அத்தியாயம் 1
#CRIME MUST BE PUNISHED
[இந்தியாவில் ஆண்டுதோறும் ’20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட’ 7 வயது தொடங்கி 77 வயது வரையிலான பெண்கள்’ வன்கொடுமைக்குள்ளாகின்றனர் என்கிறது ‘ஐ.நா’ புள்ளிவிவரம்.]
அத்தியாயம் 1 :
கடலன்னையின் மடியில் ஆதவன் பிரசவிக்கும் அழகிய இளங்காலை பொழுது.
அலைமகள் கொஞ்சி விளையாடும் கடற்கரை மணலில் தன் பாதங்கள் புதையுமாறு ஒவ்வொரு அடியையும் மிக மிக அழுத்தமாக ஊன்றி நடந்தான். மணற்பரப்பினை கடந்து அலையில் கால்கள் நனைய நின்றவனின் மனதினை கடல் அன்னையாலும் குளிர்விக்க முடியவில்லை. அவனின் மனதில் எரிமலையின் சீற்றம். கண்களில் அனல் தெறித்தது. நெஞ்சத்தில் கொதிக்கும் வெம்மை தீராதோ என்கிற ஏக்கம்.
நீண்டு பரந்து விரிந்திருக்கும் வான்நிற எழிலை அவனால் ரசிக்க முடியவில்லை. கண் மூடி அதிகாலை குளிர் காற்றை நாசி வழி ஆழ்ந்து சுவாசிக்கத் தடுமாறினான்.
கண்கள் மூடினாலே விரியும் காட்சிகளுக்கு அஞ்சினான். இரவு முழுவதும் செவி நுழைந்திட்ட இளம் பெண்ணின் அலறல் ஒலியும், அப்பெண்ணின் உடலில் கண் முன்னே கண்ட காயங்களும் அவனின் மனதினை ரணமாக்கி இருந்தது.
ஓநாய் வெறியுடன் புள்ளி மானை வேட்டையாடும் நிழற்படம் கண்களில் தோன்ற, ‘மனித உருவில் ஆண் என்கிற திமிரில் சுற்றித்திரியும் ஓநாய்களும், தெருநாய்களும் இருக்கும் வரை இது போன்ற அவலங்கள் நிகழத்தான் செய்யும்.’அவனின் மனம் ஊமையாய் அரற்றியது.
வாய்விட்டு கதறி, யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போலிருந்தது அவனுக்கு.. ஆனால் அதற்கு அவனின் பதவி இடமளிக்கவில்லை.
அவன் ‘விஜய்.ஐபிஎஸ்’ காவல்துறை துணை ஆணையர் காவல் அதிகாரிக்கு ஏற்ற உடற்கட்டும், உயரமும்.. நேர்கொண்ட பார்வையும், அழுத்தமான உதடுகளும், பார்த்ததும் அவனை காவல்துறை அதிகாரி என்று இரண்டடி தள்ளி நிற்க வைக்கும்.
மிகவும் விருப்பப்பட்டு, பல கஷ்டங்களை அனுபவித்து ஐபிஸ் படித்தான். தானொரு காவல்துறை அதிகாரி என்பதில் கர்வம் கொண்டு சிங்கமென கர்ஜித்திருந்தவன், நேற்றைய நிகழ்விற்கு பிறகு தன்னை காக்கி உடையில் பார்க்கவே அவனுக்கு அவ்வளவு அவமானமாக இருந்தது. கொந்தளித்துக் கொண்டிருக்கும் அலை நீரில் அணிந்திருக்கும் காக்கி உடையை கிழித்து வீசிட வேண்டுமென்கிற வேகம் அவனிடத்தில்… இதை அணிந்தும் பாவப்பட்ட அப்பெண்ணின் இந்நிலைக்கு காரணமானவனை கண்டறிய முடியாத நிலையை அறவே வெறுத்தான்.
இரண்டு நாட்களுக்கு முன்னர்,
இரவு நேர ரோந்து பணியை முடித்துவிட்டு காவல் நிலையத்திற்குள் நுழைந்த விஜயின் கவனத்தை திருப்பியது, எழுத்தரிடம் நின்றிருந்த நாற்பத்தைந்து வயதுடைய பெண்ணின் கண்களில் நிற்காது வழியும் கண்ணீர்.
அவர்களை நெருங்கிய விஜய் என்னவென்று கேட்கும் முன்பே,
“ஐயா” என்கிற கூவலுடன் விஜயின் கால்களில் விழுந்த அப்பெண், “எம்பொண்ணை கண்டுபிடிச்சு குடுங்கய்யா” என்று கதறினாள்.
முதலில் தண்ணீரை கொடுத்து அவரை அமைதிப்படுத்தியவன், “அழாம விளக்கமா சொல்லுங்க” எனக் கேட்டான்.
சேலை தலைப்பால் கண்ணீரை ஒற்றி எடுத்து, முகத்தை அழுந்த துடைத்தவள்… விஜய் கொடுத்த நீரினை மறுத்தவளாய், “எனக்கு ஒரே பொண்ணுங்க, பேரு மாலதி.. நேற்று மாலை வீட்டுக்கு வர வேண்டிய என் மகள் இன்னும் வீடு வரலங்கய்யா.. எங்க போனாள் ஒன்னும் தெரியலங்க” என்றுக் கூறினார்.
“உங்க பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தீங்களா?”
“குடுத்தேங்கய்யா, ஆனால் அவங்க உன் பொண்ணு எவனோடயோ ஓடிபோயிட்டாள்… கேஸ் முடிஞ்சிருச்சு சொல்லிட்டாங்கய்யா” என்ற அப்பெண், “எம் பொண்ணு அப்படிப்பட்ட பொண்ணு இல்லைங்க, அம்மா கஷ்டப்படுறேன்னு.. சின்ன பசங்களுக்கு டியூஷன் எடுத்து எனக்கு உதவி பண்றாங்கய்யா.. காலேஜூ மூணாவது வருஷம் தாங்க படிக்கிறா” விசும்பலோடு சொல்லி முடித்தார்.
“நேற்று காலேஜ் போனவங்க இன்னும் வரலயா, காலேஜ் போகும்போது வர லேட் ஆகுங்கிற மாதிரி ஏதேனும் சொல்லிட்டு போனாங்களா?” விஜயின் மனதில் பதட்டம் இருந்தாலும், மிக நிதானமாக கேள்வி கேட்டான்.
அந்நேரம் இன்னொருவரும் வந்து தன் பெண்ணை நேற்று முதல் காணவில்லை என்று புகார் கொடுத்தார்.
இரண்டு புகார்களையும் ஒப்பிட்டு பார்க்க ஒன்றுக்கொன்று சிறு தொடர்புகூட இல்லை. இருவரும் வேறு பகுதியில் வசிப்பவர், வேறு கல்லூரி, வேறு துறை இப்படி அனைத்தும் வேறுபட்டு இருந்தன.
எதில் தொடங்கி எதில் முடிப்பதென்று குழம்பிய விஜய், இரண்டு பெண்களின் கல்லூரிக்கு சென்று அவரவர் துறையில் விசாரித்தான். அன்று இருவருமே கல்லூரிக்கு வரவில்லை என்ற பதிலே கிடைத்தது.
கல்லூரி வளாகத்தில் நின்று சுற்றி பார்வையை சுழலவிட்டவனின் கண்களில்.. கல்லூரி நுழைவு வாயிலை கடந்து சாலையின் மையத்தில் வீற்றிருந்த சிக்னல் கம்பத்தில் மாட்டப்பட்டிருந்த கேமரா பட்டது. அதிலிருக்கும் புட்டேஜினை ஆராய, மாலதி கல்லூரி வாயில் வரை வந்து யாரோ அழைக்கவும்.. சற்று தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி செல்வது பதிவாகியிருந்தது.
ஆனால், மற்றொரு பெண்ணான தீபாவைப்பற்றி சிறு தகவல் கூட கிடைக்கவில்லை.
‘சோ, தீபா அவளின் வீட்டிலிருந்து கிளம்பி கல்லூரிக்கு வரும் முன்பே காணாமல் போயிருக்க வேண்டும்,’ தான் யூகிப்பது சரி என்று அவனின் மனம் அழுத்தமாக சொல்லியது.
அவள் வீட்டருகில் ஏதேனும் காமிரா உள்ளதாயென்று ஆராய, ஒரு வீட்டின் முன்பு தெருவு முழுவதும் பதிவு செய்யும் வகையில் காமிரா பொறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் காமிராவில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக அங்கு விஜய்க்கு எவ்வித தகவலும் கிட்டவில்லை.
ஆனால், மாலதியை கண்டுபிடிக்க சிறு வழி இருப்பதாக சிந்தித்தவன், இருவரையும் கடத்தியிருப்பது ஒருவனே என்கிற பட்சத்தில் மாலதியை கண்டுபிடித்தால் தீபாவும் கிடைக்கப் பெறுவாள் என்பதை கணித்தவன் முதலில் மாலதியை கண்டுபிடிக்க முடிவு செய்தான்.
மாலதி ஏறி சென்ற காரின் எண் யாருடைய பெயரில் உள்ளதென்று பார்க்க அது பொய்யான எண் என்பதில் மீண்டும் முதல் புள்ளிக்கே வந்து நின்றான்.
இரண்டு பெண்களில் மாலதிக்கு அன்னை மட்டுமே, தீபாவுக்கு தாய் தந்தை இருவரும் இருந்தனர். மீண்டும் இருவரின் பெற்றோரை விசாரிக்க, மாலதி மொபைல் வைத்திருப்பதை அறிந்து அவளின் எண்ணை டிராக் செய்ததில் நகரத்தை தாண்டி ஒரு காட்டுப்பகுதியை சுட்டிக் காட்டியது.
அங்கு சென்று பார்த்தபோது மனித நடமாட்டத்திற்கான சிறு அறிகுறியும் தென்படவில்லை. ஓங்கி உயர்ந்த ராட்சத மரங்களும், வீசும் சுழற் காற்றும் நிச்சயம் காண்போரை பயம் கொள்ளச் செய்யும்.
தீபாவின் மொபைல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து, சில அடிகள் தொலைவில் தீபா மற்றும் மாலதியின் புத்தகங்கள் அடங்கிய பைகள் கிடைத்தன.
அந்த காட்டினை சல்லடை போல் சளிக்க உத்தரவிட்டான் விஜய்.
இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அரை மயக்க நிலையில் இரண்டு பெண்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அடுத்த அரைமணி நேரத்தில் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் தொடங்கப்பட்டன.
இரு பெண்களில் மாலதியின் உடல் மருந்தினை ஏற்க மறுக்க.. ஒரு மணி நேரத்தில் இறந்தாள். மகளின் இறப்புச் செய்தி கேட்ட அன்னையாய் வெடித்து சிதறினார்… தீபாவின் அன்னை மகளின் கோர நிலை கண்டு மயக்கம் அடைய, அவளின் தந்தையோ தான் ஆண் என்கிற நினைவின்றி தரையில் அமர்ந்து தலையிலடித்துக் கொண்டு அழுதார். அவர்களின் நிலையை காண இயலாது தவித்தான் விஜய்.
பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்.. “இட்ஸ் அ புரூட்டல்.. இரண்டு நாட்களும் சிறு சிறு இடைவெளியில் இருவரும் தொடர்ச்சியாக”, என்று மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்க விஜய் மனம் தானுமொரு ஆண் என்பதில் குன்றியது.
காவல் அதிகாரி என்பதை மறந்து, சக மனிதனாய் மனதில் எழும் வலியை தாங்க இயலாமலே கடற்கரையில் நின்று கொண்டிருக்கின்றான்.
குற்றவாளி யாரென்று அவனால் யூகிக்கக்கூட முடியவில்லை.
இதுவரை எந்தவொரு கேசிற்கும் இவ்வளவு அவன் யோசித்தது கிடையாது. இதில் மீடியா வேறு, அவர்களின் கற்பனைக்கு வளம் சேர்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் கேள்விகளுக்கு முற்று புள்ளியே வைக்க முடியாதென்று அவனும் அறிந்து தான் இருந்தான். ஊடகம் நினைத்தால் நல்லவனை கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனாகவும் மாற்ற முடியும். அத்தகைய வல்லமை ஊடகத்திற்கு உண்டு. இந்த கேசில் ஈடுபட்டத்திலிருந்து இன்னும் அவன் ஊடகத்தாரை நேரில் சந்திக்கவில்லை. சந்தித்தால் அவர்களின் எடக்குமடக்கான கேள்விகள் கோபத்தை உண்டாக்கும் என்பதற்காகவே மூன்று நாட்களாக தவிர்த்து வருகிறான்.
ஆனால், ஒரு பெண் இறந்த நிலையில் இனியும் தவிர்க்க முடியாதென்று அவன் எண்ணுகையில், முதுகுக்கு பின்னால் ஒலித்த “சார்” என்கிற அழைப்பில் தனது எண்ணங்கள் விலகி திரும்பி பார்த்தான்.
ஐம்பது வயதுமிக்க கான்ஸ்டபிள் நின்றிருந்தார்.
“சொல்லுங்க மூர்த்தி”
“சார் ஹாஸ்பிடலிலிருந்து டாக்டர்” என்றவறாக மொபைலினை விஜய்யிடம் நீட்டினார்.
காதில் மொபைலினை வைத்தவனின் கரத்திலிருந்து, அந்தப்பக்கம் கூறப்பட்ட செய்தியால் ஏற்பட்ட அதிர்வின் விளைவாக மொபைல் நழுவி கீழே விழுந்தது.
அதிர்வு நீங்கி மொபைலினை மீண்டும் எடுத்து, “டாக்டர் ஆர் யூ ஷயூர்” என்று நம்பாமல் கேட்டிருந்தான்.
“ஐ ஸ்வேர் மிஸ்டர் விஜய், தீபா ஆல்சோ டெட்” என்றார் அந்த மருத்துவர்.
“எப்படி” எனக்கேட்ட விஜய் விரைந்து மருத்துவமனை வந்திருந்தான். அவனுக்காகவே வாயிலில் காத்திருந்த ஊடகவியலாளர்களை ஒரு பார்வை பார்த்தவன், அவர்களை கடந்து உள்ளே நுழைந்தான்.
விஜய்யை கண்டதும் ஓடி வந்த தீபாவின் தந்தை, “என்னோட பொண்ணு செத்து போயிட்டாள் சார்.. ஒன்னுக்கு ரெண்டு பேரோட உயிரை குடிச்ச அந்த மிருகத்தை இன்னும் உங்களால கண்டுபிடிக்க முடியல, அப்புறம் எதுக்கு சார் போலீஸ்.. அவன் யாருன்னு எங்கள மாதிரி சாதாரண மக்களால் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க முடியாதுல” என்று கேட்டவர், “இனி என் மகளுக்கு நடந்ததை மீண்டும் மீண்டும் பேசியே எங்களை உயிரோடு வதைக்கப்போகிறது இந்த உலகம்” என புலம்பினார்.
‘அவருக்கு என்னவென்று ஆறுதல் சொல்லுவது, அவர் சொல்லியவை உண்மை தானே.. குற்றவாளியை கண்டுபிடிக்கும் இடத்திலிருந்தும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே!’ விஜய்யின் மனதில் குற்றவுணர்ச்சி மேலோங்கியது.
மருத்துவரிடம் சென்று இரு பெண்களின் மருத்துவ அறிக்கை மற்றும் உடற்கூறு ஆய்வு முடிவுகளை கைபற்றியவன் அவனுக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்களை எதிர்க்கொண்டான்.
அவனை எதிர்நோக்கி பல கேள்விகள் அணிவகுத்து நின்றன,
“மாலதியின் அன்னை அவர் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்கினை கையில் எடுக்காததற்கு என்ன காரணம் சார்?
“உங்களிடம் வழக்கு வந்து இரண்டு நாட்களுக்கு பிறகே கண்டுபிடித்திருக்கிறீர்கள், உங்களின் வேகம் குறைந்து விட்டதா?
“இரு பெண்களின் உயிர் பரிபோனதுக்கு காவல் துறையின் அலட்சியம் தான் காரணமா?
“குற்றவாளி யார்?
“குற்றவாளியை எப்போது கண்டு பிடிப்பீர்கள்?
“பல வழக்குகளை போன்று இதுவும் உங்களுக்கு ஒரு வழக்கு அவ்வளவு தானே?
“அந்த பெண்களின் குடும்பத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?”
இவ்வாறு கேள்விகள் நீண்டு கொண்டே இருந்தன. அனைத்து கேள்விகளையும் அமைதியாக உள்வாங்கியவன் தன் முன் நீட்டப்பட்ட ஒலிவாங்கிகளின் முன் நிமிர்ந்து நின்று,
“சட்டம் தன் கடமையை செய்யும்” என்ற கூற்றோடு வெளியேறினான்.
வீட்டிற்கு கூட செல்லாது காவல் நிலையம் வந்தவன், காட்டில் கண்டெடுத்த மற்றும் மருத்துவமனையில் இரண்டு பெண்களிடமிருந்து கிடைத்த பொருட்கள் அனைத்தையும் நிதானமாக பார்வையிட்டான். மாலதி தனது உள்ளங்கையில் இறுக பற்றியிருந்ததாக கூறி மருத்துவர் கொடுத்த மோதிரத்தினை ஆழ்ந்து பார்க்க… அது நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சாலிடர் வைரம் பொருத்தப்பட்ட மோதிரம் என்று கண்டுகொண்டான்.
மோதிரத்தின் மதிப்பினை வைத்தே, குற்றவாளி பெரிய இடம் என்பதை கண்டறிந்தான்.
குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருக்கும் பெரிய இடத்து ஆட்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளை பார்வையிட்ட விஜய்க்கு யாரை எப்படி சந்தேகிப்பது என்று தெரியவில்லை. அனைவர் மீதும் ஊழல், கொலை, கடத்தல், சொத்துகுவிப்பு இப்படி போன்ற வழக்குகளே பதிவு செய்யப்பட்டிருந்தன.
எங்கு தொடங்கினாலும் ஆரம்ப புள்ளியிலேயே சுழன்றான். ஒரு நிலையில்லாது தவித்தான். நிரூபர்களால் தொடுக்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் செவிகளில் எதிரொலித்தது.
அந்நேரம் விஜயின் அறைக்குள் நுழைந்த தலைமை ஆணையர் “என்ன மிஸ்டர் விஜய் உங்க இஷ்டத்திற்கு பேட்டி கொடுத்து இருக்கீங்க, மாலை நேர செய்தித்தாள் பார்த்தீங்களா?” எனக் கோபமாக வினவினார்.
தனக்கு மேலதிகாரி வந்ததும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றவன் அவரின் கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமற்றவனாக அமைதி காத்தான்.
விஜய்யின் அமைதி அவருக்கு பழக்கம் தான். அவனே நினைக்காமல் அவனின் வாயிலிருந்து ஒரு வார்த்தையை கூட வரவழைக்க முடியாது. அவனிடத்தில் எப்போதும் ஒரு திமிர் இருக்கும். அந்த திமிர் அவனின் நேர்மையால் விளைந்தது.
நிரூபர்களிடம் அவன் அளித்த பதிலால், காவல்துறையின் அலட்சியம் என்கிற தலைப்பில் இல்லாதவற்றையெல்லாம் இருப்பதாக சித்தரித்து சட்டம் தூங்குகிறது என்று ஒரு கட்டுரையே வடித்திருந்தனர்.
“உன்னுடைய பதிலால் நம் துறைக்கு கிடைத்த பெயரை பார்த்தாயா, இனியாவது அந்த பத்திரிக்கைக்காரர்களிடம் பார்த்து பேசு.. உன்னுடைய இந்த திமிருக்கெல்லாம் குறைச்சல் இல்லை.. ஏதோ நீ வேலையில் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பதால் உன்னுடைய இந்த குணத்தை பொறுத்துப்போறேன்”, என்றவர் இந்த வழக்கு விசாரணை எந்த அளவில் இருக்கிறது எனக் கேட்டார்.
“வழக்கினை முடித்த பின்னர் கூறுகிறேன்.”
விஜய் கூறிய முடித்த பின்னர் என்ற வார்த்தையில் அளவுக்கு அதிகமான அழுத்தம் இருந்தது.
அவ்வார்த்தைகளின் பொருளுணர்ந்த தலைமை ஆணையர் செல்வகுமார், “இந்த வழக்கு குற்றவாளியையாவது உயிருடன் பிடி” என்க,
இதழில் வழிந்த அர்த்த புன்னகையுடன்.. “ஐ வில் டூ மை பெஸ்ட்” என்றவன் அவருக்கு முன் காவல்நிலையத்திலிருந்து வெளியேறினான்.