்னங் கழுத்தில் வாசம் பிடிக்க, கணவனின் சூடான மூச்சுக்காற்று பெண்ணவளை போதைக்குள்ளாக்கியது. அவனின் கைகள் அத்துமீற, அவளோ அவனிடம் வசமிழந்தாள்.
சட்டென தன்னை சுதாரித்தவன் அவளிடமிருந்து விலக, வரு ஏக்கமாக பார்த்தாள். மனைவியின் பார்வை மனதை பிசைய, “நமக்குள்ள எல்லாம் சரியாகியிருக்கலாம்… ஆனால் உன்னிடம் என்னைப்பற்றி என் கடந்த காலத்தைப்பற்றி சொல்ல வேண்டும். அதன் பிறகும் நீ சம்மதித்தால், நமக்குள் இதெல்லாம்” என்றான்
அபி எதைப்பற்றி கூற விழைகிறான் என்பதை புரிந்துகொண்டவள்.. “விஷாலியைப் பற்றி எனக்கு அனைத்தும் தெரியும் அவர்களது டைரி உட்பட” என்றாள்.
அபிக்கு ஆச்சரியமாக இருந்தது. தான் ஒரு பெண்ணை உயிராய் நேசித்தது முழுவதும் தெரிந்தும் தன் மீது காதலைக் காட்டுபவளின் மீது காதல் பெருகியது.
அக்காதலுடன் இறுக்கமாக தன் மனைவியைக் கட்டிக்கொண்டு சில நிமிடங்கள் அவன் கண்ணீரில் மூழ்கியிருக்க, “விஷாலி எப்பவும் உங்களுக்குள்ள நினைவாகவே இருப்பாங்க. நான் தான் நிஜம்னு உங்களோடு வாழ்ந்து காட்டுறேன்” என்றாள் வரு.
தன்னவளிடமிருந்து பிரிந்தவன் “அதை நீ ஏற்கனவே செய்துட்ட வனி, இப்போதெல்லாம் எனக்கு விஷாலி நினைவுகள் வருவதில்லை… மொத்த நேரமும் உன் சிந்தனையே” என்ற கணவனை தன் முத்த மழையால் திகைக்க வைத்தாள்.
“வனிம்மா…. அத்தான் ரொம்பலாம் நல்லவனில்லை.. இப்படியெல்லாம் முத்தம் கொடுத்து டெம்ப்ட் பண்ணா, நடக்கும் சேதாரத்திற்கு நான் பொறுப்பில்லை.. இன்னும் உனக்கு ஒரு வருட படிப்பிருக்கு” என்று அப்பாவியாக சொல்லியவனை,
இடுப்பில் கை வைத்து முறைத்துப் பார்த்தவள்… புசுபுசுவென மூச்சு விட்டு… “போடா சாமியார்” எனக் கூறிவிட்டு ஓடினாள். அவளை பிடிக்க அபி ஓட இருந்த வேளையில் கரடியாய் சிணுங்கியது அபியின் மொபைல்.
அழைத்தது ஷர்மா…….
“வாழ்த்துக்கள் யங் மேன்… நீ மீண்டும் சாதிச்சுட்ட” என்றவரின் பேச்சு புரியாமல், “என்ன சொல்றீங்க ஷர்மா?” எனக் கேட்டான்.
“இந்தாண்டு சிறந்த திரைப்படத்திற்கான மாநில விருது நம் படத்திற்கு கிடைத்திருக்கு” என்று துள்ளலுடன் தெரிவிக்க, அபி மகிழ்வாய் புன்னகைத்துக் கொண்டான்.
சில மாதங்களுக்கு பிறகு….
அரங்கம் முழுவதும் பல வர்ண விளக்குகளாலும்… திரை நட்சத்திரங்களாலும்… முக்கிய பிரமுகர்களாலும்… மக்கள் கூட்டத்தாலும் நிரம்பி வழிந்தது.
ஒலிபெருக்கியுடன் மேடையேறிய தொகுப்பாளினி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது.
அது திரை நட்சத்திரங்களுக்கான மாநில அரசு விருது வழங்கும் விழா.
அனைத்து பிரிவிலும் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கிய பின்னர், இறுதியாக அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் மற்றும் இயக்குனருக்கான என்ற இரண்டு பிரிவிலும் மேக தாகம் தேர்வு செய்யப்பட்டது.
மேடைக்கு கீழே முதலிருக்கையில் அபி வருவுடன் அமர்ந்திருக்க, கவி நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியை தோள் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான்.
படத்திற்கான அனவ்ன்ஸ் வழங்கியதும் கம்பீரமாக மேடையேறிய அபியை , இவன் என் கணவன் எனும் கர்வத்துடன் பார்த்தாள் வரு.
இயக்குனருக்கான விருதினை தனியாகப் பெற்றுக்கொண்ட அபி, திரைப்படத்திற்கான விருதினை தன் மொத்த படகுழுவினரையும் மேடைக்கு அழைத்துப் பெற்றுக்கொண்டான்.
அனைவரும் மேடையிலிருந்து கீழிறங்க, அபியிடம் மைக்கினை அளித்த தொகுப்பாளினி, “உங்களது அடுத்த படம் பற்றி தகவல் ஏதேனும் கிடைக்குமா” எனக் கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.
அபி புன்னகையை மட்டும் பதிலாக அளிக்க,
“விவசாயம், நீர் பற்றி படம் எடுத்து சாதித்து விருதும் வாங்கிட்டீங்க… அடுத்து என்ன சார்?” என விடாது கேள்வி கேட்டாள் அந்த தொகுப்பாளினி.
சில வினாடி மௌனத்திற்கு பிறகு, “நான் திரைத்துறையிலிருந்து முற்றிலும் விலக இருக்கிறேன்” என்றான்.. சிறு தயக்கமுமின்றி,
அரங்கமே அதிர்ச்சிக்குள்ளானது…
கவி மற்றும் வருவிற்கு கூட அபியின் பதில் புதிது…
அனைவரும் அபியின் முகத்தையே கூர்ந்து பார்க்க,
ஷர்மா மேடையேறி ஏன் இந்த திடீர் முடிவென்று அதிர்ந்தே விட்டார்.
வழக்கம்போல் புன்னகையையே அவரின் அதிர்வுக்கு பதிலாக வழங்கினான்.
அரங்கத்தில் உள்ளோரை பார்த்து,
“இதுவரை படத்தின் மூலம் சமூக கருத்துக்களை வழங்கிய நான்.. அதை செயலில் காட்ட நினைக்கிறேன்… சோ, நான் எனது கிராமத்திற்கு சென்று விவசாயம் செய்யலாம் இருக்கேன். கருத்து மட்டுமே சொல்லிகிட்டு இருந்தா, யார் தான் இறங்கி செய்து பார்ப்பது” என நிமிர்வுடன் கூறினான்.
அரங்கமே கைத்தட்டாலால் நிறைந்தது.
வரு.. அன்று தான் இவ்விடம் பிடிக்கவில்லை என சொல்லியதே இதற்கு காரணம் என்று புரிந்துகொண்டாள்.
தனக்காக தன் மகிழ்விற்காக உயிருக்கு உயிராய் நேசிக்கும் தொழிலை விட்டு விவசாயம் செய்ய போகிறேன் என்றவன் மீது காதல் ஊற்றாய் பல்கிப் பெருகியது.
தனது முடிவைக் கூறியவன் நிமிர்ந்த நடையுடன் கம்பீரமாக கீழிறங்கி வர, அது மக்களால் நிறைந்த அரங்கம் என்பதை மறந்து ஓடிச்சென்று தன்னவனை அணைத்துக்கொண்டாள்.
தலையுயர்த்தி எனக்காகவா என்று விழிகளால் அவள் கேட்க, இமை மூடி ஆமென்றான் அபி.
அணைத்திருக்கும் மனைவியை கை வளைவில் கொண்டு வந்தவன், கவி மற்றும் கனியுடன் அரங்கை விட்டு வெளியேறினான்.
அவர்களது கார் கிராமத்தை நோக்கி சென்றது.
பின்னிருக்கையில் கவி மற்றும் கனி அமர்ந்திருக்க, முன்னிருக்கையில் அபி அமர்ந்து வாகனத்தை சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டிருக்க, வரு தன் கணவனின் தோளில் கர்வத்துடன் சாய்ந்திருந்தாள்.
ஒரு பெண்ணின் காதலால் சருகாகிப் போன மன்னவனின் வாழ்வு… மற்றொரு பெண்ணின் நேசத்தால் துளிர்விட்டு பசுமையானது.
பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி
நானுனக்கு…
தோயும் மது நீ எனக்கு, தும்பியடி
நானுனக்கு…
வாயுரைக்க வருவதில்லை, வாழிநின்றன்
மென்மையெல்லாம்…
தூயசுடர் வானொளியே; சூறையமுதே;
கண்ணம்மா;
– மகாகவி பாரதியார்…
இனி அவனுக்கு(சசி அபினவ்) யாவும் அவனது கண்ணம்மாவே (சசியின் பேபி)
வாழ்க அனைத்தும்
புன்னகையுடன்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
என்னுடன் பயணித்து, எனக்கு ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼