சருகு 🍂 8
அவள் அதை வீசிக்கொண்டிருந்த கம்பின் நுனியில் தடுத்து அவன் புறம் வீச, சரியாக அக்கல் வேலுவின் நெற்றியை பதம் பார்த்தது.
காற்றில் தனது விரல்களுக்கு ஏற்றவாறு சுழன்று கொண்டிருந்த கம்பினை தலைக்கு மேல் ஒரு சுற்று சுற்றி தரையில் பதித்து, கம்பின் நுனியில் ஒட்டிய மண்ணை தனது வாயருகே கொண்டு வந்து ஊதினாள். சுற்றியிருந்த மாணவர்கள் அனைவரும் இருவருக்குமிடையே நடந்த சண்டையை மறந்து அவளது சிலம்பம் சுழற்சிக்கு கை தட்டி ஆர்பரித்தனர்.
கனியும், வாசுவும் இதெல்லாம் அவளுக்கு சாதாரணம் என்பதை போல் பார்த்திருக்க, வேலுவின் அருகில் சென்ற வருணா “பொம்பள புள்ள தானே ஈசியா கம்ப தூக்கி ஏறிஞ்சு சாச்சுப்புடலாம் நினைச்சியா, நீ என் கனி கைய மட்டும் பிடிச்சதால தான் உன் நெத்தியை உடைச்சதோடு விடுறேன்… இனியும் வம்பு பண்ண வகுந்துடுவ வகுந்து.”
வேலுவை மிரட்டிவிட்டு கனியிடம் வந்தவள்… “அவன் தான் கையை பிடிக்கிறான்னு தெரியுதுல கன்னத்துல ஓங்கி ஒரு அறை விட வேண்டியது தானே.. அதைவிட்டு அவன் தாராளமா பிடிச்சுக்கோன்னு கையை காமிச்சிட்டு நிக்குறவ.”
வருணா கனியிடம் சிடுசிடுக்க…
அங்கு வந்த வேலு “இனிமேல் தான் டி உனக்கு இருக்கு, கல்யாணத்துக்கு அப்புறம் ஒவ்வொரு நாளும் நரகம்னா எப்படி இருக்கும்ன்னு உனக்கு காட்றண்டி.”
இதெற்கெல்லாம் பயந்தால் அது வரு இல்லையே, “அது நடந்த பிறகு பார்த்துக்கலாம்.. நீ கிளம்பு” என அசால்ட்டாக கூறியவள், கனியை கூட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
வேலுவின் மனதில் பழிவாங்கும் வெறி அதிகரித்தது.
“உனக்கு பொறுமைங்கிறதே கொஞ்சம் கூட இல்லையா வரு.. அவன் என்ன சொல்லிட்டு போறான் பாரு…” அவளையும் அறியாமல் கனியின் பேச்சில் பயம் வெளிப்பட்டது.
அந்நேரம் அங்கு பாண்டி வந்தான். அவன் அவர்களது சீனியர் மாணவன். கனி அன்று தன்னை ஒருவன் ப்ரொபோஸ் செய்ததாக கூறியது இவனை தான்.
அவனை கண்டதும் வரு அலுத்துக்கொண்டாள்.. ஒரு நாளைக்கு நான் எவ்வளவு பஞ்சாயத்து தான் பார்க்கிறது.
இவர்களை அவன் நெருங்கியதும் பாண்டியை முந்தி கொண்டு வருணா பேசினாள்.
“இங்க பாரு பாண்டி, கனி தான் உன்னை லவ் பண்ணல சொல்லிட்டாலே அதுக்கு அப்புறமும் அவளை நீ பின் தொடர்வது தப்பு.”
“நான் கனியை லவ் பண்றனா… யார் சொன்னா…” பாண்டி அதிர்ச்சியாக கேட்க.. ஒன்றுமில்லையென கூறி வருணாவை அங்கிருந்து இழுத்து சென்றாள் கனி.
“ஏன் டி??? நீயே என்ன அவன் கிட்ட கோத்து விட்றுவ போலிருக்கு… அவன் பீல்டுல வளர்ற ரோஜா செடியில் பூ பூத்தா எனக்கு கொடுங்கன்னு கேட்டிருந்தேன், அதை தான் அன்னைக்கு கொடுத்தான்.. நானும் கொஞ்சம் கெத்தா இருக்கும்ன்னு லவ் ப்ரொபோஸ் பண்ணான் நான் ரிஜெக்ட் பண்ணிட்டேன்னு சொன்னேன், அதுக்கு போய் இவ்ளோ அக்கப்போரு பண்ணிட்டியே வருணா” என்று கனி தன் வாயில் கை வைத்துக்கொண்டு சிரிக்க… வருணாவும், வாசுவும் சேர்ந்து அவளை மொத்தி எடுத்தனர்.
கனியை அடித்துக்கொண்டிருந்த வாசு… “இருந்தாலும் நீ என்ன ஏதுன்னு தெரியரதுக்கு முன்ன ஆனா வூனா கம்பு சுத்த ஆரம்பிச்சிடற” என்று வாற…
கனியை அடிப்பதை நிறுத்தி விட்டு வாசுவை அடிக்க துரத்தினாள்.
ஓடும் வருணாவின் முகத்தில் இருக்கும் சிரிப்பினை பார்த்து கவலை கொண்ட கனி… ‘ஆயுளுக்கும் சிரிக்க முடியாத வாழ்க்கைக்கு அவசரப்பட்டு சம்மதிச்சிட்டியே’ என மனதோடு கூறி வருந்தினாள்.
நேற்று சீனு வருவிடம் பேசிய பிறகு, அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு உண்ணும் நேரம் தனது மகளின் சம்மதத்தை குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
ராஜகோபாலன் பேத்தியின் மீது ஒரு அழுத்தமான பார்வையை வீசி சென்றார். மற்றவர்களும் இதில் தாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லையென்பதை போல் எழுந்து சென்று விட்டனர்.
சர்மா திரைப்பட சங்கத்திலிருந்து தனக்கு வந்திருக்கும் சம்மனை அதிர்வுடன் பார்த்திருந்தார்.
கைகளில் நடுக்கம் ஓட அபியை காண அந்த காலை வேளையிலும் புறப்பட்டார்.
காலிங்பெல் சத்தத்தில் கதவை திறந்த ராமு… சர்மா இருந்த நிலையில் ஒன்றும் கூறாது சோஃபாவில் அமர்ந்ததும்.. அபியின் அறை கதவை சென்று தட்டினான்.
கவி… கொட்டாவி வரும் தனது வாயினை கைக்குள் மறைத்தவனாய் எழுந்து வந்து கதவை திறந்தான்.
“என்ன ராமு அண்ணா” என வெளியில் நின்றிருந்த ராமுவிடம் கவி கேட்க தன் முதுகுக்கு பின்னால் அவர் திரும்பி பார்த்தார்.
அங்கு கவலையுடன் தோற்றமளித்த சர்மாவை கண்டவன் “என்ன ஜி எனி ப்ரோப்ளேம்” என்றான் தடுமாற்றத்துடன்.
வெளியில் பேச்சு குரல் கேட்டு எழுந்து வந்த அபியும்.. “வாட் ஹப்பெண்ட் சார்.. எனித்திங் இஸ் வ்ரோங்” என்றான்..
தனது கையிலிருந்த பேப்பரை அவர் நீட்ட, அபிக்கு முன்பாக அதை வாங்கி படித்த கவி .. “என்னடா இது!” என்று அதிர்ந்தான்.
அவன் அதிர்வுக்கான காரணம் புரியாமல் என்னடா என்ற அபிக்கு விஷயத்தை தெரிவித்தான் கவி.
“அந்த அரவிந்த் சங்கத்திலிருந்து சம்மன் அனுப்பியிருக்கான்.”
“அதுல என்னன்னு போட்டிருக்கு?”
“படத்திலிருந்து தன்னை காரணமின்றி விலக்கியதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆலானதோடு மட்டுமில்லாமல் மற்ற ப்ரொஜெக்ட்களையும் சரியாக செய்ய முடியவில்லையாம், அதற்காக இப்படத்தில் தனக்கு அளிப்பதாக சொல்லியிருந்த சம்பளத்துடன் 50 லட்சம் சேர்த்து தர வேண்டுமாம்.”
அதை கேட்ட பிறகும் அபிக்கு எந்த ஒரு அதிர்வும் இல்லை… “இது எதிர் பார்த்தது தான்” என்றான்.
“வாட்… நீங்க இதை எக்ஸ்பெக்ட் பண்ணீங்களா…?” சர்மா சத்தமாக கேட்டிருந்தார் அபியிடம்…
பல வருடங்களாக இத்துறையில் இருக்கும் அவருக்கு இதெல்லாம் சாதாரணம் தான், ஆனால் அவன் கேட்டிருக்கும் தொகையில் மற்றொரு படத்தையே அவர் முடித்துவிடுவார். அது தான் அவரது வருத்தம்… அதுமட்டுமின்றி இதனால் அவருக்கு ஏற்படும் நஷ்டம் ரொம்ப பெரியது. அதனால் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பியவர் அபி கூறியதில் மகிழ்வுடன் சென்றார்.
“நீ பயங்கர அறிவாளி டா மச்சி” என கவி அபியை அணைத்துக்கொள்ள..
“உன்னையெல்லாம் நடிக்க வைக்கின்ற நான் கொஞ்சம் அறிவாளியா தான்டா இருக்கணும்.”
அபியை கவி முறைக்க.. “ராமு அண்ணா கூப்பிட்டீங்களா?” என்றவாறு அறைக்குள் நுழைந்து கொண்டான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அபி இப்படி இருப்பது, பேசுவது எல்லாம் கவிக்கு ஆச்சர்யமாக இருந்தது.
‘ஐயா உங்களை பார்க்க ஊர் பெரிய மனுஷங்களாம் வந்திருக்காங்க.”
பெரிய வீட்டில் வேலை செய்யும் சுப்பையா ராஜகோபாலனிடம் தெரிவிக்க… “எல்லாரையும் உள்ளே அழைத்து உட்கார வை டா.. இதோ வருகிறேன்” என்றவர் பூஜை அறைக்கு சென்று இறைவனை வணங்கி விட்டு கூடத்திற்கு வந்தார்.
அதற்குள் வந்திருந்த அனைவருக்கும் தேநீர் அளிக்கப்பட்டிருந்தது. அவர் வந்ததும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்ற அனைவரையும் சிறு புன்னகையுடன் வரவேற்று அமர செய்தார். நடுநாயகமாக ஒரு நாற்காலியில் தானும் அமர்ந்தார்.
“என்ன நாச்சிமுத்து… எதாவது ஊருக்கு நல்ல விஷயமா?”
வந்திருப்பவர்களில் மூத்தவரான ஒருவரிடம் என்ன எனக் கேட்டிருந்தார்.
“ஐயா உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்லை… இது மழை காலமா இருந்தாலும் விவசாயம் பண்றதுக்கு போதுமான நீர் வரத்து இல்லைங்க, கோமுகி அணையிலும் (கள்ளக்குறிச்சி பகுதியில் இருக்கும் மிக பெரிய அணை, சுற்றியிருக்கும் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட பல கிராமங்களுக்கு நீர் ஆதாரம் இந்த அணை தான்) தண்ணீ குறைஞ்சிட்டு வரதா பேசிக்கிறாங்க… கிணத்துலையும் அவ்வளவா ஊத்துல தண்ணீ சுரக்கலைங்க…”
“பூமியில அதை எடுக்கற, இதை எடுக்கறன்னு உரிஞ்சிகிட்டே இருந்தா எப்பிடியா தண்ணீ கிடைக்கும்.” ஒருவர் சொல்லி கொண்டே போக கோபத்தில் வெடித்தார் ராஜகோபாலன்.
சில நொடிகள் அமைதியில் கழிய..
“சரி வந்த விஷயத்துக்கு நேரா வாங்க” என்றார் பெரியவர்.
அவரது பேச்சுக்கு மதிப்பளிக்கும் வகையில்.. “அதானுங்கய்யா.. இன்னும் ரெண்டு மாசத்துல அறுவடைக்கு பயிரெல்லாம் தயாராகிடும்ங்க, ஆனால் அது வரை தண்ணிக்கு என்ன பண்றது தெரியலங்க… கள்ளக்குறிச்சி போய் தாசில்தார் கிட்ட அணைய இன்னும் ஒரு முறை திறந்து விட சொல்லி மனு குடுக்கலாம்ன்னு நினைக்கிறோம்ங்க.”
“நல்ல விஷயம் தான் நாச்சி.. ஆனால் ஏற்கனவே நமக்கு திறந்து விடுற காலம் முடிஞ்சிருச்சே.. திரும்ப போய் கேட்டா விடுவாகளா?” கோபாலன் சந்தேகத்துடன் வினவினார்.
“போன ரெண்டு முறையும் அணையிலிருந்து வந்த தண்ணிய ஊர் தலைவருங்கிற பேரில் அவன் வயலுங்க இருக்க பக்கமா கம்மாவை திறந்து விட்டு ஊருக்கு இந்த பக்கம் இருக்க வயலுங்களுக்கெல்லாம் தண்ணியே வரலங்கையா… இவ்வளவு நாள் கிணத்துல வரத வச்சு சமாளிச்சோம்ங்க.. இப்போ அதுவும் போதாதுங்கய்யா.”
“சரி நாச்சி… எல்லாரும் போய் மனு கொடுத்துட்டு வாங்க… அவங்க மதகு திறக்க முடியாது சொன்னா நான் பேசிக்கிறேன்.”
“சரிங்கய்யா.. அப்போ நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம்ங்க.”
அனைவரும் எழுந்து சென்றதும் ராஜகோபாலன் யோசனையாக அமர்ந்து விட்டார். சாமிகண்ணு ஊர் தலைவராக பொறுப்பேற்றது முதல் அவனது சொத்து வளங்கள் தான் அதிகமானதே தவிர ஊருக்கு ஒரு நல்ல காரியமும் நடந்தது இல்லை.
‘இப்போது ஊருக்குள் தண்ணீர் பிரச்சனையை ஏற்படுத்தி வேறு ஒன்றை அடைய விரும்புகிறான்’ என்பதை சரியாக கவனித்த பெரியவர் அதை ஒரு போதும் செயல்படுத்த விடக்கூடாது என உறுதியெடுத்தார்.
தனது மகனை அழைத்து “நீ நேரடியாக தாசில்தாரரை சந்தித்து இதை பற்றி கொஞ்சம் பேசுப்பா… மதகு திறப்பதில் கலெக்டர் அனுமதி வேணும் அப்படி எதாவது சொன்னால் அவரையே பேசி பார்க்க சொல்லு” என்றவர்.. வெங்கடாச்சலம் சரியென்றதும் வயலுக்கு கிளம்பி சென்றார்.
பயிர்களுக்கு உரம் இடும் வேலையை மேற்பார்வையிடுவதற்கு.
பஞ்சாயத்து அலுவலகத்தில் அமர்ந்திருந்த சாமிகண்ணு, மணியக்காரரை மிரட்டி கொண்டிருந்தான்.
“இந்த ஊர்ல விவசாயத்துக்கு தண்ணீ பற்றாக்குறை ஏற்படுத்தி நான் நினைச்சதை சாதிக்கலாம் பார்த்தா இந்த ஊர் பயலுவலாம் சேர்ந்து தண்ணீ திறந்துவிட சொல்லி மனு கொடுக்க போறாணுவ, அது நடக்க கூடாது.. மூனாவது முறையா இந்த ஊருக்கு தண்ணீ திறந்தா அடுத்த கிராமதுக்கெல்லாம் தண்ணீ பத்தாதுன்னு நீ கலெக்டர் கிட்ட நேரா பேசுவே” என கத்தினார்.
பயத்தில் நாற்காலியோடு ஒட்டி அமர்ந்திருந்த மணியக்காரர் “நான் இப்போவே கிளம்பரங்கய்யா” என்று கூறிவிட்டு.. விட்டால் போதுமென வெளியில் ஓடி வந்துவிட்டார்.
***************
“சார்…”
“சொல்லுங்க நிவாஸ்.”
“50 பெர்ஸன்ட் படம் முடிஞ்சிருச்சு இன்னும் ஒரு சாங் கூட ஷூட் பண்ணலையே.”
தயக்கத்துடன் நிவாஸ் கேட்க… “சாங் ஷூட் பண்ண… ஹைதராபாத் போக வேண்டியிருக்கு நிவாஸ்… நீ உன்னோட இன்னொரு நபர் யாரையாவது அழைத்து கொண்டு ஆந்திரா கிளம்பு. நான் போட சொல்லியிருந்த செட் போட்டாங்களா, அது எப்படி வந்திருக்கு கொஞ்சம் பார்த்துட்டு சொல்லு.. நான் இங்க குமார் (மற்றொரு உதவி இயக்குநர்) வச்சி மீதியிருக்க கொஞ்ச ஷூட் முடிச்சிட்டு நாலு நாளில் அங்கு வந்திடறோம்” என்றான் அபி.
”ஓகே சார்” என்ற நிவாஸ் அப்போதே ஆந்திரா செல்ல தயாராகினான்.
அபியின் கவனம் மானிட்டரில் பதிந்திருந்தது. சற்று முன்பு எடுத்த காட்சிகளை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென அவன் செவியருகே கேட்ட “ஐ லவ் யூ” என்ற வார்த்தையில் திரும்பி உறுத்து விழித்தவனது கண்கள் தீ ஜுவாலையென தகித்தது.
தனக்கு அருகில் நின்றிருந்த சின்மயின் கன்னத்தில் பளார் என அறைந்தான்.
அன்றைய தனது காட்சிகளை முடித்துவிட்டு ஷூட்டிங்கை சிறிது நேரம் வேடிக்கை பார்க்கலாம் என கேரவனிலிருந்து வெளியில் வந்த சின்மயி , அபி தனியாக அமர்ந்திருக்கவும் அவனிடம் சென்றாள். அவனை நெருங்கியதும்… காலையிலிருந்து ஓய்வின்றி வெயிலில் வேலை பார்த்ததால் அபியின் முன் உச்சி கேசம் நெற்றி வியர்வையில் நனைந்து சிலும்பியிருக்க.. அவனது பார்வை மானிட்டரில் பதிந்து அங்குமிங்கும் அலைந்தது, நலுங்கிய தோற்றத்திலும் ஆணழகனாய் காட்சியளித்தான். அதில் தடுமாறியவள் அவனை நெருங்கி காதுக்கருகே குனிந்து காதல் வசனம் பேசினாள்.
ஏற்கனவே காதலில் வலியை சுமப்பவன் கொலைவெறியானான்.
அவள் யாரென தெரிந்தும் வேதனையின் வலி கண்ணை மறைக்க அவளை அடித்திருந்தான்.
அழுது கொண்டே அங்கிருந்து ஓட போனவளை அபியின் குரல் தடுத்து நிறுத்தியது.
“நீ எதுக்காக என் பின்னால் சுற்றி வர என்பது எனக்கு தெரியும்.. தொடர் பட வாய்ப்பிற்காக தானே, நீ நினைப்பதை போல் நானில்லை.. உன் வேலை என்னிடம் நடக்காது.. வந்தமா, நடிச்சமா, பணம் வாங்குணமான்னு போய்கிட்டே இரு.”
அவளை எச்சரித்தவன், “அடுத்த சீனுக்கு ரெடியாகி வா” என்றான்.
கவியிடம் சென்றவன் “என்னடா ரெடியா” என்க… அப்போது தான் அபி கவனித்தான் கவி படபடப்புடன் அமர்ந்திருப்பதை,
“என்னாச்சுடா” என்ற அபியிடம்…
“டேய் மாமா…” கவி ஒருவித சங்கடத்துடன் அழைத்தான்.
“சொல்லுடா” என அபி ஊக்குவித்தான்.
அடுத்து கவி கூறியதில் தனது வயிற்றை பிடித்துக்கொண்டு அடக்கமாட்டாமல் சிரித்தான் அபி.
நீண்ட நாட்களுக்கு பிறகு சிரிப்பினால் அவனது கண்களில் நீர் கூட வந்திருந்தது.
”இப்போ நான் என்ன கேட்டன்னு டா இந்த சிரி சிரிக்கிற…” கவி சற்று கடுப்புடன் கேட்டான்.
“பின்ன என்னடா” என்ற அபி சற்று நேரத்திற்கு முன்பு கவி கேட்டதை நினைத்து மீண்டும் சிரித்தான்.
கவி கேட்டது இதை தான்…
“அது வந்து மச்சி.. ஒரு நார்மல் ஆளா இருந்து ஒரு ஹீரோ படம் பாக்கும் போது இந்த லவ் ஸீன், ப்ரொபோஸ் பண்றது இதெல்லாம் நல்லா இருந்துச்சி.. செம பீல் டா சொல்ல தோணுச்சு, ஆனால் இப்போ நான் ஒரு ஹீரோவா ஆக்ட் பண்ணனும் நினைக்கும் போது பயமா இருக்குடா.. ஒரு பொண்ணு கிட்ட போய் எப்படி டா நான் உன்னை லவ் பண்றன்னு சொல்றது… எப்படிடா தொட்டுலாம் பழகுறது… இது வெறும் நடிப்பா இருந்தாலும் நான் உன் தங்கச்சிக்கு(கனி) செய்யற துரோகம் இல்லையா டா!”
இதை நினைத்து பார்த்த அபி அவன் கூறிய கடைசி வரியை மட்டுமே நினைத்து நினைத்து சிரிக்கிறான்.
தான், “ஏன் சிரிகின்றாய்” என கேட்ட பிறகும் நிறுத்தாமல் சிரித்து கொண்டிருக்கும் அபியை கவி முறைத்து பார்த்தான்.
கவியின் முறைப்பில் சற்று அடங்கிய அபி…
“நீ ஆரம்பத்துல கேட்டதுலாம் சரி தான் டா.. ஆனால் கடைசியா இது கனிக்கு துரோகம் அப்படின்னு சொன்ன பார்த்தியா அங்க தான் சிரிப்பு வந்திருச்சு… நீ துரோகம் நினைச்சிலாம் பீல் பண்ணல.. கனி உன்னை பிரிச்சு மேஞ்சிடுவான்னு பயப்படுற சொல்லு அதை விட்டுட்டு.. நல்லா சமாளிக்கிற.. போ.. போய் ரெடியாகி வா.”
அப்பாவி போல் முகத்தை தொங்க போட்டுகொண்டு கவி கேரவனிற்குள் நுழைந்தான்.
சின்மயினால் ஏற்பட்ட இறுக்கம் கவியினால் பறந்து ஓடியது போல் உணர்ந்தான்.
ஆனால்… அவன் காதருகில் “ஐ லவ் யூ சசி” என்ற வார்த்தை காற்றில் கலந்து ஒலித்தது. மனதில் சொல்ல முடியாத வலி தோன்றியது. ஒரு நொடி கண்களை இறுக மூடி திறந்தவன் மாலை திரைப்பட சங்க அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பது நினைவு வர முயன்று தனது வேளையில் கவனம் செலுத்தி அன்றைய ஷூட்டிங்கை முடிக்க ஆயத்தமாகினான்.
**************
விஷ்ணுவுடன் வீட்டிற்கு பின்புறம் இருந்த வெட்ட வெளியில் கனி கோட்டிபுல் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு முழம் நீண்ட குச்சியும், ஒரு ஜான் சிறிய குச்சியும் வைத்து கிராமங்களில் ஆடப்படும் விளையாட்டு.
பெரிய குச்சியினால் சிறிய குச்சியினை எத்தும் போது அது பறந்து சென்று சரியாக அவ்வழியே சென்று கொண்டிருந்த ரங்கநாதன் மீது பட்டது.
தனது பெரியப்பாவை பார்த்ததும் விஷ்ணு கனியின் பின்னால் ஒளிந்து கொள்ள, அவர்களுடன் விளையாடிய சிறுவர் சிறுமியர் குச்சி எகிறிய வேகத்திற்கு ஓ என்று கத்தினர்.
குச்சி வந்த திசையில் திரும்பி பார்த்த ரங்கநாதன் அங்கு நின்று கொண்டிருந்த கனியை உறுத்து விழித்தார்.
“பொம்பளை பிள்ளையா அடக்கமா இரு, எங்க வீட்டு மானத்தை காற்றில் பறக்க விட்டு விடாதே” என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.
எங்க வீடு என்ற வார்த்தையில் அவளது மனம் சுக்கு நூறாக உடைந்தது.
அவளது கண்களில் நீர் எட்டி பார்க்க… என்ன செய்வது என்று தெரியாத விஷ்ணுவோ அவளை
அணைத்து கொண்டான்.
‘சிறு பையனுக்கு இருக்கும் அன்பு கூட அவருக்கு என் மீது இல்லையே, என்னை வெறுக்கும் அளவிற்கு நான் எந்த தவறும் செய்யவில்லையே’ என கனியின் மனம் மிகவும் வருந்தியது.
துளிர்விடும்🌱.