அத்தியாயம் 🍂 9:
“உன் காலேஜுக்கு வேலு வந்திருந்தானா?”
தன் அன்னை லலிதாவின் கேள்விக்கு அமைதியாக “ஆமா” என பதிலளித்தாள் வருணா.
“அவன் கிட்ட வம்பு பண்ணியா?”
“ஆமா… இப்போ எதுக்குமா.. இப்படி நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டு இருக்க…” வருணா சற்று காட்டமானாள்.
“ஏன் டி… புரிஞ்சிகாம, உன் வாழ்க்கைய நீயே அழிச்சிகிற… அந்த வைதேகி ஏற்கனவே நீ அவ புள்ளைய அடிச்சதால தான் இந்த கல்யாணத்தையே ஏற்பாடு பண்ணியிருக்கா… உன்னை அவ வீட்டுக்கு நீ போன அப்புறம் என்னலாம் பண்ண காத்திருக்காளோன்னு நானே பயந்து போயிருக்கேன்.. இதுல நீ வேற ஏன் டி, அவனை பாக்கும் போதெல்லாம் வம்பு பண்ற.”
“அம்மா.. ஒரு சின்ன திருத்தம் , நான் வம்பு பண்ணல.. அவன் தான்.”
தான் கூறியதை காதில் வாங்காமல் சாதாரணமாக பேசும் மகளை நினைத்து லலிதாவால் வருந்த மட்டுமே முடிந்தது.
“வீணா உன் தலையில் நீயே மண்ணை வாறி போட்டுக்காத… அவன் என்ன பண்ணாலும் கொஞ்சம் அடங்கியே இரு.”
“அது முடியாதும்மா… இன்னைக்கு யாரோ ரோட்டுல போறவங்க கிட்ட அவன் வம்பு செய்யல… தங்கச்சி உறவை மறந்து, என் கனி கிட்டவே ஒரு பொறுக்கி மாதிரி கை பிடிச்சு இழுக்கிறான்.. அவங்கிறதால இதோட விட்டேன், இதே வேற யாராவது இருக்கனும் நடந்திருக்கிறதே வேற” என்றவள் கோபத்துடன் தனது அறைக்கு சென்று விட்டாள்.
அப்போது அழுத விழிகளுடன் விஷ்ணுவின் கை பிடித்து உள்ளே நுழைந்த கனி வருவின் வார்த்தைகளை கேட்டு உள்ளம் நிறைந்தாள். சற்று நேரத்திற்கு முன் ரங்கநாதன் பேசியதை மறந்தவளாய் விஷ்ணுவை கட்டிக்கொண்டாள்.
விஷ்ணு வருவின் தம்பியாக இருந்தாலும் கனியிடம் அவனுக்கு ஒட்டுதல் அதிகம். அவள் அழுததில் கலங்கியவன் இப்போது அவளின் மகிழ்வில் தானும் மகிழ்ந்தான்.
“நீ எதுக்கும் பீல் பண்ணாத லாங்வேஜ்(மொழி – கனிமொழி) உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்.. பெரியப்பா எப்பவும் இப்படின்னு தெரியும்ல அப்புறம் எதுக்கு இதுக்கெல்லாம் அழுவுற” என்றான் ஆறுதலாக,
“ஆமால… அவர் இப்படி தானே எப்பவும்” என்றவள், அனைத்தையும் மறந்தவளாக விஷ்ணுவிடம் காட்டிக்கொண்டு உள்ளே சென்றாள்.
விஷ்ணு நேராக தனது பெரியப்பாவிடம் சென்றவன்… “ஏன் பெரியப்பா கனி அக்காவிடம் மட்டும் இப்படி நடந்துக்கிறீங்க” என கவலையுடன் கேட்டான்.
“நீ சின்ன பையன் இது சொன்ன உனக்கு புரியாது.. போ படிக்கும் வேலையை பாரு” என அவன் கேட்ட கேள்விக்கு முற்று புள்ளி வைத்தார்.
ஓரளவு அவன் யூகித்த விஷயம் தான்.. “இருப்பினும் அதற்கு இப்படி தான் நடந்து கொள்வதா” என்றிருந்தது விஷ்ணுவிற்கு.
விஷ்ணு சென்ற பிறகு… சற்று நேரம் எதையோ நினைத்து பார்த்த ரங்கநாதனின் மனம் அபியை எண்ணி கோவம் கொண்டது.
“எல்லாம் இந்த அபியால் வந்தது” என்று வெளிப்படையாகவே முனகினார்.
அன்றைய நாளின் இறுதி காட்சியை படம் பிடித்து கொண்டிருந்தனர். இன்னும் ஒரு மணி நேரத்தில் சங்க அலுவலகத்திற்கு வேறு செல்ல வேண்டும். எல்லாவற்றையும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு டேக்குகளில் முடித்தவன் இந்த ஒரு காட்சிக்கு மட்டும் 22 டேக்குகள் ஆகியும் இன்னும் சரியாக வருவது போல் தெரியவில்லை.
“ஐ லவ் யூங்க…”
“கட்.. கட்… கட்……. டேய் கவி என்னடா பண்ற… லவ்வர் கிட்ட இப்படி தான் ஃபோர்மலா மரியாதையா ப்ரொபோஸ் பண்ணுவியா… ஏன்டா படுத்துற…”
அபிக்கே எங்கு கவி மீது கோபம் கொண்டு விடுவோமோ என்று பயம் வந்தது.
சின்மயி… ஒவ்வொரு முறையும் தன்னிடம் காதல் சொல்லும் கவியின் தடுமாற்றத்தில் வாய்விட்டே சிரித்தாள்.
அவளை முறைத்த அபி… “எல்லாமே எல்லோருக்கும் வந்து விடுவதில்லை…” என்று கடிந்தான்.
கவியை அருகில் அழைத்தவன்…
“என்ன டா பண்ணிட்டு இருக்க.. ஒரு ஐ லவ் யூ சொல்ல முடியாதா டா… என்கிட்ட சொல்லியிருக்க தான” என்றான்.
“டேய் அது ரொம்ப கஷ்டம் டா… உன்கிட்ட சொல்றன்னா அது வேற”
அப்படி சொல்லிய கவியை ஒரு மாதிரி பார்த்த அபி… “கனி உன் முன்னாடி இருக்கிற மாதிரி நினைச்சிக்கோடா” என்றான் அபி.
“இது இன்னும் ரொம்ப கஷ்டம் டா” என்ற கவியை பார்த்து தலையில் அடித்து கொண்டவன்,
சின்மயியை அழைத்து “பேசாம நீங்க ப்ரொபோஸ் பண்ணிடுங்க.. நான் இந்த லவ் ஸீன் மட்டும் வேறு மாதிரி மாற்றி அமைத்து கொள்கிறேன்” எனக் கூறி,
“ஷாட் ரெடி” என்றான்…
அரவிந்த் மாற்றி அமைக்க சொன்னதற்கு அவனை படத்திலிருந்தே நீக்கிய அபி தனக்காக சீனையே மாற்றி விட்டான் என்பதில் கவி நெகிழ்ந்தான்.
சுற்றியிருப்போரை கருத்தில் கொள்ளாது அபியின் முகத்தை திருப்பி கன்னத்தில் முத்தம் வைத்தவன் “லவ் யூ டா மச்சான்” என மொழிந்தான்.
அவன் செய்கையில் பதறிய அபி..
“டேய்.. டேய்..” என அலறியவனாய்…
“அவ கிட்ட சொல்ல சொன்னப்போ முடியல சொல்லிட்டு இப்போ என் கிட்ட சொல்லு.. போடா.. போ.. மார்க்கில் நில்லுடா.. அவ சொல்லும் போதாவது கொஞ்சம் ரொமான்டிக்கா ஸ்மைல் பண்ணு போ” எனக் கூறினான்.
வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும்.. உள்ளுக்குள் கவியின் அன்பில் மகிழ்ந்து தான் போனான்.
இருபது நிமிடங்களில் எடுக்க வேண்டிய காட்சியினை முடித்தவர்கள்.. பேக்கப் செய்து விட்டு.. தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை தீர்க்க காரிலேறி புறப்பட்டனர்.
திரைப்படத்துறை சங்க அலுவலகத்திற்கு கவி மற்றும் அபி செல்வதற்கு முன்பாகவே அரவிந்த், சர்மா வந்து காத்திருந்தனர்.
சர்மாவிடம் தாமதம் ஆனதற்கு மன்னிப்பு வேண்டிய அபி அவர் அருகில் அமர்ந்து கொண்டான்.
அபி வந்ததும்… அதுவரை சாதாரணமாக அமர்ந்திருந்த அரவிந்த் கால் மேல் காலிட்டு தெனாவட்டாக அமர.. அதனை பார்த்த கவி சிறிது நேரத்தில் அவன் வாங்க போகும் பல்பை நினைத்து சிரித்தான்.
“தலைவர் அழைக்கிறார்” என ஒருவன் வந்து சொல்லியதும் நான்கு பேரும் உள்ளே சென்றனர்.
சிறிது நேரம் அனைவரும் நட்பு ரீதியாக பேசிவிட்டு பிரச்சனையை பற்றி பேச ஆரம்பித்தனர். அரவிந்த் தனது புகாரை முன்னிறுத்தி வாதாட.. அவன் கூறும் வரை அமைதியாக இருந்த அபி படம் ஆரம்பிப்பதற்கு முன்பு அரவிந்திடம் போட்ட ஒப்புதல் பத்திரத்தை தலைவர் முன்பு நீட்டி அதில் ஏழாவதாக இருக்கும் கண்டிஷனை படித்து பார்க்க சொன்னான்.
அதை படித்த தலைவர் அரவிந்திடம்…
“மிஸ்டர். அரவிந்த்.. இதுல இருப்பதை பார்த்தால் இவர்கள் தான் உங்கமேல் புகார் அளித்திருக்க வேண்டும்.. நீங்க அளித்த புகார் ஒன்றுமில்லாது ஆகிவிட்டது” என்றார்.
“வாட்…” என்று அதிர்ந்த அரவிந்த் அக்ரீமெண்ட் பேப்பரை வாங்கி பார்த்தவன் சத்தமில்லாது எழுந்து சென்று விட்டான்.
படத்திலிருந்து நீக்கியதால் நஷ்டயீடு வழங்க வேண்டுமென படக்குழுவினர் மீது அரவிந்த் புகார் அளித்திருந்தான்.
அரவிந்தை பற்றி ஓரளவு கணித்து வைத்திருந்த அபி இவ்வாறு நடக்குமென அறிந்ததாலோ என்னவோ அக்ரீமென்டில் டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷனில் படத்திலிருந்து ஹீரோ விளக்கப்பட்டால் அவருக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு படக்குழு பொறுப்பல்ல.. முழு பொறுப்பும் அவரே என்பதையும் சேர்த்திருந்தான். அப்போது இதனை கவனிக்காமல் விட்டது அரவிந்தின் துரதிஷ்டம்.
பெரிய இழப்பு ஏற்பட இருந்ததை காப்பாற்றிய அபியை பாராட்டிய சர்மா.. அடுத்து நடக்கவிருக்கும் ஷூட்டிங்கை பற்றி பேசிவிட்டு சென்றார்.
“எப்போ மச்சான் ஹைதராபாத் போகணும்” என கேட்ட கவியை.. என்ன அவசரம் என்பதை போல் அபி பார்க்க,
“இந்த படம் முடிஞ்சா தானே நாம ஊருக்கு போக முடியும்” என்றான் கவி.
“தங்கையின் திருமணத்தை பார்பதற்கு அவ்வளவு அவசரமா” என்ற அபிக்கு புன்னகை வழங்கியவன்.. ‘நிறுத்துவதற்கு’ என மனதில் கூறிக்கொண்டான்.
*************
“சென்ற காரியம் என்ன ஆனது?”
கோபாலன்.. தனது மகனிடம் கேட்டிருந்தார்.
“நல்லபடியா முடிஞ்சிருச்சுங்க ஐயா…”
“எதுவும் பிரச்சனை இல்லையே.”
“இல்லைங்கையா… மணியக்காரர் கலெக்டர் பாக்க போறதா சொன்னாருங்கையா… அவரை சாமிகண்ணு மிரட்டி அனுப்பியிருப்பாரு போல என்கிட்ட விஷயத்தை சொன்னாரு.. நான் நமக்கு சாதகமாக பேசிட்டு வாங்கன்னு சொன்னங்க.. ஆனால் அதுக்கு வழியில்லாமல் தாசில்தாரரே அணையை இந்த ஒரு தரம் திறந்து விட சம்மதிச்சிட்டாருங்கையா…”
மகனின் தோளில் தட்டிய பெரியவர்..
“சந்தோஷம் வெங்கட்.. அணையிலிருந்து தண்ணீ இங்க வந்ததும், கம்மாய் திறக்குறதுல சாமிகண்ணு பிரச்சனை பண்ணுவான் அதை கொஞ்சம் பார்த்துக்கோ.”
அந்நேரம் அங்கு வந்த ரங்கநாதன்… நூல் நூற்பாலையின் ஏற்றுமதியை பற்றி விவரம் அளிக்க.. முதுகுக்கு பின்னால் கேட்ட குரலில் மூன்று பேரும் திரும்பி பார்த்தனர்.
கலாவதி தான் குரலுயர்த்தி ராதிகாவிடம் பேசுவதை போல் மூவரிடமும் முறையிட்டு கொண்டிருந்தார்.
“எப்போ பாரு ஊர் பஞ்சாயத்து இல்லைன்னா தொழில் கணக்கு வழக்கு.. வீட்டுல என்ன நடக்குதுன்னு கூட கண்டுக்காம இப்படியே இருந்தா நம்ம புள்ள வாழ்க்கை வீணாவதா…”
அவர் சத்தமாக பேசியிருந்தாலும்.. அதில் வருத்தமே மேலோங்கியிருந்தது.
“என்ன கலா.. எதாயிருந்தாலும் நேரா கேளு.. இப்போ உன் பிரச்சனை என்ன?”
பெரியவர் கேட்டதும் இதுதான் சமயம் என மனதில் உள்ளதை கொட்ட தொடங்கினார் கலா.
“வேற ஒண்ணுமில்லை மாமா.. வருணாவை நம்ம அபிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தான் எல்லோருக்கும் விருப்பம்.. வைதேகியை பத்தி தெரிஞ்சும் நம்ம புள்ளைய அங்க கொடுக்கணுமா… சீனு தம்பி ஏதோ சொல்லிபுட்டாருன்னு நீங்க இதுல தலையிடாம இருக்கிறது எனக்கு ஒன்னும் சரியா படலங்கையா.. அதுவுமில்லாம.. எதுக்கு இவ்வளவு அவசரம், நாளைக்கே தேதி வச்சிக்கலாம்ன்னு ஐயர் கிட்ட நாள் குறிச்சிட்டு வந்து சொல்லிட்டு போறா.. லலிதா நித்தம் வேதனை படறத பாக்க முடியலைங்க.. சீனு கிட்ட உங்களால பேசி புரிய வைக்க முடியாதுங்கலா.. நம்ம புள்ள வாழ்க்கை தானுங்க நமக்கு முக்கியம்.”
கலா கூறியதை அமைதியாக கேட்டிருந்த மூவரில் ரங்கநாதன்..
“நான் நேத்து பேச போன அப்பவே வருணா கல்யாணத்த பத்தி பேசுறதா இருந்தால் எதுவும் பேச வேண்டான்னு சீனு சொல்லிபுட்டான் அக்கா” என கலாவிடம் கூறினார்.
“இது அவன் பொண்ணு வாழ்க்கை கலா.. அவனுக்கு நல்லது கெட்டது எதுன்னு தெரியாதா.. அதுவுமில்லாம வைதேகியை பத்தி அவன் கிட்டவே எப்படி தப்பா சொல்ல முடியும்.. விதி என்னவோ அதான் நடக்கும்… நாம மாத்தனும் நினைச்சா சேதாரம் நமக்கு தான்… எல்லாம் நல்லதுக்குன்னே நினைப்போம்.”
பேச்சு அவ்வளவு தான் என்பதை போல் அனைவரும் எழுந்து சென்றனர்.
மாடியிலிருந்து அனைத்தையும் கேட்டிருந்த வருணா.. கவி நினைத்தது போலவே நினைத்தாள்.
“உங்களுக்கு ஏன் அத்தான் என் மேல் காதல் வரல”.
துக்கத்தில் அவள் நெஞ்சுக்கூடு காலியானதை போல் உணர்ந்தாள். எங்கோ அழுது விடுவோமோ என்ற பயம் ஆட்கொள்ள அமைதியாக சென்று படுத்து கொண்டாள்.
வருணாவின் நிலையை கண்கூடாக கண்டு வருந்திய கனிக்கு கவியின் மீது கோபம் ஊற்றெடுத்தது.
“பெரிய இவன் மாதிரி எல்லாம் நான் பார்த்துக்கிறேன் சொன்னான்.. இப்போ நாளைக்கு தேதி வந்து வைக்க போறாங்க, இதுக்கு மேல என்னத்த கிழிக்க போறான்னு தெரியல.”
இங்கு கவிக்கு அவனவள் பூஜை நடத்திக்கொண்டிருக்க.. அங்கு உணவு உட்கொண்டிருந்த கவிக்கு புரை ஏறியது. எவ்வளவு நீர் அருந்தியும் சரியாகமல் இருக்கவே..
‘நம்ம ஆளு நமக்கு அர்ச்சனை செய்றாள் போல்’ என எண்ணியவன் இதழில் புன்னகை அரும்பியது.
“சாப்பிடும் போதும் தங்கச்சியோட ட்ரீமாடா…” என்ற அபியின் குரலில் அவசரமாக உணவினை அள்ளி வாயில் போட்டவன் அங்கிருந்து ஓடி விட்டான். அபியிடம் மாட்டினால் படும் அவஸ்தை அவன் அறிந்ததல்லவா!
வருணா படுத்திருந்தாலும் அவள் உறங்காது வருந்தி கொண்டிருப்பதை கவனித்த கனி ஒரு முடிவுடன் கீழிறங்கி வந்து சீனுவின் அறை கதவினை தட்டினாள்.
லலிதா கதவினை திறக்க அவரை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவள்.. கட்டிலில் படுத்திருந்த சீனுவை மாமாவென அழைத்து உலுக்கினாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர் திடீரென ஏற்பட்ட சத்தத்தில் அடித்து பிடுத்து எழ, தன் முன்னே இடுப்பில் கை வைத்து புசு புசுவென மூச்சு விட்டு நிற்கும் கனியை கண்டு சிரித்துவிட்டார்.
“மாமா” என பற்களை கடித்தவள்…
“எனக்கு இதில் சம்மதமில்லை” என்றாள் மொட்டையாக.
அவரது புரியாத பாவனையை பார்த்து “வருவிற்கு நீங்க வேலுவை கல்யாணம் செய்து வைக்க எடுத்திருக்கும் முடிவு எனக்கு பிடிக்கவில்லை” என தெளிவாகக் கூறினாள்.
“வருவிற்கு இதில் விருப்பம் தான்” என்றதோடு மீண்டும் படுத்துக்கொண்டவரை முறைத்து பார்த்து நின்றிருந்தவள்… “உங்க பேச்சு கா மாமா.. இனி உங்க கிட்ட பேசவே மாட்டேன் போங்க” என கண்ணீரோடு கூறி சென்று விட்டாள்.
லலிதாவிற்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. கன்னத்தில் கை வைத்தவாறு கட்டிலிற்கு அருகே தரையில் அமர்ந்து கொண்டார்.
மறுநாள் சூரியன் தன் பணியை செய்ய வழக்கம்போல் வந்துவிட்டான். ஆனால் வீட்டின் பின் பகுதியில் சூரிய உதயத்திற்கு முன்பே அதிகாலையில் கட்டவிழ்க்கப்படும் கால்நடைகள் அவிழ்க்கப்படாமல் இருக்க எல்லாம் கத்திக்கொண்டிருந்தன.
அவற்றின் சத்தத்தில் வேகமாக வந்த வருணா “நான் இங்கிருந்து போன அப்புறம் என்ன பண்ணுவீங்க” என அவற்றுடன் பேசி கொண்டே அவைகள் நீர் அருந்த கட்டவிழ்த்திட்டாள்.
“யார் மீதோ இருக்கும் கோபத்தை எதற்கு அவற்றிடம் காண்பிக்கிற” என்ற ராதிகாவின் குரலில் தனது தவறு புரிய “சாரி பெரியம்மா” என கூறி தலை கவிழ்ந்தாள்.
வருணாவின் அருகில் வந்தவர், “சரின்னு சொல்லிட்டு இப்போ ஏன் இப்படி இருக்க இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு உங்க அப்பா கிட்ட சொல்லிடு” என்றார் ராதிகா.
தலை குனிந்தவாறே “எனக்கு விருப்பம் தான்” என்றவள் உள்ளே சென்றுவிட்டாள்.
வீட்டில் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும் முதல் முதலில் நடக்கும் திருமண ஏற்பாடு என்பதால் அனைவரும் பரபரப்புடன் வேலை செய்தனர். வீடே சுறுசுறுப்பாக காட்சியளித்தது.
அப்போது பள்ளி மற்றும் கல்லூரி செல்ல தயாராகி கீழ் இறங்கி வந்த கனி, விஷ்ணுவை பார்த்து
“இன்னைக்கு லீவ் போடுங்க சொல்லியிருந்தேனே” என்றபடி சீனு வந்தார்.
அவரை நேராக பார்க்காமல் “எனக்கு முக்கியமான வகுப்பு இருக்கு லீவெல்லாம் போட முடியாது” என்றாள் கனி.
சரியென்றவர்.. “விஷ்ணு நீ இருந்தே ஆகணும்” என்க.. “எதற்கு?” எனக் கேட்டிருந்தான் விஷ்ணு.
“மாப்பிள்ளைக்கு மச்சான் என்கிற முறையில் நீ கட்டாயம் இருந்தாகனும்.”
“அப்படி பார்த்தா கவி அண்ணாவும் தானே இருக்கனும், அவரே இல்லை நான் மட்டும் எதுக்கு” என்றவன்…
“புதுசா பிரிச்சி பேச ஆரம்பிச்சிட்டீங்கப்பா நீங்க…” என வருத்தத்தோடு மொழிந்து கனியின் கையை பிடித்து வெளியேறினான்.
விஷ்ணு அவ்வாறு கூறிய பிறகே.. அன்று தனது மாமனாரிடம் ஒதுக்கத்துடன் பேசியதும்.. இன்று வரை யாரிடமும் வருணாவின் திருமணத்தை பற்றி ஒரு வார்த்தை கூட கலந்தாலோசிக்கவில்லை என்பதும் அவருக்கு புரிந்தது.
உடனடியாக கோபாலனிடம் சென்று அவர் மன்னிப்பு வேண்ட “நடப்பதை நல்லதா நடத்துவோம்” என்றதோடு மற்றவைகளை கவனிக்க ஆரம்பித்தனர்.
வைதேகி தனது கணவர் வீட்டு சொந்த பந்தங்களை திரட்டிக்கொண்டு.. பல வகையான வரிசை தட்டுக்களுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு பெரிய வீட்டிற்கு வந்து விட்டார்.
சிறிது நேரத்தில் வருணாவையும், வேலுவையும் அருகருகே அமர வைத்து, வேலுவிற்கு தங்கை முறையிலான உறவுக்கார பெண் வருணாவிற்கு பூச்சூடி, கழுத்தில் செயின் அணிவிக்க ஐயர் திருமணத்திற்கான பத்திரிகை வாசித்தார். அதில் இன்னும் பத்து நாட்களில் திருமணம் என குறிப்பிட்டிருக்க அனைவரும் அதிர்ந்தனர். சீனு உட்பட,
“என்னம்மா இவ்வளவு சீக்கிரம்.. இதுல கல்யாண வேலை எல்லாம் முடிச்சிட முடியுமா?” என சீனு இழுக்க…
“எல்லாம் முடியும் அண்ணா, நாம எதுக்கு இத்தனை பேரு இருக்கோம் எல்லாம் முடிச்சிடலாம்” என்ற வைதேகி “ஜோசியர் மூணு மாசம் கெடு வச்சிருந்தாலும் எனக்கு சீக்கிரம் செய்துப்புடலான்னு தோணுது அண்ணே.. எம்ம மவன் உசுரு உங்க கையில தான்னு இருக்கு…” எங்கு தட்டினால் அவர் சம்மதிப்பார் என அறிந்து சரியாக பேசினார். சீனுவும் அதில் பயந்து சரியென ஒப்பு கொண்டார்.
அதன்படி அடுத்த பத்து நாட்களில் வரும் முகூர்த்தத்தில் திருமணம் முடிவானது.
உயிரே விலகியது போல் உணர்ந்தாள் வருணா.
வந்ததிலிருந்து தன்னை திரும்பியும் பாராமல் இருக்கும் அவள் மீது கொலைவெறியே உண்டானது வேலுவிற்கு. அதிலும் அவள் நிறத்திற்கு ஏற்றவாறு பட்டுப்புடவை மற்றும் அணிகலன்கள் அணிந்து தேவதையென தன்னருகில் அமர்ந்திருப்பவளை அப்போதே ஆண்டுவிட வேண்டுமெனும் அளவிற்கு அவள் மீதான பித்தம் அவனுக்கு தலைக்கேறியது.
நொடியில் வெளிவந்தவனது கண்கள் அவளை பழிவாங்கி விட்ட எண்ணத்தில் பளபளத்தது. ‘இன்னும் பத்தே நாள் அதன் பிறகு…. வயதுக்கேற்ற பசுமையாய் இருக்கும் நீ எனக்கு கீழே காய்ந்த சருகு’ என வன்மமாக நினைத்தான்.
எல்லாம் முடிந்து உறவுக்காரர்கள் சென்றுவிட, வருணாவின் அருகில் வந்த வைதேகி.. “எம்மருமவ எம்புட்டு அழகா இருக்காவ…” என சொல்லியவாறு வருணாவின் கன்னம் வழிக்க.. அவளோ முகத்தை திருப்பிக்கொண்டாள்.
அவளது முகத்திருப்பலை உணர்ந்த வைதேகி.. “எம்மருமவ வெட்கப்படுவது கூட அழகு தான்” என வெளிப்படையாகக் கூறி வருவிற்கு மட்டும் கேட்கும் குரலில் “இன்னும் பத்து நாளைக்கு அப்புறம் திருப்புற முகத்தை ஒரேயடியா திருப்பிடறேன்” என பழிவங்களோடு உரைத்தார்.
ஒரு நிமிடம் அவரது முக மாறுதலில் வருணாவே அரண்டு போனாள்.
சிறிது நேரத்தில் வேலு, வைதேகி கிளம்பி விட தனது அறைக்குள் வந்த வருணா கட்டிலில் விழுந்து உயிர் கரைய அழுதாள். அவர்கள் வைத்த பூவை பிய்த்து எறிந்தவள்.. கழுத்தில் போட்ட செயின் உயிரை இறுக்குவது போல் உணர்ந்தாள்.
சசியின் முகம் அறையின் சுவர் முழுக்க தோன்றி மறைய கழுத்தில் இட்ட செயினை அறுத்து வீசினாள்.
“வீம்பாக தான் எடுத்த முடிவு தன் வாழ்விற்கு நரகமாகிவிடுமோ” என முதல்முறையாக பயந்தாள்.
சசியை விட்டு கொடுக்க முடியாது ஒரு முறை அவர் காதலிக்கும் பெண்ணிடம் பேசி பார்க்கலாமா என எண்ணியவள் அது தப்பு என அடுத்த நொடியே தன்னை அறைந்து கொண்டாள். கத்தி அழ வேண்டும் போல் இருந்த மனதை முயன்று அடக்கினாள்.
ஷூட்டிங்கிலிருந்த கவி சோர்வுடனும் அதே சமயம் கவலையாகவும் அமர்ந்திருந்தான். அவனுக்கு வருணாவின் நிலை ஒரு புறம் வருத்தத்தை அளிக்க,
“தன்னவள் தன்னிடம் முதல் முறையாக ஒன்று கேட்டு அதை செய்ய முடியாமல் இந்த ஜடா முனி கிட்ட மாட்டிக்கிட்டனே” என புலம்பினான்.
“ஜடா முனி” கவி அபிக்கு வைத்திருக்கும் செல்ல பெயர்.
அபியின் செயலில் திக்கி திணறும் போது மட்டுமே கவி இந்த பெயரினை கூறுவான்.
“எப்போ பாரு யாரு என்ன செய்யறாங்கன்னு எதையும் கண்டுக்காம முனி மாதிரி விறைப்பா சுத்திட்டு இருக்கான்.”
மனதில் அபியை வறுத்தெடுத்தான்.
கவியின் குரல் அபிக்கு எட்டியதோ உதவி இயக்குனர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த அபி கவியை பார்த்து என்ன என்றான்.
ஒன்றுமில்லை என்ற கவியிடம் “வீட்டிற்கு கால் செய்து மேரேஜ் எப்போ” எனக் கேட்கக் கூறினான்.
ம் என்றவன்… “ஏன்டா.. இப்படி இருக்க.. போனவளையே நினைச்சிக்கிட்டு, இருக்கிறவங்க ஆசை என்னன்னு தெரிஞ்சிக்காம உயிரை வாங்குறானே. ஆண்டவா நீ என்னையும் புலம்ப விட்டுட்டியே” என இறைவனிடம் கேள்வி கேட்க.
கடவுளோ “நீ தான் அபியின் உற்ற தோழனாச்சே சோ இதெல்லாம் அனுபவித்து தான் ஆக வேண்டும்.. அதுமட்டுமில்லாமல் உனது புலம்பல்கள் இத்துடன் முடிவடைய போவதில்லை மகனே” என ஆசிர்வதித்தார்.
தனது மாமாவுக்கு அழைத்தவன் திருமணம் எப்போது என தெரிந்து கொண்டு அபியிடம் தெரிவித்தான்.
“ஷூட்டிங் இன்னும் முடியலையே டா.. இன்னும் பத்து நாளில் எப்படி?” என அபி குழம்ப..
“படத்தின் காட்சிகள் இன்னும் ஒரு நாளில் முடிந்து விடும் நீ தானே சொன்ன அப்புறம் என்ன” என சாதாரணமாக கவி கேட்டான்.
“இன்னும் ஒரு சாங் கூட ஷூட் பண்ணல.. கொஞ்ச நேரத்துக்கு முன்பு தான் நிவாஸ் போன் செய்தான். ராமோஜி பிலிம் சிட்டியில் செட் வேலைகள் இன்றோடு முடிந்து விடும். நாளைக்கு நைட் நாம அங்க இருக்கணும்.”
“அப்போ கல்யாணம் முடிஞ்சதும் ஷூட்டிங் வச்சுக்கலாம் அபி.. நாம இன்னைக்கே ஊருக்கு போகலாம் டா” என இளித்துக் கொண்டே கவி கூற,
”அப்படியே ஒரு அறை விட்டேன்னு வச்சிக்கோ மவனே நீ காலி” என்ற அபியின் குரலில் இருந்த கோபத்தில் கவி இரண்டடி பின்னே சென்றான்.
எங்கே அவன் அடித்து விடுவானோ எனும் பயத்தில் கன்னத்தில் தன் இரு கைகளையும் வைத்து “இப்போ எதுக்கு நீ கோபப்படுற” என்றான் அப்பாவியாக.
“பின்ன என்னடா சீன், சாங் அப்படின்னு ஒரு பைவ் டேஸில் ஷூட்டிங் முடிஞ்சிட்டாலும் அதுக்கு அப்புறம் எடிட்டிங், வாய்ஸ் ரெகார்டிங், பி.ஜி.எம், ப்ரோமோஷன், ப்ரோடெக்ஷன் ஒர்க், அப்படின்னு ஏகப்பட்ட வேலை இருக்குடா” என்று கடிந்தான்.
“ஓ………” என கவி மெதுவாக ராகம் போட, “நம்மளால மேரேஜ்க்கு போக முடியாது நினைக்கிறேன்… வேணும்னா, நீ மட்டும் மேரேஜ் பர்ஸ்ட் டே போய்ட்டு முடிஞ்சதும் கிளம்பி வந்திடு” என அபி போட்ட குண்டில் பதறினான்.
“அச்சச்சோ… நாம அப்போ போனா, எப்படி கல்யாணத்தை நிறுத்தி இவனை(அபி) மப்பிள்ளையா கோர்த்துவிடுறது.. பயபுள்ள விடாது போலிருக்கே.. நம்ம ஆளு கிட்ட அடி விழுந்திருமோ” என யோசித்த கவி
“இப்படி பண்ணா என்ன மச்சான்” என்றான்.
“எப்படி?” என்ற அபியிடம் தனது யோசனை
யை கவி கூறினான்.
“ஷூட்டிங் முடிச்சிட்டு நாம ஊருக்கு போகலாம்.. மேரேஜ் முடிச்சிட்டு உடனே கிளம்பிடலாம்.. என்ன ஒரு ஃபோர் டேஸ் ஊர்ல இருப்போம் வந்து மற்ற வேலைகளை பார்த்து கொள்ளலாம்.
கவி கூறியது அபிக்கு சரியென பட “சர்மாவிடம் கேட்டு பார்க்கலாம்” என்றதோடு நகர்ந்து விட்டான்.