அத்தியாயம் 3 :
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்.
– பாரதியார்.
பாரதியார் பாடல்களின் மீது விஜய்க்கு எப்போதும் ஒரு தனி விருப்பம். மனம் சோர்ந்து, அடுத்து என்னயென்று சிந்திக்க தடுமாறும் வேளைகளில் எல்லாம் பாரதியார் பாடல்களை முணுமுணுத்திடுவான்.
இப்போதும் ரம்யாவை துளசி அம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டு தனது வீடு நோக்கி பயணித்தவனின் உதடுகள் தன்னிச்சையாக ‘புதுமைப்பெண்’ என்ற தலைப்பில் பாரதியார் எழுதிய பாடல் வரிகளை முணுமுணுக்க, மேற்கண்ட வரிகள் வரவும் அவனின் இதழ் அவ்வரிகளின் அர்த்தம் உணர்ந்து இகழ்ச்சியாய் வளைந்தது.
‘ஆணுக்கு பெண் இங்கு நிகர்’ என்பது, பெண் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் வெறும் எழுத்தளவில் மட்டுமே…
பெண் உரிமைக்காக அதிகம் பாடுபட்ட தலைவர்கள் இப்போது உயிருடன் இருந்திருந்தால் கூட ‘பெண்ணுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமையை எதிர்த்து ஒன்றும் செய்திருக்க முடியாது.’
தன்போக்கில் சிந்தித்துக் கொண்டே வந்தவனின் மனம் மெல்ல ரம்யாவின் பக்கம் திரும்பியது.
கீழே மயங்கி விழுந்த ரம்யாவை, ஆசிரமத்தில் இருப்போருக்காக அங்கேயே இருக்கும் சிறு கிளினிக்கில் சேர்த்தனர்.
ஆசிரமத்தினை நடத்தும் துளசியம்மா ஒரு மருத்துவர்.
ரம்யாவை பரிசோதித்தவர், “களைப்பால் மயக்கம் அடைந்திருக்கிறாள்” என்றார்.
மயக்கம் கலைந்து ரம்யா எழும் வரை விஜய் மற்றும் ஆதிரா அவளுக்காக காத்திருந்தனர்.
மருந்தின் உபயத்தால் அடுத்த இருபது நிமிடங்களில் ரம்யா கண் விழித்தாள்.
ரம்யா எழுந்ததும் விஜய் யாரெனும் விதமாக ஆதிராவை நோக்க, அவளின் பார்வையின் அர்த்தம் உணர்ந்த ஆதிரா… “நகரத்தின் துணை ஆணையர்” என்று கூறினாள். அதன் பிறகு இந்நிலையில் தான் மருத்துவமனையை விட்டு வந்ததற்கான காரணத்தை இருவரிடமும் பகிர்ந்தாள்.
ஓநாயின் செயலால் உடல் முழுவதும் ஏற்பட்டிருக்கும் ரணத்தாலும், உயர் வீரியம் கொண்ட மருந்தின் தாக்கத்தாலும் அரை மயக்க நிலையில் ரம்யா மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்தாள்.
அங்கிருந்து ஆதிரா கிளம்பிய அடுத்த நொடி ரம்யாவின் அறைக்குள் தடியான ஒரு ஆள் மருத்துவர் தோற்றத்தில் நுழைந்தான்.
ரம்யாவின் தேவைகளுக்காக அங்கிருந்த செவிலியை வேறொரு காரணம் சொல்லி வெளியேற்றியவன் யாருக்கோ கைபேசி வாயிலாக அழைத்திருந்தான்.
எதிர்முனையில் ஏற்கப்பட்டதும், “இங்கு தான் சார் இருக்காள்… போட்டு தள்ளிடவா” என்றான். அங்கு என்ன சொல்லப்பட்டதோ அமைதியாக வெளியேறி, அடுத்த சில நிமிடங்களில் மேலும் இருவருடன் நுழைந்திருந்தான்.
ரம்யாவை ஸ்டெச்சரில் வைத்து வெளியே தூக்கி செல்ல, குறுக்கே எதிர்ப்பட்ட மருத்துவரின் கண்ணில் படாமல் இருப்பதற்காக மூவரும் ரம்யாவை அப்படியே தனித்து விட்டுவிட்டு ஆளுக்கொரு திசையில் மறைந்து நின்றனர். மயக்க நிலையிலும் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையினை மன திடத்தினால் கிரகித்தவள், சமயம் பார்த்து மூவரிடமிருந்து தப்பி… ஆதிராவை தேடி அவள் வசிக்கும் ஆசிரமம் வந்து சேர்ந்திருந்தாள்.
பொது இடமான மருத்துவமனையில், பல பேர் வந்து செல்லும் நிலையில் கூட ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்த விஜய்.. ரம்யாவின் மூலமாக பெண்களை கற்பழித்து அவர்களின் வாழ்க்கையை கருமை அடையச்செய்யும் அந்த வெறிநாயினை வேட்டையாடி விரைவில் இந்த வழக்கினை முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.
தன்னுடைய வேகத்தினை புல்லட்டில் காட்டியவன் அதே வேகத்துடன் வீட்டிற்கு சென்று தயாராகி காவல் நிலையம் வந்திருந்தான். அவனுக்கு முன்பாகவே ஆதிராவும் வந்திருந்தாள்.
விஜய் நுழைந்ததும் காவல் நிலையமே பரபரப்பாகியது. விஜய்க்கு முன்பாக ஆதிரா வந்திருந்தாலும், அவன் வந்த பிறகே அவனுக்கு பின்னால் உள் நுழைந்தாள்.
அதற்கு காரணம்.. மற்ற காவலர்கள் அவளை அருவருப்பாக பார்ப்பதை ஏற்க முடியாததாலே. மற்றவர்களின் பார்வையை தவிர்ப்பதற்காகவே தன்னுடைய வழக்குகள் தன்னுடைய காவல் நிலையம் என்று இருந்து விடுவாள். ஆனால், ரம்யா வழக்கு இறந்து போன இரண்டு பெண்களின் வழக்கோடு தொடர்புடையதாக சந்தேகிப்பதாலும், அந்த வழக்கு விஜய் கையாள்வதாலும் இங்கு வந்திருக்கிறாள்.
மற்றவர்களின் முகம் சுளிக்கும் பார்வை ஆதிராவுக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். பெற்றவர்களே ஒதுக்கிய பின்னர் மற்றவர்களின் ஒதுக்கம் பெரியதாக தெரியவில்லை.
ஆனால், ஒவ்வொரு முறையும் அவர்களின் பார்வையை கடக்கும் போது மனதில் தோன்றும் வலியை மட்டும் அவளால் கடக்க முடியவில்லை. சாதாரணமாக பார்ப்போர் யாருக்கும் அவளின் இந்நிலைக்கான காரணம் தெரியாது. ஆழ்ந்து கூர்ந்து நோக்கினாலே அவளிடமிருக்கும் வித்தியாசம் தெரியும்.
யாரையும் பாராது… நிமிர்ந்த நடையுடனும், நேர்கொண்ட பார்வையுடனும் விஜய்க்கு பின்னால் சென்றுகொண்டிருந்த ஆதிராவின் இறுகிய உடல், விஜய்யின் அறைக்குள் நுழைந்த பின்னரே சற்று இளகியது.
விஜய் யாவற்றையும் உணர்ந்தாலும், எதுவும் சொல்லவில்லை.
கான்ஸ்டபிள் மூர்த்தியை அழைத்தவன்… பெண்களை கடத்தி வன்புணர்வு செய்ததற்கான வழக்கில் இதுவரை சம்மந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளின் விவரங்களை நகரின் மற்ற காவல் நிலையங்களிலிருந்தும் கொண்டு வருமாறு பணித்தான்.
மூர்த்தி தூக்க முடியாது தூக்கி வந்த கோப்புகளைக் கண்ட விஜய்க்கு இவ்வளவு வழக்குகளா என்று அதிர்வாக இருந்தது.
அவனின் அதிர்வினை உணர்ந்த ஆதிரா… “பெண்களை கடவுளுக்கு நிகராக வைத்து பூஜித்தாலும், பெண்களுக்கு ஏற்படும் இந்நிலை மட்டும் என்றும் மாறாது” என காட்டமாக மொழிந்தாள்.
அவளின் கூற்றை விஜய்யால் மறுக்க முடியவில்லை. அது உண்மைதானே… பலி கொடுக்கும் ஆட்டிற்கு தானே கவனிப்புகள் அதிகம் இருக்கும். ஆட்டின் நிலை பெண்ணிற்கும் பொருந்தும்.
சில நொடிகள் அமைதியில் கழிந்தது.
அனைத்து கோப்புகளையும் மூர்த்தி வைத்துவிட்டு சென்ற பின்னர்,
ரம்யா கூறிய பாம்பின் பச்சை உருவம் எந்த குற்றவாளிக்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்று ஒவ்வொரு கோப்புகளையும் மிக கவனமாக ஆராயத் தொடங்கினர் விஜய் மற்றும் ஆதிரா.
நேரம் கடந்ததே தவிர ஒரு பலனுமில்லை.
ஆயாசமாக உணர்ந்தான் விஜய். இருக்கையில் பின் சாய்ந்து கால்களை நீட்டி அமர்ந்தவனின் மன சோர்வு புரிந்த ஆதிரா அவனுக்கு முன்பு சூடான தேநீர் அடங்கிய கோப்பையை நீட்டினாள்.
அவளையும், கோப்பையையும் மாற்றி மாற்றி பார்த்தவன்.. “இந்த அக்கறைக்கு பெயர் காதலில்லாமல் வேறென்ன ஆதி” என்றான். அவனின் கண்களில் காதலுக்கான ஏக்கம் வழிந்தது.
விஜய்யின் ஏக்கத்தை காண முடியாது இமை தாழ்த்தினாள் ஆதிரா.
“உன்னை நீயே ஏன் ஏமாற்றி கொள்கிறாய் ஆதி?, என் மேல உனக்கும் காதலிருக்கு. அதனை ஒப்புக்கொள்ளத்தான் உனக்கு விருப்பமில்லை” என்றவன் “உனக்கு என்ன தான் பிரச்சினை ஆதி” என சற்று குரலுயர்த்தினான்.
“எனக்கு நான் தான் பிரச்சினை, நான் யாரென்றும் உனக்கு தெரியுமல்லவா?.. என்னை போய் காதலிப்பது தவறென்று புரியவில்லை” அவளின் குரலில் உள்ள வலியை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
நான் யாரென்று ஆதிரா கேட்ட கேள்விக்கு… “நீயும் பெண் தானே, உன்னை காதலிப்பது எனக்கொன்றும் தவறாக தெரியவில்லையே” என்றான்.
அவனின் பெண் என்ற வார்த்தை அவளுக்குள் பனிச்சாரலாய் இறங்கியது.
“ஆனால், இந்த சமூகம் என்னை பெண்ணாக பார்ப்பதில்லை” என்றவள் தன் வேலையைத் தொடர்ந்தாள்.
“சமூகம்…. சமூகம்… அனைத்திற்கும் இந்த சமூகம் தான் காரணம். ஒரு பெண் நின்றால், நடந்தால், சிரித்தால், பேசினால் அனைத்தையும் குறை சொல்ல மட்டுமே இருக்கிறது இந்த சமூகம். ஆனால், பெண்ணுக்கு நடக்கும் கொடுமைக்கு எதிராக ஒன்றும் சொல்லாது.” கோபத்தில் மனதோடு வெடித்தவன், கோப்புக்களை ஆராயும் ஆதிராவை பார்த்தவாறு நின்றிருக்க, உதவி ஆய்வாளர் கணேஷ்… அரசு மருத்துவமனை கண்காணிப்பு காமிராவில் பதிவு செய்யப்பட்ட புட்டேஜுடன் அங்கு வந்து சேர்ந்தார்.
மருத்துவமனையிலிருந்து ஆதிரா வெளியேறியதிலிருந்து வீடியோ பதிவு இருந்தது. அதனை மூவரும் கவனமாக பார்வையிட்டனர். ஆதிரா புறப்பட்டதும் ரம்யாவின் அறைக்குள் ஒருவன் நுழைந்ததும், சில நிமிடங்களில் வெளியேறியவன் இன்னும் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு உள் சென்றதும்.. பிறகு ரம்யாவை போர்வையில் முழுவதும் மூடி ஸ்டெச்சரில் வெளியே எடுத்து செல்வது வரை பதிவாகியிருந்தது.
வீடியோவிலிருந்த மூன்று தடியர்களின் முகத்தை மட்டும் தனியாக எடுத்த விஜய் ஆராயும் பார்வையுடன் நோக்கினான். மூவரும் முகத்தில் கைக்குட்டையை மாஸ்க் போல் கட்டியிருந்தனர். இதிலும் ஒன்றும் சிக்கவில்லையே என்று கணேஷ் ஆதிராவிடம் தெரிவிக்க, ஏதோ கிடைத்திட்ட உற்சாகத்தில்.. தீபா இறப்பதற்கு முன்னிருக்கும் புட்டேஜினை ஓடவிட்டு ஆராய்ந்தான்.
அதிலும் ஒருவன் தீபாவின் அறைக்குள் நுழைந்த ஐந்து நிமிடங்களில் அவள் இறந்திருந்தாள்.
தீபா மற்றும் ரம்யா.. இருவரின் அறைக்குள்ளும் நுழைந்தவன் ஒருவனே என்பது உடல் தோற்றத்தில் பிடிபட, இரண்டு புட்டேஜுகளில் உள்ள அவனின் முகத்தை மட்டும் தனியாக வெட்டி எடுத்து பார்வையிட, முகம் மூக்கிலிருந்து கீழ் வரை கைகுட்டையால் மூடியிருக்க, கண்கள் மட்டுமே தெரியும்படி இருந்தது.
“இதில் எப்படி இவன் யாரென்று கண்டுபிடிக்க முடியும்?”
ஆதிரா மற்றும் கணேஷ் ஒரு சேர கேட்டிருந்தனர். ஆனால், விஜய்யின் ஆராயும் பார்வை அவன் கண்டுபிடித்துவிட்டான் என்பதை ஆதிராவுக்கு உணர்த்தியது.
காலை முதல் பார்த்துக்கொண்டிருந்த பல ரௌடிகளின் முகத்தை ஒவ்வொன்றாக கண் முன் கொண்டு வந்த விஜய், திடீரென சிதறி கிடந்த கோப்புகளுக்கு நடுவிலிருந்து ஒரு கோப்பினை எடுத்தான். அதில் குறிப்பிடப்பட்டிருந்த நபரும், இங்கு புட்டேஜில் பதிவாகியிருப்பவனும் ஒருவனே என்று விஜய் தெரிவிக்க..
“எப்படி சொல்றீங்க” என கணேஷ் வினவினான்.
ஆதிராவும் கணேஷின் கேள்வியினை தாங்கி நிற்க.. இருவரையும் மாறி மாறி பார்த்த விஜய், புட்டேஜில் பதிவாகியிருந்த முகத்திலும், கோப்பில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் இருக்கும் முகத்திலும் வலது நெற்றி தொடங்கி கண்ணுக்கு கீழ் வரை கத்தியால் கீறப்பட்ட தழும்பு இருப்பதை சுட்டிக் காட்டினான்.
அவனின் பெயர் ‘கத்தி கந்தன்’, அவன் மீது பெண் கடத்தல் வழக்கு பதிவாகி.. அந்த வழக்கு நிலுவையில் உள்ளதென்று குறிப்பிருந்தது.
“இவனை வைத்து அந்த குற்றவாளியை கண்டுபிடித்து விடலாம்.”
விஜய் சொல்லி முடிக்கவும் தொலைப்பேசி சத்தம் எழுப்பியது. எதிர்முனையில் சொல்லப்பட்ட செய்தி.. கேட்ட விஜய்க்கு உடல் முழுவதும் சூடான ரத்தம் பாய்ந்தது.
“இவன் அடங்க மாட்டான் போலிருக்கே,” அந்த குற்றவாளியை நினைத்து கட்டுகடங்கா கோபம் எழுந்தது. கை முஷ்டியை இறுக மூடியவன், சுவற்றில் ஓங்கி குத்தினான்.
அந்நேரம் அங்கு வருகை தந்த செல்வகுமார்… “இந்த கோபத்தையெல்லாம் அந்த குற்றவாளியை கண்டுபிடிப்பதில் காட்டு… எங்கயா போச்சு உன் வேகம், தொடர்ந்து இளம் பெண்களை கடத்தி கற்பழித்துக் கொண்டிருக்கிறான், இன்னுமா அவனை உன்னால் பிடிக்க முடியவில்லை.”
மேலிடத்து அழுத்தம் அவரை அவ்வாறு கேட்க வைத்தது. அவருக்கா தெரியாது விஜய் ஒரு வழக்கினை எடுத்துவிட்டால் முடிக்காது ஓயமாட்டானென்று.
வழக்கம் போல் அவர் கேட்ட கேள்விக்கு விஜய் பதிலளிக்காது அமைதியாக நின்றிருக்க, இவரும் வழக்கம்போல் “உயரத்துக்கு ஏற்ற திமிரு உடம்பு முழுவதும்” என அவனை பார்த்துக் கூறினார்.
விஜய்யினை குறை கூறுவது பிடிக்காத ஆதிரா, “கிட்டத்தட்ட குற்றவாளியை நெருங்கிவிட்டோம் சார்” என்றாள்.
பதில் சொல்லிய ஆதிராவை மேலும் கீழும் பார்த்தவர், “நீ இங்கு என்ன செய்ற” என்றார். அவரின் முகமே ஆதிரா தன் கண் முன் நிற்பது பிடிக்கவில்லை என்பதை காட்டியது.
இப்போது ஆதிரா மௌனமாக நின்றிருக்க விஜய் பதிலளித்தான்.
“ரம்யா கேஸ் மிஸ்.ஆதிரா தான் டீல் பண்றாங்க.”
அவனிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காது, அவளிடம் கேட்டதற்கு வேகமாக பதிலளிக்கின்றானே, மனதோடு உரைத்தவர்.. “அவளை ஏதேனும் சொன்னால் நீ வந்துவிடுவாயே” என்று வெளியில் கூறினார்.
மீண்டும் விஜய் வாய் திறவாமல் நிற்க… “சீக்கிரம் இந்த வழக்கை முடிச்சு விடுய்யா, மேலிடத்தில என் தாலி அறுக்கராணுங்க…” என்றவர் “பெண் கடத்தல் மற்றும் பெண் கற்பழிப்பு குற்ற பிரிவின் சிறப்பு ஆணையராக உன்னை நியமிக்கின்றேன்” எனக் கூறினார்.
மேலும் ரம்யா வழக்கு, “பெண் கற்பழிப்பு பிரிவில் வருவதால் நீ இதில் இனி தலையிடாதே, ப்ரமோஷனுக்காகத் தானே இந்த கேசில் ஆர்வம் காட்டுகிறாய்.. நீயெல்லாம் போலீஸ் ஆகலன்னு யார் அழுதா” என ஆதிராவிடம் அலட்சியமாக சொல்லியவர், விஜய்யிடம் திரும்பி “முதலில் அந்த இடத்திற்கு சென்று என்னவென்று பாருய்யா… சிறுமியை கூட விட்டு வைக்க மாட்றானுங்க” என புலம்பினார்.
அவரின் பேச்சிலிருந்து கொஞ்ச நேரத்திற்கு முன்பு விஜய்க்கு வந்த அழைப்பில் கூறப்பட்ட செய்தி என்னவென்று யூகித்தாள் ஆதிரா. அந்த காமுகனுக்கு தன் கையால் விலங்கிட வேண்டுமென அப்போதே அவளின் உள்ளம் பரபரத்தது.
தன்னவளின் எண்ண ஓட்டத்தினை புரிந்தவன்… ” இந்த வழக்கிற்கு எனக்கு உதவியாக ஆதிரா மற்றும் கணேஷை என்னுடன் இணைத்துக் கொள்கிறேன்”. செல்வகுமாரிடம் கூறியவன் அவரின் பதிலை கூட எதிர்பாராது ஆதிரா மற்றும் கணேஷிற்கு கண் ஜாடை செய்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்வதற்காக வேகமாக வெளியேறினான்.
தொடரும்..