சருகு 🍂 3
பல்வேறு வகையான செட் அமைத்து, ஒரு படத்திற்கு வேண்டிய அனைத்து காரணிகளையும் உள்ளடக்கிய ‘பிலிம் சிட்டியினுள்’ மிகுந்த வேகத்துடன் உள் நுழைந்தான் அபினவ்.
காரின் வேகத்தை வைத்தே அது யாரென அடையாளம் கண்டு கொண்டனர். அதுவரை அமைதியாக இயங்கிக் கொண்டிருந்த அந்த இடம் இப்போது மிகுந்த பரபரப்புக்கு உள்ளானது.
காரின் கதவினை திறந்துகொண்டு ஸ்டைலாக இறங்கிய அபி தனது நீண்ட கால்களால் வேக எட்டுக்களை எடுத்து வைத்து கம்பீரமாக நடந்து வந்தான். அவனது நடைக்கே ரசிகர்கள் உள்ளனர்.
வேலையில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவன் “இவரே ஹீரோ மாதிரி தான் இருக்கின்றார்” எனக் கூற அது தனது காதில் விழுந்தாலும் கண்டு கொள்ளாது இயக்குனர் என எழுதியிருந்த கறுப்பு நிற இரும்பு இருக்கையில் அமர்ந்தான்.
அவன் அமர்ந்ததும் அருகில் வந்த உதவி இயக்குனர் நிவாஸ்.. அவன் கைகளில் சிறிய அளவிலான மைக் ஒன்றை கொடுத்தான்.
அதனை வாங்கிக்கொண்ட அபி “எல்லாம் ரெடியா” என்க நிவாஸ் அளித்த பதிலில் கோபம் அடைந்தான்.
“சார்… எல்லாம் ரெடி… பட் ஹீரோ இன்றைக்கு எடுக்கவிருக்கும் சீனில் சில மாற்றம் செய்யணும், அப்படி செய்தால் தான் நடிப்பேன் என்கிறார்” என்றான்.
எழுந்து நின்ற அபி தனது கை விரல்களை இறுக மூடி கால் தொடையில் அழுத்தமாகத் தட்டினான்.
அவனது செய்கையில் கலக்கம் கொண்ட நிவாஸ்… “அச்சோ கவி சார் சீக்கிரம் வாங்க.. இவரை உங்களால் தான் கண்ட்ரோல் பண்ண முடியும்” என மனதில் அரற்றினான்.
நிவாஸின் பயம் கவியை சென்றடைந்ததோ என்னவோ…
அவனே ஓட்டமும் நடையுமாக அங்கு வந்து சேர்ந்தான். அபியின் நிலையை வைத்தே அவனுக்கு விருப்பமில்லா ஒன்று நடந்திருக்கிறது என்று யூகித்த கவி நண்பனின் கையினை பற்றி அவனது கோபத்தை குறைக்க முயன்றான்.
தோழனின் அருகில் தனது கோபத்தை கட்டுப்படுத்தியவன் நிவாஸிடம் “என்ன சேன்ஜஸ் பண்ணனுமாம்?” என கடித்த பற்களிடையேக் கேட்டான்.
பயத்தில் நாக்கு தந்தியடிக்க நிவாஸ் ஹீரோ கூறியதைத் தெரிவித்தான்.
“சார்… அது வந்து… தண்ணீர் பிரச்சினையைப் பற்றி ஹீரோ மேடையில் பேசி முடித்து கீழிறங்கி வரும் சமயம்……. ஹீரோ…..யி…ய்ய்….யி..ன்…”
“இது அவருடைய விருப்பம் தானே சோ நீங்க பயப்படாமல் தெளிவாக சொல்லுங்க…” அபினவ்.
“அதான் சார்… அவர் கீழிறங்கி வரும் போது ஹீரோயின் ஓடி வந்து அவருக்கு… அவரை… ஹக் செய்து லிப்பில் கிஸ் செய்யுமாறு சீன் வைக்க சொன்னாரு…” ஒரு வழியாக தயக்கத்துடன் தகவலை நிவாஸ் கூறி முடிக்க…
“டாமிட்…” என அபி சினந்தான்.
“கொஞ்சம் பொறுமையா இரு அபி என்னன்னு அவர் கிட்ட கேட்கலாம்” என கவி சொல்ல…
“இதுக்கு மேல என்னால் பொறுமையா இருக்க முடியாது கவி, சமுதாயத்தின் அன்றாட பிரச்சனைகளில் ஒன்றான தண்ணீர் பற்றாக்குறை பற்றி நான் கதை அமைத்தால் அதை அவன் பி** படமாக்கி விடுவான் போலிருக்கிறது” என கடுமையாக வார்த்தைகளை விட்டான் அபி.
அபியின் கோப வார்த்தைகளை கேட்டுக் கொண்டே அங்கு வந்த ஹீரோ அரவிந்த் குமார், “என்ன அபினவ் சார் ரொம்ப சூடா இருக்கிற மாதிரி தெரிகிறது! இன்று உங்கள் பர்த்டே எனக் கேள்விப்பட்டேன்… எனி வே… விஷ் யூ வெரி ஹேப்பி பர்த்டே…” என்று கை குலுக்குவதற்காக தனது கரத்தினை அபியின் புறம் நீட்டினான்.
நீட்டிய கரம் பற்றாது அரவிந்தின் முகத்தை ஆழ்ந்து பார்த்த அபி…
“நான் உங்களை இந்தப் படத்திலிருந்து நீக்குகிறேன்” என்றான் வார்த்தைகளின் உறுதியுடன்.
அதைக் கேட்டு அரவிந்த் அதிர்ந்ததை விட கவியும், நிவாஸும் தான் அதிகம் அதிர்ந்தது.
“அபி” என அழைத்து தனது அதிர்ச்சியை கவி வெளிப்படையாகவே காண்பித்தான்.
இருபது சதவிகித படம் எடுத்து முடித்திருக்கும் நிலையில் ஒரு ஹீரோவை அப்படத்திலிருந்து நீக்குவது என்பது எவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிந்திருந்ததாலே இந்த அதிர்ச்சி.
அதனாலே தான் ஹீரோ என்றத் திமிரையும் அரவிந்த் காண்பிக்க நினைத்து கதையில் குறுக்கிட்டது.
அபியின் வார்த்தையில் உள்ளுக்குள் அரவிந்த் அதிர்ந்தாலும் அவ்வதிர்வினை வெளியில் காட்டிக்கொள்ளது,
“என்ன அபினவ் அவ்வளவு ஈஸியா என்னை தூக்கிட முடியுமா? இதனால் உங்க கேரியர் டேமேஜ் ஆகிடும்.. தெரியுமா?” அவனது குரலில் அப்போதும் சிறு நக்கல் இருந்தது.
“ஒரு கதையால் தான் நீ ஹீரோ… அந்த கதையில்லை என்றால் நீ வெறும் ஜீரோ… உன்னை நீக்குவதால் எனக்கு அவ்வளவு ஒன்றும் பாதிப்பு ஏற்பட்டு விடாது.”
“உனக்கு உன் கதை மேல் நம்பிக்கை இருக்கும் போது எதற்காக முன்னணி நாயகனாகிய என்னிடம் நடிக்க கேட்டாய். எவனையாது புதுசா கூட்டிட்டு வர வேண்டியது தானே!”
“நீ…. ப்ரொடியூசர் சாய்ஸ்… என்னோட செலக்ஷன் இல்லை.. இருபது படங்களில் நடித்து விட்டால் மட்டும் நீ ஒரு சிறந்த நடிகனாகிவிட முடியாது.”
இருவரும் மாற்றி மாற்றி விவாதம் செய்துகொள்ளுவதை பார்த்து கவிக்கும் சிறு பயம் எட்டிப்பார்த்தது.
இன்று ஒரு இயக்குனராக அபி இருப்பதற்கு அவனது கடின உழைப்பேக் காரணம், அதை நேரிலிருந்து கண்டதால் தான் கவிக்கு இந்த பயம். இந்த சிறு பிரச்சனையை பத்திரிக்கைக்காரர்கள் எவ்வாறு திரித்துக் கூறுவார்கள் என்று அறியாதவனா அவன்.
அபியை தடுப்பதற்காக கவி எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.. இறுதியில் சர்மாவிடம் அரவிந்த் முறையிட,
“இவர் தான் ஹீரோ என்றால் என்னையும் என் கதையையும் விட்டு விடுங்கள்… இப்படத்திலிருந்து நான் விலகிக்கொள்கின்றேன்.”
திட்டவட்டமாக அபி கூறிவிட சர்மாவிற்கே அதிர்ச்சியாகிவிட்டது.
அபியை விட்டுக்கொடுக்க நினைத்தாலும் கதையை விட்டுக்கொடுக்க அவரால் முடியாது. கதையின் போக்கு அத்தகையது. அக்கதைக்கு உயிரான அபியை மட்டும் எப்படி அவர் விட்டுவிடுவார்.
நிச்சயம் இக்கதை திரைத்துறையின் பல விருதுகளை அள்ளிச்செல்லும் என்பது அவருடைய கணிப்பு. பல வருடங்களாக இத்துறையில் நீடித்திருக்கும் அவருக்கா தெரியாது ஒரு கதை எந்த அளவு உயிரோட்டமாக மக்களிடம் சென்றடையும் என்று, சிறுது நேரம் அனைத்தையும் யோசித்த சர்மா அரவிந்திடம்,
“உங்களுக்கு எதற்கு இந்த தேவயில்லா வேலை… வந்திங்களா… நடிச்சீங்களா… இருக்க வேண்டியது தானே அதை விட்டு ஏன் அவர் (அபி) வேலையில் கை வைக்கிறீங்க?” அவரது குரலில் அடக்கப்பட்ட கோபம் தெறித்தது.
“அவர் சொல்வதை கேட்டு நடிப்பதாக இருந்தால், இப்படத்தில் இருங்கள்… இல்லையென்றால் இப்போதே சென்று விடுங்கள்.” சர்மாவும் இவ்வாறு தெரிவிக்க,
“ஒரு இளம் இயக்குனர் முன் தான் மண்டியிடுவதா” என்ற ஆணவம் தலைத்தூக்க “இவன் கீழ் என்னால் நடிக்க முடியாது” என்றான் அரவிந்த்.
“இதற்கான பின் விளைவுகளை நீ சந்திக்க தயாராக இரு” என அபியை பார்த்து கண்களில் பழிவாங்கும் வெறி தெறிக்க கூறினான்.
அதற்கு சற்றும் அசராது… “தேங்க் யூ…” என்று ஒற்றை பதிலளித்தான் அபி… அபினவ்.
அரவிந்த் வெளியேறியதும் சர்மா கவலையாக அமர்ந்துவிட்டார்.
அவரின் கவலை எதற்கானது என்பதை உணர்ந்து அவரை நெருங்கி அமர்ந்த அபி காலை அளித்த அதே நம்பிக்கையை மீண்டுமொரு முறை அவருக்கு அளித்தான்.
“சொல்லிய பட்ஜெடில் படத்தை முடிப்பது என் கடமை. என் மீது நம்பிக்கை வையுங்கள்.”
“உங்கள் மீதும், உங்கள் கதையின் மீதும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது” எனக் கூறிய சர்மா கலக்கம் நீங்கி தெளிவடைந்தார். “ஆனால் இதுவரை எடுத்த படத்தை என்ன செய்வது” எனக் குழப்பமாக வினவினார்.
“அதை நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்க பயப்படாமல் இருங்க” என்ற அபி அடுத்த கட்டத்திற்கு தயாராகினான்.
அன்றைய படப்பிடிப்பினை ரத்து செய்யாமல் ஹீரோயின் பகுதியில் சில காட்சிகளை எடுத்தான்.
ஷூட்டிங் முடிந்து பேக் அப் சொல்லிய பிறகு அபியிடம் தயக்கத்துடன் வந்த ஹீரோயின் சின்மயி “ஹாப்பி பர்த்டே அபி” என்றாள்.
அவளது வாழ்த்தினை ஒதுக்கி தள்ளியவன் “கால் மீ அபினவ்…” என்றான்.
“என் பெயரை யார் சுருக்கி அழைத்தாலும் எனக்கு பிடிக்காது.”
“ஏன் அபி நான் உன் பெயரை சுருக்கி செல்லமா கூப்பிடக்கூடாத…” ஒரு வித ஏக்கத்துடன் வெளி வந்தது அவளது குரல்.
“எனக்கு நெருக்கமானவர்களைத் தவிர வேறு யார் என்னை அப்படி அழைத்தாலும் எனக்கு பிடிக்காது.” நீ எனக்கு நெருக்கமானவள் இல்லை என்பதை தன் பதிலில் உணர்த்தினான். அவ்வாறு கூறியவன் அவளைத் தாண்டி கவியை தேடிச்சென்றான்.
சின்மயி.. இருபத்தி நான்கு வயது அழகிய இளம் ஹீரோயின்… இரண்டு படங்கள் நடித்திருக்கின்றாள். முதல் படமே வெற்றி படமாக அமைந்து ரசிகர்களுக்கு கனவு கன்னியாக வலம் வரத்தொடங்கிவிட்டாள். இவள் பின்னால் லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் சுற்றும் போது.. இவள் சுற்றுவது என்பதோ நம் அபியிடம் தான். அதற்காக அவளுக்கு அபியின் மீது உயிர் உருகும் அளவிற்கான காதல் என்றெல்லாம் ஒன்றுமில்லை. இது ஒரு விதமான சேஃப்டி காதல். திரைத்துறையில் இருக்கும் பெண்களை இழிவாகவும்.. பல்வேறு காரணக் காரியங்களுக்கு ஆட்டுவிக்கும் ஆண்களுக்கு நடுவில் அபினவ் வித்தியசமானவன். அதை விட அக்மார்க் நல்ல பையன். இது மட்டுமில்லாமல் மார்க்கெட் சரிந்த பின்னர் நிலையாக செட்டில் ஆவதற்கே அபியின் பின்னால் சுற்றுகின்றாள். ஆரம்பத்தில் நட்பாக நெருங்கியவளிடம் தனது எல்லைக்குள் பழகியவன்,
“நான் உங்களை விரும்புகின்றேன்” என அவள் சொல்லியதிலிருந்து முழுதாக தள்ளி வைத்து விட்டான்.
இப்போதெல்லாம் அவளைக் கண்டால் எரிச்சல் தான் அவனுக்கு மிச்சம். இருப்பினும் படத்தை நல்லபடியாக முடிக்க வேண்டுமென அமைதியாக இருக்கின்றான்.
சின்மயி வேலையில் குறுக்கீடு செய்யாது, தனக்கு மட்டுமே தொல்லைக்கொடுப்பாதால் விட்டு வைத்திருக்கிறான். இல்லையென்றால் அரவிந்தின் நிலைதான் இவளுக்கும்.
கவியையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தவன் தீவிர யோசனையில் ஆழ்ந்து விட்டான்.
அவனின் யோசனை எதைப்பற்றி இருக்குமென யூகித்த கவி சில புகைப்படங்களை அபியின் முன் வைத்தான். அதனை என்னவென்று அபி தன் பார்வையால் வினவ..
“கடைசி மூன்று படங்களுக்கு, ஹீரோ செலெக்ஷனுக்காக நாம் நடத்திய ஆடிஷனில் பைனல் ரவுண்டில் செலக்ட் ஆனவர்கள்” என்றான் கவி.
இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்த அபி.. “இவர்கள் யாரும் இக்கதைக்கு செட்
ஆகமாட்டாங்க கவி அல்ரெடி படம் ஸ்டார்ட் செய்வதற்கு முன்பே இதை செக் செய்துட்டேன். இப்போ இருக்கும் சூழலில் மீண்டும் ஒருமுறை ஆடிஷன் நடத்துவது என்பது முடியாதது” என்றான்.
சிறு கவலை அபியின் குரலில் எட்டி பார்த்ததோ… அதை கவனித்த கவி “ஷார்ட் பிலிம்களில் நடித்துள்ள யாராவது ஒருவரை செலக்ட் செய்யலாம்” என யோசனை வழங்கினான்.
“நாட் பேட்… பட்… நான் சொல்வதை… ஏன் எதற்கு என்று கேட்காமல் நடிக்கும் ஒரு ஆள் தான் எனக்கு வேண்டும்.. அப்போது தான் நான் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு நான் நினைத்ததை மாதிரி உயிர் கொடுக்க முடியும்” என்றான் அபினவ்.
அதை கேட்ட கவி… “என்ன ஐடியா கொடுத்தாலும் ஏதாவது ஒரு தடை சொல்” என சத்தமாக சலித்துக்கொண்டு.. “நீ சொல்றது மட்டும் கேக்கணும்னா என்னை விட்டா வேறு எந்த ஏமாளி இருக்க முடியும்” என்று மெல்ல முணுமுணுத்தான்.
கவி மெதுவாக கூறியிருந்தாலும், அவனை நெருங்கி அமர்ந்திருந்த அபிக்கு அவனது முனகல் தெளிவாகவேக் கேட்டது.
ஏதோ கண்டு பிடித்தவனாக தனது மொபைலை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு சென்றுவிட்டான்.
எதுவும் கூறாமல் செல்லும் அவனையே பார்த்திருந்த கவி அபிக்கு இதற்கான தீர்வு கிடைத்துவிட்டது என்பதை கண்டு கொண்டவனாக இரவு உணவை பற்றி கேட்பதற்காக ராமு அண்ணாவைத் தேடிச்சென்றான்.
தனது கிராமத்து வீட்டு எண்ணை அழுத்தி விட்டு அந்த பக்கம் எடுப்பதற்காக காத்திருந்தான் அபினவ்.
கல்லூரியிலிருந்து மதியமே வந்துவிட்ட வருணா மாலை நெருங்கிய வேளையில் தான் தனது அறையிலிருந்து கீழிறங்கி வந்து கொண்டிருந்தாள். அப்போது தொலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டு வீட்டில் யாராவது இருக்கின்றார்களா என்று வீட்டைச்சுற்றி பார்த்தாள்.
அவரவர் தாம்தம் வேலைகளில் மூழ்கியிருக்க தானே சென்று தொலைபேசியை எடுத்தாள்.
ரிசிவரை தன்னுடைய காதில் வைத்தவள் “ஹலோ” என்க… எதிர்புறமிருந்து வந்த “வரு” என்ற குரலில் இன்பமாய் அதிர்ந்து நின்றாள்.
“சசி அத்தான்” என அவளது உதடுகள் மெல்ல உச்சரித்தது.
“எப்படி பேபி இருக்க?” அவனது கேள்விக்கு “ம்” என்ற ஒற்றை வார்த்தையே அவளது பதிலாக இருந்தது.
“என்ன சவுண்ட் வெளிய வரலை.. இப்படி அமைதியா இருந்து எனக்கு ஷாக் கொடுக்காத பேபி” என்றான் புன்னகையுடன்.
அவனின் சிரிப்பொலியை ரசித்தவள்… “போங்க அத்தான் நான் உங்க மேல கோபமா இருக்கேன்.”
வருணா முறுக்கிக்கொள்ள…
அவனோ.. “அச்சச்சோ.. என் பேபிக்கு என் மீது என்ன கோபம்” என சிறு பிள்ளையிடம் கேட்பதைப் போல் கேட்டான்.
அதில் அவள் சிரித்துவிட அவனுக்கு அவள் கோபம் சென்றுவிட்டதே என்ற நிறைவு ஏற்பட்டது.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்தான்” என்றவள், “இதை சொல்லத்தான் உங்களுக்கு போன் மேல போன் பண்ணா நீங்க எடுக்கவே இல்லை.” அவன் அமைதியாக இருக்க, மென் குரலில் வாழ்த்து கூறி தனது கோபத்திற்கான காரணத்தையும் தெரிவித்தாள்.
அதற்கு மன்னிப்பு வேண்டியவன், “இன்னைக்கு நீ மட்டும் தான் எனக்கு தமிழில் வாழ்த்து சொல்லியிருக்க.. அடுத்து நம் தமிழை அடிப்படையா கொண்டு தான் நான் படம் இயக்க வேண்டும்” என்றான் வருணாவின் அத்தான் சசி… சசி அபினவ்.
“அத்தான் என் கிட்ட பேசும் போது சசியா மட்டும் பேசுங்க.. இயக்குனர் அபினவ்வா வேண்டாம். நீங்க இயக்குனர் ஆனதுல இருந்து தான் நம்ம வீட்டுக்கு வரதே இல்லை” என்றாள் வருத்தத்துடன்.
இவ்வளவு நேரம் அனைத்தும் மறந்து தனது அத்தை மகளிடம் பேசிக்கொண்டிருந்தவன் இறுதியாக அவள் கூறியதில் அவனது உள்ளத்து வலி நினைவிற்கு வர “தாத்தாவிடம் பேசுவதற்கு தான் கால் செய்தேன், கொஞ்சநேரம் கழித்து எனக்கு கால் செய்ய சொல்லு” என்று உரைத்தவிட்டு பட்டென இணைப்பைத் துண்டித்து விட்டான்.
பால்கனியில் நின்று புன்னகை முகமாக பேசிக்கொண்டிருந்த அபியை ரசித்துக் கொண்டிருந்த கவி அவன் தனது தங்கை வருணாவிடம் பேசுகின்றான் என அறிந்து கொண்டான்.
அவனது வாழ்வின் இருள் சூழ்ந்த அத்தியாயத்திற்கு பிறகு அபி கொஞ்சமேனும் சிரிக்கும் ஒரே ஆள் வருணா தான்.
சிறு வயது முதல் அத்தான் என தன் பின்னால் சுற்றித் திரியும் வருணாவை அபிக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் அவள் பிறந்து அவளை தன் கைகளில் ஏந்திய போது அவன் அடைந்த மகிழ்விற்கு அளவே இல்லை.
வீட்டின் முதல் பெண் வாரிசு என்பதால் அவள் பிறந்த தினம் குடும்ப உறுப்பினர்கள் அடைந்த மகிழ்வினைக் கண்ட அபி மற்றும் கவிக்கு, அதற்கு காரணமான வருணாவை மிகவும் பிடித்து விட்டது. அன்று முதல் தங்களுக்கு ஏழு வருட இளையவளான வருணாவிற்கு அபி மற்றும் கவியே காவலனனாய், ஒரு தாயாக மாறி போனார்கள்.
அவளும் அவளது அன்னையை விட அவர்களிடமே அதிகமாக ஒட்டிக் கொண்டாள். எப்போதும் அபி மற்றும் கவிக்கு நடுவிலே இருப்பாள். அவர்கள் இருக்கும் இடத்தில் நிச்சயம் வருணா இருப்பாள். அவர்களுக்குள் பிரிவு என்பதே அபியும், கவியும் கல்லூரி படிப்பிற்காக சென்னை சென்ற போது தான். அந்த நெருக்கத்தால் தான் இன்றளவிலும் வருணாவிடம் அவனது சோகத்தின் வெளிப்பாடான ஒதுக்கத்தை அவனால் காட்ட முடியவில்லை.
வருணாவிடம் பேசிக்கொண்டிருந்த அபி திடீரென சோகமாகி விட்டதை உணர்ந்த கவியால் அவனை நினைத்து வேதனை மட்டுமே அடைய முடிந்தது.
அபி இணைப்பைத் துண்டித்ததும் வருணாவிற்கு மனம் என்னவோ போலானது. இனம் புரியாத வலி இதயத்தில் பரவுவதை உணர்ந்தாள். ஆனால் அது எதனால் என்று அவள் உணரவில்லை.
அவள் உணரும் நொடி கருகாக போவது அவள் அறிந்த ஒன்றே. நம் மனதில் உதயமாகும் நேசத்திற்கு நாமே தடையாக இருக்க வேண்டிய சூழல் நிலவும் போது ஏற்படும் வலி மரணத்தை விட கொடுமையானது.
அத்தகைய வலியை அவள் அனுபவிப்பது உறுதியென விதி வருணாவைப் பார்த்து தன்னுடைய கரம் நீட்டி காத்திருக்கின்றது.
மாலை மங்கிய நேரம், தங்களது வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு அருகில் தெரிந்த மலை முகட்டினை வெறித்திருந்தாள் கனி. இமை சிமிட்டாத அவளது விழியில் ஒரு துளி நீர் கன்னங்களில் உருண்டோடியது. அவளது மனம் தன் வாழ்வின் முன் பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தது.