சருகு 🍂 4
சோகம் நிறைந்த அவளது கண் முன்னே இன்பத்தின் பாதையாய் கவியின் முகம் தோன்றியது.
அதனை நினைத்து வருந்தியவள் தன் கண்களை துடைத்துக் கொண்டே திரும்ப, நெஞ்சிக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு தன்னையே பார்த்திருக்கும் வருணாவை கண்டு ஒரு நொடி திகைத்தாள்.
திகைப்பை வெளிக்காட்டாது வரவழைக்கப்பட்ட சிரிப்புடன் “நீ எப்போ டி வந்த” எனக் கேட்டாள் கனி.
தன்னிடம் கேள்வி கேட்டவளை ஆழ்ந்து பார்த்த வருணா… “நீ எப்போ எல்லாத்தையும் மறக்க போற” என்றாள்.
”தெரியலை…” எனக் கூறிக்கொண்டே வருணாவைக் கட்டிக்கொண்ட கனி அவளின் தோளில் முகம் புதைத்து அழுதாள்.
கனியின் முதுகை ஆதரவாய் தட்டிக்கொடுத்த வருணா.. “எல்லாம் சரி ஆகிடும்.. அனைத்தையும் நீ மறக்கும் போது”.
வருணாவின் வார்த்தையில் தன் தலையை வெடுக்கென நிமிர்த்திய கனி.. அவளின் கூறிய பார்வையில் சரியென தலையசைத்தாள். அதில் வரு நிம்மதியடைந்தாலும் இதற்கு விரைவில் ஒரு தீர்வு காண வேண்டுமென முடிவு செய்தாள்.
இதற்கு மேல் இங்கிருந்தால் வருணாவிடம் இன்னொரு விஷயத்திலும் மாட்டிக்கொள்ள நேரிடுமென நகர்ந்து சென்ற கனியை தடையிட்டது அவளின் குரல்.
“சீக்கிரம் கவி அண்ணாவிடம் உன் மனசை சொல்லிடு…” என்று சீரியஸாக கூறியவள் “அண்ணா பாவம் அண்ணி ரொம்ப நாள் காக்க வச்சிடாத” என்று கேலியாக கூறினாள்.
அதில் கனியின் முகம் வெட்கத்தில் சிவந்தாலும் உள்ளுக்குள் “இது சரி வருமா?.. நடக்குமா??.. இந்த காதல் சரியா???…” இப்படி பல கேள்விகள் ஊர்வலம் சென்றன.
தனது மாமன் மகனை விரும்புவதிலோ.. அல்லது திருமணம் செய்வதிலோ அவளுக்கு எந்த ஒரு தடையும் இருந்துவிட போவதில்லை ஆனால் மிகப்பெரிய தடையே இந்த உறவுமுறை தான்.
“என்ன செய்வது.. எப்படி தனது மனதை கவியிடம் எடுத்து சொல்லுவது” என்று அவள் மனதை குழப்பம் சூழ்ந்தது.
கனியின் முகத்தில் வந்து போன கலவையான உணர்வுகளை கவனித்த வருணா அவளை யோசிக்க விட்டால் ஆபத்து என உணர்ந்து கனியின் கையை பிடித்து அங்கிருந்து இழுத்துக்கொண்டு கீழே வீட்டிற்குள் சென்றாள்.
மாடிப்படிகளிலிருந்து கிழிறங்கும் போது கூடத்தில் அமர்ந்து அன்றைய வாரத்தின் தொழில் கணக்குகளை சரி பார்த்துக்கொண்டிருந்த ராஜகோபலனைக் கண்டதும், ஞாபகம் வர பெற்றவளாய் அவரிடம் சென்றாள். அப்போதும் கனியின் கைகளை அவள் தனது பிடியிலிருந்து விடவில்லை.
இருவரையும் ஒன்றாக பார்த்த கோபாலன் வருணாவின் பிடிக்குள் இருக்கும் கனியின் கையை பார்த்து எதையோ கண்டு கொண்டவராய் இருவரையும் தனது இருபுறமும் அமர்த்திக் கொண்டார்.
கனியின் தலையில் கை வைத்து பரிவுடன் வருடியவர் “உனக்கு எந்த நிலையிலும் ஆதரவா நம்ம குடும்பம் இருக்கும்.. எதற்கும் நீ அழுதாய் என்பதை நான் என் காதுகளினால் கூட கேட்க கூடாது” என்றார், அவளது சிவந்த விழிகளில் தன் பார்வை பதித்து.
அவரது “நம் குடும்பம்” என்ற வார்த்தை கனியினுள் இன்பமாய் இறங்கியது. அந்த நேரத்தில் அபியின் நினைவு வந்து, அவளது மனம் தன்னுடைய அண்ணனுக்கு கோடி நன்றிகள் உரைத்தது.
தனது தாத்தாவின் பேச்சில் மகிழ்ந்த வருணா அவரை கட்டிக்கொண்டாள். அப்போது அங்கு வந்த வருணாவின் அன்னை லலிதா அவளின் காதை திருகி “ஏழு கழுதை வயசாகுது இன்னும் என்னடி சின்ன புள்ள மாதிரி” எனக் கடிந்தார்.
அதில் சிணுங்கிய வருணா… “உங்க அப்பாவை என்னை மாதிரி உன்னால் கட்டிக்க முடியலங்கிற பொறாமை லல்ஸ்” உனக்கு என்றவள் பெரியவரின் முறுக்கு மீசையை பிடித்து இழுத்து விட்டு ஓடினாள்.
ஓடும் போது “சசி அத்தான் உங்களை போன் பண்ண சொன்னாங்க” என்று கத்திக்கொண்டே ஓடிவிட்டாள்.
அவளது செயலில் கோபாலன் அட்டகாசமாய் சிரிக்க “என்னப்பா நீங்களும் அவள் செய்யும் செயல்கள் சரி என்பதை போல் நடந்துக்கிறீங்க” எனக் கேட்டார் லலிதா.
“சசியும், கவியும் இல்லாத இந்த வீட்டில் அவளால் தான் சிரிப்பு சத்தமே கேட்குது, அவள் இப்படியே இருந்துவிட்டு போகட்டுமே” என தன் மகளிடம் சொல்லிய கோபாலன் தன் பேரனிடம் பேசுவதற்கு தொலைபேசியை நோக்கி சென்றார்.
லலிதா கனியை அழைத்துக்கொண்டு சென்று விட்டார்.
வருணாவின் சசி அத்தான் என்றழைப்பில்.. சசி என்பது மட்டுமே அவனது கருத்தில் பதிந்தது. அவனது மனதில் போராடிக்கொண்டிருக்கும் நினைவுகள் மேலெழும்பின.
அதனாலே அவசரமாக அழைப்பைத் துண்டித்து விட்டு தனது அறைக்குள் சென்று அமர்ந்துவிட்டான்.
அவனது காதுக்கு அருகில் “சசி” என்ற விளிப்பு தென்றலாய் வருடியது. வலியை மறந்து நினைவுகளில் சுகமாய் கரைந்து சென்றான். வெளிவரும் எண்ணம் சிறிதும் அவனுக்கோ அவன் மனத்திற்கோ இல்லை.
அவனை நடப்பிற்கு கொண்டு வந்தது மொபைல் ஒலிக்கும் சத்தம்.
ஆன் செய்து தனது காதில் வைத்தவன் ராஜகோபலனின் குரலில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டான்.
“என்னப்பா போன் பண்ண சொல்லியிருந்தன்னு வருணா சொன்னா… ஏதும் பிரச்னையாப்பா?” அவரது குரலில் கலக்கம் அப்பட்டமாக தெரிந்தது.
அவர் அப்படி கேட்பதற்கும் காரணம் இருக்கிறது. இந்த இரண்டு வருடங்களில் அவனாக தனது வீட்டு ஆளுங்களை அழைத்து பேசியதில்லை. அப்படிப்பட்டவன் இன்று பேசுவதற்காக கூப்பிட சொல்லியிருக்கிறான் என்றால் அவர் பிரச்சனையா எனக்கேட்டதில் தவறில்லை.
தாத்தாவின் கவலை புரிந்தாலும் அதனை ஒதுக்கியவன் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
தான் யோசித்ததை “இது என் முடிவு” எனும் விதமாக அவரிடம் தெரிவித்தான். தனது எந்தவொரு முடிவுக்கும் அவரிடமோ அல்லது வீட்டு உறுப்பினர்களிடமோ சிறு எதிர்ப்போ, மறுப்போ இருக்காது எனத் தெரிந்தும் எதையும் அவர்களிடம் சொல்லாமல் செய்ய மாட்டான்.
ராஜகோபலனிடம் இருக்கும் அதே கம்பீரம், ஆளுமை, உதவும் குணம் எல்லாம் அபியிடம் இருந்தது. அனைத்திற்கும் மேலாக அவரது மறுபதிப்பாக தான் அபியை நினைப்பர். இதில் பெரியவருக்கு கர்வம் கலந்த பெருமை. அதனாலே அபியின் எண்ணத்தை கூட நிறைவேற்ற வேண்டும் என நினைப்பார். அவனது எந்த செயலுக்கும் தடை விதிக்க மாட்டார்.
பள்ளி படிப்பை முடித்து “விஸ்காம் படிக்க வேண்டும்” என்ற அவனது விருப்பத்திற்குக்கூட, மீடியா… திரைத்துறை… பிரபலங்களின் வெளிச்சம்… அவர்களது வாழ்க்கை முறையென பலவற்றை நினைத்து பயந்தாலும் மறுப்பு தெரிவிக்காது, சென்னையின் பிரபலமான கல்லூரியில் அபியை சேர்த்தார்.
ஹாஸ்டலில் தங்க வைக்க விருப்பமில்லாது இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு பிளாட்டினை வாங்கி அபியின் உதவிக்காக ராமுவையும் உடன் தங்க வைத்தார். அபியை விட கவி ஒரு வருடம் இளையவன். அபி சென்னை சென்ற அடுத்த வருடம் கவியும் அடம் பிடித்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான்.
கவி குடும்பத் தொழில் பல இருந்தும் பணக்காரனாக இருந்ததாலும் தான் படித்து ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியவே ஆசைப்பட்டான். ஆனால் அதனை மறந்து இன்று அபிக்காக அவனுடனே இருக்கின்றான்.
அபியின் நிலை தெரிந்து ஒன்றும் செய்ய முடியாத நிலையிலிருக்கும் கவி அபிக்காக செய்யக்கூடியது அவனுக்கு துணையாக அவனுடன் இருப்பது தான்.
அபி சொல்லியதை கேட்ட கோபாலன் “உனக்கு சரியென தோன்றுவதை செய்ப்பா…” என்றதோடு முடித்துக்கொண்டார்.
அவரிடம் பேசிவிட்டு வைத்ததும் அபி சர்மாவிற்கு கால் செய்தான்.
சர்மாவிடமும் ஒப்புதல் வாங்கியவன் “எந்தவொரு தடையுமில்லாமல் இந்த படம் வெற்றியடையும்” என உறுதியளித்தான்.
மாலை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் “அபியின் படத்தின் படபிடிப்பு நின்றுவிட்டதாகவும், அதற்கு காரணம் இயக்குநர் மற்றும் ஹீரோவுடனான மோதல்” என செய்திகள் வெளிவந்தன.
அதனை சிறிதும் அபி கண்டுகொள்ளவில்லை.
கவி தான் புலம்பி தள்ளினான்.
“அப்போவே சொன்னேன்… கொஞ்சம் பொறுமையா இருடா.. அரவிந்த் கிட்ட பேசி பிரச்சனை பெருசாகம பார்த்துக்கலாம் என்றேன்… என் பேச்சை கேட்டால் தானே.. தனக்கு என்ன தோணுதோ அதை செய்ய வேண்டியது.. அடுத்து ஹீரோக்கு என்ன பண்றது ஒண்ணும் தெரியல, நாளைக்கும் ஷூட்டிங் நடக்கலனா இன்னும் என்னவெல்லாம் எழுதுவானுங்களோ.”
கவியின் புலம்பல்களை அமைதியாகக் கேட்ட அபி… அவன் முடித்து மூச்சு வாங்கவும் தனக்கு அருகில் மேசையிலிருந்த நீரை எடுத்து பருக கொடுத்தான்.
அபியை முறைத்துக் கொண்டே தண்ணீரை வாங்கிக்குடித்தவன்..
“இப்போ சந்தோஷமா” என சிறு கோபத்துடன் வினவினான்.
கவியின் கோபம் அபிக்கு சிரிப்பை தான் வரவழைத்தது.
“இத்துறையில் இதெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.” அபியின் சிரிப்பை
கொலைவெறியுடன் கவி பார்த்திருக்க, “நம் படத்திற்கு ஹீரோ கிடைச்சாச்சு” என்றான் அபி.
*************
வீட்டில் உள்ள அனைவரும் நடு கூடத்தில் அமர்ந்து இரவு உணவினை உண்டு கொண்டிருந்தனர். பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட வீடு என்பதால் நடுவில் உள்ள கூடத்தில் வெயில், நிலவொளி, மழை என இயற்கையின் வரங்கள் வாசம் செய்ய மேலே சிமெண்ட் திரையால் மூடாமல் சல்லடை போன்ற இரும்பு கம்பிகளால் பின்னப்பட்ட வலை பதித்திருந்தனர். அதில் பல வகையான பூக்களின் கொடிகள் படர விடப்பட்டிருந்தனர். இரவின் நிலவொளியில் பார்ப்பதற்கு அவ்வளவு ரம்மியமாக இருந்தது. கூடத்தை சுற்றி அறைகள் அமைக்கப்பட்டிருந்தது. வலது புறம் சமையலறை, உணவுகூடம் மற்றும் பூஜையறை இடது புறம் நான்கு படுக்கையறைகள் அதில் ஒரு அறையில் ராஜகோபாலன் தங்கியிருக்க அடுத்திருந்த மற்ற மூன்று அறைகளிலும் அவர்களது வாரிசுகள் தங்கியிருந்தனர்.
வலதுபுறம் பூஜையறை அடுத்து மேலே செல்வதற்கு மரத்தால் படிகள் அமைக்கப்பட்டிருந்தன. முதல் தளத்தில் சிறு கூடமும் அதையடுத்து இரண்டு படுக்கையறைகளும் ஒரு ஸ்டோர் ரூமும் உள்ளன.
அவ்விரண்டு அறையில் ஒன்றில் நம் கதாநாயகிகள் இருவரும் மற்றொன்றில் விஷ்ணுவும் உள்ளனர்.
முதல் தளத்தின் இறுதியில் எதிரெதிராக இரண்டு பெரிய அறைகள் உள்ளது. அதில் ஒன்றில் அபியும் மற்றொன்றில் கவியும் இருந்தனர். அவர்கள் இங்கில்லாத காரணத்தால் இவ்விரண்டு அறைகளும் பூட்டப்பட்டுள்ளது.
மேலே மொட்டை மாடியில் சிறு அறையும் அதனை சுற்றி பல்வேறு வகையான சிறு செடிகளும் வளர்க்கப்பட்டுள்ளது. இது முழுக்க வருணாவின் கை வண்ணம். கீழே வீட்டின் பின்புறம் பெரிய தோட்டம் உள்ளது. அங்கு மல்லிகையிலே எட்டு வகையான செடிகள் உள்ளன.
புது விதமான மலர் செடிகளை வீட்டு உறுப்பினர் யார் பார்த்தாலும் வாங்கி வந்து தோட்டத்தில் நட்டு விடுவர். தோட்டத்திற்கு எதிர் புறம் மாட்டு தொழுவம். அதில் பத்து கறவை மாடுகளும், ஒரு ஜோடி காங்கேயம் காளையும், 4 ஜோடி உழவு எருதுதுகளும் வளர்க்கப்படுகிறது. கோழிகளும், ஆடுகளும் கூட அவ்வீட்டின் உறுப்பினர்களே. ஒரு கிராமத்து வீடு இயற்கை சூழலோடு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி அமைந்திருந்தது அவ்வீடு.
ஊரில் உள்ள அனைவரும் அதனை பெரிய வீடு என்று தான் விளிப்பர்.
அவ்வீட்டை போலவே அங்கிருப்பவர்களின் மனமும் பெரியது. ஊரில் உள்ள அனைவரது வீட்டிலும் நடைபெறும் நல்ல காரியங்கள் அனைத்தும் ராஜகோபாலனின் தலைமையிலே நடைபெறும். ஊர்க்காரர்களுக்கு உதவியென்றால் செய்ய தயங்காத குடும்பம். அவர்களும் ஒரு உதவியென்றால் பெரிய வீட்டை தான் முதலில் அனுகுவர்.
இரவு உணவினை சிறு பேச்சு பரிமாற்றங்களுடன் முடித்தவர்கள் தாம் தம் அறையில் சென்று முடங்கினர்.
படுக்கையில் விழுந்ததும் கனி உறங்கிவிட வருணா தனது சசி அத்தானின் நினைவுகளில் மூழ்கினாள்.
மாலை தன்னிடம் நன்றாக பேசியவன் திடீரென சோகத்துடன் தடுமாறியதை கண்டு கொண்டவளாக அதை பற்றி சிந்தித்தாள். அப்போது தான் ஒரு நாள் கவியும் அபியும் பேசிக்கொண்டது நினைவுக்கு வர அதில் ஏதாவது பிரச்சனை வந்திருக்குமோ என்று எண்ணியவளின் மனதில் இனம் புரியாத சந்தோஷம் பரவுவதை உணர்ந்தாள்.
அந்த விஷயம் தெரிந்த போது அவள் மனம் அன்று சோகத்தை தத்து எடுத்ததையும் இன்று அதில் பிரச்சனை என்பதில் மகிழ்வதும் ஏனென்று அவளுக்கு புரியவில்லை.
புரியாத மனநிலையுடன் உறங்கியும் போனாள்.
******************
“ஹீரோ கிடைச்சாச்சு” என்று கூறிய அபி அது யாரென்ற கேள்விக்கு மட்டும் விடையளிக்கவில்லை. ஒரு மணி நேரமாக அது யாராக இருக்குமென கவியும் அவனிடம் கேட்டு பார்த்துவிட்டு, “எப்படியும் நாளை காலை தெரிந்துவிடும்” என முணுமுணுத்தவனாய் உறங்குவதற்கு தயாராகினான்.
சிறு புன்னகையுடன் அபியும் கவிக்கு அருகில் படுத்துக்கொண்டான்.
வழக்கம்போல் கவி உறங்கும்வரை அமைதியாக படுத்திருந்தவன் அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதும் தான் மறைத்து வைத்திருக்கும் குறிப்பேட்டை எடுத்து சில பக்கங்களை புரட்டி, மனதில் எழுந்த நினைவுகளுடன் உறங்கச்சென்றான்.
அவனது வலிக்கு காரணமான குறிப்பேடே மருந்தாகவும் உள்ளது.
அதனை எடுக்கும் போதெல்லாம் தன் வலி அதிகமாவது தெரிந்தாலும் ஒரு நாளும் எடுத்து பார்க்க தவறியதில்லை. அவுட் டோர் ஷூட்டிங் போதும் எடுத்துச் செல்ல மறந்தது இல்லை.
**********
மறுநாள் பொழுது அழகாக புலர்ந்தது.
படுக்கையிலிருந்து எழுந்த வருணா குளித்து முடித்து தோட்டத்திற்கு சென்றாள். செடிகளுக்கு நீர் பாய்வதற்கு வழி செய்தவள் தொழுவத்தினுள் நுழைந்தாள்.
பெரிய கூடைக்குள் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை திறந்து விட்டவள், ஆடுகளை நீர் அருந்துவதற்கு அவிழ்த்து விட்டாள். மாடுகளுக்கு வைக்கோலை எடுத்து போட்டு.. கன்றுகள் பசியாரா கட்டவிழ்த்தாள்.
“ம்மாஆஆஆ…” எனக் கத்திக்கொண்டு ஓடிய கன்றுகள் அம்மா பசுவினை அடையாளம் கண்டறிந்து மடி முட்டி பால் அருந்தின. அக்காட்சியினை காணும் போது ஒருவித சிலிர்ப்பு ஓடி அடங்கியது வருணாவின் உடலில்.
மலர்ந்த முகத்துடன் திரும்பியவள் “சுப்பையா” எனக் குரல் கொடுத்தாள்.
மாட்டிற்கு தவிடு மற்றும் புண்ணாக்கினை நீரில் கரைத்துக்கொண்டிருந்தவன் தலையில் கட்டியிருந்த முண்டாசினை அவிழ்த்துக்கொண்டே ஓடி வந்தான்.
“சொல்லு பாப்பா” என்றவரை “நீராகரம் குடித்து விட்டு… கன்றுகள் எல்லாம் பசியாறிய பின்னர் பால் கறங்க” என்றவள் அவர் சரியென்றதும் உள்ளே சென்றுவிட்டாள்.
சுப்பையா அவர்கள் வீட்டில் உள்ள கால்நடைகளை பராமரிப்பவர்.
வீட்டில் உள்ள சிறு வேலைகளையும் செய்வார். அவரது மனைவி லட்சுமி சமையல் வேலை செய்பவர்.
தொழுவத்திற்கு அருகிலுள்ள சிறு ஓட்டு வீட்டில் தங்கியுள்ளனர்.
அவர்கள் வசிப்பதும் கோபாலன் அமைத்துக்கொடுத்த இல்லம் தான். சுப்பையா மற்றும் லட்சுமி இவ்வீட்டின் விசுவாசிகள்.
தூக்கத்திலிருந்து விழித்த கனி காலை பணிகளை முடித்துவிட்டு வாசலில் கோலமிட்டு நடுவில் பிள்ளையார் பிடித்து அதில் மஞ்சள் வர்ண பூசணி பூவை சொருகினாள்.
தான் வரைந்த கோலத்தை ரசித்து பார்த்திருந்தவளை பின்னாலிருந்து முடியை பிடித்திழுத்தான் விஷ்ணு.
வருணாவின் தம்பி. அவனை அடிக்க துரத்திக் கொண்டு ஓடினாள் கனி.
விஷ்ணு வீட்டுக்குள் நுழைந்து ஓட அவனைத் துரத்தி ஓடிய கனி அப்போது தான் பின்கட்டிலிருந்து உள்ளே நுழைந்த வருவின் மீது மோதி தடுமாறினாள்.
தடுமாறிய கனி கீழே விழாதவாறு தாங்கி பிடித்தாள் வருணா.
அக்காட்சியை கண்ட விஷ்ணு “என்ன கொடுமை ஆண்டவா” இது என புலம்பி.. “முதலில் லவ்வர்ஸ் மாதிரி போஸ் கொடுத்தது போதும் கொஞ்சம் லவ் மோடிலிருந்து வெளிய வாங்க” என்று கத்தினான்.
அவனின் குரல் காதில் விழாததை போன்று இருவரும் ஒருவரது பார்வையை மற்றொருவர் தாங்கி நிற்க தன் தலையிலே தட்டிக்கொண்டு சென்றுவிட்டான்.
விஷ்ணு மாடிப்படிகளில் ஏறியதும் கனியும் வருவும் அடக்கமாட்டாமல் சிரித்தனர். அப்போது அங்கு வந்த கலாவதி கனியிடம் நீராகரம் கொடுத்து சுப்பையாவிடம் தருமாறு கூறினார்.
கலாவுடன் வந்த லலிதாவோ “காலையிலே பொம்பளை பிள்ளைகளுக்கு அப்படியென்ன சத்தம் வரும் அளவுக்கு சிரிப்பு” என்று கடிந்தார். கனி ஒருவாறு எஸ்கேப் ஆகிவிட மாட்டிக்கொண்ட வருணாவோ.. “அப்போ மதியம் சிரித்தால் ஓகேவா” எனக் கேட்டு அதற்கும் லலிதாவிடம் வாங்கி கட்டிக்கொண்டாள்.
லலிதாவிடம் திட்டு வாங்கிய வருணா தனது அத்தை கலாவிடம் செல்லம் கொஞ்சி தன்னுடைய அம்மாவை சமாளித்து கல்லூரி செல்லத் தயாராக அறைக்கு விரைந்தாள்.
ஒரு வழியாக கல்லூரி செல்ல கீழிறங்கி வந்த வருணா , கவி… காலை உணவை முடித்தனர்.
கல்லூரி பேருந்து ஊருக்கே வருவதால் பயமில்லாமல் அதிலே சென்று வந்தனர்.
பேருந்து நிறுத்தத்திற்கு வந்தவர்கள் காத்திருக்க… அவர்களுடன் பள்ளி மாணவர்கள் முதல் வேறு கல்லூரி மாணவர்களும் காத்திருந்தனர்.
ஊரில் வெட்டியாக திரிந்து கொண்டிருக்கும் சில இளம் வயதினர் அங்கிருக்கும் டீ கடையில் அமர்ந்து பெண் பிள்ளைகளை கிண்டலடித்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
அதில் ஒருவன் ஒரு பள்ளி மாணவியின் தலையிலிருந்த பூவினை பிடித்து இழுத்து, ஜடையிலிருந்த ரிப்பனையும் அவிழ்த்து விட்டான். அந்த மாணவியோ எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் அழுதாள். அதனை கண்ட கனி அவனிடம் மல்லுக்கு நின்றாள்.
அவனோ “ஏன் உன் பூவை பிடித்து இழுக்கல கவலையா” என நக்கலுடன் கேட்டுக்கொண்டே கனியின் தலையில் கை வைக்க செல்ல.. கனியுடன் நின்றிருந்த வருணா அவனது கன்னத்தில் பளார் என்று அடித்திருந்தாள்.
அவனுடன் இருந்த அவனது நண்பர்கள் இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றனர். தனது இடது கரத்தால் தன்னுடைய பின்னங்கழுத்தை தேய்த்தவள், நாக்கை மடித்து, சுட்டு விரலை நீட்டி எச்சரித்து.. “காலை வேளையில் உன்னை இங்கு பார்த்தேன் , கொன்னுடுவேன்” என்றாள்.
வருணா அடித்ததில் அதிர்ச்சியுடன் கன்னத்தை தாங்கி பிடித்து நின்றவன், அவளின் எச்சரிக்கையில் “ஏய்” என சினந்தான்.
அவனது கோபத்தை அலட்சியம் செய்தவள், கனியுடன்… அங்கு வந்த கல்லூரி பேருந்திலேறி சென்று விட்டாள்.
அவனோ… செல்லும் அவளை கொலைவெறியுடன் பார்த்திருந்தான்.
அவன் வேறு யாருமில்லை, வருணாவின் அத்தை மகன். அவளது தந்தை சீனுவாசனின் தங்கை வைதேகியின் ஒரே மகன் வேலு.
ராஜகோபாலன் வைதேகியை பக்கத்து ஊர் பண்ணையார் மகன் சக்கரபாணிக்கு தான் மணம் முடித்திருந்தார். இரண்டு ஊருக்கும் மூன்று கிமீ தான் இடைவெளி.
வேலுவிற்கு வருணாவின் மீது எப்போதும் ஒரு கண்ணு. அவளை காண்பதற்காகவே தினமும் ஒரு முறையாவது பெரிய வீட்டிற்கு சென்று விடுவான். அப்படி வருபவனின் பார்வை திரும்பி செல்லும் வரை வருணாவை வட்டமிடும். இதனை நோட்டமிட்ட வெங்கடாச்சலம் அவனை அழைத்து எச்சரித்ததோடு மட்டுமில்லாமல், இங்கு அவன் தனியாக வருவதையும் தடுத்திருந்தார்.
அதனால் தான் தினமும் வருணா வரும் நேரம் சரியாக பேருந்து நிறுத்ததிற்கு வந்து விடுவான்.
அவளை கண் களவு செய்வதற்காக மட்டுமே வருபவன் மனதில் இப்போது அவள் மீது வன்மம் வளர்ந்தது. அது அவளை எப்படியாவது திருமணம் செய்து பழிவாங்க வேண்டுமென முடிவெடுக்க செய்தது.
அதற்கான திட்டத்தை அவனது அன்னையிடமிருந்து செயல்படுத்த துவங்கினான்.
துளிர்விடும் 🌱.
