சிறகுகள் வீசியே 12 (நிறைவு)

அத்தியாயம் 12 :

“பவிக்கான நியாயத்தையும், அவர்களுக்கான தண்டனையையும் நம் காவல்துறை உதவியில்லாமல் உன்னால் செய்ய முடியுமா விஜய்.”

எங்கு வெளியில் பவித்ராவின் நிலை தெரிந்தால், அவளது வாழ்வே கேள்விக்குறியாகிவிடுமோ என்கிற பயத்தில் அவ்வாறு ஆதிரா கேட்டாள்.

அதுவும் உண்மைதானே, ‘பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைப்பதற்குள் அவள் வாழ்வே அல்லவா வீணாகிறது’.

‘நம் நாட்டின் சட்ட திட்டங்கள் அவ்வாறு உள்ளன.’

பவித்ராவுக்கு அநியாயம் இழைத்த அந்த அரக்கர்களுக்கு எப்படியாவது தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டுமென நினைத்தான்.

ஒரு வாரம் கடந்த நிலையில், பவித்ராவை பார்க்க ஆசிரமம் வந்தான் விஜய்.

பவித்ராவை ஆதிரா மற்றும் துளசியம்மா நன்றாகப் பார்த்துக்கொண்டனர். பவித்ராவின் அறைக்குள் விஜய் நுழைந்தான்.

திடீரென உள்ளே நுழைந்த ஆடவனைப் பார்த்ததும், விஜய் அறிமுகமானவனாக இருப்பினும்.. தான் அனுபவித்த நரக வேதனை மனதில் தோன்ற அலறித் துடித்தாள். உடல் வெட்டி இழுக்க, விஜய்யை வெளியே போகச்சொல்லி வெறிப்பிடித்தவள் போல் கத்தினாள்.

பதற்றத்துடன் உள் நுழைந்த ஆதிரா, விஜய்யை முறைத்து, “இங்கெதற்கு வந்த விஜய்.. அவள் ஆண்களைக் கண்டாலே பயப்படுறாள், நீ முதலில் வெளிய வா” என்று பவித்ராவுக்கு மேல் இவள் கத்தினாள்.

“முதலில் கத்துவதை நிறுத்து ஆதிரா… எனக்கும் அவளது உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்” என்றவன், மெல்ல பவித்ராவை நெருங்கினான்.

அவனது ஒவ்வொரு அடிக்கும், பவித்ரா கட்டிலோடு சுவற்றில் ஒன்றினாள். அவளது பயத்தினை அறிந்து முதன்முறையாக, தான் ஒரு ஆணாக இருப்பதற்குத் தலை குனிந்தான்.

பவித்ராவின் நிலையில் பரிதாபம் கொண்ட ஆதிரா… “ப்ளீஸ் விஜய்” என்க, கை நீட்டி அவளைத் தடுத்தான்.

பவித்ராவின் அருகில் சென்றவன், அவள் திமிர திமிர… அவளது கைகளைப்பற்றி… “உன்னுடைய சகோதரனா என்னை நினைத்துக்கோ பவித்ரா” என்றான் வலியுடன்.

“அந்த வார்த்தையையும் கூடத்தான் அர்த்தத்தையே மாத்தியாச்சே!” ஆதிரா கடுப்புடன் மொழிய, விஜய் பார்த்தப் பார்வையில் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அவனது தொடுதலில் பாதுகாப்பு உணர்வினையும், பேச்சில் கனிவையும் கண்டவள்…

“அண்ணா…” எனத் தாவி அவனை அணைத்துக்கொண்டாள். அவனும் ஆதரவாய் அவளின் முதுகினை தட்டிக்கொடுத்தான் அவளது அழுகை ஓயும் வரை.

விஜய்யின் இச்செயலில்.. ஆதிரா, மனதில் முதன்முறையாகத் தன்னவன் என்று கர்வம் கொண்டாள். ஆனால் ‘தனது நிலையறிந்து , இவன் தனக்குச் சொந்தமில்லையென்று நினைத்தாள்.’ அந்நொடி ‘இதயத்தில் மரண வலியை உணர்ந்தாள். இதற்குப் பெயர் தான் காதல் என்று அவள் மனம் அறியவில்லை.’ அதற்குக் காரணம், ‘அவள் உணர்வுகளில் பெண்ணாக இருந்தாலும் உடலளவில் ஆண் என்பதே.’

மற்ற ஆண்களைக் கண்டதும் உடல் தூக்கிப்போட அலறும் ஆதிரா, தன்னவனின் அணைப்பில் அடங்கியிருக்கிறாள் என்பதில் மகிழ்ந்தாள். பவித்ராவின் அழுகை ஓய்ந்ததும் விஜய் நிமிர்ந்து ஆதிராவை பார்க்க, அவனது பார்வையின் பொருளுணர்ந்து ஆதிரா வெளியேறினாள்.

“இதற்கு காரணம் யாரென்று நான் கேட்கமாட்டேன், நிச்சயம் இந்த கொடூரம் அந்த ரவீந்திரனாலே உனக்கு நிகழ்ந்திருக்கும். ஆனால், உன்னுடைய மருத்துவ அறிக்கை வேறு விதமாக சொல்கிறது.”

மூன்று, நான்கு பேர் அவளை கற்பழித்ததற்கான அடையாளம் இருப்பதாக கீதா சொல்லியதை மறைமுகமாகக் கேட்டான்.

ரவீந்திரன் தன்னை கடத்தியதற்கான காரணம் மற்றும் அவனின் நடத்தைகளை ஒருவித பயத்துடனேக் கூறினாள் பவித்ரா.

இரண்டு நாட்கள் பவித்ராவின் நிலையைக்கூட கருத்தில் கொள்ளாது தனது இச்சையை தீர்த்துக்கொண்ட ரவீந்திரன்,

“என்னை கொலை செய்ய முயற்சித்த உன்னை இப்படியே விட்டுவிடக் கூடாது… உனக்கு இந்த தண்டனையும் போதாது” எனக்கூறி குற்றுயிராய் கிடந்தவளை தனது அடியாட்களிடம் ஒப்படைத்தான்.

அத்தடியர்களும் அவள் நிலைக்கண்டு இரக்கம் கொள்ளாது தங்களது தேவைகளை நிறைவேற்றியப் பின்னரே அவளை விட்டனர்.

ரவீந்திரனை கொலை செய்ய வேண்டுமென்கிற உறுதியே பவித்ராவை உயிருடன் வைத்திருந்தது. இருப்பினும் தன்னிலை வெறுத்து, மனம் நொந்து.. தனக்கென்று யாருமில்லாத நிலையில் உயிருடன் இருக்க பிடிக்காது போகவே தற்கொலை செய்ய முயன்றாள்.

அனைத்தும் தெரிந்துகொண்ட விஜய்,

காவல்துறை அடுக்குகளிலிருந்து, தான் கொண்டு வந்திருந்த சில குற்றவாளிகளின் புகைப்படத்தைப் பவித்ராவிடம் காண்பித்து.. மற்ற மூன்று தடியர்கள் யாரென்று தெரிந்துக்கொண்டவன், அவளுக்கு ஆறுதலாக ஒருசில வார்த்தைகள் கூறிவிட்டு வெளியில் வந்தான்.

வெளியில் வந்தவனை முறைத்துக்கொண்டு, “வந்த வேலை முடிந்து விட்டதா.. ஏசிபி.சார், கேஸ் பைல் செய்து… மீடியா முன்பு அவளை அசிங்கப்படுத்தி நீங்க பப்ளிசிட்டி தேடிக்கோங்க…” ஆதிரா கோபத்துடன் கூறிக்கொண்டிருக்கும் போதே, எதுவும் கூறாமல் அமைதியாகச் சென்றுவிட்டான்.

அவன் மனதில்… “என்னை நம்ப மாட்டாயா ஆதிரா… என்னைப்பற்றித் தெரிந்தும் பப்ளிசிட்டிக்காக ஒரு பெண்ணின் வாழ்வை வீணாக்கும் அரக்கன் என்று நினைத்து விட்டாயே” விஜய்யின் மனம் ஊமையாய் அரற்றியது.

ஆதிரா அவ்வாறு கூறிய நாளிலிருந்து அவளிடம் நேரடியாகப் பேசுவதைத் தவிர்த்திருந்தான்.

அவனது ஒதுக்கம், பாரமுகம்.. ஆதிராவை கவலைக்கொள்ளச் செய்தது. ஏற்கனவே அவன்பால் மெல்ல சாயத் தொடங்கியவள், இந்தச் சிறு பிரிவில் அவன் மீது தன் மனம் கொண்ட காதலை உணர்ந்து கொண்டாள்.

ஒரு மாதம் கடந்த நிலையில்..

நள்ளிரவில்…. ஆதிராவின் போன் அலறியது…

அழைத்தது.. விஜய்… அவளின் மனதிற்கு மட்டுமே தெரிந்த காதலன்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாகத் தன்னிடம் பேசாமல் இருப்பவன், இந்த நேரத்தில் அழைப்பதற்கான காரணம் புரியாமல்.. குழப்பத்துடன் ஆன் செய்தாள்.

இவள் பேசுவதற்கு முன், “நான் ஆசிரமத்தின் வெளியில் தான் இருக்கேன்.. பவித்ராவையும் அழைத்து வா” என்று அதிகராமாகக் கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டான்.

இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்தவள், “என்ன ஏதுன்னு சொல்லாம இவரு வான்னு சொன்னா நாங்க போயிடனுமா…” வாய்க்குள் முணுமுணுத்தவள் தனக்கு அருகிலிருந்த மற்றொரு கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த பவித்ராவை உலுக்கி எழுப்பினாள்.

இப்போது அவள் நன்கு தேறியிருந்தாள். ஆதிராவிடம் மட்டுமே பழகினாள். அவளது உலகம் அந்தச் சிறிய அறையென்றே ஆனது.

ஆதிரா உலுக்கியதில் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்த பவித்ரா… “அய்யோ என்னை விடுங்க… விடுங்க” என்று நடுங்கினாள்.”

அவன் மீதுள்ள கோபத்தில் இவளை இவ்வாறு எழுப்பிய தன் மடத்தனத்தை எண்ணி தலையில் தட்டிக்கொண்டவள்.. “அய்யோ பவி, நான் தான்.. கண்ணைத் திறந்து பாரு” என்றாள்.

மெதுவாக, பவியும் ஆதிராவின் குரலில் பயம் நீங்கி கண்களைத் திறந்தாள்… “சாரிக்கா.. இன்னமும் உறக்கத்தில் வரும் கெட்ட கனவிலிருந்து என்னால் வெளிவர முடியவில்லை” என்றவளை ஆதரவாக அணைத்துக்கொண்டாள்.

சிறிது நேரத்தில் இருவரும் வெளியே வந்ததும், அவர்களை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்றான் விஜய்.

அடர்ந்த மரங்களுக்கு நடுவே சிறிய அளவிலான பாழடைந்த அறை ஒன்றிருந்தது. அதைப் பார்த்ததும் பவி பயத்தில் விஜய்யின் கைகளைப் பிடித்திக்கொண்டாள்.

ஆதிராவிற்குப் பயமிருந்தாலும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை.

பவியாவது தங்கையென்ற முறையில் அவனைப் பிடித்திருக்கிறாள், தான் எம்முறையில் அவனை நெருங்குவது என்பதே அதற்குக் காரணம். அவனை நெருங்க முடியாமல் அவள் மனம் படும் பாட்டை அறிந்தவள் ‘அவனன்றித் தானில்லை’ என்பதைப் புரிந்துக்கொண்டாள்.

இவர்கள் அந்த அறையினுள் நுழைந்தனர். அங்கு மூன்று தடியர்கள் கட்டிப்போட்டுக் கிடந்தனர்.

அவர்களுக்கு பின்னால் வலியில் கத்தியவாறு நகர முடியாது ரவீந்திரன் கீழே விழுந்து கிடந்தார்.

அவர்கள் உடல் முழுவதும் ரத்தம் தோய்ந்திருந்தது. ஆதிரா மற்றும் பவியை இங்கு அழைத்து வருவதற்கு முன்.. நரகமென்றால் என்னவென்று அந்தத் தடியர்களுக்குக் காண்பித்திருந்தான்.

ஆனால் அவர்களை எதற்கு விஜய் இங்கு அடைத்து வைத்திருக்கிறான் என்று ஆதிராவிற்குப் புரியவில்லை.

அப்போது தான் ஆதிரா கவனித்தாள், அவர்களைப் பார்த்ததும் பவி தன் உடல் விறைக்க.. வெறுமையான பார்வையுடன் நின்றிருப்பதை.

இப்போது புரிந்தது ஆதிராவிற்கு அந்தத் தடியர்கள் யாரென்று… புரிந்த நொடி விஜய் இருப்பதையும் மறந்தவளாய் அவர்களைத் தன் பங்கிற்கு நாலு காட்டுக்காட்டினாள்.

தன் கை வலிக்கும் வரை அவர்களை அடித்தவள், ஓய்ந்து போனவளாகத் தரையில் மண்டியிட்டு அமர, அவளருகில் வந்த விஜய்.. “உன் ஆத்திரம் அடங்கிவிட்டதா? நீ அடிப்பதால் மட்டும் இவர்கள் திருந்தி விடப்போகிறார்களா? நாளுக்கு நாள் இவர்களைப் போன்றோர் முளைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ‘தண்டனை அதிகரித்தால் தான் தவறுகள் குறையும்,’ இவர்களின் மரணம்.. இவர்களைப் போன்றோருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.. இனியொருமுறை எவனும் இத்தவறினை செய்ய யோசிக்க வேண்டும்” எனக் கர்ஜித்தவன்.. தான் ஏற்கனவே கொண்டு வந்து வைத்திருந்த பெட்ரோலை தடியர்கள் மற்றும் சற்றுத்தள்ளி எழ முடியாமல் கீழே விழுந்து கிடந்த ரவீந்திரன் மீதும் ஊற்றினான்.

ஆதிரா அவன் செய்யப் போகும் செயலில் அதிர்ந்தாள்.

அவளது அதிர்ச்சியில்… “என்ன ஆதிரா பயப்படுறியா? நீதானே சொன்ன, இவர்கள் நிம்மதியாக உலவுகிறார்கள் என்று, அதான் பேயா உலவ விடலாமென்று தீர்மானித்து விட்டேன்.”

விஜய்யின் வார்த்தைகளில், ஒரு நொடி பவித்ராவை தான் கண்ட நிலையை நினைத்துப் பார்த்த ஆதிரா எதுவும் கூறாமல் அமைதியாகத் தள்ளி நின்றுக்கொண்டாள்.

லைட்டரை பற்ற வைக்கப் போனவன் பவியின் அருகில் வந்து.. “நீயே அவர்களுக்கு மரணத் தண்டனை கொடுத்திடு. அதுதான் அவர்களுக்கு சரியாக இருக்கும்” என்றான்.

வண்ணத்துப்பூச்சியாய் திரிந்து கொண்டிருந்த தன்னுடைய அபிக்கும், எனக்கும் மற்ற பெண்களின் இந்நிலைக்கும் இவர்கள் தானே காரணமென்று நினைத்தவள், யோசிக்காது அவர்கள் மீது தீயினைப் பற்ற வைத்தாள்.

அவர்கள் எரிந்து சாம்பலாகும் வரை ஒருவித மகிழ்ச்சியுடன் நின்று பார்த்திருந்தனர்.

‘அவர்கள் தீயில் தன் புனிதம் மீட்டெடுக்கப்பட்டதாக எண்ணினாள் பவித்ரா.’

பவித்ராவிற்கும் இறந்துபோன மற்ற பெண்களுக்கும் நியாயம் கிடைத்துவிட்டதாக ஆதிரா நிம்மதியடைந்தாள்.

தன்னவளின் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டதாக விஜய்யின் காதல் மனம் அமைதி கொண்டது.

அந்த இரவு நேரத்திலேயே அமைச்சர் சண்முகபாண்டியனுக்கு அழைத்த விஜய், “எல்லாம் முடிந்தது சார், என் முடிவுக்கு அனுமதியளித்ததற்கு நன்றி” என்றான்.

“மரணத்தை விடப்பெரிய தண்டனையை அவர்களுக்கு கொடுக்க முடியவில்லையே விஜய்” என்ற அமைச்சர் “உங்களுடைய ராஜினாமாவை கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாமே” என்றார்.

“பதிவியிலிருந்து ஒன்றும் செய்ய முடியவில்லையே சார். மரணம் எதற்கும் தீர்வாகாது. ஆனால் மரணத்தை தவிர இவர்களுக்கு வேறு தண்டனையும் கொடுத்திட முடியாதே! எத்தனை தண்டனைகள் கொடுத்தாலும் இதெல்லாம் குறையப்போவதுமில்லை, மாறப்போவதுமில்லை. காக்கியை மாட்டிக்கிட்டு இனி என்னால நிமிர்ந்து நிற்க முடியாது சார்” என்ற விஜய் இணைப்பைத் துண்டித்தான்.

 

(தவறுக்கு எப்போதும் தவறே தீர்வாகாது. கதைக்கு வேண்டுமானால் இது ஏற்புடையதாக இருக்கலாம். நிஜத்தில் சாத்தியமற்றது. சாத்தியமானதாக மாறுமெனில், தண்டனைகள் வலுக்கப்படுமெனில் சிறியளவு மாற்றமாவது உண்டாகும்.)

இச்செயலால் விஜய் ஆதிராவின் மனதில் பலபடி உயர்ந்து நின்றான்.

விஜய்க்கு காவல் பணி எவ்வளவு பிடிக்குமென்று தெரிந்திருந்த ஆதிரா, அவன் ராஜினாமா செய்வதற்கு தான்தானே காரணம்.. “உன்னால் அவர்களுக்கு தண்டனை கொடுக்க முடியுமா? அன்று தான் கேட்டது தானே” என வருந்தினாள்.

“தேங்க்ஸ் விஜய்.”

ஆதிராவின் நன்றி எதற்கென்று அறிந்தவன், “இது நான் ஏற்கனவே எடுத்த முடிவுதான்” எனக்கூறி அவளின் வருத்தத்தை போக்கினான்.

தான் செய்தது சட்டத்திற்கு புறம்பான செயலென்று விஜய் அறிவான். ஆனால் அதற்காக அவனிடத்தில் கொஞ்சமும் வருத்தமில்லை.

சில நல்ல விஷயங்கள் கூட இங்கு கெட்டதாகத்தான் செய்ய முடிகிறது.

சில நாட்களுக்குப் பின்னர்,

எப்போதும் அறைக்குள்ளே முடங்கியிருக்கும் பவித்ரா இன்று ஆசிரமத்திலுள்ள அனைவருடனும் சென்று பேச ஆரம்பித்திருந்தாள்.

ஆனாலும் சிறிது நேரத்தில் விரக்தியுடன் ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்து இலக்கற்ற தூரத்தினை வெறிக்க ஆரம்பித்து விடுவாள்.

அப்படியான அவளின் நிலையில் ஒருநாள் அங்கு வந்த விஜய் பவியிடம் சென்று அமர்ந்தான். அவனது வருகை அறியாது அமர்ந்திருந்தவளிடம், “அடுத்து என்ன?” என்றான்.

அவனது குரலில் கலைந்தவள் “தெரியவில்லை” என்க,

“எத்தனை நாட்களுக்கு நடந்ததை நினைத்து வருத்தப்படப் போற?”

“அவர்களுக்கு என் கையால் தண்டனை அளித்தது எனக்கு மகிழ்ச்சி தான், ஆனால் மனம் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்குதே” என்றுக்கூறி அழுதாள்.

“அழுதாள் இங்கு எதுவும் சரியாகிவிடாது.. இந்த ஆசிரமம் மட்டும் உலகமல்ல, வெளியே வந்து பார்.. ‘உலகம் ரொம்ப அழகானது, அதற்கேற்ற ஆபத்துகளும் இருக்கத்தான் செய்யும்.’ நாம் தான் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள இங்குப் போராட வேண்டும். போராடாமா வாழ்க்கையை வாழ்ந்திட முடியுமா? ‘முயற்சி செய்தால் முடியாததுன்னு எதுவுமில்லை’, எல்லாருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்து. இங்கு எல்லோருமே மகிழ்ச்சியாக வாழத்தான் முயற்சி செய்கின்றனர். ஏற்படும் தடைகளைக் கண்டுகொள்ளாமல் முன்னேறுபவர்கள் அதில் வெற்றியடைகின்றனர்.”

சிறிது இடைவெளி விட்ட விஜய் மேலும் தனது பேச்சினை தொடர்ந்தான்.

“உனக்கு ஒன்று தெரியுமா?’ஆதிரா ஒரு திருநங்கை.’ அவளைப் போன்றோரை இச்சமுதாயம் எப்படிப் பார்க்குமென்று நான் கூறத் தேவையில்லை. பல தடைகளையும் தாண்டி இன்று அவள் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தாள் என்றால் அதற்குக் காரணம் அவளது ‘மனவலிமை’ தான்.. ‘பெண்கள் அனைவருக்கும் ஆண்களைவிட மனவலிமை அதிகம்’, அது ஏன் உனக்கில்லை.. நளையிலிருந்து மனவலிமையுடன், இவ்வுலகினை எதிர்த்து போராடத் தயாராகிவிட்ட புதிய பவித்ராவை நான் பார்க்க வேண்டும்.”

விஜய் பேச பேச உலகிலுள்ள போராட்டத்திற்கு நடுவில் நமக்கு நிகழ்ந்ததெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லையென்று எண்ணியவள், ஆதிரா திருநங்கை என்றதில் மொத்தமாக விழித்தாள்.

நடந்ததை நினைத்து வருந்தாமல் நாமும் ஆதிராவை போன்று தன்னம்பிக்கையுடனும் மனவலிமையுடனும் வாழ வேண்டுமென உறுதியெடுத்தாள்.

உறுதியெடுத்தவள் அதன்படி நடக்கவும் ஆரம்பித்தாள். அனைவரிடமும் சகஜமாகப் பழகினாள். இப்போதெல்லாம் எந்த ஆணை பார்த்தும் பயம் கொள்வதில்லை. தனியாக வெளியே சென்று வரத் தொடங்கினாள்.

பவித்ராவின் மாற்றத்தில் பெரிதும் மகிழ்ந்தது ஆதிரா தான்.

ஏனென்றால், ‘சமுதாயம் ஒதுக்கி வைக்கும் நிலையில் ஒரு பெண் அனுபவிக்கும் வேதனைகளை முழுதாக அனுபவித்தவள் அல்லவா!’

தான் ஒரு திருநங்கை என்பதால் ஒதுக்கப்பட்டோம், அவள் கற்பிழந்தவள் என்பதால் ஒதுக்கப்படுவாள் என்பதால் பவித்ராவை நினைத்து வருந்தியிருந்தாள்.

இன்று அந்த வருத்தம் ஆதிராவிடமிருந்து நீங்கியது. மனம் லேசானதை போல் உணர்ந்தாள். இதற்குக் காரணம் தன்னவன் என்பதில் ‘விஜய்யின் மீது காதலும் அதிகரித்தது.’

ஒரு நொடி தன்னிலை மறந்து அவனை இறுக அணைத்து இதழ் பதிக்க வேணுடுமென நினைத்தவள் பதறினாள். இதெப்படி சாத்தியமென்று சிந்தித்தாள். ஆனால் இனியும் அவனைத் தவிர்த்து வாழ முடியாதென முடிவெடுத்து அவனிடம் மனம் திறந்து பேசவேண்டுமென நினைத்தாள்.

பவித்ரா தனது படிப்பினைத் தொடர வழி செய்து தருமாறு கேட்டிருந்ததால், அது விஷயமாகப் பேச.. விஜய் ஆசிரமம் வந்தான்.

பவியிடம் பேசிவிட்டு, “நாளை முதல் நீ கல்லூரிக்கு செல்லலாம், சுதந்திரமாகப் பறக்கலாம்” என்று விடைபெற்று வெளியேறியவனிடம், “நிச்சயம் நான் என் சிறகுகளை நீட்டி பறப்பேன்” என நிமிர்வுடன் தெரிவித்தாள் பவித்ரா.

விஜய் முதன் முதலாக பார்த்த பவித்ராவை இன்று மீண்டும் பார்த்ததைப்போல் உணர்ந்தான்.

பவியின் நம்பிக்கையான பேச்சில் மகிழ்வுடன் வெளியில் வந்தவனைக் கண்டதும், அவனிடம் தாவும் மனதினை அடக்க வழி தெரியாமல் அவனைப் பார்த்துப் புன்னகை சிந்தினாள் ஆதிரா.

ஆனால், அவனோ ஆதிராவை கண்டும் காணாதது போன்று கடந்து சென்றான். அவனது புறக்கணிப்பு அவளது காதல் மனதை வலிக்கச்செய்தது, ‘அந்த வலி உண்மையில் தானும் உணர்வுகள் அடங்கிய பெண்தான் என்பதை உணரச்செய்தது.’ அது தன்னாலும் அவனுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையை மனதினுள் ஆழ பதித்தது.

தான் காதலை உணர்ந்ததும் அவனது விலகலை அறிந்தவள் “தன்னை வெறுத்து விட்டானோ” என்று கண்ணீரை சிந்தினாள்.

அப்போது வலிய கரமொன்று ஆதிராவின் கண்ணீரைத் துடைத்தது. நிமிர்ந்து பார்த்தவள் இன்பமாக அதிர்ந்தாள். சிறு புன்னகையுடன் விஜய் நின்றிருந்தான். அவள் முன் மண்டியிட்டுக் கரம் நீட்டி “ஐ லவ் யூ ஆதி” என்றான்.

இம்முறை எவ்வித மறுப்புமின்றி, கண்ணீருடன் அவனது காதலை ஏற்றவள் சுற்றுப்புறம் மறந்து அவனை அணைத்துக்கொண்டாள். தன்னவளின் முதல் காதல் அணைப்பில் விஜய் துள்ளி குதித்தான்.

சில நொடிகளுக்குப் பின் தன்னிடமிருந்து விலகியவளின் முகம் குழப்பமாக இருக்கவும், என்ன என்றான். ஆதிரா தயங்கவும்… அவளின் மனதினை சரியாக உணர்ந்தவன் “உடலுறவு மட்டும் வாழ்க்கையல்ல ஆதி, வாழ்க்கையில் அது ஒரு அங்கம், அவ்வளவே.. அதில்லாமல் என் காதலால் உன்னை நன்கு பார்த்துக்கொள்ள என்னால் முடியும். ‘எனக்கு உன் அன்பும், காதலும் தான் வேண்டுமே தவிர உன் உடலல்ல.’ இதுக்குமேல நிறைய சொல்லலாம். ஆனா கேட்கிற உனக்கு சொற்பொழிவா தெரிஞ்சிட்டா? நீ நீயா ஒரு ஆதி. எனக்கு நீ எப்படி இருக்கியோ அப்படித்தான் வேணும்” என உறுதியுடன் வெளிவந்த அவன் வார்த்தைகளில் இன்பமாகக் கரைந்தாள்.

“ஐ லவ் யூ விஜய்” எனக்கூறி இம்முறை அதிக அழுத்தத்துடன் அவனை அணைத்துக்கொண்டாள்.

**************

தனக்கு நடந்த நிகழ்வினை மறந்து.. புதுத் தெளிவுடனும், மனவலிமையுடனும்.. தன் சிறகுகள் நீட்டி பறக்க… முதல் அடியினை இப்பரந்த பூமியில் உற்சாகமாக எடுத்து வைத்த பவித்ராவை விஜய்யும், ஆதிராவும் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

துவண்டிருந்தவள் துணிவுடன் உயிர்த்தெழ காரணமாக இருந்த தன்னவனின் தோளில் காதலுடன் சாய்ந்து கொண்டாள் ஆதிரா.

அவர்களது காதல் வாழ்க்கை காமமின்றி அன்பினால் சிறக்க வாழ்த்துவோம்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டெழுந்து சுதந்திரமாக வாழ வழி வகைச் செய்வோம்.

திருநங்கைகளாயினும் அவர்களும் மனிதர்களே… ‘அவர்களுக்கும் ஆசைகள், உணர்வுகள் உண்டு’… அவர்களையும் மதித்து நம்மில் ஒருவராய் பாவிப்போம்.

‘இயற்கைக்கு முரண்பாடான ஒன்று… சமுதாய மாற்றத்திற்கு வழிவகுக்குமெனில், முரண்பட்ட நிகழ்வும் சரியே!’

சிறகுகள் விரியட்டும்.🕊

error: Content is protected !!
Scroll to Top