சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 6

 

சருகு 🍂 6

இரண்டு மூன்று முறை முயற்சித்தும் அந்த பக்கமிருந்து எந்தவொரு பதிலும் இல்லாமல் போக வழக்கம்போல கனி கவியை திட்ட ஆரம்பித்தாள். ஐந்தாவது முறையாக அவள் முயற்சித்த போது அழைப்பு ஏற்கப்பட்டது.

சுரத்தேயில்லாமல் ஹலோ என்ற கவியின் குரலில் கனியின் காதல் கொண்ட நெஞ்சம் பதறியது.

நிவாஸ் கிளாப் அடித்ததும்…

“ஆன் கேமரா… ஸ்டார்ட்… ஆக்ஷன்…”

என்ற ஒலி அபியின் கையில் வைத்திருந்த மைக்கில் பட்டு அந்த இடம் முழுவதும் படர்ந்தது.

சுற்றியிருப்போர் அனைவரும் அமைதியாகிவிட… நடிப்பதற்கு தயாராக மார்க் செய்யப்பட்ட இடத்தில் நின்றிருந்த படத்தின் நாயகன் மற்றும் நாயகி தங்களுக்கான வேலையை ஆரம்பித்தனர்.

அது மக்கள் குடியிருக்கும் அடுக்கு மாடிகளை கொண்ட பகுதியை போல் செட் அமைக்கப்பட்டிருந்தது,
காலை வேளையில் ஜாகிங் சென்ற நாயகன் தனது ஓட்டத்தை முடித்துவிட்டு குடியிருப்பு பகுதியில் நுழையும் போது, ஒரு இளம் பெண் பொது குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தாள்.

குடத்தில் நீர் நிரம்பியதும் குழாயினை மூடியவள் சரியாக மூடாததால் குழாயிலிருந்து தண்ணீர் சொட்டியது.

அதனை கவனித்த நாயகன் குழாயின் அருகில் சென்று அதன் மூடியை சரியாக மூட நீர் சொட்டியது நின்று விட்டது.

“ரொம்ப பொறுப்பு தான்” என்று நொடித்துக் கொண்ட அந்த பெண்ணிடம் “இது ஒவ்வொருவரின் கடமை” என்றான்.

“ஒரு சொட்டு தண்ணீரில் என்ன ஆகிவிட போகுது” என்ற நாயகியின் கேள்விக்கு, “எல்லோரும் இப்படி நினைப்பதால் தான் பல இயற்கை வளங்கள் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளன, ஒரு சொட்டு தண்ணீரென்பது அவ்வளவு சாதரணமாகிவிட்டதா? சிறு துளி பெரு வெள்ளம் என்பதை போல்… ஒரு சொட்டு நீர் பெரு வெள்ளமாக வீணடிக்கப்படுகிறது, இதனால் எத்தனை பேர் குடிக்க நல்ல தண்ணீர் இல்லாமல் வறட்சியால் இறந்து போகின்றனர் எனத் தெரியுமா? இனிமேலாவது இது போன்று அலட்சியமாக இல்லாமல் முடிந்தளவு தண்ணீரை சேமியுங்கள்” என்றவன் தனது ஓட்டத்தை தொடர்ந்தான்.

ஓடும் அவனையே ரசித்து பார்த்தாள் அவள்.

“கட்… டேக் ஓகே…”

ஒரே டேக்கில் சீனை முடித்த கவியின் நடிப்பில் அனைவரும் கை தட்டி பாராட்டினர்.

அபி ஓடிச்சென்று கவியை அணைத்துக் கொண்டான்.

கலக்கமாக இருந்த நிவாஸ் கவி டயலாக் பேசிய விதத்தில் மூக்கில் விரல் வைக்காத குறையாக அசந்து விட்டான்.

படத்தின் நாயகி… சின்மயி… கவியின் கரம் பற்றி உலுக்கி… “உங்களிடம் நிச்சயம் இப்படியொரு நடிப்பை.. அதுவும் பர்ஸ்ட் சீன் ஒரே டேக்கில் நான் எதிர்பார்க்கவில்லை. அபியின் நம்பிக்கையை காப்பாற்றி விட்டீர்கள்” என்றவள் அபியை பார்த்து கண் சிமிட்டி விட்டு தனது கேரவனிற்குள் புகுந்து கொண்டாள்.

முதலில் ஏற்கனவே எடுத்து முடித்திருந்த இருபது பர்ஸன்ட் காட்சிகளை எடுக்க அபி முடிவு செய்திருந்தான்.

அரவிந்த் நடித்த பகுதியை அபியுடன் கவியும் பார்த்திருந்தான். அது இப்போது கவிக்கு உதவியது.

“சார் இப்படியே தொடர்ந்தால் படத்தை சீக்கிரம் முடித்து சொன்ன தேதியில் ரிலீஸ் செய்துடலாம்” என்ற நிவாஸை சிறு புன்னகையுடன் கடந்து சென்றான் அபி.

அபியின் முக மலர்ச்சி கவிக்கு உற்சாகத்தை அளித்தது.

அதன் பிறகு சிறு சிறு இடைவெளிகள் விட்டு பல காட்சிகள் எடுக்கப்பட்டன. முடிந்த அளவு கவி தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தினான். அபியுடனே இருப்பதலோ அல்லது அபி மற்ற ஹீரோவுக்கு சொல்லி தருவதை உடன் இருந்து பார்த்ததாலோ நடிப்பு அவனுக்கு சாதாரணமாக இருந்தது. அவன் சற்று திணறிய இடங்களில் அபி சொல்லி கொடுத்து தேற்றினான்.

அப்பொழுதும் சரி அதன் பிறகு ஷூட்டிங் முடிந்து பேக்கப் சொல்லியும் கவி அபியிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

அமைதியாக அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டான்.

அன்று எடுக்கப்பட்ட காட்சிகளை இறுதியாக ஒரு முறை அபி சரி பார்த்துக்கொண்டிருந்தான்.

கவி மிகவும் சோர்ந்து காணப்பட்டான். மூடிய விழிகளில் அரவம் உணர்ந்தவன் இமை திறக்க கையில் ஜூஸ் க்ளாஸுடன் அவன் முன்னே நின்றிருந்தான் அபி.

எதுவும் சொல்லாமல் அதனை வாங்கி பருகியவன் மீண்டும் இமை மூடினான். அபியும் தனது விட்ட வேலையை தொடர்ந்தான்.

அச்சமயம் தான் கனி கவிக்கு அழைத்தது. ஷூட்டிங் தொடங்கியதும் தன்னுடைய மொபைலை சைலென்டில் போட்டு நிவாஸிடம் அளித்திருந்தான்.

கவியிடமிருந்து சற்று தள்ளியிருந்த நிவாஸ் மொபைல் அதிர்வினை உணர்ந்து கவியிடம் கொண்டு வருவதற்குள் நான்கு முறை அடித்து ஓய்ந்திருந்தது.

ஐந்தாவது முறை இறுதி ஒலியில் அட்டெண்ட் செய்த கவி… ஹலோ என்க… சோர்வாக இருந்ததால் அந்த பக்கம் இருந்த கனிக்கு சுரத்தேயில்லாமல் கேட்டது.

அதில் கவலை கொண்டவள்… “நான் கனி பேசுறேன்” என்றாள். அவன் இருக்கும் மன நிலையில் உற்சாகமாக பேச முடியவில்லை.

மென்குரலில்… “ம்.. தெரியுது சொல்லு” என்றான்.

எப்போதும் தன்னை சீண்டும் விதமாக உற்சாகத்துடன் பேசுபவன் இன்று இப்படி பேசவும் அவள் மனதில் கவலை உட்புகுந்தது. விட்டால் அழுது விடுபவளை போலிருந்தாள்.

கனி எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கவும், காலையிலிருந்து எங்காவது தனிமையில் வாய்விட்டு கத்த வேண்டும் போலிருந்தவன் அவளிடம் வெடித்தான்.

“இப்போ எதுக்கு போன் பண்ணிட்டு அமைதியா இருக்க.. எதுக்கு போன் பண்ணன்னு சொல்ல போறீயா இல்லையா! ஆமாம் மேடம் என்ன புதுசா எனக்கெல்லாம் போன் பண்ணியிருக்கீங்க… உங்க அண்ணா கிட்ட பேசணுமா?” கவி பேசிக்கொண்டே போக கனியிடமிருந்து கேவல் சத்தம் ஒன்று வந்தது.

எப்போதும் தன்னிடம் சரிக்கு சரியாக வாயாடும் தன்னவள் இன்று அழவும் பதறியவன்.. “ஹேய் சாரிடி.. நான் தெரியாம பேசிட்டேன்… ரொம்ப சாரிடி…” அதற்கும் அவளது அழு குரலே கேட்க, இவளிடம் கெஞ்சினால் வேலைக்கு ஆகாது என நினைத்தவன்.. “இப்போ இப்படி அழறதை நிறுத்தறீயா இல்லையா” என்று அதட்டினான்.

அவனது அதட்டல் அவளிடம் நன்கு வேலை செய்தது. அழுகையை நிறுத்தியவள்… “நான் அண்ணா கிட்ட பேச போன் பண்ணல.. உங்க கிட்ட தான் பேசணும்” என்றாள்.

தன்னிடம் பட்டாசு போல் வெடிப்பவள் இன்று இவ்வளவு மென்மையாக பேசுவது கவிக்கு மிகுந்த ஆச்சரியம்.

“சரி சொல்லு என்கிட்ட என்ன பேசணும்” எனக் கேட்டவனிடம், காலை நடந்தது முதல்.. மாலை வீட்டில் நடந்தது மட்டுமில்லாமல் சீனு எடுத்த முடிவு, இதில் கோபாலன் ஒன்றும் செய்ய முடியாதவராய் விலகி கொண்டது வரை அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

“வாட்…”

கனி சொல்லியதை கேட்டவன் அதிர்ந்தான்.

அவன் ஒன்று நினைத்திருக்க வேறொன்று நடந்தால் அவன் அதிர தானே முடியும்.

அவனாவது ஏதாவது செய்வான் என்று தான் கவியிடம் சொல்ல முடிவெடுத்தாள். இப்போது அவனே அதிரவும்… “ஒன்றும் செய்ய முடியாதா மாமா… வருணா பாவம் மாமா” என்றாள் வருத்தத்துடன்.

அதிர்ச்சியில் இருந்தவன், கனியின் வருத்தத்தை மட்டுமே உணர்ந்தான்.. அவளது மாமா என்ற அழைப்பினை கவனிக்க தவறினான்.

“நீ பீல் பண்ணாதே.. நான் சித்தப்பாவிடம் (சீனு) பேசுறேன்” எனக் கூறியவன்.. “நீ கேட்டதை நான் செய்றேன்..  பதிலுக்கு நான் கேட்பதற்கு நீ ஆமா சொல்லணும்” என்றான்.

அவன் சீனுவிடம் பேசுகிறேன் என்பதில் தெளிந்தவளாய் பழைய கனியாக மாறியிருந்தாள். அவன் அப்படி என்ன கேட்டு விட போகின்றான் என்கிற மிதப்பில்… “எங்களுக்கு உதவி செய்றவங்களுக்கு உசுரையே கொடுப்போம்.. என்ன வேணுமோ கேளு.” அவளது வார்த்தைகள் தெனாவட்டாக வெளி வந்தது.

“ப்ரூட்டீ… ஐ லவ் யூ… டூ யூ லவ் மீ…”

சோர்வான வேளையிலும் அவனது குரல் கரகாப்பாக ஒலித்தது. அந்த குரல் கனியிடம் ஒரு வித மயக்கத்தையும், உடல் முழுக்க சிலிர்ப்பையும் ஏற்படுத்தியது.

திக்கு தெரியா காட்டில் தொலைந்தவள் போல் அவளது கூரிய விழிகள் தென் துருவத்திற்கும் வட துருவத்திற்கும் நொடி பொழுதில் பல முறை சென்று வந்தது.

எங்கோ மூழ்கி கொண்டிருந்தவள் “யாரிடம் பேசுற…” தன் முதுகுக்கு பின்னால் ஒலித்த தனது பெரிய அத்தையின் கேள்வியில் நடப்பிற்கு மீண்டாள்.

இருந்தாலும் மனதில் ஏற்பட்ட ஒருவித படபப்பு அடங்க மறுக்க,
“அது… அது வந்து அத்… த்… அத்தை.. மா… ஆ.. உங்க பையன் தான்.” தட்டு தடுமாறி கூறியவள் ராதிகாவின் கையில் ரிசிவரை கொடுத்துவிட்டு ஓடினாள்.

அவள் தன் அன்னையிடம் தடுமாறியதை அந்த பக்கம் கேட்டிருந்த கவியின் இதழில் புன்னகை மலர்ந்தது.

கனி சொல்லிய அனைத்தையும் மீண்டும் ஒரு முறை ராதிகாவின் வாயால் கேட்டறிந்தவன், “சித்தப்பா நான் சொன்னால் கொஞ்சம் யோசிப்பாரு ம்மா…”

“அவர் நாம் சொல்லுவதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை தம்பி.. அம்மா அப்பா இல்லாத தங்கச்சியை பாசமா வளத்தவரு.. அவ(வைதேகி) கண்ணுல தண்ணிய பார்த்ததும் மனசு எறங்கிட்டாரு.. எல்லாம் நல்லதேன்னு நினைப்போம்.. அபி நல்லாயிருக்கானாயா.. ரெண்டு பேரும் வருணா கல்யாணத்துக்காவது வந்து போங்கயா” என்றதோடு வைத்து விட்டார்.

தன் விரல் பிடித்து பாவாடை சட்டையில் திரிந்த தங்கையை மணப்பெண் அலங்காரத்தில் பார்க்க அவன் மனம் ஒப்பவில்லை.

வருணாவுடன் அபியினை நினைத்து பார்த்தவனது மனதிலும்… வருணாவை போன்று அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதை விட இல்லை என்று தான் தோன்றியது.

‘அதற்காக… தன் நண்பனாகிய சகோதரனை இப்படியே தவிக்க விடுவது சரியில்லை’ என எண்ணினான். அபியை மணக்கோலத்தில் நினைத்து பார்த்தவனின் மனம் நிறைந்த போனது.

ஆனால்.. அவன் முன்னே மிகப்பெரிய வினா, அவன் காண்கிற காட்சி நிஜமாகுமா?

இரவு 11 மணியளவில் தன்னுடைய வேலைகளை முடித்த அபி சர்மாவிற்கு அழைத்து… அன்றைய படபிடிப்பின் நிலையை கூறினான்.

இறுதியில் படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை அளித்து பேச்சினை முடித்தான்.

அபியின் நம்பிக்கையான பேச்சில்.. சர்மாவிற்கு இருந்த பயம் எங்கோ சென்றது. ஆனால் இந்த நிம்மதி நாளை வர இருக்கும் சம்மனில் பறந்தோட போகிறது என்பதை அவர் அறியவில்லை.

சர்மாவிடம் பேசிவிட்டு வந்த அபி ஏதோ யோசனையில் நின்று கொண்டிருந்த கவியின் தோளில் கை போட்டு “போலாமா” என்றான்.

சரி என தலையசைத்த கவி எதுவும் பேசாமல் சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.

காரை கிளப்பிய அபி அமைதியாக வரும் கவியிடம்… “இன்னும் ஐயாவுக்கு என் மேல் கோபம் போகவில்லையா?” என்றான்.

இதுவரை சிறு முகத்திருப்பளையும் தன்னிடம் காட்டிராத தனது கவி இன்று ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதில் கலங்கி போய் ஒலித்தது அபியின் குரல்.

தீவிர யோசனையில் இருந்த கவியின் செவிகளில் அபியின் கேள்வி விழவில்லை.

இவனை இப்படியே விட்டால் சரி வராது என நினைத்த அபி காரை வேகமாக செலுத்தி ஒரு இடத்தில் வந்து நிறுத்தினான்.

கார் நின்ற, கிறீச்சென்ற சத்தத்தில் சுயம் பெற்ற கவி சுற்றி பார்க்க, வந்திருக்கும் இடம் எதுவென உணர்ந்து அதிர்ந்தான்.

‘அச்சச்சோ.. இரண்டு நாளைக்கு முன்பு பண்ண அலப்பறையை இன்னைக்கும் பண்ண போறான் போலிருக்கே..’ எங்கு செல்கின்றோம் கவனியாது விட்ட தன்னை நினைத்து உள்ளுக்குள் நொந்தான்.

கவியின் முழியை வைத்தே அவனது மனதை அறிந்த அபி மனதில் சிரித்தவனாய் பிளையோவரின் பக்கவாட்டு சுவற்றின் மீது ஏறி நின்றான். அபி காரை நிறுத்திய இடம் அன்று கவியை ஒரு வழி ஆக்கிய இன்னும் முழுதாக கட்டி முடிக்க படாத அதே பிளையோவார்.

“போச்சு டா… ஆரம்பிச்சிட்டான்…” தலையில் கை வைத்துக்கொண்ட கவி காரிலிருந்து இறங்கி அவனை நெருங்குவதற்குள்..

“என்…. பிரண்ட… போல யாரு மச்சான்…” என பாடத் தொடங்கியிருந்தான்.

தொடங்கியதும் பாடுவதை நிறுத்திய அபி கவியை பார்த்து “ஆமா.. நீ எனக்கு பிரண்டா…? மச்சானா…?” எனக் கேள்வி கேட்டிருந்தான்.

‘என்ன இன்னைக்கு சரக்கை மோந்து பாக்காமலே ஆரம்பிச்சிட்டான்…’ கேலியாக எண்ணிய கவி அபியை இழுத்து கீழே இறக்கியிருந்தான்.

இழுத்ததில் நிலை தடுமாறிய அபி சாலையில் அமர்ந்து விட்டான்.

கவியோ, “ஏன் டா…. எப்பவும் அந்த ஒரு நாள் மட்டும் தான் இப்படி பண்ணுவ.. இன்னைக்கும் என்ன புதுசா… இதையே தொடரலாம்ன்னு பாக்குறீயா… நான் அதுக்கு விட மாட்டேன்.. உன்னை கேள்வி கேட்க யாரும் இல்லைன்னு நினைச்சிட்டியா.. நான் இருக்கேன் டா…”

அபி கவியின் பேச்சு காதில் விழாதவாறு அவனது முகத்தையே ஆழ்ந்து பார்த்திருந்தான்.

அதில் நொந்த கவி “என்ன டா?” கடுப்புடன் கேட்டான்.

“நீ என் கிட்ட பேசிட்ட… உன்னை பேச வைக்க டிரைக்டரான என்னையே நடிக்க வச்சிட்டியே டா…” அபி.

“என்னது… நான் உன் கிட்ட பேசலையா… உன்னிடம் பேசாமல் என்னால் இருக்க முடியுமா டா… நீ செய் என்றால் செய்ய போறேன் அதை விட்டு என்னவோ யாரோ மாதிரி காலைல பேசற அதான் உன் மேல கொஞ்சம் வருத்தமா இருந்தேன் அதுக்குன்னு நான் உன் கிட்ட பேச மாட்டேன்னு எப்படி டா நீ நினைக்கலாம்.”

‘சும்மா இருந்தவன சொறிஞ்சி விட்டோமோ… இந்த கத்து கத்துறான்’ மனதில் புலம்பிய அபி.. “அப்புறம் எதுக்கு நான் கேட்டது காதில் விழாதவாறு வந்த.”

“நீ என்ன கேட்ட…”

இப்போது தலையில் கை வைப்பது அபியின் முறையாயிற்று.

“கவி…ஆர் யூ ஓகே?”

“யா… அம் ஓகே.”

அபியின் கேள்விக்கு பதிலளித்த கவி… தங்களது வீட்டில் நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை அபியிடம் பகிர்ந்தான்.

பதின் பருவத்தில் வருணா மீதான வேலுவின் காதல் அபி அறிந்திருந்தான். ஆனால் அவனின் காதல் உண்மையானதா என்பதை ஆராய மறந்தான். அதுவும் இல்லாமல் படிக்கும் காலத்தில் இருந்த வேலு இவன் இல்லை என்பது அபிக்கு தெரியவில்லை.

ஆதலால் வேலு வருணாவை மணந்து கொண்டால் அவனுடைய காதலால் நன்கு பார்த்து கொள்வான் என நினைத்தான்.

எனவே, “வருவிற்கும் விருப்பம் இருந்தால் இதில் நாம் எதுவும் செய்ய முடியாது கவி, வருவுக்கு நல்லது நடக்கும் போது நாம் ஏன் அதனை தடுக்க வேண்டும், நீ நினைப்பது போல் எல்லாம் எதுவும் ஆகாது, வேலு வருவை நல்லா வச்சிருப்பான், பயப்படாதே” என்றவன் இந்த பேச்சு அவ்வளவு தான் என்பதோடு முடித்துக் கொண்டான்.

‘வீட்டில் உள்ளவர்கள் ஆசை வேறு டா மடையா…’ என அபியை மனதில் திட்டிய கவி இதை எப்படி தடுப்பது எனத் தெரியாமல் மண்டையை போட்டு உடைத்துக் கொண்டான்.

வீட்டிற்கு செல்ல இருவரும் காரிலேறியதும்,   எதுவோ ஞாபகம் வந்தவனாக கவி அபியிடம் “எனக்கு உன் மேல் எப்போதும் கோவம் வரவே வராது டா, நான் அமைதியா இருந்தால் நீயா ஏதோ ஒன்றை நினைத்து இன்னைக்கு ட்ரை பண்ண காமெடி மாதிரி வேற எப்பவும் பண்ணாதே” எனக் கூறி சிரித்தான்.

கவியின் சிரிப்பில் அபியும் இணைந்து கொண்டான்.

இன்று உன் மேல் கோவம் வரவே வராது என்று சொல்லிய கவிக்கு தெரிந்திருக்கவில்லை, ஒரு நாள் அபியின் மீது, தான் அளவுக்கு அதிகமாக கோவம் கொள்வோமென்று.

துளிர்விடும்🌱.

 

error: Content is protected !!
Scroll to Top