சிறகுகள் வீசியே 2

அத்தியாயம் 2

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த விஜய்யின் மொபைல் ஒலி எழுப்பியது. நடந்த சம்பவம் தவிப்பை ஏற்படுத்த உறக்கம் வராமல் நள்ளிரவு வரை விழித்திருந்தவன் அப்போது தான் நித்திரையில் விழுந்தான். அரை விழி திறந்து மொபைல் ஆன் செய்ய, திரையில் ஒளிர்ந்த பெண்ணின் முகம் அந்நொடி உண்மையிலேயே அவனின் தவிக்கும் மனதை அமைதி படுத்தியது.

அவள் ‘ஆதிரா’… விஜய் காதலிக்கும் பெண். ஆம் விஜய் மட்டுமே அவளை காதலிக்கின்றான். அவள் காத்திலிக்கின்றாளா என்றால் அதற்கான பதில் அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆமென்று சொல்லி அவனை நெருங்கவும் முடியாது, இல்லையென்று சொல்லி விலகவும் முடியாது. முரண்பாடான நிலையில் அவள்.

தன்னவள் என்றதும் அரை தூக்கத்தை விரட்டியடித்து நொடியில் முகத்தில் மலர்ச்சியை கொண்டு வந்தவனாய் மெத்தையில் எழுந்தமர்ந்து, மூச்சினை ஆழ்ந்து சுவாசித்தான்.

அதற்குள் அவள் பலமுறை ஹலோ என்ற வார்த்தையை உச்சரித்திருந்தாள்.

“ஹலோ சர்.. ஆர் யூ தேர்?”

“சொல்லு ஆதி…” அவளின் பெயருக்கும் வளித்துவிடுமோ என்று மென்மையான குரலில் வினவினான்.

“கால் மீ ஆதிரா… திஸ் இஸ் அஃபீஸியல் கால்.” வார்த்தைகள் அவளின் பற்களுக்கிடையே கடிப்பட்டது.

(ஆதிராவும் காவல்துறையில் ஆய்வாளராய் பணி புரிகிறாள்.)

அன் அஃபிஸியல் காலாக இருந்திருந்தாலும் அவள் இப்படித்தான் சொல்லியிருப்பாள் என்பதை அறிந்தவன் மேற்கொண்டு அவளிடம் வாதிடாது, “யா டெல் மீ” என்றான்.

“உங்களை நேரில் மீட் பண்ண முடியுமா?”

விஜய் அவளை பார்க்க சென்றாலே எரிந்து விழுபவள், சந்திக்கலாமா என்றதும் மணியை பார்த்தான். நள்ளிரவு கடந்து முன் காலைப்பொழுது தொடங்கியிருந்தது. இந்நேரத்தில் அழைக்கிறாள் என்றால் விஷயம் பெரியதென்று யூகித்த விஜய்,

“எங்கு வர வேண்டும்” என்றான். அவனது குரல் மென்மையில் இருந்து, ஒரு காவல்துறை அதிகாரிக்கே உரித்தான கம்பீரத்திற்கு மாறியிருந்தது.

வரவேண்டிய இடத்தைக் கூறிய ஆதிரா, “எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்க” என்றாள்.

அடுத்த பத்து நிமிடங்களில் முகம் கழுவி, இரவு உடையிலிருந்து வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் காக்கி பேண்டிற்கு மாறியவன் தனது புல்லட்டில் ஏறி ஆதிரா வர சொல்லிய இடத்தை நோக்கிச் சென்றான்.

தார் சாலை எங்கும் ஒன்றிரண்டு வாகனங்கள் சென்று கொண்டிருக்க ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

விஜய் பாதி தூரம் சென்றிருந்தான். ஒரு இளம்பெண் சாலையோரம் தனித்து நின்றிருப்பதைக் கண்டவன், அவளருகில் சென்று தனது வாகனத்தை நிறுத்தினான்.

தனக்கு அருகில் புல்லட் வந்து நிற்பதை உணர்ந்த அப்பெண் முதலில் பயந்து விலக, விஜய்யின் தோற்றமும், காக்கி பேண்ட்டும், பூட்சும் அவனை காவல்துறை அதிகாரியென பறைசாற்றியது. அதுவுமில்லாமல் நேற்று அவன் ஊடகவியலாளர்கள் முன் அழுத்தமாக நின்று கூறிய வார்த்தைகளை தொலைக்காட்சியின் வழியாக பார்த்திருந்தவள் பயம் நீங்கியவளாக அவனை பார்த்து “குட் மார்னிங் சார்” என்றாள்.

பதிலுக்கு காலை வணக்கம் கூறியவன், “இந்நேரத்தில் எங்க போறீங்க, உங்க பெயர் என்ன?” என்று கேட்ட பிறகே அவளின் கைகளில் இருந்த பூக்கூடையை பார்த்திருந்தான்.

“என் பெயர் ‘பவித்ரா’, இப்போவே பேருந்து நிலையம் போனாதான் சார்.. வெளியூரிலிருந்து வந்திறங்கும் பயணிகளிடம் விடிவதற்கு முன் பூக்களை விற்றுவிட்டு நான் வீடு செல்ல முடியும்” என்றாள்.

அவளின் தோற்றத்தை விஜய் ஆராய்ந்து பார்க்க, இருபது வயதிருக்குமென்று கணித்தான்.

“இந்நேரத்தில் துணையின்றி வரலாமா?,” எனக் கேட்டவன் தானே பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாக சொல்லி புல்லட்டில் ஏறுமாறு கூறினான்.

விஜய் யாரென்று அறிந்திருந்தவள் எவ்வித பயமுமின்றி வண்டியில் ஏறிக்கொள்ள, அவன் பேருந்து நிலையம் சென்று அவளை இறக்கிவிட்டான்.

நன்றி தெரிவித்தவளிடம், “நீ படிக்கவில்லையா?” எனக் கேட்டான்.

இளங்கலை இரண்டாமாண்டு படிப்பதாகவும், தாய் தந்தை இல்லாததால் மாமா வீட்டில் வசிப்பதாகவும், அத்தை தன்னை பாரமாக நினைப்பதால்.. நானே மாமாவின் உதவியோடு மல்லிகை தோட்டம் மற்றும் ரோஜா தோட்டம் அமர்த்தி அதில் வரும் பூக்களை விற்று என்னுடைய செலவுகளை பார்த்துக்கொள்வதாக சொல்லவும், அந்த சிறு பெண் மீது விஜய்க்கு பரிவும், மரியாதையும் உருவாகியது.

வறுமையில், யாருமற்ற நிலையில் துவண்டு விடாமல் உழைத்து படிக்கும் அவளை பாராட்டியவன், ‘எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் தன்னிடம் கேட்குமாறு தனது பெர்சனல் மொபைல் எண்ணை கொடுத்துவிட்டு அவளிடமிருந்து விடைபெறும் வகையில் புல்லட்டினை உயிர்ப்பித்தான்.

வண்டியை முடுக்கியவனை அழைத்தவள், “நேற்று பத்திரிக்கைக்காரர்களுக்கு நீங்க கொடுத்த பதில் செம” என்க, பவித்ராவை கடந்து சென்றான்.

செல்லும் விஜய்யை சிறு புன்னகையுடன் பார்த்து நின்றிருந்தாள்.

‘இருவருக்கும் பின்னாளில் சம்மந்தத்தை ஏற்படுத்தவே, இப்போது இவர்களை சந்திக்க வைத்தது விதி. இதனை இருவரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் இவர்களின் சந்திப்பு இப்போது அமைந்தது போன்று இனிமையானதாக இருக்க போவதில்லை என்பதையும் விதி மட்டுமே அறிந்திருந்தது.’

வண்டியை செலுத்திக் கொண்டிருந்த விஜய்யின் மனதில் பவித்ராவின் முகம் அழுத்தமாகப் பதிந்தது. ஏதோ இனம் புரியா உறவும், பாசமும் தோன்றியது. அது இளமை காலத்தில் தான் இருந்ததைப் போலவே பவித்ராவும் சொந்த உழைப்பில் படிப்பதாகக் கூறியதில் ஏற்பட்டதாக இருக்கலாமென்று அவனே நினைத்தும் கொண்டான்.

இந்த காலத்தில் அலங்காரம் செய்து கொண்டு மாடலாக வலம் வரவே ஆசைப்படும் பெண்களுக்கு மத்தியில்… பூ விற்கும் தொழிலை குறைவாக எண்ணாமல், மிடுக்குடன் கூறிய பவித்ராவை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது.

பவித்ராவின் நினைவுடனே விஜய் ஆதிரா அழைத்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

வண்டியை விட்டு இறங்கியவன் தலையை உயர்த்திப் பார்க்க,

“சிறகுகள்” என்ற பெயற்பலகை அவனை இரு கரம் கொண்டு வரவேற்றது.

‘ஆதரவற்றோர்களுக்கான இல்லம்’.

இங்கு யாருமின்றி நிராதரவற்ற நிலையில் இருக்கும்.. ‘பிறந்த குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை’ சுதந்திரமாக தங்கள் சிறகுகளை நீட்டி பறக்க ‘துளசி’ என்ற உயர்ந்த பெண்மணியால் நடத்தப்படுகிறது.

விஜய் இந்த ஆசிரமத்தில் வளர்ந்தவன் தான், படித்து முடித்து வேலையில் சேர்ந்ததும், இனியும் இவர்களுக்குப் பாரமாக இருக்கக்கூடாதென வெளியே சென்றுவிட்டான். ஆனால், இன்றுவரை ‘தன் சம்பளத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை ஆசிரமத்திற்கு அளித்து வருகிறான்.’

ஆதிராவும் இங்கு தான், ஆண் பிள்ளைகள் வளர்ந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டால் அவர்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறி தங்களுக்கென வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.

ஆனால், பெண் பிள்ளைகள் அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் விருப்பப்பட்டால் இங்கேயே தங்கிக்கொள்ளலாம். ஆதலால், ஆதிரா இன்னமும் ஆசிரமத்திலேயே தான் இருக்கின்றாள். இங்கு இருக்கும் அனைவருக்கும் கைத்தொழில் ஏற்பாடு செய்து அவர்களின் வருமானத்திற்கும் பிற செலவுகளுக்கும் துளசி அம்மா வழி செய்து கொடுத்துள்ளார்.

வாயிலிலே நின்றிருந்த விஜய்க்கு அவனின் சிறு வயது காலத்தை நினைப்படுத்த, முயன்று அவற்றை புறம் தள்ளி உள்ளே நுழைந்தவனை, மிகுந்த பரபரப்புடன் எதிர் கொண்டாள் ஆதிரா. அந்நேரத்திலும் ஆதிரா காக்கி உடையிலே இருந்தாள்.

இன்று இரவு நேர பணி அவளுக்கு இல்லையென்று விஜய்க்கு நன்றாகத் தெரியும்.

கைகள் நடுங்க நின்றிருந்த ஆதிராவின் உடல்மொழியே விஜய்க்கு விபரீதமாக ஏதோ ஒன்று நடந்திருப்பதை உணர்த்தியது. சாதாரணமாகவே ஆதிரா எதற்கும் பயப்படும் ரகம் கிடையாது.

“வாட் ஹேப்பெண்ட் மிஸ்.ஆதிரா,” அவள் அஃபிஸியல் என்று அழைத்ததால் அவனும் ஃபார்மலாகவே வினவினான்.

அவனின் ஆதி என்ற அழைப்பை அவளின் மனம் எதிர்பார்த்ததோ, எதற்காக விஜய்யை வர சொன்னோம் என்பதை ஒரு கணம் மறந்தவளாய் அசைவற்று நின்றவள், அவனின் சொடக்கு ஒலியால் சுயம் பெற்று காரணத்தை விளக்கினாள்.

இரவு எட்டு மணியளவில், ஆதிரா தனது பணியை முடித்துவிட்டு கிளம்ப இருந்த வேளையில், உடலெங்கும் நகக் கீறல்களுடனும், தடித்து வீங்கிய கன்னங்களில் வழிந்து காய்ந்த கண்ணீர் தடத்துடனும் ஒரு இளம்பெண் காவல் நிலையத்திற்கு வந்திருந்தாள். அவளின் காயங்களுக்கான காரணம் புரியாத ஆதிரா என்னவென்று விசாரிக்க, “பெயர் ரம்யா” என்றவள், தன்னை ஒருவன் நேற்று கடத்தி சென்று கற்பழித்து விட்டதாகவும்.., அவன் சுய நினைவில் மட்டுமில்லாது குடிபோதையில் கூட தன்னை மீண்டும் மீண்டும் வன்புணர்வு செய்ததாகவும், அவன் அதீத குடிபோதையில் மயங்கிய சமயம் அவனிடமிருந்து தான் தப்பி விட்டதாகவும் தெரிவித்தாள்.

அவளின் நிலை கேட்ட ஆதிராவுக்கு அந்த காமுகனை துப்பாக்கியால் சுட வேண்டுமென்கிற வெறி எழுந்தது.

“அவன் யாரென்று தெரியுமா?, ஏதேனும் அடையாளங்கள் சொல்ல முடியுமா?”, ஆதிரா கேட்ட கேள்விக்கு.. “அவன் எனக்கு ஊசியின் மூலம் போதை மருந்து செலுத்தி மயக்கத்திலே வைத்திருந்ததால் அவனின் முகம் சரியாக மனதில் பதியவில்லை, தப்பித்து வரும்போது அவனிடம் மீண்டும் மாட்டிவிடக் கூடாதென்கிற பயம் அதிகமாக இருந்ததால் அவனை கூர்ந்து கவனிக்கவில்லை” என்று பதில் கூறினாள்.

சின்ன க்ளூ கூட இல்லாமல் எங்கு தொடங்குவதென்று ஆதிரா சிந்திக்க, ஏதோ ஞாபகம் வர பெற்றவளாக தன்னுடைய மண்டையை தட்டி யோசித்த ரம்யா.. “அவனின் இடது கையில் ராட்சத பாம்பின் உருவத்தை பச்சை குத்தியிருந்தான்” என்றாள்.

அடுத்து ரம்யாவிடம் எழுத்து மூலமாக புகாரினை பதிவு செய்த ஆதிரா அவளை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தாள்.

ரம்யா மனதளவில் சற்று திடம் பெற்றவளாக இருந்ததால், தனக்கு நேர்ந்த பாதிப்பில் துவண்டு போகாமல்… காவலர்களின் உதவியை நாடியிருந்தாள்.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு மருத்துவரை சந்தித்த ஆதிரா, “ரம்யாவின் தற்போதைய நிலை என்ன?” என்று விசாரித்தாள்.

“யாரோ ஒருவனால் மிகக் கொடூரமான முறையில் வன்புணர்வால் பாதிக்கப்பட்டு இருக்கின்றாள். இவளிடத்தில் வேறொரு பெண் இருந்திருந்தால் நிச்சயம் மரணித்திருப்பாள். ஆனால் இவள், திடமாக இருப்பதே ஆச்சரியம் தான்… உடல் முழுக்க நகக் கீறல்கள், பற்தடங்கள் பதிந்துள்ளன.. அவளின் மன வலிமையே அவளை குணப்படுத்தி விடும்… உயிருக்கு எவ்வித ஆபத்தும் நேரிடாது.”

மருத்துவர் சொல்லியதில், உயிருக்கு ஒன்றுமாகது என்ற வார்த்தைக்கு பிறகே சீராக சுவாசம் பெற்றாள் ஆதிரா.

“டாக்டர் ரம்யாவை நான் பார்க்கலாமா?”

“போய் பாருங்க.”

மருத்துவர் அனுமதியளித்ததும் விரைந்து உள் நுழைந்தவளை ரம்யாவின் நிலை ஒரு நொடி பதற செய்தது. மூச்சினை ஆழ்ந்து வெளியேற்றி தன்னை சமன் செய்த பின்னரே ரம்யாவை நெருங்கினாள் ஆதிரா. ரம்யாவின் கரம் பற்ற, கண் விழித்தவள்… “அவனைப்பற்றி தகவல் கிடைத்ததா மேடம்” என்றாள்.

“சீக்கிரம் கண்டுபிடித்து விடலாம்” என்ற ஆதிராவுக்கு உண்மையிலே அவளின் கேள்வி ஆச்சிரியத்தை தான் அளித்தது. இந்நிலையில் எந்தவொரு பெண்ணும் கதறி துடிப்பாள், யார் முகத்தையும் காண அஞ்சுவாள், மற்றவர்களை வெறுப்பாள், ஆனால் இவள் குற்றவாளியை கேட்கின்றாள். ரம்யாவின் திடத்தை மனதோடு பாராட்டினாள் ஆதிரா.

“முகவரி சொல்லும்மா, உன் பெற்றோருக்கு தகவல் அளிக்க வேண்டும்.”

முகவரி கேட்ட ஆதிராவுக்கு விரக்தி புன்னகை ஒன்றை உதிர்த்த ரம்யா…

“எனக்கு அப்பா, அம்மா, அண்ணா, அக்கா என்று எல்லா உறவுகளும் இருக்கிறது மேடம்… ஆனால், ஒருவனால் கற்பழிக்கப்பட்ட என்னை மகளாகவோ, தங்கை என்ற உறவாகவோ ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு அசிங்கமாக இருக்குமாம்… இந்த விஷயம் மற்றவர்களுக்கு தெரிந்தால் அவர்களுக்கு அசிங்கமாம். நாளை அவர்களால் வெளியில் தலைக்காட்ட முடியாதாம்… சோ, என்னை வீட்டை விட்டு போ.. இனி உனக்கும் எங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை சொல்லிட்டாங்க” என தன்னுடைய நிலையை விளக்கினாள்.

ரம்யாவின் நீண்ட வரிகளுக்கு “ம்” என்கிற ஒற்றை எழுத்தினை உதிர்த்த ஆதிரா… “இந்நிலையில் நீ புகார் கொடுத்ததே எனக்கு ஆச்சரியம் தான்… உன் பெற்றோர் உன்னிடம் கூறிய காரணங்கள் யாவும் உனக்கு நேரிடும், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு செல்லும்போது மீடியாக்கள் உன்னை பலவாறு சித்தரிக்கலாம்,”

ஆதிரா என்ன சொல்ல வருகிறாள் என்பதை கிரகித்த ரம்யா.. “இப்போது எனக்கென்று யாருமில்லை மேடம், என்னைப்பற்றி நான் கவலைப்படுவதை விட.. என்னுடைய இந்த செயல், என்னைப்போன்ற மற்ற பெண்களுக்கு ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டும். துவண்டுவிடாமல் எதிர்த்து போராடும் குணம் பெற வேண்டும். அதற்காக எதையும் எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.” ஒருவித நிமிர்வுடன் தனது பதிலை சொல்லியிருந்தாள்.

தான் வர சொன்னதற்கான காரணத்தை முழுவதும் சொல்லி முடித்த ஆதிரா, “இப்போ அவளை காணவில்லை விஜய். அங்கு பணிபுரியும் செவிலி என்னை அழைத்து தகவல் சொல்லியதும் உன்னை அழைத்தேன்” என்றாள்.

“நீங்க உடன் இருக்கவில்லையா?”

விஜய்யின் மரியாதையான பேச்சினை அவளின் மனம் அறவே வெறுக்க, அது அவளின் கண்களில் பிரதிபலித்தது.

அதனை விஜய்யும் உணர்ந்தான்.

“நான் இவ்வளவு நேரமும் அங்கு இருந்துட்டு அப்போதான் ஆசிரமத்தின் உள்ளே நுழைந்தேன் விஜய்.”

ஆதிரா விஜய்யிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது, உடல் முழுவதும் பச்சை வர்ண போர்வையால் மறைக்கப்பட்டு கண்கள் மட்டுமே தெரியும் வகையில் ஒரு உருவம் அவர்களை நோக்கி வந்தது.

விஜய்க்கு பின்புறமாக வந்த உருவத்தினை கண்ட ஆதிரா, அவனிடம் சொல்லுவதற்கு முன்.. அவர்களை நெருங்கிவிட்ட அவ்வுருவம் அவர்களின் காலடியில் மயங்கி சரிந்தது.

கீழே விழுந்த உருவம் யாராக இருக்குமென்று ஆதிரா யோசிக்கையிலே, “இது ரம்யாவாகத்தான் இருக்கும் மிஸ். ஆதிரா, போர்வையை விலக்கி பாருங்க” என்ற விஜய், “இந்த பச்சை வர்ண போர்வை நம் ஜி.எச்’ல் பயன்படுத்துவது. சோ, நான் சொல்வது சரியாக இருக்கும்” என்றான்.

விஜய் சொல்லியது போலவே, அப்போர்வைக்குள்ளிருந்த உருவம் ரம்யாவே தான்.

விஜய்யின் கணிப்பு எப்போதும் பொய்த்துப் போனதில்லை என்பதை பல வழக்குகளில் பார்த்திருந்தவளுக்கு எப்போதும் அவனின் கணிப்பின் மீது, அவன் சொன்னால் சரியாக இருக்குமென்கிற நம்பிக்கை உண்டு.

“இவள் இந்தநிலையில் இங்கு வர என்ன காரணமாக இருக்கும். ஒரு மணி நேரத்திற்கு முன்பு தானே, நான் அங்கிருந்து வந்தேன்.”

தனக்குத்தானே கேட்பதைப்போல், விஜய்யிடம் கேட்டிருந்தாள் ஆதிரா.

“அதற்கான காரணத்தை அவள் தான் சொல்ல வேண்டும்” என்றவன் ரம்யாவை தனது கைகளில் ஏந்தி ஆசிரமத்திற்கு உள் சென்றான். அவனை ஆதிரா பின் தொடர்ந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top