அத்தியாயம் 13.2
காபி தம்ளருடன் வருணாவின் அறைக்குள் பேபி என அழைத்து.. உள்ளே நுழைந்தான் அபி. தான் குரல் கொடுத்தும் திரும்பாமல் மெத்தையில் அமர்ந்திருந்தவளின் பார்வை செல்லும் திசையில் தானும் பார்த்தான்.
அங்கு இருந்த சிறு மேசையில் அபி, கவி மற்றும் வருணா மூவரும் பள்ளி சீருடையில் அணைத்தவாறு இருப்பதை போல் பிரேம் செய்யப்பட்ட போட்டோ இருந்தது. அதில் தன் தோள் மீது கை போட்டுள்ள தன்னவனின் முகத்திலே அவளது பார்வை நிலைத்திருந்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த போட்டோவை பார்த்தவன் மகிழ்ச்சியுடன் அதை தனது கைகளில் எடுத்து… “நீ இன்னுமா இந்த போட்டோ வச்சிருக்க?” என கேள்வியாகக் கேட்டான்.
அவன் கண்கள் போட்டோவிலே இருந்ததால், அவளது விழி நீரை காண தவறிவிட்டான். அவளும் சடுதியில் தன் கண்ணீரை துடைத்து கொண்டாள். ஆம் என மெல்ல தலையசைத்தவள் அவனது முகத்தை நோக்கி, “உங்களுக்கு என்னை பிடிக்குமா?” என ஏக்கமாக கேட்டிருந்தாள்.
அவள் ஏன் அவ்வாறு கேட்கிறாள் என புரியாமல் அவள் முகத்தை ஏறிட்டவன், அவள் கண்களில் தெரிந்த எதிர்பார்ப்பினை நொடியில் உணர்ந்து கொண்டான்.
போட்டோவை அதனிடத்தில் வைத்து விட்டு, தன் மற்றொரு கரத்திலிருந்த காபி தம்ளரை அவளிடம் நீட்டியவன் “இதை முதலில் குடி” என்றான்.
எதற்கு என்பதை போல் பார்த்தவளை, “தலைவலி சொன்னல கொஞ்சம் பெட்டரா இருக்கும் குடி.” வேண்டாம் என மறுத்தவளை வற்புறுத்தி குடிக்க வைத்தான். வருணா குடித்து முடித்ததும் கையோடு கொண்டு வந்திருந்த மாத்திரையையும் அவளை விழுங்கச் செய்தான்.
அவனது எதிர்பார்ப்பற்ற அன்பிலும், அக்கறையிலும் அவளுக்கு கரித்துக் கொண்டு வந்தது.
தான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் இருப்பவனை நினைத்து மனதில் வேதனை எழ, கண்களில் எட்டி பார்க்கும் நீர் வெளியேறாதவாறு இமைகளை சிமிட்டி உள்ளிழுத்தவள் தரை நோக்கினாள்.
அதுவரை நின்று கொண்டிருந்தவன் அவள் அருகில் அமர்ந்து, அவளது தலையில் மெல்ல கை வைத்து சிறு ஆட்டு ஆட்டி, “எங்க வீட்டு இளவரசியை யாருக்காவது பிடிக்காமல் போகுமா.. உனக்கு ஏன் இந்த திடீர் சந்தேகம். இந்த உலகத்திலே எனக்கு ரொம்ப பிடித்த பெண் நீ தான், உனக்கு அப்புறம் தான் கலாவை கூட பிடிக்கும்” என்றவன் அவளை தோளோடு அணைத்து, “நீ சின்ன பொண்ணு டா… இப்போவே திருமணம் என்றதும் வீட்டிலிருப்போருக்கு உன்னை பிடிக்காமதான் துரத்தி விட பார்க்கிறாங்கன்னு மனசை போட்டு குழப்பிக்காத. நீ யாரோ ஒரு வீட்டுக்கா போற, இல்லையே… அப்புறம் எதுக்கு இந்த பயம்.. எதுவா இருந்தாலும் என்கிட்ட தயங்காம சொல்” என்றதோடு அவளை விடுவித்து அங்கிருந்து சென்றான்.
அவள் கேட்ட கேள்வியை வேறொரு கோணத்தில் யோசித்து பதிலளித்துவிட்டு செல்பவனை எண்ணி அவளால் கண்ணீர் மட்டுமே வடிக்க முடிந்தது.
வழக்கம்போல் கனியும், விஷ்ணுவும் சிறு பிள்ளைகளுடன் வீட்டிற்கு பின்னால் இருக்கும் கரம்பில் பல்வேறு வகையான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்தனர்.. எவ்வளவோ வற்புறுத்தியும் வருணா மறுத்து விட்டதால், குழந்தைகள் விளையாடுவதை பார்த்தாலாவது அவள் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்குமென அவளை அங்கு அழைத்து வந்திருந்தனர்.
அங்கு வந்தவள் மரத்தடியில் சிறு கல்லின் மீது அமர்ந்து விட்டாள். அவளை அதற்குமேல் தொந்தரவு செய்யாமல் அனைவரும் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது தான் வீட்டிற்கு வந்த கவி, அபியும், வேலுவும் ஒன்றாக அமர்ந்து பேசுவதை கண்டு பற்களை நரநரவென கடித்தான்.
கவியை கண்ட வைதேகி, “வாப்பா கவி, எப்படி இருக்க… வந்ததும் இந்த அத்தைய பார்க்க ஓடியாந்திருக்க வேண்டாமா?” என்க… அதற்கு அவன் சிரித்தே பதில் அளிக்காமல் மழுப்பியிருந்தான்.
அபி வேலுவுடன் அமர்ந்திருப்பது பிடிக்காமல் எழுந்து வருமாறு சைகை செய்தான். அது அபிக்கு புரியாமல் போக,
“அபி உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வா” என வெளிப்படையாக அழைத்தான். சரியென எழுந்த அபி உடன் வேலுவையும் அழைத்திருந்தான். எங்கு அபி மீது தனக்கு கோபம் வந்து விடுமோ என கவி உள்ளுக்குள் பயந்தான்.
“என்னடா…?” என அருகில் வந்து கேட்பவனை.. வேலுவின் முன்னால் கடிந்து கொள்ள முடியாமல், “அப்படி தோட்டத்திற்கு போய் பேசுவோம்” என்றான்.
மூவரும் வீட்டிற்கு பின்புறம் வந்து தோட்டத்தை தாண்டி இருந்த வரப்பு போன்ற மணற்பரப்பில் அமர்ந்தனர்.
கவி வேலு அருகில் இருப்பதால் எதுவும் பேசாமலிருக்க அபி அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களின் மீது தன் பார்வையை பதித்தான்.
வேலு வந்ததும் மரத்தடியில் அமர்ந்திருந்த வருவை தான் பார்த்தான். வருவின் மீது விரசமான பார்வையை செலுத்தியவன் அவ்வவ்போது அங்கு பாவாடையை முட்டி வரை ஏற்றி சொருகி கொண்டு நொண்டி அடித்துக்கொண்டிருந்த கனியின் மீதும் செலுத்தினான்.
மாலை நேர சூரிய கதிரில் கனியின் பால் வண்ண கால்கள் தங்க நிறம் பூசியது போல் மின்ன அதிலிருந்து அவனது பார்வையை அவனால் திருப்ப முடியவில்லை. முள் குத்தும் பார்வையை உணர்ந்து திரும்பி பார்த்தவள் வேலுவை கண்டதும் வாய்க்குள் அவனை திட்டியபடி, பாவாடையை இறக்கிவிட்டு விஷ்ணுவிடம், “நீங்க பந்து வைத்து விளையாடுங்க. என்னால இதற்கு மேல் இந்த ஆட்டத்தை விளையாட முடியாது” என கூறிவிட்டு வருவுடன் சென்று அமர்ந்தாள்.
அவனது பார்வை இரு பெண்கள் மீதும் ரசனையுடன் மேய்வதை கண்டு கொண்ட கவி, அபி முன்பு எதுவும் அவனை செய்ய முடியாமல் தவித்தான். வேலு நம் வீட்டு பையன் என்பதால் அபி எப்போதும் அவனை தவறாக நினைத்து பார்த்தது இல்லை. அது அவனுக்கு அபியிடம் வசதியாகிப் போனது.
ஒரு சிறுவன் தூக்கி போட்ட பந்து அங்கு சிறு தொலைவிலிருந்த கிணற்றுக்கு அருகில் சென்று விழவும் அதனை எடுக்கச் சென்ற மற்றொரு சிறுவன் கால் இடறி கிணற்றின் உள்ளே விழுந்தான். அதனை கண்டதும் மூன்று ஆண்களும் விரைந்து செல்வதற்குள் கிணற்றிற்கு அருகிலிருந்த வருணா உள்ளே குதித்திருந்தாள்.
வருணாவிற்கு நன்கு நீச்சல் தெரியும் என்பதால், மற்ற அனைவரும் ஆழ்ந்து மூச்சினை வெளியிட்டு தங்களை சமன்படுத்திக்கொண்டு கிணற்றின் உள்ளே எட்டி பார்த்திருந்தனர்.
வருணா மிகவும் தைரியமான பெண்.. அவள் எப்போதும் அபியுடனேயே சிறு வயதில் இருந்ததால் அவன் செய்யும் அனைத்தையும் தானும் செய்வாள். அதனால் அவன் கற்றுக்கொண்ட அனைத்து விஷியங்களையும் அவளும் கற்றுக்கொண்டாள். நன்றாக படிப்பதிலிருந்து, சிலம்பம், நீச்சல் போன்றவை வரை.
கிணற்றில் குதித்து தவறி விழுந்த குழந்தையை தேடி கண்டு பிடித்தவள், அக்குழந்தை கொஞ்சம் கொழுகொழுவென வெயிட்டாக இருந்ததால் மேலே இழுக்க முடியாமல் தடுமாறினாள். அதனை மேலிருந்து புரிந்து கொண்ட அபி அடுத்த நொடி உள்ளே குதித்திருந்தான்.
அபி, கவி, வருணா மூவருக்கும் ஒன்றாக தான் ரங்கநாதன் நீச்சல் கற்றுக்கொடுத்தார்.
அப்போதெல்லாம் கிராமங்களில் நன்கு முற்றி காய்ந்த சுரை குடுக்கையை இடுப்பில் கட்டிக்கொண்டு நீச்சல் கற்றுக்கொள்வர். குடுக்கை உள்ளே காற்று நிரம்பியிருப்பதால் தண்ணீரில் நன்கு மிதக்கும். அதனை கட்டிக்கொண்டு நீரில் குதிப்பதால் நாமும் அதனுடன் சேர்ந்து தண்ணீருக்குள் மூழ்காமல் மிதப்போம். அவ்வாறு கவியின் இடுப்பில் குடுக்கையை கட்டி ரங்கநாதன் தண்ணீரில் அவனை தூக்கி போட்டதும், முதல்முறை என்பதால் பயத்தில் அலறி கத்தியவன் அதன் பிறகு நீச்சல் என்பதையே தள்ளி வைத்து விட்டான்.
தனக்கு நீச்சல் தெரியாததால் மேலே பதற்றத்துடன் கிணற்றுக்குள் கவி பார்த்துக்கொண்டிருந்தான். கனி, விஷ்ணு மற்றும் மற்ற சிறுவர்களுக்கும் அதே பதற்றம் காணப்பட்டது ஒருவனைத் தவிர. அந்த வேளையிலும் தங்கை உறவு என்பதை மறந்தவனாய் வேலு கனியை வட்டமிட்டான்.
உள்ளே குதித்த அபி முதலில் சிறுவனை தண்ணீரிலிருந்து மேலே இழுத்தான். தண்ணீருக்கு மேலே வந்த சிறுவன் வாயை திறந்து நன்கு மூச்சினை உள்ளிழுப்பதை பார்த்த பிறகே வருணா தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.
வருணாவை படிகளில் ஏற்றியவன் அவள் பின்னோடு சிறுவனையும் தூக்கிக்கொண்டு மேலேறினான்.
மேலே வந்ததும் மூவரையும் பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர். கவி அபியின் தோளினை அணைத்து விடுவிக்க, கனிக்கு அருகில் சென்று நின்றுருந்த வருவிடம் “பேபி ஆர் யூ ஓகே” என்றான் அபி.
ம்.. என பதிலளித்தவள்.. ஈரத்தினால் நடுங்கினாள். கனியை பார்த்து அவளை அழைத்து செல்லுமாறு கூறிய அபி அப்போது தான் கவனித்தான் வேலுவின் பார்வையை.
ஈரத்தினால் ஆடைகள் உடலோடு ஒட்டியிருக்க பெண்மையின் அழகினை வெட்கம் இல்லாமல் பார்த்திருந்தான்.
வேலுவின் பார்வையை காதல் பார்வையென நினைத்த அபி சின்ன சிரிப்புடன் விஷ்ணுவுடன் முன்னோக்கி நகர்ந்தான்.
அதனை பார்த்த கவிக்கு அப்படியே அந்த கிணற்றிலே விழுந்து விடலாம் போலிருந்தது. அவனுடைய கழுகு பார்வைக்கும் காதல் பார்வைக்கும் வித்தியாசம் தெரியாதவன் எப்படி ஒரு பெண்ணை லவ் பண்ணிட்டு இருக்கான். அபியை நினைத்து கவிக்கு வருத்தமாக இருந்தது.
அபிக்கு வேலுவின் மீது சந்தேகம் இருந்தால் தானே அவனது தவறுகள் அபியின் கண்களுக்கு தெரியும். அவன் தான் வேலுவை நல்லவனாகவே பார்க்கின்றானே.
‘பார்க்கும் யாவும் நம் கண்ணோட்டத்தை பொறுத்தே அமையும்.’ இதை உனக்கு நான் சொல்ல வேண்டிய அவிசியமில்லை கவி என்றது அவனது மனசாட்சி.
வேலுவை நெருங்கி தொண்டையை செருமிய கவி… “அங்கு பார்த்தது போதும்.. இதெல்லாம் இந்த திருமணம் நடந்தா வைத்துக்கொள்ளலாம்.”
நடந்தால் என்பதை மிக மிக அழுத்தமாக கூறினான். தன்னை முறைக்கும் வேலுவை கண்டு கொள்ளாது அவ்விடமிட்டு வீட்டிற்கு சென்றான்.
கவியின் மறைமுக பேச்சால் வருணாவை பழிவாங்கும் வெறி அவனிற்குள் தீவிரமாகியது.
“பந்தை அங்கே விட்டுட்டு வந்துட்டேன். எடுத்து வர்றேன்” எனக்கூறி மீண்டும் அங்கு வந்த விஷ்ணு, வேலுவை பார்த்து, “என் அக்காவை தப்பா பார்த்த கண்ணை நோண்டிடுவேன்…” என கூறிச்சென்றான். அதில் வேலுவின் ஆத்திரம் இன்னும் வலுவடைந்தது.
வெங்கடாச்சலம் வேலையாக இருந்ததால் அன்றே அபி கூறியதை போல் ரங்கநாதனை அனுப்பி ஊர் மக்களிடம் கையெழுத்து வாங்கி கோர்ட்டில் ஸ்டே ஆர்டர் கேட்டு கேஸ் பைல் செய்து விட்டார் ராஜகோபாலன்.
வந்ததிலிருந்து தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் போக்கு காட்டிக்கொண்டிருக்கும் கனியை எப்படி நெருங்கி வர செய்வது எனத் தெரியாமல் தவித்தான் கவி.
கவியின் ஏக்கத்தை விஷ்ணு புரிந்து கொண்டவனாக, “அண்ணா உங்களுக்கு இப்போ என்ன வேணுமோ அது தனியா ஸ்டோர் ரூம்குள்ள இருக்கு” என அவன் மொட்டையாகக் கூறினான்.
அபி அவர்களுடன் அறையிலிருந்ததால் மறைமுகமாக கனி அங்கிருப்பதை தெரிவித்தான். ஆனால் கவிக்கு தான் விஷ்ணுவின் மறைமுக பேச்சு புரியாமல் போனது.
“என்னடா சொல்ற… இப்போ எனக்கு என்ன வேணும்?” என யோசித்தவனாய் கவி கேட்க, விஷ்ணு வெளிப்படையாக தலையில் தட்டிக்கொண்டான்.
“பழம்…. நீயப்பா… ஞானப்பழம்…. நீயப்பா…
எப்பா… பழம்… பழம்… பழம்.. நீயப்பா” என பாட்டு பாடி புரிய வைத்திட நினைத்தவன் பழம் என்ற வார்த்தையை கொலை செய்தான்.
இந்தமுறை சரியாக புரிந்துகொண்ட கவி, “தாங்க்ஸ் டா குட்டி” என அவன் கன்னம் கிள்ளி ஓடினான் ஸ்டோர் ரூமை தேடி.
கவி நகர்ந்ததும் அதுவரை புத்தகம் படிப்பதை போல் பாவனை செய்த அபி அடக்கமாட்டாமல் சிரித்தான். அவனது சிரிப்பை ஆச்சரியமாகப் பார்த்த விஷ்ணு, “ஏன் அத்தான் சிரிக்கிறீங்க?” எனக் கேட்டான்.
அதற்கு அபி… “ஆனாலும் உன் அண்ணன் இவ்வளவு பெரிய அறிவாளியா இருப்பான்னு நான் நினைக்கலை டா.. உன்னையும் சும்மா சொல்ல கூடாது.. பாட்டு சூப்பர்” எனக் கூறி மீண்டும் சிரிக்க, விஷ்ணு அசடு வழிந்தான்.
“தாத்தா கிட்ட போட்டு கொடுத்துடாதீங்க அத்தான்” என்ற விஷ்ணுவை.. அருகிலிருந்த தலையணையை எடுத்து மொத்தினான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னிடம் பழைய சசியாக மாறி விளையாடுபவனை அந்த இளங்குருத்து அன்புடன் பார்த்தது.
அவனது பார்வையில் என்ன என அபி தனது புருவம் உயர்த்தி கேட்க.. விஷ்ணு கண்களில் மெல்லிய நீர்ப்படலத்துடன், “நீங்க இப்படி இருந்தா தான் அத்தான் நல்ல இருக்கு” என்று அவனது சிரிப்பினை தன் விரலை விரித்து சுட்டிக் காட்டினான்.
அதில் அபியின் மனம் நெகிழ விஷ்ணுவை அன்புடன் அணைத்துக்கொண்டான்.
அபியின் அணைப்பிலிருந்த விஷ்ணு, “நீங்களே அக்காவ கல்யாணம் பண்ணீக்கலாம்ல அத்தான்.. எனக்கு அந்த வேலுவை கொஞ்சம் கூட பிடிக்கல.. அவன் அக்காவை பார்க்கும் பார்வையே சரியில்லை” என்றான்.
விஷ்ணு முதலில் கேட்டதில் அதிர்ந்து தன்னிடமிருந்து அவனை விலக்கியவன், அடுத்து அவன் கூறியதில் நிம்மதியடைந்தான். அவனுக்கு வேலுவை பிடிக்காததால் தான் தன்னிடம் அப்படி கேட்டிருக்கிறான் என்று புரிந்துக்கொண்டான்.
நீ எப்போ எதை சரியாக புரிந்துகொள்ள போகின்றாய் அபி என விதி அவனிடம் கேள்வி கேட்டது. அச்சோ பாவம் விதியின் குரல் அவன் செவிகளை தீண்டவேயில்லை.
இன்று மாலை தான் கவனித்த வேலுவின் பார்வையை தான் விஷ்ணு சிறு வயது என்பதால் தவறாக புரிந்துக்கொண்டான் என நினைத்து அவனிடம் சில நேரம் மற்ற விஷியங்களைப்பற்றி பேசி திசை திருப்பி தூங்க வைத்திருந்தான்.
திரைச்சீலையை விலக்கி இரவு நேர நீண்ட இருள் வானை வெறித்தவன் தன் மனமும் இப்படி தான் இருண்டு கிடக்கிறது என வருத்தமாக எண்ணினான். ஏதோ நினைவுகள் சூழ ஆரம்பிக்க அதனை தடுத்தவனாக ஜன்னலை மூடிவிட்டு அவனது அறையிலே உறங்கிவிட்ட விஷ்ணுவின் அருகில் படுத்துக்கொண்டான்.
மூடிய அவனது விழிகளில் மாலை நடந்த நிகழ்வும், அதன் பின் தொடர்ந்த வேலுவின் பார்வையும் ஞாபகத்திற்கு வர… விஷ்ணுவின் அவன் அக்காவை பார்க்கும் பார்வையே சரியில்லை என சொல்லியது காதில் எதிரொலிக்க அப்போ தவறாக தெரியாதது இப்போ தவறாக தெரிந்தது.
கவி தன்னை அழைப்பதற்கு முன்பு வேலு தன்னிடம் பேசியது வேறு ஞாபகம் வந்தது.
வருணாவிற்கு காபி கொடுத்து பேசிவிட்டு கீழே வந்தவனை வேலு அழைத்து திருமணத்தைப்பற்றி பேசுவதை போல் ஆரம்பித்து, நடுவில்… “நீங்க இனி வருணாவை பேபி சொல்லாதீங்க எனக்கு அது பிடிக்கவில்லை” என நேராக கூறியிருந்தான். அபிக்கு அது வருத்தமாக இருந்தாலும் அவளை கல்யாணம் செய்துகொள்ளும் உரிமை உணர்வில் சொல்கிறான் என்று அதற்கு சரியென்றான்.
ஆனால்… கிணற்றிலிருந்து வெளியேறியதும் ஆர் யூ ஓகே பேபி என தன்னையும் அறியாமல் பழக்கத்தில் பேபி என சொல்லிவிட, அதற்கு வேலு முறைத்ததை கண்டும் காணாதது போல் வந்ததும் நினைவில் வந்து ஏதோ சரியில்லையென அபியின் உள்மனதை எச்சரித்தது. ஆனால் என்னவென்று அவனுக்கு சரியாக விளங்கவில்லை.
கனியை பார்க்க சென்ற கவி வேறு இன்னும் வரவில்லை… அவனிடம் கூறினாலாவது ஏதாவது தெரிய வருமா என நினைத்தவன் கவிக்காக உறங்காமல் காத்திருந்தான்.
நள்ளிரவை தாண்டி அறைக்குள் நுழைந்த கவியை பார்த்த அபி திகைத்தான். கவியின் கோபத்தில் சிவந்த விழிகளும் முஷ்டி இறுகிய கைகளும், வாடிய தோற்றமும் அபிக்கு புதிது.
தன் காதலியை காண மனம் நிறைந்த காதலுடன் சென்றவன் வாடிய சருகாய் வந்திருப்பதற்கான காரணம் தெரியாமல் முழித்தான்.
ஆறுதல் தேடும் சிறு பிள்ளை போல் “டேய் மாமா” என்ற கதறலுடன் தன்னை நாடிய கவியை தாய் போல் மடி தாங்கினான். கவியின் இந்த அழுகையும் அபிக்கு புதிது.