அத்தியாயம் 🍂 10 :
அன்று ஞாயிற்று கிழமை வீட்டில் இருக்க பிடிக்காமல் வயலிற்கு வந்திருந்தாள் வருணா.. சுற்றி வயல்கள் இருக்க எங்கும் கண்ணை கவரும் பச்சை நிறம். பசுமையாக காட்சியளித்தது.
கை நீட்டும் தூரத்தில் தொட்டுவிடும் அருகில் சிறிய அளவிலான குன்று முதல் உயரமான மலை வரை தொடர்ச்சியாக காணப்பட்டன. வயலில் நெற்கதிர்கள் பூ வைத்திருக்க, அதற்கு ஒரு புறம் வாழை தோப்பும், அடுத்து மஞ்சள் காடும், மறுபுறம் கரும்பும் அதனை அடுத்து தென்னந்தோப்பும், எதிர்புறம் மா முதல் பல்வேறு வகையான பழ மரங்கள் காணப்பட்டன. மா மரங்களுக்கு நடுவே சிறிய ஒட்டு வீடும் அதற்கு அருகில் ஓலையினால் வேயப்பட்ட சிறு குடிலும் இருந்தன. இரவு நேரங்களில் யாராவது ஒருவர் இங்கு வந்து தங்கி கொள்வார்கள். இதற்கு நடுவில் பெரிய கிணறும் , அதனையொட்டி பம்ப் செட்டும் அமைந்திருந்தது.
பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது. ஆனால் இதிலெதிலும் அவள் மனம் லயிக்கவில்லை. வரப்பில் தனது கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். வாய்க்காலில் ஓடும் நீரினை வெறித்தது அவளது பார்வை.
“பாருடா… கல்யாண சந்தோஷத்தில இயற்கையை ரசிச்சிட்டு இருக்கியா?”
அருகில் கேட்ட குரலில் கலைந்த வருணா நிமிர்ந்து பார்க்க கனி நின்று கொண்டிருந்தாள்.
மீண்டும் தலையை நீர் செல்லும் பக்கம் திருப்பிய கனி அவளது சோகத்தை கண்டு கொண்டவளாக “இதெல்லாம் தேவையா.. எதுக்கு நீயே உன் வாழ்க்கையை கெடுத்துக்கிற வருணா. உன் மனசுல என்ன தான் இருக்குன்னு எனக்கு புரியல… நீ குறும்பு தனமா இருந்தாலும் வயதுக்கு மீறிய முதிர்ச்சி, யோசிக்கின்ற பக்குவம் உனக்கு உண்டு.. ஆனால் இப்போ நீ என்ன பண்ணி வச்சிருக்க தெரியுதா.. இதோட எதுவும் முடிய போறது இல்லை.. அன்னைக்கு காலேஜில் அந்த வேலு உன்னை பார்த்த பார்வை இன்னும் என் நெஞ்சு நடுங்குது… அவங்களை பத்தி தெரிஞ்சும் எதுக்கு டி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்ச?”
“அய்யோ… போதும்… நிறுத்து…”
கனி ஆற்றாமை, கவலை, வருத்தம் என புலம்பி கொண்டே செல்ல வருணா ஆத்திரத்தில் வெடித்தாள்.
“நீ இப்படி கத்தினால் நான் போய்டுவன்னு நினைச்சியா… சொல்லுடி.. எனக்கு இப்போ உண்மை தெரிஞ்சாகணும், எதுக்கு டி இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட.. சொல்லுடி சொல்லு?”
கனி வருணாவின் தோள்களை இருபுறமும் பிடித்து உலுக்கிய படி கோபத்துடன் வினவினாள்.
‘காலம் கடந்த காதல்.. உணர்ந்த நொடி அதை துறக்கும் நிலை..
விருப்பமே இல்லாமல் திருமணத்திற்கு விருப்பம் தெரிவிக்கும் சூழல்… தனது அத்தானின் இடத்தில் வேலு…’ என பல்வேறு காரணங்களால் வெளியில் சொல்லவும் முடியாமல், உள்ளுக்குள் அடக்கி வைக்கவும் முடியாமல் அழுத்தத்தில் திணறி கொண்டிருந்தவள் தனது ஒட்டு மொத்த இயலாமையையும் கனியிடம் காண்பித்தாள்.
“என் வாழ்க்கை எப்படி போனால் உனக்கு என்ன டி… நீ யாரு என்னை கேள்வி கேட்க.. உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு அவசியமில்லை.”
மறுபுறம் திரும்பி நின்று சொல்லிய வருணா கனியிடம் சத்தமில்லாமல் போக கனியை திரும்பி பார்த்தாள்.
ஆனால் கனி… வருணா, நீ யாரு என கேட்டதிலே அதிர்ந்து கண்களில் கரை கட்டி நிற்கும் நீரோடு அங்கிருந்து விலகி சென்றிருந்தாள்.
கனி சென்ற சில நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய வருணா உள்ளே நுழைந்ததும்.. “ஏட்டி.. நில்லுடி!” என்ற தனது அன்னையின் குரலில் அங்கே நின்றாள்.
“அன்னைக்கு வந்துட்டு போனவங்க உன் கழுத்துல போட்ட சங்கிலி எங்கடி?”
“அது கழுத்தை உறுத்திட்டு இருந்துச்சும்மா அதான் கழட்டி வச்சேன்.” அறுத்து எறிந்ததை கழட்டி வைத்ததாக பொய் உரைத்தாள்.
“நீ எடுத்து இருக்கும் முடிவு உன் வாழ்க்கையே உறுத்தும்ன்னு உனக்கு தெரியாதா?” என்ற லலிதா அவள் அறுத்து வீசியிருந்த சங்கிலியை அவளது கையில் அளித்து “அறையை சுத்தம் செய்யும் போது கட்டிலிற்கு கீழே கிடந்ததுன்னு லட்சுமி கொண்டு வந்து கொடுத்தாள்” என்றார்.
எதுவும் பேசாமல் அறைக்கு செல்ல மாடியேற போனவள்.. படிகளில் நின்று தன்னையே பார்த்திருந்த கனியை கண்டுக்காமல் மேலேற… வருணாவை கை நீட்டி தடுத்த கனி, அவள் கையிலிருந்த தங்கச்சங்கிலியை சுட்டி காட்டி “உனக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லைன்னு இதுலே தெரியுது.. என் கிட்ட கோபமா பேசி கத்திட்டா நான் கண்டுக்காம விட்டுடுவனா.. எனக்கு என் வருவை பற்றி தெரியாதா.. நீ ஏதோ மறைக்கிற தெரியுது ஆனா, அது என்னன்னு தான் தெரியல…” என்ற கனியை கட்டிக்கொண்டு வருணா அழுதாள்.
அவளது முதுகை தட்டி கொடுத்த கனி “உனக்கு என்ன பிரச்சினை.. எதையும் மறைக்காமல் சொல்லு வரு…” கனியின் கேள்வியில் அவளை நிமிர்ந்து பார்த்த வருணா எதுவும் சொல்லாமல் அவளை விட்டு விலகி படி ஏறினாள்.
செல்லும் அவளையே பார்த்து நின்று கொண்டிருந்த கனி கவியை விட அதிகம் குழம்பி போயிருந்தாள்.
தனது பண்ணை வீட்டில் சாமிகண்ணு தன்னுடைய அடியாட்களிடம் தான் வகுத்துள்ள திட்டத்தைக் கூறி கொண்டிருந்தான்.
“மூணாவது முறையா நம்ம ஊருக்கு தண்ணீ திறந்து விட மாட்டாங்கன்னு நினைச்சேன் ஆனால் அந்த பெரிய வீட்டு ஆளுங்க இதுல குறுக்க புகுந்து மதகு திறந்து விட பெர்மிஷன் வாங்கிட்டானுங்க.. நம்ம ஊருல ஒரு சாய தொழிற்சாலை தொடங்கிடலாம் நினைச்சா அதை இவனுங்க விட மாட்டானுங்க போலிருக்கு.
நம்ம ஊரு செழிப்பான பகுதி… நீர் வளம் மிகுந்தது… துணிகளுக்கு சாயம் போடுவதற்கு தண்ணீ நிறைய வேணுமாமே.. அந்த பட்டணுத்துல இருந்து வந்தவன் நிறைய காசு உங்களுக்கு தரேன் இந்த ஊருல பேக்டரி கட்ட நிலம் பார்த்து கொடுங்கன்னு சொன்னான். அவன் கொடுக்குற காசு இன்னும் நாற்பது வருஷம் இந்த அரசியல்ல உழைச்சாலும் கண்ணுல காண்க முடியாது.. சரின்னு பணத்துக்கு ஆசை பட்டு முடிச்சு தரேன்னு அவன் கிட்ட கை நீட்டி காசு வாங்கிபுட்டேன். இப்போ இந்த ஊர் பயலுவலாம் அந்த பெரிய ஆளுகிட்ட ஒண்ணு சேர்ந்து உழுவுற நிலத்தை விக்க மாட்டோம் அப்பிடி இப்படின்னு பேசிட்டு திரியிறாணுவ, சரி டேம் தண்ணிய அவனுங்க வயலுக்கு போகாம தடுத்து காய வச்சிட்டா, விவசாயம் பண்ண தண்ணீ இல்லாம காசுக்கு நம்ம கிட்ட நிலத்தை வித்துடுவானுங்க நினைச்சா அதுக்கு ஆப்பு வைக்க பாக்குறாங்க… இந்த தடவையும் முதல் ரெண்டு தடவை பண்ண மாதிரி அந்த பக்கம் தண்ணீ போகாம பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.”
முதலில் புலம்பி அடுத்து வெறியுடன் பேசிய சாமிகண்ணு இறுதியில் தனது ஆட்களுக்கு கட்டளையிட்டு சென்றான்.
சாமிகண்ணு சொல்லியதை போல் அணையிலிருந்து வரும் நீர் வரத்தை திசை திருப்ப மதகு இருக்கும் இடத்திற்கு சென்ற அவனது ஆட்கள் ஸ்தம்பித்து போயினர்.
அவர்களுக்கு முன்பே ஊர் மக்கள் அங்கு திரண்டு இருந்தனர். நீரினை விவசாய நிலங்கள் இருக்கும் பகுதிக்கு திருப்பி விட்ட மக்கள், அங்கு அருவா, வேல் கம்போடு பத்து ஆட்களை காவலுக்கு நியமித்தனர்.
‘தண்ணீரையும் பாதுகாக்கும் நிலையில் தான் இன்று நாம் இருக்கின்றோம்.’
அங்கு பிரச்சினை எழுவதை தடுப்பதற்காக முன்பே வந்திருந்த வெங்கடாச்சலம் “உங்களை யார் அனுப்பியிருப்பா என எல்லாம் தெரியும், அவனுக்கு காசு பணம் தான் முக்கியம் என்றால் போய் பிச்சை எடுக்கட்டும் அதை விட்டு விவசாய நிலங்களை கூறு போட வேண்டான்னு சொல்லுங்க.. இனி ஒரு தரம் மதகு பக்கம் உங்களை பார்த்தேன் அத்தனை பயலுகளையும் கண்ட துண்டமா வெட்டி அய்யனாருக்கு படையல் போட்டுபுடுவ.. போங்கள இங்கியிருந்து” என கர்ஜித்தார்.
அவரது கம்பீர குரலிலே தான் சொல்வதை செய்து விடுவேன் என்ற உறுதி இருந்தது. அதில் பயந்து வந்த வழியே ஓடினர் சாமிகண்ணுவின் ஆட்கள்.
**************
அன்றைய ஷூட்டிங்கை முடித்து வந்ததிலிருந்தே அபி ஒரு வித சோகத்துடன் காணப்பட்டான்.
அவனிடம் சென்று கேட்பதற்கு கவிக்கு எந்த வித தயக்கமும் இல்லை ஆனால் ‘தான் கேட்பதால் அவனது சோகம் அதிகரித்து விடுமோ’ என்ற பயம் தள்ளி நின்று வேடிக்கை பார்க்க செய்தது.
அறையில் கவியில்லை என்பதை உறுதி செய்த அபி கதவை உட்புறமாகத் தாளிட்டான். நீண்ட நேரம் தனது மனதோடு உழன்று கொண்டிருந்த அபி அறிந்திருக்கவில்லை அறையின் உட்புற குளியறையில் கவி இருப்பதை. வழக்கம்போல தன் காதலின் நினைவாக வைத்துள்ள குறிப்பேட்டை கையில் எடுத்தவன் தன் நெஞ்சோடு அணைத்தபடி கோச்சில் அமர்ந்தான்.
எப்போதும் போல் அதை திறந்து சில பக்கங்களின் வரிகளை மென்மையாக விரலினால் வருடியவன் “தினமும் செத்துட்டு இருக்கேன் டி… நீ என்னை விட்டு போறதுக்கு முன்னாடி என்னை கொன்னுட்டு போயிருக்கலாமே! ஏன் டி.. இப்படி என்னை தினமும் உயிரோடு கொன்னுட்டு இருக்க…” என்று வாய்விட்டு புலம்பியவன் , அவன் அமர்ந்திருந்த கோச்சிலே கால்களை குறுக்கி குறிப்பேட்டை அணைத்தவாறு படுத்தான்.
தன்னவளின் காதலை குறிப்பேட்டின் நெருக்கத்தில் அனுபவித்தவனாய், வேலையினால் ஏற்பட்ட சோர்வினால் படுத்ததும் அவனை உறக்கம் தழுவியது.
குளியலறையிலிருந்து வெளிவந்த கவி சிறு பிள்ளை தனது பொம்மையை யாருக்கும் தர மாட்டேன் என்பதை போன்று எதையோ இறுக்கி பிடித்து தூங்கும் அபியை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தான்.
அவன் கைகளில் வைத்திருப்பது என்னவென்று, அபியின் தூக்கம் கலையாமல் மெதுவே எடுத்து பார்த்த கவி அதிர்ந்து போனான்.
“இதை இன்னுமா இவன் வைத்திருக்கிறான். நான் அன்றே இதை எரித்து விட்டேனே மீண்டும் எப்படி” சிந்தித்தவனுக்கு பதில் தான் இல்லாமல் போனது.
முதன் முதலாக அந்த குறிப்பேட்டை அபி படித்த அன்று அவன் நடந்து கொண்டதும், இரவில் வெறி பிடித்தவன் போல் கத்தி அறைக்குள்ளே எதையோ தேடுவதாக எண்ணி பைத்தியம் போன்று ஓடியதையும் நினைத்து பார்த்தவனின் நெஞ்சம் இன்றும் அதன் தாக்கத்தில் நடுங்க தான் செய்தது.
அபியிடம் சிறு அசைவு தெரியவே, உடனடியாக அந்த நாட்காட்டியை அவன் கண்களிலிருந்து மறைத்து வைத்தவன் ஒன்றும் தெரியாததை போன்று, ஹைதராபாத் செல்வதற்காக பேக் செய்ய ஆரம்பித்தான்.
உறக்கம் கலைந்து எழுந்த அபி முதலில் கவனித்தது தன் குறிப்பேட்டை தான், கீழே விழுந்து விட்டதோ என கோச்சிற்கு அருகே தன் பார்வையை சுழல விட்டான். அங்கு எங்கும் இல்லை என்பதை அறிந்து துடித்து போனான். கட்டிலில் அமர்ந்து பெட்டிகளில் துணிகளை அடுக்கி கொண்டிருந்த கவியை பார்த்தவன் தாளிட்ட அறைக்குள் இவன் எப்படி வந்தான், அவனது மண்டை வெடித்து விடும் போல் இருந்தது.
அபியின் செய்கைகளை கவனித்த கவி.. “என்னடா, ஏதாவது தேடுகிறாயா?’ என்றான்.
அதற்கு ஒன்றுமில்லை என தலையசைத்த அபி எழுந்து குளியலறைக்குள் புகுந்தான்.
கவியிடம் கேட்க அவனுக்கு ஒரு நொடி போதாது, ஆனால் இவ்வளவு நாள் அவனிடமிருந்து மறைத்த குற்றவுணர்வில் அதை அவனால் செய்ய முடியவில்லை. ஒருவேளை தன்னுடைய நலனிற்காக அதை நான் எடுக்கவில்லை என்றுவிட்டால், கவி பொய்யுரைப்பதை அபியால் தாங்கிக்கொள்ள முடியாது, ஆதலால் நாட்காட்டியை அப்படியே விட்டான். அது கவியிடம் பத்திரமாக இருக்குமென உறுதியாக நம்பினான்.
ஒரு மணி நேரத்தில் ஹைதராபாத் செல்ல இருவரும் கிளம்பி வெளியில் வந்திருந்தனர்.
ராமுவிடம் சில தாள் பணத்தினை அளித்த கவி “நாங்க திரும்பி வர வரைக்கும் உங்க செலவுகளை பார்த்துக்கோங்க” என்றான்.
அதை மறுத்து அபி “நாங்க எப்படியும் ஷூட் முடித்து நேராக நம்ம ஊருக்கு தான் போவோம் என நினைக்கின்றேன், நீங்க இங்கு தனியா இருக்க வேண்டாம் ராமு அண்ணா.. நாளைக்கு காலையில் கிளம்பி ஊருக்கு போய்டுங்க…” கவி கொடுத்த பணத்திற்கு மேல் சில தாள்களை கொடுத்த அபி சரிதானே என்பதை போன்று கவியை பார்த்தான். அவனும் ஆமோதிப்பாக தலையாட்ட இருவரும் ராமுவிடம் சொல்லிவிட்டு புறப்பட்டனர்.
விமான நிலையம் செல்லும் வழியில் “சர்மாவிடம் நாம் ஊருக்கு போவதை பற்றி பேசிவிட்டாயா அபி” என்ற கவியிடம்.. ம் என்ற ஒற்றை பதிலோடு சீட்டில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த பின்பும் ‘எப்படியாவது இது நின்றுவிட கூடாதா’ என வருணாவின் மனம் ஏங்கியது.
இரவில் உறக்கம் வராமல் புரல்வதும், பகலில் எதிரில் என்ன நடக்கின்றது என்பதை கருத்தில் கொள்ளாததுமாய் திறிந்தாள்.
மறுநாள் தனது கிராமத்திற்கு வந்த ராமு நேராக அவனது இல்லம் போகாமல் பெரிய வீட்டிற்கு வந்தான். அவனை கண்டதும் வீட்டிலுள்ள அனைவரும் “அபி மற்றும் கவி வரவில்லையா” என கவலை கொண்டனர்.
கலா… “எல்லாம் இந்த அபி தான் காரணம், அவனால் தான் கவியும் இங்கு வருவதில்லை” என வாய்விட்டு புலம்பினார்.
தனது பாசத்திற்குரிய அபியை திட்டுவது பொறுக்காமல், “அம்மா அபி தம்பியை ஒன்னும் சொல்லாதீங்க அவர் இன்னும் ஐந்து நாளில் இங்கு வரேன்னு சொல்லியிருக்காரு” என்றான்.
அதில் அனைவரும் அகம் மகிழ்ந்து போயினர். பெரியவர் வரவும், ராமுவை சூழ்ந்து தங்களது பிள்ளைகளின் நலன் விசாரித்து கொண்டிருந்த அனைவரும் விலகி நிற்க, “என்ன ராமு நல்லா இருக்கிறாயா” என அவனை நலம் விசாரித்தார்.
“தம்பிங்க ரெண்டு பேரும் என்ன நல்லா வச்சிருக்காங்க ஐயா” என்றவரை “சாப்பிட்டு போ” என்ற பெரியவர் வயலிற்கு செல்ல கிளம்பினார்.
தன்னுடைய அப்பாவின் வார்த்தைக்கு ஏற்ப.. மனைவியிடம் ராமுவை கவனிக்குமாறு சொல்லிய வெங்கடாச்சலமும் அவருடன் சென்றார்.
தங்களது பிள்ளைகளை பற்றிய செய்தியினை தெரிந்து கொண்டதில் விருந்து கவனிப்பு ராமுவிற்கு பலமாக இருந்தது.
இலையில் வைத்த அனைத்தையும் ஒரு பிடி பிடித்த ராமு கொல்லை புறம் கை கழுவ செல்ல அவர் பின்னொடு வருணாவும் சென்றாள்.
அவரிடம் சிறிது தயக்கத்துடன் உண்மையாவே “சசி அத்தான் வருகிறாரா” என உறுதி படுத்திக்கொண்டவள் கவிக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
அந்த புறம் கவி அழைப்பை ஏற்றதும்.. “அண்ணா” என தடுமாறி, “என் கல்யாணத்திற்கு சசி அத்தான் வர வேண்டாம், அவர் வருவதை தடுப்பது உங்கள் பொறுப்பு” என்றவள் கவி அளித்த பதிலில் கோபமாக போனை வைத்தாள்.
“இரண்டு வருடங்களுக்கு மேலாக வீட்டிற்கே வராதவன்.. இப்போது வருகிறேன் என சொல்லும் போது என்னால் அவனை தடுக்க முடியாது.”
கவி கூறியதை மீண்டும் நினைத்தவள் தொலைபேசிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பூஜாடியை ஆத்திரத்தில் தூக்கி போட்டு உடைத்தாள். அடுத்து வேகமாக படியேறி சென்றவள் அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்து கதறியழுதாள்.
காதலிப்பவன் முன் இன்னொருவன் தாலி கட்டுவதை எந்த பெண்ணால் தான் தாங்கிக்கொள்ள முடியும்.
அபியை பார்த்தால் தனது உறுதி அனைத்தும் காணாமல் போய்விடும் என்ற பயத்திலே கவிக்கு அழைத்து அபி வருவதை தடுக்க கூறினாள்.
இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த கனி, புரிந்த உண்மையில் மகிழ்வு கொள்ள முடியாமல் வருணாவின் மீது கொலைவெறி ஆனாள். அறைக்குள் திடீரென நுழைந்த கனி.. “அழு நல்லா அழு.. இப்போவே நான் அபி அண்ணாக்கு போன் செஞ்சு வரு உங்களை தான் விரும்புறா.. இந்த கல்யாணத்த நிறுத்துங்கன்னு சொல்ல போறேன்” என்றாள்.
கனியின் பேச்சில் அதிர்ந்து எழுந்தவள்.. “நீயே பொய்யா எதையாவது கற்பனை செய்யாதே” என கத்தினாள்.
பதிலுக்கு கனியோ.. அவளை விட சத்தமாக.. “எதை பொய்யின்னு சொல்ற, நீ அபி அண்ணாவை காதலிப்பதா, இல்லை அவரு முன்னாடி உன்னால இன்னொருவன் கையால் தாலி வாங்கிக்க முடியாதுன்னு இப்போ இப்படி அழுவுறியே இது பொய்யா சொல்லுடி சொல்லு.. உனக்கே தெரியும் உனக்கும் அண்ணாவுக்கு கல்யாணம் செய்ய தான் எல்லோருக்கும் விருப்பம், நடுவுல உங்க அத்தையும் அந்த வேலுவும் புகுந்து குட்டையை குழப்பிட்டாங்க.. சரி உன் சம்மதம் இல்லாம எதுவும் நடக்காது நினைச்சா மேடம் உடனே சரி சொல்லிடீங்க அதுவும் அண்ணாவை காதலிகின்றாய் என தெரிந்தும், எங்க எல்லோரையும் ஏமாத்திட்டு, உன்னையும் ஏமாத்திக்கிட்டு எதுக்குடி இந்த கல்யாணம்?”
மனதில் உள்ளவற்றை கேள்விகளாய் அடுக்கிய கனி… தான் இவ்வளவு கேட்டும் ஒரு வார்த்தை கூட பேசாமல் அழுத்தமாக அமர்ந்திருந்தவளை கண்டு, “இது சரிப்பட்டு வராது நான் இப்போவே எல்லோரிடமும் சென்று சொல்ல போகிறேன், நீ அபி அண்ணாவை விரும்புவதை…” கீழே இறங்க அடி எடுத்து வைத்தவளை வருணாவின் சொற்கள் உறைய வைத்தது.
“நீ கீழே போறதுக்குள்ள என் உயிர் போயிருக்கும்”.
வருணா கூறிய வார்த்தைகளில் சிலையென சமைந்த கனி, வருணாவின் அழு குரலில் தன் உணர்வு பெற்றாள்.
கனி மெல்ல வருணாவின் அருகில் நிற்க.. அவளது இடையை கட்டிக்கொண்டு அழுதாள் வருணா.
“உனக்கு அழத்தெரியும், எனக்கு இப்போ சில நாட்களாகத் தான் தெரியும் வரு.. நீயா அழறன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.. நீ இப்படி அழுதுட்டு உட்கார்ற ஆள் இல்லையே… உன் காதலை ஏன் அண்ணா கிட்ட சொல்லல.. எதுக்கு வேலுவை கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்ட?”
“வேலுவை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு வீட்ல முடிவு எடுத்த அப்புறம் தான் சசி அத்தான் மேல எனக்கு இருக்கும் காதலை நான் உணர்ந்தேன்.”
“சரி அதன் பிறகாவது சொல்லியிருக்கலாமே?”
கனியின் கேள்விகள் அதிகமானதே தவிர அவளுக்கு பதில்கள் தான் கிடைக்கவில்லை.
“இங்க பாரு கனி கேள்வி கேட்கிறது ஈஸி… அதுக்கு பதில் சொல்வது எவ்ளோ கஷ்டம் தெரியுமா…?” சலிப்புடன் கூறும் வருணாவின் மீது கனியால் கோவத்தை காட்ட முடியவில்லை.
இருவரும் அமைதியாக இருக்க கீழே வைதேகி வந்திருப்பதாகவும், அவர் வருணாவை அழைப்பதாகவும் விஷ்ணு தெரிவித்தான்.
“இப்போ என்ன வில்லங்கமோ” என்றவாறு கனி எண்ண…
வருணா கீழே கூடத்திற்கு சென்றாள். வைதேகியை வாயெல்லாம் பல்லாக காணும் போது கம்பு சுத்துற குச்சியாலே அந்த பல்லை தட்டி கையில கொடுக்கணும் போல் இருந்தது வருணாவிற்கு.
“வாடிம்மா.. என் ராசாத்தி.. இப்படி வந்து அத்தை பக்கத்துல உட்காரு.”
அங்கு சீனுவும் இருக்கவே வேண்டா வெறுப்பாக வைதேகியின் அருகில் சென்று அமர்ந்தாள்.
“நாளைக்கு நாள் நல்ல நாளா இருக்கு, நீ எம் மவன் வேலு கூட போயி உனக்கு பிடிச்சா மாதிரி நாலு புடவை எடுத்துகோம்மா… எல்லாரும் போய் எடுக்கலாம் தான், என்ன பண்றது இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம்… ஆளாளுக்கு ஒரு வேலையை பார்த்தா தானே சுளுவா முடியும்.”
“நீ சொல்றதும் சரி தான் வைதேகி,”
வைதேகி கூறியதை ஒப்புக்கொண்ட சீனு தன் மகளிடம் நாளை வேலுவுடன் சென்று வருமாறு கூறினார். சரிப்பா என்ற வருணா எதுவும் செய்ய முடியாத நிலையில் அமர்ந்திருந்தாள்.
நள்ளிரவில் ஹைதராபாத் நகரத்திற்கு வந்து சேர்ந்த அபி மற்றும் படக்குழுவினர், தங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐந்து நட்சத்திர விடுதியில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைகளில் முடங்கினர். அபி இழுத்து போர்த்திக்கொண்டு தூங்க கவி உறக்கம் வராமல் அறையை அளந்து கொண்டிருந்தான்.
அறையில் அரவம் உணர்ந்து தூக்கம் கலைந்த அபி, “குட்டி போட்ட பூனை மாதிரி எதுக்குடா இப்படி நடந்து கிட்டு இருக்க, தூங்க விடுடா.. நாளைக்கு நிறைய வேலை இருக்கு…” சொல்லி முடிப்பதற்குள் அபியின் கண்கள் தூக்கத்தில் மூடி கொண்டன.
அபியின் போர்வையை உருவிய கவி.. “எழுந்திருடா… எத்தனை நாள் என்ன தூங்க விடாம பண்ணியிருப்ப.. இப்போ நான் சொல்றதை கேளு…” கவியின் குரலில் கட்டளை இருந்ததோ அபியும் உறக்கத்தை விடுத்து அவன் சொல்ல வருவதை கேட்க ஆயத்தமாகினான்.
அபி ரெடி என்பதை போல் பார்க்க, கவி கூறலானான்.
“சாங் ஷூட் எத்தனை நாள் நடக்கும்.” (கவி)
“டூ டேஸ்… நெக்ஸ்ட் டூ டேஸ் க்ளைமேக்ஸ் சீன்.”
கவி கேட்காததற்கும் சேர்த்து பதிலளித்தவன் அடுத்து என்பதை போன்று பார்த்தான்.
“சாங் ஷூட்டில் நான் ஆக்ட் பண்றதுக்கு எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு…”
“1. டான்ஸ் பண்ணும் போது எனக்கும் ஹீரோயின்க்கும் இன்பிட்வின் பைவ் ஃபீட் கேப் இருக்கணும்.”
“2. நோ கிஸ் அண்ட் ஹக்.”
“3.கை பிடிச்சிட்டு நடக்குறது, ஓடறது இதெல்லாம் இருக்கக்கூடாது.”
“4. முக்கியமா ஹீரோயின் என் நெஞ்சுல சாஞ்சிட்டு பாட்டு பாட கூடாது, வசனம் பேசக்கூடாது.”
“5. அப்புறம்.. லாஸ்ட் அண்ட் பைனல்.. இது வெரி வெரி இம்போர்டன்ட்.. ரெண்டு பேரும் மழையில் நனைஞ்சிட்டு ஆடுற மாதிரி வைக்கவே கூடாது.”
கவி கூறியதை ஒரு கையால் முகத்தை தாங்கியவாறு கட்டிலில் சம்மணமிட்டு கேட்டுக்கொண்டிருந்தவன் “அவ்வளவு தானே” என அமைதியாகக் கேட்டான்.
எந்தவொரு ரியாக்ஷன் இல்லாமல் கேட்பவனை பார்த்து கடுப்பாகிய கவி “இவ்வளவு சொல்றனே ஏதாவது சொல்றானா பாரு” என சத்தமாக முணுமுணுத்தான்.
அதில் மெல்லியதாக இதழ் விரித்த அபி “உன் கற்புக்கு நான் கியாரண்டி” என்றான்.
அபியின் பேச்சில் சிறு பிள்ளையென கை, கால்களை உதறிய கவி கட்டிலில் கவிழ்ந்தடித்து படுத்தான்.
அதிகாலைக்கு மேல் ராமோஜி பிலிம் சிட்டிக்கு சென்ற அபி சாங் மற்றும் கிளைமாக்சிற்காக போடப்பட்டிருந்த செட்டை மேற்பார்வையிட்டு அடுத்த கட்ட பணிகளை செய்யலானான்.
சரியான நேரத்திற்கு அனைவரும் வந்து சேரவே ஷூட் தொடங்கியது.
இரண்டு நாட்கள் இரவு பகல் பாராது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது.
செட் மற்றும் நேரடியாக சில இடங்களுக்கும் சென்று காட்சியமைக்கப்பட்டது. கவி கூறிய அனைத்து நிபந்தனைகளையும் வஞ்சனையின்றி அபி நிறைவேற்றி வைத்தான். கவிக்கு அதில் சொல்ல முடியாத வருத்தம் அபி மீது இருந்தது. இருப்பினும் அபியின் சொல்லை தட்டாது அனைத்தையும் அழகாகவே நடித்தான்.
ஒவ்வொரு முறை டச் அப் செய்யும் போதும் கவியின் உர்ரென்ற முகத்தை பார்த்து அபி உள்ளுக்குள்ளே சிரித்தான்.
ஒருமுறை அவனது முகத்தை ஆராய்ந்து பார்த்த சின்மயி.. கவியிடம் “நான் என்ன அவ்வளவு மோசமாவா இருக்கேன் எதுக்கு உங்க முகம் ஜிஞ்சர் எட் மங்கி மாதிரி இருக்கு” என கேட்டுவிட அதற்கு அபி சிரித்த சிரிப்பை பார்த்து கவி அசடு வழிய அங்கிருந்த அனைவருக்கும் அபியின் சிரித்த முகம் பேரதிசயமாக இருந்தது.
இவ்வாறு பாடல் காட்சிகள் முடிய,
அடுத்த நாள் படத்தின் இறுதிகாட்சிகள் படமாக்கப்பட இருந்தன.
***********
பைக்கில் மாப்பிள்ளை தோரணையுடன் வந்த வேலு வருணாவுடன் கிளம்பியிருந்த விஷ்ணு மற்றும் கனியை கண்டு முறைத்தான். அவனது பார்வையில் பயந்த கனி வருவிற்கு பின்னால் மறைந்தாள்.
விஷ்ணு இருவருக்கும் முன்பாக வேலுவை நெருங்கி “போலாமா.. நாலு பேர் போறதுக்கு பைக் போதாது வாங்க நம்ம மணியை கார் எடுக்க சொல்கிறேன்” என்றான்.
வருணாவை தனியாக அழைத்து சென்று அவளை ஒரு வழி செய்ய நினைத்த வேலு இதில் மொக்கை வாங்கினான். டவுனின் பெரிய துணி கடைக்கு முதலில் சென்றனர்.
நான்கு மணி நேரம் கடையையே புரட்டி போட்டு ஒன்றும் எடுக்காமல் இருக்க, பொறுத்து பார்த்தவன் கடையின் ஓரத்தில் போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
பத்து நிமிடங்களில் அவனருகில் சென்ற விஷ்ணு “உங்க கல்யாணத்துக்கு தானே துணி எடுக்க வந்திருக்கோம் வாங்க அங்க வந்து நில்லுங்க” என அவன் மறுக்க மறுக்க கை பிடித்து இழுத்து சென்று வரு மற்றும் கனிக்கு பின்னால் நிற்க வைத்தான்.
மேலும் ஒரு மணி நேரம் கடந்திருந்தது. மூவரும் இருக்கையில் அமர்ந்து சேல்ஸ் மேன் எடுத்து போடுவதை வெறும் பார்ப்பதும் மட்டுமாய் இருக்க, இவர்களுக்கு பின்னால் வந்ததிலிருந்து நின்று கொண்டிருந்த வேலு பொறுமை இழந்தவனாக தானே ஒரு நான்கு புடவைகளை எடுத்துக்கொண்டு அவர்களையும் கடையிலிருந்து தள்ளிக்கொண்டு வெளிவந்தான்.
வெளியில் வந்ததும் விஷ்ணு பசிக்கிறது என்க… “இவ்வளவு நேரம் உனக்கு பசிக்கவில்லையா” என எரிந்துவிழுந்தான். ‘கடையில் வைத்து செஞ்சது பத்தாமல் இப்போ அங்க வேற எழரைய கூட்ட பாக்குதுங்க’ என சரியாக கணித்த வேலு “இருபது நிமிஷத்துல வீட்டுக்கே போயிடலாம் வாங்க” என காரிலேற்றி வீட்டில் வந்து சேர்த்தான்.
பெரிய வீட்டின் உள்ளே கூட செல்லாது தனது வீட்டிற்கு வந்த பிறகே நிம்மதியாக மூச்சு விட்டான்.
“ஒரு துணி எடுக்க எம்புட்டு நேரம் வளத்துதுங்க… இதுக்கே இந்த பாடா இருக்கே.. ஒரு வேளை வேணுன்னு பண்ணாளோ.. இருக்கும் இருக்கும்.. இருடி இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உன்னை பழி தீர்த்துக்கிறேன்…” என மனதில் வஞ்சகமாக எண்ணினான்.
வீட்டிற்கு வந்ததும் ஏதோ சிந்தனையில் அமர்ந்து விட்ட மகனிடம் வந்த வைதேகி..
“என்னப்பா அந்த சிறுக்கிய இன்னைக்கு ஒரு வழி பண்ணியா.. தண்ணீ கூட வாங்கி கொடுக்காம…” வைதேகியின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.
“நாளைக்கும் நகை வாங்க போலான்னு இதே மாதிரி பண்ணிடு” என்ற தாயை வெட்டவா என்ற ரீதியில் பார்த்தான். அவனது பார்வையில் வைதேகி மெதுவாக விலகி சென்றார்.
இங்கு பெரிய வீட்டில் வருவின் அறையில் அமர்ந்து மூவரும் சிரித்து கொண்டிருந்தனர். “இப்படியே காலம் முழுக்க சின்ன சின்ன விஷயத்துல அவனோட மல்லு கட்டிட்டு இருக்க போறீயா வரு,” திடீரென கனி கேட்டதில் சிரிப்பதை நிறுத்திய வருணா “எப்போ பாரு ஏன் டி கேள்வியாய் கேட்டுட்டு இருக்க?” என அலுத்துக்கொண்டாள்.
“கேள்வி கேட்டால் பதில் சொல்லணும் அதை விட்டுட்டு நீ ஏன் மொழி கேள்வி கேட்கும் போதெல்லாம் எதையாவது சொல்லி எஸ்கேப் ஆகுற.” இம்முறை விஷ்ணு தனது அக்காவை மடக்கினான்.
”நீ சின்ன பையன் உனக்கெல்லாம் விளக்கம் கொடுத்துட்டு இருக்க முடியாது” என்ற வருணாவிடம்…
“அந்த வேலு கூட மட்டும் உனக்கு கல்யாணம் ஆச்சு நான் உன்னோடு பேசவே மாட்டேன், அவனை என்னால மாமான்னு கூட கூப்பிட முடியாது” எனக் கூறிக்கொண்டே அறையிலிருந்து ஓடி விட்டான்.
கல்யாண வேளைகளில் நாட்கள் இறக்கை கட்டி பறக்க..
கல்யாணத்திற்கு நான்கு நாட்களே மீதம் இருந்தன. முதல் நாள் காலை நலங்கு, இரவு பெண் அழைப்பு அடுத்த நாள் காலை முகூர்த்தம் என்று முடிவு செய்திருந்தனர்.
நாட்கள் நெருங்க நெருங்க வருணாவிற்கு ‘தன் இதயத்தை வேறெங்கோ பிடுங்கி நட போகிறார்கள் என்ற எண்ணம்’ வருந்த செய்தது. அவளால் வெளியில் அழ கூட முடியவில்லை.
அவளின் நிலையை அறிந்த கனிக்கு.. ‘அபி அண்ணாவை காதலிக்கும் போது எதற்கு இத்திருமணத்திற்கு சம்மதித்தாள்’ என குழப்பமாக இருந்தாலும்.. எப்படியாவது நிறுத்தி விடுவதாக கூறிய கவி இன்னும் வந்து சேரவில்லை என்பதில் ஆத்திரமானாள்.
இரண்டு நாட்களாக முயற்சித்தும் அவனை பிடிக்க முடியவில்லை.
கல்யாணத்தை பற்றிய பயம் வருவை விட கனிக்கு அதிகமாக இருந்தது. இனியும் கவியை நம்பி பிரயோஜனம் இல்லை என கருதிய கனி வேலுவை சந்தித்து பேச முடிவெடுத்தாள்.
“சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம்” என எண்ணினாள்.
தன் முடிவு தவறு, அதுவும் வேலுவை தனியாக சந்திக்க நினைத்து பெரிய தவறு செய்ய போகிறோம் என்பதை பாவம் அவள் அறிந்திருக்கவில்லை.
துளிர்விடும்🌱.