சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 5

சருகு 🍂 5 :

பிலிம் சிட்டி…

அன்றைய நாளின் ஷூட்டிங்கிற்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

நேற்று ஹீரோ விலகியதில் இன்று நடைபெறாது என நினைத்திருந்த படபிடிப்பு நடைபெறவும் அதை பற்றி தகவல் தெரிந்து கொள்ள பத்திரிக்கைகாரர்கள் சூழ்ந்திருந்தனர்.

“புது ஹீரோ யார்” என்று தெரியாத நிலையில்… அக்கேள்வியினை கேட்டு நிவாஸ் மற்றும் இன்னும் சில உதவி இயக்குனர்களை படுத்தி எடுத்தனர்.

இன்று இங்கு வந்தால் தன்னை மீடியா பீப்பில் ஒரு வழி செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் சர்மா வரவில்லை.

அப்போது கம்பீரமாக தனது காரிலிருந்து இறங்கிய அபினவ் கவியுடன் நடந்து வந்தான். 

அபியின் வரவை உணர்ந்த பத்திரிகைக்காரர்கள் அவனை ஈக்கள் மொய்ப்பதை போல் மொய்த்தனர். சில நொடிகளில் பல கேள்விகளை அவனை நோக்கி வீசினர்.

கேள்விகளுக்கு சிறிதும் அலட்டிக்கொள்ளமல் தான் அணிந்திருந்த கூலர்ஸை கழட்டியவன் சற்று தள்ளி நின்றிருந்த கவியை நோக்கி கை காண்பித்து “இவர் தான் எனது படத்தின் ஹீரோ” என்றதோடு அங்கிருந்து நகர்ந்தான்.

அதிர்ச்சியில் உறைநிலைக்கு சென்ற கவி தன்னை சூழ்ந்து கொண்ட நிரூபர்களின் சத்தத்தில் வெளி வந்தான். அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்க திணறியவன் “நான் எனது நடிப்பின் மூலம் உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க நினைக்கின்றேன்” என கூறிவிட்டு அபியிடம் சென்றான்.

கவியின் பதிலை கேட்ட அபி நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.

அவன் நினைத்திருந்தால் ஒரு நொடியில் அபி சொல்லியதை மறுத்து, “என்னால் முடியாது” என சொல்லியிருக்கலாம், ஆனால் தன்னுடைய அபியின் சொல்லை அவனால் என்றாவது எதிர்க்க முடியுமா?

அபியை நோக்கி சென்றவனை மறித்து “காங்கிராட்ஸ் சார்” என்ற நிவாஸை முறைத்த கவி… “ஏன்டா நீ வேற கடுப்பேத்துற” என அலுத்துக் கொண்டான்.

அபியை நெருங்கிய கவி அமைதியாக நின்றிருக்க அவனிடம் என்ன என்பதை போல் பார்வையால் வினவினான் அபி.

ஒன்றுமில்லை என்பதை போன்று தலையசைத்த கவி “எனக்கு என்ன டயலாக் டா” என்றான்.

கவியின் புரிதலில் அவனை கட்டிக்கொண்ட அபி ஆடை வடிவமைப்பாளரை அழைத்து “இவருக்கு ஏற்றவாறு ட்ரெஸ் செலக்ட் செய்ங்க” என்றான் மகிழ்வுடன்.

அபியிடம் அருகிலாவது “தன்னால் முடியாது அல்லது எனக்கு நடிப்பை பற்றி ஒன்றும் தெரியாது” என்றாவது கூறியிருக்கலாம். ஆனால் அபியின் பார்வையை கூட அவனது மனம் மறுக்க நினையாது. கவி மற்றும் அபிக்கு நடுவில் இருக்கும் பிணைப்பு அப்படிப்பட்டது. அபிகாக எதுவும் செய்ய விரும்பும் கவி இதற்கும் ஒப்புக்கொண்டான்.

கவிக்கான உடைகள் ரெடியாகியதும், மேக்கப் மேனை அழைத்தவன், “என் கவி அல்ரெடி செம அழகு… (இதை சொல்லும் போது அபி இதழின் ஓரத்தில் புன்னகையுடன் கவியை பார்த்து ஒற்றை கண்ணை அடித்தான், இந்த அபிகாக நடிக்க மட்டுமல்ல எதுவும் செய்யலாம் என்று கவிக்கு தோன்றியது.) சோ… பத்து பதினைந்து லேயரில் அவன் முகத்தில் பெயிண்ட் அடிக்காம வெறும் பேஸ் (base) மட்டும் போட்டால் போதும்.. சீக்கிரம் ரெடி பண்ணி கூட்டிட்டு வாங்க” என்றவன் தனது அடுத்த வேலையை கவனிக்க சென்றான்.

கவி பலி ஆடு போல் மேக்கப் மேனின் பின்னால் சென்றான். 

அடுத்த பதினைந்து நிமிடங்களில் தயாராகி கேரவனிலிருந்து வெளி வந்த கவியை கண்ட அபி… 

“இவ்வளவு சீக்கிரம் கிளம்பி வந்த முதல் ஹீரோ நீ தான்டா” என்றான்.

அதற்கு எதுவும் சொல்லாமல் நின்றிருக்கும் கவியின் அமைதி அபியை என்னவோ செய்தது. 

“அவனிடம் கேட்காமல் முடிவு எடுத்து விட்டோமோ? தாத்தாவிடம் அனுமதி கேட்டது போல் கவியிடமும் ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டுமோ?” என்று இப்போது சிந்தித்தான்.

நேற்று ராஜகோபலனிடம் அபி பேசியது கவியை ஹீரோவாக நடிக்க வைப்பது பற்றி தான்.. அதற்கு அவர் சம்மதித்ததும் கவிக்கு ஷாக் அளிக்க நினைத்து அவனிடம் சொல்லாமல்(கேட்காமல்) விட்டுவிட்டான். இப்போது அதை நினைத்து வருந்தியவனாய் கவியிடமும் அதையே கேட்டான்.

“உன்னை கேட்காமல் முடிவு செய்தது தவறு தான்…  உனக்கு விருப்பம் இல்லையென்றால் மறுத்து விடு.”

அபியின் முகத்தில் வருத்தத்தை உணர்ந்த கவி.. அவனது வார்த்தைகளில் கோபம் கொண்டவனாக… “நீ சொன்னா செத்துப்போக கூட எனக்கு சம்மதம் தான்” என்றான். 

அடுத்து அபி சொல்ல வருவதை கேட்காது நிவாஸை பார்த்து “அந்த ஸ்கிரிப்ட் பேப்பர் கொடு” என கை நீட்டினான்.

”ஸ்கிரிப்ட் பேப்பர்” என நிவாஸ் இழுக்க…

“என்னடா ஹீரோ ஆனதுமே மொத்த கதையையும் கேட்கிற” என்றான் அபி கிண்டலாக..

அதில் தனது தவறு உணர்ந்தவனாய் அபியை முறைத்துக் கொண்டே.. நிவாஸிடம் சாரி சொல்லியவன், 

“இப்போ எடுக்க இருக்கும் சீன் டயலாக் பேப்பர் கொடுங்க.. என் பிரெயின் கொஞ்சம் வீக், ஒரு பத்து முறையாவது படித்தால் தான் ஒழுங்கா பேசுவேன்” என்றான்.

கவியின் முறைப்பில் அவனது கோவத்தை குறைப்பது கடினம்… ‘நீ வாய் வச்சிட்டு சும்மா இருக்க மாட்டடா அபி’ என மனதோடு புலம்பினான்.

கவியின்… பார்த்ததும், கேட்டதும் மனதில் பதிய வைத்துக் கொள்ளும் திறமையை அறிந்திருந்த அபி… 

“இது தான் டயலாக்” என வாயால் கூறி, “ஷாட் ரெடி” என மானிட்டரில் பார்வை பதித்தான்.

நிவாஸிற்கோ கவியின் பயந்த தோற்றமும், அபியின் நம்பிக்கையும் கலக்கத்தையே உண்டு பண்ணியது. 

இது எந்தளவிற்கு சரி வருமென்று தெரியாமல் முழித்தான். அவனது தோற்றத்தில் நிவாஸ் என்றழைத்த அபி, “க்ளாப் அடிங்க” என்றான்.

******************

அன்று கல்லூரியில் பீல்டு ஒர்க் என்பதால் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் தாங்கள் பயிரிட்ட தாவரங்களை கவனித்து இப்போது இருக்கும் நிலையையும்..  அதன் வளர்ச்சி, புதிதாக துளிர் விட்ட இலைகள், மலர்கள் என அவற்றின் எண்ணிக்கையை கணக்கிட்டு பயிற்சி ஏடுகளில் குறித்துக் கொண்டனர். 

வேலை முடிந்ததும் எல்லோரும் கேன்டீன், லைப்ரரி, கிரவுண்ட் என சென்று விட கனி மட்டும் கவலையுடன் மரத்தடியில் அமர்ந்து விட்டாள்.

காலையில் பேருந்தில் ஏறியது முதல் வருணா வாசுகியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றாள் ஆனால் அவள் பேசுவதாக தெரியவில்லை. 

ஒரு கட்டத்துக்கு மேல் “சரி தான் போடி” என்றுவிட்டு சென்ற வருணாவை பார்த்து சிரித்த வாசு, 

“நான் அதை அப்போவே மறந்துட்டேன். சும்மா உன்னை சீண்டி பார்த்தேன்” என்க, வருணா அவளை முறைத்தாள்.

அவளின் முறைப்பை கண்டு கொள்ளதாவள் போல் மறு பக்கம் திரும்பிய வாசுவின் கண்களில் விழுந்தாள் கவலையுடன் அமர்ந்திருக்கும் கனி.

வாசுவின் பார்வை சென்ற திசையில் தானும் பயணித்த வருணா… 

“இவளுக்கு எப்போ பாரு எதையாவது நினைத்து கவலை படரதே வேலையாப்போச்சு” என்று அலுத்துக் கொண்டவளாக வாசுவையும் அழைத்து கொண்டு கனியிடம் சென்றாள்.

தனது அருகில் வருணா அமர்ந்ததும்… “வேலு ஏதாவது செய்துடுவானா?  நாம பஸ்ஸில் ஏறும் போது அவன் பார்த்த பார்வை… அப்பப்பா… இப்போ நினைத்தாலும் கை உதருது” என பயந்தாள்.

“அப்படி ஏதாவது செய்தா, நான் பார்த்துக்கிறேன், அதுவுமில்லாம நம் வீட்டு ஆளுங்களை மீறி அவனால் என்னை எதுவும் செய்துட முடியாது. வீணா பயந்து கவலை கொள்ளாதே…” வருணா.

“இதை தாத்தாவிடமாவது சொல்லி விடலாமே” என்ற கனியிடம் 

”இந்நேரம் இது நம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும்…” 

யாரையோ மனதில் நினைத்தவளாக கூறினாள் வருணா.

அவள் நினைத்தது வேலுவின் அன்னை வைதேகியை தான்… ‘சிறு விஷியத்திற்கே சலங்கையில்லாமல் ஆடுபவர், தான் அவர்கள் மகனை அடித்தது தெரிந்தால் வீட்டிற்கு சென்று ருத்ர தாண்டவமே ஆடி விடுவார்’ என எண்ணினாள்.

வருணா எண்ணியது போன்று தான் பெரிய வீட்டின் முன்பு காளி அவதாரம் எடுத்திருந்தார் வைதேகி.

பேருந்து நிலையத்திலிருந்து நேராக வீட்டிற்கு சென்ற வேலு தனது அன்னையிடம்… ‘வருணாவிடம், உன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பம் என தெரிவித்ததாகவும் அதற்கு தன் நண்பர்கள் முன்னபாகவே தன்னை அடித்து அவமான படுத்தியதாக’ திரித்துக் கூறியிருந்தான்.

மகனின் பேச்சினை நம்பிய வைதேகி பெரிய வீட்டிற்கு வந்து, வாசலில் நின்று கத்த ஆரம்பித்தார்.

அவரது சத்தம் கேட்டு வெளியில் வந்த அனைவரும் “என்ன ஆச்சு” எனக் கேட்டும் எதுவும் சொல்லாமல் வசை பாடிக்கொண்டே சென்றார்.

அவரது அண்ணன் சீனுவாசன் வந்து “என்ன ஆனது.. நீ முதலில் உள்ளே வா” என்றவர் கையோடு வைதேகியை வீட்டிற்குள் அழைத்து வந்து அமர செய்தார். 

லலிதாவை தண்ணீர் எடுத்து வர சொன்னவர் அவர் கொண்டு வந்த நீரை தனது தங்கையிடம் கொடுத்து பருகச் செய்தார்.

நீர் வாங்கி பருகிய வைதேகி நேரடியாக விஷயத்திற்கு வந்திருந்தார்.

“என் பையனுக்கு எப்போது அண்ணா உங்க பொண்ணை கல்யாணம் செய்து வைக்க போறீங்க?”

“அதுக்கு இப்போ என்னம்மா அவசரம்… இன்னும் படிப்பையே அவ முடிக்கலையே! அது மட்டுமில்லாமல் இப்போ தான் இருபது வயசு ஆகுது.” சீனுவாசன் பல காரணங்கள் கூறியும் அதனை வைதேகி ஏற்க மறுத்தார்.

“அவ வயசு புள்ளைங்களுக்குலாம் நம்ம ஊருல ரெண்டு மூணு புள்ளைங்களே இருக்கு… நீங்க தயங்குறத பார்த்தா என் மவனுக்கு உங்க பொண்ண கொடுக்க மாட்டீங்க போலிருக்கே.. இப்போ எதுக்கு அவ படிக்கணும்.. என் புள்ள படிச்சிட்டு தான் மில்லு நடத்துரானா.. இம்புட்டு சொத்து நமக்கு இருக்கும் போது வருணா எதுக்கு படிக்கணும்.. அப்படி படிச்சு தான் ஆகணும்னா கல்யாணத்துக்கு பொறவு படிக்கட்டும்.” திருமணம் நடந்தே ஆக வேணுடுமென வைதேகி திட்டவட்டமாகப் பேசினார்.

ஒரு கட்டத்திற்கு மேல் சீனுவாசனால் தனது தங்கையை எதிர்த்து வாதிட முடியவில்லை. அவர் குழப்பத்தில் உழன்று கொண்டிருக்கும்போது ராஜகோபாலன் அங்கு வந்தார்.

பெரியவரை பார்த்ததும் வைதேகியின் சத்தம் குறைந்தது.

விஷயம் அறிந்து… “இப்போ திருமணத்திற்கு என்ன அவசரம்?” எனக் கேட்டார்.

பெரியவரிடம் தனது கத்தல் வேலைக்காகது என்பதை அறிந்திருந்த வைதேகி, “அண்ண பொண்ணு தங்கச்சி பையனுக்குத் தானே மாமா” என்றார் கோபாலனை பார்த்து.

“நீ சொல்வதும் சரி தான் வைதேகி… அப்படி பார்த்தால்… லலிதாவின் பொண்ணு வெங்கடாச்சலத்தின் மகனிற்கு தானே” என்றார்.

‘நாம ஒண்ணு நினைச்சா இந்த கிழம் வேற ஒண்ணு நினைக்குது போலையே…’ வைதேகி மனதிற்குள் வசைபாடினார்.

‘இதற்கு மேல் பேச்சு வார்த்தை சரிப்பட்டு வராது’ என சிந்தித்த வைதேகி எதையோ கண்டுபிடித்தவராய் வரவழைக்கப்பட்ட கண்ணீரோடு பேச ஆரம்பித்தார்.

“உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன மாமா.. நேத்து வேலுவுக்கு ஒரு இடத்துல ஜோசியம் பார்த்தேன்… அவனுக்கு மரண கண்டம் இருக்காம்.. இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் பண்ணலனா அவன் உயிருக்கே ஆபத்தாகிடுமாம். அதுவும் அவனுடைய முறை பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சா ஆயுசு கெட்டின்னு ஜாதகத்துல இருக்காம்.” 

எந்தளவிற்கு கண்ணீரில் கரைந்து பேசணுமோ அந்த அளவிற்கு பேசினார் வைதேகி.

தங்கையின் கண்ணீரிலே மனம் உருகிய சீனு… தன் மருமகனின் உயிருக்கே ஆபத்து என்றதும் பதரியவராய்… யாரை பற்றியும் யோசிக்காமல், “சரிம்மா எனக்கு சம்மதம் நீ நடக்க வேண்டியதை பாரு” என்க ராஜகோபாலன் இடையிட்டார்.

“உம் மவனுக்கு கெட்ட பழக்கம் எதுவும் இல்லனாலும் ரவுடி மாதிரி ஊர் சுத்திட்டு இருக்கான் எப்படி அவனை நம்பி வருணாவை கொடுக்கிறது?” இதில் தனக்கு துளியும் விருப்பம் இல்லை என்பதை போல் மேலும் பல கேள்விகளை அடுக்கினார் பெரியவர்.

“இளந்தாரி பயலுவ அப்படித்தேன் இருப்பானுவ.. கல்யாணம் ஆனா எல்லாம் சரியாப்பூடும்.” வாயெல்லாம் பல்லாக வைதேகி பதில் கொடுத்தார்.

மீண்டும் எதுவோ கேட்க வந்த கோபாலனிடம்… “மாமா, எனக்கு என் தங்கச்சி மவன் உசுரு முக்கியம்” என்றார் சீனு.

அதன் பிறகு இதில் தலையிட கோபாலனிற்கு மனம் வரவில்லை. 

“சரி சீனு உன்னுடைய மகள், உன் விருப்பம் போல் திருமணம் செய்” என்றதோடு எழுந்து சென்றார்.

லலிதாவுக்கு ஏதோ சரயில்லையென்று நெருடலாகவே இருந்தது. ஆனால் நாத்தனாரிடம் தன் வார்த்தைகள் எடுபடாது என புரிந்து வைத்திருந்தவர் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார்.

தன் அண்ணனிடம் அடுத்த வாரத்தில் வரும் முகூர்த்தத்தில் தாம்பூலம் மாற்றி நிச்சயம் பண்ணிக்கலாம் என பேசி முடிவு செய்த வைதேகி சாதித்த உணர்வுடன் தன் வீட்டிற்கு கிளம்பினார்.

வீட்டு முன்பு நின்று சத்தம் போட்ட வைதேகி, உள்ளே வந்ததும்.. திருமண பேச்சை எடுத்தது… வெங்கடாச்சலத்திற்கு சந்தேகத்தையே விளைவித்தது. 

அவருக்கு மட்டுமில்லை வீட்டில் உள்ள அனைவருக்குமே அபி, வருணாவிற்கு தான் மணம் முடிக்க வேண்டுமென ஆசை. அது நடக்காது என்பதால் எல்லாம் தவறாக எண்ண தோன்றுகிறது என நினைத்த வெங்கடாச்சலம் சீனுவிடம் “பதறிய காரியம் சிதறும்… பொறுமையா செய்” என உரைத்துவிட்டு மில்லுக்கு செல்ல கிளம்பி விட்டார்.

அப்போது ராதிகா லலிதாவிடம் பேருந்து நிலையத்தில் நடந்ததை தான் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டதாகக் கூறினார்.

ராதிகா சொல்லியதை கேட்டதும் வைதேகியின் திடீர் திருமண பேச்சு எதனால் என லலிதாவுக்கு புரிந்தது. 

‘ஆனால் இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது’ என நினைத்தவர், 

“அவரை மீறி என்னால் என்ன அக்கா செய்ய முடியும்… அப்பாவிடமே மருமகன்தான் முக்கியம்ன்னுட்டு போறாரு” என்று வருந்தினார்.

மாலை கனியும், வருணாவும் உள்ளே நுழைந்ததும்… வீட்டின் மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்த தென்னந்தொடைப்பத்தை எடுத்து, லலிதா வருணாவை அடி வெளுத்து விட்டார்.

“பொம்பள புள்ளையா லட்சணமா பாடம் படிக்க போனோமா வீட்டுக்குத் திரும்பி வந்தோமான்னு இல்லம்மா பொது இடத்துல உனக்கு என்னடி சண்டித்தனம். உன் சண்டித்தனம் இப்போ எங்க கொண்டு வந்து விட்டிருக்கு தெரியுமாடி” எனக் கேட்டுக்கொண்டே காலில் மேலும் இரண்டு அடி போட்டார்.

தடுக்க வந்த கனியை கண் பார்வையாலே தள்ளி நிற்க வைத்தார். கனி வீட்டிற்கு பின்னால் ஓடி அங்கு தொழுவத்தை சுத்தம் செய்ய சொல்லி கொண்டிருந்த கலாவிடம் நடப்பதைக் கூறி விரைந்து அழைத்து வந்தாள்.

லலிதாவிடமிருந்த தொடைப்பத்தை பிடிங்கிய கலா, “உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா..  வயசு புள்ளைய இப்படி போட்டு அடிச்சிட்டிருக்க” என்று கலா கடிந்து கொண்டார்.

“பின்ன என்ன அண்ணி இவ அவன அடிக்க போயி தான.. வைதேகி இங்க வந்து அவ்ளோ ஆட்டமாடி, நடிச்சு நம்ம புள்ளைய அவ மவனுக்கு பேசி முடிச்சிட்டு போயிட்டா…” லலிதா ஆதங்கத்தோடு புலம்பினார்.

“அதுக்காக புள்ளைய அடிச்சினா எல்லாம் சரியாபோச்சா… எது நடக்கணுமோ அதான் நடக்கும் நீ உள்ள போய் பொழப்ப பாரு,” கலா அவ்வாறு கூறியதும் ராதிகா லலிதாவை அழைத்திக்கொண்டு உள்ளே சென்றார்.

இங்கு என்ன நடக்கிறது என ஒன்றும் புரியாமல்… ‘காலையில் வேலுவை அடித்ததற்கு தான் தன்னை இப்போது தன் அன்னை அடிக்கின்றார்’ என்று நினைத்திருந்த வருணா.. கலா மற்றும் லலிதா பேச்சிலிருந்து அறிந்து கொண்ட விஷயத்தில் அதிற்சிக்குள்ளானாள்.

அதன் பிறகு தன் அத்தையிடமிருந்து வீட்டில் நடந்த விஷயங்களை அறிந்து கொண்டவள், எல்லாம் தன் கை மீறி சென்று விட்டதாகவே தோன்றியது. 

‘தாத்தாவிடம் சொல்வதாலும் எதுவும் மாறிவிட போவதில்லை, தன் அப்பாவின் சொல்லை தாண்டி இத்திருமணம் நிற்க வழியேயில்லை’ என்று சிந்தித்தவளால் அழ மட்டுமே முடிந்தது.

அழும் சகோதிரியை கவலையுடன் பார்த்திருந்தாள் கனி. தன்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தவள் கவியிடம் சொல்லி பார்ப்போம் எனத் தோன்ற.. கவிக்கு அழைத்திருந்தாள்.

தன் வருத்தத்தை நினைத்து கண்ணீரில் கரைந்து கொண்டே இருந்தால் அது நம் வருணா இல்லையே. 

அழுத விழிகளை அழுந்த துடைத்தவள் ‘தனக்கான வாழ்வு வேலுவுடன் தான் என இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்’ என்று விட்டேற்றியாக சிந்தித்தாள். 

அப்போது அவளது மனமோ, ‘உன் வாழ்க்கையில் பங்கு கொள்பவன் அவன் இல்லை இவன்’ என அபியின் முகத்தை அவள் கண் முன்னே கொண்டு வந்தது. 

அதில் அதிர்ந்தவள்… ‘வேலுவுடனான திருமணம் நிற்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளன, சசி அத்தானுடன் திருமணம் நடப்பதென்பது இந்த ஜென்மத்தில் நடக்காது’ என தன் மனதிடம் திட்டவட்டமாக வலியுறித்தினாள்.

இவ்வளவு நாள் சசியின் மீது தான் வைத்திருப்பது பாசம் என்று நினைத்திருந்தவள், தனக்கு வேறு ஒருவனுடன் திருமணம் என்றதும் அபியின் மீதான தன் அன்பின் பெயர் காதல் என புரிந்து கொண்டாள்.

புரிந்து கொண்டதும் மகிழாமல் வருத்தமே கொண்டாள். அதற்கு காரணம் அவள் அறிந்ததே. 

தனது அத்தானின் விருப்பம் வேறு ஒரு பெண்ணின் மீது இருக்கும் போது தன்னால் எப்படி குறுக்கிட முடியும், எங்கே தன்னையும் அறியாமல் அபியின் காதலுக்கு தன்னுடைய காதல் இடைஞ்சலாகி விடுமோ என்று பயந்தவள் வேலுவுடனான திருமணத்திற்கு விருப்பமே இல்லாமல் ஒப்புக்கொள்ள தீர்மானித்தாள்.

அபியின் வாழ்வில் முன் பகுதியை மட்டும் தெரிந்து வைத்திருந்த வருணா சரியாக தவறான முடிவை எடுத்தாள். 

அவனுடைய காதலின் பின் பகுதி தெரிந்திருந்தால் இத்திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க முடிவு செய்திருக்க மாட்டாளோ! 

எல்லாம் அன்பு கொண்ட நெஞ்சங்களின் விதி.

error: Content is protected !!
Scroll to Top