சருகு 🍂 11:
“என்ன விந்தையடி….
உன்னை,
பெண்ணோடு ஒப்பிட்டு பார்த்த கவிஞனும்,
தலை சுற்றி தான் போகிறான்…
உன் வளைவு, நெலிவுகள் அசைந்தாட நீ ஓடும் அழகில்…
இன்னும் எத்தனை உருவம் தான் எடுப்பாய்..
விண்ணில் மேகமாய்..
தரையிறங்கும் வேளையில் மழையாய்..
மலையில் கொட்டும் அருவியாய்..
ஓடும் நதியாய்… ஆர்பரிக்கும் கடலாய்..
சலங்கையில்லாமலே நீ ஜதி போடும் நடனத்தில் சித்தம் தடுமாற தான் செய்கிறது..
அனைத்து உயிர்களின் ஆதாரமும் நீயே..
அதில், சிறு கர்வமும் கொள்ளாது பூமி தாயின் மடியில் அமைதியாக வலம் வரும் உன்னை சிறை பிடிக்கத்தான் எத்தனை போட்டிகள்..
நீ இல்லையெனில் உயிர்கள் இல்லையென இந்த அறிவிலிகளுக்கு யார் அறிவுறுத்துவது..
எல்லோரும் தன்னை தானே மாமேதை எனக் கூறிக்கொள்ளும் மடையர்கள்..
நீ வற்றி காய்ந்து காணாமல் போகும் தருணத்தில் உன் இழப்பை உணரும் முட்டாள்கள்..
உன் ஒரு துளிக்கு போர் தொடுக்கும் காலம் வெகு தூரமில்லை..
உனை பயன்பாட்டிற்கு உபயோகித்து… மிச்சத்தை சேமித்தால் நாளைய தலை முறை நமதாகும்..”
“நீரின்றி அமையாது உலகு….”
மேடையில் தண்ணீர் பிரச்சனையை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த பேசிய கவி இறுதியில் தானே எழுதிய கவிதை ஒன்றை வாசிப்பது போல அந்த படத்தின் முடிவு காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
கவி கவிதையை கூறி முடித்ததும் பார்வையாளர்களாக நடித்த அனைவரும் நடிப்புக்காக மட்டுமின்றி உண்மையிலே வியந்து கை தட்டினர்.
மேடையிலிருந்து கவி இறங்கியதும் இனி நானும் உன்னுடன் வாழ்க்கை முழுவதும் இணைந்து இயற்கை வளங்களை பாதுகாக்க போராடுவேன் என சின்மயி வசனம் பேச படத்தின் படப்பிடிப்பு இனிதே முடிந்தது.
படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் முதல் கொண்டு அனைவரும் நிம்மதி மூச்சு விட்டனர். கவி விட்ட பெரு மூச்சிலிருந்து தமிழகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மின்சாரமே எடுக்கலாம். அந்த அளவிற்கு இதிலிருந்து வெளியேறும் தருணத்தை எதிர் பார்த்திருந்தான்.
இறுதி நாள் படபிடிப்பிற்கு சர்மாவும் வந்திருந்தார். அவரே கவியின் நடிப்பில் வியந்து தான் போனார்.
அபியை படம் நல்லா வந்திருப்பதாக பாரட்டியவர் இன்று மாலை நாம் தங்கியிருக்கும் ஹோட்டலிலே சின்ன பார்ட்டி அரேஞ் செய்திருப்பதாகவும் அதற்கு அனைவரும் வர வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
அபி தயங்க.. அதனை புரிந்து கொண்ட சர்மா, “படத்திற்காக உழைத்த அனைவருக்கும் தான் அபி உங்களை பற்றி தெரியாதா, அனைவரும் உங்களுக்கு சமம் தானே” என்றார்.
அனைவரும் என்ற வார்த்தையை ப்ரொடக்ஷன் பீல்டில் வேலை செய்பவர்களும் அடக்கம். சிறு புன்னகை அளித்தவன் நிச்சயம் வருவதாக கூறினான்.
படத்தில் நடிப்பு வேலைகள் மட்டுமே முடிந்துள்ளன. இதன் பிறகு இருக்கும் அனைத்து வேலைகளிலும் முழு பொறுப்பு இயக்குனரின் கைகளிலே…
****************
மாலை வேளையில் மில்லுக்கு அருகில் உள்ள தோப்பில் தான் வேலு இருப்பான் என தெரிந்து கொண்டு கனி அங்கு சென்றாள் தனியாக, அவனது தோப்பிற்கு பக்கத்தில் தான் அவர்களது மஞ்சள் காடு உள்ளது.
அங்கு அந்த நேரத்தில் கனியை எதிர்பாராதவன்.. “பச்சி தனியா வருது.. ஏதாவது விஷயம் இருக்குமோ” என நினைத்தவன் “அவளே சொல்லுவா” என்று அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.
தனது தாவணியின் நுனியை திருகி கொண்டிருந்தவள் சுற்றி பார்வையை சுழல விட்டாள். யாரும் இல்லையென்றதும் தனியாக வந்த தனது மடத்தனத்தை எண்ணி தன்னையே திட்டி கொண்டாள். சரி சீக்கிரம் பேசிவிட்டு விரைந்து சென்றுவிட வேண்டும் என நினைத்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
வந்ததிலிருந்து கனியின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை பார்திருந்தவன் அவளது உடலில் ஒரு அர்த்த பார்வையை பதித்தான்.
அவனது அருவருக்கத்தக்க பார்வையில் அவளது உடல் கூசி நடுங்க, இன்னும் இங்கு இருப்பது சரியில்லை என எண்ணி திரும்பி செல்ல எத்தணிக்கையில் அவளது கையினை இறுக்கி பிடித்து தடுத்தி நிறுத்தினான்.
வேலுவின் திடீர் செயலில் நடுங்கியவள் தன் கையினை அவனிடமிருந்து விடுவிக்க போராடினாள். அது முடியாமல் போகவே அவனிடம் கெஞ்சுவதற்கு மனமின்றி வந்ததை கூறிடலாம் என பேசினாள்.
“வருக்கு இந்த கல்யாணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் கிடையாது.. அவ.. அபி அண்ணாவை தான் விரும்புறாள்.. நீங்க தான் ஏதாவது செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்தனும்.”
“சரி.. “
தான் சொல்லியதும் எந்தவித எதிர்வினையும் காட்டாது ஒப்புக்கொண்டவனை ஆச்சரியமாக பார்த்தாள் கனி.
“என்ன ஆச்சரியமா இருக்கா.. நான் உண்மையாதான் சொல்றேன், இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்.. ஆனால் வருணாவிற்கு பதில் நீ என்னை மணந்து கொள்ள வேண்டும்.”
“ச்சீ…” அருவெறுப்பில் முகம் சுளித்தாள் கனி.
“நான் உனக்கு தங்கச்சி முறை என்பதை மறந்து பேச உனக்கு அசிங்கமாக இல்லை.”
“சுத்தமா இல்லை.. நீ அந்த அபி பயலுக்கு வேணுனா தொ….ங்கச்சியா இருக்கலாம், ஆனால் எனக்கு இல்லை, அவனுக்கே அவன் சொல்லிக்கிறதால் தானே நீ தங்கச்சி. எனக்கு நீ எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்ச நாளிலிருந்தே உம் மேல ஒரு கண்ணு தான் அது இப்போ நடக்க போறதுல எனக்கு சந்தோஷம் தான்.”
அவனது வார்த்தைகள் வெட்கமற்று வெளியில் வர,
ஒரு நொடியில் பலம் கொண்டவளாக அவனது பிடியிலிருந்த தனது கையை உதறி விடுவித்து கொண்டு அவனை ஓங்கி அரைந்திருந்தாள்.
“என்னடி… ஆளாளுக்கு கை நீட்டுறீங்க.. நீட்டுன கையை உடைக்கிறேண்டி.” என சீறியவன், கனியின் முடியை கொத்தாக பற்றி இழுக்க.. அருகில் கேட்ட “வேலு” என்ற கர்ஜனையான குரலில் அதிர்ந்து கனியை விடுவித்தான்.
அங்கு ருத்ரமூர்த்தியாக நின்று கொண்டிருந்தார் வெங்கடாச்சலம்.
கனியை தன் புறம் இழுத்தவர்..
“பொம்பளப்புள்ள கையால அடி வாங்குன உன்னை அடிச்சா எனக்கு தான் அசிங்கம், இன்னொருமுறை எம்புள்ளைக்கிட்ட உன் கைவரிசை காட்டனும் நினைச்சாலே உன்னை உறுத்தெரியாம அழிச்சிடுவேன்.” ஒரு விரல் நீட்டி எச்சரித்தவர் கனியை அழைத்துக்கொண்டு சென்றார்.
செல்லும் வழியில் தனது தந்தையிடம் மன்னிப்பு வேண்டியவள்.. தான் இங்கு வேலுவை சந்திக்க வந்ததற்கான காரணத்தையும் அதற்கு அவன் பேசியதையும் கூறினாள்.
மறக்காமல் வருணாவின் காதலையும் தெரிவித்தாள்.
மஞ்சள் செடியினை மேற்பார்வையிட வயலிற்கு வந்தவர், வேலுவின் தோப்பிற்கு கனி தனியாக செல்வதை தூரத்திலிருந்து பார்த்தவர், அவர்களை நெருங்கி வரும் சமயத்தில் தான் அவன் கனியின் முடியை பற்றினான், வேலுவை கொல்லும் அளவிற்கு அவருக்கு கோபம் வந்தாலும் குடும்பத்தின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு அமைதியாக வந்தார்.
வேலுவின் உண்மை குணம் அறிந்ததில் எப்படியாவது இத்திருமணத்தை நிறுத்த வேண்டும் என முடிவெடுத்தார்.
ஆனால் எவ்வாறு என்று தான் அவருக்கு தெரியவில்லை.
சீனுவிடம் தெரிவித்தால் கண்டிப்பாக நம்ப மாட்டான், வீணாக குடும்பத்தில் மன விரிசல் தான் ஏற்படும். சிந்தித்து கொண்டே மகளின் கை பிடித்து நடந்து சென்றவர் கனி கூறிய, “வருணா அபி அண்ணாவை விரும்புறாப்பா, ஆனால் ஏன் இதற்கு ஒப்பு கொண்டாள் தெரியவில்லை” என்றதில் மகிழ்ச்சி பாதி வருத்தம் பாதி அவரை சூழ்ந்தது.
வீட்டிற்கு வந்ததும் நேராக மேலேறி வருணாவின் அறைக்கு சென்றவர் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்று அடைத்து தாழிட்டார்.
தந்தையின் வேகத்தில் அரண்டு அதிர்ந்த கனி அவர் வருணாவிடம் பேசி நல்ல முடிவு எடுப்பார் என ஆசுவாசமடைந்தாள்.
படுக்கையில் கவிழ்ந்து படுத்திருந்த வருணா.. கதவு மூடும் சத்தத்தில் திரும்பி பார்க்க அங்கு பார்வையில் கனிவு பொங்க தன்னை பார்த்து நின்றிருந்த வெங்கடாச்சலத்தை கண்டு மெல்ல எழுந்து நின்றாள்.
“அபியை நீ நேசிக்கிறன்னு என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமேடா…” அவரது வார்த்தையில் ஏக்கம் நிறைந்திருந்தது.
“மாமா…” மிகவும் பொறுமையாக அவளது குரல் வெளிவந்தது.
“என்னை உன் மாமாவா மட்டும் தான் நினைச்சிருக்கேன்னு இப்போ தான் தெரிஞ்சுது.”
“அய்யோ… மாமா , அப்படிலாம் இல்லை மாமா.. கனி கிட்ட கூட எதையாவது மறைச்சிருப்பேன், ஆனால் உங்களிடம் இதுவரை எதையும் மறைத்தது இல்லை மாமா.”
அழுகையினூடே அவள் தன் மாமாவிடம் தவிப்புடன் கூறினாள்.
வெங்கடாச்சலத்திற்கு வரு என்றால் மிகவும் இஷ்டம். அபியை விடவே வருவின் மீது தான் அவருக்கு பாசம் அதிகம். அபி பிறந்து, அவனிற்கு அடுத்து ஒரு பெண் பிள்ளை வேண்டுமென அவர் செய்யாத முயற்சியில்லை… ஆனால் அதற்கு பலன் தான் கிட்டவில்லை. எட்டு வருடங்களுக்கு பின்னர் தனது தங்கைக்கு மகள் பிறக்கவே அவளை தன் மகளாகவே நினைத்து வளர்த்தார். வருணாவும் எதையும் சீனுவிடம் தெரிவிப்பதற்கு முன் தனக்கு தந்தையாகிய மாமனிடம் தான் அனைத்தையும் கூறுவாள். அப்படிப்பட்டவள் இன்று தன் வாழ்க்கையின் சந்தோஷத்தையே தன்னிடமிருந்து மறைத்தது அவருக்கு வேதனையளித்தது.
அவள் அழுவது வேதனையாக இருந்த போதிலும் இப்போது அதைவிட முக்கியமான ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில் தனது கவனத்தை செலுத்தினார்.
“நீ அபியை…?”
“மாமா…”
“நான் உன் வாய் மொழியாக கேட்க நினைக்கிறேன்.”
“ஆமா” என கண்களில் நீர் நிறைய தலையசைத்தாள்.
“சரி… அப்புறம் எதுக்கு வேலுவை கட்டிக்க சம்மதம் சொன்ன?”
இந்த கேள்விக்கு அவள் என்னவென்று பதில் சொல்வாள்.
காதல் மனது அதற்கான பதிலில் ரணமாய் வலித்தது. மாமாவிடம் உண்மை சொல்ல முடியாது தடுமாறினாள்.
“என் கண்ணை பார்த்து சொல்லு…”
அவரது அந்த குரலிலே.. நீ சொல்லாமல் நான் இங்கிருந்து போகமாட்டேன் என்ற உறுதி தெரிந்தது.
சொல்லி தான் ஆகவேண்டுமென்ற முடிவுடன் நிமிர்ந்தவள் “சசி அத்தான் வேறு ஒரு பெண்ணை நேசிக்கிறார்.”
இதை செல்வதற்குள், ஒரு முறை மரணித்து மீண்டாள்.
ம்… வருணா கூறியதை கேட்டவரது பதில் அந்த ஒற்றை எழுத்தாக தான் இருந்தது. அதன் பிறகு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அபி ஒரு பெண்ணை காதலிக்கின்றான் என்பது அவருக்கு ஆச்சரியமாக இல்லை.. இதை அவன் அவரிடம் மறைத்துவிட்டானே என்று தான் வருந்தினார்.
சாய்வு நாற்காலியில் கைகளை தலைக்கு பின் வைத்து கால்களை நீட்டி சாய்ந்து அமர்ந்தவர், கண்களை மூடிக்கொண்டார்.
அவர் மனம் பலவற்றை யோசித்து கொண்டிருந்தது. வரு அபியை காதலிக்கிறாள். அபி வேறு ஒரு பெண்ணை விரும்பும் போது வேலுவுடனான வருவின் திருமணத்தை நிறுத்தி அபியுடன் வருணாவை எப்படி சேர்த்து வைப்பது.
எப்படி பார்த்தாலும் ஒருவருடைய காதல் சருகாகி விடுமே, யாருக்காக யோசிப்பது… அபியா…. வருணாவா…. முதலில் நடக்கவிருக்கும் திருமணத்தை எப்படி நிறுத்துவது. கண்கள் மூடியிருந்தாலும் அவரது மனமும், மூளையும் செல்லப்பட்டு கொண்டிருந்தது.
***************
DJ’வின் கை வண்ணத்தில் அந்த பார்ட்டி ஹால் முழுவதும் பாடல் அதிர்ந்து ஒலித்தது.
இருட்டு அறையில் பல வண்ண மின் விளக்குகள் நிறைந்திருந்தது.
படக்குழுவினர் அனைவரும் அங்கு வந்திருந்தனர். நான்கு பேர் அமர கூடிய சிறு வட்ட மேசைகள் அறை முழுக்க போடப்பட்டிருக்க அனைத்தும் நிரம்பி வழிந்தது.
அறையின் முன் பகுதியில் வட்ட வடிவிலான சிறு மேடை போடப்பட்டிருக்க அதில் மூன்று, நான்கு பேராக ஏறி போடப்படும் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர்.
பலர் மதுவின் போதையில் மூழ்கி கொண்டிருந்தனர்.
அறையின் மூலையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த அபியின் முகத்தில் வெளிப்படையாக எரிச்சல் மண்டிக்கிடந்தது. சர்மாவிற்காக வந்திருந்தான். எப்போதும் இது போன்ற கேளிக்கை விருந்துகளில் அவனுக்கு விருப்பம் இருந்ததில்லை. அவனுக்கு எப்போது இங்கிருந்து செல்வோமேன்று இருந்தது.
இது போன்ற இடங்களில் தான் படத்தின் வினியோகஸ்திரர்களை மீட் செய்ய முடியும் என்பதால் சர்மாவின் பேச்சினை தட்ட முடியாமல் வந்திருந்தாலும், ஹீரோ என்ற முறையில் கவியை இந்த மாதிரி பார்ட்டிகளுக்கு தனித்து அனுப்ப பயந்தவனாய் வந்திருந்தான்.
கவி இப்படத்தின் ஹீரோ என்பதால், அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்களிடம் மாட்டி கொண்டான். ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பித்து அபியிடம் வந்து அமர்ந்தவன் அவனுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த கண்ணாடி குடுவையில் இருந்த திரவத்தை தனது வாயில் சரித்தான்.
ஒரே மூச்சாக விழுங்கியவன், இறுதி சொட்டில் தூ…. என துப்பினான். வாமிட் வருவதை போல் பாவனை செய்ய, அபி பார்த்த பார்வையில் கப்சிப் என வாயை மூடிக்கொண்டான்.
தனது அருகில் சர்மா அமர்ந்திருக்கவே கவியை நெருங்கி அவனிற்கு மட்டும் கேட்கும் குரலில்…
“உன்னை நடிக்க வச்சதே நான் டா.. என்கிட்டவே உன் நடிப்பை காட்டுறியா?” என்றான்.
“மச்சி…” என கவி அபியை பாவம் போல் பார்க்க… “அது உண்மையாவே உனக்கு விஸ்கின்னு தெரியாதுல மாப்ள” என்றான் அபி.. அவனது வார்த்தையில் நக்கல் வழிந்தாலும், முகத்தில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.
அபியின் கோப பார்வையில் பயந்தவனாக… “அய்யோ மச்சி சத்தியமா, ஆப்பிள் ஜூஸ் நினைச்சி தான்டா குடித்தேன்.” வேகமாக வெளிவந்தன கவியின் வார்த்தைகள்.
அதே வேகத்துடன் “என் மேல் சத்தியம் செய்” என்ற அபியின் தாக்குதலில் ஃபிரீஸ் ஆகிய கவி முகத்தை தொங்க போட்டு கொண்டு “தெரிஞ்சு தான் குடித்தேன்” என்று ஒப்பு கொண்டான்.
‘அப்படி வா வழிக்கு’ என நினைத்த அபி எதுவும் பேசாமல் அவன் அமர்ந்திருந்த டேபிளிற்கு அருகில் சுவரை ஒட்டி போடப்பட்டிருந்த கோச்சில் சென்று அமர்ந்துகொண்டான்.
அபி சுத்தமான ரொம்ப ரொம்ப நல்ல பையன்.. தம், குடி போன்றவைகளை திரும்பியும் பார்த்தது இல்லை. அன்று தான் (பிளையோவர் மீது நின்று கவியை ஒரு வழி செய்த தினம்) முதன் முறையாக மனதின் வலி தாங்காமல் அதனை கையில் தொட்டான், ஆனாலும் அருந்தவில்லை. ஏதோ ஒரு வேகத்தில் கையில் எடுத்துவிட்டானே தவிர அதனை குடிக்க அவன் மனம் இடமளிக்கவில்லை.
எப்போதும் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அபி கவியும் அப்படியே இருக்க வேண்டுமென நினைப்பான்.
அபி சென்னை வந்த புதிதில் இளசுகளின் நடவடிக்கைகளை கண்டு ஒதுங்கிக்கொள்வான்.
அவனை போல கிராமங்களிலிருந்து வரும் ஒரு சில மாணவர்கள் நகர்புற வாழ்க்கையில் கவரப்பட்டு அதில் மூழ்கி வெளிவர முடியாமல் சிக்கி தவித்து காணாமல் அழிந்து போவதை நன்கு உணர்ந்திருந்த அபி அவனுக்கு பின் அங்கு வந்த கவியை மிகவும் பொறுப்புடன் பார்த்துக்கொண்டான்.
கவியும் நல்ல பையன்… ஆனால் அபியின் அளவிற்கு கிடையாது.. அபி பெண்களை பார்த்தால் வேறு பக்கம் திரும்பிக்கொள்வான் என்றால் கவி நன்றாக சைட் அடிப்பான். ஆனால் தனது எல்லைக்குள் அனைத்தையும் நிறுத்திக்கொள்வான்.
அபியின் மீதிருந்த அன்பு கலந்த பயத்தினாலே எந்தவொரு கெட்ட பழக்கவழக்கங்களையும் தன்னிடம் நெருங்க அவன் அனுமதிக்கவில்லை.
ஆனால் எப்போவாவது பிரண்ட்ஸ் பெர்த் டே பார்ட்டி என சிறியளவில் ட்ரிங்க்ஸ் எடுத்துக்கொள்வான்.
சோசியல் ட்ரிங்க்ஸ் என்றளவில் மட்டுமே இருக்கும். அதையும் அபிக்கு தெரியாமல் பார்த்து கொண்டான். ஆனால் கவி முதல் முறை குடித்த அன்றே அதை கண்டு கொண்ட அபி மறைமுகமாக அவன் குடிப்பதை தடுத்திருந்தான்.
அபியின் எந்த பேச்சையும் மீறாதவன் இதையும் மீறியதில்லை இன்று வரை.
ஆனால், கவி இங்கு வந்ததிலிருந்தே ஆளாளுக்கு ஒரு கோப்பையினை கையில் வைத்துக்கொண்டு வெறுப்பேற்ற, அவனால் தனது கட்டுக்குள் இருக்க முடியவில்லை.
அபி அளவிற்கு அவன் சாமியார் இல்லையே. தவம் போல் கண்மூடி அமர்ந்திருக்க, அபியை எப்படியும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் அவன் குடித்தது, ஆனால் கோபம் கொண்டு தன்னை தவிர்த்து தனியாக சென்று அமர்வான் என கவி சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஐந்து நிமிடங்கள் கடந்திருக்க..
அபியின் பாரமுகம் என்னவோ செய்ய, அவனிடம் செல்ல எழுந்த கவியை சர்மாவின் பேச்சு தடுத்தது.
தன்னிடம் உரையாடிக் கொண்டிருப்பவரை தவிர்த்து செல்ல அவனால் முடியவில்லை.
பார்ட்டியிலிருப்போர் அனைவரது பார்வையும் சின்மயின் மீது நிலைத்திருக்க அவளது பார்வையோ அபியின் மீதே இருந்தது.
ஒருவித மயக்கும் பார்வையில் இருந்தவள் தனிமையை எதிர் பார்த்து காத்திருந்தாள்.
அபி தனியாக சென்று அமர்ந்ததும் சந்தர்பத்திற்காக காத்திருந்தவள், அதுவரை மிடறாக விழுங்கி கொண்டிருந்த விஸ்கியை ஒரே விழுங்கில் வாயில் ஊற்றிக்கொண்டு அபியை நோக்கி சென்றாள்.
போதையில் தள்ளாட நடந்து சென்று அபியை ஒட்டி உரசி நெருங்கி அமர்ந்தாள். அபியின் முகத்தருகே தனது முகத்தை கொண்டு சென்றவள் “டார்லிங்” என அழைத்திருந்தாள்.
சின்மயின் பார்வையையும் எண்ண ஓட்டத்தையும் அறிந்திருந்த அபி அவளுக்கு இன்று புரிய வைத்துவிட வேண்டுமென அமைதியாகவே இருந்தான். இவர்களை கவனித்த கவி ‘என் மேல் இருக்கும் அவனது கோபத்துக்கு இவ பலியாகிடுவா போலிருக்கே’ என புலம்பினான்,
ஆனால் சர்மாவிடமிருந்து தப்பும் வழி தான் அவனுக்கு தெரியவில்லை.
‘இன்னைக்கு உனக்கு அபி கையால் கச்சேரி தான். அந்த சின்ன புள்ளைய காப்பாத்து அய்யனாரே!’ மனதோடு வேண்டிக்கொண்டான்.
சின்மயின் குழறலான டார்லிங் என்ற அழைப்பு அபிக்கு உள்ளுக்குள் திராவகத்தை ஊற்றியதை போல் காந்தலாக இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாது அமைதியாக அவளை திரும்பி பார்த்தான்.
அவனது அமைதியே தான் சாதித்துவிட்டதாக நினைத்தாள்.
அவனது கன்னம் பற்றி இதழ் பதிக்க உடம்பு இறுக கைகளை மடக்கி அமைதியாகவே அமர்ந்திருந்தான்.
இன்று நமக்கு நல்ல நேரம் போல நாம் நினைத்ததை முடித்திட வேண்டுமென முடிவெடுத்தவளாக அபியின் தோளில் நன்கு சாய்ந்து உடல் முழுக்க அவன் மீது சரித்து அவனது சட்டையின் முதல் பொத்தானை அவிழ்த்து அதன் வழியாக தனது கை விரல்களை அபியின் நெஞ்சில் மெல்ல கீழிறக்கினாள்.
தனது பொறுமையை இழுத்து பிடித்த அபி சடாரென எழுந்தான். அவன் எழுந்ததில் “ஒய் டியர்” என கெஞ்சலாக சிணுங்கினாள் அவள்.
“ஷெல் வீ மூவ் பேபி…” அபியின் குரல் ஒரு வித கிறக்கத்துடன் ஒலிக்க.. அவனது கையினை இறுக பற்றியவள் “யா பேபி” என்றாள்.
அவளை அணைத்தவாறு அழைத்து சென்றவன், பார்ட்டி அறையை கடந்து ஒரு அறைக்குள் புகுந்து அவளை மெத்தையில் கிடத்தினான்.
போதையில் அவள் மோகன பார்வையை அபியின் மீது வீசி, “கம் டியர்” என கை நீட்டி அழைக்க..
தான் அணிந்திருந்த பிளேசரை கழட்டி அங்கிருந்த சோஃபாவில் தூக்கி போட்டான்.
வலது கையின் முழு கை சட்டையை இடது கையால் மடக்கி விட்டவன் ஓங்கி பளாரென சின்மயினை அடித்திருந்தான்.
இடியென இறங்கிய அவனது அடியில் அடுத்த நொடி அவளின் கன்னம் கண்றி சிவந்தது.
கண்களில் நீர் வழிந்தோட கன்னத்தில் கை வைத்து விழி அகல அவள் அபியை பார்த்திருந்தாள்.
கட்டிலினை நெருங்கி வந்த அபி ஒரு கால் தரையிலும் மற்றொரு கால் மெத்தையின் மீதும் வைத்து அவளை நோக்கி முகத்தை நேராக பார்த்து சுட்டு விரலை நீட்டி எச்சரித்தான்.
“உன் வலையில் விழுவதற்கு நான் ஒன்றும் சராசரி ஆண் இல்லை. உன்னோடு நான் நெருக்கமாக இருப்பதை போல் போட்டோ எடுத்து அதை வைத்து ப்ளாக்மயில் செய்து தொடர்ந்து நான் இயக்கும் படத்திற்கு ஹீரோயின் ஆவதற்கு தானே இந்த கொஞ்சல், வழிசல் எல்லாம். நான் அபி டி.” கண்கள் சிவந்து ருத்ர மூர்த்தியாக தனக்கு முன்பு நின்றிருந்த அபியை கண்டு சின்மயின் சர்வமும் நடுங்கியது.
“உன்னை மாதிரி சிலரால் தான் சினி பீல்ட் என்றாலே தவறான எண்ணம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த மாதிரி சுகம் தான் வேண்டுமென்றால் திருமணம் செய்து கொண்டு கண்ணியமாக வாழ வேண்டியது தானே.. இதற்கு மேல் ஏதாவது என் கிட்ட உன் வேலையை காட்டனும் நினைச்ச, பட வாய்ப்பிற்காக தானே இதெல்லாம் செஞ்ச… இனி வேறெந்த படத்திலும் நடிக்க முடியாத நிலைக்கு உன்னை தள்ளிடுவேன். எப்பவும் இதே மாதிரி பேசிட்டு இருக்க மாட்டேன்.. நான் பார்க்க தான் சாப்ட், வாலாட்டுன பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன்… ஜாக்கிரதை!” என மிரட்டி சென்றான்.
விட்டால் போதுமென அவளும் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
பிளேசரை தோளில் போட்டு சட்டையின் கீழே உதறி கொண்டு
வெளிவந்த அபியை கண்டதும் கவிக்கு புரிந்து விட்டது. உள்ளே என்ன நடந்திருக்குமென்று. சின்மயின் முகத்தினை நினைத்து பார்த்தவன் தனக்குள் சிரித்தவனாக தலை கவிழ்ந்தான்.
கவியை நெருங்கிய அபி எங்கோ பார்த்து “போகலாமா” என்றான். கடினமாக,
“மச்சி” என்றவனை கை நீட்டி தடுத்த அபி சர்மாவிடம் விடைபெற்று வெளியேறினான்.
அபியின் வேகத்திற்கு ஈடாக அவன் பின்னே சென்ற கவி காருக்கு அருகே சென்றதும் அவனது கையினை பிடித்து “சரிடா மச்சான்.. ஏதோ ஒரு சின்ன ஆசை அதான் குடிச்சிட்டேன்” என அப்பாவியாக கூற…
“இதுவே கடைசியா இருக்கட்டும். நான் உன்னிடம் பேச கூடாது நினைச்சா நீ இதை கண்டினியூவ் பண்ணிக்கோ” என்றதோடு முடித்துக்கொண்டான்.
சரியென தலையாட்டிய கவி ஒன்றும் பேசாமல் காருக்குள் ஏறி அமர்ந்தான். கவியின் முகத்தை பார்த்த அபி உள்ளுக்குள் சிரித்தான்.
கார் கிளம்பிய பிறகு தான் கவிக்கு ஒன்று புரிந்தது. நாம் தங்கியிருந்ததும் இந்த ஹோட்டலில் தானே இவன் எங்கு போறான்.
கவியின் எண்ணத்தை அறிந்தவனாக “கள்ளக்குறிச்சி போறோம்” என்றான் அபி.
உற்சாகமாகிய கவி அபியை அணைத்து கன்னத்தில் இதழ் பதிக்க கார் அபியின் கைகளில் தடுமாறியது.
“டேய்.. என்னடா.. எப்போ பாரு எனக்கு கிஸ் பண்றதே வேலையா போச்சு சீக்கிரம் வீட்டுல பேசி கனிக்கும் உனக்கும் மேரேஜ் ஏற்பாடு செய்ய வேண்டும்” அபி சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் ஒரு முத்தம் வைத்தான் கவி.
கன்னத்தை துடைத்து கொண்டே அபி கவியை முறைத்து பார்க்க, கவி வழிந்த அசடில் அபி சத்தமாக நகைத்தான்.
இவ்வாறு இருவரும் அங்கு என்ன நடக்க காத்திருக்கிறது என அறியாமல் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தனர்.
நீண்ட நாள் கழித்து குடும்பத்தில் உள்ள அனைவரையும் பார்க்க போகும் சந்தோஷம் அபியின் மனதில் சூழ்ந்திருக்க, வருணாவின் திருமணத்தை நிறுத்தி அபியுடன் அவளை சேர்த்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் கவி ஆழ்ந்திருந்தான்.
எதிர்பாராத நிகழ்வுகள் இவர்களை எதிர் நோக்கி காத்திருக்கின்றன.
துளிர்விடும்🌱.