சருகில் பசுமையாய் அவளின் நேசம் 🍂 7

சருகு 🍂 7 :

தனது சேலை தலைப்பை உதறி இடுப்பில் சொருகிய வைதேகி, தனது வீட்டின் திண்ணையில் அமர்ந்தார். 

“ஏட்டி… வள்ளி செம்பு நிறைய நீர் மோர் எடுத்துட்டு வாடி.. மனசு குளுந்து கிடக்கு… எம்ம வயிறும் குளிரட்டும்.”

வைதேகி பேச்சினை முடிக்க கூடவில்லை… வீட்டில் வேலை பார்க்கும் வள்ளி பதறிய ஓட்டத்துடன் கையில் செம்பு நிறைய மோர் கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கி ஒரே மிடறில் விழுங்கியவர் “வேலு வூட்ல இருக்கான வெளிய போய்ட்டானாடி” என்றார் வள்ளியிடம்,

பயத்துடன் அவர் குடித்து முடித்து கீழே வைத்த செம்பினை கையில் எடுத்த வள்ளி, வைதேகி கேட்ட கேள்விக்கு “உள்ளார தான் ம்மா இருக்காவூக” எனக் கூறிச் சென்றாள்.

வைதேகி என்றால் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் முதல் தாழ்வாரத்தில் கட்டி கிடக்கும் நாய் வரை அனைவருக்கும் பயம். தான் சொல்லிய வேலையை ஒழுங்காக முடிக்கவில்லையென்றால் அவர்களது கன்னம் அடியால் பழப்பது உறுதி. 

உணவில் உப்பு குறைவாக இருந்ததற்கெல்லாம் சூடு போட்டு தண்டனை அளிக்கும் ரொம்ப நல்ல குணம் கொண்டவர் அவர். வீட்டில் ஒரு தர்பாரே நடத்தி வருகிறார். 

ஒரு வருடத்திற்கு முன்பு அவரது கணவர் இறந்து விட அவரது ஆட்டம் இன்னமும் அதிகரித்து விட்டது.

மெல்ல எழுந்து வேலுவின் அறைக்குள் நுழைந்தவர்.. “எய்யா… வேலு… அந்த சிறுக்கிய உனக்கு பேசி முடிச்சிட்டேன், உனக்கு சந்தோஷம் தானே” என்றார்.

மனமெல்லாம் வஞ்சத்துடன். 

“சந்தோஷம் தாம்மா… ஆனால் அவளை நான் கல்யாணம் பண்ண நினைப்பதே பழி வாங்குவதற்கு தான்…” வருணாவை அழித்துவிடும் வெறி அவனது பேச்சில் வெளி வந்தது.

“அவள கல்யாணம் பண்ணி பழி வாங்குவியோ இல்லை… கொஞ்சுவியோ அது உன் விருப்பம், ஆனால் எம் மவனை பத்து பேத்துக்கு முன்னாடி கை நீட்டி அடிச்சவ வாழ்க்கை முழுசுக்கும் அழனும். என் கையால அவ அனுபவிக்கனும்.” 

வேலுவின் வெறிக்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது வைதேகியின் வெறி.

மறுநாள் காலை எழுந்ததும் அபி வேலுவிற்கு கால் செய்திருந்தான். கவியிடம் “இதில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றவன் அதோடு இருந்து விடாமல், வேலுவிடம் ஒரு முறை பேசிவிட வேண்டுமென தீர்மானித்தே அவனுக்கு அழைத்திருந்தான்.

பொழுது விடிந்து வெகு நேரமாகியும் கட்டிலில் விழுந்து கிடந்த வேலு, சத்தம் எழுப்பி கொண்டிருந்த மொபைலை எடுத்து அதன் திரையை பார்த்தவன் அதில் தெரிந்த அபியின் எண்ணில் எரிச்சலுற்றான். 

“இப்போ இவன் எதுக்கு நமக்கு போன் பண்றான்” என உள்ளுக்குள் வேண்டா வெறுப்பாக அட்டெண்ட் செய்து வெளியில் வாயெல்லாம் பல்லாக “சொல்லுங்க அண்ணே, எப்படி இருக்கீங்க?.” என்றான்.

வேலுவின் விசாரிப்பிற்கு பதில் அளித்த அபி நேராக விஷியத்திற்கு வந்தான்.

“நான் உனக்கு சொல்ல வேண்டியதில்லை வேலு… உனக்கும் வருவிற்கும் திருமணம் செய்ய ஏற்பாடுக நடப்பதா வீட்டில் சொன்னாங்க. வருவிற்கு இதில் விருப்பம் இல்லையென்றால் நீ எந்தவொரு பிரச்சனையும் செய்யாம விலகிவிட வேண்டும், அவளுக்கு விருப்பம் இருக்கும் சமயத்தில் நாங்க தடையா இருக்க மாட்டோம்.”

வருணா அவளது தந்தையை மீறி எதுவும் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையில், “எனக்கு மற்றவர்களை விட வருணாவின் சம்மதம் தான் மிக முக்கியம்”, கடித்த பற்களுக்கிடையில் கூறினான் வேலு.

வேலுவின் பேச்சில் மகிழ்ந்த அபி “சரி வேலு.. முதலில் வருவின் சம்மதத்தை தெரிந்து கொள் அப்புறம் வரு படிப்பிற்கு எந்தவொரு தடையும் உன்னால் வர கூடாது” என சொல்லி விட்டு கால் கட் செய்தான்.

‘எனது முதல் வேலையே உன் படிப்பை ஒழித்து கட்டுவதுதாண்டி’ என வன்மமாக நினைத்துக்கொண்டான் வேலு.

வேலுவிடம் அபி பேசிக்கொண்டிருந்ததை கேட்டிருந்த கவி… “இவ்வளவு அக்கறை இருக்க உனக்கு படிப்பு முடிக்காத வயதில் திருமணம் செய்வது தவறு எனத் தெரியவில்லையா?” என்றான்.

“தவறு தான்… ஆனால் வேலுவின் உயிருக்கு ஆபத்து என்கிற அவர்களது மூடநம்பிக்கையை எதிர்த்து நாம் வாதிட்டால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?” அபி ஆற்றாமையுடன் கேட்டிருந்தான்.

“நீ… இத்திருமணத்தில் வருவிற்கு விருப்பமான்னு தெரிந்துகொள், தென் மேரேஜ் எப்போன்னு கேட்டுக்கோ… அப்போதான் அதற்கேற்ப ஷூட்டிங் முடித்து டேஸ் பிரீ பண்ண முடியும்.”

அபி பேசிக்கொண்டே போக… 

கவிக்கு சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது.

வீட்டின் பின் பகுதியில் தென்னை மரத்திற்கு கீழே இருந்த சிறு பாறை போன்ற பெரிய கல்லில் வருணா அமர்ந்திருந்தாள். அவளது பார்வை தொழுவத்தில் கன்றுகளுடன் முட்டி விளையாடிக்கொண்டிருந்த ஆடுகளின் மீது இருந்தாலும் அவளது மனம் மொட்டு விட்ட காதல் சருகாகியதை நினைத்து வருந்தியது.

காதலை உணர்ந்த நொடி அக்காதல் தனக்கு சொந்தமில்லாத ஒன்று எனத் தெரிவது மரணத்திற்கு ஈடானது. அத்தகைய வலியை தான் இப்போது வருணா அனுபவிக்கின்றாள். அதுவும் தெரிந்தே காதலை மனதிற்குள் புதைக்கும் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அவளையும் அறியாமல் மனதின் வேதனை தாங்காது அவளின் கண்கள் விழி நீரை சிந்தியது. 

கன்னத்தில் ஈரம் உணர்ந்தவள்…. “இல்லை நான் அழக்கூடாது.. என் காதல் சசி அத்தானின் காதலுக்கு தடையாகக்கூடாது” என உறுதியெடுத்தவளாக இரு கைகளாலும் மாறி மாறி கண்களை துடைத்தாள்.

“அம்மாடி” என்ற தனது தந்தையின் அழைப்பில் சிரித்த முகமாக 

“வாங்கப்பா… என்ன இந்தப்பக்கம் நம்ம கருப்பனை (கருப்பன் அவர்களது தொழுவத்தில் வளர்க்கப்படும் காங்கேயம் காளை, வீட்டிற்கும், வயலிற்கும் காவலாளி இவன் தான்) பாக்க வந்தீகளா…” எதுவும் நடவாததை போல் கேட்டாள்.

“இல்லம்மா… உன்னை பாக்க தான் வந்தேன்.. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்மா.”

“பேசுங்கப்பா… என்ன விஷயம்…?”

“உனக்கும், வேலுவுக்கும் கல்யாணம் பண்ணலான்னு முடிவு பண்ணிருக்கோம்மா.. நீ என் பேச்சை மீற மாட்டேன்னு தெரியும், இருந்தாலும் உன் வாய் வார்த்தையாக சம்மதம்ன்னு நான் கேட்டுடன்னா நிம்மதியா இருக்கும்.”

“எனக்கு சம்மதம் ப்பா…”

இந்த பதிலில் இருவர் அதிர்ந்தனர்.

சீனுவாசனும் ஒரு தந்தையாய் மகளது விருப்பத்தை கேட்காமல், எனது சொல்லை மீற மாட்டாய் என்ற நம்பிக்கை வார்த்தைகளை முன்னிறுத்தி வினவினார். அவளும் காதலுக்கு பயந்தவளாய் விருப்பமற்ற திருமணத்திற்கு யோசியாது சம்மதம் தெரிவித்து விட்டாள்.

“இது போதும்மா எனக்கு” என்ற சீனு சந்தோஷமாக அங்கிருந்து வீட்டிற்குள் செல்ல திரும்பியவர் அங்கு நின்று கொண்டிருந்த வெங்கடாச்சலத்திடம் தனது மகிழ்வினை வெளிப்படுத்தி சென்றார்.

சிறிது நேரத்திற்கு முன்பு தான் தனது தங்கையிடம் பேச நினைத்த கவி அபியின் அப்பாவிற்கு அழைத்திருந்தான்.

முதலில் இருவரும் வருணாவிடம் பேசி அவள் மனதில் என்ன முடிவு எடுத்திருக்கின்றாள் என தெரிந்து கொள்ள எண்ணினர். அதன்படி வருணாவை தேடி புழக்கடை பக்கம் கவியுடன் பேசிக்கொண்டே வந்த வெங்காடச்சலமும் இணைப்பிலிருந்த கவியும் அவளது பதிலை கேட்டு ஒருங்கே அதிர்ந்தனர்.

சீனு சென்றதும் வருணாவின் அருகில் சென்று அவளது தலையில் வருடி கொடுத்தவர்… “உண்மையிலே உனக்கு இதில் சம்மதமாம்மா?”

தலை குனிந்திருந்தவள் அவரது முகத்தை நிமிர்ந்து பாராமலே சரியென்பதை போல் தலையாட்டினாள்.

“என்னை பார்த்து என் முகத்தை பார்த்து சொல்லு…” ஒரு வித அதட்டலுடன் அவர் குரல் ஒலித்தது.

அதில் தனது மாமாவை நிமிர்ந்து பார்த்தவள்… கலங்கிய விழிகளுடன், “அப்பாக்கு சரியெனும்போது எனக்கும் ஓகே தான் மாமா…”

“ஹோ… சீனுக்கு ஓகே.. சோ… உனக்கும் ஓகே.. அப்போ அவன் செத்து போ சொன்னா செத்து போய்டுவியா?” அழுத்தத்துடன் கேட்டிருந்தார்.

அவள் அமைதி காக்க… மெல்ல அவளை நெருங்கி கை வளைவில் அணைத்தவர், “எனக்கு நீ மருமகளா வரணும் ஆசைப்பட்டேன்… ஆனால் கடைசி வரை எனக்கு நீ மகளாவே இருக்கணும் ஆண்டவன் நினைக்கிறான் போலிருக்கு.. உன் அப்பனை தவிர யாருக்கும் உன்னை அந்த வேலு பயலுக்கு கல்யாணம் பண்ணித்தர விருப்பம் இல்லை.”

“நாம ஆசைப்பட்டால் மட்டும் போதாதே மாமா…” அவளது குரலில் ஏக்கம், தவிப்பு, அப்பட்டமாக தெரிந்தது.

இதனை வெங்கட் புரிந்து கொண்டாரோ இல்லையோ.. இணைப்பில் எதிர் பக்கமிருந்த கவி நன்கு புரிந்து கொண்டான். ஆனால் புரிந்து கொண்ட விஷயம் உண்மையா இருக்க வேண்டுமென அவன் மனம் படபடத்தது.

“சரிம்மா… உன் வாழ்க்கை… இதில் என்ன முடிவு எடுக்கவும்.. உனக்கு உரிமை உண்டு” என்று கூறி, செல்ல திரும்பியவர் ஞாபகம் வந்தவராய் ,

“உன் அண்ணன் லைனில் இருக்கான்.” 

மொபைலை அவளது கையில் கொடுத்து விட்டு சென்றார்.

“ஹலோ….” தங்கையின் தடுமாற்றத்தை வைத்தே எதையோ கணித்தவன், “ரொம்ப சந்தோஷம் டா…” என்றான்.

“அண்ணா…”

“நான் அண்ணன்னு இப்போ தான் தெரியுதா டா… நீ முடிவெடுப்பதற்கு முன்பு இந்த அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும் உனக்கு தோணலையா?”

ஆற்றாமையுடன் கேட்டிருந்தான்.

“அய்யோ… அண்ணா அப்படிலாம் இல்லை.”

“பின்ன… வேற எப்படி… எதுவா இருந்தாலும் அதை செய்வதற்கு முன்பு என்னிடம் கேட்டுட்டு தானே செய்வ… இப்போ மட்டும் என்ன… உன் வாழ்க்கையில நான் குறுக்கீடு ஏதாவது செய்துவிடுவேன்னு…”

“நான் யாருடைய வாழ்வுக்கும் குறுக்கீடு ஆகிட கூடாதுன்னு தான் இந்த முடிவு எடுத்தேன்.”

கவி கேட்டு முடிப்பதற்குள்… ‘தன் அண்ணன் தன்னை தவறாக  நினைத்து விட்டானோ’ என்று பதறியவளாய் பதிலளித்திருந்தாள்.

அவளது வருத்தமான பதிலில் தான் கண்டு கொண்ட விஷயம் உண்மையென்பதை தெளிவாக உணர்ந்து கொண்ட கவி.. நேரடியாக வினவினான்.

“நீ அபியை விரும்புறியா வரு?”

அண்ணனின் கேள்வியில் நிலையில்லாமல் தடுமாறியவள்… 

“காலம் கடந்த நேசம் என்றும் சேர்வதில்லை அண்ணா.. நான் ஒப்பு கொண்டாலும் சசி அத்தான் நேசம் நானிலையே.”

உள்ளத்தின் வலி அவளது வார்த்தைகளில் அப்பட்டமாக தெரிந்தது.

“நான் வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசுறேன்” என்றவனை தடுத்து, 

“அத்தானின் காதலை கொன்று என் விருப்பத்தை நிறை வேற்றுவது அவர் நேசித்த பெண்ணிற்கு செய்யும் அநியாயம்… ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இன்னொரு பெண்ணிற்கு என்னால் துரோகம் ஏற்பட நான் ஒப்பு கொள்ள மாட்டேன். சசி அத்தான் மீது துளிர் விட்டிருக்கும் இந்த நேசம் காய்ந்து சருகாக… இன்னொரு பெண்ணின் காதல் வெற்றியடைய… வேலுவுடனான எனது திருமணம் நிச்சயம் நடக்க வேண்டும்.” 

அழுத்தத்துடனும், உறுதியுடனும் படபடவென பேசியவள் கவி என்ன சொல்ல வருகின்றான் என்பதை கேட்காமல் கூட இணைப்பை துண்டித்தாள்.

அவளது கண்களில் கண்ணீர் சுரந்தது… தன்னை கட்டுப்படுத்தியவள் வீட்டிற்குள்ளே சென்றாள்.

வருவின் வார்த்தைகளிலே அபியின் மீதான அவளது காதலை உணர்ந்தவன்.. அவளின் பிடிவாதத்தை நினைத்து வருந்தினான். 

தனக்கு பேச வாய்ப்பளிக்காமல் பேசிவிட்டு சென்றவளை எண்ணி… 

“இதுங்க கூடலாம் இருப்பதற்கு பேசாம நம்ம ஊரு மலை மேல இருந்து குதிச்சிடலாம்” என்று புலம்பி கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் ஒன்று புரிந்தது… ‘அபியின் காதல் எப்படி வருவிற்கு தெரிந்தது, எது வரை தெரிந்தது’ என்று தெரியாமல் தன்னுடைய மூளையையும், மனதையும் ஒரு வழி செய்தான்.

‘இறுதியில் அபி காதலிப்பது மட்டுமே தெரிந்திருக்க வேண்டும்… அவன் காதலின் நிகழ்வுகள் தெரிந்திருந்தால் அபியின் மீது ஏற்பட்ட காதலை அழிக்க இப்படி ஒரு விபரீத முடிவிற்கு ஒத்துக்கொண்டிருக்க மாட்டாள்.’ ஒருவாறு சரியாக யூகித்தான். 

‘ஆனால் எப்படி நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்தி அபியுடன் திருமணம் நடத்துவது, அப்படியே வேலுவுடனான திருமணம் நின்றாலும் அபியை எப்படி சம்மதிக்க வைப்பது,’ அவனது சிறு மூளையும் பெரு மூளையும் ஒன்றோடொன்று முட்டி கொண்டது.

“எதுவும் செய்ய முடியாத நிலையில்…  ஒரு காதலை பண்ணிட்டு எல்லாரையும் மண்டை காய விடுறானே.. யாரோ ஒருத்தி மேல வந்த அந்த லவ்வு வரு மேல வந்திருக்கக்கூடாதா…” அபி தனக்கு நேராக இருப்பதை போல் அவனிடம் கேள்வி கேட்டவன் இறுதியில் “டேய் அபிஈஈஈஈஈஈஈ…” என மண்டையை பிடித்து கொண்டு கத்தினான்.

“கவி கூப்பிடியா?” என்று அங்கு வந்து நின்ற அபியை வெட்டாவா குத்தவா என்கிற ரீதியில் பார்த்து வைத்தான்.

பின்பு அவன் வீடே அலரும்படி கத்தியதை சாதாரணமாக கூப்பிடியா என கேட்டால் கவியும் தான் என்ன செய்வான்.

“ஒன்றுமில்லை” எனக் கூறிய கவி கட்டிலில் படுத்து தலை வரை போர்வையை இழுத்து மூடி படுத்துக்கொண்டான்.

“இவனுக்கு என்ன ஆனது” என கவியை ஒரு மாதிரி பார்த்த அபி தானும் சென்று அவனருகில் படுத்து கொண்டான்.

மறுநாள் எழுந்த கவியை சர்மாவிடமிருந்து வந்த செய்தி அதிர்ச்சியடைய செய்தது என்றால்.. அந்த நிலையிலும் அபியின் முகத்தில் என்றும் இல்லாமல் தோன்றிய சிரிப்பு மயக்கத்தை வரவழைத்தது.

கல்லூரியில் ஆய்வகத்தில் இருவித்திலை தாவரங்களின் உள் அமைப்பினை நுண்ணோக்கியில் பார்த்துக்கொண்டிருந்த வருணா தேன்கூடு போன்று தெரிந்த அதன் செல் அமைப்பில் மூழ்கி போனாள். 

தாவரங்களின் உட்புறத்தோற்றம் அவளை மெய்சிலிர்க்க செய்தது.

அப்போது அங்கு ஓடி வந்த வாசுகி… “வரு வேலு கனி கிட்ட வம்பு பண்றாண்டி” என அந்த அறை முழுக்க எதிரொலிக்கும் அளவிற்கு ஹை டெசிபலில் மொழிந்தாள்.

“அவன் ஏன் கனியிடம் வம்பு செய்யுறான்” எனக் கேட்டு கொண்டே பிரச்சனை நடக்கும் இடத்திற்கு ஓடினாள்.

வருணாவின் பின்னால் ஓடிய வாசு… 

“அவன் உன்னை பார்க்க தாண்டி வந்திருக்கான், நீ எங்கன்னு கேட்டு பிரச்சனை செய்றான்.”

கல்லூரியின் தோட்டத்து வழியாக மைதானத்திற்கு ஓடிய வருணா, தோட்டத்தில் செடிகளுக்கு பற்று கோலாக ஊன்றியிருந்த ஆளுயர கம்பு ஒன்றினை பிடுங்கி கொண்டே சென்றாள்.

அவள் கம்பு உருவியதில்… “போச்சு… எல்லாம் போச்சு… இவ கிட்ட வந்தா நான் இதை சொல்லணும்… வெறும் பேச்சோடு முடியற சண்டையை அடிதடியா மாத்திடுவா போலிருக்கே.. கம்பு உருவன வேகத்தை பார்த்தா சுத்தாம கீழ போட மாட்டா போல.. வேட்டைக் கருப்பு காப்பாத்து” என புலம்பலோடு இறைவனிடமும் முறையிட்டாள் வாசுகி.

வருணா மைதானத்தை நெருங்கிய சமயம் வேலு கனியின் கையை பிடித்து முறுக்கிக்கொண்டிருந்தான். 

வாசு பயத்துடன், “அவ உங்களுக்கு தங்கச்சி முறை.. அவ கையை நீங்க பிடிக்கலாமா” என்க,

வாசுவை முறைத்தவன்… “அவ என்ன எனக்கு பெரியப்பா, சித்தப்பா மகளா இல்லை என் கூட பொறந்தவளா.. இப்படி அழகான பொண்ணெல்லாம் எனக்கு தங்கச்சி ஆகிட்டா நான் என்னத்த செய்ய,” என்றவன், வாசுவிடமிருந்து கனி பக்கம் திரும்பியவன்.. “நீ ஏன் புள்ள அந்த அபி பையனுக்கு தங்கச்சி ஆன… அப்படி இல்லாம இருந்திருந்தா.. வருணாவை கை காட்டி, இந்தா இங்க நிக்கிறாளே இவளுக்கு பதிலா உன்னையே கட்டிக்க ஆசைப்பட்டிருப்பேன்.” உறவுமுறை மறந்தவனாய் வழிந்தான் அவன்.

கோபம் வந்தவளாய் வரு தனது கையிலிருந்த கம்பை சரியாக அவனது கையின் மணிக்கட்டில் படுமாறு வீசியிருந்தாள்.

வலியில் அவன் கனியின் கையை விடுத்து தனது கையினை உதறிய சமயம் கனியை இழுத்து வாசுவிடம் தள்ளியிருந்தாள் வருணா.

அவன் வருணாவை உறுத்து விழிக்க, அவளோ அலட்சிய தோற்றத்தில் நின்றிருந்தால்.

தன்னை விட சிறியவள் அடித்து விட்டாளே என்ற கோபத்தில், “வீணா நீயா வந்து வம்புல மாட்டிக்காதே…” அவன் எச்சரித்தான்.

“இங்க பாரு வேலு… காலேஜில் வந்து பிரச்சனை செய்யாதே.” வரு அடக்கப்பட்ட கோபத்தில் தன்மையாக கூறினாள்.

“கட்டிக்க போறவன பேர் சொல்றியா!” அவன் கத்த,

“கூப்பிடுவதற்கு தானே பேரு வச்சிருக்காங்க…” நக்கலாக பதிலளித்தாள்.

“என் கிட்டவே உன் நக்கல காட்ரீயா…” பதிலுக்கு அவன் எகிற… வருணா எதிர் பாராத சமயம் அவள் எறிந்த கம்பு தனக்கு கீழாக கிடக்க, காலால் ஒரு எத்து எத்தினான், எட்டடி தூரத்தில் நின்றிருந்த அவளை நோக்கி…

சடுதியில் தன்னை சுதாரித்தவள் வலது கையால், பாய்ந்து வரும் கம்பினை பிடித்து, அசால்ட்டாக நடுவிரல் சந்தினுள் நுழைத்து அருகிலிருக்கும் விரல்களை பிண்ணி சுழற்றினாள்.

அவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க தடுமாறிய கம்பும் பின்பு அவளது விரல்களின் சுழற்ச்சிக்கு ஏற்றவாறு வளைந்து கொடுத்தது.

வலதுகையினால் சுழற்றியவள் இடது கைக்கு மாற்றி பின்னர் இரண்டு கை

களையும் பயன்படுத்தி கம்பினை தனது உடலுக்கு முன்பும் பின்பும் சுற்றி சுழற்றினாள்.

வருணாவின் கவனம் முழுக்க கம்பில் பதிந்திருக்க, தரையில் கிடந்த உள்ளங்கையளவு கல்லினை எடுத்து அவள் மீது எறிந்தான் வேலு.

error: Content is protected !!
Scroll to Top