சிறகுகள் வீசியே 4

அத்தியாயம் 4 :

[‘நவம்பர் 19’

‘உலக பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம்.’]

[ போக்ஸோ சட்டம் : இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012).]

*********************

ஓட்டுநர் இருக்கையில் அமர வந்த மூர்த்தியை தடுத்து ஏறிய விஜய்யின் கையில் வண்டி வேகமெடுத்தது. அடுத்த பத்து நிமிடங்களில் அழகிய ஏரியின் முன் நின்றது.

ஏரிக்கரையில் மக்கள் கூட்டம் கூடியிருந்தது. ஏற்கனவே அந்த பகுதி காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் வந்திருந்தனர். ஈக்கூட்டம் போல் பத்திரிக்கை ஆட்கள் மொய்த்திருந்தனர்.

விஜய்யை கண்டதும் அந்த பகுதி ஆய்வாளர் விஜய்யின் அருகில் விரைந்து வந்தார்.

விறைப்பாக சல்யூட் ஒன்றை வைத்து, “சஸ்பெக்ட் ஒரு சிறுமி சார்.. பதின்மூன்று வயது இருக்கலாம்.”

ஏற்கனவே செய்தியை அறிந்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை கேட்டதில் விஜய்க்கு அந்த முகம் தெரியா குற்றவாளியின் மீது கோபம் ஏகத்துக்கும் ஏறியது.

“கத்தி கந்தன் எங்கிருந்தாலும் தேடி உடனடியா அரேஸ்ட் பண்ணுங்க”, கணேஷிற்கு உத்தரவிட்ட விஜய் தன்னை நோக்கி ஓடி வந்த ஊடகவியலாளர்களையும், அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தினையும் விலக்கி.. கரையில் கிடந்த சிறுமியின் சடலத்தை நெருங்கினான்.

அரசு மருத்துவமனை மருத்துவர் சிறுமியின் உடலை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

சிறுமியின் உடல் பார்ப்பதற்கே அகோரமாக காட்சியளித்தது. கல்நெஞ்சம் கொண்ட மனிதனுக்கு கூட சிறுமியின் நிலை கண்ணீரை வரவழைக்கும்.

சிறுமியின் பெற்றோர் தலையில் அடித்துக்கொண்டு அழுகையில் துடித்தனர். சிறுமியின் உடல் மீது பட்டுக்கொண்டிருக்கும் ஊடக காமிராக்களின் வெளிச்சத்தைக் கண்டு… “அய்யோ இந்த நிலையில் என் மகளை புகைப்படம் எடுக்காதீங்க,” ஆடைகள் கிழிந்து.. பெயருக்கென்று உடலோடு ஒட்டியிருக்க ஒரு பெண் பிள்ளையின் தாயாய் அவர் கதறினார்.

பரிசோதித்துக் கொண்டிருந்த மருத்துவரை தள்ளியவராய் தனது சேலை தலைப்பினைக் கொண்டு மகளின் உடலை மறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார் சிறுமியின் தாயார்.

அன்னையாய் அவரின் செயல் காண்போரை வருத்தத்தில் ஆழ்த்தியது.

விஜய்யின் மனம் தனது பதவியை கருத்தில் கொண்டு ஊமையாக அழுதது. ஆதிராவோ தன்னை வெளியில் கடுமையாக காட்டிக் கொண்டாலும், சிறுமியின் நிலையை நொடி நேரத்திற்கு பிறகு காண முடியாது நெஞ்சம் விம்பினாள்.

சிறுமியின் தாய் அழுவதைக்கூட ஏதோ கலை நிகழ்ச்சியினை பதிவு செய்வது போல்… தொகுப்பாளர் பேச, படம் பிடித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களை நெருங்கிய விஜய்…

“உங்க மகளுக்கு இதுபோல் நிலை ஏற்பட்டிருந்தாலும் இப்படித்தான் வீடியோ, போட்டோ என எடுத்துக் கொண்டிருப்பீங்களா? அங்கு ஒரு தாய் கண்ணீர் சிந்துவது உங்களுக்கு சுவாரஸ்யம் ததும்பும் செய்தி அவ்வளவே அல்லவா… நாட்டில் என்ன நடந்தாலும் உங்களுக்கு உங்கள் டிஆர்பி தான் முக்கியம்” என வெடித்து சிதறினான்.

“நாட்டின் மீது அவ்வளவு அக்கறை இருந்தால் சீக்கிரம் குற்றவாளி யாரென கண்டுபிடிக்க வேண்டியது தானே, அதை விடுத்து உங்களின் இயலாமையை எங்களிடம் கோபமாகக் காட்டாதீங்க.” நிரூபர்களில் ஒருவன் சொல்ல.. பதில் சொல்ல முடியாத தன்னிலையை அறவே வெறுத்தான் விஜய்.

“சட்டம் தன் கடமையை செய்யுமென்று அவ்வளவு சட்டமாகக் கூறினீர்களே, எங்கே செஞ்சாச்சா?” மற்றொரு நிரூபரின் வார்த்தைகளில் எள்ளல் வழிந்தது.

அதுவரை கோபத்தை கட்டப்படுத்தி நின்றிருந்த ஆதிரா, “உங்களுக்கு தெரியுமா நாங்க எங்க கடமையை செய்யவில்லையென்று, இந்த வழக்கில் ஒருவனை….”

கத்தி கந்தனை கண்டுபிடித்ததைப் பற்றி ஆதிரா மீடியா முன்பு சொல்ல வர, அவளின் கரம் பற்றி தடுத்து நிறுத்தினான் விஜய்.

இந்த விஷயம் மீடியா மூலம் குற்றவாளிக்கு தெரிந்தால் அவன் உஷாராகிவிடுவானென்ற காரணத்தை விஜய்யின் பார்வையிலிருந்து ஆதிராவும் புரிந்து கொண்டாள்.

விஜய் ஆதிராவின் கரம் பற்றியதும், இருவரின் பார்வை பரிமாற்றங்களும் காமிராவின் பசிக்கு இறையானது.

மேலும் பல கேள்விகளை கேட்ட அவர்களை தவிர்த்தவனாக மருத்துவரிடம் வந்தான்.

விஜய்யிடம் என்ன சொல்வதென்று ஒரு கணம் தடுமாறிய அப்பெண் மருத்துவர் ஒரு பெண்ணாக அச்சிறுமியின் நிலையை விவரிக்க முடியாது கைகளை பிசைந்தபடி நின்றிருந்தார்.

அவரின் நிலை விஜய்க்கும் புரிந்து தான் இருந்தது. ஆனால், இந்த வழக்கினை விசாரணை செய்யும் காவல் அதிகாரியாய் அவனுக்கு சிறுமியின் நிலை தெரிய வேண்டுமல்லவா.

“எதுவாக இருந்தாலும் தயங்காம சொல்லுங்க டாக்டர்” என்றான்.

சில்லிட்ட தன்னுடைய கரத்தினை ஆழ்ந்து சுவாசித்து சூடு படுத்தியவர்.. “சிறுமியென்ற நினைவே அவனுக்கு இல்லைப்போல் மிஸ்டர்.விஜய், அவ்வளவு வெறித்தனமா அந்த பிஞ்சினை வதைத்திருக்கிறான். உடற்கூறு ஆய்வு மேலிட முடியாதளவிற்கு சிறுமியின் உடலை சிதைத்திருக்கிறான். உடலிலிருக்கும் பற்தடங்களின் வேறுபாட்டை வைத்து பார்க்கும்போது பலமுறை தனது இச்சையை அந்த பிஞ்சிடம் தீர்த்திருக்கிறான். நிச்சயம் அவனை மிருகங்களுடன் கூட ஒப்பிட முடியாது.”

அந்நேரம் அழுது வீங்கிய முகத்துடன்… இன்னும் கண்களில் நிற்காது வழியும் கண்ணீருடன் ஓடி வந்த இளம்பெண் ஒருத்தி விஜய்யின் அருகில் நின்றிருந்த ஆதிராவை இடித்து கீழே தள்ளியதை கூட உணராது சிறுமியின் சடலத்தை வாரி அணைத்து துடித்து அழுதாள். சிறுமியின் தந்தையிடம், “நம்ம அபியை பாருங்க மாமா… அவள் ஏன் இப்படி படுத்திருக்கா.. எழுந்து வர சொல்லுங்க நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று கதறினாள்.

அவளால் மாமா என்றழைக்கப்பட்டவர், பிரம்மை பிடித்தார் போல் தரையில் அமர்ந்திருந்தார். அவருக்கு அங்கு நடப்பது எதுவும் கருத்தில் பதியவில்லை. அவர் நினைவில் நின்றதெல்லாம் அவரின் மகள் அபி மட்டுமே. இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த மகள், எவ்வளவு தேடியும் காவலர்களால் கூட கண்டுபிடிக்க முடியாது போக.. மூன்றாம் நாள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலிருக்கும் ஏரியில் ஒரு சிறுமியின் உடல் முட்புதர்களில் வீசப்பட்டிருந்த காட்சியை அந்தப்பக்கம் சென்ற ஒரு நபர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க அடுத்த பத்து நிமிடங்களில் அங்கு வந்த அதிகாரி அச்சிறுமி அபி என்பதை உறுதி செய்து அவளது பெற்றோரை அழைத்து வந்து உறுதிப்படுத்தினர். தனது ஒரே செல்ல மகளை அந்நிலையில் பார்த்ததும் உறைந்து அமர்ந்தவர் தான் மணித்துளிகள் பல கடந்தும் பல் பட்ட தடத்தினால் தடித்து கன்றியிருந்த மகளின் முகத்திலிருந்து பார்வையை அகற்றவில்லை.

தான் இவ்வளவு கதறியும் அமைதியாக இருக்கும் மாமாவின் நிலையை அப்போது தான் உணர்ந்த அந்த இளம்பெண் அவரை பிடித்து உளுக்கினாள். அவரிடம் சிறு அசைவு கூட இல்லை. இதுவரை தன்னிடம் முகம் கொடுத்தே பேசிடாத அத்தை ஒரு பக்கம் அழுகையில் கரைய,

அந்த கணம் யாருக்காக அழுவதென்று தெரியாமல் அந்த இளம் பெண் ஆதரவு வேண்டி அழுகையில் விம்ப… அவளின் தோள் மீது கரம் பதித்தான் விஜய்.

“மிஸ்.பவித்ரா”

ஆம் அவள் பவித்ரா… பாதிக்கப்பட்ட சிறுமி அவளது மாமாவின் மகள். அவளுக்கென்று யாருமில்லா இவ்வுலகில் அவள் மீது அன்பு செலுத்தும் ஒரே ஜீவன் அவளது குட்டி அபி.

விஜய்யின் அழைப்பில் அவனை நிமிர்ந்து பார்த்த பவித்ரா,

“உங்க சட்டம் இன்னும் அதன் கடமையை செய்யவில்லையா சார்” என்றாள்.

யாரோ தன்னை ஓங்கி அறைந்தார் போல் உணர்ந்தான் விஜய்.

ஒரு இளம் பெண்ணின் அதிகப்படியான பேச்சிற்கு விஜய் அமைதியாக இருப்பது ஆதிராவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“நல்லா பாருங்க சார்… அங்கேயிருக்கும் என் அபியின் உடலை பாருங்க… எந்த தவறும் செய்யாமலே தண்டிக்கப்பட்டிருக்கும் அவள் பூ முகத்தை பாருங்க சார். நீங்க காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நொடியும் இது போல் பல பெண்கள் பாதிக்கப்படுவர். நேற்று மாலதி, தீபா.. இன்று அவனுக்கு இறையாகியிருப்பது ஒரு சிறுமி. எந்த உதவி வேண்டுமானாலும் கேளு  சொன்னீங்களே சார்… அந்த குற்றவாளியை இன்னும் இரண்டு நாட்களில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா சார்” எனக் கேட்டிருந்தாள் பவித்ரா.

பவித்ராவுக்கு என்ன சொல்வதென்று விஜய் குழம்பி நின்றான்.

நேரம் இருட்டத் தொடங்கியது. காவல் நிலையம் வந்து சேர்ந்த விஜய், கத்தி கந்தனை பிடிக்கச் சென்ற கணேஷ் தனக்கு முன்பே வந்திருக்க அவனிடம் விசாரித்தான்.

“சார் அவன் இங்கு எங்கும் இருப்பதாக தெரியவில்லை.. அவன் செல்லும் இடமாக , வேறு சில ரவுடிகள் சொல்லிய அனைத்து இடங்களிலும் விசாரித்து விட்டேன்.. அவனைப்பற்றி ஒரு தகவலுமில்லை.. ஆனால் சார், ஒவ்வொரு வியாழன் அன்றும் எங்கிருந்தாலும் அவனது இரண்டாவது மனைவி வீட்டிற்கு நள்ளிரவில் கட்டாயம் வந்து செல்வானென்று தகவல் கிடைத்திருக்கிறது சார்.. இன்று வியாழன் தான் சார், நான் இரவு சென்று அவனை பிடித்து வருகிறேன்.”

நீண்டு விவரித்த கணேஷிடம் “நீங்க மட்டும் செல்ல வேண்டாம், நானும் வருகிறேன்” என்ற விஜய் ஆதிராவிடம் திரும்பி.. “நீங்க போலாம் மிஸ்.ஆதிரா, நாளை ரம்யாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும்.. நீங்க அதனை செய்துடுங்க” எனக் கூறினான்.

“நீதிமன்றத்திற்கு நானா?”

எதற்கோ பயந்து கேட்பவளிடம்.. “எஸ் நீங்களே தான், ஒரு பெண்ணை ஒரு பெண் காவல் அதிகாரி தானே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” எனக் கேட்டவனின் வார்த்தைகளில் பெண் என்கிற வார்த்தை அதிக அழுத்தத்துடன் வெளிவந்தது.

இதற்குமேல் இவனிடம் வாதிட முடியாதென்று அறிந்து, சரியெனும் விதமாக அவள் விடைபெற்றாள்.

***********************

நள்ளிரவு நேரம்,

அத்தெருவே நிசப்தத்துடன்… கரிய இருள் சூழப்பட்டு காட்சியளித்தது.

விஜய் மற்றும் கணேஷ் இருவரும் விஜய்யின் புல்லட்டிலேயே வந்திருந்தனர். தெருவின் முனையில் யாருக்கும் சந்தேகம் எழுந்துவிடாத வகையில் இருவரும் சுவாரஸ்யமாக ஏதோ பேசியபடி நின்றிருந்தனர்.

கத்தி கந்தன் வரும் நேரத்தை அவதானித்து.. அவனது வீட்டு மொட்டை மாடிக்கு தண்ணீர் குழாயினை பிடித்து மேலேறினான் விஜய். மொட்டை மாடியிலிருந்து வீட்டிற்குள் கீழிறங்கும் படிகள் வீட்டின் வாயிற்கதவில் சென்று முடிந்தது. கணேஷ் கந்தனின் வீட்டிற்கு பக்கத்திலிருக்கும் சந்தில் ஒளிந்து நின்றான்.

(*சிகரெட்டில் 4000 நச்சுப்பொருட்கள் உள்ளன. அசிடோன், பென்ஸின், அர்சனிக், அமோனியா, கார்பன் மோனாக்சைடு, காட்மியம், சயனைடு மற்றும் கான்சர் உண்டாகக்கூடிய 50க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் இதில் அடக்கம். ‘மற்றவர்களைவிட புகைப்பவரின் ஆயுட்காலம் 14 ஆண்டுகள் குறைவாகிறது.’ புகைப்பது புகைப்பவரை விட அவர்களை சார்ந்தவர்களையே அதிகம் பாதிப்புக்குள்ளாக்குகிறது.)

சற்று நேரத்தில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கிய கந்தன். வீட்டின் முன்பு வண்டியினை நிறுத்தி.. வாயில் சிகரெட்டினை பற்ற வைத்து புகையினை வெளியேற்றியபடி தெருவின் இரு புறமும் சில நொடிகள் நோட்டம் விட்டான். சிகரெட் முழுதாய் தீரும் வரை புகைத்தவன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.

சத்தம் கேட்டு எழுந்து வந்த கந்தனின் மனைவி, விஜய் வீட்டினுள் நிற்பதை கண்டு இரண்டடி பின்னால் தள்ளி நின்றாள். கத்த வாய் திறக்க முயன்றவளை தனது பார்வையால் அடக்கி, தானே கதவின் தாழ்ப்பாளில் கை வைத்தான்.

தன்னுடைய மனைவிக்கு பதிலாக கதவினை திறந்து நின்ற விஜய்யினை பார்த்ததும் ஓட முயன்ற கந்தனை சந்துக்குள் ஒளிந்து நின்றிருந்த கணேஷ் பின்னால் வந்து வளைத்து பிடித்தான். தான் மாட்டப்பட்டதை உணர்ந்த கந்தன் தன்னுடைய கை முட்டியால் கணேஷின் வயிற்றில் பின்பக்கமாக ஓங்கி குத்த கணேஷின் பிடி தளர்ந்தது. அதனை பயன்படுத்தி கந்தன் தப்பிக்க முயல, நொடியில் சுதாரித்து அவனது கால் முட்டியினை குறி பார்த்து சுட்டான் விஜய்.

*************************

அடுத்த நாள் காலை பத்து மணியளவில், ஆசிரமத்தில் துளசியம்மாவின் பாதுகாப்பிலிருந்த ரம்யாவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றாள் ஆதிரா.

வழக்கின் விவரங்களை அரசு வழக்கறிஞர் எடுத்துரைத்ததோடு ரம்யா எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பதையும் அவளிடமே விவசாரித்தார்.

வழக்கினை உள்வாங்கிய நீதிபதி.. மூன்று நாட்கள் கால அவகாசம் அளித்து வழக்கினை ஒத்தி வைத்ததோடு, குற்றவாளியினை அடுத்த வாயிதாவில் சமர்ப்பிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

ஆதிரா விஜய்யை அழைத்து நீதிமன்ற தகவலை அளிக்க.. ரம்யாவை பத்திரமாக ஆசிரமத்தில் விட்டுவிட்டு காவல் நிலையம் செல்லக் கூறியவன், இரவு கந்தனை பிடித்துவிட்டதையும்… இப்போது தான் மற்றொரு வேலை சம்மந்தமாக வெளியில் இருப்பதையும் தெரிவித்து அழைப்பத் துண்டித்தான்.

காவல்துறை அமைச்சர் தனது மகளின் திருமணம் நல்ல முறையில் நடைபெறுவதற்காக, நகரைத் தாண்டி சற்று தொலைவிலிருக்கும் தங்களது குல தெய்வ கோவிலுக்கு சென்றிருக்க.. அவரின் பாதுகாப்பின் காரணமாக பந்தோபஸ்திற்கு விஜய் மற்றும் சில காவலர்கள் உடன் சென்றுள்ளனர்.

அமைச்சர் சண்முகபாண்டியன் நேர்மையானவர் என்பதாலும், அவரே விஜய்யை தனிப்பட்ட முறையில் பாதுகாப்பிற்கு அழைக்கவும் அவனால் மறுக்க இயலாது போனது.

கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்ததால், அதிக காலதாமதமானது. நேரம் வீணாக கடந்த போதிலும் சண்முகபாண்டியனின் நல்ல உள்ளத்திற்காக அமைதியாக சுற்றுப்புறத்தை நோட்டமிட்டவனாக நின்றிருந்தான் விஜய்.

பூஜை முடிந்து கிளம்பும் சமயம் விஜய்யிடம் வந்த அமைச்சர் தனது மனைவி மற்றும் மகளை அவனுக்கு அறிமுகப்படுத்தினார்.

அவரது மனைவி விஜய்க்கு அறிமுக நிமித்தமாக கரம் குவித்து வணக்கம் கூற, அவரது மகளோ நாகரிக பெண்ணல்லவா… ஆதலால் ஹாய் என்ற விளிப்போடு விஜய்யின் முன் தனது வலது கரத்தினை நீட்டினாள்.

கைகுலுக்குவதற்காக அவள் நீட்டிய கரத்தினை பற்றாது, அப்பெண் அணிந்திருக்கும் மோதிரத்தினையே விஜய் பார்த்திருக்க.. அமைச்சரின் விஜய் என்றழைப்பில் சுதாரித்து அவளுக்கு கை கொடுத்தான்.

அப்பெண் புன்னகையுடன் அவனிடமிருந்து நகர, “மோதிரம் நன்றாக இருக்கிறது” என்றான்.

நன்றி உரைத்தவள், “இது எனது நிச்சயதார்த்த மோதிரம்” என்று பதிலளித்தாள்.

மீண்டும் ஒருமுறை “இட்ஸ் வெரி பியூட்டிபுள்” என்றவன் அப்பெண்ணின் வருங்கால கணவனாக நிச்சயிக்கப்பட்ட நபர் யார் என்பதை முழுதாய் தெரிந்துகொண்ட பின்னரே அவளை விட்டான்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top