சிறகுகள் வீசியே 5

அத்தியாயம் 5 :

அமைச்சரின் பாதுகாப்பிற்காக சென்ற விஜய், மாலை வேளையில் தான் காவல் நிலையம் வந்து சேர்ந்தான்.

அவனுக்காகவே காத்திருந்தார் போல் மிகுந்த கோபத்துடன் விஜய்யின் அறைக்குள் நுழைந்தார் செல்வகுமார்.

எடுத்த எடுப்பில்,

“ஏய்யா, உனக்கு இந்த வழக்கினை முடிக்கும் ஐடியா இருக்கா? இல்லையா?” என்று சற்று உரக்கவே கேட்டார்.

அவரின் திடீர் கோபத்திற்கு காரணம் புரியாது நின்ற விஜய் வழக்கின் தற்போதைய நிலையைப் பற்றி அவரிடம் இப்போதும் தெரிவிக்காது அமைதிகாத்தான்.

அவனின் அமைதி அவருக்கு மேலும் கோபத்தை தூண்டிட.. “பொறுப்பா வழக்கை மட்டும் பார்த்திருந்தால் விரைந்து முடித்திருப்ப.. அதைவிடுத்து ரொமான்ஸ் செய்வதற்கு தானே உனக்கு டைம் இருக்கு, அப்புறம் எப்படி வழக்கில் உன் கவனம் செல்லும்”, என்ன பேசுகிறோமென்று தெரியாது வார்த்தைகளை சிதற விட்டார்.

“வாட் யூ மீன்… ” அவர் எதைப்பற்றி பேசுகிறார் என்பது புரியாமல் விஜய் வினவ.. அவனின் முன் அன்றைய நாளிதழை காட்டினார்.

நேற்று அபியின் உடல் கிடந்த இடத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஆதிரா கந்தனைப்பற்றி தெரிவிக்க வரும்போது அதனை தடுப்பதற்காக விஜய் அவளின் கரம் பற்றியதையும், கண்களினால் ஜாடை செய்ததையும் வேறு விதமாக சித்தரித்து.. “காவல் உடையில் காதல் சரசம்” என்று பெயரிட்டு தாங்களே ஒரு கதையினை வடித்திருந்தனர்.

நாளிதழில் சொல்லப்பட்டிருந்த கதையினை அலட்சியம் செய்த விஜய்… அவனும் அவனவளுமாக கரம் பிடித்து நின்றிருந்த புகைப்படத்தினையே சில மணித்துளிகள் பார்த்து ரசித்து.. “இட்ஸ் மை பெர்சனல்” என்றதோடு “நாளை குற்றவாளியை பிடித்த பிறகு உங்களிடம் அழைத்து வருகிறேன்” எனக் கூறி அவரின் வாயடைத்தான்.

“என்னவோ செய்” என சொல்லிய செல்வகுமார் தான் வந்த வேலை முடிந்ததென கிளம்பினார். வாயில் வரை சென்றவர் திரும்பி “இது ஒத்து வருமா விஜய்” எனக் கேட்டிருந்தார் நாளிதழை சுட்டிக்காட்டி, அதில் விஜய்யின் மீதான அக்கறை வெளிப்பட்டது.

அவரின் கேள்விக்கு இதழில் புன்னகையை படர விட்டவன்.. “திருமணம் உங்கள் தலைமையில் தான் சார்” எனக் கூறி அட்டகாசமாய் சிரித்தான்.

அவர் சென்றதும் நாளிதழைப் பார்த்தவன், “இதனை ஆதி பார்த்தாளா இல்லையா… பார்த்திருந்தால் இந்நேரம் என்னை திட்டுவதற்காகவாவது அழைத்திருப்பாளே.” தனக்குத்தானே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக்கொண்டான். அவனின் முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது.

அவனின் மோன நிலையை கலைக்கவென்று கணேஷ் வந்து சேர்ந்தான். “சார் ரெடி” என்க இருவரும் காவல்நிலையத்திற்கு பின்பக்கம் சென்றனர். அங்கிருக்கும் மற்ற காவலர்களுக்கு சந்தேகம் வராதபடி இருக்க, இரண்டொரு நிமிடங்கள் அங்கேயே நின்று பேசியவர்கள் திடீரென மாயமாகினர். காவல் நிலையத்திற்கு பின்னால் நிலத்திற்கு அடியில் ஒரு இருட்டறை இருப்பது விஜய் மற்றும் கணேஷைத் தவிர மற்ற காவலர்களுக்கு தெரியாது. மிக முக்கிய குற்றவாளிகள் இங்கு வைத்தே விசாரிக்கப்படுவர்.

“சார் எவ்வளவோ அடித்து விசாரித்துவிட்டேன், இவன் சொல்ற மாதிரி தெரியவில்லை.”

அடித்ததில் வலியால் கண்கள் சொருகி நாற்காலியில் கட்டப்பட்டிருந்த கந்தன், பேச்சொலி கேட்டு மெல்ல இமை திறக்க அவன் முன் கம்பீரமாக நின்றிருந்தான் விஜய்.

“நீங்கள் என்ன செய்தாலும் என் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட பெற முடியாது.” மிதப்பாக அவன் பார்த்திருந்தான்.

அவனது எண்ண ஓட்டத்தை புரிந்துகொண்ட விஜய், துப்பாக்கியினை கந்தனின் நெற்றி பொட்டில் வைத்து அழுத்தியவாறு.. “குற்றவாளி யாரென்று தெரிந்துவிட்டது கணேஷ், இவன் நமக்குத் தேவையில்லை.. வீணா கோர்ட்டுக்கும், ஸ்டேஷனுக்கும் இவனை கூட்டிட்டு அலையும் வேலை மிச்சமாகும்.. பேசாமல் இவனை போட்டுத் தள்ளிவிடலாம்” என சர்வ சாதாரணமாகக் கூறினான்.

நெற்றியில் துப்பாக்கியினை வைத்ததுமே அரண்டு போன கந்தன், ஏற்கனவே விஜய்யை பற்றியும் அவனது என்கவுண்டர்களை பற்றியும் அறிந்திருந்ததால் இவன் தன்னை சுட்டாலும் சுட்டுவிடுவானென்று சர்வமும் நடுங்கினான்.

துப்பாக்கியின் டிகர் மீது வைத்திருக்கும் விரலில் விஜய் அழுத்தம் கொடுக்க… “சுட்டுடாதீங்க… நான் சொல்லிடறேன்… சொல்லிடறேன்” என்று அலறினான்.

“இல்லை, நீ எனக்கு வேண்டாம்.” நக்கலாகக் கூறிய விஜய் உண்மையிலேயே டிகரை அழுத்தியிருந்தான்.

கணேஷ் பதறியடித்து விஜய்யின் அருகில் வர… “என்ன கணேஷ் நீங்களும் பயந்துட்டீங்களா… சும்மா, துப்பாக்கியில் குண்டு இல்லை” என்றான். அதன் பிறகே கணேஷிற்கு மூச்சு வந்தது, காவல் துறையினர் கட்டுப்பாட்டிலிருக்கும் ஒரு குற்றவாளி இறந்து விட்டால் என்ன நடக்குமென்று அறியதவனா அவன்.

“ஒரு நொடி பயந்தேவிட்டேன் சர்…”

“இவனை மாதிரி ஆட்களை எல்லாம் டப்புன்னு சுட்டு பொட்டுன்னு போற மாதிரி சாகடிக்கக் கூடாது கணேஷ்.. ஒவ்வொரு நிமிடமும் வலியை அனுபவித்து சாக வேண்டும்” எனக் கூறிக்கொண்டே கந்தனின் கை விரல் ஒன்றை கட்டரின்(cutter) உதவியால் வெட்டினான்.

துண்டிக்கப்பட்ட விரல் தரையில் கிடக்க, ரத்தம் ஒழுகும் கையின் வலி தாங்காது காட்டு கத்தலாகக் கத்தினான் கந்தன்.

“ஏண்டா… ப**சி, தெருவுல சுத்திக்கிட்டு.. பலபேரை அழித்து உடம்பு வளர்க்கும் உனக்கே இவ்வளவு வலிக்குதே, ஒண்ணுமே அறியாத அந்த சின்ன பொண்ணுங்க எவ்வளவு துடிச்சிருக்கும்.. இது வெறும் சாம்பிள் தான் மாப்பு… இப்படியே வலியில் கத்திக்கொண்டே இரு” என்றவன் கணேஷிடம், “இவனுக்கு தண்ணீர் கூட தராதீங்க” என்றான்.

“சார், நாளை மறுநாள் ஹியரிங்… இவனும் வாய் திறக்க போவதில்லை, ஜட்ஜ் குற்றவாளியை கோர்ட்டில் ஆஜர் படுத்தனும் சொல்லியிருக்கார்… எப்படி சார்?” என வினவினான்.

“டோன்ட் ஒர்ரி அபௌட் தட் கணேஷ், குற்றவாளியை கண்டுபிடித்து மூன்று மணிநேரம் ஆகிறது… பி கூல்” என்ற விஜய் வழக்கமான வேக நடையுடன் அந்த இருட்டறையிலிருந்து வெளியேறினான்.

மற்ற வேலைகளை கணேஷ் பார்த்துக்கொண்டு இருந்தாலும் அடிக்கடி விஜய்யின் முகத்தை பார்ப்பதுமாய் பின் வேறு புறம் பார்ப்பதுமாய் இருக்க, அவனை அழைத்த விஜய் “என்ன கணேஷ் குற்றவாளி யாரென்று தெரிந்து கொள்வதில் ரொம்ப ஆர்வமாக இருக்கீங்க போல” என்க… கணேஷ் ஆமென்னும் விதமாக தலையசைத்தான்.

“உங்களுக்கு எல்லாம் சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டுமே என்று நினைத்தேன்… சொல்லட்டுமாஆஆ..” விஜய்யின் இழுவையில் அவன் யாராக இருக்குமென்கிற ஆர்வம் கணேஷிற்கு அதிகமாகியது.

“உன்னுடைய ஆர்வத்தை பார்க்கும்போது சஸ்பென்ஸை உடைக்கவே மனசு வரல கணேஷ்” என்றவன் முக்கிய வேலை இருப்பதாகக் கூறி வெளியேறினான்.

“சார்… சார்ர்ர்… சொல்லிட்டு போங்க சார்” கணேஷின் குரலினைக் கேட்க விஜய் அங்கில்லை.

முதலில் ஆசிரமம் சென்ற விஜய் துளசியம்மாவிடம் அனுமதி பெற்ற பிறகு ரம்யாவை சந்தித்தான்.

“வணக்கம் சார்.”

“நோ ஃபார்மல்ஸ் மிஸ். ரம்யா, எனக்கு ஒரு விஷயத்தை உறுதிபடுத்திக்கொள்ளவே வந்திருக்கிறேன்” என்ற விஜய் தனது மொபைலில் உள்ள ஒரு பாம்பின் வரைபடத்தை எடுத்துக்காட்டி  “குற்றவாளியின் கையில் வரையப்பட்டிருப்பது இது போன்றதொரு ஓவியம் தானே” எனக் கேட்டான்.

மொபைலினையே அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தவள், “சார்… இதே மாதிரியல்ல இதுவே தான்” என்றாள்.

“உங்களை அவன் போதையிலேயே வைத்திருந்ததாக புகாரில் தெரிவித்திருக்கிறீர்கள் அப்புறம் எப்படி அவன் கையில் குத்தியிருந்த டாட்டூவை மட்டும் தெளிவாக இதுதானென்று கூறுகிறீர்கள்.?”

“அவன் என்னை கடத்தும் போது நான் தெளிவாகத்தானே சார் இருந்தேன். அப்போது அவன் கண்களின் கருவிழிகள் மட்டுமே தெரியுமளவிற்கான முகமூடி அணிந்திருந்ததால் அவனது முகத்தை பார்க்க முடியாது போனது.”

தனக்கிருந்த சந்தேகத்தை தீர்த்துக்கொண்ட விஜய் கிளம்புவதற்கு ஏதுவாக திரும்ப அவனின் பின்னால் ஆதிரா நின்றிருந்தாள், கையில் சுருட்டப்பட்ட நாளிதழுடன் கண்களில் கோபத்துடன்.

“இனி ஒரு வினாடி இங்கிருந்தாலும் நிதர்சனம் என சொல்லி பதினாறு பக்கத்திற்கு கட்டுரை வரைந்தாலும் வரைவாள்”, மனதோடு பேசியவன் ஏதோ அவசர கால் வந்ததாக அழைப்பு வராத மொபைலினை காதில் வைத்து அறையிலிருந்து வெளியேற, துளசியம்மா நடுத்தர வயது தம்பதியருடன் ரம்யாவின் அறைக்குள் நுழைந்தார்.

விஜய் மற்றும் ஆதிரா அவர்கள் யாரென்று ஆராய, ரம்யா அம்மா, அப்பா என்கிற அழைப்புடன் அவர்களை நெருங்கினாள். தங்களை கண்டதும் ஆவலுடன் ஓடி வந்த மகளை பளாரென்று அறைந்திருந்தார் அவளது தாயார். விஜய், ஆதிரா, துளசியம்மா மூவரும் ஏனென்று காரணம் புரியாது அதிர்ந்து நிற்க,

“எங்க மானத்தை வாங்கிட்டியேடி பாவி… இப்படி ஊர் எங்களை பார்த்து சிரிக்கிற மாதிரி செஞ்சுட்டியே.. அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சாலே நாலு விதமா பேசுவாங்கன்னு வீட்டை விட்டு துறத்தி விட்டால் இப்படி உலகமே தெரிஞ்சிக்கிற மாதிரி கோர்ட் வாசல மிதிச்சிட்டியேடி”. ரம்யாவின் அன்னை சுயநலமாக பேசினார்.

ரம்யாவின் தந்தை ஒரு படி மேலே சென்று, “நீ கொடுத்திருக்கும் புகாரினை திரும்பப் பெற்றுக்கொள், கெட்டு சீரழிந்த பிறகு போராடப்போறேன்னு எங்க மானத்தை ஏன் வாங்குற” என்றார்.

“யார் நீங்க?”

பெற்றோரை பார்த்ததும் ஆசையாய் ஓடிவந்த மகள் அவ்வாறு கேட்டதும் இப்போது அதிர்ந்து நிற்பது அவர்களது முறையாயிற்று. தனக்கு துணையாக நிற்காவிட்டாலும், தன்னை இழிவாகவாவது பேசாமல் இருக்கலாமே என அவளின் மனம் ஊமையாய் அரற்ற, யார் நீங்களென்று படாரென கேட்டிருந்தாள்.

“எனக்கென்று யாருமில்லை… என்னுடைய பெற்றோர் இறந்து இரண்டு நாட்களாகின்றது. எனக்கான நீதி கிடைக்கும் வரை நான் ஓயப்போவதில்லை” நிமிர்வுடன் கூறிய ரம்யா அவர்கள் இருவரையும் வெளியேறுமாறு வாயிலை நோக்கி கை காட்டினாள்.

“உடலால் கெட்டுப்போனவள் தானே, பெயரும் கெடுவதில் அவளுக்கு என்ன அவமானமாகிவிடப் போகிறது.” தரமற்ற வார்த்தைகளை உதிர்த்த ரம்யாவின் தந்தை அவளின் தாயாரையும் இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

“பெற்றோராக இருந்தாலும் என்னவொரு சுயநலம் பார்த்தீர்களா… மகள் மனதால் தூய்மையானவளென்று அவர்களால் சொல்ல முடியவில்லை,” விரக்தியாய் மொழிந்தவள் “என்ன நடந்தாலும் நான் பின்வாங்க போவதில்லை” என்றாள்.

“உன் பெற்றோரின் ரியாக்ஷனே இப்படி இருக்கையில்… உலகத்தின் பார்வை முற்றிலும் உன்னை உடைந்து போகச் செய்யலாம்… பாதியில் நீ..”

விஜய் தன் வார்த்தைகளால் ரம்யாவை ஆழம் பார்க்க சொல்ல வந்ததை சொல்லாமல் நிறுத்த, “நிச்சயம் நான் பின்வாங்கிவிட மாட்டேன்” என உறுதியாக அழுத்தமாகக் கூறினாள்.

வெளியில் எவ்வளவு தான் ரம்யா தன்னை திடமாகக் காட்டிக்கொண்டாலும் அவளது பெற்றோரின் வார்த்தைகள் மனதை வருத்தம் கொள்ளச்செய்தது. எவ்வளவு முயன்றும் கண்களில் கண்ணீர் சுரந்தது. அதனை கண்டதும் ஆதிரா ஆதரவாக தோளோடு அவளை அணைத்து ஆறுதல் படுத்தினாள். துளசியம்மாவிடம் இந்த வழக்கு முடியும்வரை அதிக கவனத்துடன் அவளை பார்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்திய விஜய் அங்கிருந்து நகர்ந்தான். துளசியம்மா தான் பார்த்துக்கொள்வதாக ஆதிராவிடம் கண்ஜாடை செய்து ஆதிராவையும் வெளியேற்றினார். இப்போது ரம்யாவுக்கு தேவையானது தாயின் அரவணைப்பு என்பதை உணர்ந்தவர் அதனை அளவில்லாது தன்னுடைய பரிவான தலைகோதலின் மூலம் ரம்யாவுக்கு வழங்கினார்.

ஆதிரா தன்னுடைய அறைக்கு போகும்போது… விஜய் இன்னும் வெளியேறாது யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருப்பதை கண்டு அவனை நோக்கிச் சென்றாள்.

விஜய் கணேஷிடம் தான் இணைப்பில் இருந்தான். குற்றவாளி யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் தாங்காது விஜய் சொல்ல மறுத்தும் மீண்டும் அவனிடம் கேட்கவே அழைத்திருந்தான்.

“இன்னும் ஒரே நாள் தானே கணேஷ்… கொஞ்சம் பொருத்துக்கொள்ளுங்கள், உங்களுடைய இந்த அலாதியான ஆர்வம் தான் என்னை சொல்லவிடாமல் தடுக்கிறது” என்ற விஜய் கணேஷ் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அழைப்பை துண்டித்தான்.

“குற்றவாளி யார் தெரியுமா விஜய்?”

முதுகுக்கு பின்னால் ஒலித்த தன்னவளின் குரலில் திரும்பியவன் ஆம் எனும் விதமாக தலையசைத்திருந்தாலும், அவளது விஜய் என்கிற அழைப்பினை இதயத்தில் உள்வாங்கி ரசித்தான்.

ஆதிரா, குழப்பம்.. ஆதரவு… சோகம் போன்ற உணர்ச்சிவசப்படும் தருணங்களில் மட்டுமே விஜய் என்று அழப்பாள். மற்ற நேரங்களில் எப்போதும் சார் தான், அதனாலே அவனிடத்தில் இந்த ரசிப்பு.

தான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காது, தான் அவனது பெயரை விளித்ததை ரசிக்கின்றானே… அவனின் காதல் மனதின் உணர்வு புரிந்து அதனை கலைக்கும் பொருட்டு, “வி….ஜ….ய்” என அதிக அழுத்தத்துடன் உச்சரித்தாள்.

காதலிப்பவர்களுக்கு தங்களது இணையின் அழைப்புக்கூட சுகமாக இருக்கும் போல், அப்போதும் விஜய் மோனை நிலையிலிருந்து மீளாது இருந்தான்.

பொறுமை இழந்த ஆதிரா இப்போது “சா” என்று.. சத்தத்துடன் அழைத்ததோடு மட்டுமில்லாது, தனது கையில் சுருட்டப்பட்டிருந்த நாளிதழ் கொண்டு அவனின் தோளை தட்டினாள். அப்போது தான் நாளிதழில் வந்திருந்த செய்தி ஆதிராவுக்கு நினைவு வந்தது.

நாளிதழ் கொண்டு தட்டியதும் சுயம் பெற்ற விஜய்யின் பார்வை நாளிதழையே பார்த்திருக்க, அவனுக்கும் விஷயம் தெரிந்திருக்கிறது என்பதை யூகித்த ஆதிரா வழக்கம்போல் “இது ஒத்துவராது விஜய்,” என்பதைப்போல் பேச…

“என் காதல் என்னோடவே இருந்துட்டு போகட்டும்.”

கண்களில் தோன்றிய வலியை கூட அவளுக்கு காட்ட பிடிக்காது வேகமாக வண்டியை உயிர்பித்தவனின் கைகளில் அந்த இருசக்கர வாகனம் சீறிப்பாய்ந்தது.

அடுத்து அவன் சென்று நின்ற இடம் அமைச்சரின் இல்லம்.

error: Content is protected !!
Scroll to Top