அத்தியாயம் 11 :
இரவு நேரம்…
மலையின் குளிர் காற்று மேனியெங்கும் தீண்டிச்செல்ல.. தன் கைகளை மார்பிற்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு, அந்த ஒற்றையடி பாதையில் தனது சிந்தனையில் உழன்றவளாக சென்றுக்கொண்டிருந்தாள் ஆதிரா.
என்ன தான் வேலையை தானே விருப்பப்பட்டு ராஜினாமா செய்திருந்தாலும், சிறு வலி இருக்கத்தான் செய்தது.
இருப்பினும் தன்னுடைய செயல் சரி என்பதை அழுத்தமாக நம்பினாள்.
அன்று மாலை தான் விஜய்யிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தாள். நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மனதினை அழுத்த அமைதிக்காக நடக்க ஆரம்பித்தவள், ஆசிரமத்திற்கு அருகிலிருக்கும் மலைப்பாதையில் ஏறிக்கொண்டிருந்தாள்,
அவள் வயதை ஒத்த இளம் பெண்ணொருத்தி ஆதிராவைத் தாண்டி மலை உச்சியினை நோக்கி ஓட முடியாமல் ஓடினாள்.
நிசப்தமான இரவு வேளையில் அப்பெண்ணின் அழுகுரல் நன்றாக ஆதிராவின் செவிகளில் விழுந்தது.
அப்பெண் செய்யவிருக்கும் செயலின் தீவிரம் உணர்ந்து ஆதிரா செல்வதற்குள், அவள் பல அடிகள் முன்னேறியிருந்தாள்.
உச்சியினை அடைந்த பெண் கண்களை இறுக மூடி கீழே குதிக்க இருந்த வேளையில்… ஆதிரா அவளது கைகளைப் பிடித்து இழுத்து வேகமாக அறைந்திருந்தாள்.
அறைந்த பின்னரே உணர்ந்தாள் அப்பெண் பவித்ரா என்று,
ஆதிரா அறைந்த வேகத்தில் தரையில் விழுந்த பவித்ரா, “என்னை ஏன் காப்பாற்றினீங்க? நான் வாழும் தகுதியை இழந்து நான்கு நாட்களாகிறது” என்று துடித்து கதறியழுதாள்.
அப்போதுதான் நிலவு ஒளியில், ஆதிரா பவியின் தோற்றத்தை கவனித்தாள். ஆடை கிழிந்திருக்க, உடலில் ஆங்காங்கே நகக் கீறல்களும், பல் தடங்களும் காணப்பட்டன.
உதடு தடித்து, ரத்தம் வழிய.. முகம் முழுவதும் வீங்கியிருந்தது.
நொடியில், பவிக்கு என்ன நடந்ததென கணித்த ஆதிரா… கைகளை இறுக மூடி தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, குனிந்து மெல்ல அவளைத் தூக்கினாள்.
தனக்கு நேர்ந்த கொடூர செயலினால் நிற்கவும் சக்தியற்று ஆதிரா மீதே சரிந்தாள். ஒரு கையால் அவளைத் தாங்கிய ஆதிரா மற்றொரு கையால் மொபைலினை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தாள்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அவர்களிருக்கும் இடத்திற்கு ஆட்டோவுடன் வந்திருந்தார். அவர் ஆசிரமத்தின் காவலாளி முத்தண்ணன்.
பார்த்ததுமே நிலைமையைப் புரிந்துக்கொண்டவர் ஆதிராவிடம் எதுவும் கேட்காமல் “போகலாம்மா” என்றார்.
“துளசியம்மா வந்துட்டாங்களா அங்கில்?” எனக் கேட்டவளிடம், “நான் வரும்போதே.. அவரிடம் நீ அவசரமெனக் கூறியதாகச் சொல்லி, எழுந்து தயாராக இருக்கும்படி கூறிவிட்டு தான் வந்தேன் ஆதிம்மா” என பதிலளித்தார்.
விரைந்து ஆசிரமத்திற்கு வந்தவர்கள் பவித்ராவை மருத்துவ அறையில் படுக்க வைத்துவிட்டு வெளியில் வந்து நின்றனர்.
“காலம் எவ்வளவு முன்னேறினாலும் நம் நாட்டில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் மட்டும் ஒழியாதா அங்கில்?” ஆற்றாமை கலந்த ஏக்கத்துடன், கண்களில் நீர் வழிய கேட்டாள்.
தன் இனத்தைச் சேர்ந்தவர்களால் ‘இளந்தளிர்களுக்கு மட்டுமில்லாமல், மொட்டவிழாத சிறுமிகளுக்கும் இழைக்கப்படும் கொடுமையை’ நினைத்து எதுவும் கூற முடியாமல் மௌனமாக நின்றிருந்தார்.
திடீரெனக் கேட்ட அலறளில் இருவரும் மருத்துவ அறைக்குள் சென்று பார்க்க, அங்கு பவித்ரா, துளசியம்மாவை.. அருகில் நெருங்க விடாமல் கத்திக்கொண்டிருந்தாள். கைகளில் கிடைக்கும் மருத்துவ உபகரணங்களை எல்லாம் விசிறியடித்தாள்.
அவளது நிலையைக் கண்டு, ஓடிச்சென்று பவித்ராவை ஆதிரா பிடித்துக்கொண்டாள். துளசியம்மா அவளுக்கு மயக்க ஊசியினைச் செலுத்தி தூங்கச்செய்தார்.
“இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவளுக்கு மயக்கம் தெளிந்துவிடும் ஆதிரா, ‘பவித்ரா.. ஆனால் அவளிடம் அந்தப் பவித்ரம் இப்போதில்லை.’ சரி நீ கொஞ்சம் வெளியிலிரு, அவள் கண் விழிப்பதற்குள் என் பரிசோதனையை முடித்து விடுகிறேன்.”
மனத்தளர்வுடன் வெளியே வந்து இருக்கையில் அமர்ந்தாள். ஆதிராவின் மனதில் பல எண்ணங்கள் ஊர்வலம் சென்றன. அவை யாவும் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளாவே இருந்தன.
ஒரு மணி நேரம் கடந்த நிலையில் துளசியம்மா வெளியே வந்தார். அவரிடம் விரைந்து சென்ற ஆதிரா, நாம் நினைத்தது உண்மை தானா என்பதைப் போல் பார்க்க, அவரும் ஆம்மென்று கண் மூடி திறந்தார்.
“இட்ஸ் அ புரூட்டல் ரேப்… மூன்று, நான்கு பேர் சேர்ந்து… அதற்கு மேல் சொல்ல முடியாமல் தடுமாறியவர், திரும்பத்திரும்பச் செய்ததற்கானத் தடயங்கள் அவளது உடலில் உள்ளது. நல்ல குடிபோதையில் இருந்திருப்பானுங்க போலிருக்கு, ரொம்பக் கொடூரமாகச் செய்திருக்கின்றனர். ‘யூட்ரஸ் சிதையும் அளவிற்கு அதிகமாகக் காயமடைந்துள்ளது.’ அவள் உயிருடன் இருப்பதே அதிசயம் தான்.”
துளசியம்மா கூறியதைக் கேட்டவள் தொப்பென்று இருக்கையில் அமர்ந்தாள், “இதெல்லாம் எப்போது அம்மா மாறும்” என்றாள் ஏக்கத்துடன்.
“தெரியவில்லையே ஆதிரா…” ஒருவித வலியுடன் கூறியவர், “பவித்ராவை உடனடியா ஒரு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும், அவளுக்கு தகுந்த சிகிச்சை அளித்துவிட்டால் உடலில் தொற்று பரவமால், அவளது உயிருக்கும் ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றிவிடலாம்” என்றார்.
“அம்மா… ஹாஸ்பிட்டல்…. அங்கு சேர்த்து, போலீஸ், மீடியா என இவளின் வாழ்க்கையையும் நரகமாக்குவதற்கா? ரம்யாவுக்கு என்னாச்சு? காக்கியை போட்டும் எதுவும் செய்ய முடிந்ததா?” கோபத்துடன் வெடித்தாள் ஆதிரா.
“ஆனால் ஆதிரா அவளுக்குச் சிகிச்சையளிக்குமளவிற்கு நம் ஆசிரமத்தில் வசதிகள் இல்லைம்மா.”
துளசி அவ்வாறு சொல்லியதும், விஜய்க்கு கால் செய்து நடந்தவற்றைத் தெரிவித்தாள்.
காக்கி உடையைத் தவிர்த்து, விரைந்து ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தான் விஜய். இவ்வளவு நேரம் தனிமையில் உள்ளுக்குள் கரைந்து கொண்டிருந்த ஆதிரா விஜய்யை பார்த்ததும் ஓடிச்சென்று அவனது நெஞ்சில் சாய்ந்து கண்ணீருடன் நடந்தவற்றைத் தெரிவித்தாள்.
“துன்பமான நேரத்தில் என் நெஞ்சில் சாய்ந்திருக்கிறாள் என்றால், என்னை அவள் மனம் நெறுக்கமானவனாக நினைக்கிறது என்று அர்த்தம் தானே..” அவன் ‘காதல் மனது’ அந்த நிலையிலும் அவனுக்குச் சாதகமாக யோசித்தது.
விஜய்யிடமிருந்து எந்த பதிலும் வராமலிருக்கத் தலை நிமிர்த்திப் பார்த்தவள், ஒரு நொடி அவனின் காதல் பார்வையில் தடுமாறிப் போனாள்.
அதன் பிறகே தான் இருக்கும் நிலை உணர்ந்து, அவனிடமிருந்து விலகி… “விஜய்ய்ய்…” எனப் பற்களைக் கடித்தாள்.
ஆதிராவின் கோபத்தில் தன் காதலில் இருந்து வெளியில் வந்தவன்… அப்போதுதான் அங்கிருக்கும் துளசி மற்றும் முத்தண்ணனை கவனித்து, சாரி என்றான் பொதுவாக..
உள்சென்று பவித்ராவை ஒருமுறை பார்த்துவிட்டு வந்தான்.. முதல் நாள், ஏழ்மை நிலையிலும் புன்னகை முகத்துடன் மிடுக்காக பார்த்த பவித்ராவையும் இப்போது கிழிந்த நாராய் கிடந்தவளையும் அவன் ஒப்பிட்டு வருத்தம் கொண்டான்.
அவன் மனது ஒரு காவல் அதிகாரியாக இருப்பதற்கு வெட்கம் கொண்டது. தன் கையினை இறுக மூடி தொடையில் அடித்து உணர்வுகளைக் கட்டுப்படுத்தினான்.
அவளின் தற்போதைய நிலையினைத் துளசி எடுத்துக்கூற, “டேமிட்…” மூடிய கையினை அருகிலுள்ள சுவற்றில் ஓங்கி குத்தினான்.
“ஆத்திரப்படுவதற்கான நேரம் இதில்லை விஜய்.. உடனடியா அவளுக்குச் சிகிச்சையளிக்க வேண்டும்.”
துளசியின் வார்த்தைகளில், தீவிரம் புரிய.. தன் மொபைலினை எடுத்து ஏதோ எண்களை அவன் அழுத்தும் வேளையில் ஆதிரா அவனிடமிருந்து அலைபேசியைப் பறித்திருந்தாள்.
“வாட்.. ஆதி?”
“யாருக்கு போன் பண்ற?”
“ஆம்புலன்ஸ்க்கு,”
“எதற்கு??”
“இதென்ன அர்த்தமற்ற கேள்வி ஆதி, அவளை ஹாஸ்பிட்டலில் சேர்க்க வேண்டாமா? இப்படியே விட்டால் இறந்து போயிடுவாள்.”
“நான் உன்னை இங்கு போலீஸாக வர சொல்லவில்லை விஜய்…”
“சூழ்நிலையைப் புரிந்துகொள் ஆதிரா.. ஒரு இன்ஸ்பெக்டரா பிஹேவ் பண்ணு..”
“நான் இப்போ போலீஸ் இல்லை”
முதன்முறையாக விஜய் தன்னவளை முறைத்தான்.
“எதுக்கு விஜய் முறைக்கிற? இப்போ அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்து… போலீஸ் கேஸ் பைல் செய்து, மீடியாவிற்கு நியூஸ் போகணுமா..!! அவர்களும் ‘உரிமைக்குக் குரல் கொடுக்கின்றோம், பெண்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்க்கின்றோமென…’ அந்தக் கொடூர மிருகங்கள் ஒருமுறை கற்பழித்தவளை, ‘பிரேக்கிங் செய்தியாகப் போட்டுக்காட்டி பலமுறை கற்பழிப்பதற்கா?” ஆதிராவின் வார்த்தைகள் ஆவேசமாக வெளி வந்தன.
அவள் கூறியதிலிருந்த உண்மை விஜய்க்கு சுடத்தான் செய்தது. ஆனால் உணர்ச்சிவசப்படும் தருணம் இதுவில்லையே, ஆதிராவின் மனநிலையை மாற்றும் பொருட்டு பேசினான்.
“ஓகே ஆதி… நான் ஒரு போலீஸா என் கடமையை செய்யாமல் ஒரு சக மனிதனா உதவி செய்கிறேன்.. அதற்கு நீ என்னைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொல்ல வேண்டும்.”
“என்ன விஜய் இந்தச் சூழ்நிலையை உனக்கு சாதகமாக்கிக்க நினைக்கிறாயா?..”
“அப்படியும் வைத்துக்கொள்…”
இவர்களது சண்டையால் நேரம் கடந்து பவித்ராவுக்கு எதாவது ஆகிவிடுமோ என துளசி கவலைக்கொண்டார்.
“உன்னைத் திருமணம் செய்து கொள்வதற்கு நீ ஒரு பெண்ணைக் காதலித்திருக்க வேண்டும்..” காட்டமாகப் பதிலளித்தாள் ஆதிரா.
“நீயும் பெண் தானே ஆதிரா”… அவனது நீயும் பெண் என்ற வார்த்தைகள் அவளது மனதில் சுகமாய் இறங்கியது. ‘ஆனால், இது இயற்கைக்கு எதிரான செயல் அல்லவா..’ எனவே, அவன் பால் சாயும் மனதினை தடுத்து… “என்னை இவ்வுலகம் பெண்ணாகப் பார்க்கவில்லை விஜய்” என்றாள். அழுத்தத்துடன், அர்த்தத்துடன்.
அவள் வார்த்தைகள் தந்த வலியில் தன் கண்ணை அழுந்த மூடித்திறந்தவன்… அதற்கு மேல் வாதிடாமல், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தன்னுடைய பெண் நண்பரான கீதாவிற்கு அழைத்து நடந்தவற்றைக்கூறி துளசியிடம் அலைபேசியைக் கொடுத்தான்.
அவரும் பவித்ராவின் நிலையை மருத்துவராகத் தெரிவிக்க, தேவையான மருந்துகளுடன் உடனடியாக ஆசிரமம் வந்து சேர்ந்தார் கீதா.
அடுத்த மூன்று மணிநேரம் பவித்ராவுக்குத் தேவையான சிகிச்சையினை கீதாவும், துளசியும் சேர்ந்து செய்தனர்.
சிகிச்சை முடிந்து வெளியில் வந்த இருவரையும் ஆர்வத்துடன் ஆதிராவும், விஜய்யும் பார்த்தனர்.
அவர்களது ஆர்வம்.. பவித்ராவின் உயிர் பற்றியதல்லவா! நொடியும் தாமதிக்காது, “அவளுடைய உயிருக்கு இனி எந்த ஆபத்துமில்லை, அவளது உடல் மருந்துகளை ஏற்க ஆரம்பித்துவிட்டது.” இரு பெண் மருத்துவரும் ஒரு சேர தெரிவித்தனர்.
பொழுது புலர்ந்து விட்டதால்.. “ஏதாவது அவசரமென்றால், கால் செய் விஜய்” என்று கூறிச்சென்றார் கீதா.
செல்லும் அவரிடம் “இதைப்பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம்.” ஆதிராவை பார்த்துக்கொண்டே கூறினான் விஜய். அவரும் சரியென்பதைப்போல் தலையசைத்து விடைபெற்றார்.
துளசி, “இனி நான் பார்த்துக்கொள்கிறேன் விஜய்” என்க,
“சரிங்கம்மா… நான் டியூட்டி முடித்து வருகிறேன். அவரிடம் பதிலுரைத்தாலும் அவனது கண்கள் அருகில் நின்றுருந்த ஆதிரா, “எங்கே போனாள்” எனத் தேடியது.
அவனின் தேடல் உணர்ந்த துளசி, “அவள் அப்போவே வெளியில் சென்றுவிட்டாள் விஜய்… தோட்டத்திலிருப்பாள்” என்றார்.
“சரிம்மா வர்றேன்” என நகர்ந்தவனின் கால்கள் அவனையும் கேளாது தோட்டத்தினை நோக்கி சென்றது. அங்கு, பரந்த வான்வெளியை வெறித்திருந்தாள் ஆதிரா.
விஜய்யின் காலடி சத்தம் கேட்டு திரும்பியவள்… “இந்த நிலையெல்லாம் மாறவே மாறாத விஜய்.. ‘தப்பு செய்தவன் எங்கோ நிம்மதியா உலவுகிறான். ஆனால், தவறே இழைக்கவில்லையென்றாலும் வலி, வேதனை பெண்ணிற்குத்தான்.’ இவ்வுலகமும் அவளை ஏதோ கல், மண் போன்று ஒதுக்கி வைத்துவிடும்.”
ஆதிராவின் வார்த்தைகள் ‘சத்தியமான உண்மை’ என்று அப்பெண்ணிற்காக வேதனை கொண்டான் விஜய்.
விஜய்யின் வேதனை உணர்ந்தாலும் தன் மனம் நினைப்பதை அவனிடம் வேண்டினாள்.
“பவிக்கான நியாயத்தையும், அவர்களுக்கான தண்டனையையும் நம் காவல்துறை உதவியில்லாமல் உன்னால் செய்ய முடியுமா விஜய்.?”
தொடரும்…